சிப்பியின் மேல் எவ்வளவோ துரும்புகளும் மணற்துகள்களும் படிந்தாலும் ஏதோவொன்றுதான் நல்முத்தாக விளைகின்றது. காணும் காட்சிகள், தோன்றும் எண்ணங்கள் யாவற்றையும் கவிதைக்களமாய்க் காண்பது கவிஞனின் மனம். அவற்றில் கவிமனதில் ஆழமாய்ப்பதிந்து உயிர்த்து ஒரு சிலவே கவிதைகளாய்ப் பிறக்கின்றன. அப்படிப் பிறந்த 119 கவிதைகளை "மரம் விடு தூது" என்ற முத்துமாலையாய் நம் முன் வைத்திருக்கின்றார் புதுவையைச் சேர்ந்த கவிஞர் ந. பரந்தாமன்.
ஒவ்வொரு கவிதையும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டுள்ளது. அன்றாட வாழ்வின் நுணுக்கமான கூறுகள், உணர்வு வெளிப்பாடுகள், அங்கலாய்ப்புகள் என அத்தனையும் ஒவ்வொரு கவிதையிலும் மிளிர்கின்றன. ஆறுதல், கட்டம் போட்ட நோட்டு போன்ற கவிதைகள் குறிப்பிடத்தகுந்தவை.
"ஒரு கவிதை நூலை
வாசிக்கும்போது
இதுவரை காணாமல் போயிருந்த நான்
கிடைக்கப்பெற்றேன்" என்ற வரியில் கவிதைக்கும் வாசகனுக்குமுள்ள தொடர்பைக் கூறுகிறார்.
"அந்தோ
என் ஓய்வுக்காலம்
ஏதேனும் சட்டம் இயற்றப்படுமா
(முதிய)குழந்தைத் தொழிலாளர்
தடுப்புக்காக" என்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன. விருப்பப்பட்டுச் சுமக்கிறவர்கள் மத்தியில் வலிந்து சுமை ஏற்றப்பட்டுச் சுமக்கும் பலவீனமானவர்களும் இருக்கிறார்கள்தானே.
மொழிச்சிடுக்குகளுக்குள்ளும் வரையறைகளுக்குள்ளும் அதிகம் சிக்கிக்கொள்ளாமல் எல்லையற்ற சுதந்திரத்துடன் புரண்டோடும் இவரின் மொழி இன்னும் சற்றுக் கூர்மை பெறின் பெருங்கவனம் பெறும்.
"கவிஞன் மென்மையானவன்
அவன் எழுதும்
தாளை விட.." எனக்கூறும் இந்த மென்மையான கவிஞனிலிருந்து வீரியமிக்க கவிதைகள் பிறக்கட்டும்.
மரம் விடு தூது (கவிதைத்தொகுப்பு)
ஆசிரியர்: ந. பரந்தாமன்
வெளியீடு: படி பதிப்பகம் மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்
1 comment:
நல்லதொரு அறிமுகம். நன்றி.
Post a Comment