Thursday, 19 July 2018

தீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.


எட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உண்டு.. எட்டாவது கண்டம் எது? எனக்குழம்பாதீர்கள். கழுத்துக்கும் கண்டம் எனப்பெயருண்டே :-). செய்து சாப்பிட்ட பின் ருசி நாக்கோடு நின்று விடாமல் கழுத்து வரைக்கும் பரவும் என உறுதியிட்டுக்கூறுகிறேன் :-)

தீயலின் செய்முறையை அறிய சுட்டியைச் சொடுக்குங்கள்.
"ஆடிச்சிறப்பிதழாக மலர்ந்திருக்கும் குமுதம் சிநேகிதியின் ஆகஸ்ட் மாத இதழில் நான் எழுதிய "நாஞ்சில் நாட்டு தீயல்" வெளியாகியிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வெளியிட்ட சிநேகிதிக்கும், திருவட்டாறு சிந்துகுமார் அண்ணனுக்கும் மிக்க நன்றி.

தீயல் எட்டுத்திக்கும் மணக்கட்டும்... ட்டும்.. டும்.. ம்..

Wednesday, 4 July 2018

பிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.

இந்த வருடம் பூத்த முழு மலர்
இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும் அதுவும் முன்னிரவில் மலர ஆரம்பித்து இரவில் நன்கு மலர்ந்து விடியுமுன் வாடிவிடும் ஓர் அரியவகை மலர்தான் பிரம்மகமல். மனதை மயக்கும் நறுமணம் கொண்ட இம்மலர் நிஷாகந்தி எனவும் அழைக்கப்படுகிறது. Epiphyllum oxypetalum என்ற தாவரவியல் பெயராலும், Dutchman's pipe cactus, queen of the night போன்ற பிற பெயர்களாலும் இது வழங்கப்படுகிறது. தெற்கு மெக்ஸிகோ மற்றும் தென்னமெரிக்காவைத் தாயகமாகக்கொண்ட இத்தாவரம் இப்பொழுது உலகெங்கும் விரும்பி வளர்க்கப்படுகிறது. 
சிறு மொட்டு
கேக்டஸ் அதாவது கள்ளி வகையைச் சேர்ந்த இச்செடியை வளர்க்க அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. வாரமிரு முறை நீர் ஊற்றினால் போதுமானது. தாய்த்தாவரத்திலிருந்து ஒரு முதிர்ந்த இலையைத் துண்டித்து மண்ணில் நட்டு விட்டால் போதுமானது. ஒரு இலையையே அதன் நீளத்தைப்பொறுத்து இன்னும் இரண்டு மூன்று துண்டுகளாக ஒடித்து அவற்றை நட்டு வைத்தால் அவையும் தனிச்செடிகளாக வளர்ந்து விடும். நட்டு வைத்த இலையிலிருந்தே பக்க இலைகள் தோன்றி வளர ஆரம்பிக்கும். நன்கு வேர் பிடித்து வளர ஆரம்பித்த பின் செடியை ஒட்டினாற்போல் குச்சி போன்று ஒல்லியான நீளமான முதன்மைத்தண்டுகள் தோன்றி வளர ஆரம்பிக்கும். முதன்மைத்தண்டின் நுனி, தட்டையான இலையைக் கொண்டிருக்கும். 
சற்றே வளர்ந்த மொட்டு
பிரம்மகமல் செடி இரண்டு மீட்டர் உயரத்திற்குக் குறையாத முதன்மைத்தண்டையும், 30 செ.மீ அளவு வரை நீளமாக வளரக்கூடிய பக்க இலைகளையும் கொண்டது. இதன் இலைகள் அலைபோல் நெளிநெளியான புறக்கோட்டைக் கொண்டவை. இக்கோடுகளிலிருந்துதான் மொட்டுகள் தோன்றும். புறக்கோடுகளிலிருந்து தொப்புள்கொடி போல் நீண்டு வளர்ந்த பூக்காம்பின் நுனியில் பூத்திருக்கும் தாமரை வடிவிலான மலர், விஷ்ணுவின் உந்தியிலிருந்து தோன்றிய பிரம்மா தாமரைமலரில் அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தையொத்திருப்பதால் இப்பூ பிரம்மகமல் எனப்பெயர் பெற்றது. 30 செ.மீ நீளமுள்ள பூக்காம்பின் நுனியில் பூத்திருக்கும் பிரம்மகமல் பூக்கள் 17 செ.மீ அகலம் கொண்டவை. மழைக்காலமான ஜூன் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில்தான் இது பூக்கும்.
பூக்கும் நாள் நெருங்குகிறது
மஹாராஷ்ட்ராவைப் பொறுத்தவரை இது ஓர் அபூர்வ மலர் மட்டுமல்ல, தெய்வீக மலரும் கூட. தன் வீட்டில் வளர்க்க விரும்பி யாரேனும் இலையைக் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். அப்படிக்கொடுத்தால் அதிர்ஷ்டம் தன்னை விட்டுப் போய் விடுமென்று ஓர் நம்பிக்கை இங்கே நிலவுகிறது. ஆகவே பிறர் அறியா வண்ணம் யாருடைய தோட்டத்திலிருந்தாவது கொண்டு வந்துதான் வளர்க்க வேண்டும் என்பார்கள். ஒரு வீட்டில் பிரம்மகமல் பூப்பதென்பது அதிர்ஷ்டத்தைக்கொண்டு வரும் ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. இது பூக்கும்போது அருகிலிருப்பது அதிர்ஷ்டம் என்றும் அவ்வாறு அருகிலிருக்கும்போது வைக்கப்படும் பிரார்த்தனைகள் நிறைவேறுவதாகவும் கருதப்படுகிறது. தெய்வீக மலராகக் கருதப்படுவதால் இதைப் பறிக்க மாட்டார்கள். ஆண்டின் முதல் பூவுக்கும், செடியில் முதன்முதலாகப் பூக்கும் பூவுக்கும் தூபதீபம் காட்டி வழிபடுவார்கள். 
முழுமையடைந்த மொட்டு
மகளின் தோழி மனமுவந்து கொடுத்ததன் மூலம் இச்செடி எங்கள் வீட்டில் நுழைந்தது. நட்டு வைத்து நான்கு வருடங்களுக்குப் பின் மொட்டு விட்டபோது எங்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மினியேச்சர் வாழைமொட்டு போல் தோன்றி தாமரை மொட்டு அளவில் வளரும் வரை தினமும் அதன் வளர்ச்சியைக் கண்டு ரசித்தோம். பூமியை நோக்கி வளர்ந்த மொட்டு ஒரு சமயம் யூ டர்ன் போட்டு வானத்தை நோக்கி வளைந்து வளர ஆரம்பித்தது. மொட்டு அப்படி வளைந்து வளர ஆரம்பித்தால் பூக்கும் நாள் நெருங்கி விட்டதென அர்த்தமாம்.  ஒரு நாள் மாலை, உள்ளிருந்து வெள்ளை நிற இதழ்கள் மெல்லத் தலை காட்டின. அங்கிங்கு நகராமல் அருகிலேயே அமர்ந்து பூவொன்று மலர்வதைப் படிப்படியாகக் கண்டு ரசித்தோம். சாயந்திரம் ஆறு மணிக்கு மேல் மெல்ல இதழ் விரிக்க ஆரம்பித்து ஒன்பது மணியளவில் சிறிய வெண்டாமரையொன்று முழுவதுமாய் மலர்ந்திருந்தது. வீடு முழுவதையும் சூழ்ந்திருந்தது அதன் நறுமணம். தொட்டாலே வாடிவிடும் மென்மையான இதழ்கள் கொண்டவையாய்த் திகழ்ந்தது அம்மலர். கைச்சூடு கூட தாங்காது எனக் கேள்விப்பட்டிருந்ததால் தொட்டு ரசிக்கத் துணியவில்லை. முதற்பூவை பூஜித்தோம். அதன் பின் அந்த சீசனிலேயே குறைந்தது நான்கு பூக்களாவது பூத்தன. அதன் பின் ஆண்டு தோறும் பூக்க ஆரம்பித்தது. 
மலரத்தயாராக
சில காரணங்களுக்காக வீட்டை இடமாற்றம் செய்ய நேர்ந்தபோது, ஷிப்டிங் வசதிக்காக செடியில் கொஞ்சம் இலைகளை வெட்டி ட்ரிம் செய்தேன். அவ்வளவுதான்.. பூப்பது நின்று போனது. அப்படிச்செய்யக்கூடாதாம், இலைகள் தானாகவே காய்ந்து உதிர வேண்டுமாம். அடக்கடவுளே!! இது தெரியாமல் போய் விட்டதே என நொந்து கொண்டு மறுபடி எப்போ பூக்குமோ என எல்லாக் கோட்டையும் அழித்து விட்டு முதலிலிருந்து காத்திருக்க ஆரம்பித்தேன். இதோ.. நான்கு வருடங்களுக்குப் பின் இந்த சீசனின் முதற்பூ பூத்திருக்கிறது.
இது சிலவருடங்களுக்கு முன் பூத்தது.
இரவு முழுவதும் மலர்ந்திருக்கும் இப்பூக்கள் பிரம்ம முஹூர்த்த காலத்துக்குப்பின், அதாவது விடியலில் கூம்பி மறுபடியும் மொட்டு போல் தோற்றம் கொள்கின்றன. அதேபோல் தண்டும் படிப்படியாகத் தளர்ந்து துவண்டு விடும். அ ந் நிலையில் நான்கைந்து நாட்கள் செடியிலேயே இருந்தபின் தண்டுப்பகுதி மெல்ல மெல்ல பழுத்து வெளிர் மஞ்சள் நிறம் கொள்ள ஆரம்பிக்கும். இது உதிரப்போகும் அறிகுறியாகும். தண்டு முழுவது மஞ்சள் நிறமானதும் ஓரிரு நாட்களில் காய்ந்து வற்றிச் சுருங்கி செடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பந்தத்தை முடித்துக்கொள்ளும். 
மலர்ந்து மணம் பரப்பிய மறுநாளில்
சில வருடங்களுக்கு முன் தம்பி வீட்டில் பூத்தவை
செடி நடப்பட்டு நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் பூக்க ஆரம்பிக்கும். ஆகவே பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். ஆனால், என் வீட்டிலிருந்து பெங்களூருக்கு இலைத்துண்டைக் கொண்டு சென்று நட்டு வைத்து வளர்த்த தம்பி வீட்டில் ஒரு வருடத்திலேயே பூக்க ஆரம்பித்து விட்டது. அங்குள்ள சீதோஷ்ணமும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுவும் ஒரே தடவையிலேயே பத்துக்கும் மேற்பட்ட பூக்கள் பூத்திருந்தன. உண்மையிலேயே அரிய மலர்தான்.

Thursday, 28 June 2018

சாரல் துளிகள்

மதங்கொண்டு புத்தியழிந்த யானையின் பாதையில் குறுஞ்செடி எங்ஙனம் பிழைக்கும்?.

வான்வெளியின் எங்கோ ஒரு மூலையில் கவனிக்கப்படாமலேயே அவிந்து வீழ்ந்த எரிநட்சத்திரங்கள் ஒன்றிணைந்து பெருநட்சத்திரமான போழ்து ஆங்கொரு பிரபஞ்சம் பிறந்தது.

நினைவுகளால் கனத்துத் ததும்பித் திணறும் இவ்விரவு அந்நினைவுகளையே ஊன்றிக்கொண்டு மெல்ல நகர்கிறது.

மழை தெளித்த முற்றத்தின் மீது சிறகுதிர்த்துக் கோலமிட்ட ஈசல்களுக்கு, அதை ரசிக்கத்தான் பொழுதில்லை.

காலம் ஒரு நெருப்பாறு. இறங்கிக் கரையேறுகிறவர்களைப் புடம் போட்டும், பொய் வேஷத்தைக் கலைத்து அடையாளம் காட்டியும், மூடிய மாசெரித்து மின்னவும் வைத்து விட்டு தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சிறுகுழந்தையின் கையிலகப்பட்ட லட்டைப்போல் நொறுங்கிக் கரைந்து கொண்டிருக்கும் அம்மலையின் விலாவில் கிச்சுக்கிச்சு மூட்ட முயல்கிறது ஒரு இயந்திரம்.

கேட்கக் காதுகள் இல்லாவிடத்தில் துயரம் தன்னைக் கண்ணீரால் வரைந்து கொள்கிறது. கண்ணுடையவன் பார்க்கக் கடவன்.

உளுத்துப்போன பேழையில் காக்கப்படும் பொக்கிஷத்தையொத்ததே, தகுதியில்லார் மேல் வைக்கப்படும் நம்பிக்கை. இரண்டுக்குமே உத்தரவாதமில்லை.

உண்மைத்தன்மை சோதித்தறியும் நோக்கில் தோலுரிக்கப்பட்டு குற்றுயிராய்க் கிடக்கும் நிலையிலும் மனங்கசிந்து நேசிக்கும் ப்ரியத்தின்முன் குற்றவுணர்வு கொள்கிறது நப்பாசை. கை வீசி அப்பால் விலகிச்செல்கிறது நம்பிக்கையின்மை.

நிதர்சனத்தை எதிர்கொள்ள அஞ்சுபவர்களே முப்பொழுதும் கற்பனையுலகில் சஞ்சாரித்துக் கிடப்பர். அல்லாதோர் எதிர்கொண்டு வென்று கடப்பர்.

Thursday, 14 June 2018

சாரல் துளிகள்


எதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது.

ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்து நிற்கிறது. சற்று முயன்று தள்ளி இதையும் கடத்தி விடலாமென முயலும்போது இன்னொன்று தொலைவில் நின்று கையசைக்கிறது. ஒவ்வொன்றையும் புறந்தள்ளியபடி கடக்கிறோம் நாம்.

பாட்டிகள் சீரியல்களில் கரைந்து கொண்டிருக்க, பேரன்பேத்திகள் மொபைல் விளையாட்டுகளிலும் சிறப்பு வகுப்புகளிலும் மூழ்கி முத்தெடுக்க, கோலாகலமாய்க் கரைகிறது கோடை விடுமுறை.

எங்கோ ஒரு கிளையில் மரமறியாமல் மலர்ந்திருந்த பூ, எதுவும் மிச்சமின்றி தன்னை விடுவித்துக்கொண்டு அக்கைகளில் சரணடைந்த அவ்வினிய பொழுதில் முதல் மழைத்துளி திலகமிட்டது.

இன்னும் வெளுக்க ஆரம்பிக்காத அடிவான இருளில் புதைந்து கிடக்கும் ஒற்றை நட்சத்திரத்தின் தனிமையை விரட்ட மேலும்மேலும் முயன்று கொண்டிருக்கிறது சிறு அலை.

ஒரு யோகியைப் போல் மலை மேல் தனிமைத்தவத்திலாழ்ந்திருக்கும் அந்த அலைபேசிக் கோபுரத்திற்கு இடைஞ்சலுண்டாக்குவதெப்படியென்று பேசிக்கொண்டிருக்கிறார்கள் அத்தனை பேரும்.

விரும்பாத ஒன்றை. விலக்கிச் செல்வதை விட, விரும்பிய ஒன்றை விரும்பாததுபோல் கடந்து செல்லத்தான் அதிக மனத்திண்மை தேவை.

பச்சையமிழந்த செடியினின்று உதிர்ந்து அழுக்குப் பிடித்த சாலையில் உருண்டு புரண்டு கதறிக்கொண்டிருக்கும் போகன்வில்லாப் பூவைத் தேற்றுகிறது அமிலப்புகையில் குளித்த செம்பருத்திப்பூ.

காலொடிந்த இதய சிம்மாசனத்தில் அமர, இளைய ராணிகளையும் குறு ராணிகளையும் கெஞ்சியழைத்துக் கொண்டிருக்கிறார் பல் கொட்டிப்போன ராஜா.

அதிக அடக்குமுறைகளுடன் பொத்திப்பொத்தி வளர்க்கப்படும் மனிதர்களும் போன்சாய் தாவரங்களும் ஒன்றுதான். இரண்டுமே தம் இயல்பான குணத்தை இழக்கின்றன.

Monday, 14 May 2018

சாரல் துளிகள்

பறந்து சென்ற பசுங்கிளி பாதிக்கனவில் மிழற்றும்போழ், சித்தங்கலங்காதிரென்று செப்புமோ சின்னக்கிளி..

சுற்றி வளைத்து, மென்று விழுங்கி சொற்கள் உதிர்க்கப்படுமுன் கண்கள் நேரடியாகச் சொல்லி விடுகின்றன.

ஒரு நூறு யுகங்களாய் தொடுவான மண்ணுள்ளுறங்கிக் காத்திருக்கிறது அவ்விதை. அதற்கென்று விதித்த காற்றும் நீரும் வரம் கொடுக்கும் வரை அதன் தவம் தொடரும்.

எப்போது பிறக்கும்.. எப்போது இறக்கும் என்ற இரு காத்திருப்புகளின் நடுவான இடைவெளியில் எத்தனையோ காத்திருப்புகளில் வாழ்வு கடக்கிறது.

குடிப்பவன் ஈரல் வெந்து சாகிறான், அவன் குடும்பம் மனம் நொந்து சாகிறது.

எட்டாத பொருளாயின் கிட்டவில்லையெனில் சட்டென மறக்கலாம். கையிலிருந்து தட்டிப்பறிக்கப்பட்டது அதன் தழும்பையல்லவா விட்டுச் சென்றிருக்கிறது.. காலத்துக்கும் மறக்க முடியாதபடி.

ஓரலை தணிகிறதும் ஒன்று கொப்புளித்து எழுவதுமாக வாழ்வுலையில் வெந்தவியும் ஆன்மாவின் அடியாழத்தில் மின்னுகிறது சிறுதுண்டு வானவில்.

மெல்லச்சுழன்று கொண்டிருக்கும் அம்மாயச்சுழல் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் இழுத்துப்போட்டிருந்த அச்சிற்றெறும்பினருகில் மிதக்கும் செவ்வண்ண வாதுமையிலையில் ஏற்கனவே அடைக்கலம் புகுந்திருந்த கட்டெறும்பு முதலாம் எறும்பை வன்மத்துடன் நோக்குகையில் மேலும் வேகத்துடன் நகர ஆரம்பிக்கிறது அச்சுழல்..

முன்னாளில் பசுஞ்சிற்றாடை அணிந்த குமரியாய், இந்நாளில் குல்மொஹரும் சரக்கொன்றையும் சூடிய மங்கல மகளாய்த் திகழும் அம்மலை, சின்னாளில் வயோதிகம் கொண்டு வெறுமை கொள்ளும்போது அதைக் கை விடுவதாயில்லை கனி சுவைத்த பட்சிகள். அம்மலையைத் தூக்கிக்கொண்டு இதோ பறந்து கொண்டிருக்கின்றன அமிர்தசாகரம் நோக்கி.

மண்ணிலிருந்து முகிழ்த்தெழும் தாவரத்தின் செழிப்பு புகழப்படும் அளவுக்கு அதன் வேரின் உழைப்பு கண்டு கொள்ளப்படுவதில்லை.

Tuesday, 8 May 2018

சாரல் துளிகள்

வெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல்.

தேங்கி நிற்கும் சேற்று நீரில் தன் முகத்தை வியந்து கொண்டிருக்கிறது குருவி, தின்ன வந்த மண்புழுவை மறந்து விட்டு.

மனித மனத்தை விட ஆகச்சிறந்த கால இயந்திரம் ஒரு போதும் கண்டுபிடிக்கப் படப் போவதில்லை. ஊசலைப்போல் இறந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்குமாகப் பயணித்துக் கொண்டிருந்தாலும், இறந்தகாலத்திற்குச் சென்றுவிட்டு அங்கிருந்து கிளம்பும்போது மட்டும் சற்று அதிகமாகவே சுணங்கிக் கொள்கிறது. நிகழ்காலக் கடமைகளென்று எதுவுமில்லாவிட்டால் அதை அங்கேயே விட்டுவிடலாம்தான்.

மாந்தோப்பை அழித்து எழுப்பிக்கொண்டிருக்கும் மேம்பாலத்தின் கம்பியிலமர்ந்து, மேம்பால இடுக்குகளில் காகம் கூடு கட்டுவதெக்காலமென ஏக்கத்துடன் யோசிக்கிறது குயில்.

இதயத்தை ரணமாக்கி ரத்தம் கசியச்செய்யும் மென் சோகத்துடன் கூவும் இக்குயிலின் குரலில் துளிர்க்கின்றன அன்றொரு நாள் ஆடித்திரிந்த வசந்தத்தின் அனைத்து மலர்களும்.

சரளைக்கற்கள் நிரம்பிய சாலையில் வெறுங்காலால் நடந்து பழக்கப்பட்டவன், நல்ல சாலையில் நடக்கும்போது சற்றே கூசுகிறான். துரோகங்களையே சந்தித்துப் பழகிப்போனவன் அவன் சந்திக்கும் முதல் ஆதுரத்தை சற்று ஐயத்துடனேயே நோக்குவதைப்போல்,  அவனுக்கு அது சற்று ஒவ்வாமையாய்க்கூட இருக்கிறது.

தூளியிலசையும் சிறு குழவி போல், மெல்ல காற்றிலசைகிறது சிறு மலர். இந்நாளை இனிமையாக்க இது போதும்.

கூட்ட நெரிசலில் தவறிய குழந்தையாய் அதோ சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது, எனக்கான பிரியம் பொதிந்த கையசைப்பு.

வண்ணத்துப்பூச்சியின் சிறகணைந்து, கனவொன்றைத் தேடி பிரபஞ்சத்தில் நீந்திக் கொண்டிருக்கிறது எனதொரு நேசம். இப்புவியில் முகிழ்த்திருக்கும் அக்கனவு வாசம் பரப்பும்போது அதில் படியக்கூடும் என் நேசத்தின் நிறம்.

எருக்கந்தோட்டத்தில் பூத்த மல்லிகை சற்று மிதமாகத்தான் மணக்கிறது. அதனாலென்னவென்று கலந்து கட்டி மாலையாய் அணிந்திருக்கிறார் அரசமரத்தடிப் பிள்ளையார்.

Wednesday, 11 April 2018

சாரல் துளிகள்

கையிலிருக்கும் தின்பண்டத்திலிருந்து ஆகச்சிறு பகுதியை பாசத்துடன் கிள்ளித்தரும் குழந்தையின் முன் கையேந்தி நிற்கும் போது ஒரு துளி இறைதரிசனம் கிட்டி விடுகிறது.

கொசு மருந்தையோ மின்மட்டையையோ எடுத்து வரும்வரைக்கும், பறந்து தப்பிக்காமல்.. அந்தக்கொசு அங்கேயேதான் இருக்கும் என நினைப்பது முதிர்ந்த தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.

பாழாய்ப் பொழிந்து  கொண்டிருக்கிறது பால் வெய்யில். நனையும் கதிரவனின் தலை துவட்டத்தான் ஒரு மேகத்துண்டையும் காணோம்.

பதாகைகளில் புன்னகைக்கும் வாழும் மகாத்மாக்களின் கூப்பிய கரங்களுக்குள் ஔிந்திருக்கிறது கோட்சேயின் துப்பாக்கி.

அங்கேயே வசிக்கும் மீன்கொத்திகளுக்கல்ல.. எப்போதாவது வந்து வாரிக்கொண்டு போகும் மனிதனைத்தான் அஞ்சுகின்றன அம்மீன்கள்.

வெயிலருந்தும் தும்பிகள் பறக்கும் இவ்விளங்காலையின் முதுகில், வேனல் ஒரு ரயிலைப்போல ஊர்ந்து செல்கிறது.

எருதின் நோயைப் புரிந்து கொள்ள மனதில்லாத காக்கைகள் பறக்கும் அந்நிலத்தில்தான், பூத்தாக வேண்டும் என் சிறு நந்தவனம்.

சிப்பந்திகளுக்கு உணவு இடைவேளை. சில மணித்துளிகளுக்கேனும் ஆயுள் நீடிக்கிறது கறிக்கடைக் கோழிகளுக்கு.

கோடை மலர்ந்திருக்கும் குல்மொஹர் மரங்களின் நிழலில் துயிலும் இலையுதிர் காலத்தின் துகள்களைக் கொத்திக் கொண்டிருக்கிறது ஒரு புல்புல்.

ஆசை தீர ஆடி முடித்தபின், அறைக்குள் போய் அடைந்து கொண்டது அழகு மயில். அறை என்றா சொன்னேன்? அது கண்களுக்குப் புலப்படாத தளைகள் கொண்ட சிறையாகக் கூட இருக்கலாம். 

LinkWithin

Related Posts with Thumbnails