தமிழகத்தின் பிற பகுதிகளில் 'முந்திரிப்பழம்' என அழைக்கப்பெறும் இப்பழத்தை அந்தக்காலத்திலெல்லாம் கேரளா மற்றும் லிட்டில் கேரளாவான கன்யாகுமரி மாவட்டத்தில் கொல்லாம்பழம் எனவும் கொல்லமாவு எனவும் கூறுவோம்.
அப்போதெல்லாம் ஒரு பெரிய கடவம் நிறைய பழங்களை தெருவில் விற்றுக்கொண்டு வருவார்கள். மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் தளதளவென, கொழுகொழுவென நிறைந்திருக்கும் பழங்கள், 'என்னை வாங்கேன்' என நம்மைக் கூப்பிடும். ஒவ்வொரு பழமும் நல்ல பெரிய சாத்துக்குடி சைஸில் இருக்கும். வெட்டி உப்புப்போட்டுப் பிசிறி சிறிது நேரம் ஊற விட்டு பின்னர்தான் சாப்பிடுவோம். இல்லையெனில் தொண்டை 'காறும்'.. அதாவது நமைச்சல் உண்டாகும். அவ்வளவாக இனிப்பில்லையென்பதால் சர்க்கரை தூவி உண்ணலாமா? என்றால்... அது அவ்வளவு ருசியாய் இராது. உப்பிட்ட பழமே உள்ளளவும் நினைப்பிலிருக்கும்.
பள்ளிக்கூடங்களுக்கு வெளியேயும் வைத்து விற்றுக்கொண்டிருப்பார்கள். உப்பு தொட்டுத் தின்னப் பொறுமையில்லாத பிள்ளைகள் அப்படியே கடித்து சாறு வழிய உண்பர். வீட்டுக்குத் தெரியாமல் கொல்லாம்பழம் சாப்பிட்டவனை அவன் சட்டை காட்டிக்கொடுத்து விடும். சட்டையில் சாறு வழிந்த இடமெல்லாம் கறையாகிக்கிடக்கும். துவைத்தாலும் போகாத கறையைக்கண்டு எரிச்சலடையும் தாய்மார் அதன்பின் பிள்ளைகளைத் துவைப்பார்கள்.
கொத்துக்கொத்தாய் பூத்திருக்கும் பூக்களிலிருந்து முதலில் முந்திரிப்பருப்பு இருக்கும் பகுதி வரும். அதன்பின் பூக்காம்பு தடித்து பச்சை வண்ணத்தில் துலங்கி வரும். பின், நாளாக ஆக மரம் முழுக்க கெம்புக்கற்களும் புஷ்பராகக்கற்களும் தொங்குவது போல் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் கனிந்து கொத்துக்கொத்தாய்க் கிடக்கும். கொல்லாம்பழத்திலிருந்து வாற்றியெடுக்கப்படும் "ஃபென்னி" என்னும் மதுவகை கோவாவில் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது.
எதற்கும் எங்கேயும் முந்திக்கொண்டு நிற்பவனை, 'முந்திரிக்கொட்டை' என ஏன் அதட்டுகிறோம் என்பது இப்பழத்தைப் பார்த்தாலே புரிந்து விடும். சாறு நிரம்பியிருக்கும் முந்திரிப்பழம் உண்மையில் பழமல்ல, அது பொய்க்கனி வகையைச்சேர்ந்தது. பூவின் காம்புப்பகுதி பருத்து சாறு நிரம்பி பழம் போல் தோற்றமளிக்கிறது. பொய்க்கனியில் கீழே சிறுநீரகவடிவில் ஒட்டிக்கொண்டிருக்கிறதே முந்திரிக்கொட்டை.. அதுதான் உண்மையான கனி. அதனுள்தான் நாம் மிகவும் விரும்பியுண்ணும் முந்திரிப்பருப்பு இருக்கிறது. பழத்தின் கேரளப்பெயருக்கோ தமிழகப் பெயருக்கோ சற்றும் சம்பந்தமில்லாமல் 'அண்டிப்பருப்பு' என்போம் நாங்கள். சுருக்கமாக அண்டி.
முந்திரிக்கொட்டையிலிருந்து முந்திரிப்பருப்பை மிகவும் கவனமாகப் பிரித்தெடுக்க வேண்டும். கத்தி அல்லது அரிவாள்மணையால் நறுக்கும்போது வெளியாகும் திரவம் பட்டு தோல் புண்ணாகி விடும் எனக் கேட்டதுண்டு. முந்திரிக்கொட்டைகளை முழுதாகப்போட்டு வறுத்தெடுக்கும்போது வெளியாகும் புகை நச்சு நிரம்பியது எனச் சொல்லப்படுகிறது. நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் கிராமங்களிலிருந்து சாக்கு சாக்காய் கொண்டு வந்த முந்திரிப்பருப்பை சிலர் விற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் வாங்கியதில்லை. சித்தப்பா கேரளாவின் கரியவட்டத்திலிருந்த க்வாட்டேழ்ஸில் வசித்தபோது வீட்டைச்சுற்றிலும் கொல்லாந்தோப்புகள்தான். அத்தனையும் அரசால் பாட்டத்துக்கு விடப்பட்டவை ஆகவே ஒரு பழம் கூட பறித்து விட முடியாது. ஆனாலும் கண்ணெதிரே எப்போதும் பார்த்துக்கொண்டே இருந்ததாலோ என்னவோ.. தின்ன வேண்டுமென்ற ஆசையே வந்ததில்லை.
மும்பைக்கு வந்த இத்தனை வருடங்களில் இப்போதுதான் இதை சந்தையில் கிடக்கக் கண்டேன். அப்புறமென்ன?.. வாங்கி கண்டந்துண்டமாக வெட்டி உப்பில் ஊறப்போட்டாயிற்று. உப்பில் பழம் ஊற.. பழையநினைவுகளில் மனது ஊற.. சுவையாகத்தான் இருக்கிறது எல்லாமும்.
No comments:
Post a Comment