Monday 8 January 2024

முஹூர்த்தக்கால் எனும் பந்தக்கால்..


ஒரு வீட்டில் கல்யாணம் நடக்கப்போகிறதென்றால் தேதி நெருங்கும்போது, "காலு என்னைக்கி ஊணுதாவோளாம்?" என்று சொந்தக்காரர் சொக்காரன்மார் ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்வர். 'பந்தக்கால் எனும் முஹூர்த்தக்கால்' ஊன்றும் வைபவத்தைத்தான் அவர்கள் அப்படிக் கேட்பார்கள்.

வீடு கட்டும்போது மற்ற எல்லா வாசல்களையும் விட நிலைவாசல் எனும் தலைவாசலை ஊன்றும்போது மட்டும் அதற்கு மஞ்சள் குங்குமமிட்டு, மாவிலைத்தோரணம் கட்டி பூஜை செய்து ஊன்றுவது மரபு. அவ்வாறே திருமணப்பந்தலை அமைக்கத்தொடங்கும்போது ஊன்றப்படும் முதல் காலுக்கும் பூஜை செய்து ஊன்றும் வழக்கம் வந்திருக்கலாம். இப்படி முஹூர்த்தக்கால் ஊன்றி விட்டால் அதன்பிறகு திருமணம் முடியும்வரை எந்த துக்க நிகழ்வுகளிலும் மணவீட்டார் கலந்து கொள்ளக்கூடாது.

சவுக்கு, மூங்கில் போன்ற நீண்ட கம்புகளையோ அல்லது பால்மரத்தின் நீண்டதொரு கிளையையோ எடுத்துவந்து, மேல்பிசிறில்லாமல் தேய்த்துவிட்டு, முழுவதும் மஞ்சள்பூசிக் காய விடுவார்கள்.  அதன்பின் நல்ல முஹூர்த்தநேரத்தில் குடும்பத்தில் மூத்தவர் அதில் மாவிலைக்கொத்தைக் கட்டுவார். பின் அதற்கு பூமாலை அல்லது மல்லிகைச்சரத்தின் ஒரு துண்டைச்சூட்டுவர். வெற்றிலைபாக்குடன் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக்கட்டும் வழக்கம் சில பகுதிகளில் உண்டாம். பின் மஞ்சள் குங்குமமிட்டு.. பெண்கள் குலவையிட கற்பூரம் காட்டுவார்.

அவருக்குப் பின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்து மஞ்சள் குங்குமமிட்டு குலவைச்சத்தத்துடன் கற்பூரம் காட்டி வணங்குவார்கள். இது முடிந்ததும் வீட்டின் வடகிழக்கு மூலையில் பந்தக்காலை ஊன்றவோ அல்லது ஏதேனும்  பிடிமானத்துடன் சேர்த்துக் கட்டவோ செய்வார்கள். பெரும்பாலும் இச்சடங்கு திருமணத்திற்கு நாலைந்து நாட்களுக்கு முன் மாப்பிள்ளை வீட்டில் "தாலிக்குப் பொன்னுருக்கு"ம்போது நிகழும். பெண் வீட்டில் நிச்சயதார்த்த தினத்தன்று நிகழும். ஒரு சிலர் திருமணம் நிகழும் தினத்தில் எல்லாச்சடங்குகளுக்கும் முன்னால் இதைச்செய்வதுமுண்டு. இம்மூன்று தினங்களிலும் செய்வதானால் இதற்கெனத் தனியாக முஹூர்த்தம் பார்க்க வேண்டாம் அல்லவா?. இதேபோல், திருமணச்சமையலுக்காகப் போடப்படும் கோட்டையடுப்புக்காக, ஒரு சில கற்களையும் பூஜை போட்டு எடுத்து வைத்துக்கொள்வதுமுண்டு.

சமீபத்தில் மகளின் சக ஊழியரின் கல்யாணத்தில் கலந்து கொண்டபோது ஒரு நாற்காலியில் ஜவ்வரிசி மற்றும் அரிசி அப்பளத்துடன் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுங்கிளையொன்று கவனத்தை ஈர்த்தது. கிட்டே நெருங்கிப்பார்த்தால்... மாங்கிளை.

அட!!.. முஹூர்த்தக்கால்.

நடப்படும் முஹூர்த்தக்கால் பால்மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளையாக இருந்தால் அதை குளக்கரையிலோ அல்லது ஆற்றங்கரையிலோ நட்டு வைப்பது தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வழக்கம். அப்படி நடப்படும் கிளை செழித்து விருட்சமாகவே வளர்ந்து விடுவதுமுண்டு. மணமக்களும் அவ்வாறே வாழ்வில் செழித்து விளங்க வேண்டுமென்பதற்காகவே இப்பழக்கம் வந்ததாகவும் சொல்வார்கள். இதைச்சாக்கிட்டு ஊரெங்கும் மரங்கள் வளர்ந்து சுற்றுச்சூழல் பசுமையாக இருக்கவும், மழை பெய்யவும் உதவுவதாகவே நாம் எடுத்துக்கொள்வோம். இந்த முஹூர்த்தக்கால் நடும் வைபவம் வடநாட்டிலெல்லாம் இருக்காது என்றுதான் இவ்வளவு நாட்களாய் நினைத்துக்கொண்டிருந்தேன், மும்பையில் அதுவும் மராட்டியர்களிடமும் இந்த வழக்கம் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. 

எது எப்படியோ?!! உலகின் எந்தப்பகுதியாய் இருந்தால் என்ன? மனிதவாழ்வில் ஒவ்வொரு படிநிலைகளிலும், சடங்கு சம்பிரதாயங்கள் என இயற்கையோடு ஒன்றியே ஒவ்வொன்றையும் அமைத்திருப்பது விளங்குகிறது. ஒவ்வொன்றையும் கேள்வி கேட்கிறோம் என்ற பெயரில் இயற்கையிலிருந்து வெகு தூரம் விலகிச்செல்லும் போது அதற்கான விலையையும் கொடுக்க நேர்வதுதான் யதார்த்தம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails