Tuesday, 10 May 2022

கண்ணாச்சி என்கிற தாயக்கட்டை ஆச்சி - நூல் அறிமுகம்

குழந்தைகளாக இருக்கும்போது சீக்கிரம் வளர்ந்து விட மாட்டோமா என்று ஆசைப்படுவதும், வளர்ந்தபின் குழந்தைகளாகவே இருந்திருக்கக்கூடாதா!! என்று ஏங்குவதும் என்ன மாதிரியான மனநிலையைச்சாரும்??. தங்கமக்கா என நான் அன்போடு அழைக்கும் திருமதி. தங்கம் வள்ளிநாயகம் எழுதியுள்ள "கண்ணாச்சி என்கிற தாயக்கட்டை ஆச்சி" நூலின் பல பகுதிகளை வாசிக்கையில் வாசகருக்கு அப்படியான உணர்வே தோன்றும். நம் பால்ய நினைவுகள், செய்த சேட்டைகள், காக்காய்க்கடி தோழமைகள் என பலவும் மனக்கண் முன் நிழலாடி, புன்னகை பூக்க வைக்குமென்றால் அது மிகையல்ல.

இந்நூல் தங்கமக்காவின் முதல் நூலாம், ஆனால் வாசிக்கையில் அப்படித்தோன்றாவண்ணம் ஆற்றொழுக்காய் தவழ்ந்து செல்கிறது நடை. மொத்தம் 33 கட்டுரைகள் கொண்ட இந்நூலில் பெரும்பான்மையானவை நூலாசிரியரின் சொந்த ஊரான கழுகுமலையில் அவரது இளம்பிராயத்தில் நிகழ்பவையே. குழந்தைகளின் உலகத்தில் ஆச்சிகளுக்கென்று ஒரு தனியிடம் உண்டு. விளையாட்டுத்தோழமையாக, ஆலோசனை சொல்லும் மந்திரியாக, அப்பா அம்மாவின் கண்டிப்பிலிருந்து காக்கும் மெய்க்காப்பாளராக, சிறந்த கதை சொல்லியாக, உடல் மற்றும் மனதைப் பேணிப்பாதுகாக்கும் மருத்துவராக, எல்லாவற்றுக்கும் மேலாக நல்லாசானாக இருப்பவர்கள் அவர்களே. அவர்களுக்கு அடுத்தபடிதான் அப்பா அம்மாவும் மற்ற உறவுகளும்.

கிராமிய விளையாட்டுகளான, பல்லாங்குழி, தாயக்கட்டை போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள் இந்த ஆச்சிகள், அவர்களிடம் விளையாடி மிச்சம் கொண்டு போக முடியாது. ஒரே காய் நகர்த்தலில் நமது எல்லா ராஜதந்திரங்களையும் காலி செய்து விடுவர். தாயக்கட்டை ஆச்சிகள், பேரப்பிள்ளைகளோடு இருக்கும்போதுதான் அவர்கள் தங்கள் தனிமையை வெல்கின்றனர், அல்லாத பொழுதுகளில் தாத்தாவிற்கும் சேர்த்து அவர்களே பல்லாங்குழி விளையாட வேண்டிய அவலநிலைதான். பொதுவாக பெண்குழந்தைகளுக்கு அவர்களின் நெருக்கமான முதல் தோழியாக ஆச்சிதான் இருப்பார். ஆச்சிகள் ரத்த உறவாகவோ நெருங்கிய சொந்தமாகவோ கூட இருக்க வேண்டியதில்லை. பேரன் பேத்தி வயதுள்ள எல்லாக்குழந்தைகளுக்கும் அவர்கள் ஆச்சிதான், தன்னுடைய புதுப்புடவையை முதன்முதலில் பேத்திதான் உடுத்த வேண்டுமென்ற பாசக்காரிகள். வழிப்போக்கனுக்கும் வயிறார உணவிட்டு, அவனது கஷ்டங்களைக்கேட்டுக் கண்ணீர் வடிக்கும் தாய்மனசு கொண்டவர்கள்.

இந்நூலில் தங்கமக்கா தனது வாழ்வியல் அனுபவங்களை, அலங்காரப்பூச்சின்றி இயல்பான மொழியில் சொல்லிச்செல்கிறார். தான் சந்தித்த மனிதர்களைப்பற்றி அவர் குறிப்பிடும்போது அதில் சொல்லிக்கொள்ளும் எண்ணிக்கையில் பெண்களே இருக்கின்றனர். அவற்றில் நாணாவின் அம்மா, மடிசார் மாமி, பகவதி டீச்சர், பெரிய வீட்டு அம்மா போன்றோரை மறக்க முடியாது எனில், "பொம்மனாட்டிகளாப்பிறந்தா சகிச்சுண்டுதான் ஆகணும். நாம தேமேன்னு இருந்தா அவாளுக்கே சலிச்சுப்போய் விட்டுடுவா" என பெண்களுக்கான வாழ்க்கைப்பாடமெடுக்கும் வசந்தா என்றும் நினைவில் நிற்பார். இப்படி சகித்துக்கொண்டுதான் அம்மாக்களும் பாட்டிகளும் காலத்தை ஓட்டினர். வாழ்க்கை என்பது இப்படித்தான்’ என்ற பக்குவம் எல்லா மனிதர்களுக்குமே வந்து விடுகிறது. வசந்தா போன்றவர்களுக்குச் சீக்கிரமாக.. சிலருக்கு வாழ்வு முடியும்போது. எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்வதும், எல்லாவற்றையும் ஆச்சரியமாகவோ கடினமாகவோ பார்ப்பதுமான இரு வழிகளில் கடக்கிறது வாழ்வு.

நூலில் நெல்லை மண்ணுக்கேயுரிய நுணுக்கமான வார்த்தை விளையாட்டுகளும், குறும்புகளும் விரவிக்கிடந்தாலும் ஊடேஊடே கோவைத்தமிழும் கொஞ்சம் எட்டிப்பார்க்கிறது. கோவையின் பேருந்துப்பயணத்தைச் சுவாரஸ்யமாய்ச் சொல்வதைப்போலவே தான் முதன்முதலாய் கத்துக்குட்டித்தனமாய் செய்த சமையல் அப்பாவிற்கு அவரது அம்மையை எப்படி நினைவூட்டியது என்றும் அதே சுவாரஸ்யத்தோடு சொல்கிறார். பெண்குழந்தைகளை சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்ய வைக்க வேண்டுமென்றால், "உன்னைய மாதிரி உண்டா?" என லேசாக உசுப்பேத்தி விட்டால் போதும், பம்பரமாகச் சுழல்வார்கள். ஆனால், இங்கே நூலாசிரியரின் அப்பா முகஸ்துதி செய்யாமல் மறைமுகமாகப் பாராட்டுவதிலிருந்தே அவர் உண்மையாகவே தன் அம்மையின் கைப்பக்குவத்தை மகளிடம் கண்டிருக்கிறார் என்பது விளங்குகிறது. அப்பாவிற்காகச் சமைத்தது கடமை, ஆனால் அதில் அன்பும் பாசமுமல்லவா கலந்திருக்கிறது. பின்னெப்படி ருசியில்லாமல் போகும்?

இரயில் பயணங்களில் பத்தியில் அவர் விவரித்திருந்த ஒவ்வொன்றையும் நான் மும்பை-நாகர்கோவில் பயணங்களின்போது நேரில் கண்டிருக்கிறேன். என்னவொன்று எண்பதுகளின் பிற்பகுதிகளில் தொலைதூரப் பயணங்களின்போது கூஜா கட்டுப்படியாகாது. ஐந்து லிட்டர் கேன்களை வாங்கி வைத்துக்கொண்டு, ரயில் நிற்கும் ஒவ்வொரு பெரிய நிலையங்களிலும் ஓடியோடி தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். மருந்து போல் அளவாகத்தான் குடிப்போம். மிளகாய்ப்பொடி தடவிய இட்லி, வாட்டிய வாழையிலை, தூக்குவாளிகளில் புளிச்சோறு, பொரித்த கூழ்வற்றல் போன்றவற்றை அப்படியே கண் முன் நிறுத்தி விடுகிறார் தங்கமக்கா. 

பலவீனமானவர்கள் போல் தோற்றமளிப்பவர்கள் உறுதி மிக்கவர்களாகவும் இருப்பதுண்டு. அப்பலவீனத்திலிருந்தே தங்களுக்கான பலத்தைத் திரட்டிக் கொள்கிறார்கள். மெலிந்த கிளையை இறுகப்பற்றியிருக்கும் தேன்சிட்டைப்போல். தந்தையின் இடத்திலிருந்து தம்பியையும் குடும்பத்தையும் பொறுப்புடன் கவனித்துக்கொள்ளும் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய அண்ணனைப்போல், சொல்லாத கிளிஜோசியத்துக்குக் காசு வாங்காமல் திருப்பிக்கொடுத்த ஜோசியரைப்போல், ஏழு நாட்கள் விடாமல் சைக்கிள் ஓட்டுபவரைப்போல். 

மொத்தத்தில் பார்க்கும்போது ஒரு சிறுமியின் பார்வையில் விரியும் வாழ்க்கைச்சித்திரங்களாக இருந்தாலும் தனித்தனியே சிறுகதைகளாக விரியக்கூடிய கூறுகள் கொண்டிருக்கின்றன. "ப்ரியங்கள் சுமந்த அத்தை" பத்தி மேலும் விரிந்து ஒரு பெண்ணின் உணர்வுகளையும் அவற்றின் சாராம்சங்களையும் பேசுகிறது. சிறு பெண்ணாக இருந்ததிலிருந்து இறுதிக்காலம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் அவளது மனம் படிப்படியாக முதிர்ந்து பக்குவப்படுவது சித்திரிக்கப்பட்டுள்ளது. அக்கால மற்றும் இக்காலப் பெண்களிடையே இருக்கும் வித்தியாசத்தை பெண்களும் பூக்களும் என்ற கட்டுரையில் அவர் விவரிக்கையில் நாமும் 'ஆமா.. ஆமா..' என்கிறோம்.

தான் சந்தித்த, தனது பாதையில் கடந்த எல்லா மனிதர்களையும் ரத்தமும் சதையுமாக நம்முன் உலவ விட்டிருக்கிறார் நூலாசிரியர். கடந்து வந்த பாதையெங்கும் பதிந்த நினைவுத்தடங்களில் தளும்பி நிற்கும் ப்ரியம் பொசிந்து ஆங்கோர் கடலாய் ஆர்ப்பரிக்கிறது நூலெங்கும்.

 நூலாசிரியர்: திருமதி. தங்கம் வள்ளிநாயகம்

பதிப்பகம்: கோதை பதிப்பகம்

விலை: ரூ. 210

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நூல் அறிமுகம் நன்று. நூல் கிடைக்கும் இடத்தினையும் சொல்லி இருக்கலாம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

பதிவில் சேர்த்து விடுகிறேன்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails