படக்கொடையளித்த இணையத்திற்கு நன்றி
பொய்மையை நம்பிடும் பொம்மையன்று சீர்தூக்கி
மெய்மையை ஆய்வாள் இவள்
விளக்கம்: யார் என்ன பொய் சொன்னாலும் நம்பிக்கொண்டு பொம்மை போல் இல்லாமல், ஆராய்ந்து அதிலுள்ள உண்மையை அறிவாள்
மரணத்தின் கண்களில் மண்தூவி மன்னும்
தரணியை ஆள்கிறாள் பெண்
விளக்கம்: பிறக்கு முன்னும் பின்னும் அவளை அழிக்க மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் முறியடித்து, மரணத்தின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு இவ்வுலகை ஆள்கிறாள்.
விலைகொடாமற் பெண்ணுக்கு வாழ்வது கிட்ட
தலையெடுக்க வேண்டும் சுயம்
விளக்கம்: வரதட்சணை எனும் விலை கொடுக்காமல் பெண்ணுக்கு மணவாழ்வு கிடைக்க மனவுறுதியுடன் சுயமாய் சிந்திப்பவளாய், தன் காலில் நிற்பவளாய் தன்மானத்துடன் இருப்பவளாய் இருத்தல் வேண்டும்.
கல்விதனைப் பற்றிடக் கெட்டியாய் பெண்ணுக்கு
நல்வினைகள் ஓங்கும் தினம்
விளக்கம்: கல்வி எனும் பிடியைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டால் பெண்ணுக்கு நல்லவை நடக்கும்.
கருவறுத்த தீயோரும் தான்மறந்தார் தம்மைக்
கருக்கொண்ட தாயுமோர் பெண்
விளக்கம்: பெண்ணைக் கருவிலேயே அழிக்கும் தீயவர், தம்மைச்சுமந்தவளும் ஒரு பெண்தான் என்பதை மறந்து விடுகின்றனர்.
தளைப்பட்ட பெண்பாவாய் கட்டனைத்தும் மாயை
களைந்தே எழுக விரைந்து
விளக்கம்: தன்னைக் கட்டிப்போட்டிருப்பதாக நினைக்கும் தளைகள் அனைத்தும் மாயையே.. அவற்றை விரைந்து களைந்து எழுவாய் பெண்ணே.
செதுக்கியும் ஆக்கியும் செய்திடுவாள் செம்மை
ஒதுக்கிடாளோர் குப்பை அறி
விளக்கம்: வேண்டாத குப்பை என்று ஒதுக்காமல் என எதையும் செதுக்கிச் செம்மை செய்திடுவாள். (எதற்கும் லாயக்கில்லாதவர் என ஒதுக்கப்பட்ட மனிதர்களையும் செம்மையாக்குபவள் பெண்)
வால்: மகளிர்தினத்தின் சிறப்புக்கொண்டாட்டமாய் எனது குறள் வெண்பாக்கள் அரங்கேறுகின்றன.
4 comments:
அருமை... அருமை.
மகளிர்தின நல் வாழ்த்துகள்.
படம், படக்குறள், படவிளக்கம் அனைத்தும் அருமை!
மகளிர்தின நல்வாழ்த்துகள் சகோதரி.
(இன்றுதான் உங்கள் தளத்தைக் கண்டேன், இனித் தொடர்வேன்)
அருமை அருமை.....
மகளிர் தின நல்வாழ்த்துகள்.
மிக அருமை.
வாழ்த்துகள்.
Post a Comment