சிங்கப்பூரின் “மாயா இலக்கிய வட்டம்” நடத்திய போட்டியில் முதல் பரிசை வென்ற இக்குறுநாவலின் ஆசிரியர் ராம்தங்கம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். பரவலாகக் கவனம் பெற்று வரும் இளம் படைப்பாளி. சிறுகதைத்தொகுப்புகள், நாவல்கள், கட்டுரைத்தொகுப்புகள், வரலாற்று நூல்கள், பயண நூல்கள் என இவரது படைப்புகளும் பெற்ற விருதுகளும் ஏராளம். "திருக்கார்த்தியல்" என்ற தொகுப்புக்காக இவ்வாண்டின் சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதாளர்.
காடு எத்தனையோ ரகசியங்களைத் தன்னுள் புதைத்து ஒளித்து வைத்திருக்கிறது. புறத்தே அது ஒன்றாகக் காட்சியளித்தாலும் அகத்தே அது இருப்பது வேறொன்றாக. அதை அறிய, காடு நமக்குச் சொல்லவருவது என்னவென்று புரிந்து கொள்ள அதனிடம் சரணாகதி அடைவதன்றி யாதுளது? அப்படியொரு காடுதான் இங்கே ராஜவனமாகப் பரந்து செழிப்புற்றுள்ளது. கேரள மாநிலத்திலும் நெல்லை மற்றும் கன்யாகுமரி மாவட்டத்திலுமாகப் பரவியிருக்கும் மேற்கு மலைத்தொடரின் வனாந்திரத்தைக் கதைக்களமாகக்கொண்டுள்ள இந்நூலில் நுழைந்த சில நிமிடங்களிலேயே காடு நம்மைத் தன்னுடன் இணைத்துக் கரைத்துக்கொள்கிறது.
பொதுவாக வனாந்திரங்களுக்கும், மலைப்பகுதிகளுக்கும் சாகசப்பயணம் செய்வதில் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த நாட்டமுண்டு. குமரி மாவட்டத்தில் உள்ள காளிகேசம் அருவி, கீரிப்பாறை எஸ்டேட், கோதையாறு அருவி போன்ற இடங்களுக்கு இளைஞர்கள் குழுக்களாக தத்தம் வாகனங்களில் பயணம் செய்வதைக் கண்டிருக்கிறேன். கன்யாகுமரி மாவட்டத்தில் பாயும் நந்தியாற்று நதிமூலம் தேடி கோபாலும் அவனது நண்பர்களும் அப்படித்தான் பயணிக்கிறார்கள். அவர்கள் செல்லும் வழியின் வர்ணனைகளும், பட்டியலிடப்படும் கானுயிர்களும், தாவரங்களின் பெயர்களும் வியப்பூட்டுகின்றன.
கல்குளம் தாலுகா பகுதியில் பரந்திருக்கும் அக்காட்டை முற்ற முழுக்க அறிந்தவராயிருந்தால் மட்டுமே இத்தனை விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்க முடியும். எழுத்தாளர் ஜெயமோகனின் “காடு” நாவலிலும் அவரது பல சிறுகதைகளிலும் குமரி மாவட்டத்தின் காட்டைப்பற்றிச் சொல்லப்பட்டிருந்தாலும் அது அளித்த தரிசனம் வேறு, ராம்தங்கத்தின் ராஜவனம் அளிக்கும் தரிசனம் முற்றிலும் வேறு. காடு பெருக, நிலைத்திருக்க யானைதான் முக்கியமான காரணம் என்பர். காட்டின் உண்மையான அரசன் என்றே அதைச் சொல்லலாம். அப்பேர்ப்பட்ட யானையைத் தந்தங்களுக்காக அழிக்கும் கொடூரர்கள் கையாளும் வழிமுறைகள், முக்கியமாகப் “பன்னிவெடி” பதற வைக்கிறது.
காட்டின் அபாயங்களைப்பற்றி அறிந்தும், அசட்டுத்துணிச்சலுடன் நதியின் பிறப்பிடத்தை அறியச்சென்ற கோபால் ஒரு கட்டத்தில் மறைந்த தன் தந்தையைப்பற்றி முழுதாக அறிந்து கொள்கிறான். காட்டுக்குள் அடியெடுத்து வைத்ததிலிருந்து அவரது ஆத்மார்த்தமான வழிகாட்டல் அவனுக்கு அமைகிறது. சுற்றுச்சூழல், வனவிலங்குகள், மற்றும் மலையில் வசிக்கும் காணிமக்களின் மேல் பெரும் பரிவு கொண்ட அவரது மறுபக்கம் காணிகளால் அவனுக்குக் காட்டப்படுகிறது. காணிகளுக்கு அப்பெயர் எப்படி வந்தது? அவர்களது வாழ்வியல், சடங்குகள், உணவுகள், சட்டத்துக்குப் புறம்பாக வனத்துள் நடைபெறும் அவச்செயல்கள் என பல தகவல்கள் அறியத்தரப்பட்டுள்ளன.
குமரி மாவட்டத்தின் தமிழுக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏற்கனவே தமிழும் மலையாளமும் கலந்துதான் அது பேசப்படுகிறது எனினும், ஒவ்வொரு தாலுகாவிலும் ஒவ்வொரு மாதிரியாக என உச்சரிப்பும் வழக்கும் சில கிலோமீட்டர்களுக்குள்ளாகவே ஒவ்வொரு வகையாக மாறுபடும். நாவலின் கதைக்களமாகக் கல்குளம் தாலுகா அமைந்திருப்பதால் அம்மக்கள் பேசும் மலையகத்தமிழையே நாவலின் மக்கள் பேசும் வட்டார வழக்காக அமைத்திருப்பது பெருஞ்சிறப்பு. நாகர்கோவிலில் பள்ளியிலும் கல்லூரியிலும் உடன்பயின்ற தோழிகளின் தமிழை மீண்டுமொரு முறை கேட்டதுபோல் உணர்ந்தேன். கன்யாகுமரி மாவட்டத்தின் காணி மக்களின் மொழியும் சிறப்புற உறுத்தலின்றி அமைந்துள்ளது.
சுமார் ஒன்றரை வருட தேடல், வாசிப்பு, பயணங்கள் போன்றவற்றால் இந்நூல் உருவானதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நூலை வாசிக்கும்போது அந்த உழைப்பு தெளிவாகப் புலப்படுகிறது. ராஜவனத்தில் உலாவுபவர் புத்துணர்ச்சியோடு வெளிவருவது உறுதி.
வெளியீடு: வம்சி பதிப்பகம்.
1 comment:
நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி.
Post a Comment