Thursday 26 May 2022

சாரல் துளிகள்

வெய்யிலை சலித்து உள்ளே அனுப்புகிறது வலையடித்த ஜன்னல். ஒவ்வொரு கம்பியாய்த் தாவும் அணிற்பிள்ளை விரவிக்கொடுக்கிறது.

சுவரில் தலை சாய்த்து அமர்ந்திருப்பவளின் கன்னத்தில் படிகிறது ஜன்னல் கம்பிகளின் நிழல். இப்போது அவள் ஜன்னலில் சாய்ந்திருக்கிறாள். ஆம்.. அப்படித்தானிருக்க வேண்டும். பூக்களைத் தொடுத்துக் காய்ப்பேறிய விரல்களால், பச்சிளம் தளிரை வருடுகிறாள். அன்று ஒரு கிள்ளுப்பூ அதிகமாகவே சூட்டப்பெறுகிறது அந்த உச்சிக்குடுமி.

நேற்றிரவு முகவரி தெரிவித்த தவளையைத்தேடி, இன்று சுடுபகலில் தவ்வித்தவ்விப் போய்க்கொண்டிருக்கும் பாம்பின் மனசை அலைபாய வைக்கிறது எலிக்குஞ்சுகளின் கொண்டாட்டக் கூச்சல். போலச்செய்வதிலாவது ஒரு பாவனையும் முனைப்பும் இருக்கிறது, நகலெடுப்பதில் அதுவுமில்லை.

எழுப்பி எழுப்பி சலித்த இல்லத்தரசி பெருஞ்சத்தமெழ பாத்திரம் துலக்குகிறாள் திங்கட்கிழமை காலையில் தடதடவென எழுந்தோடுகின்றன பூனைக்குட்டிகளும் பிள்ளை குட்டிகளும் ஒரு கைப்பேசியில் அவனும் அவளும் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். யார் கண்டது? எதிர் முனையிலிருப்பது யாரோவொருவரின் முன்னாள் காதலாகவுமிருக்கலாம். தலைக்குல்லாவை இழுத்து வீசும் கைக்குழந்தையைத் தோளில் கிடத்தியபடி வெயிலில் நடந்து செல்லும் தாயின் கை குடையாய்ப்படிந்திருக்கிறது சேயின் தலை மேல். சலனமின்றி இருவரையும் அவசரமாய்க்கடக்கிறது, சிறுதுண்டு மேகம்.

வேரோடிப் படர்ந்து கொண்டிருக்கும் அருகின் வனத்தில் திணறிக்கொண்டிருக்கிறது தழைக்கவியலாத ஆலங்கன்று.

சளைக்காமல் நீந்தி உடற்பயிற்சி செய்தாலும் பெருத்துக்கொண்டே போகிறது தொப்பை குறையாத மீன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails