“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொல்வார்கள். சில நேரங்களில் ஊர் முதலில் அமையும், அதன்பின் அவ்வூருக்கு ஒரு வழிபாட்டுத்தலம் வேண்டியதன் தேவையை உணர்ந்து அமைத்துக்கொள்வதோ அல்லது இறைசக்தி தானாகவே அந்த ஊரில் வந்தமைவதோ நடக்கும். அப்படியல்லாமல் சில நேரங்களில் சுயம்புவாக எழுந்தருளும் இறைவன் பலகாலமாகக் கண்டுகொள்ளப்படாமல் இருந்து, தக்க சமயத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்போது சாரிசாரியாக வரத்தொடங்கும் பக்தர்களால் படிப்படியாக அக்கோவிலைச்சுற்றி ஊர் அமைந்து விடும். அப்படியொரு கோவில்தான் தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் “சங்கரன்கோவில்”. கோவிலின் பெயரே ஊரின் பெயராகவும் அமையப்பெற்ற சில கோவில்களில் இதுவும் ஒன்று.
அரியா? அரனா? யார் பெரியவர் என்று சங்கன், பதுமன் என்ற நாக அரசர்களிடையே ஏற்பட்ட பூசலுக்கு விடை காணும் பொருட்டு பார்வதி புன்னைவனத்தில் தவம் செய்ய இறைவன் ஒரு பாதி சிவனாகவும் மறுபாதி திருமாலாகவும் சங்கரநாராயணராகக் காட்சியளித்து இருவரும் ஒருவரே என உலகத்தோர்க்குத் தெளிவித்த தலம் இது. பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த இந்த இடம் கோவில் அமைவதற்கு முன் புன்னைவனமாகவே இருந்துள்ளது. இந்த புன்னைவனத்தைக் காவல் காப்பதற்காக பாண்டிய மன்னர் உக்கிரபாண்டியனால் அனுப்பப்பட்ட மணிக்ரீவன் என்ற காவலனின் வாயிலாக சிவபெருமான் தன்னைச் சங்கரலிங்கமாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளார். இத்தகு சிறப்பு மிக்க இத்தலத்தில் ஒரு சிவாலயம் கட்ட வேண்டுமென்று உக்கிரபாண்டியர் விரும்பி ஆலயம் எழுப்பிய வரலாறே “புன்னைவனக்காவலன்” எனும் நாவலாக மலர்ந்துள்ளது.
அக்காலத்தில் உண்மையில் இருந்த மாந்தர்களோடு கற்பனைக் கதாபாத்திரங்களையும் உருவாக்கி உலவ விட்டிருக்கிறார் நூலாசிரியர் அகிலாண்ட பாரதி. சரளமான மொழியில் தெளிவான நடையில் நீரோட்டம் போல் விறுவிறுவெனச்செல்கிறது நாவல். அக்கால மனிதர்களின் வாழ்வியல், அந்தப்பிரதேசத்தில் வளர்ந்த தாவரங்கள், அக்கால குடவோலை முறை தெரிவு, திருமணச்சடங்குகள், புன்னைமரத்தின் சிறப்புகள், அக்கால நீர்ப்பாசன முறை, ஆலயம் எழுப்பப்பட்ட நடைமுறைகள் என எல்லாவற்றையும் பற்றி நுணுக்கமாகவும் விவரமாகவும் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொன்றையும் வாசிக்கும்போது அதன் பின்னிருக்கும் ஆசிரியரின் உழைப்பு புலனாகிறது.
கோவில் அமைந்திருக்கும் பகுதியிலும் சுற்றுவட்டாரத்திலும் அமைந்துள்ள ஊர்களின் பெயர்களையும் அவற்றின் பெயர்க்காரணங்களையும் அறியத்தந்திருப்பது சுவாரஸ்யம். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அதில் வரும் வரலாற்றுச்சம்பவங்களுக்கான ஆதார செய்திகளையும் இணைத்திருப்பது பாராட்டத்தக்கது. மணிக்ரீவனுக்கான கோவிலும் அவனது சிலையும் எங்கிருக்கிறது என்ற தகவல் பிரமிக்க வைக்கிறது. தேர்ந்த கதைசொல்லியான டாக்டர் அகிலாண்டபாரதியின் முதல் வரலாற்று நாவல் இது. ஏராளமான வரலாற்றுச்சம்பவங்களும் தகவல்களும் நிரம்பிய இந்நாவலை வாசித்து முடிக்கும்போதுதான் உண்மையில் ‘புன்னைவனக்காவலன்’ யார் என்பதே தெரியவருகிறது. தட்டையாக வரலாற்றை மட்டுமே சொல்லிச்செல்லாமல் கதை மாந்தர்களின் உள்ளக்கிடக்கைகளையும் உணர்வுப்போராட்டங்களையும் சேர்த்து சரிகையும் நூலுமாக நெய்திருப்பது ஒரு இதமான வாசிப்பனுபவத்தைத்தருகிறது.
No comments:
Post a Comment