Showing posts sorted by relevance for query பிள்ளையார் சதுர்த்தி. Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query பிள்ளையார் சதுர்த்தி. Sort by date Show all posts

Tuesday, 20 September 2011

சுயம்பு கணபதி - நவி மும்பை.


மராட்டிய மாநிலத்தின் தலைநகராம் மும்பையிலிருந்து சுமார், 28.8 கிலோமீட்டர்கள் தொலைவில் ‘நவி மும்பை’ என்றழைக்கப்படும் பகுதியில் இருக்கிறது ‘பன்வெல்’(Panvel). பழமை வாய்ந்த இந்த ஊரின் முன்னேற்றமடைந்த பகுதி ‘புதிய பன்வெல்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் கிழக்குப் பகுதியில் தானாகவே தோன்றி, அருள் பாலிக்கும் பிள்ளையாருக்கு கோயிலொன்று இருக்கிறது.
கோயிலின் முன் புறத் தோற்றம்.
‘அருள் மிகு சுயம்பு கணபதி திருக்கோயில்’ மிகவும் பழமையானது. சுமார் இரு நூறு வருடங்களுக்கு முற்பட்டதென்று சொல்லப் படுகிறது. அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் காடுகள் மலிந்தும், சில இடங்களில் அது அழிக்கப்பட்டு விவசாயம் செய்யப் பட்டும் வந்தது.

அப்படி ஒரு நாளில், ‘திரு.அஷ்டம்கர் குடும்பி’ என்பவர் தனக்குச் சொந்தமான நிலத்தை, விவசாயத்திற்காக பண்படுத்திக் கொண்டிருந்தபோது, கலப்பையில் ஏதோ தட்டுப் படுவது போல் தோன்றியது. உடனே வேலையை நிறுத்தி விட்டு, ஆராய, பூமிக்குள்ளிருந்து பிள்ளையார் மற்றும் ஆஞ்சனேயர் சிலைகள் கிடைத்திருக்கின்றன.

மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனவர் சின்னஞ்சிறு கோயிலொன்றை எழுப்பி, பக்திப் பெருக்குடன் வழிபடத் தொடங்கினார். பொதுவாகவே மராட்டிய மக்களுக்கு பிள்ளையார் விருப்பக் கடவுளாவார். அதற்கு ஒவ்வொரு வருடமும் மும்பையில் பத்து நாட்கள் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்டு வரும் பிள்ளையார் சதுர்த்தி விழாவே சான்று.
சுயம்பு கணபதி.
ஆகவே, இங்கேயும் அங்காரக சதுர்த்தி, வினாயகர் சதுர்த்தி, கணேச ஜெயந்தி, சதுர்த்தசி தினங்கள் மற்றும், ஆஞ்சனேயர் ஜெயந்தி போன்ற தினங்கள் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தன. சுற்று வட்டார மக்களைப் பொறுத்த மட்டில் இது அவர்களுக்கு ஒரு புனிதத் தலமாகவே விளங்கியது. காலப் போக்கில் சில தீய சகுனங்கள் தென்படவே கோவிலைப் புதுப்பிக்க வேண்டுமென்று கடந்த 1994 ஆம் ஆண்டு, சூன் திங்கள் இரண்டாம் தேதி, ‘திரு. கண்டால்கர் குடும்பிய’. என்பவரால் கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டது.

அழகான சின்னக் கோயில்தான். சுயம்பு கணபதி வெள்ளிக் கவசம் சார்த்திக் கொண்டு அருள் பாலிக்கிறார். ஐம்பொன்னால் ஆன மூர்த்தியொன்றும் வழிபடப் படுகிறது. பிள்ளையார் சதுர்த்தி நடக்கும் இந்தப் பத்து நாட்களும் முன் மண்டபத்தில் அமர்ந்து தரிசனம் அளிக்கிறார். ஆஞ்சனேயருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது.

இந்தச் சன்னிதிகளுக்கு தெற்குப் பக்கத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் தேவியருடன் கோயில் கொண்டிருக்கிறார். இவர் இங்கே வந்த வரலாறை ஒரே வரியில் அடக்கி விட முடியாது. ‘ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயண சபை’யின் முயற்சியால் இவர் இங்கே வந்த பிற்பாடுதான் கோயில் இன்னும் சிறப்புற்றது என்றே சொல்லலாம். இப்போது கோயிலின் பராமரிப்பு சபையின் நிர்வாகத்திலும், திரு. நாகராஜன் அவர்களின் மேற்பார்வையிலும் செவ்வனே நடந்து வருகிறது. சபையின் நற்பணிகளையும், ஸ்ரீநிவாசப் பெருமாளையும் பற்றிய விரிவான பகிர்வு பின்பு எழுதப்படும்.

பிள்ளையார் சன்னிதியின் வடக்குப் புறத்தில் நாகராஜனுக்கும், ராணிக்கும் ஒரு சன்னிதி இருக்கிறது. ஆயில்ய தினங்களில் சிறப்பு அபிடேக ஆராதனைகள் நடத்தப் படுகின்றனவாம். அருகிலேயே கற்சிலைப் பிள்ளையார் ஒருவரும் இருக்கிறார். இந்த நாகராஜன் இங்கே வந்ததும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம்தான்.
ஐம்பொன் மூர்த்தியும், விழாவுக்கு வந்திருக்கும் பிள்ளையாரும்.
கோயிலில் சில துர்ச்சகுனங்களைக் கண்டு, கேரளத்திலிருந்து தாந்திரீகர்களை அழைத்து பிரச்சன்னம் பார்த்ததில், இந்த கோயில் இருக்கும் மனையில் பாம்பு ஒன்று வெகு காலமாக இருப்பதாகவும், அதனால், ஏற்படும் தோஷத்தை நிவர்த்தி செய்ய நாகராஜன், ராணி சிலைகளை வைத்து பூசிக்க வேண்டும் என்றும் உத்தரவு வந்ததாம். நாங்கள் போயிருந்த போது கூட அங்கிருந்த அரசமரத்தடியில் ஒருவர் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் கோயிலின் செல்லப் பாம்பாம் J

இவர்களுக்குப் பக்கத்தில் நவக்கிரகங்களுக்கென ஒரு தனிச் சன்னிதி இருக்கிறது. இந்த இரண்டு சன்னிதிகளுக்கும் நடுவே துர்கா தேவிக்கும் ஒரு சன்னிதி எழுப்ப வேண்டி ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் நடந்த வண்ணம் உள்ளன.
 நவக்கிரக சன்னிதி. மத்தவங்கள்லாம் மறைஞ்சுக்கிட்டாங்க.

கோமாதா..(குளிக்க அடம் பிடிச்சு அழுதுக் கிட்டிருக்காங்கன்னு பராமரிக்கும் பையர் சொன்னார் :-)
பசு மடம் ஒன்றும் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு பசுவும் கன்றும் இங்கே நல்ல முறையில் பராமரிக்கப் படுகின்றன. ஒரு பையர் ரொம்ப அருமையா இதுகளைப் பார்த்துக்கறார். இன்னொரு பசு மழை முடிஞ்சதும் ஊர்லேர்ந்து வரப்போகுதாம். பன்வெல் ரயில் நிலையத்திற்கு வெகு அருகிலேயே இந்தக் கோயில் இருப்பதால் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து செல்ல வசதியாக இருக்கிறது.
கோயிலில் நடந்து வரும் பூசைகளாவன:
ஸ்ரீ ராம நவமி,
அனுமன் ஜெயந்தி,
வைகுந்த ஏகாதசி,
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி,
விளக்கு பூஜை,(ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று நடத்தப் படுகிறது)
சங்கஷ்டி சதுர்த்தி (ஒவ்வொரு மாதமும்)
பிள்ளையார் சதுர்த்தி (ஒவ்வொரு வருடமும் பத்து நாட்கள்)
பாலாஜி திருக்கல்யாண உற்சவம்(ஒவ்வொரு வருடமும் ஜனவரித் திங்களில்)
நவராத்திரிப் பண்டிகை – அஷ்டமி, நவமி தினங்களில் சண்டி ஹோமம் சிறப்பாக நடத்தப் பெறுகிறது.
சஹஸ்ர நாம பாராயணம் – ஒவ்வொரு சனிக்கிழமையும்.
இந்தக் கோயில் திறந்திருக்கும் நேரங்கள்:
தினமும் காலையில் ஆறிலிருந்து பன்னிரண்டு மணி வரைக்கும். மற்றும் மாலையில் ஐந்திலிருந்து எட்டு மணி வரைக்கும்.


டிஸ்கி: வல்லமைக்காக எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.




Monday, 21 September 2015

கணபதி பப்பா.... மோர்யா.


“கண்பதி பப்பா மோர்யா - மங்கள் மூர்த்தி மோர்யா
கண்பதி பப்பா மோர்யா - புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா”

என்ற முழக்கங்கள் மஹாராஷ்ட்ரா முழுவதும் கேட்கத்தொடங்கி விட்டன. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று ஆரம்பித்து பதினான்காம் நாளான அனந்த சதுர்த்தசி வரையிலும் மாநிலம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும். சிவாஜி மஹராஜ் காலத்திலிருந்தே பிள்ளையார் சதுர்த்தி  அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்ததாகவும், வெகு காலத்திற்குப் பின் அது பொது மக்களும் கொண்டாடும் விதமாக மாற்றியமைக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இவ்விதம் பொது மக்கள் கூடிக்கொண்டாடிய இவ்விழாவை, அடிமைப்பட்டிருந்த இந்திய மக்களை ஆங்கிலேயருக்கு எதிராகத் திரட்ட பால கங்காதர திலகர் பயன்படுத்திக்கொண்டார். அதன் பின்னரே இது வெகுஜன அளவில் கொண்டாடப்பட ஆரம்பித்தது. ஒவ்வொரு இடத்திலும் விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்பட்டு வந்தாலும், மராட்டிய மாநிலத்தில் தனிச்சிறப்போடு கொண்டாடப்பட்டு வருகிறது.

மராட்டிய மக்கள் “ஷ்ராவண்” மாதம் ஆரம்பித்ததுமே விரதமிருக்க ஆரம்பித்து விடுவார்கள். தமிழ் முறைப்படி அப்போது ஆடி மாதம் நடந்து கொண்டிருக்கும். அம்மாதம் முழுவதும் புலால் ஒதுக்கி, விரதம் இருந்து, வசிப்பிடங்களைத்தூய்மை செய்து, பிள்ளையாரை வரவேற்கத்தயாராவார்கள்.  பிள்ளையார்கள் அரையடியிலிருந்து எழுபது அடி உயரம் வரை வெவ்வேறு அளவிலும், வண்ணங்களிலும், விதங்களிலுமாக  கலைஞர்களின் கைவண்ணத்தில் தயாராக ஆரம்பிப்பார்கள். புதிது புதிதாகச் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில் கைவினைக் கலைஞர்களின் கற்பனை வானளாவும். இந்த வருடம் கணபதி “பாகுபலி” வேஷம் போட்டிருந்தார். கடைத்தெருவில் பிள்ளையாருக்கான ஆடை அணிகலன்களிலிருந்து மண்டப அலங்காரங்களுக்கான ஜிகினாக்கள், விளக்குகள், மற்றும் பூஜைப்பாத்திரங்கள் என எல்லாமும் விற்பனைக்கு வரும். போன வருடம் மூஞ்சூறும் தனியாகச்செய்யப்பட்டு விற்பனைக்கு வந்திருந்தது. பிள்ளையார் அளித்த மோதகத்தைக் கையில் ஏந்தியபடி பவ்யமாக, பொன்னிறத்தில் பளபளவென்று நின்றிருந்த அதைக் கண்டவுடன் வாங்கி வந்தாயிற்று. வருடா வருடம் புதுப்புது அவதாரங்களில் வரப்போகும் பிள்ளையார்களை வரவேற்க எப்போதும் இதே இளமையுடன் காத்திருக்க வரமும் வாங்கி விட்டார் "உந்தீர் மாமா". மூஞ்சூறு உந்தீர் மாமா என்று மராட்டிய மக்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது.


தயாரான பிள்ளையார்கள் காட்சிக்கு வந்ததும், சதுர்த்திக்கு இருபது நாட்கள் முன்பிருந்தே மக்கள் தங்களுக்குப் பிடித்த பிள்ளையாரைத் தேர்ந்தெடுத்து முன்பணம் கொடுத்து பதிவு செய்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். தெரிவு செய்யப்பட்ட பிள்ளையார் செய்தித்தாள் மற்றும் பாலிதீன் உறையால் பொதிந்து பத்திரமாக தனியாக வைக்கப்படுவார். இவரை சதுர்த்தியன்று காலையில் சென்று முறைப்படி அழைத்து வந்து ஆவாஹனம் செய்வார்கள். சில சமயம் நெரிசலைத்தவிர்க்கும் பொருட்டோ, அல்லது பெரிய அளவிலான பிள்ளையார்களாக இருந்தாலோ முன்னிரவிலேயே அழைத்து வந்து விடுவார்கள். மிகவும் பெரிய வினாயகர்களாக இருந்தால் இரண்டு நாட்கள் முன்பே அழைத்து வந்து விடுவார்கள்.

அழைக்கச்செல்லும்போது அவரை அமர வைக்கும் தோதிலான மணைப்பலகை, பலகையில் விரிக்க சிவப்புத்துணி, துணியின் மேல் பரப்ப ஒரு பிடி அரிசி, வெற்றிலை பாக்கு, ஊதுவத்தி, மஞ்சள் குங்குமம், வாழைப்பழம், அட்சதை, மற்றும் மாலையுடன் செல்வார்கள். சிலர் பேண்ட் பாஜா எனப்படும் மேளதாளங்களுடனும் செல்வதுண்டு. முன்பதிவு செய்தபோது கொடுக்கப்பட்ட ரசீதைக் காண்பித்ததும் நம் பிள்ளையார் கொண்டு வரப்பட்டு மணையின் மேல் விரிக்கப்பட்ட சிவப்புத்துணியில் பரப்பப்பட்ட அரிசியில் அமர வைக்கப்படுவார். அவர் முன் வெற்றிலை பாக்கு பழம் முதலியவற்றைப் படைத்து, ஊதுவத்தி ஏற்றி வைத்து, நெற்றியில் குங்குமமிட்டு, அட்சதை தூவி, மாலையை அணிவித்த பின், இன்னொரு சரிகை ஆடை ஒன்றால் அவரது முகம் மூடப்படும். அதன்பின் ஆவாஹன் செய்யப்படும் இடத்திற்கு வந்து சேரும்வரை எக்காரணம் கொண்டும் அந்தத்திரை விலகக்கூடாது. குடும்பத்தலைவரோ அல்லது முக்கியமான நபரோ மணையுடன் சேர்த்துப்பிடித்துத் தூக்கிக்கொள்ள, நடந்தோ வாகனத்திலோ ஊர்வலமாகக் கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் கொண்டு வந்து அமரச்செய்வார்கள்.
அதன்பின் முறைப்படி கலசம் வைத்து, பிள்ளையாரை  பிரதிஷ்டை செய்து, அகண்ட தீபமும் ஏற்றி வைக்கப்பட்ட பின் பூஜைகள் ஆரம்பமாகும். இந்த அகண்ட தீபமானது பிள்ளையார் கரைக்கப்பட்ட மறு தினம் வரைக்கும் அணையாமல் அவ்வப்போது நெய்யூற்றி கவனித்துக்கொள்ளப்படும். கணபதியை  21 விதமான பூக்கள், 21 விதமான இலைகளால் அர்ச்சிப்பது விசேஷம். பூஜையில் ஆரத்திப்பாடல்கள் மிகவும் முக்கியமானவை. அவற்றில் “Sukhakarta Dukhaharta” என்று தொடங்கும் மிகவும் முக்கியமான பாடல் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமர்த் ராம்தாஸ் என்ற துறவியால் இயற்றப்பட்டது. பிள்ளையாருக்கு தேங்காய்ப்பூரணம் வைத்த மோதகம் நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகிறது. மஹாபோக் எனப்படும் நைவேத்தியத்தில் பூரி, பருப்பு, சாதம், கறி வகைகள், இனிப்பு என அனைத்தும் அடங்கும். பிள்ளையார் சதுர்த்தி முடியும் வரை இனிப்பகங்களில் மோதக வடிவிலான பேடாக்கள் கிடைக்கும். அவற்றையும் பிரசாதமாகக் கொடுப்பதுண்டு. பிள்ளையார் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் வீடுகளிலும், குடியிருப்புகளிலும் குடும்ப மற்றும் மக்கள் நலனுக்காக சத்யநாராயண பூஜையும் செய்யப்படுவதுண்டு. சத்யநாராயண பூஜைக்கு நைவேத்தியமாக செய்யப்படும் ஷீரா இங்குள்ள மக்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்று.
ஆவாஹன் செய்யப்பட்ட தினத்திலிருந்து தினமும் இரண்டு வேளையும் ஆரத்தி எனப்படும் தீபாராதனை பூஜை நடக்கும். ஆரத்தியின்போது பிள்ளையாருக்கு தீபாராதனை காட்ட அனைவருக்குமே வாய்ப்பு வழங்கப்படும். பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்திலிருந்து ஆரம்பித்து மூன்றாம், ஐந்தாம், ஏழாம் என ஒற்றைப்படை எண் வரும் தினங்களில் பிள்ளையார் விசர்ஜன் செய்யப்படுவார். சில வீடுகளில் ஒன்றரை நாள் மட்டும் இருந்து விட்டு ‘போய் வருகிறேன்’ என்று கிளம்பி விடுவார். அவரை புனர்பூஜை செய்தபின் பத்திரமாக வழியனுப்பி வைக்க வேண்டும்.
வழக்கம்போல் ஆரத்தி எடுத்து, தூப தீபாராதனைகள் முடிந்ததும் வீடு தேடி வந்தமைக்கு நன்றி தெரிவித்து, பூஜையில் ஏதேனும் குறைகள் இருந்திருந்தால் பொறுத்தருளும்படி வேண்டியபின், பிள்ளையாரை லேசாக நகர்த்தி வைத்து விட்டு கலசத்திலிருக்கும் தேங்காயைத் தனியாக எடுத்து வைப்பார்கள். பின், பிள்ளையாரின் கையில் சிறிது தயிரும், அதன் மேல் சிறிதளவு அரிசி மணிகளும் வைப்பார்கள். இப்படிச்செய்தால் பிள்ளையார் அடுத்த வருடமும் வீட்டுக்கு வருவார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. செல்லும் வழியில் பசியெடுத்தால் சாப்பிட வேண்டுமே.. பத்து நாளும் விதவிதமாகச் சாப்பிடக்கொடுத்து விட்டு இப்போது வெறும் கையோடு அனுப்ப முடியுமா? பிள்ளையார் பாவமல்லவா?! அதனால் ஒரு கொப்பரைத்தேங்காயில் சிறிது அரிசியை இட்டு அதன் மேல் ஒரு துண்டு வெல்லத்தையும் வைத்து, ஒரு துணியில் கட்டுச்சோற்று மூட்டையாகக் கட்டி பிள்ளையாரின் கையில் கட்டித்தொங்க விடுவார்கள். 

அதன்பின் குடும்பத்தலைவர் பிள்ளையாரை கவனமாகக்கையில் எடுத்துக்கொண்டு வீடு முழுவதும் ஒவ்வொரு அறையாகச் சுற்றி வந்த பின், பிள்ளையாரின் திருமுகம் வீட்டை நோக்குமாறு மிகக் கவனமாக பின்னோக்கி அடியெடுத்து வைத்து வெளியேறி நிற்பார். அவர் பின்னாடியே இன்னொரு நபர் கலசத்திலிருக்கும் தீர்த்தத்தை வீடு முழுவதும் மாவிலையால் தெளித்துச்செல்வார். பிள்ளையாருக்கு தேங்காயால் திருஷ்டி கழித்து, அதைச் சிதறுகாயாய் உடைத்தபின் அருகிலிருக்கும் நீர்நிலையை நோக்கி ஊர்வலம் தொடங்கும். திருஷ்டி கழித்து உடைக்கப்பட்டது ஆகையால் இந்த சிதறுகாய்த் துண்டுகளை யாரும் எடுக்க மாட்டார்கள். நீர் நிலையை அடைந்ததும் மறுபடியும் பிள்ளையாருக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு, அவருக்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்கள், மாலைகள், மற்றும் வஸ்திரங்கள் களையப்படும். இப்பொழுதெல்லாம் மாவிலை, பூ மாலைகள் போன்றவை நிர்மால்ய கலசத்தில் சேகரிக்கப்படுவதால் நீர் மாசு படுவது ஓரளவு குறைக்கப்படுகிறது. 

விசர்ஜன் செய்யுமிடத்தில் அதற்கென்று இருக்கும் ஆட்கள் பிள்ளையார்களை வாங்கிக்கொண்டு, குறிப்பிட்ட ஆழம் வரை சென்ற பின் இரண்டு தடவை நீருக்கு மேலே கொண்டு வந்து திருமுக தரிசனம் காட்டியபின் மூன்றாவது முறை முழுவதுமாக மூழ்க விட்டுக் கரைப்பார்கள். இதை ஒரு சேவையாகச் செய்பவர்களைத் தவிர வருமானத்துக்காகச் செய்பவர்களும் உண்டு. குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகக் கொடுத்து விட வேண்டும். கலச நீரை குளத்திலேயே விட்டு விட்டு குளத்து நீரை சிறிதளவு கலசத்தில் நிரப்பித்தருவார்கள். அதை வீட்டிற்குக் கொண்டு வந்து செடிகளுக்கோ துளசிக்கோ ஊற்றி விட வேண்டும் என்பது சம்பிரதாயம். ஒரு பிடி குளத்து மண்ணையும் மணைப்பலகையின் மேல் விரிக்கப்பட்டிருந்த சிவப்புத்துணியில் வைத்துத் தருவார்கள். அவற்றையெல்லாம் வீட்டிற்குக் கொண்டு வந்தபின் மணைப்பலகையும் பிடி மண்ணும் பிள்ளையார் வைக்கப்பட்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டு ஆரத்தி எடுக்கப்படும். பின் கலசத்திலிருக்கும் தேங்காயை அந்தத்துணியில் வைத்து முடிந்து வீட்டின் முகப்பில் தொங்க விடுவார்கள். இதனால், அவ்வீட்டிற்கு வரும் இன்னல்கள் நீங்கி விடும், நலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்க்கை. 

மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸூத்ர
வாமநரூப மகேச்வர புத்ர
விக்ந  விநாயகா பாத நமஸ்தே !! 

கணபதி பப்பா.. மோர்யா...

Tuesday, 14 September 2010

பிள்ளையார் சதுர்த்தி..

ராக்கி கட்டி, நாரியல் பூர்ணிமா கொண்டாடி.. 'ஆலா ரே ஆலா.. கோவிந்தா ஆலா' என்று கிருஷ்ண ஜெயந்தியுடன் தொடங்கும் பண்டிகைக்காலம், எங்க ஊர் பிள்ளையார் சதுர்த்தியின்போது களை கட்டிவிடும். வீட்டுக்கு வீடு பிள்ளையார் வந்து ஜம்முன்னு உக்காந்துடுவார். ஹாஸ்டல்லேர்ந்து வீட்டுக்கு லீவுக்கு வந்த மகனைப்போல, ராஜ உபச்சாரம்தான் அவருக்கு :-)))


சதுர்த்திக்கு ஒன்றிரண்டு மாசத்துக்கு முன்னாலேயே.. அதாவது வெய்யில் காலத்துலயே, ஏற்பாடுகளெல்லாம் ஆரம்பிச்சுடும். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் வடிவமைப்பதும், வர்ணமடிச்சு அழகுபடுத்துவதுமாக தொழிலாளர்களெல்லாம் பிஸியோபிஸியாகிடுவாங்க... இப்பல்லாம் காகிதக்கூழில் செஞ்சு, வாட்டர் கலர் அடிச்ச eco friendly புள்ளையார் மார்க்கெட்டுக்கு வந்துட்டார். நிறையப்பேர் கேட்டு வாங்கிட்டுப்போறாங்க.. ஆனாலும், ஜிகுஜிகுன்னு பெயிண்டில் ஜொலிக்கிற பிள்ளையாருக்கு ஒரு சில மக்கள் மத்தியில இன்னும் வரவேற்பு இருக்குது..


நம்மூர்ல பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்றது மாதிரிதான் இங்கியும் புள்ளையார வீட்டுக்கு கூட்டிட்டு வரமுன்னாடி வீட்டை சுத்தம் செய்வோம். அவரை உட்கார வைக்க சின்னதா மண்டபம் கட்டி, அலங்காரமெல்லாம் செஞ்சு..  ரெடியா வெச்சு, புள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு, 'கண்பதி பப்பா.. மோரியா!! மங்கள்மூர்த்தி மோரியா' என்ற கோஷத்தோட அவரை கூட்டிட்டு வந்து உட்கார வெச்சு, பத்து நாளும் உபச்சாரமெல்லாம் செய்வோம். தினம் ரெண்டுதடவை அவருக்கு ஆரத்தி நடைபெறும். வீட்டுல உள்ளவங்களெல்லாம் ஒன்னா சேர்ந்து பாட்டுப்பாடி ஆரத்தி எடுப்போம். அபார்ட்மெண்ட்களில், எல்லோருக்கும் பொதுவான பிள்ளையார் வெச்சு,.. கூட்டு வழிபாடு நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் அவங்க வீட்டுல இருந்து பிரசாதமா, ஷீரா, கரஞ்சி,மோதகம், லட்டுன்னு செஞ்சு கொண்டு வருவாங்க.


பிள்ளையார் வந்ததும், 'சத்ய நாராயண பூஜை' கண்டிப்பா நடக்கும். அபார்ட்மெண்டின் மிக மூத்த தம்பதியோ அல்லது, புதிதாக திருமணமான தம்பதியோ இந்த பூஜையை தம்பதி சமேதரா செய்வாங்க. அன்னிக்கு, லஞ்ச் அல்லது டின்னர் ஏற்பாடு செஞ்சிருப்பாங்க. இதை மஹாபிரசாதம்ன்னு சொல்லுவாங்க. தமிழ்க்குடும்பங்கள் நிறைய இருக்கும் இடங்களில் கணபதி ஹோமம் நடக்குறதுண்டு.


பொதுவா, இங்கே 'விசர்ஜன்' எனப்படும் பிள்ளையாரை கரைக்கும் நிகழ்ச்சி, சதுர்த்திக்கான மறு நாள்(ஒன்னரை நாள்ன்னு கணக்கு), மூணாம் நாள், ஐந்தாம் நாளான 'கௌரி கண்பதி' , ஏழாம் நாள், மற்றும் ஒன்பதாம் நாள்.. அதன்பின் பத்தாம் நாளான ஆனந்த சதுர்த்தி அன்று நிறைவு பெறும். 'கௌரி கண்பதி' அன்னிக்கு மகனைப்பார்க்க பார்வதி தேவி வருவதாக ஐதீகம். அன்னிக்கு சிலவீடுகளில், கௌரிபூஜையும், விருந்துச்சாப்பாடும் நடக்கும்.அது முடிந்தபின், கௌரி, மற்றும் கண்பதியை விசர்ஜன் செய்வார்கள். விசர்ஜன் செய்யப்படும் நாட்களில் சாலைகளில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுவிடும். ஊரிலுள்ள எல்லாப்புள்ளையார்களையும் அன்னிக்கு ஆர அமர பார்த்து.. 'பை..பை' சொல்லிட்டு வரலாம்.


ஆனந்த சதுர்த்தி அன்னிக்கு ரோட்டுல எள் போட்டா விழ இடமிருக்காது!!!(எள்ளை ஏன் போடணும்ன்னு சொல்றாங்கன்னே புரியலை.. இருந்தாலும் நானும் சொல்லி வைக்கிறேன் :-))). அவ்வளவு நாள் பயபக்தியா ஆராதிச்ச புள்ளையார்களை அன்னிக்கு க்ரேன்ல கட்டி ஆழமான கடல்ல தூக்கிப்போட்டுடுவாங்க. (அம்பூட்டு உசரமா இருப்பாருங்க). ஆனாலும், கரைச்சுட்டு வீட்டுக்கு வந்ததும் மனசுக்கு ஒரு வெறுமை வருமே... அதை சொல்லத்தெரியலை.


எங்க ஊர்ல புள்ளையார் ஆரத்திக்குன்னே ஸ்பெஷல் பாட்டு இருக்குது. இங்கே புள்ளையார் சதுர்த்தி பிரபலமானதுக்கும்.. இந்திய விடுதலைப்போருக்கும் சம்பந்தமிருக்குது. வெள்ளைக்காரன் ஆண்ட காலத்துல, கூட்டம் கூட தடை போடப்பட்ட காலத்துல...நம்ம பாலகங்காரதர திலகர் கண்டுபிடிச்ச வழிதான் இது. 1892 -லிருந்து இது சமூகவிழாவா கொண்டாடப்பட ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடி, மராட்டிய பேஷ்வாக்கள் மட்டுமே, சிறிய அளவில் கொண்டாடியிருக்காங்க.. பேஷ்வாக்களின் அழிவுக்குப்பின்னால, க்வாலியர் மற்றும் குஜராத் அரசர்கள் இதை சாதாரண மக்களிடம் கொண்டு வந்தாங்க.


இங்கெல்லாம் கூடும் கூட்டத்தை பார்த்த திலகருக்கு, இது மக்களை ஒருங்கிணைக்கும் வழியாக தோன்றியது. கடவுளைக்கும்பிட்ட கையோட, அங்கிருந்த கூட்டத்துக்கிட்ட விடுதலை தாகத்தை உண்டாக்க, புள்ளையார் சதுர்த்தி, திலகருக்கு ரொம்பவே வசதியா இருந்தது. இப்பவும், மக்களெல்லாம் ஆரத்தி முடிஞ்சதும், 'பாரத் மாதா கீ... ஜெய்' ன்னு கோஷம் எழுப்ப தவறுவதில்லை. மும்பையில் 'லால்பாக்' என்னும் இடத்துல வைக்கப்படும் புள்ளையார் ரொம்பவே பிரபலமாயிட்டார். திருப்பதி மாதிரியே அங்கியும் வரிசையில நின்னுதான் தரிசனம் செய்யணும். விலையுயர்ந்த நகைகள், பொருட்களெல்லாம்கூட காணிக்கையா கொடுக்கப்படுதாம். இங்கே வந்து போகாத மும்பை வி.ஐ.பிக்களே இருக்கமுடியாது. அவர்கிட்ட கேட்கும் வேண்டுதல்களெல்லாம் நிறைவேறுதுன்னு ஒரு புதுப்பேச்சு கிளம்பியிருக்கு.  'லால்பாக்ச்சா ராஜா' ன்னுஅவருக்கு செல்லப்பேரும் உண்டு. இந்தப்பேருக்கு பேடண்ட் எடுத்திருக்காங்கன்னா அவரு எவ்வளவு பிரபலம்ன்னு பாத்துக்கோங்க.


மஹாராஷ்ட்ராவில் பிரபலமானஆரத்திப்பாட்டு இது.....



இது எங்கவீட்டு புள்ளையார்...


டிஸ்கி: எங்கூர்ல இன்னும் புள்ளையார் சதுர்த்தி முடியலை. இவர் எங்க குடியிருப்பின் பொதுவான புள்ளையார்.கௌரி கண்பதி வரைக்கும் இருப்பார் :-)))))))












Tuesday, 15 February 2011

டிட்வாலா பிள்ளையார்..

பெரியவரை பார்த்து ரொம்ப காலமாச்சு.. போய்ப்பார்க்கணும்ன்னு நெனைச்சாலும் கடமைகள் காலைக்கட்டிப்போட்டு வெச்சுருக்குதே. முந்தியெல்லாம் நினைச்சுக்கிட்டா ஒடனே பாத்துட்டு வந்துதான் அடுத்த வேலை. இப்போ முடியறதில்லை.. ரொம்ப நாளா சந்தர்ப்பத்துக்காக காத்துட்டு இருந்தோம். பெண் தன்னோட அசைன்மெண்டுக்காக கோயில்களையும், பெண்ணின் தோழி மும்பையின் வரலாற்றுச்சிறப்பு மிக்க இடங்களையும் பத்தி மாதிரிவலைத்தளங்கள் தயாரிக்கிறாங்க. இதுக்கு பெரியவரோட ஊர் ரொம்ப பொருத்தமாச்சே... அங்கே கூட்டிட்டு போனா என்ன??.. களையெடுத்தமாதிரியும் இருக்கும் , அப்படியே மச்சினனுக்கு பொண்ணு பாத்தமாதிரியும் இருக்கும்ன்னு நம்ம தரிசனத்தையும் நடத்திக்கலாம்.ஒரே கல்லுல மூணு மாங்கா :-)))

சன்னிதிக்கு போறதுக்கு முன்னாடியே போட்டோவடிவில் தரிசனம் :-)
பெரியவர் இருக்குறது 'டிட்வாலா'ன்னு ஒரு ஊர்ல. இது மஹாராஷ்ட்ராவில் கல்யாணுக்கு பக்கத்துலதான் இருக்கு. கல்யாணிலிருந்து 'முர்பாட்'க்கு போறபாதையில் இடதுபுறம் ஒரு கிளைச்சாலை பிரிஞ்சு போகும். அதுலே சுமார் ஏழுகிலோமீட்டர் போனா 'டிட்வாலா' வந்துடும். இங்கேதான் நம்ம பெரியவர்.. அதாவது பிள்ளையார், கோயில் கொண்டிருக்கார்.
கோயிலின் பின்புறத்தோற்றம்.
மும்பையிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தூரத்துல இந்தக்கோயில் இருக்குது. இங்கே மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினல்ஸ்லேர்ந்து அஸன்காவ், கஸாரா போகும் ரயில்கள் மூலமாவும் வரலாம். டிட்வாலா ஸ்டேஷனிலிருந்து கோயிலுக்கு குதிரைவண்டிகளும் ஆட்டோரிக்ஷாக்களும் சவாரி வருது.
இது கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சிக்கு உட்பட்ட ஏரியான்னாலும், வளர்ச்சிப்பணிகளெல்லாம் இன்னும் முழுசா வந்தடையலை. சுத்துமுத்தும் பக்காவான கிராமங்கள்தான்.. ஒண்ணு ரெண்டு டாபாக்களைத்தவிர நல்லதா ரெஸ்டாரண்டுகள் எதுவும் கிடையாது. கோயிலுக்கு எதிர்த்தாப்ல சுமாரா ஒரு ரெஸ்டாரண்ட் இருக்குது. டீ+வடாபாவ் பரவாயில்லாம கிடைக்கும். முன்னெல்லாம் கரும்புஜூஸ் கடைகள் நிறைய இருக்கும். இப்போ எதையும் காணலை..

இந்தக்கோயில் இதிகாசக்காலங்களுக்கு முற்பட்டதுன்னு சொல்றாங்க. முன்னொரு காலத்துல தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியா இந்த ஊரு இருந்திச்சாம். ஆரண்யம்ன்னா காடுன்னு அர்த்தம். அந்தக்காலங்கள்ல யாரோட தொந்தரவும் இல்லாத அமைதியான வாழ்க்கை வேணும்ன்னா முனிவர்களெல்லாம் காட்டுக்கு போயிடறது வழக்கம். அப்படித்தான் கண்வ மகரிஷியும் ஒரு குடில் அமைச்சுக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருந்தார். அப்பதான் விஸ்வாவும், மேனகாவும் தங்களுக்கு வேண்டாம்ன்னு நெனைச்சு தூக்கிப்போட்ட 'சகுந்தலை' அவருக்கு கிடைச்சாள். (தொட்டில் குழந்தை திட்டத்துக்கு முதல் பங்களிப்பு??). அவளை தன்னோட பெண்ணாவே வளத்துக்கிட்டு வர்றார். அதுக்கப்புறம் சகுந்தலையும் துஷ்யந்தனும் காந்தர்வ மணம் செஞ்சுக்கிட்டதும், துர்வாசரின் சாபம் காரணமா அவன் அவளை மறந்து ஏற்றுக்கொள்ள மறுத்ததும் வரலாறு.

இப்படியாகிப்போச்சேன்னு வருத்தத்துல சகுந்தலை இருந்தப்பதான், கண்வ மகரிஷி, ' பிள்ளையாருக்கு ஒரு கோயில் கட்டி அவரை வழிபடு.. உன்னோட எல்லா கவலைகளையும் அவர் தீர்த்து வைப்பார்'ன்னு மகளுக்கு ஆறுதல் சொன்னார். அவளும் அதேமாதிரி வழிபட்டு வந்திருக்கா. காலப்போக்குல சாபவிமோசனம் கிடச்சு, துஷ்யந்தனுக்கு மனைவி, பிள்ளையின் ஞாபகம் வந்து உடனே தேடி வந்துட்டான். அப்புறம் அதே பிள்ளையார சாட்சியா வெச்சு.. மறுபடியும் முறைப்படி கல்யாணம் செஞ்சு, தன்னோட நாட்டுக்கு கூட்டிப்போனான். முன்னொரு காலத்துல 'பரதன்' என்ற மன்னன் அரசாண்டதாலதான் நம்ம நாட்டுக்கு பாரதம்ன்னு பேரு வந்துச்சுன்னு சொல்றாங்களே.. அந்த பரதன் வேற யாருமில்ல. இவங்களோட பிள்ளைதான். இந்த பரதனோட வழித்தோன்றல்கள்தான் நம்ம பாண்டவாஸ்+கௌரவாஸ்..

சகுந்தலை வழிபட்டு வந்த பிள்ளையார் கோயில் காலப்போக்குல அழிஞ்சு மண்மூடி அங்கே ஒரு குளமும் உருவாகிடுச்சு. ரொம்ப காலத்துக்கப்புறம், அதாவது முதலாம் மாதவ்ராவ் பேஷ்வா என்கிற குறுநிலமன்னர் அந்தப்பகுதியை ஆட்சி செய்யும்போது, நாட்டுல உண்டான தண்ணீர்ப்பஞ்சத்தை போக்க இந்தக்குளத்தை தூர்வாரியிருக்காங்க. குளத்துலேர்ந்து தண்ணீர் வந்துச்சோ இல்லியோ, பழைய கோயிலின் இடிபாடுகள் வந்துருக்கு. கூடவே பிள்ளையாரும் வந்துருக்கார். அவருக்கு ஒரு கோயிலை, முதலாம் மாதவ்ராவ் பேஷ்வாவும், அவரது தளபதியான ராமச்சந்திர மெஹந்தலேயும் கட்டியிருக்காங்க. குளத்தோட வேலைகள் நடந்துட்டிருந்தப்பவே இதிகாசக்காலத்து பிள்ளையார் மறுபடியும் காணாம போயிட்டார்ன்னும், இப்ப இருக்கிற பிள்ளையார், பேஷ்வா பிரதிஷ்டை செஞ்சதுன்னும் இன்னொரு கருத்தும் நிலவுது.

இந்தக்கோயிலும் காலப்போக்குல சிதைஞ்சுடவே, 1965-66ல் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பமாகி இப்ப இருக்கிற கோயில் கட்டப்பட்டிருக்கு. ரெண்டுவருஷம் முன்னாடிதான் கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி கோயிலை இன்னும் விரிவாக்கியிருக்கு. கோயிலோட பின்புறம் பாசிபிடிச்சுப்போய் பாழடைஞ்சு கிடந்த குளத்தையும் சரிசெஞ்சு , படகுச்சவாரியெல்லாம் நடக்குது. குளத்துக்குப்பக்கத்துலயே வண்டிகளை நிறுத்தவும், காலணிகளை பாதுகாக்கவும் வசதி செஞ்சிருக்காங்க. அங்கங்க முளைச்சுக்கிடந்த பூஜைப்பொருள் விக்கிற கடைகளையும் ஒரு கட்டிடத்துக்குள்ள ஒழுங்குபடுத்தியிருக்காங்க.
பழைய நுழைவாயில்.
புதிய நுழைவாயில். கார் பார்க்கிங்கும் இங்கேயே இருக்குது.
குழாய்த்தண்ணீரில் கால்களை சுத்தம் செஞ்சுக்கிட்டு கோயிலுக்குள் நுழைஞ்சோம். கூட்டமில்லாத நேரம் அதனால வரிசையில் நிற்க தேவையில்லாம, நேரடியா கருவறைக்கே போயிட்டோம். (வடக்கே, ரொம்பவே கூட்டமாயிருக்கும் சில கோயில்களைத்தவிர, மற்றகோயில்களில் கருவறைக்குள் நாமே விக்கிரகத்துக்கு பூஜை செய்யலாம்). இடுப்பளவு உசரத்துல ஒரு மேடை. அதுல ஜம்ன்னு ஒக்காந்துட்டிருக்கார். பெரியவர்.செந்தூரம் பூசிய திருவுருவம். சிம்பிளான அலங்காரத்தில் அழகா இருக்கார். இதுவே சதுர்த்தி, சதுர்த்தசி, அங்காரக சதுர்த்தி தினங்கள்ன்னா அலங்காரமும் கூட்டமும் அமளிதுமளிப்படும். 

நாம கொடுக்கற பூஜைத்தட்டிலிருக்கும் தேங்காய், மாலை, இத்யாதிகளை அதுக்குன்னு வெச்சிருக்கும் பாத்திரங்களில் போட்டுட்டு, அதுலேர்ந்தே கொஞ்சத்தை எடுத்து பிரசாதமா தர்றாங்க. மறுபடியும் தரிசிக்கணும்ன்னா, வெளிப்பக்கம் வந்து கர்ப்பக்கிரகத்தின் எதிரே இருக்கும் மண்டபத்தில் உட்கார்ந்துக்கலாம். கூட்டமில்லாத நாட்களில் கருவறையிலும் சிலபேர் உக்காந்துப்பாங்க. கருவறைக்கு எதிரே இருக்கற மண்டபத்துல ரெண்டுபக்கமும் மாடிக்கு படிக்கட்டுகள் போகுது. மேலேறிப்போனா, அங்கிருந்தும் கம்பிஜன்னல் வழியா மூலவரை தரிசிக்கலாம். 

வெளியே கோயிலுக்கு இடதுபக்கத்துலயே சின்னதா ஸ்டால் ஒண்ணு இருக்குது. புத்தகங்கள், பிள்ளையார் பொம்மைகள், விக்கிரகங்கள், பூஜைப்பாத்திரங்கள் இப்படி எல்லாமும் இருக்கு. விலைதான் ஆகாயத்துல நிக்குது.. வெளியே கடைகள்ல கிடைக்கிறதைவிட நாலுமடங்கு விலை.  கோயிலுக்கு முன்புறம் சின்னதா ஸ்தூபி ஒண்ணு இருக்குது. அகல் ஏத்திவெச்சுக்கறமாதிரி சின்னச்சின்னதா மாடங்கள்... பண்டிகைக்காலங்கள், பூஜைசமயங்களில் விளக்கேத்திவெச்சா அவ்வளவு அழகா இருக்கும்.
பக்கத்துலேயே சின்ன கிணறு ஒண்ணு இருக்குது. அதுல வழக்கம்போல பூக்கள், மாலைகள்ன்னு மிதக்கும் குப்பைகள். ரொம்ப வருஷமாவே இப்படித்தான்... சுத்தப்படுத்தி வெச்சாலும் நம்ம மக்கள் விட்டுவைக்கணுமே!! அதுல கிடக்கும் ரெண்டு ஆமைகளை வேடிக்கை பாத்துக்கிட்டு பசங்களெல்லாம் சுத்தி நிக்கிறாங்க. இப்ப புதுசா ஒரு சம்பிரதாயம் ஆரம்பிச்சிருக்காங்க.. என்னவா??.. கிணத்துக்குள்ள காசை விட்டெறியறதுதான். ஏன்?னு கேட்டா, 'எல்லோரும் செய்யறாங்க.. நாங்களும் செய்யறோம்'ன்னு பதில்வருது :-)))
கோயில் தினமும், காலைல அஞ்சுலேர்ந்து இரவு ஒன்பதுமணிவரைக்கும் தரிசனத்துக்காக திறந்திருக்கும். சங்கடஹர சதுர்த்தி தினங்களில், காலை நாலுமணிலேர்ந்து இரவு பதினொரு மணிவரையிலும், அங்காரக சதுர்த்தி தினங்களில் இருபத்து நாலுமணி நேரமும் திறந்திருக்கும். (அதாவது,திங்கள் இரவு பன்னிரண்டுமணிலேர்ந்து செவ்வாய் இரவு பன்னிரண்டு மணிவரைக்கும்) இதுக்கிடையில், மதியம் ஒருமணிலேர்ந்து ரெண்டுமணிவரைக்கும், அப்புறம் சாயந்திரம் ஆரத்திக்கான ஏற்பாடுகளுக்காக ஆறுலேர்ந்து ஆறேமுக்கால்வரைக்கும் நடை சாத்தியிருக்கும். பொதுவாவே கோயில்களின் தரிசன நேரங்களை தெரிஞ்சிக்கிட்டுப்போனா, ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.





Sunday, 22 September 2019

கணபதி - 2019

மஹாராஷ்ட்ராவில் பிள்ளையார் சதுர்த்தி மிகவும் கோலாகலமாக நடைபெறும் ஒரு விழா. விதவிதமான வடிவங்களில், விதவிதமான கருத்துகளை வலியுறுத்தி அமைக்கப்படும் பிள்ளையார் திருவுருவங்களைக்காண கண் கோடி வேண்டும். மாலை வேளைகளில் தத்தம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் பிள்ளையார் திருவுருவங்களைக்காணவென்றே கூட்டங்கூட்டமாக மக்கள் கிளம்பிச்செல்வது வழக்கம். அதற்கெல்லாம் நேரம் கிடைக்காத மக்கள் விசர்ஜன் நடக்கும் பகுதிகளுக்குச்சென்று அங்கு வரும் பிள்ளையார்களைக் கண்டு கொள்வர். அதற்கும் நேரமில்லையா?.. விழா தொடங்கு முன் விற்பனைக்கென பிள்ளையார் சிலைகள் இருத்தப்பட்டிருக்கும் பண்டல்களுக்குச்சென்றால் ஆயிற்று. அம்மையப்பன்தான் உலகம் என இருக்குமிடத்திலேயே தாயையும் தந்தையையும் சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக்கொண்டவர் காட்டிய வழிதான் நமக்கும் :)

இந்த வருட பிள்ளையார் உலாவில் காணக்கிடைத்தவர்கள் இங்கே..

















இவ்வருடம் எங்கள் வீட்டுக்கு வந்த பிள்ளையார்.

கண்பதி பப்பா மோரியா.. மங்கள் மூர்த்தி மோர்யா.. புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா.

எங்கள் வீட்டு கணபதி ஆரத்தியும் அதைத்தொடர்ந்த விசர்ஜனும் சிறு வீடியோவாக.
முந்தைய கணபதிகளைக்காண இங்கே சொடுக்குங்கள்.

Saturday, 22 September 2018

கண்பதி - 2018

“கண்பதி பப்பா மோர்யா - மங்கள் மூர்த்தி மோர்யா
கண்பதி பப்பா மோர்யா - புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா”


எங்கள் வீட்டுப்பிள்ளையார்
இவர் எங்கள் குடியிருப்புக்கு வந்த பிள்ளையார்
என வேண்டி விரும்பி அழைக்கும் மக்களின் அழைப்பையேற்று பிள்ளையார் எங்களூருக்கு வந்து கொலுவிருந்து அருள் பாலித்து வருகிறார். வழக்கம்போல் பத்து நாட்கள் இருந்து விட்டு "நா போயிட்டு வரேன்" என பத்தாம் நாளான அனந்த சதுர்த்தசியன்றி விடைபெற்றுக்கொண்டு விடுவார். ஆரத்தி பூஜை, பஜனை என கோலாகலமாக இருந்து விட்டு அவர் விடைபெற்றுச் சென்றதும் சட்டென்று ஒரு சூன்யம் மனதைச் சூழ்ந்து கொண்டு அரிக்கத்தொடங்கிவிடுகிறது. நவராத்திரிக்கு அம்பாள் வந்து கொலுவிருக்கும் வரைக்கும் இதே சூன்யம்தான் மனதை ஆளப்போகிறது. 

சுற்றுப்புறச் சூழலைக்காக்கும் பொருட்டு மஹாராஷ்ட்ராவில் ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மக்கர் எனப்படும் தெர்மோகூல் பொருட்களும் அடங்குவதால் பிள்ளையாருக்கான தெர்மோகூல் மண்டபங்கள் இவ்வருடம் எங்குமே காணக்கிடைக்கவில்லை. மூங்கில், மற்றும் துணிகளைக்கொண்டு செய்யப்பட்ட அலங்காரங்களே எங்கும் காணக்கிடைத்தன. கல்யாணிலிருக்கும் "பாயி கா புத்லா" பகுதியில் மூங்கில் கம்புகளால் மோதகம் மற்றும் தேங்காய் வடிவில், சட்டம் அமைக்கப்பட்டு அதில் தேங்காய் நாரைப் பொதிந்து உருவம் கொடுக்கப்பட்ட மண்டபங்கள் நிறையச் செய்து வைக்கப்பட்டிருந்தன. அவ்வண்ணமே கைகளால் செய்யப்பட்டு நீர் வண்ணமடிக்கப்பட்டிருந்த பிள்ளையார்களும் இவ்வருடம் நிறையவே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இப்போதாவது சூழலைப்பற்றிய அக்கறை வந்ததே எனத்தோன்றியது நிஜம்.


வழக்கப்படி எங்கள் வீட்டுக்கும் பிள்ளையார் வந்த, ஐந்து நாட்கள் கொலுவிருந்து, ஐந்தாம் நாளான "கௌரி கணபதி" தினத்தன்று விடைபெற்றுச் சென்றார். பார்வதியின் இன்னொரு பெயர்தான் கௌரி. பிள்ளையார் சதுர்த்திக்கு முன் தினம் இவரை சில வீடுகளில் இருத்தி பூஜை செய்வார்கள். பின்னர் சதுர்த்தி ஆரம்பித்த ஐந்தாம் தினத்தன்று அனைவருக்கும், முக்கியமாக சுமங்கலிகளுக்கு விருந்திட்டு, தாம்பூலமளித்து பின்னர் கௌரியையும் பிள்ளையாரையும் விசர்ஜன் செய்வர். சில வீடுகளில் பிள்ளையாரை இருத்தாமல் கௌரியை மட்டும் வைத்துப் பூஜை செய்வதுமுண்டு. 


எங்கள் பிள்ளையாரையும் யதாஸ்தானம் அனுப்பி, கையில் கட்டுச்சோறு கொடுத்து, விசர்ஜன் செய்து விட்டு வந்தோம். நிர்மால்யம் என அழைக்கப்படும் களைந்து வைத்த பூஜைப்பொருட்கள் ஒரு பெரிய தொட்டியில் சேகரிக்கப்பட்டு பின்னர் அப்புறப்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், சில சமயம் அது நிரம்பி வழிந்து பக்தர்களின் காலில் மிதிபடுவது மனக்கஷ்டம் கொடுக்கக்கூடிய காட்சி. இம்முறை ஒரு பெரிய ட்ரக்கைக் கொண்டு வந்து நிறுத்தி, ஆட்கள் அங்கே நின்று அதில், நிர்மால்யத்தைச் சேகரித்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. நல்ல விஷயம்தான்.


வழக்கமாக, சதுர்த்தி ஆரம்பித்த பின்னும் லேசான மழை இருந்து அனந்த சதுர்த்தசிக்குப் பின் நின்று விடும். மழையில் நனைந்து கொண்டே ஆரத்தி செய்த அனுபவங்களும் மும்பைக்கர்களுக்கு உண்டு. ஆனால் ஏனோ இவ்வருடம் பத்து நாட்களில் மழையே இல்லாமல் இருந்தது. இவ்வருடம் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படாமல் பிள்ளையார்தான் காக்க வேண்டும். 

கட்டுச்சோறும் கையுமாக.
கிளம்பிச்சென்ற பிள்ளையாரின் இனிய ஞாபகங்களோடும் வரவிருக்கும் நவராத்திரியைப்பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடும் இப்பண்டிகைக்காலம் இனிதே ஆரம்பித்திருக்கிறது. வரும் காலமெல்லாம் எல்லோருக்கும் எல்லா நலனும் விளைய இறைவன் அருள்வானாக.

"கணபதி பப்பா மோர்யா"

வால்: ஒன்றிரண்டு படங்களைத்தவிர மற்ற அனைத்தும் மொபைலில் க்ளிக்கியவை. இன்னுமிருக்கும் படங்கள் வரவிருக்கும் இடுகையில்.

LinkWithin

Related Posts with Thumbnails