Tuesday 27 February 2024

"நல்லாச்சி" வாசிப்பனுபவம் - கல்பனா ரத்தன்

"நல்லாச்சி" கவிதைத்தொகுப்பைப்பற்றி அன்புத்தோழி கல்பனா ரத்தனின் வாசிப்பனுபவம். நன்றி கல்பனா.
********************************************************

சாந்தி மாரியப்பன் மும்பையில் வசிக்கிறார். நாகர் கோவில் பூர்வீகம். சாரல் என்ற பெயரில் புகைப்படங்கள், சாரல் துளிகள் என கவிதைகள் அருமையாக பகிர்ந்திருக்கிறார்.

நல்லாச்சி இவருடைய கவிதைத் தொகுப்பு .

பாட்டிக்கும் பேத்திக்குமான பாசப்பிணைப்பை, அன்பின் ஆழத்தை இந்தத் தொகுப்பில் காண்பது சிறப்பான ஒன்று.

அடுத்தது திருநவேலி, நாரோயில் பகுதிகளின் தமிழ். அங்குள்ள மண்வாசம் வீசும் பேச்சுத் தமிழ் உயிரோட்டமாக உள்ளது.

பாட்டிக்கும் பேத்திக்கும் நடுவிலுள்ள தலைமுறை இடைவெளிகளை இருவரின் வேறுபட்ட மண் சார்ந்த, மனம் சார்ந்த மற்றும் இருவேறு கலாச்சாரங்களை அழகாக இணைத்துப் பின்னப்பட்ட கவிதைகள்.

தொகுப்பில் என்னைக் கவர்ந்தவை :

"நாலாம் பிறை கண்டால்
நாய் படாத பாடு பட வேண்டியிருக்கும் "
பேத்தியைக் கடிந்து கொண்டாள் நல்லாச்சி
ஜன்னல் வழியே நிலா பார்த்த பொழுதில்.
செய்வதறியாது கலக்கத்துடன் விழித்தது
தடாகத்தில்
தன் முகம் ரசித்துக்கொண்டிருந்த நிலா.

அழகிய கற்பனை.

நல்லாச்சிக்கு அருவி பெரிய பம்ப்செட்டாகத் தெரிகிறது. ஆச்சிக்கு அருவி அதிசயமென்றால் பேத்திக்கு பம்ப்செட் அதிசயம்.

**
" இதென்ன? அதென்ன?
வீதிகளை அளந்தபடி
பேத்தி வீசும் கேள்விகளுக்கெல்லாம்
பதிலளித்த நல்லாச்சி
" இது யார்? என்ற கேள்விக்கு
எப்படிப்பதிலளிப்பாள்
தாத்தா கொணர்ந்த
' இன்னொரு ' ஆச்சியென்று".

கிராமங்களில் இயல்பாக அப்போது நடப்பதும், கிராமத்துப் பெண்மணிகள் தங்கள் வலிகளை மறைத்து வாழ்வதையும் ரொம்ப இயல்பாகக் கூறியிருக்கிறார்.


அரிசி மாக்கோலம் போட்டு எறும்புகளுக்கு உணவாகும் என்றவளிடம் கோலத்தில் நீர் தெளித்து எறும்புகள் விக்கலெடுத்தால் என்ன செய்யும் என்கிறாள் பேத்தி.

தலைமுறை மாற்றங்கள் சிந்தனைகளிலும் வளர்ந்திருப்பது சிறப்பான ஒன்று.

எட்டாத உயரத்தில் உள்ள செம்பருத்தியிடம் காய் விடுகிறாள் பேத்தி.

ஒரு தேன்சிட்டோ
மெல்லிய தென்றலோ
கடந்து சென்ற நல்லாச்சியோ
யாரோ ஒருவர்
ஏதோவொன்று
பேத்தியின் கைகளில் தாழ்கிறது பூங்கிளை
பழம் பழம் பழம்....

அரிசி மரம் பார்க்கக் கிளம்பிய பேத்திக்கு அது நெற்பயிர் என விளக்கினாள் ஆச்சி.
பேத்தியின் அடுத்த கேள்வி
இதில் பச்சரிசிப் பயிர் எது?
புழுங்கலரிசிப் பயிர் எது?

பேத்திக்கு ஒரு குழப்பம். வடாம் போட்ட நாளில் ஓடி வரும் காகங்களை விரட்டுறீங்கள். தலைவாழை விருந்து வைத்த நாளொன்றில் அதை முன்னோரென மதித்து வா என்கிறீர்கள்?

நியாயமான குழப்பம் தான்.

பாட்டி பேத்திக்கு நிறைய அறிமுகப் படுத்துகிறாள். இயற்கையை, பம்ப்செட், பறவைகள், பூக்களை. மருதாணி, செவலைப்பசு, கொடுக்காப்புளி, சொக்கப்பனை, பொற்கொன்றை மரம், அவ்வைக் கொழுக்கட்டை, ஏழாங்கல், பல்லாங்குழி என ரசித்து மகிழ நிறைய இருக்கின்றன பேத்திக்கு

பேத்தியிடமிருந்து ஆச்சியும் மெஹந்தி, ஈ பாஸ், மாஸ்க், டூத் ஃபேரி என நிறையக் கற்றுக் கொள்கிறாள்.

80 கள் மற்றும் அதற்கு முன் பிறந்தவர்களின் பால்யங்கள் எவ்வளவு பசுமையாக இருந்திருக்கின்றன.

கிராமங்கள், வயல்வெளிகள், ஆடு, மாடு, கோழி, கிணறு, வாய்க்கால், சூரியகாந்தி,என இக்கால ஈராயிரக் குழந்தைகள் அறிந்திருக்காத விஷயங்கள், இழந்த சந்தோஷங்கள் எத்தனை?

பாட்டி பேத்தி என்பது வெறும் உறவு மட்டுமல்ல.. கடந்த தலைமுறையின் அடையாளங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் அன்புப் பிணைப்பு.

படிக்கப் படிக்க பால்ய காலத்திற்குச் சென்று வந்த உணர்வு.

வாழ்த்துகள் சாந்தி.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் கவிதை நூலுக்கான மற்றுமொரு இனிய விமர்சனம். பாராட்டுகளும் வாழ்த்துகளும் சகோ.

LinkWithin

Related Posts with Thumbnails