Wednesday 24 January 2024

நாழிக்கூழும் நாழி மிளகாயும் - சி. அன்னக்கொடி


மனிதனின் வாழ்வை சமுத்திரமெனக்கொண்டால், அவ்வாழ்வின் சில துளிகளை, கால் நனைத்து நிற்கும் நமக்கு ருசிக்கக்கொடுக்கும் அலைகள்தாம் சிறுகதைகள் எனக்கொள்ளலாம். சக மனிதர்களை அவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள, அவர்களின் வாழ்வியலின் வண்ணச்சித்திரத்தின் ஒரு துளியையாவது அறிதல் வேண்டும். இங்கே, அப்படி துளித்துளியாய் வரைந்ததுதான் இந்த சிறுகதைத்தொகுப்பு.

முற்றிலும் கிராமத்து வாழ்வைப் பேசும் கதைகளே இந்நூலில் செறிந்திருக்கின்றன. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல் மேலோட்டமாகத் தோன்றினாலும் அத்தனையும் ஒன்றுக்கொன்று இழைந்து வருபவையே. தொகுப்பை முற்றிலுமாக வாசித்து முடிக்கும்போது ஒரு கிராமத்துக்கே போய் யுகயுகமாக வாழ்ந்துவிட்டு வந்த உணர்வை அளிக்கிறது. வழக்கறிஞர் சி. அன்னக்கொடி அவர்களால் முற்ற முழுக்க வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் மொத்தம் இருபத்து மூன்று சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

வீட்டிலுள்ள மனிதர்களிடம் பாசம் வைத்திருப்பதைப்போலவே, ஏன் அதற்கு ஒரு படி மேலாகவே தாங்கள் வளர்க்கும் ஆடுமாடுகளிடம் பாசம் வைத்திருப்பவர்கள் கிராமத்து சம்சாரிகள். அவ்வாறே அஃறிணைப்பொருட்களிடமும், பற்று மிகக் கொண்டவர்கள். தங்களுக்குச் சொந்தமானவற்றை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நகரத்து மக்களுக்கு உலக்கை ஒரு சாதாரணப்பொருள். அதுவே கிராமத்திலிருப்பவர்களுக்கோ ஒரு தெய்வத்துக்குச் சமமானது. விவசாயியின் குடும்பத்தில் தப்பித்தவறி சுளவு, உலக்கை, போன்றவற்றில் தெரியாத்தனமாகக் கால் பட்டு விட்டால் கூட தொட்டு வணங்கச்செய்வார்கள். அப்படியோர் உலக்கை ஒரு குடும்பத்தையே பிரிக்கவும் அதே போல் இணைக்கவும் செய்கிறது. எல்லாம் பற்று செய்யும் மாயம்.

உறவு முறைக்குள் இருப்பவர்களோ இல்லாதவர்களோ.. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் இடக்குப்பேச்சுகள் நம்மைப் புன்னகைக்க வைக்கின்றன. அப்பச்சிகளின் பெருமை பேசும் அப்பத்தாக்கள், அப்பத்தாக்களிடம் எசலும் பேரப்பிள்ளைகள், பெரியவர்களுக்குப் பட்டப்பெயர் வைக்கும் சிறிசுகள், முதலில் வைக்கப்பட்ட பெயர்களுக்காக வருந்தி, அதன்பின் மகிழும் சைக்கிள் தாத்தா, மகளைத் தேடியலைந்து வீட்டுக்குத் திரும்பும்போது அந்த வருத்தத்திலும், உப்புக்கண்டத்துக்காக ஒரு ஓரமாக மகிழும் தகப்பன், செத்துப்பிழைத்து பகை தீர்க்கும் கற்பகம் என நாம் காணும் சித்திரங்கள் அனேகம். 

தனித்தனிச் சிறுகதைகள்தாம் எனினும், மொத்தமாக வாசித்து முடியும்போது ஒரு உணர்வுக்குவியலான திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. வெள்ளந்தி மனிதர்கள்தான் எனினும் அவர்களுக்கேயுரிய சாமர்த்தியமும் சில கதைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. முக்கியமாக பொங்கக்கூட்டம், சகுனம் போன்ற சிறுகதைகள். திருடித்தின்பதுதான் ருசி என்பார்கள் சிறுவர்கள். அந்த சித்தாந்தம் பெரியவர்களுக்கும் உண்டு என்பதை கள்ளப்பனை, ஏப்பம் போன்ற கதைகளில் நிறுவி நம்மைப் புன்னகைக்க வைக்கிறார் ஆசிரியர். கத்தரிக்காய் ரசமும் மிக ருசிக்கிறது. 

கஷ்டப்பட்டு, கடன்பட்டு, கருமாயப்பட்டு விவசாயம் செய்யும் ஒரு விவசாயியின் மனப்பொருமல் தூத்தலாய்த் தெறிக்கும்போது, நாமும் உச்சுக்கொட்டுகிறோம். பாசம், கருணை, பழி வாங்கல் என அந்த மனிதர்களின் உணர்வுகளுடன் நாமும் இரண்டறக்கலக்கிறோம்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் கரிசல் மண்ணின் வட்டார வழக்கில் அமைந்திருந்தாலும், தொகுப்பின் மொழி சற்றே மதுரை மண்ணின் வட்டார வழக்கையும் பிரதிபலிக்கிறது. வாசித்து நெடுநேரமான பின்னும் கதை மாந்தர்களைப்பற்றி நம்மைச் சிந்திக்க வைப்பது இந்நூலின் வெற்றி எனக்கொள்ளலாம்.

நூல் – நாழிக்கூழும் நாழி மிளகாயும்
ஆசிரியர் – சி. அன்னக்கொடி
வெளியீடு – கோதை பதிப்பகம்

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு அறிமுகம். மின்நூலாகவும் கிடைக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அறிமுகத்திற்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails