Sunday, 5 January 2020

மாம்பழம் வாங்கலையோ..

மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் மாம்பழம் முதலாம் இடத்தில் வைத்துப்போற்றப்படுகிறது. இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மட்டுமல்ல மாம்பழக்காலமும் ஆரம்பிக்கிறது. அப்பொழுது அல்போன்ஸாவோடு ஆரம்பிக்கும் மாம்பழக்காலம், ஜூலையில் மழைக்காலத்தில் கிளிமூக்கு மாம்பழங்களின் வருகையோடு நிறைவடையும்.  பாதாம் அப்பூஸ், கேஸர், லங்கடா, தஸேரி, நீலம், பங்கனபள்ளி, மல்கோவா என நாம் சுவைக்க பல்வேறு வகைகள் ஒவ்வொன்றாய் அணி வகுத்து வரும் மாம்பழக்காலத்தில் அதைப் பழத்துண்டுகளாகவும், சாறாகவும், மற்றும் பல இனிப்புகளாகவும், உணவு வகைகளாகவும் அவரவர் விரும்பிய வகையில் உண்பர் மக்கள்.

மாம்பழக்காலம் தொடங்கி விட்டது என்பதைக் கட்டியம் கூறி அறிவிக்கிறது அல்போன்ஸா மாம்பழங்களின் வருகை. அளவில் சற்றே சிறியதாய் இருந்தாலும் சுவை மிகுந்தது. மெல்லிய தோலும் அதிக அளவு சதைப்பற்றும் , மிகுந்த சுவையும் கொண்ட இப்பழம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மஹாராஷ்ட்ராவின் ரத்னகிரி, தேவ்கட் போன்ற இடங்களில் விளையும் அல்போன்ஸா மாம்பழங்கள் மிகுந்த பிரசித்தி பெற்றவை. நார் சற்றும் இருக்காது ஆகவே, சீசனின்போது அல்போன்ஸாவை உபயோகித்து, வீடுகள் தோறும் ஆம்ரஸ் எனும் இனிப்பு செய்யப்படுவது வழக்கம். மற்ற மாம்பழ வகைகளிலும் செய்யலாமெனினும் அல்போன்ஸாவிலிருந்து தயாரிக்கப்படும் ஆம்ரஸ்ஸிற்குச் சுவையும் நிறமும் அதிகம்.


ருசி மற்றும் இதன் மற்ற குணங்கள் காரணமாக அல்போன்ஸாவானது "மாம்பழங்களின் ராஜா" என வழங்கப்படுகிறது. மஹாராஷ்ட்ராவைப் பொறுத்தவரை இது டஜன் கணக்கில்தான் விற்பனையாகிறது. சீசன் ஆரம்பிக்கும்போது ஒரு டஜன் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இருக்கும். மெல்ல மெல்லக்குறைந்து முன்னூறு ரூபாய் வரைக்கும் வருவதுண்டு. ஒரு டஜன் மட்டுமல்லாமல் இரண்டு, நான்கு, ஐந்து டஜன் மாம்பழங்கள் கொண்டவை என வகை வகையாகப் பெட்டிகள் விற்பனைக்கு சந்தையில் அடுக்கப்பட்டிருக்கும். மொத்தமாக வாங்கும்போது விலை சற்றுக்குறையும். அவரவர் சாமர்த்தியத்தைப்பொறுத்து பேரம் பேசி மேலும் விலையைக்குறைக்கலாம்.




பாதாம் அப்பூஸ்: வடிவிலும் நிறத்திலும் அல்போன்ஸாவைப்போன்றே தோற்றமளிக்கும் அதே சமயம், அளவில் சற்றுப்பெரிதான பாதாம் அப்பூஸ் மாம்பழம், கர்நாடகாவிலிருக்கும் பதாமி என்னும் இடத்தைத் தாயகமாகக் கொண்டது. ஆகவே அப்பெயர். அல்போன்ஸாவின் விற்பனை சற்று உச்சத்தை எட்டும் காலத்தில் இது சந்தையில் நுழையும். ருசியில் அல்போன்ஸாவிற்குச் சற்றும் குறைந்ததல்ல. ஆகவே அப்பூஸ் அளவிற்கே இதற்கும் வரவேற்பு கிடைப்பதுண்டு. இதுவும் நாரில்லா வகையைச் சேர்ந்ததே ஆகையால் ஜூஸ் முதலானவை தயாரிக்கப் பயன்படுகிறது.

கேசர்: நீள்வட்ட வடிவமும் பொன்னிறமும் கொண்டது. காம்பையொட்டிய பகுதியில் சிவந்திருக்கும். சந்தையில் அல்போன்ஸா மாம்பழங்களின் வரத்து சற்றுக்குறைய ஆரம்பிக்கும்போது கேசர் மாம்பழம் வர ஆரம்பிக்கும். கவர்ந்திழுக்கும் நறுமணம் மற்றும் இனிய சுவையின் காரணமாக இதுவும் அதிக அளவில் விற்பனையாகிறது. பழச்சாறு, பழக்கூழ், ஜாம் மற்றும் மாம்பழத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குஜராத் மற்றும் மேற்கு இந்தியாவில் அதிகம் விளைகிறது. அல்போன்ஸா வகையை விட அளவில் சற்றுச் சிறியதான இப்பழம் "மாம்பழங்களின் ராணி" எனப் போற்றப்படுகிறது.

கிளிமூக்கு: சற்றே நீளமாய் அதே சமயம் உருண்டு திரண்டு இருக்கும் இந்த மாம்பழ வகை, கிளிமூக்கு, தோத்தாபுரி, பங்களோரா, கல்லாமணி, சந்தேர்ஷா என பற்பல பெயர்களால் அறியப்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகம் விளையும் கிளிமூக்கு மாங்காய் அதிகம் புளிப்பதில்லை, அதேசமயம் பழுத்தால் அதிகம் இனிப்பதுமில்லை. ஆகவே இது ஊறுகாய், பச்சடி, உப்பிலிடு போன்ற பதார்த்தங்களைத் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அவியல், சாம்பார், கூட்டாஞ்சோறு போன்ற அயிட்டங்களில் சேர்த்தால் ருசி கூடும். பொதுவாக மாம்பழ சீசன் முடியப்போகும் காலத்தில்தான் இது சந்தைக்கு வரும்.
லங்கடா: உள்ளே நன்கு பழுத்தபின்னும் தோல் சற்று கெட்டியாக பச்சை வண்ணத்திலேயே இருக்கும். சற்று நீள் வடிவத்தில் இருக்கும். மாம்பழக்காலம் கிட்டத்தட்ட முடியப்போகும் சமயம் கேஸர் வகையுடன் இதுவும் சந்தையில் வர ஆரம்பிக்கும். சதைப்பகுதி லேசான நார் கொண்டது.

மீதமுள்ள வகைகள் வரும் மாம்பழக்காலத்தில் பகிரப்படும்.

முன்னொரு முறை பகிர்ந்ததை வாசிக்க சுட்டியைச் சொடுக்கவும்.

Wednesday, 1 January 2020

இனிய புத்தாண்டு 2020

டெஸ்ட் போட்டி போல் நிதானமாகச்செல்லப்போகிறதோ, அல்லால்.. 20-20 போட்டியைப்போல் அடித்து ஆடப்போகிறதோ!!!


எது எப்படியாகிலும் அனைவரும் வென்று வெற்றிவாகை சூட இனிய நல்வாழ்த்துகள்.

Wednesday, 18 December 2019

சாரல் துளிகள்

துரத்தும் இரவிடம் புறமுதுகிட்டு, தவ்வித்தவ்விச் சென்று கொண்டிருக்கிறது வெயில்
கண்ணாடித்துண்டுகள் சூடிய மதிற்சுவரைச் சற்றும் அஞ்சாது பரவிக்கிடக்கும் பூங்கொடியை எச்சரிக்கிறது சுடுவெய்யில், ஆற்றுப்படுத்துகிறது இளங்காற்று, அது பாட்டுக்கு அதுவென்று பூத்துக்கிடக்கின்றன இள நீலப்பூக்கள்.
ஒரு வெள்ளைப்பந்தாய்ப் பூத்திருக்கும் நந்தியாவட்டைச் செடியை வாஞ்சையுடன் தடவி இறங்குகிறது வெய்யில்.
ஒரு திருடனைப்போல் மெல்ல ஏறி வந்து முற்றத்தில் காத்திருக்கும் வெய்யில், முதற்பார்வையில் திடுக்கிடச்செய்கிறது.

தடாகத்தினுள் வழுக்கி விழுந்த வெயில், தங்கமீனாய் நீந்திக்கொண்டிருக்கிறது.

முற்றத்தில் வந்து நின்று கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டதால் ஓட்டைப்பிரித்து உள்ளிறங்குகிறது வெயில்.

வானத்துடன் பிணங்கிவிட்டு, பூக்களினுள் ஔிந்திருக்கும் வெயிலைத் தேடியலைகிறது வண்ணத்துப்பூச்சி.

ஆங்கோர் மலைக்குவையில், வரையாட்டைப் போல் தொற்றி ஏறிக்கொண்டிருக்கிறது வெயில்.

மலையிடை வைரமாய் மின்னிய வெயிலை நோக்கிக் கண் சிமிட்டுகிறது, வானில் முளைத்த வெள்ளி.

ஆழ்கடலில் முத்தென அமிழ்ந்து கிடக்கும் வெயிலைக் கரை சேர்க்கின்றன அலைக்கரங்கள்.

Tuesday, 19 November 2019

புட்டமது மகாத்மியம்.

புட்டமது, புட்டமுது, புட்டாமிர்தம் என குமரி மண்ணில் அழைக்கப்படும் இந்த இனிப்பை தமிழகத்தின் பிற பகுதிகளில், வெல்லப்புட்டு என்று அழைப்பர்.

ஒரு காலத்தில் குமரி மண்ணின் கோவில்களில், குறிப்பாக அம்மன் கோவில்களில் புட்டமதுதான் முக்கியமான பிரசாதமாக விளம்பப்படும். இன்றும் குமரி மண்ணில், வீடுகளில் யாருக்காவது அம்மை கண்டு குணமாகி தலைக்கு மூன்று தண்ணீர் ஊற்றியபின் முதன் முதலாகக் கோவிலுக்கு அழைத்துச்சென்று அம்மனைத் தரிசித்து புட்டமது விளம்பி விட்டு வந்தபின்தான், மறு வேலை.

சாயந்திரம் கோவிலுக்குப் போவதென்றால் காலையிலேயே புட்டமது தயார் செய்யும் வேலை ஆரம்பித்து விடும். பச்சரிசியைக் களைந்து, அரை மணி நேரம் கொவரப்போட்டு, நீரை வடித்தெடுத்தபின் ஈரம் போக நிழலில் உலர்த்தியெடுத்து, கை வலு உள்ள பெண் ஒருத்தி அரிசியை உரலிலிட்டு இடியாப்ப மாவு பக்குவத்தில் இடித்துக் கொடுத்து விடுவாள்.

அதன் பின் அந்த மாவை துணியில் பொட்டலம் போல் கட்டி, ஆவியில் வேக வைத்தெடுத்து ஆறியபின் உதிர்த்து கட்டிகளில்லாமல் ஆக்கிக்கொண்டபின் வெல்லப்பாகும் ஏலஞ்சுக்கும் தேங்காய்ப்பூவும் இட்டு விரவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு கோவிலுக்குக் கிளம்பினால், "ஏ... புட்டமது வெளம்பப்போறாங்க" எனக்கூவிக்கொண்டு நண்டு சிண்டு படை பட்டாளம் எல்லாம் திரண்டு வந்து விடும். அப்புறம் வீட்டுக்கு வெறுஞ்சட்டிதான் வந்து சேரும்.
பச்சரிசி புட்டமது
நவராத்திரி வெள்ளிக்கிழமைக்கு புட்டமது செய்தேன். மகனார் "இதை சிறுதானிய மாவில் செய்ய முடியுமா?" என வழக்கம்போல கோரிக்கை வைத்தார். சிறுதானியங்களின் மகிமை மிகுந்து வரும் இந்நாட்களில், அரிசிக்குப் பதிலாக சிறுதானியங்களை உபயோகித்து அதே உணவு வகைகளைப் பரீட்சார்த்தமாகவேனும் செய்து பார்த்து விடும் மனப்பாங்கு வந்து விட்டது. அதுவும் வீட்டில் சோதனை எலி இருந்தால் தைரியமாக விஷப்பரீட்சையில் இறங்கலாம். அந்தப்படியே முதலில் கேழ்வரகில் புட்டமது செய்து பார்த்தேன். நன்றாகவே அமைந்தது.
ஒரு கப் மாவை விரவி
 
 ஆவியில் வேக விட்டு
  நன்கு ஆற விட்டு
 வெல்லப்பாகு தயார் செய்து

 ஏலஞ்சுக்கும் தேங்காயும் சேர்த்தால்
கேழ்வரகு புட்டமது தயார்
அரிசி மாவைப்போல் கேழ்வரகு மாவு அதிகத்தண்ணீரை இழுத்துக்கொள்ளாது. ஆகவே, ஆவியில் வேக வைத்து ஆற விட்டு, பின் உதிர்த்துக்கொண்ட கேழ்வரகு மாவில் கொஞ்சங்கொஞ்சமாக வெல்லப்பாகைச் சேர்த்துக் கிளற வேண்டும். கொஞ்சம் சேர்ந்தாற்போல் வந்ததும் நிறுத்தி விட வேண்டும். நேரம் ஆக ஆக பொலபொலவென உதிர்ந்து வந்து விடும். ஆகவே தேவைப்படும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன் கூட்டியே புட்டமுதைத் தயாரித்துக் கொள்க.

தவிரவும், தமிழ்க்கடவுளாம் முருகவேள் குடியிருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் இது முக்கியமான பிரசாதமாமே. ஆகவே உண்மையான தமிழனாக இருந்தால் கேழ்வரகு புட்டமது செய்யவும்.

Saturday, 9 November 2019

மெழுகுப்பாகற்காய் துவரன்

பாகற்காயின் தூரத்துச் சொந்தமான மெழுகுப்பாகல், Kantola என இந்தியிலும் Kartoli என மராட்டியிலும், spine gourd என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது. மழைக்காலங்களில் அதிகமும் சந்தையில் காணக்கிடைக்கும் இக்காய் உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை செய்யக்கூடியது, குறிப்பாகக் கண்ணுக்கும் மூளைக்கும். கண் சம்பந்தமான பிரச்சினைகள் கொண்டவர்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் நலம்.
கடினமான முட்கள் படர்ந்திருப்பது போல் தோற்றமளித்தாலும், கைகளை உறுத்தாமல் மென்மையாகவே இருக்கின்றன. குட்டிக்குட்டியாக நெல்லிக்காய் அளவில் இருக்கும் இவற்றை நீள வாக்கில் நாலாக நறுக்கிப்பிளந்து, கல் போன்ற கடினமான விதைகளை நீக்கி, அதன் பின் பொடியாக நறுக்கி.. என அரை கிலோ காய் எக்கச்சக்கமாக வேலை வாங்கி விட்டது. கொஞ்சம் பிஞ்சாக இருந்தால் விதைகளை நீக்க வேண்டாம். அப்படியே நறுக்கி விடலாம். ஒன்றிரண்டு காய்களிலிருந்து கிடைத்த முற்றிய விதைகளை எடுத்து வைத்திருக்கிறேன். இது வளர வெப்பம் அதிகம் தேவையாம். கோடை ஆரம்பத்தில் நட்டுப்பார்த்தால் ஆயிற்று.
விதையில்லாப்பிஞ்சு

முற்றிய விதை கொண்டவை
பாகற்காய் குடும்பத்தைச் சேர்ந்ததானாலும் கொஞ்சங்கூட கசக்காது எனக்கேள்வி. 

மெழுகுப்பாகற்காயின் பயன்கள் அனேகம். அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை சில.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக்குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதை விடச்சிறந்த பலன் உண்டா என்ன? புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக்குறைக்கிறது. இளமையைத்தக்க வைக்கிறது. பார்வைக்கூர்மையை மேம்படுத்துகிறது, ஆகவே கண் பார்வை சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிகம் சாப்பிடுவது நல்லது. சிலருக்கு எப்போது பார்த்தாலும் வியர்த்துக்கொட்டி தெப்பமாய் நனைந்து விடுவார்கள். இந்த அதிகப்படியான வியர்வைப்பிரச்சினையைச் சரி செய்கிறது நார்ச்சத்தும் ஆண்ட்டி ஆக்சிடெண்ட்ஸும் நிறைந்திருப்பதால் செரிமானப்பிரச்சினைகளைச் சரி செய்கிறது. சிறுநீரகக்கற்களைக் கரைக்கிறது, மூல நோயைக் குணப்படுத்துகிறது. சுவாசப்பிரச்சினைகள் மற்றும் இருமலைக் குறைக்கிறது. 

கொடி வகையைச்சேர்ந்த இத்தாவரம் நன்கு செழித்து வளர வெப்பம் தேவை. ஆகவே, கோடை காலத்திலும், மழைக்காலத்துக்குப் பின் வரும் வெப்பக்காலத்திலும் பயிரிடப்படுகிறது. கோடை காலத்தில் பயிரிடப்பட்டு நன்கு விளைந்து மழைக்காலத்தில் சந்தைக்கு வருகிறது. சந்தையில் சிறு வியாபாரிகளும் வயதான பெண்மணிகளும் தத்தம் தோட்டத்தில் விளைந்தவற்றை தலைச்சுமையாகக் கூடைகளில் கொண்டு வந்து விற்பனைக்காகப் பரப்பியிருப்பர். முன்பெல்லாம் அதிகம் காணக்கிடைத்தாலும், கசப்பாக இருக்குமோ என்றெண்ணி இதை வாங்கியதேயில்லை. கிலோ கணக்கில் வாங்கிச் சமைத்து விட்டு, யாரும் சீந்தாமல் போய் விட்டால் என்ன செய்வது? வாரக்கணக்கில் வைத்து தனியாளாகத் தின்ன முடியுமா என்ன? ஆனால், ரிஸ்க் எடுத்துத்தான் பார்ப்போமே என்று கொஞ்சமாக அரை கிலோ வாங்கி வந்தேன். முதலில் துவரன் செய்து , வீட்டிலுள்ளவர்களுக்குப் பிடித்துப்போய் விட்டால் மற்ற அயிட்டங்களை ஒவ்வொன்றாகச் செய்யலாமென எண்ணம். துவரன் எப்படிச்செய்தாலும் ருசியாக அமைந்து விடும். அதுவே புளிக்குழம்பு, அரைத்து விட்ட குழம்பு, ரோஸ்ட் என ஏதாவது செய்து, ருசி பிடிக்கவில்லை எனில் ஜென்மத்துக்கும் மெழுகுப்பாகலை வீட்டுக்குள் சேர்க்க இயலாது.

பாகற்காய் துவரன் செய்வது போல்தான் இதையும் சமைக்க வேண்டும். கழுவி தண்ணீர் வடிய விட்டு, துடைத்தெடுத்து நாலாக வகுந்து, பின் கடினமான விதைகளை வழித்து நீக்கிய பின், பொடியாக நறுக்கிக்கொண்டாயிற்று. கொஞ்சம் இளசான காய்களில் விதை இருப்பதில்லை. அவற்றை அப்படியே பொடியான நறுக்கிப்போடலாம். சிலர் வட்ட வட்டமாக அரிந்து போடுவதுண்டு. ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொண்டால் தாளிக்கும்போது போடலாம். ஒரு கப் தேங்காய்த்துருவலுடன்  கால் ஸ்பூன் சீரகம், ஒரு பல் பூண்டு, மூன்று பச்சை மிளகாய்கள், கால் ஸ்பூன் மஞ்சட்பொடி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொண்டால் துவரன் மசாலாவும் தயார். பச்சை மிளகாய்க்குப்பதில் மிளகாய்த்தூள் சேர்த்தாலும் பாதகமில்லை.
இப்போது அடுப்பில் சீனிச்சட்டியை ஏற்றி அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய்யை விட்டுச்சூடாக்கி, கடுகை இட்டு அது வெடித்ததும், உளுத்தம்பருப்பைப்போட்டு அது சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை இட்டு வதக்கிக்கொண்டு, வெங்காயம் சிவந்ததும் காய்த்துண்டுகளைப்போடவும். அரை ஸ்பூன் உப்பிட்டு லேசாகப்பிரட்டி, ஒரு கை தண்ணீர் தெளித்து மூடியிட்டு வேக விடவும். முக்கால் வேக்காடு வரை வேகட்டும். இடையிடையே காயை நன்கு பிரட்டிக்கொடுக்கவும். இல்லையெனில் ஒன்று போல் வேகாது. சரியான பதம் வந்ததும், துவரன் மசாலாவைப்போட்டு சிட்டிகை உப்பிட்டு, கிளறி ஒரு நிமிடம் வரை, குறைந்த தணலில் மூடியிட்டு வேக விடவும். 
துவரன் தயார்
வெந்ததை அதன் மணமே அறிவித்து விடும். இப்போது மூடியைத்திறந்து துவரனை ஈரப்பசை ஏதுமின்றி பொலபொலவென ஆகும் வரை கிளறி இறக்கலாம். கொஞ்சங்கூட கசப்பேயில்லை. லேசாக பாகற்காய் வாசனையுடன் கோவைக்காய்த் துவரனின் ருசியுடன் இருந்தது மெழுகுப்பாகற்காய் துவரன். சாம்பார், பருப்புக்குழம்புகளுக்கு நன்கு பொருத்தமாக இருக்குமெனத்தோன்றுகிறது.

Sunday, 22 September 2019

கணபதி - 2019

மஹாராஷ்ட்ராவில் பிள்ளையார் சதுர்த்தி மிகவும் கோலாகலமாக நடைபெறும் ஒரு விழா. விதவிதமான வடிவங்களில், விதவிதமான கருத்துகளை வலியுறுத்தி அமைக்கப்படும் பிள்ளையார் திருவுருவங்களைக்காண கண் கோடி வேண்டும். மாலை வேளைகளில் தத்தம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் பிள்ளையார் திருவுருவங்களைக்காணவென்றே கூட்டங்கூட்டமாக மக்கள் கிளம்பிச்செல்வது வழக்கம். அதற்கெல்லாம் நேரம் கிடைக்காத மக்கள் விசர்ஜன் நடக்கும் பகுதிகளுக்குச்சென்று அங்கு வரும் பிள்ளையார்களைக் கண்டு கொள்வர். அதற்கும் நேரமில்லையா?.. விழா தொடங்கு முன் விற்பனைக்கென பிள்ளையார் சிலைகள் இருத்தப்பட்டிருக்கும் பண்டல்களுக்குச்சென்றால் ஆயிற்று. அம்மையப்பன்தான் உலகம் என இருக்குமிடத்திலேயே தாயையும் தந்தையையும் சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக்கொண்டவர் காட்டிய வழிதான் நமக்கும் :)

இந்த வருட பிள்ளையார் உலாவில் காணக்கிடைத்தவர்கள் இங்கே..

















இவ்வருடம் எங்கள் வீட்டுக்கு வந்த பிள்ளையார்.

கண்பதி பப்பா மோரியா.. மங்கள் மூர்த்தி மோர்யா.. புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா.

எங்கள் வீட்டு கணபதி ஆரத்தியும் அதைத்தொடர்ந்த விசர்ஜனும் சிறு வீடியோவாக.
முந்தைய கணபதிகளைக்காண இங்கே சொடுக்குங்கள்.

Wednesday, 18 September 2019

பச்சை ஆப்பிள்(க்ரானி ஸ்மித்) பச்சடி

சந்தையிலோ மால்களிலோ சிவப்பின் பல்வேறு வண்ணக்கலவைகளில் குவிந்து கிடக்கும் ஆப்பிள்களைப் பார்த்திருப்போம். இந்தியாவின் புகழ்பெற்ற சிம்லா ஆப்பிள் முதல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பல்வேறு வெளிநாடுகள் வரையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்காகக் காத்திருப்பவை அவை. அவற்றினூடே வித்தியாசமாய் பச்சை நிறத்தில் அடுக்கப்பட்டிருக்கும் ஆப்பிள்களையும் கண்டிருக்க வாய்ப்புண்டு. காய் போல் தோற்றமளித்தாலும் அவையும் கனிகள்தாம். இவை, மற்ற ஆப்பிள்கள் அளவுக்கு இனிக்காது. ஆனால் சாறு நிரம்பியிருக்கும். இவ்வகை ஆப்பிள்கள் க்ரானி ஸ்மித் என அழைக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த மரியா ஆன் ஸ்மித் என்பவரால் 1868ல் உருவாக்கப்பட்ட ஒட்டு வகையான இது அவரைக்கௌரவிக்கும் பொருட்டு அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது.
முழுக்க முழுக்கப்புளிப்பும் எங்கோ ஒரு மூலையில் லேசாக அசட்டு இனிப்பும் கொண்ட இந்த ஆப்பிள் சமைத்து உண்ண ஏற்றது. வெளிநாடுகளில் இதை உபயோகித்து "Pie" எனப்படும் பதார்த்தம் சமைக்கப்படுகிறது. காரட், பீட்ரூட், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை உபயோகித்து காய்கறி ஜூஸ் தயாரிக்கும்போது அரை ஆப்பிளையும் அதில் சேர்க்கலாம். ருசி நன்றாக இருக்கிறது, உடம்புக்கும் நல்லது. நன்கு முற்றிய காய்ப்பருவத்தில், மாங்காயைப்போன்றே கடும் புளிப்புச்சுவை கொண்ட இந்த ஆப்பிளை மாங்காய்க்கு மாற்றாக உபயோகிக்கலாம். மாங்காய் கிடைக்காத மழைக்காலங்களில் கூட மாங்காய் சேர்த்த அயிட்டங்களை ருசித்த திருப்தி கிடைக்கும். 'மாங்காய் வைக்கும் இடத்தில் ஆப்பிளை வைத்தாற்போல' என்று அடுக்களைச்சித்தரே ஒரு முறை நெகிழ்ந்து அருளுரை அளித்தமை இங்கே நினைவு கொள்ள வேண்டிய ஒன்று. அவியலில் சேர்த்தால் சற்று அதிகமாகவே குழைந்து விடுகிறது. ஆனால் கூட்டாஞ்சோற்றில் சேர்த்தால் ருசி அள்ளும். அந்தப்படியே க்ரானி ஸ்மித்தை உபயோகித்து கேரளத்தின் புகழ்பெற்ற உப்பிலிடு எனும் பச்சடி அயிட்டத்தைச் செய்தேன். நன்றாகவே வந்தது.
ஒரு பச்சை ஆப்பிளை நன்கு கழுவித்துடைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுதெல்லாம் பளபளப்பாக இருப்பதற்காக ஆப்பிளின் மேல் ரசாயனங்கள் பூசப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி நம் வயிற்றில் புளியைக் கரைக்கின்றன. ஆகவே கவனம் தேவை. துடைத்து எடுத்துக்கொண்ட ஆப்பிளை தோலுடன் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் கால் ஸ்பூன் மஞ்சட்பொடி, முக்கால் ஸ்பூன் மிளகாய்த்தூள், முக்கால் ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் ஆம்ச்சூர் பவுடர் அதாவது உலர்ந்த மாங்காய்த்தூள் சேர்த்து நன்கு பிசிறிக்கொள்ளவும். ஆம்ச்சூர் பவுடர் சேர்ப்பதால் முழுக்க முழுக்க மாங்காயின் ருசி வந்து விடும். ஆம்ச்சூர் பவுடர் இப்பொழுதெல்லாம் கடைகளில் சுலபமாகக் கிடைக்கிறது.

இரண்டு கரண்டி சமையல் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யைச் சூடாக்கி, அதில் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு போன்றவற்றைத் துளி போலச் சேர்க்க வேண்டும். கடுகு வெடித்ததும் ஒரு இணுக்கு கறிவேப்பிலையை உருவிப்போட்டு அதுவும் பொரிந்ததும், பச்சடியின் தலையில் கொட்டவும். பின்பு நன்கு கலந்து இரண்டு மணி நேரமாவது ஊற விட்டு பின் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இது மாங்காய்ப்பச்சடி இல்லை என்று நாம் சொன்னாலொழிய யாராலும் கண்டு பிடிக்க இயலாது. வெளியில் வைத்திருந்தால் மறுநாளே தீர்த்து விட வேண்டும். ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் ஒரு வாரம் வரை வைக்கலாம். அதற்கு மேல் தாங்காது, கெட்டுப்போய் விடும். மாங்காய் உப்பிலிடின் ஆயுட்காலமும் இதேபோல் குறைவானதுதான் எனினும் ஆப்பிளின் ஆயுள் அதை விடக்குறைவாக இருக்கிறது.

மாங்காய் உப்பிலிடு, கேரளாவிலும் அதையொட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் விருந்துகளின்போது தவறாமல் இலையில் பரிமாறப்படும் ஒரு அயிட்டமாகும். தயிர்சாதம், கூட்டாஞ்சோறு, எலுமிச்சஞ்சாதம் போன்றவற்றுக்கு வெகு அமர்க்களமாகப் பொருந்திப்போகும் ஒரு தொடுகறி. வேனிற்காலத்தில் மட்டுமே மாங்காய் கிடைப்பதால் உப்பிலிடு ருசி கண்ட நாக்கு மற்ற காலங்களில் அதை நினைத்து ஏங்கி, அடுத்த வேனிற்காலம் எப்போ வருமோ? என்றெண்ணிக் காத்திருக்கும். இனிமேல் அப்படிக் காத்திருக்கத்தேவையில்லை. அதுதான் வருடம் முழுவதும் பச்சை ஆப்பிள் கிடைக்கிறதே. உப்பிலிடு செய்தால் ஆயிற்று. 

LinkWithin

Related Posts with Thumbnails