நல்லாச்சி நூலுக்கு எழுத்தாளரும், வெண்பா கற்றுத்தந்த குருவும், தோழியுமான கீதா சுதர்சனம் அளித்த அணிந்துரை. மிக்க நன்றி கீதா.
**************************************************
குழந்தைகளுக்குத் தம் தாத்தா, பாட்டிகளுடன் இருக்கும் பிணைப்பு அலாதியானது.
கூட்டுக் குடும்பமாக இருக்கும்போதும், தனிக் குடும்பமாக இருந்தால் அவ்வப்போது பார்க்கும்போதும், வெளியூரிலோ, வெளி நாட்டிலோ இருந்தால் விடுமுறை நாட்களில் சந்திக்கும் போதும் என்று, தாத்தா, பாட்டிகளுடனான நம் சிறு வயதுத் தொடர்புகள், நாம் வளர்ந்த பின்னும் நினைவில் நின்று நெகிழ/மகிழ வைப்பவை.
கருவறையிலிருந்து வெளிவந்த கணம் முதல் சிறிது சிறிதாக விரிவடைகிறது குழந்தைகள் உலகம். அவ்வப்போது எழும் ஆர்வம் கலந்த ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள அவர்களிடமிருந்து கேள்விக் கணைகள் பிறந்த வண்ணம் இருக்கும். அவர்களே தேடி விடை காணும் வயது வரும் வரையில் தாய், தந்தையார் இல்லா நேரத்தில் அல்லது அவர்களுடன் இணைந்து தாத்தா, பாட்டிகள் வகிக்கும் பங்கு முக்கியமானது நம் நாட்டின் குடும்பக் கட்டமைப்பில்.
வயல்வெளி, தோட்டம், துரவு, ஆடு, மாடு என்று ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் ஆச்சியைக் காணப் பட்டணத்திலிருந்து வருகிறாள் பேத்தி. அவர்கள் இருவருக்குமிடையேயான பாசப் பிணைப்பை , அவர்கள் உரையாடல்கள் மூலம் வெளிப்படுத்துபவையே சாந்தி மாரியப்பனின் "நல்லாச்சி" கவிதைகள்!
இக்கவிதைகளில் சிலவற்றை முகநூலில் அவ்வப்போது கண்ணில் படும்போது படித்து இரசித்திருக்கிறேன் என்றாலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பை இப்போது ஒரே மூச்சில் படித்து முடித்தது இனிய அனுபவம். படித்ததும் ஒரு குறும்படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. கிராமப் பின்னணியில் நல்லாச்சியும், பேத்தியும் உயிர்ப்புடன் கண்முன் வந்து நின்றனர். பேத்தியின் அறியாப் பருவக் கேள்விகளும், நல்லாச்சியின் சமயோஜிதமும், வெகுளித் தனமும் வெளிப்படும் பதில்களும் சில சமயம் புன்னகையையும் சில சமயம் நெகிழ்வையும் விளைவிக்கக் கூடியவை.
பல் கொட்டும் வயதான நல்லாவுடன் அவள் தாயும் இருக்கிறாள். தனக்கு முன், தன், பின்னிரு என்று நான்கு தலைமுறைகளை அரவணைத்துச் செல்லும் அன்பு ஆச்சியே நல்லாச்சி.
இயற்கையோடு இயைந்த கிராம வாழ்க்கையை, நல்லாச்சி பேத்திக்கு அறிமுகப்படுத்துவதும், அவற்றுக்கு ஒப்பான நகர வாழ்க்கை அம்சங்கள் குறித்துப் பேத்தி பாட்டிக்குப் பாடம் எடுப்பதும், நெருங்கிய தோழிகள் போல அவ்வப்போது பிணங்கி இணைவதுமாக நேரம் நகர்கிறது இருவருக்கும்.
இட்லி, தோசை, தொப்பி என ஆச்சி மருதாணி வைக்க, நூடுல்ஸ் மெஹந்தியை பேத்தி ஆச்சிக்கு அறிமுகப்படுத்துகிறாள்!
புள்ளிக் கோலம் போட ஆச்சி கற்பிக்க, பேத்தி அவளுக்கு எழுதப் படிக்கச் சொல்லித் தருகிறாள்!
பேத்தி பம்ப் செட்ட்டில் கொட்டும் நீரை சிறு அருவி என்றால் ஆச்சி அருவியை பெரிய பம்ப் செட் என்கிறாள்!
நகரம் சார்ந்த கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றும் பேத்தி, கோவில் யானை எப்படி முகக் கவசம் அணியும் என்று கவலைப் படுகிறாள்.
ஆச்சி கிராமத்து அன்றாட நிகழ்வுகளை வைத்து நேரம் கணித்தால், பேத்தி குறும்பாக ஆச்சியின் அன்றாடச் செயல்களை வைத்து நேரம் கணிக்கிறாள்!
பேத்தி உறங்குவதற்காக ஆச்சி கதை சொல்ல ஆரம்பித்து, அதை விஞ்சும் வகையில் பேத்தி அளந்து விடும் கதைகளில் ஆச்சி முதலில் உறங்கி விடுகிறாள்!
மரம், செடி, கொடிகள், காய், கனிகள், பறவைகள், விலங்குகள் அனைத்தும் இவர்களுடைய நாடகத்தில் பங்கேற்கின்றன. தாத்தாவும் அவ்வப்போது மாட்டிக்கொண்டு விழிக்கிறார்.
எம்பிக் குதித்தும் கைக்கெட்டா உயரத்தில் இருக்கும் செம்பருத்திப் பூவோடு பேத்தி காய் விட,
"ஒரு தேன்சிட்டோ
மெல்லிய தென்றலோ
கடந்து சென்ற நல்லாச்சியோ
யாரோ ஒருவர்
ஏதோவொன்று
பேத்தியின் கைகளில் தாழ்கிறது பூங்கிளை
பழம் பழம் பழம்"
இந்த வரிகளில்தான் எத்துணை நயம்!
இவ்வாறு பல அழகான நிகழ்வுகளை நெல்லை, குமரி வட்டார வழக்குச் சொற்களோடு பிணைத்து, பாட்டியாகவும், பேத்தியாகவும் மாறி மாறி சாந்தியின் கற்பனைக் குதிரை தாவியோடுகிறது.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் வாசகர்கள் உய்த்துணரக் கொஞ்சம் விட்டுவைக்க வேண்டுமே என்று நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இறுதியில் சுட்ட கொழுக்கட்டை சாப்பிடுவாளா இல்லை சுடாத கொழுக்கட்டையா என்கிற வினாவுடன்
"அவ்வைக் கிழவி நம்கிழவி
அருமை மிகுந்த பழங்கிழவி "
என்ற பாட்டோடு
அவ்வைப் பாட்டியும் இவர்கள் பேச்சில் புகுந்து புறப்படுகிறாள்.
இதே சந்தத்தில் நம் நல்லாச்சிக்கும் ஒரு கவிதை சமர்ப்பித்து, சாந்தியின் முயற்சிக்கு என் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
***
நல்லா என்றோர் நல்லாச்சி
...நயமாம் அவளின் சொல்லாட்சி
தள்ளா வயதில் தானிருந்தும்
...தன்தாய் காக்கும் சேயாச்சி
பொல்லாச் சனத்தின் கண்ணேறு
..போக்கிப் பேத்தி காத்திடுவாள்
நில்லாக் கணைகள் அவள்விடுக்க
...நிறைவாய் விளக்கம் அளித்திடுவாள்;
நல்லா ஆச்சி நலமுடனே
...நீடு வாழ வாழ்த்துவமே!
நல்லாச்சியும், பேத்தியும் தொடர்ந்து இன்னும் பேசத்தான் போகிறார்கள். அதனால் சாந்தியின் கவிதைத் தொகுப்பின் இரண்டாம் பாகமும் நிச்சயம் வெளிவரும் என்னும் நம்பிக்கையுடன்,
கீதா சுதர்சனம்.
1 comment:
நல்லதொரு நூல் விமர்சனம்.
எங்களுக்கு பாட்டிகளின் அன்பு கிடைத்ததில்லை. அம்மா வழி பாட்டி, தாத்தா இருவருமே அம்மாவின் திருமணத்திற்கு முன்னரே இறந்து விட்டார்கள். அப்பா வழி பாட்டி ஏனோ எங்களுக்கு பிடிக்காமலேயே போய்விட்டார். அம்மாவின் அத்தை ஒருவர் இருந்தார் - அவர் மட்டுமே எங்களுக்கு பாட்டியின் அன்பு என்ன என்பதைக் காண்பித்தவர்.
Post a Comment