Monday, 9 January 2023

சுகிரா - புத்தக மதிப்புரை (ஜெயந்தி நாராயணன்)

“சுகிரா” சிறுகதைத்தொகுப்பு
ஆசிரியர்: ஜெயந்தி நாராயணன்
பதிப்பகம்: சுஜா பதிப்பகம்
விலை: 99

ஒரு நல்ல சிறுகதையென்பது வாசகரை ஆரம்ப வரியிலேயே கட்டிப்போட்டு, கடைசி வரி வரை தன்போக்கிலேயே இழுத்துச்செல்ல வேண்டும். முடிந்த பின்பும் வண்டாய் மனதில் ரீங்கரிக்க வேண்டும். முடிவு ஒப்புதலில்லையெனில் “ஏன்?” என சுயபரிசீலனை செய்ய வைக்க வேண்டும். சிறுகதைகள் சுபமாகவோ அசுபமாகவோ முடிந்தேயாக வேண்டுமென்ற கட்டாயமில்லை. கண்டிப்பாக அது ஒரு நீதியைப் புகட்டியாக வேண்டுமென்ற நியதியுமில்லை. இன்னும் சொல்லப்போனால் சில சிறுகதைகள் எழுத்து வடிவில் முடிந்தாலும் வாசகர் மனதில் தொடர்வதுண்டு. அங்கே அதன் முடிவு ஒவ்வொரு வாசகரின் எண்ணத்திற்கேற்ப தீர்மானிக்கப்படுகிறது.

சிறுகதைகளுக்கான கருக்கள் நம் தினப்படி வாழ்விலேயே கொட்டிக்கிடக்கின்றன. நாம் சந்திக்கும் மனிதர்கள், பரிமாறிக்கொள்ளும் கருத்துகள், காண மற்றும் கேட்க நேரும் ஒவ்வொரு சம்பவங்கள் என கதைக்கருக்களுக்குப் பஞ்சமேயில்லை. அவற்றை, கேட்பவர்கள் சலித்துக்கொண்டு கொட்டாவி விடா வண்ணம் சுவைபடச்சொல்வதுதான் ஒரு கதைசொல்லியின் திறமை. ரசனையுடன் எழுதும் கதைசொல்லியால் அவை சுவாரஸ்யமான சிறுகதைகளாகவும் மலர்கின்றன.

எழுத்தாளர் ஜெயந்தி நாராயணனின் “சுகிரா” சிறுகதைத்தொகுப்பில் உள்ள கதைகளும் அத்தகையவே. புத்தகத்தைக் கையிலெடுத்தால், கடலையுருண்டையில் ஒவ்வொரு கடலையாக ரசித்து ருசிப்பதைப்போல் ஒவ்வொரு கதையும் ரசித்து வாசிக்க வைக்கிறது. மனித மனம் விந்தையானது.. கலைடாஸ்கோப்பைப்போல் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டேயிருப்பது. அப்படி தன்னுரு மாறும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்கும் உருக்கொடுத்து ரத்தமும் சதையுமான கதை மாந்தர்களாக உலவ விட்டிருக்கிறார் ஆசிரியர்.

வண்ணத்துப்பூச்சியின் உருமாற்றம் என்பது இயல்பாக நிகழ வேண்டும். அப்படியில்லாமல் அந்த மாற்றம் தான் விரும்பியபடியே நிகழ வேண்டுமென வன்முறையைப் பிரயோகித்தால் என்னாகும்? ஹரிணிக்கு நிகழ்ந்ததுதான் நடக்கும். வாழ்வில் எதை வேண்டுமானாலும் மீட்டுக்கொண்டு விடலாம், சிறு வயதில் அனுபவிக்கத்தவறியவற்றைக்கூட. ஆனால், போய் விட்ட இளமையை எங்ஙனம் கடந்த காலத்திலிருந்து மீட்டெடுப்பது? ராஜியைப்போல் பிச்சியாகவே அலைந்து மடிய வேண்டியதுதானா? இவ்வாழ்வின் இக்கணம் மட்டுமே உறுதியானது, அதை வாழ்வதை விடுத்து வேண்டாத சந்தேகத்தை வளர்த்துக்கொண்டு அல்பாயுசில் மடிந்த திவ்யாவைப்போல் இருப்பதால் யாருக்கு என்ன லாபம்?

அன்பு ஒன்றே நிலையானது என்பதை மனிதர்கள் பெரும்பாலும் காலம் போன கடைசியில்தான் உணர்ந்து சுற்றம் சூழ வாழ விரும்புகிறார்கள். அதுவரையில் சந்தீப்பைப்போல் கூடப்பிறந்தவர்களுக்கே ஊறு விளைவிக்கவோ அல்லது பெற்றோர் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, தான் நன்றாக இருந்தால் போதும் என்றிருப்பவர்களாகவோ பணத்தாசை, பேராசை, பொறாமை போன்ற தீக்குணங்களால் தீண்டப்படுபவர்களாகவோதான் பெரும்பாலோனோர் இருக்கின்றனர். மதம், இனம், செல்வம் போன்ற எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் மாச்சரியங்களுக்கும் அப்பாற்பட்ட மனிதர்களும் இச்சிறுகதைகளில் உலவுகின்றனர். தானாக விரும்பி, மனம் கலைந்தவளைப்போல் நடிக்கும் ராஜியும், வயோதிகத்தால் கடந்த கால நினைவுகள் அனைத்தையும் மறந்த.. ஆனால், “சுகிரா”வை மட்டும் ஞாபகம் வைத்திருக்கும் சுந்துவும் கண்களில் நீர் திரையிடச்செய்து விட்டார்கள். 

தேவையற்ற அலங்காரங்கள், அலுப்பூட்டும் வர்ணனைகள் ஏதுமின்றி மிக இயல்பான மொழி நடையில் சொல்லப்பட்டிருக்கும் இக்கதைகள் ரசிக்க வைக்கின்றன. “அன்னை” சிந்திக்கவும் வைத்தது. மீனா அவள் செய்தது தவறா? குற்றமா? என நிறையப்பேரை யோசிக்க வைப்பாள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails