Tuesday, 7 May 2019

ஃப்ரெஷ் பட்டாணி குருமா செய்முறை

தினமும் இட்லி, தோசை, உப்புமா வகைகள் சாப்பிட்டுச்சாப்பிட்டு போரடித்துப்போய் குடும்பத்தினர் கொலைவெறியில் இருப்பார்கள். அவர்கள் சாதாரணமாகப் பார்க்கும் பார்வையில் கூட, "உனக்கு வேற டிபனே செய்யத்தெரியாதா?" என்ற கேள்வி சொட்டும். அப்படியொரு பொழுதில் 'நாளை என்ன டிஃபன் செய்யலாம்?' என முந்தின தினமே மதியத்தூக்கத்தைத் தியாகம் செய்து விட்டு சைடு வாக்கில் படுத்து சிந்திக்கவும்.

"ஆ!!!! சப்பாத்தியும் பட்டாணி குருமாவும் செய்யலாம்' என்று பளிச்சென ஐடியா உதித்ததும், உடனே அடுக்களைக்குச் சென்று ஒரு கிண்ணத்தில் தேவையான காய்ந்த பட்டாணியைப் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும். பின் அன்றாட வேலைகளைத் தொடரவும்.

'முளை விட்ட பட்டாணியில் குருமா செய்தால் குடும்பத்தினருக்குத் தேவையான ப்ரோட்டீன் சத்து கிடைக்குமே' என்றொரு எண்ணம் தோன்றினால் நீங்கள் ஒரு பொறுப்பான குடும்ப இஸ்திரி என அறிக. இரவு பத்தரை மணி வாக்கில், ஊற வைத்த பட்டாணியை நீரை வடித்து விட்டு முளை கட்ட எத்தனிக்கும்போதுதான், கோதுமை மாவு தீர்ந்து விட்ட விவரமும், அந்நேரத்துக்கு கடைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டிருக்கும் என்ற விவரமும் மூளையின் டேட்டாபேஸிலிருந்து சப்ளை ஆகும். "ச்சே... எடுத்து வெச்சிருந்தாலும் கொடுத்து வெச்சிருக்கணும். சப்பாத்தி குருமாவை நாளாக்கழிச்சு பார்த்துக்கலாம்" என அலுத்துக்கொண்டு பட்டாணி போட்டு வைத்த டப்பாவை மூடி, ஃப்ரிஜ்ஜில் உள்ள்ள்ளே தள்ள்ளி வைத்து விடவும். மறுநாள் காலை வழக்கம்போல் உப்புமா செய்து வீட்டினரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளவும். அன்றாட வேலைகள் மற்றும் பிக்கல் பிடுங்கல்களிடையே பட்டாணி டப்பா நினைவின் அடுக்குகளில் அமிழ்ந்து மறைந்தே போகும்.

ஒரு சுபயோக சுபதினத்தில், புதைபொருள் ஆராய்ச்சியின்போது.. அதாவது, வேறு ஒரு பொருளைத் தேடும்போது, அந்த டப்பா தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். அதில் என்ன வைத்தோமென்ற ஆவல் மீதூற டப்பாவைத் திறந்து நோக்குங்கால் பட்டாணிகள் முளை கட்டி, முளைத்து, வேர் விட்டு, பசிய சிறு இலைகளுடன், கூட்டில் சின்னஞ்சிறு குஞ்சுகளென அண்ணாந்து நம் முகம் நோக்கும்.

கசிந்து, கண்ணீர் மல்கி, 'ஒரு மாசத்துக்கு மேலாகியும் இது எப்படி பொழைச்சுக் கிடக்குது பாரேன்!!' என ஆனந்தித்து, "வா.. என் ஷெல்வமே" என தோட்டத்திற்குக் கூட்டிச் சென்று குழியில் தள்ளி மூடி விட வேண்டும். போனால் போகிறதென்று ஒன்றிரண்டு செடிகள் வளர்ந்து பூத்துக் காய்க்கும்.

அப்புறமென்ன??.. ஃப்ரெஷ்ஷாகப் பறித்த பட்டாணியில் நீங்கள் புலாவ்தான் செய்வீர்களோ இல்லை மட்டர் பனீர், ஆலு மட்டர் என வகைவகையாய் செய்வீர்களோ... உங்கள் பாடு.

குருமா செய்முறையா??.. குருமா தவிர்த்த குழம்புகளாலும் ஆனது இவ்வுலகம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails