Monday 18 April 2022

அனல்


கோடை ஆரம்பித்து விட்டது. பொன்னை உருக்கி ஊற்றியது போல் வெயில் வழிந்து கொண்டிருக்கிறது, நெருப்பாய்ப்பொழியும் சூரியன், அனலை வேறு அனுப்பி இன்னொரு முனையில் தாக்குதல் நடத்துகிறார்.

நாகர்கோவிலில் இருந்தவரை வெய்யில் அத்தனை கடுமையானதாக இல்லை, அங்குள்ளது பொத்தினாற்போல் அடிக்கும் அம்மையைப்போன்ற ஊமைவெயில். கையை வெயிலில் நீட்டினால் சூடு உறைக்காதே தவிர தோலைக்கருக்கி விடும். குளித்த ஈரம் போல் வியர்வை படருமளவு அனலும் வாட்டும். ஆனாலும், சுற்றிச்சூழ இருக்கும் வயல் வெளி, தோப்புத்துரவு, குளங்குட்டைகளைத்தழுவி வரும் நாஞ்சில் காற்று நம்மையும் தழுவி வியர்வையை ஒற்றியெடுத்து விடும்.

சிறு வயதில், அப்பா இருந்த வரை, வேனல் காலங்களில் புத்தேரி குளம், நுள்ளி குளம், பழையாற்றின் வடக்காறு என நீர் நிலைகளுக்கு அழைத்துச்செல்வார். நுங்கும் இளநீரும் குலைகுலையாக வீட்டில் கிடக்கும். போதாதென்று, வீட்டு முற்றத்தில் சிமெண்டில் குளியல் தொட்டியும் கட்டி விட்டிருந்தார். நாங்கள் கிடந்து ஊறுவதற்கென்று. கோடை மழை வேறு அவ்வப்போது ஆசீர்வதித்துச்செல்வதால், அதிகமும் அனலின் தாக்கமில்லாமல்தான் வளர்ந்தோம்.

அப்போதெல்லாம், கோபாலசமுத்திரத்துப்பெரியம்மை வீட்டுக்குப் போவதென்றால், கொல்லக்கொண்டு போவது போல் இருக்கும். வெக்கையும் அனலும் வாட்டி வதைத்து விடும். 'செங்கச்சூளைல இருக்கது போலல்லா இருக்குது' என்பாள் அம்மை. சோதனையாக கோடை விடுமுறையின் போதுதான் அம்மன் கோவிலில் கொடை என பெரியப்பா லெட்டர் போடுவார். போயே ஆக வேண்டும். ஓடு போட்ட மச்சில்தான் இருக்க முடியாமல் காந்தும் என்றால், கீழ்வீட்டிலும் முற்றத்து வெயில் முகத்தில் அறையும். பகல் முழுதும் குடித்த வெப்பத்தை, இரவில் உதட்டோரத்துப்பாலாய் வழியவிடும் மச்சில் தூங்க முடியாமல் தட்டட்டியில் வந்து படுத்துக்கிடப்போம். அதற்காக, சாயந்திரமே தண்ணீரெல்லாம் தெளித்து வைத்திருப்போம். 'எல.. அது சூட்டல்லா இன்னும் கெளப்பி விடும், நாளக்கி வயத்த வலிக்கின்னு வரப்போறீங்க' என்பாள் ஆச்சி.

ஆச்சிகளின் வீடு இருந்த தெற்குவள்ளியூருக்குப் போனால் வீடு தங்க மாட்டோம். சக வயதுப்பிள்ளைகளோடும், சித்தப்பா மக்களோடும் சேர்ந்து ஊர்வெயிலை எல்லாம் முதுகிலும், முகத்திலும் வாங்கிக்கொண்டு ஊர் சுற்றும் ஜோரில் வெயிலாவது, அனலாவது, இன்னொன்றாவது. சின்ன கிராமத்தைச்சுற்றிச்சூழ வயல்வெளிகள் இருந்ததால் அதிகம் அனலடிக்காது.

மும்பை வெயில் வேறு மாதிரி. இங்குள்ள காற்றுக்கும் வேறு மாதிரி வாசனையுண்டு. திருமணத்தின்போது மை ரங்க்ஸ் மும்பையின் கிங்க்ஸ் சர்க்கிளில் ஆபீஸின் சகவாசிகளோடு ரூமை பகிர்ந்து வசித்து வந்தார். திருமணமானதும், புற நகர்ப்பகுதியான கல்யாணுக்குக் குடி புகுந்தோம். அங்கும் மத்திய அரசு ஊழியர்கள் எல்லோரும் ஒரே பகுதியில் வசித்து வந்ததால், அப்பகுதிக்கு அப்பொழுது சி.ஜி.எஸ் காலனி என்றே செல்லப்பெயர் இருந்தது. 

ஒரு பெரிய சதுரத்தை நடுவில் சுவரெழுப்பி இரண்டு செவ்வகங்களாகப் பிரித்து அந்த செவ்வகங்களையும் நடுவில் அரைச்சுவர் எழுப்பி மேலும் இரண்டிரண்டு செவ்வகங்களைப்பிரித்தாற்போன்ற வீடு. இரண்டு பெட்ரூம், ஹால், கிச்சன், கிச்சனிலேயே ஒரு பகுதியில் டாய்லெட், பாத்ரூம் எனப்பிரிக்கப்பட்ட பக்கா மும்பை ஸ்டைல் வீடு. இரண்டு பேருக்கு மிகத்தாராளமான பெரிய வீடு. கூரை மட்டும் ஆஸ்பெஸ்டாஸ். கோடையில் பொரித்து எடுத்து விடும். 

வெயிலோ, மழையோ, பனியோ மும்பை வாசிகள் கவலையே பட மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு வைத்திருப்பார்கள். கோடை வரும்போது, மை ரங்க்ஸ் வீடு முழுவதும் பக்கெட் பக்கெட்டாகத் தண்ணீரை ஊற்றி வைத்து விடுவார். ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே சாப்பாடு எல்லாம். நீளமான பைப் சுருளை வாங்கி வந்து வைத்துக்கொண்டு, ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் மேல் மழை பொழிவது போல் தண்ணீரைப்பீய்ச்சியடிக்கும் திருக்கூத்தும் நடக்கும். இரண்டு நாட்கள், 'நசநசன்னு இருக்கே' என இருந்தது. அப்புறம் அது பழகிப்போயிற்று. எவ்வளவு தண்ணீர் ஊற்றி வைத்தாலும் சாயங்காலத்துக்குள் அது காய்ந்து விடும். மிச்சமிருக்கும் ஈரத்தை படுக்கும்போது துடைத்து விட்டால், ஜில்லென்ற தரையில் கட்டையைச்சாய்த்த அடுத்த நிமிடம் கண்ணைச்சொக்கும்.

ஆனாலும், சின்னச்சின்ன அசௌகரியங்களும் இருந்ததான், இருந்த சொற்பப்பொருட்களைக் கட்டில் மேல் ஏற்றி வைத்து விட்டு, குரங்கு குத்த வைத்தது போல் நாற்காலிகளிலேயே உட்கார்ந்து கிடக்க வேண்டும். ஆசுவாசமாக, காலை நீட்டி உட்கார்ந்து, அரிவாள் மணை, சுளவு சகிதம் காய் நறுக்க முடியாமல், கத்தியால் நறுக்கப் பழகிக்கொண்டாயிற்று. போதாதென, சைக்கிளில் ஒட்டிக்கொண்டு வரும் மண், அதன் தடத்தை வீட்டு ஹாலில் பதித்து வைத்திருக்கும். காற்று அள்ளிக்கொண்டு போடும் தூசி தண்ணீரில் கலந்து கிடக்கும். முகப்பவுடர் அளவுக்கே மென்மையாக இருக்கும் மும்பையின் தூசி பொல்லாதது, பகல் முழுதும் நடந்த சுவடுகளை சாயங்கால நேரத்துத் தரை காட்டித்தரும், கழுவித்தீராது. 'தினமும்தான் தரை துடைக்கப்படுகிறதே, தினமும் தண்ணீரை ஊற்றியே ஆக வேண்டுமா? ரெண்டு நாளுக்கொரு முறை தொளிச்சா ஆகாதா?.. போதாதா?'  என்றால், 'ஊஹூம்.. மூச்.

பிள்ளைகளுக்கும் இது பிடித்துப்போயிற்று. ஒரு படி மேலே போய் ஃப்ரிஜ்ஜிலிருந்து ஐஸ்வாட்டரெல்லாம் எடுத்து வந்து தெளித்து வைக்க ஆரம்பித்தோம். ஊற்றி வைப்பது பாடில்லை, 'இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க' நடக்க வேண்டும், இல்லையெனில் காலை வாரி விடும். 

ஒரு சமயம், திருச்சியிலிருந்த என் பெரிய மச்சினர் வீட்டுக்குப்போயிருந்தோம். நல்ல கோடைக்காலம்.. தஞ்சை, ஸ்ரீரங்கம், முக்கூடல் என எல்லா இடங்களுக்கும் போய் விட்டு, சாயந்திரம் வீடு வந்தோம். மும்பையின் கோடைக்காலத்துக் கதைகளைப்பற்றி பேசிச்சிரித்து பொழுது போயிற்று. வீட்டில் தண்ணீரை தெளித்து வைத்து இவர் பண்ணும் திருக்கூத்தைப்பற்றி அவர் அண்ணனிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, 'இருங்க வரேன்' என்றபடி எழுந்து போனார் அவர். பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு பக்கெட் தண்ணீரைக்கொண்டு வந்து, குவளையால் கோரிக்கோரி தரையில் தெளிக்கத்தொடங்கினார் அந்த முன்னாள் மும்பை வாசி.

சரிதான்..

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தில்லி அனல் இன்னும் மோசமாக இருக்கிறது. இப்பொழுதே loo எனும் அனல் காற்று! தண்ணீர் நிரப்ப முடியாது - கீழ் வீட்டிலிருந்து தண்ணீர் கசிகிறது, ஓதம் என்று ஏதோ ஒன்று சொல்லிக்கொண்டு சண்டைக்கு வருவார்கள்.

அனுபவங்களை ஸ்வாரஸ்யமாக சொல்லி இருப்பது சிறப்பு.

LinkWithin

Related Posts with Thumbnails