“காதல்” ஒரு அற்புதமான உணர்வு. எப்போது வரும்? எப்படி வரும்? யாருடன் வரும்? என்று சொல்லமுடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் வந்தே தீரும். சிலரைப் பார்த்ததுமே பிடித்துப்போய் வரலாம், சிலரைப் பார்க்கப்பார்க்கப் பிடித்துப்போய் வரலாம், சிலரிடம் நட்பு கனிந்து ஏதோவொரு நொடியில் அது காதலாக மாறலாம். நதிமூலம் ரிஷிமூலம் போலவே காதல்மூலமும் புதிர்தான். இதெல்லாம் உண்மைக்காதலுக்கு மட்டுமே. பலாபலன்கள் ஆராய்ந்து லாபநோக்கில் சிந்தித்துக் கணக்கிட்டு உருவாக்கப்படுவதும், வற்புறுத்தி, மிரட்டி, வலுக்கட்டாயமாக ஏற்படுத்தப்படுவதும் காதலேயல்ல.
“செம்புலப் பெயல் நீர் போல் அன்புடைநெஞ்சம் தான்கலந்து உருவான காதல் ஒருவரை என்னவெல்லாம் செய்ய வைக்கும்?
‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’ என்பார் பாரதிதாசனார்.
பாரதியாரோ,
‘“காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்’ என்கிறார்.
ஒத்த வயதுள்ள எதிரெதிர் பாலினரிடத்தில் மட்டுமன்றி, சக மனிதர் அனைவரிடமும் சுரக்கும் மனித நேயத்திற்கு வெறுமனே காதல் என ஒற்றை வார்த்தையில் முத்திரை குத்தி அதை, சிமிழுக்குள் கடலென அடைத்து விட முடியுமோ!! தாயிடத்தில், தந்தையிடத்தில், உடன் பிறந்தாரிடம், ரத்த உறவுகளிடம், மற்றும் ஊழின் துயரில் அழுந்திப் பரிதவிக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் ஏற்படுவதை அன்பு, பாசம் என பல்வேறு பொதுப் பெயர்களால் அடையாளமிட்டாலும் இரு நெஞ்சங்களினிடையே ஏற்படும் ஈர்ப்பு மட்டும் "காதல்" என வார்த்தை மகுடம் சூடிக்கொள்கிறது. அதனால்தான்,
“காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்தல் வேண்டும்” என பாரதியும் விரும்புகிறார். கண்ணனைக் காதலனாக எண்ணி
“உணவு செல்லவில்லை – சகியே
உறக்கங் கொள்ளவில்லை
மணம் விரும்பவில்லை – சகியே
மலர் பிடிக்க வில்லை
குணமுறுதியில்லை எதிலும்
குழப்பம் வந்ததடீ
கணமு முள்ளத்திலே – சுகமே
காணக் கிடைத்ததில்லை
பாலுங் கசந்ததடீ – சகியே
படுக்கை நொந்ததடீ” என உருகவும் செய்கிறார்.
உயிரினங்கள் தோன்றிய காலம் முதல் இன்றுவரை, புழு,பூச்சி முதல் ஐந்தறிவுள்ள விலங்குகள் ஈறாக உலகில் அத்தனை உயிர்களும் காதலில் திளைக்கும்போது மனிதர் மட்டும் சளைத்தவரா என்ன? சங்க காலத்திலேயே தமிழர் வாழ்வில் காதலும் வீரமும் இழைந்திருந்ததற்குச் சான்றாக ஏராளமான பாடல்கள் உள்ளன. தமிழிலக்கியங்களில் காதலைக் கொண்டாடியவை “அகத்திணை” எனப்பட்டன. அகத்திணைப்பாடல்களில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான உவமைகள் சங்ககால மக்களின் காதல்வாழ்வை நமக்குப் படம் பிடித்துக்காட்டுகின்றன.
இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல;
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே! என்கிறது குறுந்தொகை. மிகக் குறைவாகவே நீர் இருக்கும் ஒரு சுனையில், இணைமான்களில் ஒன்றின் தாகம் தீர்க்க வேண்டி, இன்னொரு மான், தான் அருந்துவது போல் நடிக்கும். தத்தம் காதலை அந்த இருமான்களும் வெளிப்படுத்திய விதத்தை ஐந்திணை ஐம்பது நமக்குச் சொல்கிறது.
எப்பொழுதுமே ஆண்தான் முதலில் காதலைச்சொல்ல வேண்டும் என்ற ஒரு பொது எதிர்பார்ப்பு இருந்து வந்திருக்கிறது. முதலில் காதலைத் தெரியப்படுத்தும் பெண்ணை இச்சமூகம் பார்க்கும் பார்வையே வேறு. ஆனால், சங்க காலத்தில் பெண்கள் தம் காதலை ஒளிவுமறைவின்றி சுதந்திரமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
“இம்மை மாறி மறுமை யாயினும்
நீயாகியரென் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர்பவளே” என்கிறாள் ஒருத்தி.
“சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்
பிறப்புப் பிறிது ஆகுவதாயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே“ என்கிறாள் இன்னொருத்தி.
இப்படி பழந்தமிழர் காலத்திலிருந்தே காதலைப்போற்றி வந்த நாம் சினிமாவிலும், கதைகளிலும், ஏன்.. பிற வீடுகளிலும் நடக்கும்போது அதற்கு ஆதரவளிக்கிறோம். அதுவே தன் வீடுகளில் நடக்கும்போது நத்தையாய்ச் சுருக்கிக்கொள்கிறோம். இதைத்தான் பாரதியார்,
“நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே” என்கிறார்.
சமீபகாலங்களில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்குப் பெரும் எதிர்ப்பு வளர்ந்து வரும் சூழலில், பொது இடங்களில் இளஞ்ஜோடிகள் ராக்கி அல்லது மஞ்சள் கயிற்றைக் கட்ட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்ய மறுப்பவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி வளர்ந்த, கைத்தலம் பற்றிக் கடிமணம் கொள்ளும் நாள்வரையில் அவர்கள் நெஞ்சில் பரிசுத்தமான அன்பைப் பெய்து வளர்க்கும் காதல்பயிர், ராக்கி, மஞ்சள் கயிறு போன்றவற்றை வலுக்கட்டாயமாகக் கட்ட நிர்ப்பந்திக்கும் சில கலாச்சாரக் காவலர்களால் சிதைக்கப்படுவது வேதனை. வறட்டுப்பிடிவாதம், போலி கௌரவம், சுயநலம் போன்ற நோய்களால் பீடிக்கப்பட்ட பெற்றோர் வன்முறையைக் கையாளவும் துணிகின்றனர்.
வெறும் இனக்கவர்ச்சியைக் காதல் என தப்பர்த்தம் செய்து கொள்ளும் சிலராலும், படிக்க வேண்டிய வயதில் தவறான நபர்களிடம் காதலில் விழும் சிலராலும், உண்மையான நேசம் கொண்டவர்களும் அவ்வாறே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள். அதனாலேயே, இத்தகு இன்னல்களுக்கும், சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள். களவு, திணைக்கலப்பு, ஏறு தழுவுதல், மடலேறுதல் போன்ற தன் விருப்ப மணவகைகளை ஆதரித்த நம் சமூகம் இப்போது காதலுக்கு எதிராக, தான் பெற்ற குழந்தைகளையே ஆணவக்கொலை செய்யும் அளவுக்கு மாறிவிட்டது. அண்ணலும் அவளும் நோக்கிக்கொண்டதை அப்பனும் அண்ணனும் நோக்கியதுமே காதலர்கள் மென்மையாகவும் வன்மையாகவும் எச்சரிக்கப்பட்டு விடுகிறார்கள். அப்படியும் புரிந்து கொள்ளாதவர்கள் உடலுறுப்புகளையோ உயிரையோ இழக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
சங்க காலத்தில் களவு மணம் மதிக்கப்பட்டது, ஏனெனில், அதுவே கற்பு வாழ்க்கைக்கும் அடிப்படையாய் அமைந்தது. காதலர் மணம் புரிந்து இனிதாய் இணை பிரியாமல் இல்லறம் நடத்தினர். தற்காலத்தில், களவுக்காதலர் கொண்டு சென்ற செல்வமும் இருவருக்குமிடையே இருக்கும் ஈர்ப்பும் தீர்ந்ததும் பிணக்கும் பிரிதலும் நடைபெறுகிறது. அல்லது நரகை விடக் கொடிய ஒரு வாழ்வை வாழ நேரிடுகிறது. பெற்றோர் அஞ்சுவது அதையே. என் நட்பு வட்டத்திலேயே அப்படி இருவரைப் பார்த்திருக்கிறேன்.
என்னுடன் பயின்ற ஒரு பெண் காதல் வசப்பட்டு, அங்கும்இங்குமாக ரகசியமாகச் சந்தித்துப்பேசி காதல் வளர்த்து கடைசியில் ஒரு விடிகாலையில் அவனுடன் உடன்போனாள். காதலர்களாக இருந்தவர்கள் கணவன்மனைவியாகி அதன்பின் இரு குழந்தைகளுக்குப் பெற்றோரும் ஆனார்கள். அதன்பின்தான் பொருளாதாரப்பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. “உன்னை நம்பி வந்து இப்படி சீரளியுதேனே” என அவள் மூக்கைச்சிந்த, “ஏகப்பட்ட வரதச்சணையோட எப்பேர்ப்பட்ட பொண்ணெல்லாம் எனக்கு வந்துது தெரியுமா? இங்க ஒரு சைக்கிளுக்கே வழியில்லை” என அவன் புலம்ப, இனி இவனை நம்பிப்பலனில்லை என அவள் ‘உன் குழந்தைகளை நீயே பார்த்துக்கொள்’ என விட்டுவிட்டு இன்னொரு புளியங்கொம்பைத்தேடிக்கொண்டாள். அவன் தன் பெற்றோரிடம் திரும்பினான். ஆண்குழந்தைகள் என்பதால் அவனது பெற்றோர் பெரும்பஞ்சாயத்துக்குப்பின் அவர்களை வளர்க்க ஒப்புக்கொண்டார்கள். “என்னமும் ஒரு பாவப்பெட்ட பொண்ணைப்பார்த்துக் கெட்டி வைக்கணும்” என அவனது பெற்றோர் அடுத்த முயற்சியில் இறங்கினர்.
இன்னொருத்தி, அண்ணன் வீட்டுக்குச் சென்ற இடத்தில் பக்கத்து வீட்டுப்பையனுடன் மையலாகி, வீட்டுக்குத்தெரியாமல் திருமணம் செய்து கொண்டாள். சில மாதங்களிலேயே அவள் மேல் இருந்த மோகம் வடிந்ததும் அவன் பறந்து விட்டான். இவள் அண்ணன் வீட்டுக்கும் செல்ல முடியாமல், கிராமத்திலிருக்கும் பெற்றோரிடமும் திரும்ப இயலாமல் தவித்துக்கொண்டிருந்தாள். ஒரு சமயம், அவளது பிறந்த வீட்டு உறவினரொருவர் அவளைக்கண்டபோது அடையாளம் காண இயலாத அளவுக்கு உருக்குலைந்திருந்தாள். இவள் அவரது கைகளைப்பற்றிக்கொண்டு, ‘ஏதாவது ஒரு சின்ன வேலையாவது வாங்கித்தாங்க மாமா, என் பாட்டை நான் பார்த்துக்கொள்வேன், யாருக்கும் பாரமாக வர மாட்டேன்” எனக் கதறியதைக் கேள்விப்பட்டபோது, எப்படியிருந்த பெண் இப்படியாகி விட்டாள்!! உலகம் தெரிந்திருந்தும் எப்படி விட்டில் பூச்சியாக விழுந்தாள்! என பரிதாபமே மேலிட்டது.
எல்லோருமே அப்படித்தான் இருக்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. என் உறவினர் வட்டத்திலும் நட்பு வட்டத்திலும் பெரும்பான்மையானவர், காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் புரிந்து, இன்று சீரும் சிறப்புமாக, பேரன் பேத்தியெடுத்து அன்று போல் இன்றும் அதே காதலுடன் ஒருவருக்கொருவர் காரியம் யாவிலும் கைகொடுத்து வாழ்வாங்கு வாழ்வதையும் காண்கிறேன். முதலில் காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோரே பின்னாட்களில், “நாங்களே பார்த்திருந்தால் கூட இப்படியொரு நல்ல மாப்பிள்ளை/பெண் கிடைத்திருக்காது” என பெருமிதமடைகின்றனர்.
ஆக, இதில் எங்கோ தவறு நேர்கிறது. காதல் தவறில்லை, காதல் வசப்பட்டவர்கள் அதைக் கையாளும் விதத்தால்தான் அதைப்பற்றிய நமது கண்ணோட்டம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. அதிலும் முக்கியமாக பெண்ணைப்பெற்றவர்கள் ‘நம் குழந்தையின் வாழ்வு கெட்டுப்போய்விடக்கூடாதே’ என வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டாற்போல் இருக்க நேரிடுகிறது. கருத்தொருமித்த, உண்மையான காதல் கொண்டவர்கள் அதைச் சரியான முறையில் வீட்டாரிடம் வெளிப்படுத்தவும் வேண்டும். சொல்லாத காதல் வெல்லாது என்பார்கள்.
காதல் என்பது அன்பின் ஆதியூற்று. ஆணும் பெண்ணும் இணைந்து கட்டியெழுப்பும் சமூகத்தின் அடிக்கல். ஒருவரைப் பலவீனமாக்குவதல்ல.. மேலும் உறுதிப்படுத்துவதே அன்பு என்பதைப் புரிந்து கொள்வதே.
“ஆதலினால் காதல் செய்வீர்”
1 comment:
காதலைப் புரியாதவர்களுக்கு அது ஆபத்துதான். நல்லதொரு தொகுப்பு. பாரதியார் பாடல்களையும், இடிக்கும் கேளிர் நும் குறையாக பாடலையும் நினைவுபடுத்தினீர்கள்.
Post a Comment