மஹாராஷ்ட்ராவில் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமான சஹ்யாத்ரி மலைப்பிரதேசத்தில் இருக்கும் பவகிரி என்ற ஊரில் பீமரதி நதி உற்பத்தியாகி ஓடுகிறது. இங்குதான் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஆறாவதான “பீமாஷங்கர் ஜோதிர்லிங்க்” கோவில் அமைந்துள்ளது. பன்னிரண்டில் மஹாராஷ்ட்ராவில் மட்டுமே பீமாஷங்கர், நாசிக்கின் த்ரிம்பகேஷ்வர், ஒளரங்கபாதின் அருகேயிருக்கும் த்ரிஷ்ணேஷ்வர், என மூன்று கோவில்கள் உள்ளன.
பீமாஷங்கர் கோவில் பூனாவின் அருகே சுமார் 110 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவின் எப்பகுதியிலிருந்தும் விமானம், ரயில், பஸ் போன்ற எவ்வகையான வாகனத்திலும் பூனாவை வந்தடையலாம். பூனாவின் சிவாஜி நகர் பஸ் நிலையத்திலிருந்து பீமாஷங்கருக்கு நிறைய பஸ்கள் புறப்படுகின்றன. விரும்பினால் டாக்ஸியும் அமர்த்திக்கொள்ளலாம். சுமார் மூன்று மணி நேரத்தில் பீமாஷங்கரை சென்றடைந்து விடலாம். கோவில் அமைந்திருக்கும் மலைப்பகுதி வனவிலங்குகளின் சரணாலயமுமாக இருப்பதால் மாலை ஆறுமணிக்கு பூனாவிற்குத் திரும்பிச்செல்லும் கடைசி பஸ்ஸும் கிளம்பிவிடும். ஆகவே அதற்கேற்றபடி பயணத்திட்டத்தை அமைத்துக்கொள்வது உத்தமம். இரவில் பீமாஷங்கரில் தங்க வேண்டுமென்றால் கோவிலுக்கருகில் ஓரளவு வசதியான ஹோட்டல்கள் இருப்பது போல் தெரியவில்லை. விடிகாலையில் வரும் பக்தர்கள் குளித்து உடைமாற்றிச்செல்லுமளவிலேயே பீமாஷங்கர் பஸ் நிலையத்தினருகே ஹோட்டல் அறைகள் இருக்கின்றன.
குளித்துத்தயாராகி, கோவிலுக்குச்செல்லும் பாதையிலேயே அமைந்துள்ள ஹோட்டல்களில் மஹாராஷ்ட்ர உணவான வடாபாவ், மிசல் பாவ் என வெட்டி விழுங்கி விட்டு, பூஜைப்பொருட்கள் அடங்கிய கூடையையும் வாங்கிக்கொண்டு கோவிலை நோக்கிக்கீழிறங்கிச்செல்லும் படிக்கட்டில் வரிசையில் நின்று விடலாம். தரிசனம் கிடைப்பதற்கு, கூட்டத்தைப்பொறுத்து இரண்டு அல்லது மூன்று மணி நேரமாகலாம். ஆனால், ஜோதிர்லிங்கத்திற்கு நாமே நம் கையால் நிதானமாய் அபிஷேகம் செய்யவும் மலரிட்டு வணங்கவும் அனுமதிக்கிறார்கள். அவசரப்படுத்துவதோ இழுத்துக்கடாசுவதோ கிடையவே கிடையாது என்பது ஆறுதலளிக்கும் செய்தி. இக்கோவிலின் தலவரலாறை ஏற்கனவே எனது வலைப்பூவில் எழுதியிருக்கிறேன்.
//இலங்கைப்போரில் கொல்லப்பட்ட கும்பகர்ணனின் மகனான பீம், விஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமரால் தன் தந்தை கொல்லப்பட்டதை தாய் மூலம் அறிந்து, விஷ்ணுவைப் பழி வாங்கறதுக்காக பிரம்மாவை நோக்கித் தவம் செஞ்சார். பிரம்மா கொடுத்த வரங்களின் பலத்தால் மூவேழு லோகங்களையும் அடிமைப்படுத்தி, தனக்குன்னு மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஏற்படுத்திக்கிட்டு திரிபுராசுரன் என்ற இன்னொரு பெயருடன் அட்டகாசம் செய்ய ஆரம்பிச்சார். ஆணாலோ பெண்ணாலோ அழிக்கப்படக்கூடாதென வரம் வாங்கியிருந்த பீமாசுரனை சிவன் அர்த்த நாரீஸ்வரர் அவதாரமெடுத்துச் சண்டையிட்டு முப்புரம் எரித்து அத்துடன் பீமனையும் சாம்பலாக்கி அழிச்சார். அப்போ அவர் உடம்பில் ஏற்பட்ட வியர்வைதான் பீமரதி நதியா உருவெடுத்துது. அப்றம் அனைவரின் வேண்டுகோளுக்கிணங்கி சிவன் அங்கே ஜோதிர்லிங்கமா உருவெடுத்து கோயில் கொண்டார்//
சபாமண்டபத்தைக் கடந்து நாலைந்து படிகள் இறங்கினால் கருவறையில் வெள்ளிக்கவசமணிந்து வீற்றிருக்கிறார் பீமாஷங்கர். கருவறையினுள் பெரிய அளவில் கண்ணாடியை மாட்டி வைத்திருப்பதால் நெருங்கும்போதே கண்ணாடியில் மூலவரின் பிம்பத்தை தரிசிக்கலாம். மண்டபத்தைக் கடக்கும்போதே அபிஷேகத்திற்கான நீர் இருக்கும் பாட்டிலைத் திறந்து தயாராக வைத்துக்கொண்டு, மகள் கையில் நாலைந்து பூக்களைக் கொடுத்து வைத்தேன். மூலவரை நெருங்கியதும் நான் அபிஷேகம் செய்ய மகள் மலரிட்டாள். நெற்றி நிலம்பட விழுந்து வணங்கிவிட்டு வெளியே வந்து கருவறைக்கு எதிரில் கால் மடக்கி அமர்ந்திருக்கும் நந்தியம்பெருமானையும், தரையில் பதிக்கப்பட்டிருந்த கூர்மத்தையும் வணங்கி வெளியே வந்தோம். நேர் எதிரிலேயே சனீஸ்வரனின் சந்நிதி அமைந்திருக்கிறது. அவரது சன்னிதியின் எதிரே இரண்டு பெரிய தூண்களின் நடுவே கட்டப்படிருந்த ஒரு பிரம்மாண்டமான மணி கவனத்தை ஈர்த்தது.
மராட்டா சாம்ராஜ்யத்தின் ஏழாவது பேஷ்வாவான பாஜிராவின் தம்பியும் தளபதிகளில் ஒருவருமான சிம்மாஜி அப்பா என்பவர், மும்பையின் வசாய் கோட்டையில் போர்த்துக்கீசியர்களை வென்று அதன் அடையாளமாக ஐந்து பெரிய மணிகளை எடுத்து வந்தார். அவற்றில் ஒன்றை இக்கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கியிருக்கிறார். மணியின் மேல் சிலுவை, அன்னை மேரியின் புடைப்புச்சிற்பம் மற்றும் 1729 என்ற எண் போன்றவை பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காண முடிகிறது. அதனருகிலேயே மிகப்பிரம்மாண்டமான திரிசூலம் ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது. கோவிலின் போட்டோ பாயிண்ட் என்றும் இதைச்சொல்லலாம். வரும் மக்கள் அனைவரும் நின்று படமெடுத்துக்கொண்டு நகர்கின்றனர்.
கோவில் விடியற்காலை 4:30 முதல் இரவு 9 வரை திறந்திருக்கும். விடியற்காலையில் கக்கட் ஆரத்தி சமயத்தில் ஜோதிர்லிங்கத்தின் வெள்ளிக்கவசம் அகற்றப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் செய்தபின் மறுபடி கவசம் அணிவிக்கப்பட்டு விடும். அதன்பின் அந்த கவசத்திற்கே அத்தனை அபிஷேக ஆராதனைகளும் பூஜைகளும். ஆகவே ஜோதிர்லிங்கத்தை நேரடியாகத் தரிசிக்க விரும்பினால் விடிகாலை பூஜையில் கலந்து கொள்ளலாம்.
சற்றே வலப்புறம் நகர்ந்து வந்தால் பிரசாத ஸ்டாலும் அதனருகேயே இரட்டை நந்திகள் இருக்கும் ஒரு மேடையும் இருக்கிறது. முகலாயர் படையெடுப்பில் சேதமான நந்திகளாகவும் இருக்கலாமோ என்னவோ எனத்தோன்றியது!! நகாரா பாணியில் கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலின் சபாமண்டபத்தையும் கோபுரத்தையும் பேஷ்வாக்களின் அவையில் அமைச்சராக இருந்த நானா ஃபட்ணவிஸ் என்பவர் கட்டியெழுப்பியிருக்கிறார். வலம் வந்து வெளியேறும் வழியில் மோட்சதீர்த்தம் என்னும் குளம் இருக்கிறது. இத்தலத்தில் கடுந்தவம் புரிந்த கௌசிக மஹாமுனி இக்குளத்தில் நீராடியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போதோ குளம் உபயோகிக்கும் நிலையில் இல்லாமல் தாழிடப்பட்டுள்ளது.
கோவிலை விட்டு வெளியே வந்ததும் மார்க்கெட்டிலிருந்து இடதுபுறம் திரும்பி கொஞ்ச தூரம் நடந்ததும் வலப்புறமாக ஒரு பாதை காட்டுக்குள் செல்கிறது. அதிலேயே இரண்டு கிலோமீட்டர் நடந்தால் “குப்த பீமாஷங்கர்” எனும் இடம் வருகிறது. கொஞ்சம் கரடுமுரடான பாதை என்பதால் நாங்கள் பாதியிலேயே திரும்பி விட்டோம். மலையேற்றத்தை விரும்புபவர்களுக்கு ஏற்ற பாதை அது. அருவிக்கரையும் அதன் கரையில் சிவலிங்கமுமாக அட்டகாசமான இடம். மழைக்காலத்தில் அருவி விழும்போது அதன் கீழே அமர்ந்திருக்கும் சிவலிங்கம் அபிஷேகம் செய்யப்படுவது போல் தோற்றமளிக்குமாம். அருவி விழும்போது சிவலிங்கம் மறைக்கப்படுவதாலும், காட்டுக்குள் ரகசியமான இடத்தில் இருப்பதாலும் இது குப்த பீமாஷங்கர் என்று அழைக்கப்படுகிறது. மார்க்கெட்டிலிருந்து வலப்புறம் திரும்பி நடந்தால் சிறிது தூரத்திலேயே பீமா நதியின் பிறப்பிடமான கிணறு இருக்கிறது. இந்நதி சந்திரபாகா நதியுடன் இணைந்து பின்னர் கிருஷ்ணாவுடன் கலப்பதாகச் சொல்லப்படுகிறது.
கோவிலை விட்டுப் படிகளேறி மேலே வந்ததும் மும்பை பாயிண்ட் மற்றும் காட்டுக்குள்ளிருக்கும் ஆஞ்சநேயரைக்கண்டு வந்தோம். மும்பை பாயிண்டிலிருந்து பார்த்தால் சஹ்யாத்ரி மலைப்பிராந்தியத்தின் கொள்ளையழகை கண்களால் அள்ளியள்ளி ருசிக்கலாம். பனி மூட்டம் மட்டும் இல்லையெனில் இங்கிருந்து பார்க்கும்போது, மும்பை, கொங்கண் பகுதிகள் நன்றாகத்தெரியும் என அங்கிருந்த மக்கள் கூறினர்.
ஆஞ்சநேயர் கோவில் அமைந்திருக்கும் காட்டுப்பகுதி, பீமாஷங்கர் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ராட்சத அணில்கள், சிறுத்தை, மான் வகைகள், மற்றும் பறவை வகைகள் போன்றவற்றிற்குப் புகலிடமாக விளங்குகிறது. பல்வேறு வகையான மரம் செடி கொடிகளும் காணப்படுகின்றன. கையில் எடுத்துச்செல்லும் பொருட்களின் மேல் சற்றுக் கவனம் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் எங்கிருந்து அனுமார் வந்து பிடுங்கிக்கொள்வார் எனத்தெரியாது. மகள் கையில் வைத்திருந்த பால்பேடா பாக்கெட்டை தட்டிப்பறித்துக்கொண்டு விட்டார். போகட்டும்.. அவருக்கும்தான் யார் செய்து கொடுக்கப்போகிறார்கள்?
ஆஞ்சநேயர் கோவிலின் குளம் பாழ்பட்டுக்கிடப்பதால் சீரமைத்துக்கொண்டிருந்தார்கள். அமைதியான அந்தக் காட்டுப்பகுதியில் ஆங்காங்கே குரங்குகளின் அடிபிடி சத்தத்துடன் மோட்டார் ஓடும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. அனுமார் கோவிலின் நிலை சற்று ஏமாற்றத்தைக்கொடுத்தாலும் காலார நல்ல சுத்தமான காற்றைச் சுவாசித்தபடி நிறைய நடந்தது திருப்தியைக்கொடுத்தது. கோவிலுக்குச்செல்வதையும் ஒரு பதட்டமான வேலையாக ஆக்குவதால் என்ன பயன்? போனோம் கும்பிட்டோம் வந்தோம் என்றில்லாமல் கோவில்களின் அருகிலிருக்கும் இம்மாதிரி இயற்கை கொழிக்கும் இடங்களையும் கண்டு வருதல் ஆத்மதிருப்தியளிக்கும்.
No comments:
Post a Comment