“அவன் அப்புடித்தான், தேளு கொட்டுன மாதிரி என்னமும் சொல்லிருவான்.. கொஞ்ச நேரத்துல மறந்துட்டு எப்பமும் போல சாதாரணமா பேசுவான், நாம்தான் கெடந்து தவிக்கணும்” அரைத்து வைத்த மசாலாவைக் குழம்பில் கலக்கியபடியே ராஜீவின் அம்மா சாதாரணமாகச் சொன்னாள். கேட்டுக்கொண்டு மௌனமாக நின்றிருந்தாள் கௌசி.
அவளுக்குத் தேள் கொட்டிய நேரடி அனுபவம் கிடையாதே தவிர, பக்கத்து வீட்டு மகேஸ்வரிக்கு நெறி கட்டிக்கொண்டு எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டாள் என்பதை அருகிலிருந்து கவனித்திருக்கிறாள். கொடுக்கைத் தூக்கிக்கொண்டு தன்பாட்டில் போய்க்கொண்டிருக்கும் தேள், தன் பாதையில் ஏதோவொன்று வந்ததும், இடைஞ்சலாக எரிச்சலாக உணர்ந்தோ, தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவென பயந்தோ, சுளீரெனக் கொட்டி விஷத்தையெல்லாம் கொடுக்கு வழியே வழிய விட்டுவிட்டு அதன் பாட்டுக்குப் போகும். அதற்கு ஆயுள் மீதமிருந்தால் யார் கண்ணிலும் படாமல் ஒளிந்து கொள்ள வாய்க்கும். இல்லையெனில் விறகுக்கட்டையோ செருப்போ.. ஏதாவதொன்றால் ஒன்று போட்டு அதைச் சொர்க்கத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.
ராஜீவும் அப்படித்தான்,.. நன்றாகத்தான் பேசிக்கொண்டிருப்பான், திடீரென குத்தலாக ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டு, சொன்ன வார்த்தை எதிராளியைக் காயப்படுத்துமே என்ற உணர்வின்றி சாதாரணமாக இருப்பான். கேட்டவருக்குள் அந்த வார்த்தை விஷம் போல் சுறுசுறுவெனப் பரவும். நேரமாக ஆக அதன் வீரியம் மனதுக்குள் கூடிக்கொண்டே போக, முகம் சுண்டிப்போய் இருப்பவர்களின் உணர்வை சுண்டுவிரல் நகத்தின் அளவு கூட மதிக்காமல், அவன் பாட்டுக்கு, “ இப்ப என்ன நடந்துருச்சு?” என்ற பாவனையில் இருப்பான்.
திருமணமான புதிதிலேயே அவள் மாமியார் சொல்லிவிட்டாள். “எங்கிட்ட இருக்கப்பட்ட கொரங்குப்புத்தியெல்லாம் எம்புள்ளை கிட்டயும் உண்டு, பாத்துப்பொழைச்சுக்கோ” என. ‘சும்மா ஒரு இதுக்காகச் சொல்றாங்க’ என அவளும் அதைப்பெரிதாக நினைக்கவில்லை. முதலிரண்டு மாதங்கள் புதுக்கல்யாண ஜோரில் நகர, அதைப்பற்றியெல்லாம் சிந்திக்க அவளுக்கு நேரம் வாய்க்கவுமில்லை. நாட்கள் வாரங்களாகி மாதங்களாக நகரத்தொடங்கிய போதுதான் முட்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தான். முதல் முத்தம், முதல் காதலைப்போல முதல் முள்ளையும் மறக்க முடியாதுதான் போலும். அவளாலும் மறக்க முடியவில்லை.
“மழை வராப்ல இருக்கு,.. காய்ஞ்ச துணியெல்லாம் எடுத்துரு கௌசி..” மாமியாரின் சொல் கேட்டு ஓடுவதற்குள் மழை வலுத்து விட துணியெல்லாம் நனைந்து ஓரிரண்டு துணிகள் காற்றில் பறந்து விழுந்து விட்டிருந்தன. அப்படி விழுந்திருந்தவற்றில் அவனது வெள்ளைச் சட்டையும் ஒன்று. விழுந்த இடம் செம்மண்ணும் மாட்டுச்சாணமும் மணலுமாக விரவி அமைக்கப்பட்டிருந்த கீரைப்பாத்தியில். ஓடிச்சென்று துணிகளை அள்ளி வந்தவள் செம்மண் அப்பி சாணிக்கறை படிந்திருந்த சட்டையின் நிலை கண்டு, சட்டென பக்கெட்டில் விழுந்து கொண்டிருந்த மழைத்தண்ணீரில் அலசிக் கொண்டிருந்தபோது வந்தான்.
“என்னா?.. எஞ்சட்டையை நாசமாக்கியாச்சா?.. காஞ்ச ஒடனே எடுக்காம மழை வலுக்கற வரைக்கும் என்ன செஞ்சுட்டிருந்தே? ஒனக்கெல்லாம் தெண்டச்சோறுதான் போட்டுக்கிட்டிருக்கு..”
“என்னது?.. என்ன சொன்னீங்க? திருப்பிச்சொல்லுங்க”
“ஆங்.. சொன்னாங்க.. சோத்துக்கு உப்பில்லைன்னு”
போய் விட்டான்.
அவளுக்குப் பொங்கிப்பொங்கி வந்தது. “என்ன வார்த்தை சொல்லி விட்டான்!! தண்டச்சோறா? நானா? பெண்டாட்டியைக் காப்பாத்த வேண்டியது ஒரு புருஷனின் கடமையில்லையா? அப்படியும் நானென்ன சும்மா உட்கார்ந்தா சாப்பிடுகிறேன்? காலைல எழுந்ததிலிருந்து இரவு படுக்கப்போகும் வரைக்கும் இந்த வீட்டுக்காக உழைச்சுக்கொட்டியதெல்லாம் கணக்கிலயே வராதா? ஆபீஸ் போய் உழைச்சு சம்பளம் வாங்கினாத்தான் மதிப்பா?” முகத்தில் அறைந்த மழைத்துளிகள் அவளின் கண்ணீரையும் சேர்த்துக் கரைத்துக்கொண்டு இறங்கின. மெல்ல மெல்ல கோபம் நுரைத்துக்கொண்டு எழும்பியது. துணிகளை அள்ளிக்கொண்டு கிணற்றடிக்குப்போனவள் நனைந்து கொண்டே துவைக்க ஆரம்பித்தாள். கணவனின் மேல் வந்த கோபம், ஒரு வேலைக்குப்போய் செட்டிலாகும் வரை காத்திருக்காமல் சீக்கிரமே திருமணம் செய்து வைத்து விட்ட பெற்றோரின் மீது திரும்பியது. அவர்கள் மேலுள்ள கோபம், தன் மீது எழுந்த சுயஇரக்கத்தால் வந்த கையாலாகாத கோபம் என எல்லாவற்றையும் துணிகளின் மேல் காட்டி அறைந்து துவைத்தாள்.
அழுந்தத் துடைத்துக்கொண்டு நுழைந்தாலும் முக வாட்டம் காட்டிக்கொடுத்து விட்டது.
“அழுதியா என்ன?” மாமியார் கேட்டாள்.
“இல்ல”
“அவன் என்னமும் சொன்னானா?”
‘ஒங்க காதுலயும் விழற மாதிரிதானே பேசுனாரு. அப்புறமென்னா கேள்வி?’ பதில் சொல்ல மனது துடித்தாலும் “ப்ச்.. ஒண்ணுமில்ல” என்றாள்.
“அது கொடுக்குக்குப் பதிலா நாக்கை வச்சிருக்கப்பட்ட தேளு” என்றாள் மாமியார்.
இவளுக்கு மறுபடி கண் கலங்கிற்று.. அதெப்படி என்னைப்பார்த்து அப்படியொரு வார்த்தை சொன்னான்!!!
“சரி,.. விடு, அதையே நினைச்சுட்டிருக்காதே. மனுஷன் வாயில் இருந்து வர்ற ஒவ்வொரு சொல்லுக்கும் கோவப்படணும்ன்னு ஆரம்பிச்சா, ஆயுசு அதுலயே கரைஞ்சுரும். போ.. போயி முகத்தைக் கழுவி பொட்டு வெச்சுக்கிட்டு வெளக்கேத்து”
இரவு சாப்பிடும்போதாவது தான் சொன்ன வார்த்தைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்பானென எதிர்பார்த்தாள். ஆனால், எதுவுமே நடக்காதது போல் அவன் பாட்டுக்குச் சாப்பிட்டுக் கை கழுவ எழுந்து போனான். அவள் தன் தட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘இப்படியொரு வார்த்தையைக் கேட்ட பிறகும் மானங்கெட்டுப்போயி இந்தச்சோத்தைச் சாப்பிடணுமா? சீ… அதுக்கு பட்டினி கிடக்கலாம்’
தட்டிலிருந்தவற்றை வழித்து நாய்க்குப்போட்டு விட்டு, இரண்டு செம்பு தண்ணீரைக் குடித்தாள். இனி வரவிருக்கும் தினங்களை நினைத்துக் கலவரமாக இருந்தது. ‘இப்போதே இப்படியிருக்கிறானே.. இன்னும் வரும் காலங்களில் எப்படி இருப்பானோ”. அன்றிரவு அவள் தலையணை முதல் முறையாகக் கண்ணீரில் நனைந்தது. ஆணோ பெண்ணோ.. அவரவர் துக்கத்தை ரகசியமாய் இறக்கி வைக்கும் சுமைதாங்கிகளல்லவா தலையணைகள். அழுதழுது தூங்கிப்போனாள்.
வீங்கிய முகத்துடன் காலையில் எழுந்து வந்தவளை மாமியார் கூர்ந்து பார்த்தாலும் ஒன்றும் கேட்கவில்லை. அவளாகச் சொல்லட்டும் என்று விட்டு விட்டாள். அவனோ எதுவுமே நடக்காதது போல் பேப்பரில் மூழ்கியிருந்தான். நேரமாக ஆக கௌசிக்குள் அவன் வார்த்தையின் விஷம் பரவ ஆரம்பித்தது. வீட்டில் யாரும் எதுவும் சொல்லாமல் இருப்பது,.. முக்கியமாக அவன் தன்னுடைய அழுகையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அவளுக்குள் ஆங்காரத்தை வளர்த்தது. மனம் கொதித்துக்கொண்டிருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக வீட்டுக்காரியங்களைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.
அவனும் மாமியாரும் சாப்பிட்டானதும், பாத்திரங்களை ஒழித்து சிங்க்கில் போட்டு விட்டு, துலக்க ஆரம்பித்தாள்.
“கௌசி”
“இதோ வரேன் அத்தை..” கைகளைக் கழுவிக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
“நீ சாப்பிடலை?”
“இல்ல.. பசிக்கல..”
“மொகமெல்லாம் வாடிக்கெடக்கு. என்னத்த பசிக்கலங்கற? காலைலயும் சாப்பிடல, நேத்து நைட்டும் சாப்பிட்ட மாதிரி தெரியல. உள்ளதச்சொல்லணும், என்ன நடந்துது?”
அவள் மௌனமாக ஜன்னலை வெறித்தாள்.
“கேக்கறேன்ல?.. சொல்லு”
“உங்க பிள்ளை கிட்ட எதுவுமே கேக்க மாட்டீங்களா? எல்லாத்துக்கும் நாந்தான் பதில் சொல்லணுமா?” மெல்லிய குரலில் பதில் வந்தது கௌசியிடமிருந்து.
“என்னடா டேய்?.. இவ என்ன சொல்றா?”
“எனக்குப் புரியலைம்மா… எனக்குத் தெரியல” என்றான்.
“கௌசிய என்னமும் திட்டினியா?”
“அய்யோ?!!.. நானா? திட்டினேனா?” அப்பாவியாய் முகத்தை வைத்திருந்தான் ராஜீவ்.
“இல்ல, பொய் சொல்றார். திட்டினாரு… தண்டச்சோறுன்னு திட்டினாரு” அழுகையும் பரிதவிப்புமாய் கிட்டத்தட்ட கதறினாள் கௌசி.
அவளைக் கூர்ந்து பார்த்தான் ராஜீவ். “நேத்து சொன்னதுக்கு இன்னிக்கு வரைக்கும் மூஞ்சைத் தூக்கி வெச்சிட்டிருப்பியா?. நேத்து சொன்னது நேத்தோட போச்சு”
“சொன்னது சாதாரண வார்த்தையா இருந்தா மறந்திருப்பேன், இது என் தன்மானத்தை உரசிப்பார்க்கற வார்த்தையா இல்லே இருக்கு?”
“இதோ பாரு,.. உன்னைப் புண்படுத்தற நோக்கத்தோட நான் சொல்லல. சட்டுன்னு வாயில வந்துட்டுது. குடும்பத்துல இதெல்லாம் சகஜம், சின்னச்சின்ன விஷயங்களப் பெருசாக்காதே” சற்றே கடுமையாகச் சொன்னான்.
இடைமறித்தார் அவனது அம்மா.
“இருடா…. இந்த வார்த்தை சின்ன விஷயமில்லை. வீட்ல இருந்தா தண்டச்சோறுன்னு அர்த்தமா?. இங்க பாரு,.. வீட்ல இருக்கப்பட்ட பெண்கள் அவங்க செய்யற ஒவ்வொரு வீட்டுவேலைக்கும் சம்பளம் நிர்ணயிச்சா உன்னால கொடுத்து மாளாது பார்த்துக்கோ. படிப்பை முடிச்சுட்டு நீ மூணு வருஷம் வேலையில்லாம வீட்ல சும்மாதான் இருந்தே, அப்ப நானோ உங்கப்பாவோ உன்ன ஒரு பொழுது.. ஒரு வார்த்தை சொல்லியிருப்போமா? நீ மட்டும் ஏண்டா இப்படி மத்தவங்களைக் கொட்டற புத்தியோட இருக்கே? அதென்ன நாக்கா இல்லே தேள் கொடுக்கா?”
“நான் யாரையும் எதுவும் சொல்லலை தாயே, சொன்ன வார்த்தைக்கு என்னை ரெண்டு பேரும் மன்னிச்சுக்கிடுங்க.” எழுந்து போக யத்தனித்தான். அவன் குரலும் முகபாவமுமே தனது தவறை அவன் இன்னமும் உணரவில்லை, ஒத்துக்கொள்ளவில்லை எனக்காட்டியது. அவனது அம்மாவிற்கு கவலை ஆரம்பித்தது.
"இங்க பாரு.. ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் கோவப்பட ஆரம்பிச்சா, அப்றம் அந்தக்கோபத்துக்கே மதிப்பிருக்காது" என ஆரம்பித்த அம்மாவைக் கையமர்த்தியவன், "ஒரு வார்த்தை கூட பொறுத்துக்கலைன்னா அப்றம் என்ன இருக்கு? இஷ்டமிருந்தா இங்க இருக்கட்டும், இல்லைன்னா அவ அம்மா வீட்டுக்கே போயிரட்டும்" எனச்சொல்லி விட்டு பேப்பரில் மூழ்கி விட்டான்.
என்ன ஆனாலும் சரி,.. அம்மா வீட்டுக்கு மட்டும் போகக்கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். 'அம்மா வீட்டுக்குப்போய் மூலையில் முடங்கி மூக்கைச்சிந்திக்கிட்டிருப்பேன்னு நினைச்சீங்களா? வெளில போ.. போன்னு துரத்திட்டேயிருந்தா நான் வெளிய போயிருவேன்னு நினைப்பா?. எங்கியும் போக மாட்டேன், இங்கியே உங்க கண்ணெதிர்லயே இருந்துக்கிட்டு என்ன செய்யப்போறேன்னு பாருங்க. வீட்டுக்கு அடங்காதது ஊருக்கு அடங்கும்ன்னு சொல்லுவாங்க. நீங்க எங்கே யாருக்கு அடங்கறீங்கன்னு பார்க்கறேன்' என மனதுக்குள் கறுவிக்கொண்டாள்.
வெளிப்பார்வைக்கு எப்போதும்போல் இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் உள்ளே கனன்று கொண்டுதான் இருந்தது. கால் வயிறு ஆகாரத்துடன் நிறுத்திக்கொண்டாள். மீதியைப் பிறர் கவனிக்காத போது நாய்க்குப்போட்டாள். நாட்கள் தேயத்தொடங்கின,.. போலவே அவளும் தேய்ந்து மெலிந்து கொண்டிருந்தாள். ஆரம்ப நாட்களில் தெரியாவிட்டாலும் நாட்கள் செல்லச்செல்ல அவளது மெலிவு கண்கூடாகத் தெரிந்தது. விசாரித்த மாமியாருக்கும் நாத்தனாருக்கும் மழுப்பலான பதிலைச்சொன்னாள். விரைவில் அக்கம்பக்கத்தினர் விசாரிக்க ஆரம்பித்தனர். பின், ஊராரும் உற்றாரும் விசாரித்தனர். "என்னடே.. உங்க வீட்லயே உம்பொண்டாட்டி மட்டும் எலும்பும் தோலுமா இருக்கா.. அவளுக்கு ஒழுங்கா சோறு கீறு போடறீங்களா இல்லியா?"
தர்ம சங்கடத்துடன் திருதிருவென விழித்தான்.
"மாந்தையன் மாதிரி முழிக்காதே. என்ன ஏதுன்னு பார்த்து சரி பண்ற வழியைப் பாரு. அவ அப்பா அம்மா கேட்டா என்னன்னு பதில் சொல்லுவே? கெட்டிக்குடுத்து வரச்சிலே விக்ரகம் மாதிரி இருந்த புள்ளைய இப்பிடி ஆக்கி வெச்சிருக்கீங்களே, ஒங்களுக்கெல்லாம் கூறுவாடு இருக்கா? வச்சுக்காப்பாத்த வக்கு இல்லேன்னா நீயெல்லாம் எதுக்குடே பொண்ணு கெட்டுதே?" எதிர் வீட்டு மாமா கோபாவேசமாகப் பேசிக்கொண்டே போனார்.
கதவண்டையில் நின்று எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாள். நாலு பேர் நடுவில் திட்டு வாங்கிக்கொண்டிருக்கும் அவன் முகத்தைப்பார்க்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. நசுங்கிக்கிடக்கும் தேளைக் கண்டுவிட்டதுபோல் அசூயையுடன் குரூரப் புன்னகையில் நெளிந்தது அவள் முகம்.
டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட சொல்வனம் மின்னிதழுக்கு நன்றி. சிறுகதையின் ஒலிவடிவத்தை சொல்வனத்தின் யூட்யூப் சேனலில் கேட்கலாம்.
No comments:
Post a Comment