Friday, 4 November 2022

துணை.. (அகநாழிகையில் வெளியானது)

சிலுசிலுவென ஜன்னல் வழியாக பேருந்தின் உள்ளே வீசிய காற்று கண்ணைச்சொக்க வைத்தது, சற்று தலை சாய்த்து உறங்கினால் நன்றாயிருக்கும்தான், ஆனால் முடியாது. பருவ வயதிலிருக்கும் மகளை அழைத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறாள், அதுவும் நேரங்கெட்ட நேரத்தில். கடைத்தெருவில் ஷாப்பிங் சுவாரஸ்யத்தில் ‘ஆ’வென வாயைப் பிளந்து கொண்டு கடைகளை நோட்டமிட்டுக்கொண்டிருந்த மகளை கைப்பிடியாக இழுத்துக்கொண்டு வந்தும் கடைசி பஸ் கிளம்பி மெல்ல நகர ஆரம்பித்து விட்டிருந்தது. இரண்டு பெண்கள் ஓடி வருவதைக் கண்ட டிரைவர் பஸ்ஸை நல்ல வேளையாக பஸ்ஸை நிறுத்தினார். ஏறியமர்ந்து படபடப்புக் குறைந்ததும் ஒரு வாய் தண்ணீரைக் குடித்துக்கொண்டாள்.

அவள் புருஷனுக்கு மாதாமாதம் தன் பெற்றோரைப்பார்த்தே ஆக வேண்டும். தனியாகவும் அவ்வப்போது குடும்பத்தோடும் வருபவன், இந்த முறை பக்கத்து ஊர் திருவிழாவுக்கென குடும்பத்தை இழுத்து வந்திருந்தான். “அரப்பரீச்ச வருதுப்பா.. படிக்கணும்” என சிணுங்கிய மகளுக்கு, ரங்கராட்டினம், ஜவ்வு மிட்டாய் என ஆசை காட்டியிருந்தான். அவன் மட்டும் இப்போது கூட வந்திருந்தால் பயமில்லாமல் இருந்திருக்கும். கடைசி பஸ் போய்விட்டால் கூட ஆட்டோவிலோ, காரிலோ ஊருக்குப் போய் விடலாம். இந்நேரத்துக்கு இப்படி ஓடிச்சாட வேண்டியதில்லை.  “அக்கா மகளுக்கு சடங்கு வெச்சிருக்கு, நீயே போயி புடவை எடுத்து வா” என அனுப்பி விட்டான். “தொணைக்கி ஒரு பொம்பளையாளு கூட வராம ஒத்தைக்கி எப்பிடிப்போக?” என்றவளிடம், “இந்தா… இந்த பெரிய மனுசியைக் கூட்டிக்கிட்டுப் போ, நல்லா செலக்ட் பண்ணுவா” என மகளைத் தள்ளி விட்டு விட்டான். ஷாப்பிங் போகும் உற்சாகத்தில் அதுவும் ஒட்டிக்கொண்டு விட்டது. சொந்தக்காரப் பெண்கள் யாரையாவது அழைத்துக்கொண்டு போகலாமென்றால், “ஏ… அவளுக வந்தா இஷ்டத்துக்கு எடுப்பாளுக, நம்ம பட்ஜெட்ல முடியாது. சத்தங்காட்டாம போயிட்டு வான்னா கிராக்கி பண்ணுதியே?” என புருஷன் முறைக்கவும் கிளம்பி விட்டாள்.

கடைத்தெருவுக்கு வந்து புடவை, இதர துணிமணிகள், அலங்கார சாமான்கள் என எல்லாவற்றையும் வாங்கும் வரை எல்லாம் ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. அப்புறம்தான் மகளரசி கடைத்தெருவை அளக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு கடையாக ஏறி “ஷோ கேஸ்ல பாக்கச்செல நல்லாருந்துது, கிட்ட போய்ப்பாக்கைலதான் பவுசு தெரியுது” என இறங்கிக்கொண்டிருந்தாள். “எம்மா.. மல்லிப்பூவு” என்றவளுக்கு வாங்கிக்கொடுத்து, “எங்கியோ பலாப்பழம் மணக்கு” என வாசம் பிடித்தவளுக்காக தெருமுனை வரை தேடி வாங்கிக்கொடுத்து, கூடவே தான் ரொம்ப நாளாய் ஆசைப்பட்ட வெங்கலப்பானைக்காக பாத்திரக்கடைக்குள் நுழையும்போது இருட்ட ஆரம்பித்திருந்தது. முழுசாக ஒரு மணி நேரத்தைச் செலவிட்டு விட்டு வெளியே வரும்போதுதான், “எப்பா… கடைசி பஸ்ஸு போயிருமே” என உறைத்தது.

முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டவள் பஸ்ஸுக்குள் சுற்றுமுற்றும் நோட்டமிட்டாள். அரிசியும் உளுந்தும் விரவினாற்போல் ஆணும் பெண்ணுமாய் இருந்த கூட்டம், ஒவ்வொரு நிறுத்தத்திலும் கரைந்து ஆண்கள் மட்டுமே அதிகமாகக் காணப்பட்டனர். அவளுள் கிளம்பிய பயஊற்று வியர்வை ஆறுகளை உற்பத்தி செய்தது. “இன்னும் நாலஞ்சு ஸ்டாப்தானே.. ஊருக்குப் போயி இறங்கிரலாம்” என மனம் சமாதானம் செய்தாலும், “பயவுள்ளை பராக்குப் பாத்துக்கிட்டு இவ்வளவு நேரம் ஆக்கலைனா எப்பமோ பத்தரமா போயிருக்கலாம், நீ ஊருக்கு வா,… ஒன்ன செரியாக்குதேன்” என ஒரு பக்கம் கறுவிக்கொண்டும், “வளந்த பொம்பள எனக்கே ஆசய அடக்கத்தெரியல, கூடச்சேர்ந்து திரிஞ்சிக்கிட்டு, இப்ப சின்னப்புள்ளயச்சொல்லி என்ன பலன்?” என இன்னொரு பக்கம் மனதை ஆற்றிக்கொண்டும் இருந்தாள்.

‘டமால்’ என தலை முன்னிருக்கைக் கம்பியில் இடிபட, சிந்தனை கலைந்து நிமிர்ந்து அமர்ந்தாள். பஸ் கும்மிருட்டில் நின்றிருந்தது மட்டும்தான் புரிந்ததே தவிர எந்த ஊர்ப்பக்கம் நிற்கிறது எனத்தெரியவில்லை. கண்களைக்கொட்டித்தட்டி வெளியே இருட்டில் நோக்கினாள். ஏதோ ஓர் ஊர் விலக்கில் உறுமிக்கொண்டே பஸ் நின்றிருந்தது. கூர்ந்து நோக்கினாள்.. இவர்களது ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டரிலிருக்கும் ஊர்தான். ‘அப்பாடி!! ஊர் கிட்ட வந்துட்டுது’ என சற்று ஆசுவாசப்பட்டது நிலைக்கவில்லை.

“பஸ்ஸு எங்க ஊருக்குள்ள போயே ஆவணும், அதெப்படி ஊருக்குள்ள போவாம இருக்கும்ண்ணு பாத்துருகேன்” ஒருத்தன் நடத்துனரிடம் சலம்பிக்கொண்டிருந்தான்.

“ஏ.. காருக்குள்ள ஏறச்செலயே சொன்னம்லா? பஸ்ஸு ஊருக்குள்ள போவாது, வெலக்குலதான் நிக்கும்ன்னுட்டு. அப்பம்லாம் மண்டைய ஆட்டிட்டு இப்பம் எகுறுனா எப்பிடிரே?”

“அதெல்லாம் எங்களுக்குத்தெரியாது. பஸ்ஸு ஊருக்குள்ள போகணும்ன்னா போய்த்தான் ஆகணும், இல்லண்ணு வைய்யி… நாளப்பின்ன ஒம்பஸ்ஸு ரோட்டுல ஓடாது பாத்துக்க” வாய் குழறச்சொன்னான் ஒருத்தன்.

“ஆமா மாப்ளே.. ஊர்ல திருழா நடக்கு, இந்த நேரம் ஊருக்குள்ள பஸ்ஸுல போயி எறங்கினாத்தான் கெத்து. வெலக்குல எறங்கி நடந்தம்ண்ணு கேட்டா ஒரு சொந்தக்காரனும் மதிக்க மாட்டான்” என குழறலுடன் ஆமோதித்தான் அடுத்தவன்.

“சொந்தக்காரன் மதிக்கணும்ன்னா சொந்தக்கார்ல போவெண்டியதுதான? எறங்கவும் செய்யாம எங்க உசிர எடுக்குதியே?. எண்ணேன்… இவுனுவோ எறங்கலைன்னா கெடக்கட்டும், நீங்க பஸ்ஸ எடுங்க”  நடத்துனர் ஓட்டுநரைப்பார்த்துச்சொன்னார்.

சட்டென எகிறினான் ஒருவன் “வண்டி ஒரு அடி பைபாஸ்ல நவுந்திச்சி… அவ்ளோதான், குதிச்சிருவேன்” 

ஓட்டுநர் செய்வதறியாது திகைத்தார். பாயிண்ட் டு பாயிண்ட் போகும் பஸ் எனத்தெரிந்தும், ஏறி விட்டு வம்பு பண்ணுகிறார்கள். இன்றைக்கு இவர்களுக்காக ஊருக்குள் பஸ்ஸை விட்டால், நாளைக்கு இதைப்போல் இன்னும் பலரும் நினைத்த இடத்தில் பஸ்ஸை நிறுத்தச்சொல்வார்கள், வேலைக்கும் ஆபத்து வரும். “சவத்தெளவு தண்ணியைப்போட்டுட்டு நம்ம உசுர வாங்குதுகள்” எரிச்சலுடன் இஞ்சினை ஆஃப் செய்தார். “ஊருக்குள்ளல்லாம் பஸ்ஸு வராது, வேலையக்கெடுக்காம ஒழுங்கா எறங்கிப்போங்க, இவுனுவோ எறங்கற வரைக்கும் பஸ்ஸு நவுராது” பயணிகளைப்பார்த்து பொதுவாகச்சொல்லி விட்டு நெட்டி முறித்தார்.

இவளுக்கு சொரேரென்றது. ‘நல்லா வந்து மாட்டிக்கிட்டோமே’ என அழுகையாக வந்தது. சுற்றுமுற்றும் பஸ்ஸுக்குள் பார்த்தாள். நாலைந்து ஆண்கள் மட்டுமே இருந்தனர். வயிற்றில் புளி கரைத்தது, “இவுனுவள வெலக்கி விடாம ஓரோருத்தனும் வேடிக்க பாத்துட்டிருக்கதப்பாரு.” மகளிடம் முணுமுணுத்தாள்.

“எம்மா.. சும்ம இரும்மா”

பரிதவிப்புடன் ட்ரைவரைப்பார்த்தாள், அவன் எங்கோ பார்ப்பது போல் முகத்தைத் திருப்பி வைத்திருந்தான்.

“உள்ள நேரம் அம்புடும் ஊரு சுத்திட்டு, இப்பப் பாரு, நல்லா வந்து மாட்டியிருக்கோம். கொஞ்சமாது வடவருத்தம் இருந்தா சட்டுனு பொறப்பட்டுருப்பே” எல்லா எரிச்சலையும் மகள் மேல் திருப்பினாள்.

“நாம் மட்டுந்தானா? நீங்களுந்தான் பாத்திரக்கடைல..” 

“சரி சரி.. வாய மூடு. பதிலுக்குப்பதுலு பேச மட்டும் படிச்சு வெச்சிருக்கே. எல்லாம் அப்பனூட்டு புத்தி”

ட்ரைவர் பின்னால் திரும்பிப்பார்த்த ஒரு சமயம், ‘தயவு செஞ்சு வண்டிய எடுப்பா’ என விழிகளால் கெஞ்சியபடி அவனுக்கு மட்டும் புரியும் வண்ணம் கையெடுத்துக்கும்பிட்டாள்.

ஒரு கணம் பதறிய அவன், சண்டையை விலக்கி விடப்போவது போல் எழுந்து நடத்துனரிடம் போனான், கிசுகிசுவெனப்பேசினான். மறுபடி வந்து ஒன்றுமே நடவாவது போல் இருக்கையில் அமர்ந்து, பக்க வாட்டில் சொருகி வைத்திருந்த ஒரு அழுக்குத்துணியை எடுத்து, பஸ்ஸின் கண்ணாடிகளைத்துடைக்க ஆரம்பித்தான்.

அவளுக்கு பஸ் உடனே கிளம்புமென்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. இன்னும் நேரமானதென்றால் புருஷனிடமும் புகுந்த வீட்டாரிடமும் பேச்சு வாங்க வேண்டி வரும். ஊரிலுள்ள தெய்வங்களையெல்லாம் துணைக்குக் கூப்பிட்டாள். இரவு நேரம் அவையெல்லாம் தூங்கப்போய் விட்டதோ என்னவோ ஒரு தெய்வமும் அவளுடைய வேண்டுதலுக்குச் செவி சாய்க்கவில்லை. அவளுக்குப் படபடப்பாக வந்தது. பிபி எகிறும் போல் இருந்தது. பாட்டிலிலிருந்த தண்ணீரைக்குடித்துக்கொண்டாள்.

“ஏட்டி.. அப்பாக்கு போன் போட்டு விஷயத்த சொல்லு, முடிஞ்சா கெடைக்கற வண்டிய எடுத்துட்டு வரச்சொல்லு”

“எம்மா.. சார்ஜ் இல்லாம மொபைலு எப்பமோ ஆஃப் ஆயிட்டு”

“எப்பம் பாத்தாலும் அதயே நோண்டிக்கிட்டிருந்தா? ஒரு அவசரத்துக்கு ஆவுமுன்னு வாங்கிக்குடுத்தா, இப்பிடியா கால வாரும்!? இப்ப என்ன செய்ய?”

“எம்மா.. நீ கொஞ்சம் அமைதியா இரு, இப்பிடி படபடன்னு வந்தா ஒண்ணும் பிரயோசனமில்ல. பொறுமையா இரும்மா, நீ பதட்டப்பட்டா எனக்கும் பதட்டமாவுதுல்லா”

“அவுனுவோ எறங்கற மாரியும் தெரியல, பஸ்ஸு கெளம்பற மாரியும் தெரியல, அர மணிக்கூரா சண்ட புடிச்சிட்டிருக்கானுங்க. ஏட்டி… ஊரு கிட்டதாம் வந்துருக்கோம். எறங்கி நடந்துருவோமா?” மகளிடம் கேட்டாள்.

“இந்த இருட்டுக்குள்ளயா?”

“இருட்டு என்ன இருட்டு? சர்ரு சர்ருன்னு ரோட்டுல பஸ்ஸும் லாரியுமா ஓடிட்டுதான இருக்கு? வெளிச்சத்துல நடந்துரலாம்”

“பயமா இருக்கும்மா..” 

இவளுக்கும் பயமாகத்தான் இருந்தது. திருவிழாவை சாக்கிட்டு சாராய ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. வயசுப்பெண்ணுடன் பத்திரமாக ஊர் போய்ச்சேர வேண்டும். ‘எங்கள பத்தரமா வீடு சேத்துரு முத்தாலமா, ஒனக்கு பொங்கலு வைக்கேன்’ இழுத்து மூச்சு விட்டு படபடப்பை சமப்படுத்திக்கொண்டாள். 

“அம்மை நானிருக்கையில் ஒனக்கெதுக்கிட்டி பயம்? வா..”

குனிந்து காலடியில் இருந்த கட்டைப்பைகளை எடுத்துக்கொண்டாள், சேலையை இழுத்துச்செருகிக்கொண்டாள். மகள் பின்தொடர பஸ்ஸை விட்டிறங்கி விறுவிறுவென நடந்தாள். ரோட்டில் ஓடிய வண்டிகளின் முன்விளக்கு வெளிச்சத்தால் மரங்களின் நிழல்களும் நெளிந்து வளைந்து ஓடியது கிலியைக்கிளப்பியது. மகளைக் கைப்பிடியாகப் பிடித்துக்கொண்டாள். இன்னும் சற்று தூரம்தான், கூப்பிடு தூரத்திலிருக்கும் கலுங்கைக் கடந்து ஐம்பது தப்படிகள் நடந்து விட்டால் போதும் இவர்களது ஊர் வந்து விடும், அதன்பின் பயமில்லை. ஆனால் கலுங்கை ஒட்டினாற்போல் நிற்கும் ஆலமரத்தைக் கடக்கத்தான் பயமாயிருந்தது. தலைக்குக்குளித்த பெண்ணொருத்தி கூந்தலை விரித்துக் காய விட்டிருப்பது போல் விழுதுகள் அடர்ந்து தொங்கி திகிலூட்டின.

“எங்களுக்கு நீதான் தொண ஆத்தா..” வாய்க்குள் முணுமுணுத்தவாறு பர்சில் வைத்திருந்த குங்குமப்பிரசாதப் பொட்டலத்தைத் தடவி எடுத்துப் பிரித்து ஒரு கிள்ளு எடுத்து மகளுக்குப் பூசி விட்டு, தானும் இட்டுக்கொண்டு தலையைக்குனிந்து கொண்டு விறுவிறுவென நடக்கலானாள். ஊர் முகப்புக்கு வந்ததும்தான் மூச்சே வந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் பைகளைப் போட்டு விட்டு “அப்பாடி..” என தளர்ந்து அமர்ந்தாள். 'பத்தரமா வந்து சேந்துட்டமே' என உற்சாகமாகவும் தன்னை நினைத்துப் பெருமிதமாகவும் இருந்தது. இவ்வளவு நேர மனக்கலவரத்தில் கவனத்துக்கு வராத அடிவயிற்றுக்கனம் ‘என்னைக் கவனி’ என்றது. எழுந்து கொல்லைப்புறத்திலிருந்த பாத்ரூமுக்கு நடந்தாள்.

“பொறவாசல்ல லைட்டு இல்ல, ஒத்தையில போகாத.. பயப்புடுவ. இன்னா கணேசன தொணைக்கி வரச்சொல்லுதேன் கூட்டிட்டுப்போ. லேய் மக்கா கணேசா.. அத்த கூட போலே”

‘தைரியமா ரோட்டுல முக்காஇருட்டுக்குள்ள மக கூட ரெண்டு ஊர கடந்து வந்த நாப்பது வயசு பொம்பளைக்கி, நாழி ஒசரம் கூட இல்லாத ஆம்பளப்பய தொணையா? அதுவும் வீட்டு காம்பவுண்டுக்குள்ளயே!!.. சர்தாம் போ’

அழுவதா சிரிப்பதா என அவளுக்குத்தெரியவில்லை. அவ்வளவு நேரமும் இருந்த உற்சாகம் பொசுக்கென்று வடிந்து விட்டிருந்தது, பெருமிதம் உடைந்து விட்டிருந்தது. அதை உடைத்த விரல்களை முறித்துப்போட விரும்பினாள். 'முறித்துப்போடப்போட இன்னும் உடைப்பார்கள். கடந்து செல்' என்றது உள்ளிருந்து ஒரு குரல். தான் சற்று நேரம் முன் நிகழ்த்திய சாகசத்தைக்கூட முட்டாள்தனமாகத்தான் சொல்வார்கள், 'போகட்டும்..  ஒரு பெரும் பொக்கிஷம் போல் அதை மனதுக்குள் பத்திரப்படுத்திக்கொள்' என்றது அது.

அவள் தெளிவானாள்..

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட அகநாழிகை இதழுக்கு நன்றி.


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails