Wednesday, 21 February 2024

"நல்லாச்சி" வாசிப்பனுபவம் - ராஜா ஹஸன்.

"நல்லாச்சி" கவிதைத்தொகுப்பைப்பற்றிய சகோ.ராஜா ஹஸனின் வாசிப்பனுபவம். நன்றி சகோ.
****************************************************************

தற்போது மும்பையில் வசித்து வரும் சாந்தி மாரியப்பன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் .இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. 'அமைதிச்சாரல்' என்ற வலைப்பூவில் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதி வருகிறார்.

சாந்தி மாரியப்பன் எழுதிய இந்த 'நல்லாச்சி' கவிதைத் தொகுப்பை புரட்டியதில் கவிதைகள் கடினமான மொழியில் இல்லாமல் இலகுவாக வட்டார வழக்கில் இருந்தமை காரணமாக ஈர்ப்புடன் வாசிக்க ஆரம்பித்தேன்.

பேத்தியுடன் நல்லாச்சி பாட்டியின் அனுபவங்களே கவிதை மொழியாக உருப்பெற்றிருக்கின்றன.

பேத்தியை உறங்கச் செய்வதற்காக ஆச்சி கதை சொன்னால் பேத்தி அவிழ்த்து விடும் கதைகளில் ஆச்சியே உறங்கி விடுகிறார்.

கூட்டுக் குடும்பத்தில் பெரியோர்களுடன் சிறியவர்கள் நடத்தும் சின்ன சின்ன உரையாடல்களை கவிதை நயத்தில் மிகவும் அழகுச் சரமாக தொகுத்திருப்பது சிறப்பு.

பேத்திக்கும் பாட்டிக்கும் இடையே இருந்த பாசப்பிணைப்பை இந்த கவிதை மூலம் நம்மை அறியச் செய்கிறார் நூலாசிரியர்.

"மெஹந்தி இடத் தெரியாத நல்லாச்சியை
உள்ளங்கையில் சிவந்திருந்த
நூடுல்ஸ் வரிகளும் அன்னமும் சற்றே மிரளச் செய்திருந்தன
தொப்பி அணிந்த விரல்களும்
இட்லி தோசையிட்ட உள்ளங்கைகளுமாய் வாழ்ந்த அந்தக் கிராமத்து மனுஷி
சற்று அந்நியப்பட்டே நின்றிருந்தால் அச்சூழலில்"

கைகளில் இடப்பட்ட மருதாணியைப் பார்த்து நல்லாச்சி பாட்டி தன் உள்ளக்கிடக்கைகளை மெலிந்த நூடுல்ஸ் போன்ற வடிவங்கள் வியப்புக்குள்ளாக்குகின்றன.. என்ன ஒரு எளிமையான சிந்தனை கோலம்.

பாட்டியிடம் பேத்தி தனக்கு இட்லி தோசை வரைந்து கூடுதலாய் விரல்களுக்கு தொப்பிகளும் வைக்குமாறு கேட்டுக் கொண்டாளாம்..

"மருதாணி பூங்கரங்களில் முத்தமிட்ட ஆச்சியின்
அன்பு சிவந்திருந்தது பேத்தியின் கைகளில் மருதாணி வாசத்துடன்." என்ன ஒரு அற்புதமான தருணம் .

இவ்வாறாக பேத்திக்கும் பாட்டிக்கும் இடையிலான ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறு கவிதைகளின் தொகுப்பு மிகவும் அருமை.

"கலகலக்கும் நகரத்து தீபாவளியை விட்டு
கிராமம் நோக்கி இம்முறை பேத்தி பயணப்பட்டதற்கு அதிரசத்தையும் கைமுறுக்கையும் தவிர நல்லாச்சி வீட்டில் பொறிந்திருந்த கோழிக்குஞ்சுகளும் தோட்டத்து மரத்தில் குடிவந்திருக்கும் கிளிகளும் காரணமென்பதை "
பாட்டியும் பேத்தியும் மட்டுமே அறிவர்.

சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு... என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சின்ன சின்ன சம்பவங்களில் பெரியவரான பாட்டியும் சிறிய பேத்தியும் உவகை கொள்வதைக், அருகில் இருந்தே நாம் கண்டு களிக்கும் வண்ணம் நூலாசிரியர் சூழல்களை நயத்துடனும் எளிய கவித்துவத்துடனும் படைத்திருக்கிறார். ❤️

கோவிட் நோய் தொற்று காலத்தில் ஈ- பாஸுடன் ஊர் வந்த பேத்தி, சமூக விலகல் அவசியம் என மாடுகளை விலகிக் கட்டச் சொன்ன பேத்தியின் கட்டளையை சிறப்பாக நிறைவேற்றிய பாட்டி ...அவள் கேட்ட ஒரு கேள்வியால் தடுமாறுகிறார்..

" கோவில் யானையை முகக் கவசம் அணியச் சொன்னால் என்ன செய்யும் எப்படி அணியும்?"

"வாசலுக்கு மங்கலமூட்டுவதோடு பிற உயிரினங்களுக்கும் உணவாகும்"
ஏனென்று கேட்ட பேத்திக்கு விளக்கியபடி அரிசி மாக்கோலமிடுகிறாள் நல்லாட்சி பேத்தியின் சிறு கை அள்ளிய நீரெல்லாம் கோலத்தின் வழி இழியக் கண்டு பதறிய ஆச்சியை அமர்த்தி நவில்கிறாள் பேத்தி.

" எறும்புக்கு விக்கல் எடுப்பின் என் செயும்? ஆகவே நீரும் வைத்தேன்" ஞே..யென மயங்கிச் சாயும் ஆச்சியின் முகத்தில் ஆரேனும் நீர் தெளிப்பீராக..

இவை போல நல்லாச்சிக்கு அருவி விருப்பமென்றால் பேத்திக்கு பம்ப் செட் அதிசயம்.. பேத்திக்கு புலி பெரிய பூனையென்றால் நல்லாச்சிக்கு பூனை சிறிய புலி.

பாட்டி பேத்திக்கு இடையிலான அனுபவங்களையே கருப்பொருளாக்கி அவற்றை மிகவும் எளிய மொழியில் வாசித்தவுடன் உணர்ந்து அனுபவிக்கச் செய்யும் நூலாசிரியரின் இந்த நல்லாச்சி கவிதைத் தொகுப்பு.. சிறப்பு.

'நல்லாச்சி' -கவிதைத் தொகுப்பு ஆசிரியர் -சாந்தி மாரியப்பன்
விலை- ரூபாய் 70
பக்கங்கள் -70
வெளியீடு -கோதை பதிப்பகம்
முதல் பதிப்பு பிப்ரவரி 2024

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விமர்சனம். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

LinkWithin

Related Posts with Thumbnails