Thursday, 20 September 2018

புட்டுப்புட்டு வைத்தாயிற்று..

பிட்டுக்கு மண் சுமந்து அந்த ஈசன் பிரம்படியே பட்டிருக்கிறானென்றால் இதன் சுவைக்கு அளவுகோலும் வேண்டுமோ?!. கேரளாவைத் தாயகமாகக்கொண்ட இவ்வுணவு கேரளாவின் தங்கையான கன்யாகுமரி மாவட்டம் உட்பட தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், தூரத்துச் சொந்தங்களான ஸ்ரீலங்கா மற்றும் கர்நாடகாவிலும் அதிகம் சமைக்கப்படுகிறது. முன்பெல்லாம் கன்யாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான மக்களின் காலையுணவாக புட்டு சாப்பிடப்பட்டது. மொத்தமாக மாவை இடித்து பக்குவப்படுத்தி வைத்துக்கொண்டால் நினைத்த போதுகளிலெல்லாம் செய்து கொள்ளலாம். பச்சைப்பயிறு என்றழைக்கப்படும் சிறுபயிறை மட்டும் அவ்வப்போது ஊறவைத்து அவித்துத் தாளித்துக்கொண்டால் போதுமானது. தவிரவும் தென்னந்தோப்புகள் மலிந்த இவ்விடங்களில் தேங்காய்க்குப் பஞ்சமா என்ன?
எங்களூர் வழக்கில் புட்டுத்தோண்டி என்றும், உலக வழக்கில் புட்டுக்குடம் என்றும் அழைக்கப்படும், புட்டு செய்யப்பயன்படும் பாத்திரம் முன்பெல்லாம் பித்தளை அல்லது தாமிரத்தில் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்தது. சின்னப்பானை போன்ற கீழ்ப்பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதன் வாய்ப்பகுதியில் புட்டுக்குழல் வைக்கப்பட்டு ஆவியில் புட்டு வேகும். குழல் சரியானபடி பொருந்துவதற்காக அப்பகுதியில் துணி சுற்றி வைக்கும் வழக்கமும் இருந்தது. இப்பொழுது எவர்சில்வரிலும் கிடைக்க ஆரம்பித்திருக்கும் புட்டுக்குடம் மற்றும் குழலின் வடிவமைப்பும் நவீனமடைந்திருக்கிறது. டிஜிட்டல் உலகிற்கேற்றவாறு மேம்பட வேண்டும் இல்லையோ?! தண்ணீர் கொதிக்கும் கீழ்ப்பாத்திரமும் அதன் வாய்ப்பகுதியில் வைக்கப்படும் குழல் போன்ற பாத்திரமுமாக இரண்டு பகுதிகளைக்கொண்ட புட்டுக்குடத்தைத் தவிர இப்பொழுதெல்லாம் புட்டுக்குழல் மட்டுமேயும் கிடைக்கிறது. இதை குக்கரின் வெயிட் வால்வில் பொருத்தி உபயோகிக்கலாம். இதைத்தவிரவும் சிரட்டை என்றழைக்கப்படும் கொட்டாங்கச்சி வடிவிலான கிண்ணமும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் சிறிய அளவில் புட்டு அவித்துக்கொள்ளலாம்.
(படக்கொடை- இணையம்)
பக்கவாத்தியங்களின்றி மெயின் கச்சேரி சோபிக்காது. அவ்வண்ணமே புட்டுக்கும் சில பக்கவுணவுகள் தேவை. புட்டும் பயறும் என்பது எங்களூர் வழக்கு. இங்கே பயறு என்பது சிறுபயிறைக்குறிக்கும். பொதுவாகவே கேரள மற்றும் கன்யாகுமரி மாவட்ட உணவுகளில் சிறுபயிறு மற்றும் பயத்தபருப்பு அதிகமும் உபயோகப்படுவது கண்கூடு. சிறுபயிறை நன்கு ஊற வைத்து உப்பிட்டு வேக வைத்து நீரை வடித்து வைக்கவும். இரண்டு மூன்று வற்றல் மிளகாய்களைப் பிய்த்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்யைச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மற்றும் வற்றல் மிளகாய்களைப் போட்டு மிளகாய் வறுபட்டதும் அவித்த பயறைப்போட்டுக் கிளறவும். உப்பு சரி பார்த்துக்கொள்ளவும். விரும்பினால் ஒரு தேக்கரண்டி தேங்காய்த்துருவலையும் இட்டுக் கிளறி இறக்கவும். பயறு ரெடி. மலையாளப்பப்படம் கிடைத்தால் அதையும் பொரித்து வைத்துக்கொள்ளவும். சாதாரணப்பப்படம் கிடைத்தால் அதுவும் நன்றே.

புட்டு சாதாரண அல்லது சிவப்புப் பச்சையரிசியில்தான் தயார் செய்யப்படுகிறது. கல் மண் உமி நீக்கி சுத்தம் செய்த பச்சையரிசியை தண்ணீரிலிட்டு நன்றாகக் கழுவி அரிவட்டி என்றழைக்கப்படும் அரிபெட்டியிலிட்டு நீரை வடிய விடவும். ஊற விட வேண்டாம். முன்பெல்லாம் பனை நார் அல்லது ஓலையால் செய்யப்பட்ட கெட்டியான அரிபெட்டிகள் கிடைக்கும். இப்போது அது அரிதாகி எவர்சில்வரிலான சல்லடைப்பாத்திரங்களும் ப்ளாஸ்டிக்கிலான சிறுகண்ணுடைய கூடைகளும் கிடைக்கின்றன. அவற்றையும் உபயோகித்துக்கொள்ளலாம். தண்ணீர் நன்கு வடிந்ததும் ஒரு துணியில் பரப்பி நன்கு காய்ந்ததும் கொஞ்சங்கொஞ்சமாக மிக்ஸியிலிட்டு கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் அளவு அரிசியைப் பொடித்ததும் பெரிய கண் கொண்ட சல்லடையிலிட்டு சலித்துக்கொள்ளவும். கிடைக்கும் மாவு ரவை பதத்தில் இருப்பது நலம். எல்லா அரிசியையும் பொடித்து மாவாக்கியதும், பெரிய வாணலியிலிட்டு மிதமான தீயில் வறுக்கவும். மாவு பொலபொலவென உதிரியாகி மணக்க ஆரம்பிக்கும். அதிலிருந்து சிறு சிட்டிகையளவு எடுத்து கோலம் போடுவது போல் இழையாக இடவும். சுலபமாக இட முடிந்தால் அதுவே சரியான பக்குவம். இப்போது மாவை அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். இவ்வளவு மெனக்கெட நேரமில்லையெனில் ரெடிமேடாகக் கிடைக்கும் புட்டு மாவை வாங்கிக்கொள்ளலாம். இப்போதெல்லாம் ராகி, கேழ்வரகு, கப்பை, போன்றவற்றிலும் புட்டு மாவுகள் கிடைக்கின்றன. தவிரவும் சேமியா, கோதுமை மாவு, கோதுமை ரவை, பாம்பே ரவை போன்றவற்றிலும் புட்டு செய்யலாம். எந்த மாவாயினும் மணம் வரும் வரை வறுத்தே பயன்படுத்த வேண்டும்.

ஒன்றரைக்கப் புட்டு மாவை எடுத்துக்கொண்டு அதில் சிட்டிகை உப்பிட்டு நன்கு விரவிக்கொள்ளவும். பின் கொஞ்சங்கொஞ்சமாக தண்ணீரைத் தெளித்து பிசிறிக்கொண்டே இருக்க வேண்டும். தெளித்த தண்ணீர் உறிஞ்சப்பட்டு மாவு மறுபடியும் வறளும். இச்சமயம் மறுபடியும் தண்ணீர் தெளித்துப்பிசிற வேண்டும். மாவில் கட்டிகள் தென்பட்டால் விரல்களாலேயே உதிர்த்துக்கொள்ளவும். மாவைக் கைகளில் எடுத்து இறுக்கிப் பிடித்தால் கொழுக்கட்டை போல் பிடிபடவும், விட்டால் உதிரவும் வேண்டும். இப்பக்குவம் வரும் வரை பிசிறவும். தண்ணீர் அதிகமானது போல் தோன்றினால் லேசாக மாவைத் தூவிச் சேர்த்துப் பிசிறவும். ரெடிமேட் மாவுகளானால் ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டால் தானாகவே உலர்ந்து விடுகிறது. தேங்காயைத் துண்டுகளின்றி பூவாகத் துருவி வைத்துக்கொள்ளுங்கள். 

இப்போது, புட்டுக்குழலினுள் அதனுடன் கொடுக்கப்பட்டிருக்கும் சிறிய சல்லடைத்தட்டையிட்டு அதன் மேல் ஒரு ஸ்பூன் தேங்காய்த் துருவலை இட்டு அதன் மேல் புட்டு மாவை முக்கால் கப் அளவில் இடவும். பின் மறுபடியும் தேங்காய்த்துருவலையிடவும். இப்படியே குழல் நிரம்பும் வரை மாவையும் தேங்காயையும் அடுக்குகளாக இட்டு மேலாக துருவலையிட்டுப் பொதிந்து குழலை மூடியால் மூடி, தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்கும் புட்டுக்குடம் அல்லது குக்கரின் வால்வில் பொருத்தவும். புட்டுக்குழலின் மூடியிலிருக்கும் துளைகள் வழியே ஆவி வெளியாக ஆரம்பித்து, புட்டு மணமும் வந்தால் புட்டு வெந்து விட்டது என்றறிக. பின் அதை மெல்ல இறக்கி, காத்துக்கொண்டிருக்கும் தட்டு அல்லது வாழையிலையில் பக்கவாட்டில் சரித்து, கொடுக்கப்பட்டிருக்கும் கம்பியைக்கொண்டு கீழ்ப்பகுதியிலிருக்கும் துளையின் வழியே சல்லடைத்தட்டைத் தள்ள வேண்டும். புட்டு மெதுவாக பிதுங்கி வெளியே வரும். குழலை நேரே நிறுத்தி ராக்கெட் போல் புட்டை நிறுத்துவது உங்கள் சாமர்த்தியம்.
 நவீன புட்டுக்குழல்

ஒரு தட்டில் புட்டு, தாளித்த பயறு, பப்படம், பழம் மற்றும் சீனி அல்லது வெல்லத்தை  சீர்வரிசைத் தட்டு போல் அழகுற அடுக்கிப் பரிமாறவும். புட்டை மேலாக அழுத்தி உடைத்து, பப்படத்தை நொறுக்கிச் சேர்த்து, மேலாக பயிறையும் சீனியையும் தூவி எல்லாவற்றையும் விரவிக்கொண்டு, பழத்தைக் கொஞ்சங்கொஞ்சமாக இக்கலவையுடன் பிசைந்து வாயிலிட்டு.. ஆஹா!!!.. ஆஹாஹா!! எனக் கண் மூடி சொக்குவது எம் மக்களின் பண்டைய பழக்கம். ஆனால் இப்பொழுதெல்லாம் கடலைக்கறி என்றொரு வஸ்து வந்து மடத்தைப் பிடுங்கப்பார்க்கிறது. "புட்டும் பழமும் காப்பியும் போச்சு" என்றுதான் எம் மண்ணின் தாத்தன் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைவாள் தன்னுடைய நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியத்தில் "கோடேறிக் குடிமுடித்த படலத்தில் 497வது வரியில் சொல்லியிருக்கிறாரேயன்றி கடலையைத் தொட(வில்)லை. ஆனால், விதவிதமான ருசிகளைக் கேட்கும் நாக்கு, கடலையோடு நின்று விடாமல் தேங்காய்த்துருவலின் இடத்தில் வேறு கறி வகைகளை இருத்தி நிரப்பி புட்டவித்து, ருசித்து மகிழ்கிறது. கறி வகைகளோடு உண்ண ஆப்பம், இடியாப்பம் போன்றவை இருப்பதால் யாம் புட்டை அதன் இயல்பான ருசியோடு உண்பேம்.

சாரல் துளிகள்

எல்லாவற்றையும் பின்தங்கவிட்டு முன்னேறிப் பறந்து இறங்கும்போதுதான் இறங்கியது வெற்றுக்கூடெனப்புரிபடுகிறது. மனமா?.. அது எங்கே லயித்து விழுந்து கிடக்கிறதோ.. யாருக்குத்தெரியும்!.

சட்டெனப் பறக்க நினைத்தெம்பிப் பின் பட்டெனத் திரும்பியமரும் பறவையின் இறகுகளில் ஒளிர்ந்தணைகிறது அது பறக்க நினைத்த வானம்.

சிறுமழையில் சூரியன் கரைந்த அப்புல்வெளியெங்கும் முளைத்திருக்கின்றன ஓராயிரம் சூரியன்கள்.

சொட்டித் தீராத வெயில், பொழிந்து தீராத நிலவு
சிறுகண் திறக்கும் மலர்களொடு என்றும் அலுக்காத அப்புன்னகையும்.

நடைபாதையில் தூங்கும் குழந்தையைப் போர்த்தி பாதுகாப்பு கொடுத்திருக்கிறது L.I.C விளம்பர சுவரொட்டி, ப்ரீமியம் எதுவும் கட்டாமலே.

தேடித்தேடி நம்மைக் கண்டுகொள்ளும் இறுதிக்கணத்தில் மறுபடியும் தொலைந்து போகிறோம்.

பேராசை அரக்கனின் பசி, குடும்பங்களின் மகிழ்வையும் நிம்மதியையும் காவு கொண்டபின்னும் அடங்குவதில்லை. எத்தனைதான் இட்டு நிரப்பினாலும் இன்னும் இன்னுமென கபளீகரம் செய்து செல்லும்.

ஒரு வண்ணத்துப்பூச்சியைப்போல் காற்றில் சுழன்று செல்லும் பூஞ்சருகைத் துரத்துகிறதொரு வண்ணத்துப்பூச்சி. யாருமற்ற அவ்வனாந்திரமெங்கும் நிறைகிறது அத்தனை வண்ணங்களாலும்.

சொற்கள் இறைபடும் தளத்தைச் சற்றே கவனத்துடன் கடப்போம். ஏனெனில் நம்மைக் காயப்படுத்தும் சொல்லொன்று நம்மால் வீசப்பட்டதாகவும் இருக்கக்கூடும்.

அமிலமும் வெந்நீருமாய் ஊற்றி அத்தனை அக்கறையாய்க் கவனித்துக்கொண்ட பின்னும், ஏனோ துளிர்க்கவில்லை அம்மரம்.

Wednesday, 15 August 2018

72-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

இரவினில் சுதந்திரம் வாங்கி விட்டோம் அதனால்தான் இன்னும் விடியவில்லை' என்று இன்னும் எத்தனை நாட்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம். ஒவ்வொருவரும் வாய்ப்பேச்சை விட்டுச் செயலில் இறங்கினால் இந்தியா நிச்சயம் இப்போதிருப்பதை விட இன்னும் நல்ல நிலைக்கு முன்னேறும். லஞ்சம், ஊழல், பெண்சிசுக்கொலை போன்ற புரையோடிப்போயிருக்கும் சமூகச் சீர்கேடுகளால் நோயுற்றிருக்கும் பாரதமாதாவை, தனிமனித மனமாற்றம் என்னும் தடுப்பூசியால்தான் குணப்படுத்த முடியும்.

சில வருடங்களுக்கு முன் எழுதிய வரிகள் இவை. வருடங்கள் கடந்திருக்கின்றனவே தவிர நிலையில் சிறிதாவது மாற்றம் இருக்கிறதா எனக்கேட்டால் இல்லையென்றே பதிலளிக்க வேண்டியிருக்கும்.  லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் இனிமேல் தண்டனையுண்டு என்ற அறிவிப்பு சற்றே ஆறுதலளித்தாலும், சிறுமிகளென்றும் பாராமல் ஆங்காங்கே அவர்கள் மேல் நடத்தப்படும் பாலியல் வன்முறை கவலையளிக்கிறது. இனிமேல் வரும் வருடங்களிலாவது இதற்கெல்லாம் தீர்வு கிடைக்குமென்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

Monday, 30 July 2018

சாரல் துளிகள்

குற்றங்கடியும் தாய் போல் தண்மையைப் பொழியும் இவ்வெண்ணிலவு, எத்தனையோ நெஞ்சங்களைத் தன் நெஞ்சில் சாய்த்துத் தேற்றுகிறது.

விரிசல் விட்டிருக்கும் கூரையைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாது வீட்டைச்சுமந்து கொண்டலைகிறது நத்தை.

மழை தெளித்த முற்றத்தின் மீது சிறகுதிர்த்துக் கோலமிட்ட ஈசல்களுக்கு, அதை ரசிக்கத்தான் பொழுதில்லை.

மழையில் நனைவதும் வெயிலில் காய்வதுமான இவ்வாழ்விற்கு இளஞ்சாரல் நேரத்து வானவிற்கள்தான் அவ்வப்போது வண்ணமூட்டுகின்றன.

உயிர் ஊசலாட அந்தரத்தில் வித்தை புரிந்து திரும்பிய கழைக்கூத்தாடி, உயிர் வளர்க்கவென ஒவ்வொருவரிடமும் கையேந்தியபின் வெறுங்கையுடன் நகர்ந்து கொண்டிருந்தான்.

கடும் போக்குவரத்து நெரிசலில் அங்குலம் அங்குலமாக ஊர்ந்து செல்லும் பைக்கின் பெட்ரோல் டேங்க்கின் மேல் அமர்ந்தவாறு, மழையில் நனைந்தபடி பயணிக்கும் அக்குழந்தைக்கு எல்லாமே குதூகலமாக இருக்கிறது.

சிற்றூர்களிலிருந்து வந்து வாழ்வைத்தொடங்கும் எளிய மனிதர்களின் எளிய ஆசைகளை, உண்டு செரித்து வளர்கிறது பெருநகரம்.

ஆக்ரோஷத்துடனிருக்கும் மழையுடனான வாக்குவாதத்தின் நடுவே, கோபத்துடன் கதவை அறைந்து சாத்திவிட்டுச் செல்கிறது காற்று.

தாலாட்டுகிறது காற்று, கடற்தொட்டிலில் தூங்குகின்றன படகுகள்.

உயிர் வரை நனைந்து குளிர்ந்திருந்த செங்கற்சூளையின் மேல் முளைத்திருக்கும் பூர்வீகக்காடு காத்திருக்கிறது விட்டுச்சென்ற பறவைகளுக்காய்.

Monday, 23 July 2018

சாரல் துளிகள்

ஆயிரங்கால் கொண்ட பரி போல் தாவிச்சென்று கொண்டிருக்கும் இம்மழையை வாழ்த்துமுகமாய் ஓரிரு பூவிதழ்களை உதிர்க்கிறது குல்மொஹர்.

சொந்த ஊரில் பெய்யும் ஒவ்வொரு துளியும், புலம்பெயர்ந்தவர் மனதில் பெருமழையாய்ப் பொழிந்து பசும்நினைவுகளை மலர்த்துகிறது.

ஒரு கறாரான ஆசிரியரைப்போல், தினமும் குறித்த நேரத்தில் வந்து விடும் இம்மழையை என்ன செய்ய!!!!

வாகனங்களில் கரம் சிரம் புறம் நீட்டும் சிறார் போல் பால்கனி அழிக்குள்ளிருந்து வெளியே தலை நீட்டி மழையனுபவிக்கின்றன தாவரங்கள்.

ஒவ்வொரு சொல்லுக்கும் 
உறுமியும் பளிச்செனப் புன்னகைத்தும் 
மறுமொழியளித்துக் கொண்டிருந்த வானம் 
இருந்தாற்போல் அழத்துவங்கியது. 
இத்தனைக்கும் நான் 
மனதோடுதான் பேசிக்கொண்டிருந்தேன்.

களைத்துச் சோர்ந்து இற்று வீழும் இறுதிக்கணத்திலும் ஒரு பெருங்கனவு துணைக்கு வருவது எப்பேர்ப்பட்ட வரம்.

கடந்து வந்த பாதையெங்கும் பதிந்த நினைவுத்தடங்களில் தளும்பி நிற்கும் ப்ரியம் பொசிந்து ஆங்கோர் கடலாய் ஆர்ப்பரிப்பதை அறிவாயா நிலவே?.

கண் சிமிட்டும் நட்சத்திரங்களின் சமிக்ஞையைப் புரிந்து கொள்ளாமல் ஊரெங்கும் தேடிக் கொண்டிருக்கிறது நிலா. சூரியனை விழுங்கி வயிற்றில் ஔித்த மின்மினியோ ஏதுமறியாததுபோல் செடிக்குச்செடி தாவுகிறது. இருவரையும் நோக்கி குறும்புடன் சுடர்கிறான் சூரியன்.

விருப்புடனோ, அன்றியோ.. காம்பை விட்டுக் கழலும் பூ எவ்வுணர்வு கொண்டிருக்கும்?! சோகமா? விடுதலையா? அல்லால், கடந்த ஒன்றா?

உருகி வழியும் சூரியனைக் குடித்துப் பசியாறும் இலைகளின் கீழ் வெயிலாறிய குருவி கடைசி நொடி வரை கவனிக்கவேயில்லை, குறி வைத்திருந்த கவண்வில்லை.

Thursday, 19 July 2018

தீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.


எட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உண்டு.. எட்டாவது கண்டம் எது? எனக்குழம்பாதீர்கள். கழுத்துக்கும் கண்டம் எனப்பெயருண்டே :-). செய்து சாப்பிட்ட பின் ருசி நாக்கோடு நின்று விடாமல் கழுத்து வரைக்கும் பரவும் என உறுதியிட்டுக்கூறுகிறேன் :-)

தீயலின் செய்முறையை அறிய சுட்டியைச் சொடுக்குங்கள்.
"ஆடிச்சிறப்பிதழாக மலர்ந்திருக்கும் குமுதம் சிநேகிதியின் ஆகஸ்ட் மாத இதழில் நான் எழுதிய "நாஞ்சில் நாட்டு தீயல்" வெளியாகியிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வெளியிட்ட சிநேகிதிக்கும், திருவட்டாறு சிந்துகுமார் அண்ணனுக்கும் மிக்க நன்றி.

தீயல் எட்டுத்திக்கும் மணக்கட்டும்... ட்டும்.. டும்.. ம்..

Wednesday, 4 July 2018

பிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.

இந்த வருடம் பூத்த முழு மலர்
இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும் அதுவும் முன்னிரவில் மலர ஆரம்பித்து இரவில் நன்கு மலர்ந்து விடியுமுன் வாடிவிடும் ஓர் அரியவகை மலர்தான் பிரம்மகமல். மனதை மயக்கும் நறுமணம் கொண்ட இம்மலர் நிஷாகந்தி எனவும் அழைக்கப்படுகிறது. Epiphyllum oxypetalum என்ற தாவரவியல் பெயராலும், Dutchman's pipe cactus, queen of the night போன்ற பிற பெயர்களாலும் இது வழங்கப்படுகிறது. தெற்கு மெக்ஸிகோ மற்றும் தென்னமெரிக்காவைத் தாயகமாகக்கொண்ட இத்தாவரம் இப்பொழுது உலகெங்கும் விரும்பி வளர்க்கப்படுகிறது. 
சிறு மொட்டு
கேக்டஸ் அதாவது கள்ளி வகையைச் சேர்ந்த இச்செடியை வளர்க்க அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. வாரமிரு முறை நீர் ஊற்றினால் போதுமானது. தாய்த்தாவரத்திலிருந்து ஒரு முதிர்ந்த இலையைத் துண்டித்து மண்ணில் நட்டு விட்டால் போதுமானது. ஒரு இலையையே அதன் நீளத்தைப்பொறுத்து இன்னும் இரண்டு மூன்று துண்டுகளாக ஒடித்து அவற்றை நட்டு வைத்தால் அவையும் தனிச்செடிகளாக வளர்ந்து விடும். நட்டு வைத்த இலையிலிருந்தே பக்க இலைகள் தோன்றி வளர ஆரம்பிக்கும். நன்கு வேர் பிடித்து வளர ஆரம்பித்த பின் செடியை ஒட்டினாற்போல் குச்சி போன்று ஒல்லியான நீளமான முதன்மைத்தண்டுகள் தோன்றி வளர ஆரம்பிக்கும். முதன்மைத்தண்டின் நுனி, தட்டையான இலையைக் கொண்டிருக்கும். 
சற்றே வளர்ந்த மொட்டு
பிரம்மகமல் செடி இரண்டு மீட்டர் உயரத்திற்குக் குறையாத முதன்மைத்தண்டையும், 30 செ.மீ அளவு வரை நீளமாக வளரக்கூடிய பக்க இலைகளையும் கொண்டது. இதன் இலைகள் அலைபோல் நெளிநெளியான புறக்கோட்டைக் கொண்டவை. இக்கோடுகளிலிருந்துதான் மொட்டுகள் தோன்றும். புறக்கோடுகளிலிருந்து தொப்புள்கொடி போல் நீண்டு வளர்ந்த பூக்காம்பின் நுனியில் பூத்திருக்கும் தாமரை வடிவிலான மலர், விஷ்ணுவின் உந்தியிலிருந்து தோன்றிய பிரம்மா தாமரைமலரில் அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தையொத்திருப்பதால் இப்பூ பிரம்மகமல் எனப்பெயர் பெற்றது. 30 செ.மீ நீளமுள்ள பூக்காம்பின் நுனியில் பூத்திருக்கும் பிரம்மகமல் பூக்கள் 17 செ.மீ அகலம் கொண்டவை. மழைக்காலமான ஜூன் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில்தான் இது பூக்கும்.
பூக்கும் நாள் நெருங்குகிறது
மஹாராஷ்ட்ராவைப் பொறுத்தவரை இது ஓர் அபூர்வ மலர் மட்டுமல்ல, தெய்வீக மலரும் கூட. தன் வீட்டில் வளர்க்க விரும்பி யாரேனும் இலையைக் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். அப்படிக்கொடுத்தால் அதிர்ஷ்டம் தன்னை விட்டுப் போய் விடுமென்று ஓர் நம்பிக்கை இங்கே நிலவுகிறது. ஆகவே பிறர் அறியா வண்ணம் யாருடைய தோட்டத்திலிருந்தாவது கொண்டு வந்துதான் வளர்க்க வேண்டும் என்பார்கள். ஒரு வீட்டில் பிரம்மகமல் பூப்பதென்பது அதிர்ஷ்டத்தைக்கொண்டு வரும் ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. இது பூக்கும்போது அருகிலிருப்பது அதிர்ஷ்டம் என்றும் அவ்வாறு அருகிலிருக்கும்போது வைக்கப்படும் பிரார்த்தனைகள் நிறைவேறுவதாகவும் கருதப்படுகிறது. தெய்வீக மலராகக் கருதப்படுவதால் இதைப் பறிக்க மாட்டார்கள். ஆண்டின் முதல் பூவுக்கும், செடியில் முதன்முதலாகப் பூக்கும் பூவுக்கும் தூபதீபம் காட்டி வழிபடுவார்கள். 
முழுமையடைந்த மொட்டு
மகளின் தோழி மனமுவந்து கொடுத்ததன் மூலம் இச்செடி எங்கள் வீட்டில் நுழைந்தது. நட்டு வைத்து நான்கு வருடங்களுக்குப் பின் மொட்டு விட்டபோது எங்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மினியேச்சர் வாழைமொட்டு போல் தோன்றி தாமரை மொட்டு அளவில் வளரும் வரை தினமும் அதன் வளர்ச்சியைக் கண்டு ரசித்தோம். பூமியை நோக்கி வளர்ந்த மொட்டு ஒரு சமயம் யூ டர்ன் போட்டு வானத்தை நோக்கி வளைந்து வளர ஆரம்பித்தது. மொட்டு அப்படி வளைந்து வளர ஆரம்பித்தால் பூக்கும் நாள் நெருங்கி விட்டதென அர்த்தமாம்.  ஒரு நாள் மாலை, உள்ளிருந்து வெள்ளை நிற இதழ்கள் மெல்லத் தலை காட்டின. அங்கிங்கு நகராமல் அருகிலேயே அமர்ந்து பூவொன்று மலர்வதைப் படிப்படியாகக் கண்டு ரசித்தோம். சாயந்திரம் ஆறு மணிக்கு மேல் மெல்ல இதழ் விரிக்க ஆரம்பித்து ஒன்பது மணியளவில் சிறிய வெண்டாமரையொன்று முழுவதுமாய் மலர்ந்திருந்தது. வீடு முழுவதையும் சூழ்ந்திருந்தது அதன் நறுமணம். தொட்டாலே வாடிவிடும் மென்மையான இதழ்கள் கொண்டவையாய்த் திகழ்ந்தது அம்மலர். கைச்சூடு கூட தாங்காது எனக் கேள்விப்பட்டிருந்ததால் தொட்டு ரசிக்கத் துணியவில்லை. முதற்பூவை பூஜித்தோம். அதன் பின் அந்த சீசனிலேயே குறைந்தது நான்கு பூக்களாவது பூத்தன. அதன் பின் ஆண்டு தோறும் பூக்க ஆரம்பித்தது. 
மலரத்தயாராக
சில காரணங்களுக்காக வீட்டை இடமாற்றம் செய்ய நேர்ந்தபோது, ஷிப்டிங் வசதிக்காக செடியில் கொஞ்சம் இலைகளை வெட்டி ட்ரிம் செய்தேன். அவ்வளவுதான்.. பூப்பது நின்று போனது. அப்படிச்செய்யக்கூடாதாம், இலைகள் தானாகவே காய்ந்து உதிர வேண்டுமாம். அடக்கடவுளே!! இது தெரியாமல் போய் விட்டதே என நொந்து கொண்டு மறுபடி எப்போ பூக்குமோ என எல்லாக் கோட்டையும் அழித்து விட்டு முதலிலிருந்து காத்திருக்க ஆரம்பித்தேன். இதோ.. நான்கு வருடங்களுக்குப் பின் இந்த சீசனின் முதற்பூ பூத்திருக்கிறது.
இது சிலவருடங்களுக்கு முன் பூத்தது.
இரவு முழுவதும் மலர்ந்திருக்கும் இப்பூக்கள் பிரம்ம முஹூர்த்த காலத்துக்குப்பின், அதாவது விடியலில் கூம்பி மறுபடியும் மொட்டு போல் தோற்றம் கொள்கின்றன. அதேபோல் தண்டும் படிப்படியாகத் தளர்ந்து துவண்டு விடும். அ ந் நிலையில் நான்கைந்து நாட்கள் செடியிலேயே இருந்தபின் தண்டுப்பகுதி மெல்ல மெல்ல பழுத்து வெளிர் மஞ்சள் நிறம் கொள்ள ஆரம்பிக்கும். இது உதிரப்போகும் அறிகுறியாகும். தண்டு முழுவது மஞ்சள் நிறமானதும் ஓரிரு நாட்களில் காய்ந்து வற்றிச் சுருங்கி செடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பந்தத்தை முடித்துக்கொள்ளும். 
மலர்ந்து மணம் பரப்பிய மறுநாளில்
சில வருடங்களுக்கு முன் தம்பி வீட்டில் பூத்தவை
செடி நடப்பட்டு நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் பூக்க ஆரம்பிக்கும். ஆகவே பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். ஆனால், என் வீட்டிலிருந்து பெங்களூருக்கு இலைத்துண்டைக் கொண்டு சென்று நட்டு வைத்து வளர்த்த தம்பி வீட்டில் ஒரு வருடத்திலேயே பூக்க ஆரம்பித்து விட்டது. அங்குள்ள சீதோஷ்ணமும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுவும் ஒரே தடவையிலேயே பத்துக்கும் மேற்பட்ட பூக்கள் பூத்திருந்தன. உண்மையிலேயே அரிய மலர்தான்.

LinkWithin

Related Posts with Thumbnails