Tuesday, 11 February 2014

"நிழற்படக் கவிதைகள்".. நன்றி முனைவர் அண்ணாகண்ணன் :-)

இலக்கிய உலகில் திரு. அண்ணா கண்ணனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருப்பினும் பூக்கடைக்கு ஒரு அறிமுகம் :-))

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 18 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் இளம் முனைவர்; ‘தமிழில் மின் ஆளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன் இதழ்களின் முன்னாள் ஆசிரியர். வல்லமை வளர்தமிழ் மையத்தின் நிறுவனர்.

இனி,
நிழற்படக் கவிதைகள் - முனைவர் அண்ணாகண்ணன்

கவிதை, காலத்தின் சாட்சியாக இருக்க வேண்டும் என்பர். உண்மையில், அச்சிதழ்களும் மின்னிதழ்களும் இன்னும் பற்பல ஊடகங்களும் காலத்தின் சாட்சியாகத்தான் இருக்கின்றன. அப்படியானால், கவிதைக்கும் அவற்றுக்கும் என்னதான் வித்தியாசம்? இந்தக் காலத்தில் இவ்வாறு நடந்தது என்பது, ஒரு செய்திப் பதிவு. அந்தச் சம்பவத்தைக் கவிதையாகப் பரிமளிக்கச் செய்வது, கவிஞரின் மனம். அந்த வகையில் சாந்தி மாரியப்பனின் கவிதைகள், மனசாட்சியுடன் கூடிய காலத்தின் சாட்சியாக ஒளிருகின்றன.

மாநகரம், எத்தனையோ பழிகளையும் வசைகளையும் சுமந்துகொண்டு நிற்கிறது. இங்குள்ள நெருக்கடிகள், துரத்தல்கள், பற்றாக்குறைகள், சிக்கல்கள், ஏமாற்றங்கள்.... அனைத்தும் பல்வேறு கோணங்களில் பல்லோரால் பல்லாண்டுக் காலமாகப் பதிவாகி வருகின்றன. இந்தப் பதிவுகளின் விளைவுகள் என்ன என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். மாநகரச் சூழல் எவ்வளவு வறட்சிகரமாக இருப்பினும் இதனால், இங்கு வாழும் படைப்பாளர்களின் படைப்பூக்கமும் படைப்பாக்கமும் வறண்டுவிடவில்லை. இது, எதிர்மறைக்குள்ளும் ஒரு நேர்மறை அம்சம்.

மும்பை மாநகரில் வசிக்கும் சாந்தி மாரியப்பன், மாநகரின் அழுத்தங்களுக்கு இடையிலும் தன்னை ஒரு படைப்பாளியாகத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர். இவர், கவிதை, சிறுகதை, கட்டுரை, நிழற்படம்... எனப் பல்வேறு களங்களில் இயங்கி வருகிறார். வல்லமை மின்னிதழின் ஃபிளிக்கர் படக் குழுமத்தையும் இவரே நிர்வகித்து வருகிறார். இவருடைய நிழற்படங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.  அவை, தனித்துவம் வாய்ந்தவை. புதிய கோணங்களில் நவீன வாழ்வை வெளிப்படுத்துபவை. இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள், அன்றாட வாழ்வில் கவனிக்கத் தவறும் நுணுக்கமான கூறுகள், எளிய நிகழ்வுகளில் உள்ள அழகியல், மனிதர்களின் பல்வகை உணர்வு வெளிப்பாடுகள்... எனப் பலவும் இவரின் நிழற்படங்களில் மிளிருகின்றன.

நிழற்படக் கலைஞரான இவரது கவிதைகளிலும் காட்சிப் படிமங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சிதறிக் கிடக்கும் சூரியச் சில்லறைகளில் புரண்டெழுந்த அணிற்பிள்ளை, கொத்துக் கொத்தாய்ப் பூத்த பறவைகளின் வாசத்தில் கிறுகிறுத்து நின்ற மாமரம், ஏகாந்த வெளியில் ஒன்றையொன்று துரத்தும் ஜோடி மைனாக்கள், தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பறவை.... எனப் பலவும் நேரடியாகக் காணும் உணர்வை நம்முள் ஏற்படுத்துகின்றன. தேய்பிறைப் புன்னகை என்ற சொல்லாடல், நேர்த்தியான காட்சிப் பதிவு.

குழந்தைகள், மன அழுத்தத்திலிருந்து நம்மைக் காத்து வருகிறார்கள். எவ்வளவு சிக்கல்கள் இருப்பினும் ஒரு குழந்தையைப் பார்க்கும்போது, மனம் லேசாகிவிடுகிறது. குழந்தைகளைக் கருவாகக் கொண்ட இவரது கவிதைகளை நான் பெரிதும் ரசித்தேன். அறிதுயில் என்ற கவிதை, மிக அழகு. ரயிலோடும் வீதிகள், வாசனையாய் ஒரு வானவில், மழலை நிலா... உள்ளிட்ட பல கவிதைகளில் குழந்தைமையை இவர் கொண்டாடியிருக்கிறார்.

சிறைப்படும் 
ஒவ்வொரு தருணத்திலும்
குதித்துக் கூத்தாடுகிறது காற்று
குழந்தைகள் கைகளில்
பலூன்களாய்

என்ற வரிகளில்தான் எவ்வளவு உற்சாகம்!

கதைக் கவிதைகளும் இவருக்கு இயல்பாக வருகின்றன. தாத்தா இறந்த பிறகு திண்ணைக்கு இடம்பெயரும் பாட்டியும் பொறந்த வீட்டுச் சொத்தில் பங்கு கேட்டு மனைவியை விரட்டுகையில் நிகழும் திருப்பமும் நிகழ்காலச் சிக்கல்களின் சூடான பதிவுகள். 

வென்றுவிட்டதாய்
பேரிகை கொட்டும் தருணங்களில்தான்
ஆரம்பிக்கவே செய்கின்றன
பெருவாரியான யுத்தங்கள்

என அவர் குறிப்பிடுவது, வாழ்க்கை நமக்குக் கற்பிக்கும் பாடங்களில் ஒன்றாகும்.

இந்தக் கவிதைத் தொகுப்பு, கலவையான உணர்வுகளுடன், கதம்பமாக மணம் வீசுகிறது. சாந்தி மாரியப்பன், ஏதோ பெயருக்கும் எண்ணிக்கைக்கும் எழுதாமல், உள் உணர்வுக்கும் சமூகப் பயனுக்குமாக எழுதி வருகிறார். எதிர்காலத்தில் இவரது மொழி,  இன்னும் கூர்மை பெறும். இவரால் இன்னும் சிறப்பான படைப்புகளை அளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இவரது கவிதைப் பயணம் சிறப்புடன் தொடர, எனது நல்வாழ்த்துகள். இவரது வல்லமையால் இந்த மாநிலம் பயனுறட்டும்.

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கிக் கௌரவித்த முனைவர் அண்ணா கண்ணனுக்கு மறுபடியும் மனமார்ந்த நன்றிகள்..

கவிதைத்தொகுப்பைத் தபாலில் வாங்க..

AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110

aganazhigai@gmail.com

Thursday, 6 February 2014

சாரல் துளிகள்

அனுமார் வாலில் கட்டிய மணியாய் சப்தித்துக்கொண்டிருக்கிறது, வாலின் நுனியில் நின்று கொண்டிருக்கும் வாகனமொன்று..

ஊம்.. ஊம் என்று மிரட்டுகிறது காற்று, ஆம்.. ஆம்.. என்று ஆமோதிக்கிறது கடல். பயப்படாத ஆட்டுக்குட்டியாய் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கிறது சிறுபடகு.

இப்பக்கமும் அப்பக்கமும் தாவாமல், நெடுக நடந்து சென்றது பூனை.. மதில் நுனியில் பூனைக்குட்டி.

அத்தனை விதமான மருந்துகளாலும் ஆயுதங்களாலும் துரத்தப்பட்ட கொசு சொன்னது.. "நாராயணா.. இந்த மனுசங்க தொல்லை தாங்கலைடா. அவ்வ்வ்வ்வ்வ்.."

வரப்போகும் வெயில் காலத்திற்குப் பூத்துக்குலுங்கிக் கட்டியம் கூறுகின்றன மாமரங்கள்.

ஸ்வெட்டரைப் போட்டுக்கொள்ளவா? அல்லது மழைக்கோட்டைப் போட்டுக்கொள்ளவா? என்று சற்று நேரம் மும்பை மக்களைக் குழப்பி விட்டுச் சென்று விட்டது பருவம் தப்பி வந்த மழை..

குழந்தைகளாக இருக்கும்போது சீக்கிரம் வளர்ந்து விட மாட்டோமா என்று ஆசைப்படுவதும், வளர்ந்தபின் குழந்தைகளாகவே இருந்திருக்கக்கூடாதா!! என்று ஏங்குவதும் என்ன மாதிரியான மனநிலையைச்சாரும்??..

தவளையை விழுங்க வரும் பாம்பாய் சிவப்பு விளக்கு மின்னும் நாற்சந்தியில் மெதுமெதுவே ஊர்ந்து பாதுகாப்பான தொலைவைக்கடந்தபின், சிறுத்தையாய்த் தலைதெறிக்க ஓடுகிறது வாகனமொன்று..

புகைத்துகள்களில் கரி குளித்து, மேலும் கருமையழகுடன் மினுமினுக்கின்றன நகரத்துக்காக்கைகள்..

மங்கி குல்லா போட்ட குட்டிப்பாப்பாக்களுக்கென்று தனியழகு வந்து விடுகிறது.

டிஸ்கி: சாரல் துளிகள் மட்டுமன்றி அவ்வப்போது ஃபேஸ்புக்கில் மொழிந்தவையும் இனிமேல் இவ்வாறு பகிரப்படும் என்று பகிரங்க மிரட்டல் விடுக்கப்படுகிறது :-)))))

Tuesday, 28 January 2014

"சிறகு விரிந்தது" புத்தக வெளியீட்டு விழா..

வெகு காலமாகக் காத்திருக்க வைக்காமல் இறுதியில் அந்த நொடி வந்தே விட்டது. ஆமாம்.. நடந்து முடிந்த புத்தகத் திருவிழாவில் எனது புத்தக வெளியீடும் அமைதியாக இனிதே நடந்தது.

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை பிரியத்துக்குரிய தோழி மதுமிதா வெளியிட தோழி பரமேசுவரி திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார். கூடவே ராமலக்ஷ்மியின் “இலைகள் பழுக்காத உலகம்” புத்தகத்திற்கான வெளியீடும் நடந்தது.

வெளியீட்டு விழாவில்.. எழுத்தாளர்கள் அகநாழிகை பொன் வாசுதேவன், அய்யப்ப மாதவன், மதுமிதா, உஷா, மற்றும் பரமேசுவரி திருநாவுக்கரசு  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'உயிர் எழுத்து' ஆசிரியர் சுதீர் செந்தில், பொன் வாசுதேவன், அய்யப்ப மாதவன், மதுமிதா, உஷா..
முகநூலில் தினமும் வெளியாகும் புத்தக வெளியீட்டு விழா பகிர்வுகளையும் படங்களையும் பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும் அதே சமயம், சென்னையில் வசிக்காமல் போய் விட்டோமே என்று ஏக்கமாகவும் இருந்தது. போகட்டும்.. பிழைத்துக்கிடந்தால் அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன் :-)

தன்னுடைய படைப்புகளைப் புத்தகமாகப் பார்ப்பதென்பது, அதுவும் முதல் தொகுப்பாக இருக்கும் பட்சத்தில்.. அதை விடப் பேரின்பம் ஒரு எழுத்தாளருக்கு இருக்க முடியுமா என்ன?. அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களினிடையே என்னுடைய புத்தகமும் தென்பட்டதைப் பார்த்ததும் சொல்லத்தெரியாத உணர்வு என்னை ஆட்டிப்படைத்தது. பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் புத்தகங்களைப் பதிப்பித்துப் புத்தகத்திருவிழாவிற்குக் கொண்டு வந்ததோடு, என்னைப்போல் தூரதேசத்தில் இருப்பவர்களுக்காக புத்தக வெளியீட்டையும் நடத்திக்கொடுத்த பொன் வாசுதேவனுக்கு மறுபடியும் மனமார்ந்த நன்றிகள்.

பல நல்ல புத்தகங்களைப் புத்தகத்திருவிழாவில் வாங்காமல் விட்டு விட்டவர்களும், தொலைவில் இருப்பதால் வாங்க வாய்ப்பில்லாதவர்களும் ஆன்லைனில் "அகநாழிகை புத்தக உலகத்தில்"  அள்ளிக்கொள்ளலாம். க்ளிக்கும் தூரத்தில்தான் இருக்கிறது அகநாழிகை புத்தக உலகம். நேரடியாகச் சென்று வாங்க விரும்பும் நண்பர்கள் சென்னையிலிருக்கும் கடைக்கு விஜயம் செய்யலாம்.

முகவரி:

AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110
aganazhigai@gmail.com

என்னுடைய கவிதைத்தொகுப்பும் இங்கே கிடைக்க ஆரம்பித்து விட்டது. 

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை ஆன்லைனில் வாங்க, சுட்டியைச் சொடுக்குங்கள்.


புனைபெயரை உதறித்தள்ளி விட்டு இனிமேல் உண்மையான பெயரிலேயே வலம் வரலாமென்றிருக்கிறேன் :-))

Friday, 3 January 2014

சிறகு விரிந்தது- என் முதல் புத்தக வெளியீடு..

"சிறகு விரிந்தது" 

என் முதல் புத்தகத்தின் தலைப்பு மட்டுமல்ல, தொடரும் பயணத்திற்கான ஆயத்தமும்தான். 
வாசித்தலென்பது ஒரு சுகானுபவம்.. மழையில் நனைவதைப்போல. அது எழுத்துகளாகவும் இருக்கலாம், வாழ்வியலாகவும் இருக்கலாம், சக மனிதர்களாகவும் இருக்கலாம். அவ்வாறு வாசிக்கப்பட்டவற்றில் சில கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டாலும் சில துளிகள் மட்டும் எப்படியோ விதையாய் விழுந்து முளைத்து வேரோடி கவிதையாய் முளைத்து விடுகின்றன. 

கவர்ந்த காட்சிகளையும் எண்ணங்களையும் அடைந்த அனுபவங்களையும் கதை, கவிதை, கட்டுரைகளாகவும் ஒளிப்படங்களாகவும் என்னுடைய வலைப்பூவான “அமைதிச்சாரல்” தளத்திலும், கவிதைகளுக்கெனத் தனியாக “கவிதை நேரம்” என்றொரு வலைப்பூவும் நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே..

ஏன் கவிதைகள்?.. சமூகம் மற்றும் சம மனிதர்கள் மீதான பார்வைகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், எண்ணங்கள் என்று எல்லாவற்றையும் பற்றிப் பகிர்ந்து கொள்ளவும் பேசவும் கவிதை ஒரு வசதியான வடிகால். பக்கம் பக்கமாகப் பன்னிப்பன்னிச் சொல்வதை விட சில வரிகளிலேயே சுருங்கச்சொல்லி விளங்க வைத்து விடவும் முடிகிறதே.

ஒவ்வொரு கவிதையையும் வெளியிடும்போதெல்லாம் வாசித்துப் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய உங்கள் அனைவரின் ஆதரவே இந்நூல் வெளியாவதற்கு முழு முதற்காரணம். உங்கள் அனைவருக்கும் மற்றும் கவிதைகளை வெளியிட்ட மின்னிதழ்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

இது என்னுடைய கவிதைகளின் முதல் தொகுப்பு. அகநாழிகை பதிப்பகம் மூலமாக வெளியாகிறது. சென்னையில் எதிர்வரும் 10.01.2014 முதல் 22.01.2014 வரை நடைபெற உள்ள 37வது சென்னைப் புத்தகத் திருவிழாவில் அகநாழிகைப் பதிப்பகத்தாரின் ஸ்டாலிலும் அகநாழிகை புத்தக உலகத்திலும் கிடைக்கும். அவர்களிடம் போன் மூலமாகவும் ஆர்டர் செய்து வரவழைத்துக்கொள்ளலாம். ஆன்லைன் விவரங்கள் பிறகு பகிர்கிறேன். 
ஸ்டாலுக்குப் போகும் வழி:"இரண்டாவது நுழைவு பாதையான மா.இராசமாணிக்கனார் பாதையின் ஆரம்பத்திலேயே இடது புறம் இரண்டாவது கடையாக இருக்கிறது." என்று வாசுதேவன் குறிப்பிட்டிருக்கிறார்.

அகநாழிகை புத்தக நிலையத்தின் முகவரி:
புத்தகம் எப்படி வெளியாகப்போகிறதோ என்ற கலவையான உணர்வுகள் என்னை ஆக்கிரமித்திருந்தன. ஆனால், மிகக் குறுகிய கால அளவே இருந்தபோதிலும் சிறந்த முறையில் இக்கவிதைத்தொகுப்பை வெளிக்கொணர்ந்து கைகளில் தவழ விட்டிருக்கும் அகநாழிகை பதிப்பகத்தாரையும் திரு. பொன். வாசுதேவன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களுக்கும் அழகாக அச்சிட்ட அச்சகத்தாருக்கும் எனது நன்றிகள். அட்டைப்படத்திலிருப்பது என் காமிராவில் பிடிபட்ட குருவிதான் :-)

தனது பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையில் அணிந்துரை அளித்து உற்சாகப்படுத்திய "வல்லமை" மின்னிதழின் நிறுவனர்  திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கல்லூரிக்காலத்தில் கவிதைப்போட்டியொன்றில் பரிசு பெற்ற “விடிய மறுக்கும் இரவுகள்” என்ற எனது கவிதைதான் முதல் விதையாய் விழுந்து எங்கள் தமிழ்ப்பேராசிரியர் திரு. நடராஜன் அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் வளர ஆரம்பித்து, வலைப்பூவாய்க் கிளை பரப்பினாலும் கணவரும் குழந்தைகளும் கொடுத்த உற்சாகத்தால்தான் இன்று கவிதைத்தொகுப்பாய் மலர்ந்து நிற்கிறது. கணவரை எப்போதோ பெயரில் கூட்டுச் சேர்த்துக்கொண்டாயிற்று, ஆகவே தூண்டுகோலாய் இருக்கும் எனது குழந்தைகள் பாஸ்கர், சுருதி இருவருக்கும் இத்தொகுப்பை சமர்ப்பணம் செய்கிறேன்.

இதற்கு மேல் நான் என்ன சொல்ல?.. என் எழுத்துகள் பேசட்டும்.

சிறகு விரித்த என் பயணத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.

Thursday, 12 December 2013

முதலீடும் வட்டியும்..

பூரியா சப்பாத்தியா என்ற குழப்பத்திற்கு விடை தேடி முடிக்கையில் உப்புமா வந்து உட்கார்ந்து கொள்கிறது காலை உணவாக.

கற்பித்தலின் மூலம் கற்றுக்கொள்வதை விட பார்த்தும் கேட்டும் உணர்ந்தும், ஏற்படும் அனுபவத்தால் கற்றுக்கொள்வதே அதிகமும் வழி காட்டுகிறது.

சுமையாய் நினைக்காத வரை கனம் உணரப்படுவதில்லை.

நமது போதனைகளிலிருந்து கற்றுக்கொள்வதை விட நம்மிடமிருந்தே அதிகமும் கற்றுக்கொள்கின்றன குழந்தைகள்.

பக்குவப்பட்டவனை எதுவும் பாதிப்பதில்லை.

‘வாழ்க்கை என்பது இப்படித்தான்’ என்ற பக்குவம் எல்லா மனிதர்களுக்குமே வந்து விடுகிறது. சிலருக்குச் சீக்கிரமாக.. சிலருக்கு வாழ்வு முடியும்போது.

வாழ்வின் ஆரம்ப காலங்களில் செய்யும் முதலீட்டுக்கான வட்டியே பிற்பாதியில் கிடைக்கிறது. நல்லதை முதலீடு செய்து மகிழ்ச்சியைப் பெறுவோம்.

பிறரின் கண்ணீருக்குக் காரணமாக இருப்பவன் இறுதியில் அவர்களை விட அதிகமாகக் கண்ணீர் விட நேரிடும்.

கண்ணீர்ப்பூக்களைப் புன்னகைப்பூக்களாக மாற்ற வல்லது அன்பு.

ஆரம்பகால உற்சாகம் அடுத்து வைக்கும் அடிகளிலும் குன்றாதிருப்பதே வெற்றியை நோக்கி நம்மை வேகமாக இட்டுச்செல்லும்.

Saturday, 9 November 2013

எப்படிச்சொல்வேனடி தோழி!! (குங்குமம் தோழியின் தினமொழிகளில் சாரல் துளிகள்)

ஃபேஸ்புக்கில்"குங்குமம் தோழி" பத்திரிகை, நண்பர்களின் சிந்தனைகளை தினமொழி என்ற தலைப்பில் வெளியிட்டு வருகிறது. எனது சாரல்துளிகளும் அவ்வப்போது இடம் பெறுவது வழக்கம் என்றாலும் இந்தத்தடவை தனது அளவற்ற அன்பினால் என்னைத் திக்கு முக்காடச் செய்து விட்டாள் என் தோழி. செப்டம்பர் இறுதி நாளில் தொடங்கி அக்டோபர் 10-ம் தேதி வரைக்கும் ஒன்றிரண்டு நாட்களைத்தவிர தினமும், அதாவது கிட்டத்தட்ட அந்த வாரம் முழுவதையுமே எனது "சாரல் துளிகளுக்காக" ஒதுக்கிய அவளது அன்பை என்னவென்பது.

"இந்த வாரம்.. எனது வாரம்" என்று வீட்டில் சற்றே கர்வப்பட்டுக்கொண்டேன். பின்னே,.. நம் அருமை பெருமைகளை வீட்டிலுள்ளவர்களிடம் இது மாதிரியான சமயங்களில்தானே டமாரம் அடித்துக்கொள்ள முடியும். நமக்கென்று ஒரு கெத்து இருக்கிறதல்லவா :-)))

உங்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதே சமயம் என் கல்வெட்டுகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டுமே. ஆகவே இங்கே பகிர்ந்து விட்டேன் :-)








இன்னொரு முறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் தோழி.

Monday, 4 November 2013

பாதுகாப்பே மகிழ்ச்சியானது..

தீபாவளிக்கொண்டாட்டமெல்லாம் நல்லபடியாக முடிந்ததா?.. பெண்களெல்லாம் பலகாரங்கள் சுட்டு முடித்த களைப்பில் இருப்பார்கள். மற்றவர்கள் அவற்றை ஒரு கை பார்த்த களைப்பிலும் புதுப்படங்களைக் கண்டு களித்த மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். ஆனால், இந்தப் பொட்டுப்பொடிசுகளுக்கு மட்டுந்தான் இன்னும் தீபாவளி முடியவில்லை. பின்னே.. வாங்கி வைத்திருக்கும் பட்டாசுகள் இன்னும் மீதம் இருக்கிறதே :-) நடுராத்திரி என்றும் பாராமல் வெடித்துத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். சிறிசுகள் பட்டாசு கொளுத்தும் ஸ்டைலைப் பார்த்தால் பழமொழியில் பொய்யில்லை என்றுதான் தோன்றும் :-). புதுத்துணிகள் பலகாரங்கள் கொடுப்பதை விட பட்டாசுகள்தானே அவர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சி.

"எக்கா.. லெச்சுமி வெடி, குருவி வெடியெல்லாம் வெடிக்கறது இருக்கட்டும். அணுகுண்டை வெச்சு வெடிக்க வைப்பியா?" என்று நக்கலுடன் கேட்டான் வயதில் இளையவனானாலும் விளையாட்டுத்தோழனான வெங்கிட்டு. எல்லாம் ஒரு காலத்தில் நான் பட்டாசு வெடித்த லட்சணத்தைப் பார்த்துத்தான். ஒரு தாளைக் கிழித்து அதில் பட்டாசுத்திரி படும்படி வைத்துவிட்டு தாளின் ஒரு முனையைக் கொளுத்தி விட்டு ஓடி வந்து விடுவேன். தீ பரவி பட்டாசுத்திரியைத் தொட்டதும் படாரென்று வெடிக்கும். அவ்வளவு வீர தீர தைரியசாலியான என்னை.. என்னைப் பார்த்து ஒரு சிறுவன் இப்படிக் கேட்கலாமோ!! :-))). நக்கலடித்ததுமில்லாமல் "நானெல்லாம் அணுகுண்டு வெடிக்க பயப்படவே மாட்டேன். ஒண்ணு வெடிச்சுக் காட்டட்டுமா" என்று உதார் வேறு விட்டுக்கொண்டே ஒரு அணுகுண்டைக் கையில் எடுத்தான். சரி,.. ஊதுவத்தியைக் கொடுத்து விட்டு நாம் ஓட்டம் பிடித்து விடலாம் என்று நம்ம்ம்ம்பி கொஞ்சம் இந்தப்பக்கம் திரும்பினேன். 'பட்ட்டார்' என்றொரு சத்தம் காதைப்பிளந்தது. திடுக்கிட்டுத்திரும்பினால் கொதகொதவென்று வெந்த கையுடன் நிற்கிறார் அண்ணாத்தை. என்னடாவென்றால் அணுகுண்டை கையிலிருக்கும்போதே பற்ற வைத்து தூக்கி எறிந்து ஆகாயத்தில் வெடிக்க வைக்கலாம் என்று நினைத்தாராம். ஃப்ளாப் ஆகிவிட்டதாம். கூலாகச் சொல்கிறார். 

 நன்றாக நாலு திட்டு திட்டிவிட்டு, தரதரவென்று வீட்டுக்குள் இழுத்து வந்து குளிர்ந்த தண்ணீரில் கையை விடச்சொல்லி, பின் இங்க்கையும் நிறைய ஊற்றி, "வீட்டுக்குப் போய் அம்மா கிட்ட காமி. மருந்து இருந்தா போட்டு விடுவாங்க. இல்லைனா ஆசுத்திரிக்குப் போ" என்று சொல்லி அனுப்பினேன். இத்தனை களேபரத்திற்கும் பிள்ளையாண்டன் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வர வேண்டுமே!! மூச்.. அத்தனை வேதனையையும் எப்படித்தான் அடக்கிக் கொண்டிருந்தானோ. இப்பொழுது நினைத்தாலும் பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

இங்கேயும் சில பிரகஸ்பதிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். வெடிகளை மட்டுமென்ன, ராக்கெட்டுகள், பூச்சட்டி என்று சொல்லப்படும் பொறிவாணங்களையும் கூட அனாயாசமாகக் கையில் பிடித்துக்கொண்டுதான் பற்ற வைக்கிறார்கள்.அது பொங்கி மங்களம் பாடும்போது இவர்களும் சேர்ந்து கொண்டு "ஐயோ.. அம்மா, வலிக்குதே" என்று கோரஸ் பாடுவதுண்டு.

மும்பையில் தீபாவளி தேய்பிறை ஏகாதசியன்று ஆரம்பித்து, வளர்பிறை துவிதியை வரைக்கும் ஏழு நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதில் லக்ஷ்மி பூஜை மிகவும் முக்கியமான பண்டிகை. இதைப்பற்றி விவரமாக ஏற்கனவே எழுதியிருக்கிறேன். சாயந்திரம் வீட்டில் லக்ஷ்மி பூஜையை முடித்து விட்டு, புதுசை உடுத்திக்கொண்டு பார்க்கிங்கிற்குப் போய் வாகனங்களுக்குப் பொட்டிட்டு, மாலை சாற்றி, ஊதுவத்தி காண்பித்து பூஜை செய்தபின் பட்டாசுகளைக் கொளுத்துவது இங்கே வழக்கம். நாங்களும் வழக்கம்போல் வீட்டில் பூஜை முடித்து, வாகனங்களுக்கும் பூஜை செய்து விட்டு பட்டாசு கொளுத்த ஆரம்பித்தோம். பையருக்கு நட்சத்திரப்படி நேற்று பிறந்தநாளும் கூட :-))

எங்கள் வீட்டில் கடந்த சில வருடங்களாக ஒலியை ஏற்படுத்தும் பட்டாசுகளைக் குறைத்துக்கொண்டு ஒளிவெள்ளத்தில் மூழ்கடிக்கும் பட்டாசுகளை வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். "Go green" என்று சிந்திக்க ஆரம்பித்திருக்கும் பிள்ளைகளின் ஆர்டர். அவ்வப்போது குழந்தைகள் சொல்வதையும் பெரியவர்கள் கேட்க வேண்டும்தானே :-). இந்த வருடம் மும்பை முழுக்கவே ஒலிப்பட்டாசுகள் குறைவாகவும் ஒளிப்பட்டாசுகள்தான் அதிகமாகவும் வெடிக்கப்பட்டதாக நாளிதழ் தகவல் கொடுத்தது. இதைக் கண்கூடாகவும் கண்டோம். 

பட்டாசு கொளுத்தி முடித்தபின் வீட்டுக்கு வந்து, தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். எங்கள் பில்டிங்கின் எதிர் வரிசையிலிருக்கும் குடியிருப்பில் கீழ்த்தளத்தில் கடைகளும் உண்டு. கடைக்காரர்கள் பை நிறைய விதவிதமான பட்டாசுகளை வைத்துக்கொண்டு ஜமாய்த்துக்கொண்டிருந்தார்கள். கேலியும் கூத்துமாகப் பொழுது போய்க்கொண்டிருந்தது. வெடிகளில் 25 shots என்றொரு வெடிவகை உண்டு. இரண்டு செங்கல்களை ஒட்டி பாக்கெட் போட்டுக்கொடுத்தாற்போன்ற அமைப்பிலிருக்கும் அதை திரியைக் கொளுத்தி வைத்து விட்டால் போதும். 25 வெடிகளும் பெட்டியிலிருந்து ஒவ்வொன்றாகக் கிளம்பி வானத்தில் போய் வெடித்துப் பூப்பூவாய்ச் சிதறும். இதை அந்த இளைஞர் கூட்டத்தில் ஒருத்தர் பற்ற வைத்து விட்டு யதாஸ்தானம் திரும்பினார். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது.

சர்ர்ர்ரென்று வேகமாக வந்த ஹோண்டா சிட்டி வாகனமொன்று புகைந்து கொண்டிருந்த வெடியின் மேலாகக் கடந்து அதை இழுத்துக்கொண்டு சென்றது. "அரே.. பாப்ரே.." என்று அலறினார்கள் அக்கம்பக்கம் நின்றவர்கள் அனைவரும். நடந்த விபரீதத்தை வண்டியின் டிரைவர் உணருமுன்னே வண்டிக்கடியில் மாட்டியிருந்த பெட்டியிலிருந்து ஒவ்வொரு வெடியாகக் கிளம்பி டாம்.. டாமென்று வெடிக்க ஆரம்பித்தது. அவ்வளவுதான் தடதடவென்று வண்டியிலிருந்தவர்கள் இறங்கி ஓடி  பாதுகாப்பாக நின்று கொண்டார்கள். உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஓடுவது என்று சொல்வார்களே!! அதை அன்று கண் முன் கண்டேன். கெட்டதிலும் நல்லதாக ஒரு விஷயம் நடந்திருந்தது. அதாவது வண்டியில் மாட்டி இழுத்த வேகத்தில் பெட்டி கிடைமட்டமாகச் சரிந்திருந்ததால் வெடிகளும் மேற்புறமாகக் கிளம்பாமல் கிடைமட்டமாகச் சாலையில் சென்று வெடித்துக்கொண்டிருந்தன. மேற்புறமாகக் கிளம்பியிருந்தால் வண்டி என்னவாகியிருக்குமென்று நினைத்துப்பார்க்கவே குலை நடுங்குகிறது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறதே. அதுவும் குஞ்சும் குளுவானுமாகக் குழந்தை குட்டிகளுடன் சென்று கொண்டிருந்த குடும்பம் அது.

சாலைகளில் வெடிகளை வைப்பவர்கள் கடந்து செல்பவர்களை எச்சரிக்க வேண்டாமோ!! வழக்கமாக "பட்டாசு வெச்சிருக்கோம். கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க" என்று அனைவரும் எச்சரிக்கை செய்வது வழக்கம்தான். என்னவோ போங்க.. அன்றைக்கு அந்தக் குடும்பத்தினரின் தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியந்தான். காரின் கீழிருந்து புறப்பட்டு வந்த ஒவ்வொரு வெடிகளையும் பதைபதைக்கும் மனங்களோடு நாங்களும் பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஒரு சின்னப்பொறி எத்தனையோ குடும்பங்களின் வீடுகளை ஒளிவெள்ளத்தில் ஆழ்த்துகிறது. அதேபோல் கண்ணீர்க்கடலிலும் மூழ்கடித்து விடவும் வல்லது. நாம் மட்டுமல்ல நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கத்தான் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும். காலத்துக்கும் நினைத்துப் பார்த்து வெம்பி வேதனைப்பட அல்ல.
நேற்று இரவில் சுமார் பதினொரு மணியளவில் பக்கத்துப் பில்டிங்கில் எல்லோருடைய தூக்கத்தையும் கலைக்கும் வண்ணம் அதிரும் வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. தவுசண்ட் வாலாவோ என்னவோ!!. "திவாலி முடிஞ்சாச்சு.. போய்த்தூங்குங்க" என்று கத்த வேண்டும் போலிருந்தது. அதன் பின் ஒன்றரை மணியளவில் ஆரம்பித்து விடியற்காலை சுமார் நான்கு மணி வரைக்கும் கூட பட்டாசுச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததாம். ear muffler மற்றும் ear plugs துணையிருந்தும் சத்தம் காரணமாகத் தூங்க முடியாமல் தவித்த பையர் விடியலில்தான் தூங்கியிருக்கிறார். நமக்கே இப்படியென்றால் கைக்குழந்தைகள் முதியவர்கள் இருக்கும் வீடுகளில் என்ன கதியோ!!. பண்டிகையின் மகிழ்ச்சியையே கெடுத்து விடுகிறது இப்படிப்பட்ட சிலரின் செயல்கள். அததற்கென்று நேரம் காலம் இருக்கத்தானே செய்கிறது.

எல்லோரும் சந்தோஷப்படத்தான் பண்டிகைகள். அத்தனை பேரையும் வேதனைக்குள்ளாக்கி ஒரு சிலர் சந்தோஷப்பட அல்ல. நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்.. நம்மைச்சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயல்வோம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.. (எங்கூர்ல இன்னும் திவாலி முடியலை :-))

LinkWithin

Related Posts with Thumbnails