Sunday 1 January 2023

மரவள்ளிக்கிழங்கு என்ற ஏழிலைக்கிழங்கு என்ற கப்பை வத்தல்..


"அத்தே.. சாந்திய பம்பாய்க்கு (சம்பவம் நடந்தது மும்பை ஆகாத 1989ல்) கொண்டு விட வரச்செல 'ஏழெலக்கௌங்கு வத்தல்' வாங்கிட்டு வாங்க" என மை ரங்க்ஸ் சொல்லவும் அம்மைக்கு முதலில் புரியவில்லை. நெல்லையைப் பூர்வீகமாகவும் கன்யாரியை வாழிடமாகவும் கொண்ட மாமியாருக்கு, கன்யாரியைப் பூர்வீகமாகவும் நெல்லை மண்ணில் பெருங்காலம் வாழ்ந்திருந்த மருமகன் தொண்டைத்தண்ணி வற்ற விளக்கியபின் அம்மைக்கு லேசாகப் பிடி கிடைத்தது.

"மரச்சீனிக்கௌங்கு வத்தல சொல்லுகேளா?" என்றாள் அம்மை.

"ஒங்கூட்டுக்கு வந்துருக்கச்செல வறுத்துக் குடுத்தீங்கல்லா.. அதாம்" என்றார் மை ரங்க்ஸ்.

'சரிதான்' என நினைத்துக்கொண்டு 'வாங்கிட்டு வாரேன்' என்ற அம்மை, என்னைக் கொண்டு விடும்போது 'ரெண்டு மாசம்ன்னாலும் வச்சி வறுத்துத் திங்கட்டும்' என ஒரு பெரிய பை நிறைய்ய வாங்கித்தந்தாள்.

முதல்தடவை மொறுமொறுவென வறுத்துத் தந்தாள் அம்மை. இரண்டாம் தடவை வறுக்கும்போது   கொஞ்சம் பிசகாகி விட்டது. எண்ணெய் ரொம்ப சூடாகி விட்டதென பம்ப் ஸ்டவ்வில் தீயைக் குறைக்க.. சூடு ரொம்பவே குறைந்து விட்டது. அதைக்கவனிக்காமல் ஒரு கை வற்றலை அள்ளிப்போட, அது சரியாக வேகாமல் கடுக்முடுக் என வந்து விட்டது. நம்மாள் ஒன்றும் சொல்லவில்லை.

அம்மை ஊருக்குத் திரும்பிப் போனபின் ஒருநாள், "வத்தல் வறுக்கட்டுமா?" எனக் கேட்டுவிட்டு ஒரு ஈடுதான் வறுத்திருப்பேன். "இரி.. நான் வறுக்கேன்" என்று அடுக்களைக்குள் வந்தவர் ஒரு பாத்திரம் நிறைய்ய வற்றலை வறுத்தெடுத்துக்கொண்டு நகர்ந்தார். "ஒனக்கும் வறுக்கத்தெரியல, ஒங்க அம்மைக்கும் வறுக்கத்தெரியல.. நான் வறுத்தது எப்டி பொருபொருன்னு வந்துருக்கு பாரு. எண்ண நல்ல சூடாகாண்டாமா? அதுக்குள்ள அவசரப்பட்டு பொசுக்ன்னு வத்தல போட்டா என்னத்த பொரியும்?" என்று பாடம் எடுத்தார்.

மார்ச் மாதம் நாகர்கோவிலில் கோட்டாற்றில் இருக்கும் 'கம்போளம்' போய் வாங்கி வந்த வத்தல். எங்களூரில் இன்றும் மரவள்ளிக்கிழங்கை இப்படித்தான் வற்றலுக்கு நறுக்குவார்கள்.

இன்றைக்கு நன்கு பொருபொருவென வறுத்து வைத்திருக்கிறேன். மும்பைக்கு வரும்போதெல்லாம் பொட்டணம் போட்டு அனுப்பி வைத்தவளும் இன்றில்லை, பொருபொருவென வறுக்கச் சொல்லித் தந்தவரும் இன்றில்லை..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails