Tuesday, 31 December 2024

படமும் பாடலும் (8)



கயல்விழி ராதையொடு கோதையு முண்டு
குயில்மொழி ஆய்ச்சியர் காண்ப துயர்வாய்
மயலுற்ற னைத்தும் மதுசூதன் விட்டு
வயல்வெளியில் நின்றான் வளர்ந்து.
***********************************************************************

லேட்டாபால் வாரதினால் நாக்கேங்கு தேகாலை
லோட்டா நிறைகாப்பிக் கே.
*************************************************************************

கட்டுச்சோற் றுப்பொதிக்குக் கச்சிதமாய்த் தேர்வதில்
இட்லிக்கு உண்டோ இணை.

சுடச்சுடக் காபியுடன் இட்லியெனில் சொர்க்கம்
சடனாய் அருகே வரும்.

சட்னியொரு கண்ணெனில் சாம்பாரோ மற்றொன்றாம்
இட்டமெக் கண்ணெனச் செப்பு

பஞ்சுபோல் இட்லியைப் பாய்ந்துண்ணீர் நாளைகிட்டும்
மிஞ்சியமா தோசையாய் வார்த்து
*************************************************************************

ரசவடைக் கென்றே சுடினும் சபல
வசப்படின் எஞ்சுவ தேது.
****************************************************************************

வாயைக் கிளறவரும் வம்பரின் அன்பெலாம் மாயைதா னென்றே உணர்

**************************************************************************************

வீட்டுக் கிரண்டொரு வாகனம் உண்டாயின்
ரோட்டில் பெருகாதோ ஜாம்
*********************************************************************************

தங்கவளை கேட்டதும் தங்கவலை யெண்ணாது மங்காத ரத்னவளை மாட்டுகிறீர் பர்த்தாவே வாங்கிய வாங்கியை வாட்டியே இன்றேனும் பாங்காய்ச் சமைக்கிறேன் பாத்.

Thursday, 26 December 2024

புன்னைவனக் காவலன் - டாக்டர் அகிலாண்ட பாரதி(புத்தக மதிப்புரை)

“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொல்வார்கள். சில நேரங்களில் ஊர் முதலில் அமையும், அதன்பின் அவ்வூருக்கு ஒரு வழிபாட்டுத்தலம் வேண்டியதன் தேவையை உணர்ந்து அமைத்துக்கொள்வதோ அல்லது இறைசக்தி தானாகவே அந்த ஊரில் வந்தமைவதோ நடக்கும். அப்படியல்லாமல் சில நேரங்களில் சுயம்புவாக எழுந்தருளும் இறைவன் பலகாலமாகக் கண்டுகொள்ளப்படாமல் இருந்து, தக்க சமயத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்போது சாரிசாரியாக வரத்தொடங்கும் பக்தர்களால் படிப்படியாக அக்கோவிலைச்சுற்றி ஊர் அமைந்து விடும். அப்படியொரு கோவில்தான் தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் “சங்கரன்கோவில்”. கோவிலின் பெயரே ஊரின் பெயராகவும் அமையப்பெற்ற சில கோவில்களில் இதுவும் ஒன்று.

அரியா? அரனா? யார் பெரியவர் என்று சங்கன், பதுமன் என்ற நாக அரசர்களிடையே ஏற்பட்ட பூசலுக்கு விடை காணும் பொருட்டு பார்வதி புன்னைவனத்தில் தவம் செய்ய இறைவன் ஒரு பாதி சிவனாகவும் மறுபாதி திருமாலாகவும் சங்கரநாராயணராகக் காட்சியளித்து இருவரும் ஒருவரே என உலகத்தோர்க்குத் தெளிவித்த தலம் இது. பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த இந்த இடம் கோவில் அமைவதற்கு முன் புன்னைவனமாகவே இருந்துள்ளது. இந்த புன்னைவனத்தைக் காவல் காப்பதற்காக பாண்டிய மன்னர் உக்கிரபாண்டியனால் அனுப்பப்பட்ட மணிக்ரீவன் என்ற காவலனின் வாயிலாக சிவபெருமான் தன்னைச் சங்கரலிங்கமாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளார். இத்தகு சிறப்பு மிக்க இத்தலத்தில் ஒரு சிவாலயம் கட்ட வேண்டுமென்று உக்கிரபாண்டியர் விரும்பி ஆலயம் எழுப்பிய வரலாறே  “புன்னைவனக்காவலன்” எனும் நாவலாக மலர்ந்துள்ளது.

அக்காலத்தில் உண்மையில் இருந்த மாந்தர்களோடு கற்பனைக் கதாபாத்திரங்களையும் உருவாக்கி உலவ விட்டிருக்கிறார் நூலாசிரியர் அகிலாண்ட பாரதி. சரளமான மொழியில் தெளிவான நடையில் நீரோட்டம் போல் விறுவிறுவெனச்செல்கிறது நாவல். அக்கால மனிதர்களின் வாழ்வியல், அந்தப்பிரதேசத்தில் வளர்ந்த தாவரங்கள், அக்கால குடவோலை முறை தெரிவு, திருமணச்சடங்குகள், புன்னைமரத்தின் சிறப்புகள், அக்கால நீர்ப்பாசன முறை, ஆலயம் எழுப்பப்பட்ட நடைமுறைகள் என எல்லாவற்றையும் பற்றி நுணுக்கமாகவும் விவரமாகவும் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொன்றையும் வாசிக்கும்போது அதன் பின்னிருக்கும் ஆசிரியரின் உழைப்பு புலனாகிறது. 

கோவில் அமைந்திருக்கும் பகுதியிலும் சுற்றுவட்டாரத்திலும் அமைந்துள்ள ஊர்களின் பெயர்களையும் அவற்றின் பெயர்க்காரணங்களையும் அறியத்தந்திருப்பது சுவாரஸ்யம். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அதில் வரும் வரலாற்றுச்சம்பவங்களுக்கான ஆதார செய்திகளையும் இணைத்திருப்பது பாராட்டத்தக்கது. மணிக்ரீவனுக்கான கோவிலும் அவனது சிலையும் எங்கிருக்கிறது என்ற தகவல் பிரமிக்க வைக்கிறது. தேர்ந்த கதைசொல்லியான டாக்டர் அகிலாண்டபாரதியின் முதல் வரலாற்று நாவல் இது. ஏராளமான வரலாற்றுச்சம்பவங்களும் தகவல்களும் நிரம்பிய இந்நாவலை வாசித்து முடிக்கும்போதுதான் உண்மையில் ‘புன்னைவனக்காவலன்’ யார் என்பதே தெரியவருகிறது. தட்டையாக வரலாற்றை மட்டுமே சொல்லிச்செல்லாமல் கதை மாந்தர்களின் உள்ளக்கிடக்கைகளையும் உணர்வுப்போராட்டங்களையும் சேர்த்து சரிகையும் நூலுமாக நெய்திருப்பது ஒரு இதமான வாசிப்பனுபவத்தைத்தருகிறது.

Tuesday, 24 December 2024

பீமாஷங்கர் - ஆறாவது ஜோதிர்லிங்க தரிசனம்

மஹாராஷ்ட்ராவில் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமான சஹ்யாத்ரி மலைப்பிரதேசத்தில் இருக்கும் பவகிரி என்ற ஊரில் பீமரதி நதி உற்பத்தியாகி ஓடுகிறது. இங்குதான் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஆறாவதான “பீமாஷங்கர் ஜோதிர்லிங்க்” கோவில் அமைந்துள்ளது. பன்னிரண்டில் மஹாராஷ்ட்ராவில் மட்டுமே பீமாஷங்கர், நாசிக்கின் த்ரிம்பகேஷ்வர், ஒளரங்கபாதின் அருகேயிருக்கும் த்ரிஷ்ணேஷ்வர், என மூன்று கோவில்கள் உள்ளன. 


பீமாஷங்கர் கோவில் பூனாவின் அருகே சுமார் 110 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவின் எப்பகுதியிலிருந்தும் விமானம், ரயில், பஸ் போன்ற எவ்வகையான வாகனத்திலும் பூனாவை வந்தடையலாம். பூனாவின் சிவாஜி நகர் பஸ் நிலையத்திலிருந்து பீமாஷங்கருக்கு நிறைய பஸ்கள் புறப்படுகின்றன. விரும்பினால் டாக்ஸியும் அமர்த்திக்கொள்ளலாம். சுமார் மூன்று மணி நேரத்தில் பீமாஷங்கரை சென்றடைந்து விடலாம். கோவில் அமைந்திருக்கும் மலைப்பகுதி வனவிலங்குகளின் சரணாலயமுமாக இருப்பதால் மாலை ஆறுமணிக்கு பூனாவிற்குத் திரும்பிச்செல்லும் கடைசி பஸ்ஸும் கிளம்பிவிடும். ஆகவே அதற்கேற்றபடி பயணத்திட்டத்தை அமைத்துக்கொள்வது உத்தமம். இரவில் பீமாஷங்கரில் தங்க வேண்டுமென்றால் கோவிலுக்கருகில் ஓரளவு வசதியான ஹோட்டல்கள் இருப்பது போல் தெரியவில்லை. விடிகாலையில் வரும் பக்தர்கள் குளித்து உடைமாற்றிச்செல்லுமளவிலேயே பீமாஷங்கர் பஸ் நிலையத்தினருகே ஹோட்டல் அறைகள் இருக்கின்றன. 

குளித்துத்தயாராகி, கோவிலுக்குச்செல்லும் பாதையிலேயே அமைந்துள்ள ஹோட்டல்களில் மஹாராஷ்ட்ர உணவான வடாபாவ், மிசல் பாவ் என வெட்டி விழுங்கி விட்டு, பூஜைப்பொருட்கள் அடங்கிய கூடையையும் வாங்கிக்கொண்டு கோவிலை நோக்கிக்கீழிறங்கிச்செல்லும் படிக்கட்டில் வரிசையில் நின்று விடலாம். தரிசனம் கிடைப்பதற்கு, கூட்டத்தைப்பொறுத்து இரண்டு அல்லது மூன்று மணி நேரமாகலாம். ஆனால், ஜோதிர்லிங்கத்திற்கு நாமே நம் கையால் நிதானமாய் அபிஷேகம் செய்யவும் மலரிட்டு வணங்கவும் அனுமதிக்கிறார்கள். அவசரப்படுத்துவதோ இழுத்துக்கடாசுவதோ கிடையவே கிடையாது என்பது ஆறுதலளிக்கும் செய்தி. இக்கோவிலின் தலவரலாறை ஏற்கனவே எனது வலைப்பூவில் எழுதியிருக்கிறேன்.




//இலங்கைப்போரில் கொல்லப்பட்ட கும்பகர்ணனின் மகனான பீம், விஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமரால் தன் தந்தை கொல்லப்பட்டதை தாய் மூலம் அறிந்து, விஷ்ணுவைப் பழி வாங்கறதுக்காக பிரம்மாவை நோக்கித் தவம் செஞ்சார். பிரம்மா கொடுத்த வரங்களின் பலத்தால் மூவேழு லோகங்களையும் அடிமைப்படுத்தி, தனக்குன்னு மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஏற்படுத்திக்கிட்டு திரிபுராசுரன் என்ற இன்னொரு பெயருடன் அட்டகாசம் செய்ய ஆரம்பிச்சார். ஆணாலோ பெண்ணாலோ அழிக்கப்படக்கூடாதென வரம் வாங்கியிருந்த பீமாசுரனை சிவன் அர்த்த நாரீஸ்வரர் அவதாரமெடுத்துச் சண்டையிட்டு முப்புரம் எரித்து அத்துடன் பீமனையும் சாம்பலாக்கி அழிச்சார். அப்போ அவர் உடம்பில் ஏற்பட்ட வியர்வைதான் பீமரதி நதியா உருவெடுத்துது. அப்றம் அனைவரின் வேண்டுகோளுக்கிணங்கி சிவன் அங்கே ஜோதிர்லிங்கமா உருவெடுத்து கோயில் கொண்டார்// 

சபாமண்டபத்தைக் கடந்து நாலைந்து படிகள் இறங்கினால் கருவறையில் வெள்ளிக்கவசமணிந்து வீற்றிருக்கிறார் பீமாஷங்கர். கருவறையினுள் பெரிய அளவில் கண்ணாடியை மாட்டி வைத்திருப்பதால் நெருங்கும்போதே கண்ணாடியில் மூலவரின் பிம்பத்தை தரிசிக்கலாம். மண்டபத்தைக் கடக்கும்போதே அபிஷேகத்திற்கான நீர் இருக்கும் பாட்டிலைத் திறந்து தயாராக வைத்துக்கொண்டு, மகள் கையில் நாலைந்து பூக்களைக் கொடுத்து வைத்தேன். மூலவரை நெருங்கியதும் நான் அபிஷேகம் செய்ய மகள் மலரிட்டாள். நெற்றி நிலம்பட விழுந்து வணங்கிவிட்டு வெளியே வந்து கருவறைக்கு எதிரில் கால் மடக்கி அமர்ந்திருக்கும் நந்தியம்பெருமானையும், தரையில் பதிக்கப்பட்டிருந்த கூர்மத்தையும் வணங்கி வெளியே வந்தோம். நேர் எதிரிலேயே சனீஸ்வரனின் சந்நிதி அமைந்திருக்கிறது. அவரது சன்னிதியின் எதிரே இரண்டு பெரிய தூண்களின் நடுவே கட்டப்படிருந்த ஒரு பிரம்மாண்டமான மணி கவனத்தை ஈர்த்தது. 



மராட்டா சாம்ராஜ்யத்தின் ஏழாவது பேஷ்வாவான பாஜிராவின் தம்பியும் தளபதிகளில் ஒருவருமான சிம்மாஜி அப்பா என்பவர், மும்பையின் வசாய் கோட்டையில் போர்த்துக்கீசியர்களை வென்று அதன் அடையாளமாக ஐந்து பெரிய மணிகளை எடுத்து வந்தார். அவற்றில் ஒன்றை இக்கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கியிருக்கிறார். மணியின் மேல் சிலுவை, அன்னை மேரியின் புடைப்புச்சிற்பம் மற்றும் 1729 என்ற எண் போன்றவை பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காண முடிகிறது. அதனருகிலேயே மிகப்பிரம்மாண்டமான திரிசூலம் ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது. கோவிலின் போட்டோ பாயிண்ட் என்றும் இதைச்சொல்லலாம். வரும் மக்கள் அனைவரும் நின்று படமெடுத்துக்கொண்டு நகர்கின்றனர். 

கோவில் விடியற்காலை 4:30 முதல் இரவு 9 வரை திறந்திருக்கும். விடியற்காலையில் கக்கட் ஆரத்தி சமயத்தில் ஜோதிர்லிங்கத்தின் வெள்ளிக்கவசம் அகற்றப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் செய்தபின் மறுபடி கவசம் அணிவிக்கப்பட்டு விடும். அதன்பின் அந்த கவசத்திற்கே அத்தனை அபிஷேக ஆராதனைகளும் பூஜைகளும். ஆகவே ஜோதிர்லிங்கத்தை நேரடியாகத் தரிசிக்க விரும்பினால் விடிகாலை பூஜையில் கலந்து கொள்ளலாம்.

சற்றே வலப்புறம் நகர்ந்து வந்தால் பிரசாத ஸ்டாலும் அதனருகேயே இரட்டை நந்திகள் இருக்கும் ஒரு மேடையும் இருக்கிறது. முகலாயர் படையெடுப்பில் சேதமான நந்திகளாகவும் இருக்கலாமோ என்னவோ எனத்தோன்றியது!! நகாரா பாணியில் கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலின் சபாமண்டபத்தையும் கோபுரத்தையும் பேஷ்வாக்களின் அவையில் அமைச்சராக இருந்த நானா ஃபட்ணவிஸ் என்பவர் கட்டியெழுப்பியிருக்கிறார். வலம் வந்து வெளியேறும் வழியில் மோட்சதீர்த்தம் என்னும் குளம் இருக்கிறது. இத்தலத்தில் கடுந்தவம் புரிந்த கௌசிக மஹாமுனி இக்குளத்தில் நீராடியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போதோ குளம் உபயோகிக்கும் நிலையில் இல்லாமல் தாழிடப்பட்டுள்ளது. 



கோவிலை விட்டு வெளியே வந்ததும் மார்க்கெட்டிலிருந்து இடதுபுறம் திரும்பி கொஞ்ச தூரம் நடந்ததும் வலப்புறமாக ஒரு பாதை காட்டுக்குள் செல்கிறது. அதிலேயே இரண்டு கிலோமீட்டர் நடந்தால் “குப்த பீமாஷங்கர்” எனும் இடம் வருகிறது. கொஞ்சம் கரடுமுரடான பாதை என்பதால் நாங்கள் பாதியிலேயே திரும்பி விட்டோம். மலையேற்றத்தை விரும்புபவர்களுக்கு ஏற்ற பாதை அது. அருவிக்கரையும் அதன் கரையில் சிவலிங்கமுமாக அட்டகாசமான இடம். மழைக்காலத்தில் அருவி விழும்போது அதன் கீழே அமர்ந்திருக்கும் சிவலிங்கம் அபிஷேகம் செய்யப்படுவது போல் தோற்றமளிக்குமாம். அருவி விழும்போது சிவலிங்கம் மறைக்கப்படுவதாலும், காட்டுக்குள் ரகசியமான இடத்தில் இருப்பதாலும் இது குப்த பீமாஷங்கர் என்று அழைக்கப்படுகிறது. மார்க்கெட்டிலிருந்து வலப்புறம் திரும்பி நடந்தால் சிறிது தூரத்திலேயே பீமா நதியின் பிறப்பிடமான கிணறு இருக்கிறது. இந்நதி சந்திரபாகா நதியுடன் இணைந்து பின்னர் கிருஷ்ணாவுடன் கலப்பதாகச் சொல்லப்படுகிறது.

கோவிலை விட்டுப் படிகளேறி மேலே வந்ததும் மும்பை பாயிண்ட் மற்றும் காட்டுக்குள்ளிருக்கும் ஆஞ்சநேயரைக்கண்டு வந்தோம். மும்பை பாயிண்டிலிருந்து பார்த்தால் சஹ்யாத்ரி மலைப்பிராந்தியத்தின் கொள்ளையழகை கண்களால் அள்ளியள்ளி ருசிக்கலாம். பனி மூட்டம் மட்டும் இல்லையெனில் இங்கிருந்து பார்க்கும்போது, மும்பை, கொங்கண் பகுதிகள் நன்றாகத்தெரியும் என அங்கிருந்த மக்கள் கூறினர். 




ஆஞ்சநேயர் கோவில் அமைந்திருக்கும் காட்டுப்பகுதி, பீமாஷங்கர் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ராட்சத அணில்கள், சிறுத்தை, மான் வகைகள், மற்றும் பறவை வகைகள் போன்றவற்றிற்குப் புகலிடமாக விளங்குகிறது. பல்வேறு வகையான மரம் செடி கொடிகளும் காணப்படுகின்றன. கையில் எடுத்துச்செல்லும் பொருட்களின் மேல் சற்றுக் கவனம் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் எங்கிருந்து அனுமார் வந்து பிடுங்கிக்கொள்வார் எனத்தெரியாது. மகள் கையில் வைத்திருந்த பால்பேடா பாக்கெட்டை தட்டிப்பறித்துக்கொண்டு விட்டார். போகட்டும்.. அவருக்கும்தான் யார் செய்து கொடுக்கப்போகிறார்கள்? 


ஆஞ்சநேயர் கோவிலின் குளம் பாழ்பட்டுக்கிடப்பதால் சீரமைத்துக்கொண்டிருந்தார்கள். அமைதியான அந்தக் காட்டுப்பகுதியில் ஆங்காங்கே குரங்குகளின் அடிபிடி சத்தத்துடன் மோட்டார் ஓடும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. அனுமார் கோவிலின் நிலை சற்று ஏமாற்றத்தைக்கொடுத்தாலும் காலார நல்ல சுத்தமான காற்றைச் சுவாசித்தபடி நிறைய நடந்தது திருப்தியைக்கொடுத்தது. கோவிலுக்குச்செல்வதையும் ஒரு பதட்டமான வேலையாக ஆக்குவதால் என்ன பயன்? போனோம் கும்பிட்டோம் வந்தோம் என்றில்லாமல் கோவில்களின் அருகிலிருக்கும் இம்மாதிரி இயற்கை கொழிக்கும் இடங்களையும் கண்டு வருதல் ஆத்மதிருப்தியளிக்கும்.  

Tuesday, 3 December 2024

சாரல் துளிகள்


பறக்க வேண்டிய தூரமெல்லாம் ஒரு பொருட்டேயில்லை, இளைப்பாற ஏதுவாய் நட்சத்திரங்கள் சில கதைகளுடன் வந்தால் போதும்.

முளைத்துப் பலன்தருமென விதைத்தவற்றையெலாம் உரமாய் உண்டு, தழைத்தோங்குகின்றன களைச்செடிகள். வீரியமற்ற விதைகளுக்கும், சாமர்த்தியமிக்க களைகளுக்கும் நடக்கும் போட்டியை அமைதியாய் வேடிக்கை பார்க்கிறது தாங்கும் நிலம்.

அபாயத்திலிருந்து தப்பித்ததும் மனிதன் செய்யும் முதல்வேலை அச்சூழலைப் பகடி செய்வதுதான். அவ்வாறு செய்வதன் மூலம் அவன் தானடைந்த மன இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு அச்சூழலைக் கடந்து செல்ல முயல்கிறான்.

தேடல் உள்ள உயிர்களெல்லாம் தேடித்தேடிக் களைத்திருக்க, ஆர்வமற்றிருப்பவனின் மடியில் விழுகிறது அருங்கனி.

இருளும் ஔியும் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தன. எங்கும் வியாபித்திருந்த இருளை ஔி தேடிக்கொண்டிருக்க, தனக்குள்ளிருந்த ஔியை நொடியில் தொட்டிழுத்துப் போட்டது இருள்.

தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கும் அரிவாள் அதன் பின் அதை வெட்டியும் சாய்க்கிறது. செய்த தவறென்னவென்று கடைசி நிமிடங்கள் வரை யோசிக்கிறது குற்றமற்ற மரம்.

ஒரு வாசலை கான்க்ரீட்டால் பூசி மூடி, மறுவாசலைத் திறக்கும் இறைவன் அதன் சாவியைத் தொலைக்குமுன் பிடுங்கிக்கொண்டு நுழைந்து விடுங்கள். இனியெப்போதும் அடையா நெடுங்கதவமாக அது இருக்கட்டும்.

ஆசை, கோபம் முதலானவை கூர் கொண்டிருக்குமிடத்தில் அறிவு மழுங்கி விடுகிறது. 

கனவுகளை நனவாக்க முயற்சியேதும் செய்யாமல் வெறுங்கனவு கண்டுகொண்டிருப்பவர்கள் தங்கள் தோல்விக்குப் பிறரைக் காரணம் காட்டி, தங்களைச் சமாதானம் செய்து கொள்கிறார்கள்.

இறுதியாக தனது உடும்புப்பிடியை இன்னும் இறுக்கி, தலை கோதியது அவரவர் இயல்புடனேயே  அவரவரை நேசிப்பதாகச் சொன்ன அன்பு. காயங்களிலிருந்து ரத்தம் கசிய மூச்சுக்காற்றுக்காய் தவித்துக்கொண்டிருந்தனர் அவரவரும்.

Saturday, 30 November 2024

புயலடித்தது - சிறுகதை (கேலக்ஸி இணைய இதழில் வெளியானது)


இன்னும் சற்று நேரத்துக்குப்பின் நடக்கப்போவதன் எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் வானம் பளீரென்றிருந்தது. அசையவே கூடாதென யாரோ கட்டளையிட்டு விட்டதைப்போல மரங்களும் செடிகளும் ஒரு இலையைக்கூட அசைக்காமல் சிலைகளாய் நின்று கொண்டிருந்தன. வெக்கை தகிப்பேறி கானல் அலையலையாய் மிதந்து கொண்டிருந்தது. வெயிலின் வெப்பத்தில் மயங்கியோ என்னவோ தெரு நாய்கள் கூட கிடைக்கும் நிழல்களில் ஒதுங்கியும், வாகனங்களின் அடியில் பதுங்கியும் கண்களை மூடி, வாலைச்சுருட்டிக்கொண்டு சுருண்டு கிடந்தன. 

சந்தானம் தெருவை எட்டிப்பார்த்தார், பின் உள்ளே திரும்பி, “எத்தனை மணிக்குன்னு போட்ருக்கான்?” என்றார்.

“பத்து மணிக்கிப்பா. காத்தும் நல்ல மழையும் உண்டுன்னு போட்ருக்கான்” என்றான் மகன்.

“சொன்னது போல நடக்குமா? நம்பலாமா?”

“அப்பா.. இது கூகிளாக்கும். பொய் சொல்ல மாட்டான். என்னத்த கேட்டாலும் பதிலு இன்னாண்ணு அள்ளிக்கொட்டிரும் தெரியுமா?”

“ம்ம்.. அப்டியா? நீ இந்த வருசம் பரிச்சைல பாசாயிருவியாண்ணு அதிலே போட்டிருக்குமா? போலே.. போயி புக்கை எடுத்துப்படி”

“அப்பா.. முழுப்பரிச்சை முடிஞ்சு லீவு விட்டாச்சு. இப்பம் என்னத்தை படிக்கச்சொல்லுகே?”

“அடுத்த வருசத்துக்குள்ள பாடத்தைப் படி.. போ”

நேரமாக ஆக புழுக்கம் அதிகமாகிக்கொண்டிருப்பதைப்போல பட்டது. தலையில் முத்து முத்தாக அரும்பிய வியர்வைத்துளிகள் பெருகி கோடுகளாக நெற்றியிலிறங்கி புருவங்களில் தேங்கி நின்றன. கழுத்தில் மாலையாகக் கிடந்த துவர்த்தை எடுத்து புறங்கழுத்தையும் முகத்தையும் அழுந்தத்துடைத்துக்கொண்டார். போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயில் அதிகமாகியிருப்பதாகப் பட்டது அவருக்கு. வெயில் மட்டுமா? மழை, குளிர் என எல்லாமே ஒவ்வொரு வருஷமும் அதிகமாகிக்கொண்டிருப்பதைப்போல்தான் அவருக்குத் தோன்றியது. மனைவியிடம் சொன்னால் சிரிப்பாள். ‘ஒவ்வொரு வருஷமும் வயசு கூடுதலாகுதில்லே? அப்படித்தான் தோணும்’ என்பாள். “ஏ புள்ள.. அப்புடி எனக்கு என்ன வயசாகிட்டுது? மூத்தவனே மூணாங்க்ளாஸ்தானேடி படிக்கான்?” என ஒருமுறை சொன்னபோது, “ரெண்டு பிள்ள பெத்தாச்சுல்ல… அப்பம் வயசாளிதானே. இன்னும் இளவட்டமா நீங்க?” என அவள் சிரித்த பின் வாயை மூடிக்கொண்டார்.

ஒரு மழை பெய்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. மகன் தினமும் இணையத்தில் அன்றைய வானிலை எப்படியிருக்குமென பார்த்து விடுவான். அவன்தான் சொன்னான், இன்றும், இந்த வாரத்தில் இன்னும் இரண்டொரு தடவைகளும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதென. ஒருவேளை நேற்றிலிருந்து அதிகமாகியிருக்கும் இந்தப் புழுக்கம் மழைக்காகத்தானோ! அவருக்குக் கோடைமழை மிகவும் பிடிக்கும். பாறையும் வெந்துவிடும் அளவுக்குக் காய்ச்சி எடுத்த வெயிலுக்குப்பின் மண்ணைத் தொடும் முதல் துளிக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார். சிறு வயதில், அம்மா கத்தக்கத்த காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு முற்றத்து மழையில் நனைந்து குதியாட்டம் போடுவார். ‘கத்தாத புள்ள. அவேன் நனையட்டும், மொத மழைல நனைஞ்சாச்சின்னா அதுக்கப்புறம் எந்த மழைல நனைஞ்சாலும் தடுமம் புடிக்காது’ என சப்போர்ட்டுக்கு அப்பா வருகையில் அம்மாவிடம் பயம் எப்படி வரும்?

“லே மக்கா.. தாத்தாவ எங்க? ஒறங்குதாங்களா?”

“இல்லப்பா, தண்ணியெடுக்கப் போயிட்டு வாரேன்னுட்டு போனாங்க”

“ஏட்டி.. அப்பாவ தண்ணிக்கி அனுப்பாதண்ணு ஒனக்கு எத்தனை மட்டம் சொல்லட்டும்? வயசான காலத்துல விழுந்து வெச்சா ஆருட்டி பாப்பா?” என சுள்ளென விழுந்தார்.

“நான் என்ன செய்யட்டும்? அவ்வோதான் வம்படியா கொடத்த எடுத்து சைக்கிள்ள கெட்டிக்கிட்டுப் போறாங்க. தடுத்தாலும் நிக்கறதுல்ல. எனக்குத்தான் கெட்ட பேரு” லேசாகத் தலையைச் சாய்த்தபடி மனைவி சொன்னதும், “சரி.. சரி.. பொலம்பாத. உள்ள போ” என்றார்.

‘மளயும் புயலும் இன்னா வருகுதுன்னு சொல்லுதானுவோ, இந்நேரத்துக்கு வெளிய போகாட்டா என்னா இந்த அப்பாக்கு?’ தனக்குத்தானே புலம்பியவர், ஒரு எட்டு போய் அப்பாவைக்கூட்டி வந்து விடலாமா என யோசிக்க ஆரம்பித்தார்.

அங்கே இரண்டு தெருக்கள் தள்ளி, நெற்றி வியர்வை கன்னங்களில் வழிய முக்கித்தக்கி சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்த பேச்சியப்பன் குழாயடியருகே வந்ததும் சைக்கிளை விட்டிறங்கி, குடங்களை வரிசையில் போட்டார்.

“என்ன பாட்டையா? நாலு நடை தண்ணி சொமந்தாச்சி. போதாதாக்கும்? வயசான காலத்துல திண்ணையடங்கிக் கெடக்கத உட்டுட்டு தண்ணி சொமந்துட்டுக் கெடக்கேளே? மருமவள அனுப்பலாம்லா?” என்றாள் வசந்தா. 

“என்ன மக்ளே செய்யச்சொல்லுகே? காலைல அவளுந்தான் எத்தனை சோலி பாப்பா? அவன வேலைக்கும் புள்ளைய பள்ளியூடத்துக்கும் அனுப்பணும். கைப்பிள்ள வேற காலலதான் சிணுங்கிட்டுக்கெடக்கும். காலைல நாமளும் கூடமாட நாலு வேலையும் சோலியும் செஞ்சு குடுத்தா அவளுக்கு ஏந்தலா இருக்கும். நமக்கும் காலைல காப்பியும் சாப்பாடும் நேரத்துக்குக் கெடைக்கும்லா?” 

“அது சரிதான்.. மருமவள உட்டுக்குடுக்க மாட்டீங்களே. இன்னிக்கி என்னமோ காத்தும் மழையுமா இருக்கப்போவுதுன்னு டிவில சொல்லிக்கிட்டிருந்தாங்க. இன்னிக்காவது வீட்ல இருக்கலாமில்லே?” என நொடித்தவள் “காப்பி குடிச்சாச்சா?” என கரிசனமாய் விசாரித்தாள். பேச்சியப்பனின் முகம் வாடி வதங்கிக்கிடந்தது. பசியோ அல்லது வெயிலோ.. யாரறிவார்!

“வெறுங்காப்பி குடிச்சாச்சு மக்ளே. இனி போயித்தான் டிபன் சாப்பிடணும்” என்ற பேச்சியப்பனின் குடங்களைப்பிடுங்கிய வசந்தா அத்தனையையும் நிரப்பிக்கொடுத்தாள். பார்த்து பத்திரமாகப்   போகச்சொன்னவளின் குரல் முதுகுக்குப்பின் கேட்டது. வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தவருக்கு மருமகள் காலையில் கொடுத்த காப்பியெல்லாம் எப்போதோ வியர்வையாய் ஆவியாகியிருந்தது. என்றாலும் தென்றலாய் வீசிய காற்று முகத்தில் மோத சைக்கிளில் போவதும் சுகமாகத்தான் இருந்தது.

அவருக்கு, இரண்டு வருடங்களுக்கு முன் மறைந்த மனைவியின் ஞாபகம் வந்தது. அவளை எண்ணும்போதே கண்கள் நிறைந்து பாதை மறைத்தது. வேலைக்குப்போய்க்கொண்டிருக்கும்போதும் சரி, ரிடையர் ஆன பின்பும் சரி, அன்போடு அவள் பரிமாறும்போது கணக்கில்லாமல் சாப்பிட்டு விட்டு, “குண்டாயிட்டே போறேன்னு சபாபதி சொல்லுதான் சாலாச்சி, சாப்பாட்டைக்கொறைக்கணும்” என்றபடி எழுவார். முதுகுக்குப்பின் சபாபதியை சாலாச்சி திட்டுவது கேட்கும். சிரித்துக்கொண்டே நகர்வார். 

‘ஹ்ம்ம்ம்.. தாரம் போனா சகலமும் போச்சுன்னு சும்மாவா சொல்லுதாங்க’ என்றெண்ணியவாறே பெருமூச்செறிந்தார். கணிசமானதொரு தொகை பென்ஷனாக வருகிறதென்றாலும் அவரது கைச்செலவுக்கென நூறு ரூபாய் மிஞ்சினாலே அதிகம். மாதாமாதம் பென்ஷன் வந்ததும் மகனுக்குப் பாதி, கஷ்ட ஜீவன் நடத்தும் மகளுக்கு கணிசமான மீதி, பேரன்பேத்திகளுக்கு அவ்வப்போது தின்பண்டத்துக்காக மிச்சசொச்சம் என செலவாகி விடும். 

சைக்கிளை மிதிக்க முடியாமல் எதிர்காற்று தள்ளியது. தம் கட்டிக்கொண்டு பெடலை மிதித்தார். புயல் வருமெனத்தெரிந்திருந்தும் வெளியே வந்திருக்கக்கூடாதோ என எண்ணியது மனம். ‘க்க்கும்.. நான் பார்க்காத மழையா? புயலா?’ என எண்ணியவருக்கு அவரது மகள் பிறந்த வருடம் அடித்த புயல் நினைவுக்கு வந்தது. பிரசவவலியுடன் ஆஸ்பத்திரியில் சேர்த்தும் குழந்தை பிறக்க தாமதமாகிக்கொண்டிருந்தது. எப்படியும் சாயந்திரமாகி விடும் என பெரிய டாக்டர் சொல்லிவிட்டபடியால் அதற்குள் வீட்டுக்குப்போய் மாற்றுடைகளும் அத்தியாவசியமான பொருட்களையும் எடுத்து வந்து விடலாம் என அவரது அம்மாவைத்துணைக்கு வைத்து விட்டு வீட்டுக்கு வந்தார். 

அவர் ஆஸ்பத்திரியிலிருந்து கிளம்பும்போதே லேசான மழை ஆரம்பித்திருந்தது. வீட்டிலிருந்து வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது பலத்த காற்றும் மழையுமாகப் பிடித்துக்கொண்டது. பாதி தூரம்தான் பஸ் கடந்திருந்தது, ஆற்றுப்பாலம் உடைந்து கிடக்கிறதென்று இருபக்கமும் போக்குவரத்தை நிறுத்தி விட்டார்கள். கெஞ்சிக்கூத்தாடி ஒவ்வொருவரிடமாய் லிஃப்ட் கேட்டு பத்து மைல் சுற்றிக்கொண்டு ஆஸ்பத்திரி இருந்த சாலைக்குப்போனவருக்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. ஆஸ்பத்திரியின் முன்னிருந்த சாலையில் இடுப்பளவுக்குத் தேங்கிக்கிடந்த நீர் அவரை மலைக்க வைத்தது. என்ன செய்வதென்று தடுமாறியவரின் மனக்கண் முன் ஆஸ்பத்திரியில் அவருக்காகக் காத்திருக்கும் இரண்டு பெண்களும், இன்னும் பிறக்காத சிசுவும் நிழலாடினர். 

வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு, செருப்புகளைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டார். கையிலிருந்த பையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். சாலையை இடவலமாக நெடுகப்பிரித்த கம்பித்தடுப்பைப் பற்றிக்கொண்டு மெல்ல மெல்ல முன்னேறினார். இதோ இன்னும் சற்றுத்தூரம்தான்.. ஆஸ்பத்திரி வந்து விடும் என தனக்குத்தானே தைரியமூட்டிக்கொண்டார். கால்களை அடிமேல் அடியாக எடுத்து வைத்து நடந்தவருக்கு வெள்ளத்தின் வேகத்தைப் பாதங்களில் உணர முடிந்தது. ஒரு வழியாக ஆஸ்பத்திரிக்குப் போய்ச்சேர்ந்த போது மகளின் அழுகுரல் அவரை வரவேற்றது. 

பழசை அசை போட்டவாறே சாலையின் முனை திரும்பியவருக்கு காய்த்துக்குலுங்கிக்கொண்டிருந்த மாமரம் கண்ணில் பட்டது. செங்காயாய்க்கிடந்த ஒன்றிரண்டு மாங்காய்கள் நாவூறச்செய்தன. சைக்கிளை விட்டிறங்கி, கைக்கெட்டும் தூரத்தில் கிடந்த ஒன்றிரண்டு காய்களை நோக்கிச்சென்றார். உப்பும் மிளகாய்த்தூளும் தூவிக்கொடுத்தால் பிள்ளைகள் ஆசையாகச்சாப்பிடுமே என்ற நினைப்பு. 

காற்றில் ஆடிய காய்கள் கைக்குக்கிடைக்காமல் போக்குக்காட்டின. எங்கிட்டயேவா எனக்கறுவிக்கொண்டவர் மரத்தில் கால் பதித்து ஏறினார். அது பிடிக்காதது போல் மரம் பேயாட்டம் போட்டது, காற்று ஊளையிட்டது. அக்கம்பக்கத்திலிருந்த மரங்களும், ‘வேண்டாம் வேண்டாம்’ என்பது போல தலையைச்சுழற்றி ஆடின. அவரோ எதையும் கவனிக்காமல் கொக்குக்கு ஒன்றே குறி என்பது போல் எக்கி மாங்காய்களைப்பறிக்க முயன்றார். அவரை, கீழே இறங்கச்சொல்லி யாரோ போட்ட கூச்சல் காற்றில் பறந்தது.. தாத்தா.. தாத்தா.. என்ற அலறலை அமுக்கிக்கொண்டு பக்கத்திலிருந்த ப்ளெக்ஸ் பேனர் பெருஞ்சத்தத்துடன் சாய்ந்தது. எதிரிலிருப்பவர் தெரியாத அளவுக்கு அள்ளி வீசிய புழுதிப்புயல் ஓய்ந்தபோது பேனரின் கீழே பேச்சியப்பனை அமுக்கிக்கொண்டு விழுந்து கிடந்த மரத்தின் கிளைகளினூடே மாங்காய்களைப் பற்றியிருந்த ஒரு கையைக்கண்டனர். 

இப்போதெல்லாம் தண்ணீர் பிடிக்க பேச்சியப்பனின் மருமகள்தான் வருகிறாள். அப்பாவுக்கு உடல் ஊனமுற்றோருக்கான சலுகைகளைப்பெறுவதற்காக அவரது மகன் அலைந்து கொண்டிருக்கிறார். ஒற்றைக்கையால் தன்னுடைய வேலைகளைச்செய்ய ஓரளவு பழகிக்கொண்ட பேச்சியப்பன் இப்போதெல்லாம் வீட்டுக்குள்ளேயே மருமகளுக்குத் தன்னால் முடிந்த ஒத்தாசை செய்கிறார். அவரை அப்படிக்காணுந்தோறும் வசந்தாவுக்கு அவர் சொன்னது இன்றைக்கும்  காதில் எதிரொலிக்கிறது.

“நாமளும் கூடமாட நாலு வேலையும் சோலியும் செஞ்சு குடுத்தா அவளுக்கு ஏந்தலா இருக்கும். நமக்கும் காலைல காப்பியும் சாப்பாடும் நேரத்துக்குக் கெடைக்கும்லா?” 

நின்று நிதானித்த வசந்தா ஒரு பெருமூச்சுடன் அவரைக்கடந்தாள்.

சிறுகதையை வெளியிட்ட கேலக்ஸி இணைய இதழுக்கு நன்றி.

Thursday, 5 September 2024

சாரல் துளிகள்


கனவுகள் நொறுங்கும் ஒலி காதுகளுக்குக் கேட்பதில்லை.

நனவின் இருண்மைகளுக்குள் அடைகாக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன மேலும் பல கனவுகள்.

ஆடியில் தன் பிம்பத்தை நோக்கியவாறு வெகுநேரம் நின்றிருந்தது நனவு. பொறுத்திருந்து பொறுமையிழந்து நனவின் கைகோர்த்து நடக்கத்தொடங்கிய பிம்பம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது கனவென.

நிராசையாகப் போகக்கூடியவை எனத் தெரிந்தே காணும் கனவுகளுக்கு நித்ய கண்டம் பூர்ணாயுசு.

பூவாகிக் காயாகிக் கனியக் காத்ததைப் பறிகொடுப்பதையொத்ததே, கனவு வளர்த்து நிதர்சனத்துக்காகப் பலி கொடுப்பதும்.

கனவுகளால் அலங்கரிக்கப்பட்டு கனவை நோக்கி இட்டுச்செல்லும் கனவுப்பாதையில் அடிக்கொரு வேகத்தடை இடறத் தயாராய்.

கலையாத கனவொன்றை வேண்டி நின்றால், சுக்குநூறாய்க்கலைத்த துண்டுகளையள்ளிக் கையில் நிறைத்து, இணைத்து அடைந்துகொள் என்னும் விதியே.. அடியெது முடிவெது என்றாவது சொல்லிப்போ. 

யார் தொலைத்த கனவோ?!.. வழி மறந்து தவித்துக்கொண்டிருந்ததை யாரோ இன்னொருவர் அபயமளித்து அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார்.

கனவின் அடியொற்றி ஓடியும் கை நழுவி விட, குற்றப்பத்திரிகை வாசித்தபடி அமர்ந்திருப்பவரின் கண்ணுக்குள் உற்று நோக்கி, 'என்னையடையும் இலட்சியத்தைத் தொலைத்தது நீயா நானா?'வெனக்கேட்கிறது மீளவும் வந்த கனவு. 

தன்னிடம் வருபவர்களிடம் அவ்வப்போது பலியும் கேட்கிறது அடிக்கொரு தரம் சன்னதம் கொண்டு ஆடியபடியிருக்கும் உக்கிரமான ஆதி கனவிலிருந்து கிளைத்த அந்த அதியுக்கிரக் கனவு.

Monday, 19 August 2024

திருநெல்விருந்து - சுகா

அனுபவக்கட்டுரைகள், ஆளுமைகளைப்பற்றிய பகிர்வுகள் எனப் பல்வேறு வகைகளில் மொத்தம் 22 கட்டுரைகளைக்கொண்டது சுகாவின் “திருநெல்விருந்து”. திரைப்பட இயக்குநர், வசனகர்த்தா, எழுத்தாளர் என்பவை தவிர சமீபத்தில் கவிஞராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனந்த விகடனில் வெளியாகி மிகவும் பேசப்பட்ட தொடரான “மூங்கில் மூச்சு” உட்பட சுகா எழுதிய தாயார் சன்னிதி, வடக்கு ரத வீதி, சாமான்யனின் முகம் போன்ற புத்தகங்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றவை. “வேணுவனம்” என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார்.

நெல்லையின் மண்வாசனை வீசும் இவர் எழுத்துகளை வாசிக்கும் ஒவ்வொருவரும், அவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவராயிருந்தாலும் சரி.. அந்தந்த நிமிடங்களில் அந்தந்த சம்பவங்களோடு தம்மைத் தொடர்பு படுத்திப் பிணைத்துக்கொள்வது திண்ணம். அவரவர் ஆச்சிகளும் அவர்களோடு கழித்த பால்யமும் நினைவுக்கு வந்து ஒரு சில நொடிகளாவது அந்தக்காலத்துக்கே போய் வாழ்ந்து விட்டு வருவர்.

கலாப்ரியா அண்ணாச்சியின் எழுத்துகளுக்கு அடுத்தபடியாக திருநவேலியை, குறிப்பாக ரதவீதிகளை சுகாவின் எழுத்துகளில்தான் நான் நுட்பமாகத்தரிசித்தேன், காலார நடந்துவிட்டு மாரியம்மன் விலாஸில் திருப்பாகம் வாங்கிக்கொண்டும் வந்தேன். என்ன ஒன்று.. சுகாவின் நெல்லையின் மீனாட்சி சொன்னதுபோல் விஞ்சை விலாஸில் நன்னாரிப்பால் குடிக்கப்போக வாய்க்கவில்லை. போலவே நடைப்பயணம் சென்று நடைச்சித்திரம் வரைவதெல்லாம் சுகா போன்றோருக்கே சாத்தியம். நடைபயில்வோரை நம்பித்தானே அத்தனை சுக்குக்காப்பிக்கடைகளும் ஹோட்டல்களும் கட்டி வைத்திருக்கிறார்கள். 

அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் வரைதான் உள்ளூர் வெளியூர் என்ற நினைப்பெல்லாம். மாவட்ட, மாநில எல்லைகளைத்தாண்டி விட்டாலோ எல்லாமே நம்மூர்தான். அது ஆளாருச்சியாக இருந்தாலென்ன? கல்லிடைக்குறிச்சியாக இருந்தாலென்ன? மும்பையாகவே இருந்தாலும்தானென்ன? ஒரு சிலருக்கு மட்டுந்தான் ஊரோடு தொடர்பு வாய்க்கிறது. காசியின் இட்லிக்கடைக்காரரைப்போன்ற பலர் “தேவைப்படலை” என்றே இருந்து விடுகிறார்கள், “முப்பது வருஷமா இதுதான்யா நம்ம ஊரு” என்றிருக்கும் மும்பை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சமையற்கலைஞரைப்போல.

திருநெல்விருந்தும் ஆத்மருசி கந்தையா பெரியப்பாவும் பின்னே மனோஜும் வெகுநாளைக்கு வாசகர் நினைவில் நிற்பார்கள். உணவின் ருசி என்பது நாக்கோடு நின்று விடுவதில்லை, அன்பும் பாசமும் நல்ல மனசும் சேர்த்துக்குழைத்துச்செய்த உணவின் ருசி ஆன்மா வரை சென்று படிந்து விடும், ஆகவேதான் அது அமிர்தமுமாகிறது. சொந்த ஊரின் மேல் கொண்ட பாசம் என்பது வெறும் கட்டடங்களாலும் மனிதர்களாலும் மட்டும் அல்ல, அவ்வூரின் உணவின் மேல் கொண்ட பற்றும்தான். ஊர் என்பது உணவோடு பின்னிப்பிணைந்ததும்தானே? புளியோதரையுடன் பொரிகடலைத்துவையலைத்தொட்டுக்கொள்வது என்பது நெல்லைக்கேயுரிய நுண்தகவல். இக்கட்டுரைகள் முழுக்க உணவைப்பற்றி.. குறிப்பாக நெல்லையின் உணவுகளைப்பற்றி எத்தனையெத்தனை தகவல்கள். பசி நேரத்தில் இக்கட்டுரைகளை வாசிக்காதிருப்பது நலம். நாக்கு அப்படியே மிதக்கிறது, என்றாலும் டிங்கிரி டோல்மா தோசையை மனோஜுக்காகவாது நூலாசிரியர் சாப்பிட்டுப்பார்த்து விட்டு  பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கலாம் எனத்தோன்றியதைத் தவிர்க்க இயலவில்லை. 

உணவு, இசை மட்டுமல்லாது சுவாளங்களின் மீதும் கோட்டி கொண்டவர் நூலாசிரியர் என்பது, அவரை அறிந்தவர்கள் நன்கறிந்தது. குஞ்சுவின் சம்பந்தியான பறக்கை கோலப்பனின் பைரவப்ரியமும் அதற்குக்கொஞ்சமும் குறைந்ததல்ல. எந்த வகையில் சம்பந்தியானார் என்பதை நூலில் வாசித்துத்தெரிந்து கொள்ளுங்கள். அக்கட்டுரையை வாசிக்கும்போது எழுத்தாளர் ஜெயமோகனின் வீட்டில் வளர்ந்த “ஹீரோ” நினைவுக்கு வந்தான்.

ஹாஸ்யமும் சுயபகடியும் சுகாவின் எழுத்தின் சிறப்பம்சம். ஆங்காங்கே கண்ணிவெடிகளைப்போல் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் அவற்றின் மேல் நாம்தான் கவனமாகக் கடந்து செல்ல வேண்டும். அவரது கட்டுரைகளில் “ஜயண்ட் வீல்”க்கு எப்பொழுதுமே ஒரு தனி இடம் உண்டு. வாசிப்பவர்கள் அனைவருமே சிலாகித்துச் சிரித்து உருள்வார்கள். அந்தப்பட்டியலில் இனிமேல் “சுளுக்கு” கட்டுரையும் இடம் பெறும். “இவளே” கட்டுரை அடுத்த கண்ணிவெடி. என்னமா எழுதறார்!!!!! என வியக்கும்போதெல்லாம் சட்டென நினைவுக்கு வரும், “இது தமிழ்க்கடலிலிருந்து பிறந்த நதியல்லவா!!” என்பது. தாமிரபரணிக் கரையில் பயணித்து இந்நதி கொணர்ந்து சேர்த்த அனுபவ முத்துகள் ஏராளம்.

பல்வேறு ஆளுமைகளுடன் பழகி அந்த நினைவுகளை நாம் இது வரை கண்டிராத கோணத்தில் நம்முடன் பகிர்ந்திருக்கிறார் சுகா. கோவிட் காலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைகளில் என்றுமே எழுதித்தீராத அவரது நெல்லை நினைவுகளும் விதைக்கப்பட்டுள்ளன. அவை வாசகர் நெஞ்சில் நிச்சயம் அவரவர் ஊர் நினைவுகளாய் முளைத்தெழும். 

ஆசிரியர்: சுகா
பதிப்பகம்: சுவாசம்

LinkWithin

Related Posts with Thumbnails