ஃபேஸ்புக்கில் Tadrupa Events, கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி தினந்தோறும் ஒரு ஈற்றடியைக்கொடுத்து அதற்கு வெண்பா எழுதும் போட்டியை நடத்தி வருகின்றனர். இப்போட்டி ஒரு வருடத்திற்கு நடக்கவிருக்கிறது.
52ஆம் நாள் (14.08.2026) அன்று நடந்த போட்டியில் கொடுக்கப்பட்ட "குயிலினைக் கொண்ட குரல்" என்ற ஈற்றடிக்கு எழுதப்பட்ட எனது வெண்பாவும் பரிசுக்குரியதாய்த் தேர்வானது.
எனது வெண்பா:
தேன்சிந்தும் செந்தமிழில் தெள்ளமுதப் பாட்டிசைத்து
வான்சிந்தும் மாரியாய் வாய்சொரிய – மான்போல்
மயில்போல் மயக்கிடும் மங்கைக்கு தேன்போல்
குயிலினைக் கொண்ட குரல்.
68ஆம் நாள் (30.08.2026) அன்று நடந்த போட்டியில் கொடுக்கப்பட்ட "வண்ண மலர்போல் மனம்" என்ற ஈற்றடிக்கு எழுதப்பட்ட எனது வெண்பாவும் பரிசுக்குரியதாய்த் தேர்வானது.
எனது வெண்பா:
எண்ணத்தில் தூய்மை இதயத்தில் பேரன்பு
கண்ணில் இரக்கம் கனிந்திருக்க - விண்ணவர்
மண்ணிற்கு வந்தரென மாண்பு உடைத்தோர்க்கு
வண்ண மலர்போல் மனம்.
80ஆம் நாள் (11.09.2026) அன்று நடந்த போட்டியில் கொடுக்கப்பட்ட "கற்றவர் சொல்லே கரும்பு" என்ற ஈற்றடிக்கு எழுதப்பட்ட எனது வெண்பாவும் பரிசுக்குரியதாய்த் தேர்வானது.
எனது வெண்பா:
நற்சொல்லைக் கல்லாதோர் நாளும் தெளிவின்றி
சிற்றறிவால் சீர்கெடுவர் சிந்தியாது - கற்றதால்
பெற்ற சுடர்மிகு பேரறிவால் தீர்வளிக்கும்
கற்றவர் சொல்லே கரும்பு.

No comments:
Post a Comment