Saturday 3 February 2024

சாரல் துளிகள்


அலைகளற்ற கடலாய் நிச்சலனமாயிருக்கும் மனதில் பாளம் பெயர்த்து எழுந்தமையும் பழம்நினைவால் பிறக்கும் சுனாமியை ஆற்றுப்படுத்துகிறது அறிவின் கரம்.

விலக்கி விலக்கிப்போனாலும், குளத்துப்பாசி போல் நெருங்கிச்சூழ்ந்து வருபவை கழிவிரக்கமும், குற்றவுணர்வும், பழியுணர்வும். விலக்கிக் கரை சேர்பவர் சிலர், அமிழ்ந்து கிடப்பதே சுகமென எண்ணி மூழ்கிப்போகிறவர் ஒரு சிலர் எனில்  மீட்க வருபவரையும் சேர்த்து மூழ்கடிக்கும் சிலருமுண்டு.

உணர்ச்சி வேகத்தில் அறியாமல் உதிர்க்கும் சொற்களே கூட ஒருவரைச் சிக்க வைக்கும் தூண்டிலாகி விடுவதுண்டு. 

அன்பே வலையாய் ஆதரவுச்சொற்களே இரையாய் அக்கறையே மாயையாய் விரித்து வைக்கும் வேடனிடமிருந்து, புலி வேடமிட்டு சாதுர்யமாய் நழுவித்தப்புகிறது மான்குட்டி.

உணர்வு பூர்வமாகச் சிந்திப்பவரை விட அறிவு பூர்வமாக, தர்க்க பூர்வமாக, பகுத்தறிந்து சிந்தித்து முடிவெடுப்பவர் எவ்வகையான புதிய சூழலையும் சமாளித்து தீர்வு காண்பார்.

கூடவே செல்லும் எஸ்கலேட்டர் படிக்கட்டுகளாக நாம் இருப்பதாக நினைத்துக்கொள்கிறோம், ஆனால் உண்மையில், உபயோகித்தபின் அங்கேயே விட்டுச்செல்லப்படும் சாதாரண படிக்கட்டாகவோ அல்லது எட்டி உதைக்கப்படும் ஏணியாகவோதான் இருக்கிறோம். 

பொங்கிப்பெருக்கெடுக்கும் வெள்ளமும் உள்ளமும் ஒன்றே. அத்தனைக்கும் பின் கசடற நிர்மலமாய் அமைதியாய் தெளிந்திருக்கும்.

பட்டத்தின் வாலைப்போல் சீராக இருப்பதைவிட்டு, அதன் நூல்கண்டைப்போல் ஏன் இந்த வாழ்க்கை தன்னைச் சிக்கலாக்கிக் கொள்கிறது? பொத்திப் பாதுகாக்கும் கரங்களை விடுத்து முரட்டுக் கரங்களையே ஏன் அந்த நூல்கண்டு சென்றடைகிறது? விலகிச்செல்வதைச் சீண்டாத கரங்கள், தம்மைச் சரணடைபவற்றைச் சிதைக்கும் கொடூரம் கொள்வது ஏன்? மாயக்கயிற்றால் விரல்களை ஆட்டிப்படைக்கும் மனமல்லவோ சூத்ரதாரி. திருத்தப்படாத தீர்ப்புகளுக்குப்பின் சிதைந்து கிடக்கிறது நூல்கண்டு.

துரத்தித் துரத்திக் குரைத்துக் களைத்து விழும் நடுநிசி நாய்களைக் கண்டுகொள்ளாமல் தனக்கான உயரத்தில் கம்பீரமாகப் பெருஞ்சத்தத்துடன்  பறந்து செல்கின்றன விமானங்கள். பதில் கிடைக்கப்பெற்றும் புரிந்து கொள்ளாத ஞமலிகள் அடுத்த விமானத்தைத் துரத்த ஆரம்பிக்கின்றன.

குறை சொல்வதை மட்டுமே  நோக்கமாகக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் செவி சாய்த்துக்கொண்டேயிருந்தால் பறத்தல் முடங்கி சிறகுகள் கருகி இறுதியில் நடையற்றுக்கிடக்க நேரிடும்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

சாரல் துளிகள் அனைத்தும் சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

LinkWithin

Related Posts with Thumbnails