Tuesday 4 April 2023

சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை (அம்பை) - புத்தக மதிப்புரை


அம்பையின் எழுத்தை நான் முதன்முதலில் வாசித்தது “அழியாச்சுடர்கள்” தளத்தில்தான். ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதை மூலம் எனக்கு அவர் அறிமுகமானார். தொடர்ந்து அவரது எழுத்துகளில் சிலவற்றைத் தேடித்தேடி வாசித்தேன். அவற்றில் ஒன்றுதான் சாகித்ய அகாடமி விருது பெற்ற “சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை” என்ற இந்த சிறுகதைத்தொகுப்பு.

அம்பை தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல, மேகங்களும் பறவைகளும் கதைகளாய் ஆண் எழுத்தாளர்களின் ஜன்னல்கள் வழியாகக் குதித்து வருவதைப்போன்றே, பல்வேறு வடிவங்களில் வண்ணங்களில் உலகம் துண்டு துண்டாகப் பெண் எழுத்தாளர்களின் ஜன்னல்கள் வழியாகவும் குதித்து வருகிறது. அம்பை குறிப்பிட்டிருக்கும் விதவிதமான வடிவங்களில் அமைப்புகளில் இருக்கும் புற ஜன்னல்களைப்போலவே, பெண்களின் மனதிலும் நிறைய அக ஜன்னல்கள் இருக்கின்றன. அவற்றின் வழியாக, அவள் காண்பதை, அவள் உணர்வதை அவள் கண்ணோட்டத்தின் வழியாகவே அம்பை தன் எழுத்துகளின் மூலம் வெளிக்கொணர்கிறார். 

இத்தொகுப்பிலிருக்கும் பெரும்பான்மையான சிறுகதைகள் மும்பையைக் கதைக்களமாகக்கொண்டவை. பல்வேறு பகுதிகளிலிருந்தும் எக்கச்சக்கமான கனவுகளைச்சுமந்து கொண்டு மக்கள் மும்பைக்கு வருகின்றனர். அம்மக்களின் கனவுகளை உண்டு செரித்தும் எரித்துச்சாம்பலாக்கியும் அதையே அடித்தளமாகக்கொண்டு இப்பெருநகரம் தன் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டே போகிறது. போனால் போகிறதென்று ஒரு சிலரின் கனவை நனவாக்கியும் வைக்கிறது. இதில் மும்பைக்குப் பதிலாக எந்தப்பெருநகரத்தின் பெயரையும் எழுதிக்கொள்ளலாம். அந்நகரத்திலும் ஒரு மரத்தை அடையாளம் கண்டு கொண்டு, எரிவதற்கு முன் அம்மரத்தின் அருகே இருந்த தன் வீட்டை நினைத்துக் கண் கலங்கியபடி ஒரு கம்லி இருப்பாள். தன் தந்தை வேலை செய்த ஆலையை நினைத்துப்பாடியபடி ஒரு கம்மு இருப்பாள்.

நோய்மை பீடித்தவர்களுக்கு எவ்வளவு துன்பமோ அவ்வளவே துன்பத்தை, அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் தரும். தனக்குப் பிரியமானவர்கள் தன் முன்னே துடிப்பதைக் கண்டும் ஒன்றும் செய்யவியலாத கையறு நிலைக்குப் பெயரே நரகம். மறதி நல்லதுதான், ஆனால் அதுவே ஒரு நோயாகும்போது வாழும் ஒவ்வொரு நொடியும் நோயாளியும் சார்ந்தவர்களும் செத்துச்செத்துதான் பிழைக்கின்றனர். விதி வசமாக நோயாளி இவ்வுலகில் இல்லாமல் போய்விட்டாலும் அவர்களை நினைவூட்டுவது போல் ஏதேனும் சம்பவிக்கும்போது தாங்கவியலாமற் போகின்றது. தொண்டை புடைத்த காகம் தன் தந்தையை நினைவூட்டியபோது தாங்கவியலாமல் கதவைச்சாத்திய கல்யாணியும் நாம்தான். வாத நோய் முடக்கிப்போட்ட காமும்மா எழுதிய நூலைத்தேடி டெல்லி வரை போகும் அனன்யாவும் நாம்தான். மாமியாரைப்பார்த்துக்கொள்ள இயலாமல், அதே சமயம் அவளை முதியோர் இல்லத்திலும் விட முடியாமல் தவித்து, கடைசியில் தீக்கு தன்னைத்தின்னக்கொடுக்கும் ஊர்மிளாவும் நாமேதான். தேன்மொழி என்ற பச்சைப்பறவையின் கூவல் தொண்டையில் அடைபட்டிருப்பது குறித்துத் தவித்து, அதன் ஒலியைக் கேட்க முயன்று, பின் ஒலியே அப்பறவைக்கு ஓர் ஆக்கிரமிப்பாக இருப்பதை உணர்ந்து வீடு நீங்கும் கூங்கா பாபாவாகிய வசந்தும் நாம்தான்.

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டிக்கான சிகிச்சை பலனின்றி இறந்த கணவனுக்குப் பின் தானும் காலாவதியாகும் முடிவுக்குப்போகும் கமலாவின் மகன் ஆதிக்கும், கடைசி காலத்தில் மறதியால் அவதிப்பட்டு இறந்த தந்தைக்குப்பின் தங்கள் தாய்க்கு ஒரு துணை வேண்டுமென்று சுயம்வரம் ஏற்பாடு செய்யுமளவுக்கு பரந்த மனம் கொண்டு, அதே தாய் தனது கல்லூரிக்கால நண்பனுடன் சேர்ந்து வாழ முடிவெடுப்பதை ஒப்புக்கொள்ள இயலாமல் தவிக்கும் பிள்ளைகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அவரவர் உள்ளிருந்து ஆட்டுவிக்கும் சுயநலத்தின் கைப்பாவைகள்தான் அவர்கள். “உயிரை நீடிக்கறதுல என்ன பிரயோசனம்?” எனக்கேட்டு தந்தையின் ட்ரக்கியோஸ்டமியை நிறுத்தும் ஆதியும், பிறகு சிக்கல் வராமலிருக்க “அவரவர் சொத்துகள் அவரவர் குழந்தைகளுக்குத்தான் எனப் பத்திரப்படுத்தி விட்டு மறுமணம் செய்து கொள்” எனும் சாந்தியின் குழந்தைகளும் தாய் எனும் பெண்ணின் உணர்வுகளைப்புரிந்து கொள்ள எவ்வனத்தின் எப்பொய்கையில் மூழ்கி எழ வேண்டியிருக்குமோ!

பதின்மூன்று சிறுகதைகளைக்கொண்ட இத்தொகுப்பில் “சிங்கத்தின் வால்” என்ற கதை பிரமிக்கச்செய்கிறது. இந்தியச்சமூகத்தில் பெண்கள் குடும்ப அமைப்புக்குள் எதிர்கொள்ள நேரிடும் நெருக்கடிகளையும், அவர்களின் அறிவு புறக்கணிக்கப்படுவதையும், அவர்கள் மேல் நிகழ்த்தப்படும் ஆதிக்கங்களையும் திணிக்கப்படும் கற்பிதங்களையும் அதை அவர்கள் தாங்களாகவே ஏற்றுக்கொள்ள வைக்கப்படும் நெருக்கடிகளையும் பற்றிப் பெரிதும் பேசுகின்றன அம்பையின் எழுத்துகள். அம்பையை வாசித்தல் என்பதும் பெண்ணை, அவள் உலகை, இன்னும் நுணுக்கமாக அணுகி அவள் நோக்கிலேயே புரிந்து கொள்ளலேயாம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails