அத்தியாவசியத்தையும் ஆடம்பரத்தையும் எதுவென நிர்ணயிக்கும், அதற்கான எல்லைக்கோட்டை வரையறுக்கும் அகக்காரணி மனம், புறக்காரணி வருமானம்.
புகழ்ச்சியை மட்டுமே கேட்டு வளர்ந்தவன், தான் செய்வதெல்லாமே சரிதான் என்ற மனநிலையைக் கொண்டிருக்கிறான். உனக்கு ஒன்றுமே தெரியவில்லை என மட்டம் தட்டப்பட்டு வளர்ந்தவன், தன்னால் எதுவுமே ஆகாது என்ற மனநிலையுடன் இருக்கிறான். அவர்கள் தன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருப்பதற்கு மாறாகச் சொல்லப்படும் வார்த்தைகள் எதையுமே ஏற்பதில்லை என்ற ஒரு புள்ளியில்தான் இருவரும் ஒன்றுபடுகிறார்கள்.
கீழே விழுந்தாலும் காயப்படுவதில்லை நீர், புதைக்கப்பட்டாலும் பெருவீச்சுடன் முகிழ்க்கின்றன விதைகள், சிறைப்பட்டாலும் கீற்றாய் ஔிர்கிறான் சூரியன், மனித மனம் மட்டும் தொட்டாற்சிணுங்கியாய் சிறு இடையூறுக்கும் அவ்வப்போது சுணங்குகிறது.
எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம், காயப்படுத்தப்படலாம் என்ற நுண்ணுணர்வு அதீத எச்சரிக்கையுணர்வை உண்டுபண்ணுகிறது.
எதிர்காலக் கற்பனைகளில் மிதக்காத, கடந்த கால நினைவுகளை மேயாத, நிகழ்காலத்தின் யதார்த்த வெளியி்ல் காலூன்றி நிற்கும் மனக்குதிரையைப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.
ஓய்வெடுக்க ஒரு மேகத்திண்ணை கூட இல்லாத நீலவீதியில் மயங்கிக்கிடக்கிறான் செய்யோன், மனம் பொறுக்காமல் விசிறுகிறது ஒரு சிறு பறவை.
எதைப்பேச ஆரம்பித்தாலும் அறிவுரையில் முடிப்பவர்கள் அறிவுரை கூற ஆரம்பித்தால் எதைப் பேசி முடிப்பார்கள்?
எங்கோ பொழிவதற்காக இங்கிருந்தே கருக்கொள்ள ஆரம்பிக்கின்றன மேகங்கள், மொத்தமாய்ப் பறிகொடுப்பதற்காய் துளித்துளியாய்ச் சேகரிக்கும் தேனீக்கள் போல்.
பற்றிப் படர்ந்து செல்லும் பசுங்கொடிக்குத் தன் வீடென்ன? பிறர் வீடானாலுந்தானென்ன? நல் கொழுகொம்பொன்றே அதற்குக் குறி.
ஒரு செயலைத் திட்டமிடும் அதே நேரத்தில் மாற்றுத்திட்டத்தையும் கைவசம் வைத்திருப்பது நல்லது. ஒன்று எதிர்பாராதபடி நடக்கவில்லையானாலும் இன்னொன்று கை கொடுக்கும். இது வேண்டாத மன உளைச்சலைத் தவிர்க்கிறது.
No comments:
Post a Comment