Tuesday, 3 May 2022

கரையெல்லாம் செண்பகப்பூ - புத்தக மதிப்புரை


சுஜாதா..

வயது வித்தியாசமில்லாமல் அத்தனை வாசகர்களையும் சம்பாதித்து வைத்திருக்கும் முத்திரை பதித்த எழுத்தாளர். வர்ணனைகள் நிரம்பிய வரிகளைக்கொண்ட நாவல்கள், சிறுகதைகளிடையே இவர் ஜனரஞ்சகமாய் எழுதிய கதைகள் ஒரு புதிய மலர்ச்சியை உண்டாக்கின. தனது வித்தியாசமான கற்பனை மற்றும் நடையால் பெருவாரியான வாசகர்களைக் கவர்ந்திழுத்தவர். இவர் தொட்டு எழுதாத துறைகளே கிடையாது எனினும் அறிவியலை சுவாரஸ்யமான கதைகள் மூலம் வெகுஜனத்துக்குக் கொண்டு சேர்த்ததில் இவரது பங்கு முக்கியமானது. சினிமாக்களில் கதை வசனமும் எழுதிய சுஜாதாவின் பல்வேறு நாவல்களில் ஒரு சில திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் "கரையெல்லாம் செண்பகப்பூ" என்ற நாவல். ஆனால், நாவல் அளவுக்கு திரைப்படம் அவ்வளவு சோபிக்கவில்லை.

கரையெல்லாம் செண்பகப்பூ சற்றே அமானுஷ்ய நிழல் கொண்ட த்ரில்லர் வகை நாவல். கிராமத்து ஜமீன் பங்களாவைக் கதைக்களமாகக்கொண்டது. வழக்கமாகக் கிராமங்களுக்கு டாக்டர்தான் வருவது வழக்கம், ஆனால், நாவலில் பட்டணத்து இளைஞனொருவன் நாட்டுப்பாடல் ஆராய்ச்சிக்காக வருகிறான், பங்களாவில் தங்குகிறான். அங்கே ரத்னாவதியால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் புதையல் , அதை எடுப்பதற்காக ஜமீன் வாரிசாக பொய் சொல்லி நுழையும் சினேகலதா, அவளது கூட்டாளியான பயாஸ்கோப், மற்றும் கிராமத்து ஜோடியான வள்ளி, மருதமுத்து, இவர்களைச்சுற்றி நிகழ்வதே கதை.

மடித்து வைத்திருக்கும் பொட்டலத்தைப் பிரிப்பது போன்று ஒவ்வொரு சம்பவமும் தன்னை வெளிக்காட்டிக்கொண்டு இறுதியாக பங்களாவில் இருக்கும் மர்மத்தை நோக்கி சுவாரஸ்யமாக நம்மை இட்டுச்செல்கிறது. ஒவ்வொரு முடிச்சாக அவிழ அவிழ நமது நெஞ்சத்துடிப்பு கூடிக்கொண்டே போகிறது. ஆரம்பத்தில் சித்திரிக்கப்படும் அமானுஷ்யம் கடைசியில் ஒன்றுமில்லாமல் போகும்போது, அப்படியெனில் அது யாராக இருக்கக்கூடுமென நாம் நகம் கடிக்க ஆரம்பித்து விடுகிரோம். இந்நாவல்  ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்ததாம். அக்கால கட்டத்தில் அடுத்த பகுதி வரும்வரை வாசகர்கள் எப்படித்தவித்திருப்பார்கள் என ஊகிக்க முடிகிறது. நாவலில் அதிகமும் வர்ணனைகள், அலங்காரமான வாக்கியங்கள் என எதுவும் கிடையாது. ஆனால், அவரது வாசகர்களுக்கென வரிகளில் நிறையவே 'தீனி' போட்டிருக்கிறார்.

நா.வானமாமலை ஐயாவின் "தமிழர் நாட்டுப்பாடல்கள்" புத்தகத்திலிருந்து பெரும்பான்மையான நாட்டுப்புறப்பாடல்கள் மேம்பட்டி கிராம மக்களின் வாய்மொழியாகவும் பெரியாத்தாவின் வாய்மொழியாகவும் இந்நாவலில் இடம்பெற்று குளிர்தென்றலாய் வருடுகின்றன. ஊர்த்திருவிழாவில் "பழையனூர் நீலி" கதையின் பல்வேறு வடிவங்களில் ஒன்று வில்லிசையில் இசைக்கப்படும். அப்பாடல் வரிகளை வாசிக்கும்போது நம் உடம்பும் பதறுகிறது. நடக்கவிருக்கும் அசம்பாவிதங்களுக்குக் கட்டியம் கூறுவது போன்று அமைந்துள்ளது அப்பகுதி.

பொதுவாக, கிராமங்கள் என்றாலே அங்குள்ள மக்கள் ரொம்பவே வெள்ளந்தியானவர்கள் என்ற பொதுச்சித்திரம் ஒன்றுண்டு. அப்படியில்லை, அங்கிருப்பவர்களும் நம்மைப்போன்ற மனிதர்களே, கிராமமோ நகரமோ மனித உணர்வுகள் எல்லா இடங்களிலும் ஒன்றே என்ற உண்மையைப் பளிச்செனச்சொல்லியிருக்கிறார். க்ரஷ், பொஸஸிவ்னெஸ், சபலம், வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளல், பணத்தாசை என மனித மனதின் எல்லா அழுக்குகளும் இங்கே சித்திரிக்கப்பட்டுள்ளன. "மனிதன் மகத்தான சல்லிப்பயல்" என்ற ஜி.நாகராஜனின் கூற்று நாவலில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், இறுதியில் வெள்ளியின் தடுமாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

நறுக்கென்ற வரிகளில் மின்னற்தெறித்தாற்போன்று எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் அத்தனை வாசகர்களையும் இன்றும் கவர்ந்திழுக்கும் என்றும் பசுமையான சித்திரம் என்றால் மிகையல்ல.

ஆசிரியர் : சுஜாதா

வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்.


1 comment:

வெங்கட் நாகராஜ் said...

கரையெல்லாம் செண்பகப் பூ நானும் படித்து ரசித்திருக்கிறேன். சிறப்பான நூல் வாசிப்பனுபவம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails