Tuesday, 28 June 2011

நிழலின் அருமை..


 
மெல்லிய உறுமலுடன் நகர ஆரம்பித்த பஸ்ஸில் ஓடி வந்து தொற்றிக்கொண்டாள் சாருமதி. வெற்றிப்பெருமிதத்துடன் பஸ்ஸினுள்ளே சுழலவிட்ட பார்வை, 'நான் இங்கேயிருக்கேன்' என்பதுபோல் கையை உயர்த்திக்காண்பித்த லாவண்யாவிடம் வந்து நிலைபெற்றது. அவளருகில் காலியாயிருந்த இருக்கையில் அமர்ந்த சாருமதியை, 'இன்னிக்கும் லேட்டா??..' என்பதுபோல் வினவியது லாவண்யாவின் பார்வை. ஒரு அசட்டுச்சிரிப்புடன் அதை எதிர்கொண்டவள், "காலைல எல்லாரையும் தயார் செஞ்சுட்டு வரதுக்குள்ள போதும்போதும்ன்னு ஆயிடுது".. என்று சமாளித்தாள்.

"பசங்க வளந்தப்புறமும் நீயேதான் எல்லாமும் செய்யணுமா??.. அவங்களையும் கொஞ்சம் தன்னோட காரியங்களை செய்ய பழக்குன்னு சொன்னா, கேக்க மாட்டேங்குறியே. எல்லாம் நீ கொடுக்கற செல்லம். நீயும் ஒண்ணும் சின்னப்பொண்ணில்லை, உனக்கும் உடம்பில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்குறதை ஏனோ மறந்துடறே".. உரிமையுடன் கோபித்துக்கொண்டாள் லாவண்யா.

அவர்கள் அலுவலகத்தை அடைய இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. அதற்குள் இவர்களைப்பற்றி சின்ன அறிமுகம்.. ஏனென்றால் ஆபீசுக்கு போய்விட்டால் வேலையில் மூழ்கிவிடுவார்கள். இருவரும் ஒத்த வயதுடைய சினேகிதிகள். ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள்.. இருவரின் எண்ணங்களும் கூட ஒரே அலைவரிசையில் ஒத்துப்போவதால் நல்ல புரிதலும் இருந்துவந்தது. ஆகவே, மனம்விட்டு பேசி குழப்பங்களை தீர்த்துக்கொள்வார்கள். அது அலுவலகம் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது குடும்பம் சம்பந்தப்பட்டதாகவோகூட இருந்தாலும்.

சாருமதிக்கு கல்லூரி செல்லும் வயதில் மகனும், மகளும், வயதான மாமியாரும் உண்டு. கணவரோ வீட்டுக்கு வரும்போதே எக்கச்சக்க கோப்புகள் வடிவத்தில் அலுவலகத்தை வீட்டுக்கே சுமந்து வருவார். சாப்பாட்டு நேரத்தில் மட்டும்தான் மற்றவர்களுக்கு தரிசனம். ஆன்மீகத்தில் நாட்டமுள்ள மாமியாருக்கு கோயில்களுக்கு போவதிலும், பஜனைகளில் கலந்துகொள்வதிலும் நேரம் சரியாகிவிடும். பிள்ளைகளோ வீட்டிலிருக்கும் நேரத்தில் தொலைக்காட்சி அல்லது கணினி முன் தவம்செய்துகொண்டிருப்பார்கள். ஆக மொத்தம், வீட்டுச்சுமை அத்தனையும் சாருமதி தலையில்தான். அதுவும் சுகமான சுமைகளாகத்தான் அவளுக்கு இருந்தது. ஒவ்வொருவருக்கும் வேண்டியதைச்செய்வதிலும், வீட்டைப்பார்த்துக்கொள்வதிலும் அவளுக்கு அலாதி இன்பம்.

நிறுத்தத்தில் இறங்கி, அலுவலகத்தை அடைந்து அவரவர் இருக்கையை நோக்கிச்சென்றனர் இருவரும். மேஜை மேல் இருந்த கணினியை தொட்டுக்கும்பிட்டுவிட்டு ஒரு நிமிடம் மௌனமாக பிரார்த்தனை செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்தாள் சாருமதி. உற்சாகமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும், அவளால் அப்படியிருக்கமுடியவில்லை. இன்று காலை நடந்ததும், 'எல்லாம் நீ கொடுக்கற செல்லம்' என்று லாவண்யா சொன்னதும் மாற்றிமாற்றி அவள் மனக்கண்ணில் வந்து போனது.

இன்று காலையில் எழுந்திருக்கும்போதே லேசாக தலை சுற்றுவது போலிருந்தாலும் சமாளித்துக்கொண்டு, காலையுணவை தயார் செய்துகொண்டிருந்தாள். அடடே!!.. சட்னிக்கு தேங்காய் இல்லையே என்று நினைத்துக்கொண்டு, மகனைக்கூப்பிட்டாள்.

"கண்ணா.. ஒரு எட்டு கடைவரைக்கும்போய் தேங்காய் வாங்கிட்டு வந்துடேன்"

"போம்மா.. உங்களுக்கு வேற வேலையில்லை. எனக்கு தேங்காயெல்லாம் பார்த்துவாங்கத்தெரியாது. அவ சும்மாதானே உக்காந்துக்கிட்டிருக்கா. அவளை அனுப்புங்க"

அதற்குள் மகள் பாய்ந்தோடி வந்து, "உனக்கு போகமுடிஞ்சா போ, இல்லைன்னா விடு. என்னை ஏன் நடுவுல இழுக்கறே??.. என்னால போக முடியாது" என்றாள்.

அதற்குள் ஆபத்பாந்தவியாக வந்த மாமியார் அவசரமாக, 'பரவாயில்லைம்மா.. சாம்பாரே வெச்சுடலாம், டிபனுக்கும் மதியத்துக்கும் ஆச்சு. நான் செய்யறேன், நீ வேணா கொஞ்சம் உக்கார்ந்துக்கோ.. தீபு, கொஞ்சம் வெங்காயம் உரிச்சுத்தரயாம்மா?. அப்படியே சமையலும் கத்துக்கலாம்" என்று பேத்தியை ஆசையாசையாக அழைத்தார்.

"வெங்காயம் உரிக்கறதா!!.. நானா??.. நெவர். என் நெயில்பாலிஷெல்லாம் பாழாயிடும். வீட்ல இருந்தாலே இப்படித்தான் ஏதாவது வேலை ஏவிக்கிட்டே இருப்பீங்க. நான் காலேஜ் கேண்டீன்லயே சாப்பிட்டுக்கறேன்.. பை.. பை.." என்று கையசைத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.

ஒருவழியாக காலையை சமாளித்து அலுவலகமும் வந்தாயிற்று.. ஆரம்பத்திலேயே எல்லாத்தையும் கையிலேயே கொடுத்துப்பழக்கிவிட்டு இப்போது திடீரென்று எல்லாத்தையும் அவர்களேசெய்துக்கணும் என்று எதிர்பார்ப்பது தப்பு என்றே தோன்றியது. இருந்தாலும், இப்போதும் ஒன்றும் கை மீறிவிடவில்லை. எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்வார்கள். ஆனால், எப்படிச்சொல்வது என்றுதான் தெரியவில்லை.மதியம் லஞ்சுக்காக எழுந்தவள், திடீரென்று ஏற்பட்ட தலைசுற்றலால் அப்படியே அமர்ந்துகொண்டாள். வேகவேகமாக அருகே வந்த லாவண்யா, தண்ணீர் கொடுத்து மெல்ல ஆசுவாசப்படுத்தி, காண்டீனுக்கு அழைத்துச்சென்றாள். தொண்டையில் இறங்கிய சூடான காபி கொஞ்சம் தெம்பை கொண்டுவந்தது.

அகால நேரத்தில் ஒலித்த அழைப்பொலியால் மதியத்தூக்கம் கலைந்த எரிச்சலுடன் கதவைத்திறந்த பர்வதம்மாள் சாருமதியையும், அவளை கைத்தாங்கலாக பிடித்திருந்த லாவண்யாவையும் கண்டு திடுக்கிட்டாள். சாருமதியை மெல்ல படுக்கையில் கிடத்திய லாவண்யா, வாங்கிவந்த பழங்களை பக்கத்து டீபாயில் வைத்தபடியே, "ஆபீஸ்ல திடீர்ந்து மயங்கி விழுந்துட்டா, பக்கத்துலயே டாக்டர் கிட்ட காமிச்சுட்டுத்தான் வரேன். இரத்த அழுத்தம் தாறுமாறா எகிறிப்போயிருக்கறதால நாலு நாளைக்காவது பெட் ரெஸ்ட் எடுக்கணும். படுக்கைய விட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் அசையாம பார்த்துக்கோங்க. மறுபடியும் மயக்கம் போட்டா, ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகவேண்டியிருக்கும்ன்னு டாக்டர் சொல்லியிருக்கார்." என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

சாயந்திரம் ஒவ்வொருத்தராக வந்த குடும்பத்தினருக்கு விபரம் சொல்லப்பட, கேட்டுக்கொண்டதுக்கு அடையாளமாக கண்களை உயர்த்திப்பார்த்துவிட்டு மறுபடியும் ஃபைலில் மூழ்கிவிட்டார் கணவர். "பாட்டி.. பசிக்குது. நைட் என்ன டிபன்??.." என்று குரல் கொடுத்தார்கள் குழந்தைகள் இருவரும்.

"மதியம் மீந்த சாப்பாடுதான் இருக்கு. பாட்டியால ஒண்ணும் பண்ணமுடியாதுப்பா.. மாவு ஃப்ரிஜ்ஜில் இருக்கு. வேணும்ன்னா தோசை ஊத்திக்கிறியா செல்லம்.. சட்னி எப்படிப்பண்றதுன்னு நான் சொல்லித்தரேன்" என்ற பாட்டியை முறைத்துவிட்டு, வெளியே கிளம்பிய தீபு திரும்பி வரும்போது கையில் இருந்த பார்சல், அவள் ஹோட்டலிலிருந்து வாங்கி வந்திருக்கிறாள் என்று சொல்லாமல் சொன்னது.

மறுநாள் காலைக்காப்பியை எதிர்பார்த்து,வராததால் டேபிளுக்கு வந்த பரசுராம், "தீபுக்குட்டி, இன்னிக்கு நீ அப்பாவுக்கு காபிபோட்டு தருவியாம்.. என் செல்லமில்லே"

"இவளா.. காபியா??.. அப்பா, இவ போட்ட காபியை விட பினாயில் ரொம்ப நல்லாருக்கும்" என்று உசுப்பேற்றினான் பிரபு.

"எனக்கு காபி போட தெரியாதுங்கறயா??.. உலகத்தரத்துல போட்டுக்காட்டறேன். சேலஞ்ச்??.." என்று கட்டைவிரலை உயர்த்திக்காட்டினாள் தீபு.

"சேலஞ்ச்.." பதிலுக்கு கட்டைவிரலை உயர்த்தினான் பிரபு.

சமையலறையில் நுழைந்த தீபுவுக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற்போலிருந்தது. முன்னேபின்னே கிச்சன் பக்கம் வந்திருந்தால்தானே. நடப்பது அனைத்தையும் நமட்டுச்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த பாட்டியிடம் உதவி கேட்கவும் ஈகோ தடுத்தது. ஈகோவை பார்த்தால் பிரபுவை எப்படி ஜெயிப்பது. கடைசியில் பாட்டியிடம் சரண்டரானாள். கமகமவென முன்னே வைக்கப்பட்ட காபியின் சுவையில் மயங்கியவர்கள், அடுத்த அரைமணி நேரத்தில் டேபிளில் வைக்கப்பட்ட மல்லிகைப்பூ இட்லியையும், தக்காளிச்சட்னி, சாம்பார் வகையறாக்களையும் பார்த்ததும் வியப்பின் உச்சிக்கே போனார்கள்.

"என் பொண்ணு முதன் முதலா சமைச்சதுக்கு அன்பளிப்பு" என்று சொல்லி அப்பா கொடுத்துவிட்டுப்போன ஆயிரம் ரூபாய் நோட்டைப்பார்த்ததும், "அப்பா, இனிமே உங்களுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் செலவு வரப்போவுது.. ஏன்னா, அட்லீஸ்ட் ஒருவேளையாவது நான் சமைக்கலாம்ன்னு இருக்கேன்" என்ற மகளிடம், "ஏடிஎம் மிஷினை நம்ம வீட்டு வாசல்லயே வைக்கச்சொல்லலாம்ன்னு தோணுது" என்று பதிலுக்கு கிண்டலடித்து மகிழ்ந்தார் பரசுராம். மனைவி படுத்திருந்த அறைக்குள் போய் ஐந்து நிமிடம் பேசிவிட்டு அலுவலகம் கிளம்பினார்.

வீட்டினுள் வந்த தீபு, "டேய் அண்ணா, நைட்டுக்கு மஷ்ரூம் பிரியாணி செய்யப்போறேன். வேணுங்கறதை லிஸ்ட் போட்டுத்தரேன். மார்க்கெட்டுல போயி வாங்கிவா.. என்ன முழிக்கறே.. நான் சமைக்கறப்ப நீ கொஞ்சம் ஹெல்ப் செய்ய மாட்டியா ப்ளீஸ்.. "என்று கொஞ்சலாக கேட்கவும், "ராட்சசி.. பிரியாணி மட்டும் போதுமா??.. எனக்கு சாத்துக்குடி ஜூஸும் வேணும். அதையும் லிஸ்டுல சேரு. ஆமா!!.. இதெல்லாம் நீ எப்படி செய்வே?. உனக்குத்தான் உப்புக்கும் சர்க்கரைக்குமே வித்தியாசம் தெரியாதே." என்று கேட்டான்.

"இண்டர்நெட்டிருக்க பயமேன்... சமையல் சம்பந்தமா எக்கச்சக்க தளங்கள் இருக்கு தெரியுமா?. அத்தோட பாட்டியும் ஒரு நடமாடும் சமையல் நூலகமாச்சே. ஜமாய்ச்சுட மாட்டேன்!!.." என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள் தீபு.

"அம்மா,. நீங்க ஒருத்தராவே செஞ்ச வேலைகளை நாங்க பகிர்ந்துக்கிட்டு செய்யும்போதுதான், நீங்க எங்களுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கீங்கன்னு புரியுது. இப்ப, நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் சமைக்கப்போற பிரியாணியை சாப்பிட்டுட்டு உங்க உடம்பு சரியாயிடும் பாருங்க.." கழுத்தைக்கட்டிக்கொண்டு கொஞ்சிய மகள், இன்று பெரிய மனுஷிபோல் பேசுவதை வியப்புடனும், பெருமிதத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தாள் சாருமதி.

ஒரு வாரம் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று சாருமதியை பார்க்க வந்த லாவண்யா திகைத்துத்தான் போனாள். வீடே மாறியிருந்தது. பாட்டியை உட்கார வைத்துவிட்டு, தானே காபியுடனும், வெங்காயபஜ்ஜியுடனும் வந்த தீபு, தட்டை லாவண்யாவிடம் வைத்தாள். அம்மாவின் தலையணையை சரிசெய்து, லேசாக நிமிர்ந்து உட்காரவைத்தாள். பின் சாருமதிக்கு மாத்திரைகளை எடுத்துக்கொடுத்தவாறே, "ஆன்ட்டி, நானே செஞ்ச பஜ்ஜி. பயப்படாம சாப்பிடுங்க" என்று கண்ணடித்தபோது, நம்பமுடியாமல் தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக்கொண்டாள்.

ஜூஸுடன் உள்ளே வந்த பரசுராம், தம்ளரை மனைவிடம் நீட்டியபடி, "இப்போ எப்படிம்மா இருக்கு.." என்று அன்புடன் விசாரித்தார். லாவண்யாவுக்கு தலைசுற்றியது பிரமிப்பால்.

"ஆன்ட்டி, இருந்து டின்னர் சாப்பிட்டுட்டுத்தான் போகணும்" என்றபடி ஹாலுக்கு வந்த தீபு, "அண்ணா, வரவர காய்கறி வாங்கறதுல நீ நல்லாவே தேறிட்டே. இன்னிக்கு வாங்கிவந்த பிஞ்சுவெண்டைக்காய் சூப்பர் போ.. ஸ்பெஷலா, உனக்காகவே அதை பொரியல் செய்யப்போறேன்.." என்றாள்.

"தாங்க்யூ.. என் தங்கச்சியே.... பாட்டி, மெஷின்ல இருந்த துணியெல்லாம் காயப்போட்டாச்சு. வேற வேலை ஏதாவது இருக்கா?.. " என்றபடி பாட்டியின் அருகில் அமர்ந்தான் பிரபு. 

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த லாவண்யா, பிரமிப்பு மாறாமல், "எப்படிடீ இந்த மாயமெல்லாம். ஏதாச்சும் மந்திரம் போட்டியா!!" என்று ஆச்சரியத்துடன் வினவினாள்.

லேசான புன்சிரிப்புடன் அவளைப்பார்த்தாள் சாருமதி. "சிலசமயங்கள்ல நாம நம்ம குடும்பத்துல இருக்கறவங்களை தவறா எடைபோட்டுடறோம். நாம இல்லைன்னா அவங்களால ஒண்ணுமே செய்யமுடியாதுன்னு தப்புக்கணக்கு போட்டு, எல்லா பாரத்தையும் சுமந்துக்கிட்டு அவதிப்படறோம். அப்பறம் தாங்கமுடியாம அவங்க கிட்ட எரிஞ்சுவிழுந்து உறவையும் பாழாக்கிக்கறோம். இதைத்தான் இத்தனை நாளா நானும் என்னையறியாமலேயே செஞ்சுக்கிட்டு வந்திருக்கேன். இப்போ, நான் படுக்கையில் படுத்ததுமே, முதல்ல வேண்டா வெறுப்பா செய்ய ஆரம்பிச்சாலும், அப்புறம் ஒரு ஆர்வம் வந்து அவங்களுக்கே பொறுப்பு வந்துடுச்சு. என்னோட கஷ்டத்தையும் உணர்ந்துக்கிட்டாங்க.. அது போதுமே"

என் கணவரும், முதல்ல கடமைக்காக ஐந்து நிமிஷம், பத்து நிமிஷம் பேசிக்கிட்டிருந்தவர் இப்போ, எங்கிட்ட பேசாம ஆபீஸ் போறதில்லை. வீட்டுக்கு வந்ததும் ஆபீஸ்ல நடந்த விபரங்களை சொல்லலைன்னா அவருக்கு தலை வெடிச்சுடும். என்னைக்கவனிக்கணும்கறதுக்காகவே வேலையெல்லாம் ஆபீஸ்லயே முடிச்சுட்டு வந்துடறதால, குடும்பத்தோட நேரம் செலவிடறார். இது அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்காம். இத்தனை நாளா இந்த சந்தோஷத்தையெல்லாம் மிஸ் செஞ்சுருக்கேனேன்னு சொல்றார். நீ கொடுத்த யோசனைப்படி தலைசுற்றல் டிராமா போட்டதுக்கு ரொம்பவே பலன் இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் லாவ்ஸ்.." என்றபடி நன்றியுடன் லாவண்யாவின் கைகளைப்பற்றிக்கொண்டாள்.

"அப்புறமென்ன,.. திங்கட்கிழமையிலேர்ந்து ஆபீஸ் வந்துடுவேயில்லே"

"கண்டிப்பா.. வியாதியொண்ணுமில்லாம சும்மாவே படுத்துக்கிடந்து எனக்கும் போரடிச்சுடுச்சு. ஆனா, நீ கொடுத்த விட்டமின் மாத்திரைகள்லயும், டானிக்லயும், என்னோட உடம்பும் நல்லாவே தேறிடுச்சு. புதுத்தெம்பு வந்தாப்ல இருக்கு.." என்று குறும்புடன் கண்ணைச்சிமிட்டினாள் சாருமதி. கலகலவென்ற அவளது சிரிப்பில் லாவண்யாவும் சேர்ந்துகொண்டாள். 



டிஸ்கி: நான் எழுதிய இந்தசிறுகதை, ஜூன் மாத 'இவள் புதியவள்' இதழில் வெளிவந்திருக்கு. சிறுகதையை வெளியிட்ட 'இவள் புதியவள்' இதழுக்கு நன்றி :-)




Thursday, 23 June 2011

ஷாஹி பாலக் குருமா

எதுக்கும் இருக்கட்டும்ன்னு விதைச்சு வெச்ச அரைக்கீரையும், பொன்னாங்கண்ணியும் இப்ப பெஞ்சுக்கிட்டிருக்கிற மழையில் நல்லா தளதளன்னு வளர்ந்து நிக்குது. சத்துள்ளதா இருக்கணும்ன்னு இரசாயனக்கலப்புள்ள உரங்கள் எதுவும் போடாம, இயற்கை உரத்துலயே வளர்த்தது. வீணாக்காம வாரம் ஒரு முறை சமையல்ல சேர்த்துடுவேன். வழக்கமான அயிட்டங்களைத்தவிர கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும்ன்னு செஞ்சதுதான் இந்த பாலக் குருமா.

தேவையானவை:

 பொடியா நறுக்கின கீரை - 1 கப்
உருளைக்கிழங்கு - 1(நடுத்தர அளவில்)
வெங்காயம் - 1
சின்ன வெங்காயம் - அஞ்சாறு
தக்காளி -1 (பெரிய அளவில்)

மசாலாவுக்கு தேவையானவை:
பட்டை - சின்னத்துண்டு
கிராம்பு -3
ஏலக்காய் - 2
அன்னாசிப்பூ - 1
பெருஞ்சீரகம்(சோம்பு) - அரைத்தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 1
இஞ்சி - 1/2 இஞ்ச் அளவு
பூண்டு - ரெண்டு பற்கள்

தேவையான மசாலாப்பொடிகள்:

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரைத்தேக்கரண்டி அளவு அல்லது காரத்துக்கேற்ப.
மல்லித்தூள் - அரைத்தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப

விழுதுக்கு:
முந்திரிப்பருப்பு - 7 எண்ணிக்கையளவில்+வறுத்து தோலுரிச்ச நிலக்கடலை கால்கப்.

தாளிக்க எண்ணெய் - 1 மேசைக்கரண்டியளவு.

எப்படி செய்யறதுன்னு இப்ப பார்க்கலாம்...

மொதல்ல, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பெருஞ்சீரகம் இதெல்லாத்தையும், சட்னி ஜார்ல போட்டு நல்லா பவுடர் செஞ்சுக்கோங்க. அப்றம் அதுகூடவே பச்சைமிளகா, இஞ்சி, பூண்டையும் சேர்த்து தண்ணீர் விடாம நல்லா அரைச்சுக்கோங்க. இதை ஒரு கிண்ணத்துல தனியா எடுத்து வெச்சுட்டு, முந்திரிப்பருப்பையும் வறுத்த நிலக்கடலையும் அதே ஜார்ல போட்டு ஒரு சுத்து சுத்திட்டு ஒரு தேக்கரண்டி அளவுக்கே தண்ணீர் சேர்த்து விழுதா அரைச்சு வெச்சுக்கோங்க.

தக்காளியை பொடியா நறுக்கிக்கோங்க. வெங்காயத்தை மெல்லிசா ஸ்லைஸ் செஞ்சுக்கலாம். அல்லது உங்க விருப்பப்படியான அளவுல நறுக்கிக்கலாம். உருளைக்கிழங்கையும் கொஞ்சம் சின்னச்சின்ன அளவுல நறுக்கிக்கோங்க. சின்ன வெங்காயத்தை சட்னி ஜார்ல போட்டு, ஜஸ்ட் ஒரு சுத்து.. அவ்ளோதான். வெங்காயத்தை துருவினமாதிரியான எஃபெக்ட் கிடைச்சுடும், அது போதும்.

இப்ப அடுப்பில் ஒரு பாத்திரத்தை சூடாக்கி, ஒரு மேசைக்கரண்டியளவு எண்ணெயை சூடாக்குங்க. அதுல, அரைச்சு வெச்சிருக்கிற மசாலாவைச்சேர்த்து, பச்சைவாசனை போகறவரை லேசா கிளறுங்க. இப்ப வெங்காயத்தையும்,உருளைக்கிழங்கையும்போட்டு, வெங்காயம் பொன்னிறம் வர்றவரைக்கும் வதக்குங்க.. ஆச்சா!!.. அடுத்தாப்ல தக்காளியையும் போட்டு நல்லா வெந்து, மசியறவரைக்கும் கிளறுங்க.

இப்ப இந்த கலவைகூட மசாலாப்பொடிகளை சேர்த்து லேசா கிளறிட்டு, கொரகொரன்னு அரைச்சுவெச்ச சின்னவெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்க. அடுத்தாப்ல கீரையை சேருங்க. கீரை அரைவேக்காடு அளவுக்கு வதங்கினதும், ஒண்ணரைகப் தண்ணீர் சேருங்க. (விருப்பப்பட்டா கூடக்குறைய சேர்த்துக்கலாம்). எல்லாம் சேர்ந்து கொதிச்சு வந்ததும், தணலை மிதமா எரியவிடுங்க. எல்லாம் உருளைக்கிழங்கு வேகறவரைக்கும்தான். வெந்ததும் முந்திரி+நிலக்கடலை விழுதைச்சேர்த்துடலாம். சும்மா... ஒரு கொதி வரட்டும். அதுக்குள்ள கொத்தமல்லி,புதினா,கறிவேப்பிலை இலைகளை பொடியா அரிஞ்சு வெச்சுக்கோங்க.

குருமா லேசா திக்கானதும் இறக்கி பரிமாறும் பாத்திரத்துக்கு மாத்திடுங்க. பொடியா நறுக்கிவெச்ச இலைகளை மேலாக தூவி அலங்கரிக்கலாம். இது வாசனையையும் தூக்கலா காண்பிக்கும் (டூ இன் ஒன்). சாதவகைகள்,புலாவ், பிரியாணி,கிச்சடி, சப்பாத்தி, இட்லி தோசை, ஆப்பம்,இடியாப்பம்... இன்னும் ஏதாவது விட்டுப்போயிருக்கு??!!.. :-))). எல்லார்கூடவும் கூட்டணி சேர்றதுல நம்மாளு கில்லாடி :-)

கீரை உடம்புக்கு எவ்ளோ நல்லதுன்னு சொல்லித்தெரியவேண்டியதில்லை. கீரைகளில் கால்சியம், சோடியம், க்ளோரைன் எனப்படும் உலோகச்சத்து அதிகம் உண்டு. கீரையில் சர்க்கரை கிடையாது ஆகவே ரத்தத்துல சர்க்கரையோட அளவு அதிகமா இருக்கற நோயாளிகளுக்கும் இது உகந்தது. பூண்டும் மிகவும் நல்லது.(கீரையோட ரெண்டுபல் பூண்டும் ஒரு சிட்டிகை பெருங்காயமும் சேர்த்து வேகவெச்சு மசியல் செஞ்சு பாருங்க. அருமையா இருக்கும்.

இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுது. அதுல, அரைக்கீரை, பாலக்கீரை தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை மற்றும் புதினா தழை இதெல்லாம் முக்கியமான வகைகள்.கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டிருக்கு.கீரைகள்ல சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவை நிறைய இருக்கு.

கீரைகள்ல குறிப்பா இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்கள் நிறைய அளவுல இருக்கு. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையை ஏற்படுத்துது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அப்றம் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான உடல்நல அசெளகரியம். கீரைகளை தினமும் உணவில் சேர்த்துகிட்டா, இரத்த சோகை வர்றதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்

இந்தியாவுல ஒவ்வொரு வருடமும் அஞ்சு வயசுக்குட்பட்ட சுமார் 30000 சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைபாட்டினால் கண்பார்வையை இழக்கும் நிலை ஏற்படுதாம்... பாவமில்லையா :-(

கீரைகள்ல இருக்கற கரோடின்களை பாதுகாக்க,  ரொம்ப நேரம் வேகவைக்கறதை தவிர்க்கணும். ரொம்ப நேரம் வேகவைச்சா கரோடின் அழிஞ்சுடும். அப்றம் கீரை சாப்பிட்ட பயன் இருக்காது.கீரைகள்ல பி-காம்ளக்ஸ் வைட்டமின்களும் நிறைய இருக்குது. இதுவும் உடம்புக்கு ரொம்பவே நல்லது. கீரைகள்லஇருக்கிற கரோடின், உடலில் ஜீரணமானதுக்கப்புறம் வைட்டமின் ஏ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுது.

அதான்,..வருஷம் முழுக்க மார்க்கெட்டுல கிடைக்குதே.. வாங்கி விதவிதமா சமைச்சு, ஆரோக்கியத்தை மேம்படுத்துங்க :-))



Wednesday, 22 June 2011

சோகமா ஒரு சொந்தக்கதை..

ஒரு வழியா லீவு முடிஞ்சு வந்துட்டேன்.  புது இடுகையை எதிர்பார்த்து தெனமும் ஆவலோட என் தளத்துக்கு வந்த(அப்டீன்னு நம்பறேன் :-)) கோடானு கோடி நல்ல உள்ளங்களுக்கு மொதல்ல நன்றி. திடீர்ன்னு காணாமப்போயிட்ட என்னைக்கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கற அளவுக்கு போயிட்டதா கேள்விப்பட்டதும், அப்படியே கண்ணுல தண்ணி வந்துடுச்சு. (வெங்காயம் நறுக்கினதாலதான் கண்ணீர் வந்ததுங்கற விவரம் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது :-)). அதான் ஓடியாந்துட்டேன். இந்த இடுகையையே என்னோட விடுமுறை விண்ணப்பமாவும், மருத்துவ சான்றிதழாவும் எடுத்துக்கணும்ன்னு தாழ்மையோட மிரட்டிக்கேட்டுக்கறேன்..

விடுமுறைன்னா விருந்தாளிங்க வர்றது சகஜம்தான்னாலும், இந்தத்தடவை எல்லோரும் ஒட்டுமொத்தமா வந்து அலற வெச்சுட்டாங்க. எப்பவும் தனியாவர்த்தனமா கச்சேரி நடத்தற இரத்த அழுத்தம், இந்தத்தடவை தன்னோட நண்பர்களையும் கூட்டு சேர்த்துக்கிட்டு நடத்துன அமர்க்களமான ஜூகல்பந்தியால, நிலைமை தாறுமாறாகி, பயங்கரமான மூச்சுத்திணறல்ல கொண்டுபோய் முடிஞ்சது. திடீர் திடீர்ன்னு அட்டாக் மாதிரி வந்து சுமார் இருபது நிமிடங்களுக்காவது படுத்தியெடுக்கும். அப்படியே படுத்துடுவேன். சும்மா உக்காந்திருக்கக்கூட முடியாது. எப்பவாவது இப்படின்னா சரி.. எப்பவுமே இப்படித்தான்னா எப்படி ?!! :-)))

ரங்க்ஸ்தான் கொஞ்சம் பயந்துட்டார். வேண்ணா என்னை ஆஸ்பத்திரியில அட்மிட் செஞ்சுடலாமான்னு ஒரு ஐடியா.. "நீ நல்லா ஹெல்த்தியா இருந்தாத்தானே எங்களுக்கு தைரியமா இருக்கும்"ன்னெல்லாம் அவர் பேசப்பேச, என்னை சக்கர நாற்காலியில உக்கார வெச்சு,"சுமை தாங்கி சாய்ந்தால்,.. சுமை என்ன ஆகும்.."ன்னு பாட்டுப்பாடிக்கிட்டே நாற்காலியை தள்ளிக்கிட்டு போறமாதிரியெல்லாம் ஒரு கற்பனை வெள்ளத்துல மூழ்கிட்டேன் :-)))

எனக்கு உடம்பு சரியில்லாத துக்கத்துல சிஸ்டமும் மண்டையை போட்டுடுச்சு.. அதையும் தட்டிக்கொட்டி, சரிபண்ணி ஒரு வழியா செட்டிலாயாச்சு.. இந்த களேபரத்துல, லீவுக்கு வைஷ்ணோதேவி கோயிலுக்கு போகணும்ன்னு போட்டு வெச்ச திட்டம் பணால்.. இன்னொரு லீவு கிடைக்காமலா போயிடும்!!.




Monday, 18 April 2011

சகுனம்..


"இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா.. ச்சூ.. போ அந்தாலே.." கத்தியபடியே ஒரு கல்லைவிட்டெறியவும், சத்தம் அடங்கி.., அங்கிருந்து மூன்றாவது வீட்டின் மாடியில் மறுபடியும் முளைத்தது.

"யாரது.. கூரைல கல்லெறியறது..??" வீட்டுக்காரனின் குரல் கோபத்துடன் ஒலித்தது.

"தெனமும் ராத்திரியானா இதே தொல்லையா போச்சு.." ஒரு வாரமாக வீடுகளிலும், பைப்பில் தண்ணீர் பிடிக்கும் பெண்களிடமும் இதே பேச்சுதான்..

ஏதோவொரு வீட்டில் கைக்குழந்தை அழுகிறது என்றுதான், இரவில் வீட்டுக்கு வெளியில், காற்றுக்காக உட்கார்ந்துகொண்டு வம்பளந்து கொண்டிருந்தவர்கள் முதலில் நினைத்தார்கள். 'புள்ளையை அழவிட்டுட்டு எங்க போனா.. என்ன செஞ்சுக்கிட்டிருக்கா..' என்று பார்க்காத அம்மாவுக்கு வசவு விழுந்தது.

இரண்டொரு நாளில், ' ஏ.. இது புள்ளை அழற சத்தமில்லை.. பூனைல்லா கத்துது..' என்று தெரிந்துவிட, 'பூனை அழுதா நல்லதில்லையே..' என்று ஒவ்வொருவரும் சகுனம்சொல்ல ஆரம்பித்தார்கள். வெள்ளையில் கறுப்பு டிசைன்போட்ட புடவை மாதிரியிருந்த அந்த அழகான பூனை, இதனாலேயே அனைவரின் வெறுப்புக்கும் ஆளாகியிருந்தது. சும்மாவே அது எதிரே வந்தால் சகுனம்சரியில்லை என்று வெறுத்தவர்கள் இன்னும் கூடுதலாகவே அந்த வெறுப்பை கடைப்பிடித்தார்கள்.

ஏதோ சிறுகுழந்தையின் அழுகுரலாக ஆரம்பிக்கும்,.. நேரம் செல்லச்செல்ல சுதியும் வேகமும் கூடி, நெஞ்சைப்பிசையும் நீண்ட கத்தலாக தொடரும். இந்த சத்தத்தை கேட்டு இன்னும் சில பூனைகளும் வந்து உட்கார்ந்துகொண்டு கூட்டாக ஒப்பாரி வைக்கத்தொடங்கின.  ஒன்று யாராவது கல்லெறிந்து விரட்டவேண்டும். இல்லையென்றால் வேறு ஏதாவது பூனையோ, கடுவனோ வந்து சீறும்போதோ, இல்லை தெரு நாயொன்றின் குரைப்பிலோ சட்டென சத்தம் அமுங்கிவிடும்.

'யாருக்காவது மரணம் சம்பவிக்க இருந்தால், பூனைக்கு அது முதலிலேயே தெரிந்துவிடும். அப்படியிருந்தால்தான் அது அழும்'  என்று ருக்மணி பாட்டி சொல்லிவைத்துவிட, அந்த ஏரியாவில் சாகக்கிடப்பவர்கள் யார்யாரெல்லாம்?என்று கணக்கு எடுக்கப்பட்டது.

அவர்கள் கணிப்பில் முத்தையா தாத்தா ஒருவரைத்தவிர, மத்த வயசானதுகள் எல்லாம் கிழங்கு மாதிரி இருந்தன. எப்படியும் ஆறேழு வருஷங்களுக்காவது, கம்பை ஊன்றிக்கொண்டு நடந்தாவது.. தாக்குப்பிடித்துவிடும். முத்தையா தாத்தா ஒருவர்தான், படுத்த படுக்கையாக இருக்கிறார். உணர்வுகளெல்லாம் மங்கி, சகலமும் படுக்கையில் என்றானபின்னும், உயிர்மட்டும் ஊசலாடிக்கொண்டிருந்தது.

'எல்லாம் தின்னு, ஆண்டுஅனுபவிச்சாச்சு, நெறைய நல்லது கெட்டது பார்த்து, வாழ்ந்து தீர்த்தாச்சு. அப்புறமும் என்ன குறையோ..' என்று அடிக்கடி ஊர்வாயில் அடிபடுவார். 'என்னடே கதிரேசா.. உங்க தாத்தா அம்மாவாசை தாண்டிடுவாரா..' என்று சிலர் அவர் பேரனை வம்பிழுக்கையில் தலையை குனிந்துகொண்டே போய்விடுவான். எத்தனை வயதானால் என்ன.. சொந்தமல்லவா!!..

பூனை அழுவது அவரது மரணத்துக்காகத்தான்.. என்று எல்லோரும் அனுமானித்துக்கொண்டார்கள். எப்போது நிகழும் என்றே காத்திருக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். விட்டால்,.. யமனையே ஆட்டோவில் கூட்டிக்கொண்டுவந்து, தாத்தாவையும் சேர்த்து அனுப்பிவைத்துவிடுவார்கள் போல..

கதிரேசனுக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. அந்தத்தெருவிலேயே முதல்முதலில் கார் வந்தது அவனது வீட்டுக்குத்தான். காரை நிறுத்த இடம் வேண்டுமென்பதற்காகவே,  தோட்டத்தில் ஒரு பகுதியில் ஷெட் கட்டியிருந்தான். 'கார்காரர் வீடு...' என்று அவர்கள் வீடு அடையாளம் காட்டப்படுவதில், அவன் அம்மைக்குத்தான் ரொம்ப பெருமை.

கார் வாங்கி, வீட்டுக்கு கொண்டுவந்தபின் அதில் முதல்முதலாக கோயிலுக்குத்தான் குடும்பத்துடன் செல்லவேண்டும் என்று அவன் அம்மை பிடிவாதம் பிடித்து அதில் வெற்றியும் பெற்றிருந்தாள். திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை மாலையன்று, சந்தனம், குங்குமம் இடப்பட்டும் , மாலையணிந்துகொண்டும் கார் தயாராக இருந்தது. சக்கரங்களின் அடியில் எலுமிச்சம்பழமும் பலியிட தயாராக இருந்தது. 'கொஞ்சம் இருப்பா.. நல்ல சகுனம் பார்த்து வண்டியை எடுக்கணும். எம்மா விஜயா,.. நெற கொடத்த கொண்டுட்டு எதிர்ல வாம்மா..' என்று உத்தரவிடவும், அவள் எதிரில் வந்து நின்றாள்.

கார் ஸ்டார்ட்டாகி, காம்பவுண்டை விட்டு வெளியே வரவும் திடீரென்று அது நாலுகால் பாய்ச்சலில் குறுக்கே பாய்ந்தது. விரட்டிக்கொண்டு வந்த தெருநாய், நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு இரைக்க இரைக்க நின்றது. கண்மூடித்திறப்பதற்குள் என்ன நடந்ததென்று ஒருவருக்கும் உறைக்கவில்லை. மெதுவாக டிரைவர் ஆசனத்திலிருந்து இறங்கியவன், காருக்கு கீழே குனிந்து பார்த்தான். ரத்த சகதியினூடே வெள்ளையும் கறுப்பும் கலந்தநிறத்தில் ஒரு கால் லேசாக துடித்து பின் மெதுவாய்.. மெதுவாய்.. அடங்கியது.  இப்போதெல்லாம் அந்த தெருவில் ராத்திரியில் அழுகுரல் கேட்பதேயில்லை.



Wednesday, 6 April 2011

க்ரீமெல்லாம் பூசலைப்பா..

அதென்னவோ.. நம்ம மக்களுக்கு சிகப்புன்னா அப்படியொரு மோகம்.. அதைத்தெரிஞ்சு வெச்சிக்கிட்டுத்தானே சிகப்பழகு க்ரீம்களோட வியாபாரம் கொடிகட்டிப்பறக்குது. ஏற்கனவே, சிகப்பா இருக்கறவங்களுக்குத்தான் கல்யாணம் ஆகும், நல்ல வேலை கிடைக்கும், அழகிப்போட்டியில ஜெயிப்பாங்க.. அப்படி இப்படின்னு மூளைச்சலவை நடக்குது. பத்தாததுக்கு இப்போ வெய்யில் காலம் வேற ஆரம்பிச்சாச்சா.. வெய்யில்ல போனா கறுத்துடுவே.. இந்த க்ரீமை உபயோகி... உன் நிறம் அப்படியே இருக்கும்ன்னு வேற ஆரம்பிச்சுட்டாங்க..

இது ஒண்ணைத்தான் ரசிக்கமுடியலையே தவிர சிவப்பு நிறமும், அந்த நிறத்திலிருக்கும் பொருட்களும், பூக்களும் எல்லோரையும் கண்டிப்பா ரசிக்கவைக்குது. சிவப்பு ரோஜாவுக்கு இருக்கும் வரவேற்பு சொல்லித்தான் தெரியணுமா என்ன.. அதுவும் அந்த மருதாணிச்சிவப்பு..  மத்தவங்களைவிட அதிகமா செவந்திருந்தா என்ன ஒரு பெருமிதம் :-)) பளீர்ன்னு இருக்கும் அந்த சிவப்பு அடடான்னு இருக்குமே.

'ரத்தம் ஒரே நிறம்'கறது மனுஷங்களுக்குள்ள ஏற்றத்தாழ்வு இல்லைங்கறதுக்கு சிம்பாலிக்கா சொல்லப்படற ஒரு அழகான சொற்றொடர். ஒரு பெண்ணை வர்ணிக்கணும்ன்னா, 'கோவைப்பழம்போல் சிவந்த இதழ்கள்'னு சொல்லாம முடிக்கமாட்டாங்க இலக்கியத்துல.. இவ்ளோ ஏன்??.. அதிகமா செவந்திருக்கும் தக்காளியும், தர்பூசணியும் யாரும் வாங்காம விட்டதா சரித்திரமே இல்ல.. இது எப்டி இருக்கு??

சீனர்களுக்கு இந்த சிவப்பு நிறம் ரொம்ப பிடித்தமானது.. சின்னப்பசங்களை கெட்ட ஆவியிலிருந்து இது காப்பாத்துறதா அவங்க நம்பறாங்க. இந்த நிறத்துக்கு இன்னும் சில குணங்களும் உண்டு.. இது சக்தி, ஆற்றல், மற்றும் வலிமையை குறிக்குது. சிவப்பு கலர் சிந்திக்கும் தன்மையை தூண்டுவதாகவும், நரம்புகளுக்கு வலுவூட்டுவதாவும் சொல்றாங்க. ரத்தம், மற்றும் ரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட குறைபாடுகளையும் இது சரிப்படுத்துதாம். உடம்புவலியையும் இது குணப்படுத்துவதா சொல்றாங்க. எல்லோர் கவனத்தையும் சட்டுனு கவர்ந்து இழுக்கறதாலதான் போக்குவரத்து சிக்னல்கள்ல இதை உபயோகப்படுத்துறோம். இன்னொரு சுவாரஸ்யமான தகவல்.. சிகப்பு நிறக்கார்கள்லதான் அடிக்கடி திருடர்கள் கைவரிசையை காட்டுறாங்களாம். ஏனாம்?.. முந்தையவரியை படிங்க :-))))

இந்த மாசம் நம்ம பிட்டிலும் இதான் தலைப்பு.. என்னோட கைவரிசையையும் காமிச்சிருக்கேன். நாட்டாமை.. தீர்ப்பை மாத்திமாத்தி சொல்லாம கரெக்டா சொல்லு :-))))))

மைக் டெஸ்டிங்.. ஒன்.. டூ.. த்ரீ!!..

ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையில் ஜகஜமப்பா :-))

வெய்யிலுக்கு இதம்மா.. ஜூஸ் போட தயாரா.. தக்காளி:-)

க்ளோஸப்பில் ஹீரோயின் :-)))


இவங்க வழி தனீ வழி..

தேர்வு செஞ்ச களைப்பைப்போக்க கலர்ஜோடா :-))))))))

உங்க கருத்துகளையும் எடுத்துவுடுங்க :-))




Tuesday, 29 March 2011

ஒரு பிளாஸ்டிக் மழை இங்கு பொழிகின்றது...

பாலைவனம் வழியா தன்னோட ஒட்டகத்துல பயணம் செஞ்சுக்கிட்டிருந்த ஒருத்தர், ராத்திரி ஆனதும் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்ன்னு ஒரு இடத்துல கூடாரம் அமைச்சி தங்கினார். ராத்திரி நேரமாக ஆக பயங்கரமா குளிர ஆரம்பிச்சதும் கம்பளியை இழுத்துப்போத்திக்கிட்டு தூங்க ஆரம்பிச்சார். அரைத்தூக்கத்துக்கு போயிருப்பார். அவரோட கையை யாரோ சுரண்டறமாதிரி உணர்ந்து திடுக்கிட்டு முழிச்சார். யாருன்னு பாத்தா.. அவரோட ஒட்டகம் பாவமா முழிச்சிக்கிட்டு நின்னுட்டிருந்தது.

"வெளியே குளிர் தாங்கலை.. என்னோட முன்னங்கால்களை கூடாரத்துக்குள்ள வெச்சிக்கட்டுமா.. கொஞ்சம் இதமா இருக்கும்.."ன்னு பரிதாபமா கேட்டதும் சரின்னு ஒப்புக்கிட்டார்.(ஒட்டகம் எங்கியாவது பேசுமான்னு ஆராவது கேட்டீங்க ஒட்டகத்து கிட்டயே பிடிச்சுக்கொடுத்துடுவேன் :-)) இன்னும் கொஞ்சம் நேரமானதும் பாதி உடம்பை கூடாரத்துக்குள்ள வெச்சிக்க அனுமதி கேட்டது. கூடாரத்துக்குள்ள கொஞ்சம் இட நெருக்கடியாக இருக்குமேன்னு யோசிச்சாலும் ஒட்டகத்து மேல பரிதாபப்பட்டு சரின்னுட்டு ஒரு ஓரமா ஒதுங்கி படுத்துக்கிட்டாரு.. இன்னும் கொஞ்ச நேரமானதும், 'ரொம்ப குளிருது.. கூடாரத்துக்குள்ளயே வந்துடறேனே'ன்னு சொல்லிச்சு.

'வேண்டாம்.. கூடாரத்துக்குள்ள ரெண்டுபேரு தங்கற அளவுக்கு இடமெல்லாம் கிடையாது'ன்னு அவர் சொல்லிக்கிட்டிருக்கையிலேயே ஒட்டகம் கூடாரத்துக்குள்ள வந்து நின்னுது. சுத்தும் முத்தும் பாத்துட்டு, 'நீ சொன்னது சரிதான், இந்த கூடாரத்துக்குள்ள ஒருத்தருக்கு மட்டும்தான் இடமிருக்கு.. அதனால, நா இங்கே தூங்கறேன். நீ வெளியே படுத்துக்கோ'ன்னு சொல்லி பயணியை வெளியே தள்ளிட்டுது. பாவம் அவர்.. பரிதாபப்பட்டு இடம் கொடுத்ததுக்கு தனக்கு இப்படி ஒரு கதியான்னு குளிர்ல வெறைச்சிப்போயி நின்னாரு.

கிட்டத்தட்ட இப்படித்தான் ப்ளாஸ்டிக் நம்ம வாழ்க்கையில கொஞ்சம் கொஞ்சமா நுழைஞ்சு நம்மை ஆக்கிரமிச்சிக்கிட்டிருக்கு. உதவி செய்யறமாதிரி நைஸா வந்து இப்ப நமக்கே எமனா ஆகியிருக்கு. ஒரு காலத்துல, வீட்டுக்கு ஏதாவது பொருட்கள் வாங்குனா, அதை காகிதப்பைகள்ல போட்டுக்கொடுப்பாங்க. சிலசமயங்களல நம்ம அஜாக்கிரதையால பேப்பர் கிழிஞ்சுட்டா, பொருட்கள் எல்லாம் சிந்திடும். முக்கியமா.. மழைக்காலங்கள்ல பேப்பர்லாம் தண்ணியில ஊறிப்போயி பொருட்களும் கெட்டுப்போயிடும். அந்த சமயத்துல, ப்ளாஸ்டிக் பைகள் பேப்பரின் உபயோகத்தை குறைச்சு, மரங்களை காப்பாத்த வந்த ஆபத் பாந்தவன், அனாத ரட்சகனா தெரிஞ்சதுல வியப்பேதும் கிடையாது. பல்பொருள் அங்காடிகளில் மட்டுமல்ல, இப்பல்லாம் சின்னக்கடைகளில் கூட சின்ன அளவுகளான அம்பதுகிராம், நூறுகிராம்லயும் பொருட்களை எடைபோட்டு, பாக்கெட் போட்டு வெச்சிடறாங்க. நாம கேட்டதும் சட்ன்னு எடுத்துக்கொடுத்துடறாங்க.

அதுவுமில்லாம அப்பல்லாம் ஏதாச்சும் வாங்கணும்ன்னா, கையில் பை கொண்டு போகணும். திரவப்பொருட்களான பால்,தயிர், எண்ணெய் இதெல்லாம் வாங்கணும்ன்னா பாத்திரம் கொண்டு போகணும்.இதையெல்லாம் நொச்சுப்பிடிச்ச வேலையா நினைச்ச மக்களுக்கு, மார்க்கெட் போகணும்ன்னா கையை வீசிக்கிட்டுப்போலாம்,  எதுவானாலும், அவங்களே பையில் போட்டுக்கொடுத்துடுவாங்க.. என்ற நினைப்பே தேவாமிர்தமா இனிச்சிருக்கும். பலன்.. கிராமங்கள், பெருநகரங்கள்ன்னு பாகுபாடு இல்லாம ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பைன்னு வாங்கி குப்பையை குவிச்சிக்கிட்டிருந்தாங்க.. ஆனா இந்த விஷயத்துல, கிராமங்களால நகரங்கள விட கூடுதல் குப்பை சேர்க்கமுடியலை.. என்ன இருந்தாலும் நகரத்துக்காரங்க கொஞ்சம் ஃபாஸ்டு இல்லியா :-))

முக்கியமான தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைவிட, பாலிதீன் பைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சப்பதான் எங்கும் பிளாஸ்டிக்.. எதிலும் பிளாஸ்டிக்ன்னு ஆகிப்போச்சு. இந்த பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள் எது தெரியுமா ?... சாட்சாத் பெட்ரோலியமேதான். உலகத்துல இப்ப பெட்ரோலியத்துக்கு ரொம்பவே தட்டுப்பாடு இருக்குது. இந்த நிலையில், ஒவ்வொருமுறையும் நீங்க பிளாஸ்டிக்கை தூக்கிப்போடும்போதும் ஒரு முக்கியமான எரிசக்தியை வீணாக்குறீங்கன்னு ஞாபகப்படுத்திக்கோங்க.

நாம வேணாம்ன்னு தூக்கிப்போடற பிளாஸ்டிக்குகள்தான் கொஞ்சம் கொஞ்சமா நம்மோட சுற்றுப்புற சூழ்நிலையை கெடுக்குது. அங்கங்கே உண்டாகும் குப்பை மலைகள், அப்புறம் காத்துல பறந்து ஆபத்தை விளைவிக்கும் பாலிதீன் பைகளைப்பத்தி சொல்லவே வேணாம். இந்தப்பைகளெல்லாம் கழிவு நீர்க்கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள் இதிலெல்லாம் போய் அடைச்சிக்கிட்டா அங்கங்கே தண்ணீர் தேங்க ஆரம்பிச்சு அதிலெல்லாம் கொசுக்கள் வாடகை கொடுக்காமலேயே குடியும் குடித்தனமுமா இருக்கும். மழை சமயங்கள்ல வெள்ளம் தேங்கி ஏகப்பட்ட சேதத்தையும் உண்டுபண்ணும். மும்பையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இதுவும் ஒரு காரணமா இருந்ததால்தான் அதுக்கப்புறம் பாலிதீன் பைகள் உபயோகப்படுத்துவதை தடைசெஞ்சாங்க. மீறி உபயோகப்படுத்தினா அபராதம்ன்னும் எச்சரிக்கை விடுத்தாங்க.

 நீர், நிலம், ஆகாயம், பூமின்னு இயற்கையின் நாலு பூதங்களையும் பயமுறுத்தும் ஆறாவது பூதம் இது. ஒரு பிளாஸ்டிக் துண்டு சிதைவடைய சுமார் ஆயிரம் வருஷங்களாகும். வெயில்ல காய்ஞ்சாலும் நுண்ணிய துண்டுகளாகுமே தவிர முழுசும் அழியாது. இந்த மாதிரி நுண்ணிய துண்டுகள்ல தண்ணீரில் அடிச்சிட்டுப்போறதெல்லாம் ஆத்துலயும் கடல்லயும் ஒதுங்கும், இல்லைன்னா மூழ்கிப்போயிடும். இப்படி மூழ்கற சின்னச்சின்ன துண்டுகளை சாப்பாடுன்னு நினைச்சு கடல்வாழ் உயிரினங்கள் முழுங்கிவெச்சுடும். வயித்துக்குள்ள போன பிளாஸ்டிக் செரிக்காம உணவுமண்டலக்குழாயை அடைச்சிக்கிடும். அதனாலயே பட்டினிகிடந்து மேலோகத்துக்கு டிக்கெட் வாங்கறதும் உண்டு.

கடலில் கொட்டப்படும் ப்ளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அறுந்ததால் தூக்கிவீசப்பட்ட மீன்பிடி வலைகளில் மாட்டிக்கிட்டும் உசிரைவிடும் கடல்வாழ் உயிர்கள் ஏராளம். சுமாரா நூறுமில்லியன் மெட்ரிக் டன்கள் அளவுல கடல்ல ப்ளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டிருக்கலாமாம். இதனால ஏற்படக்கூடிய பாதிப்புகளை நினைக்கவே பயமாருக்கு. ப்ளாஸ்டிக்கிலிருக்கும் காரீயம் போன்ற நச்சுப்பொருட்கள் தண்ணீர்ல கரைஞ்சு, மீன்களின் உடலில் கலக்குது. அதே மீனை மனுஷன் சாப்பிட்டா அந்த விஷம் மனுஷனோட உடம்பில் கலந்தா என்னெல்லாம் விளைவுகளை உண்டாக்கும் :-(

அளவுக்கு மேல சேருதேன்னு இதுகளை அழிக்கவும் முடியாது. தானாவே அழியறதுக்கு சுமார் ஆயிரம் வருஷங்களாவுதேன்னு தீக்கு தின்னக்கொடுத்தா அது சுற்றுச்சூழலை இன்னும் மாசுபடுத்துது. ப்ளாஸ்டிக்கிலிருக்கும் காட்மியம், காரீயம், பென்சீன், வினைல் க்ளோரைட், ஹைட்ரோகார்பன்கள், அப்புறம் எரிக்கும்போது வெளியேறும் நச்சுவாயுக்கள் கான்சரைக்கூட வரவழைச்சுடும். இதெல்லாம் தண்ணீரில் கரைஞ்சும், காத்துல கலந்தும் ஏற்படுத்தும் விளைவுகள் கணக்கிலடங்காது. இதெல்லாம் சுவாசிப்பதால் நம்ம நரம்புமண்டலமும் பாதிக்கப்படற அபாயம் இருக்கு.

பழைய பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டு, மெஷின் மூலம் நுணுக்கப்பட்டோ, அல்லது நார்களா உரிக்கப்பட்டோ மறுசுழற்சிக்கு தயாராகுது. மறுசுழற்சி செய்யறதுமூலம் பூமியிலிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்ன்னாலும் அது நிரந்தரத்தீர்வாகாது. மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கின் தரம் நிச்சயமா குறைஞ்சதாகவே இருக்குது. அதுல காரீயத்தின் அளவு கூடுதலா இருப்பதாகவும், அதை உபயோகப்படுத்தி செய்யப்படும் பொருட்கள், முக்கியமா விளையாட்டுப்பொருட்கள் குழந்தைகள் உபயோகப்படுத்த ஏத்தவை இல்லைன்னும் சொல்லப்படுது. அதுவுமில்லாம உற்பத்தி செய்யப்படும்போது எப்படி நச்சு வாயுக்கள் வெளிப்படுதோ.. அதேமாதிரி மறுசுழற்சி செய்யப்படும்போதும் வெளிப்படுது. இது காத்துல கலக்கறதுனால, தோல் எரிச்சல், சுவாசக்கோளாறுகள் எல்லாம் உருவாகுது.

எல்லா பிளாஸ்டிக்குமே மறுசுழற்சி செய்ய ஏத்தவை அல்ல. அதன் தன்மையைப்பொறுத்து ஏழு வகைகளா பிரிச்சிருக்காங்க. ஒவ்வொரு பொருட்களிலும் அதன் வகைக்குண்டான நம்பரை பொறிச்சிருப்பாங்க.

1 -  பெட் பாட்டில்கள்,

2 - HDPE ( High Density Polyethylene) லிக்விட் டிடர்ஜெண்ட், ஷாம்பூக்கள், மோட்டார் ஆயில்கள், ஜூஸ் மற்றும் பால் போன்றவை இதில் அடைக்கப்பட்டு வருது.

3 - PVC (Poly Vinyl Chloride)சமையல் எண்ணெய், வீடு சுத்தம் செய்ய பயன்படும் க்ளீனர்கள், டிடர்ஜெண்ட் போன்றவை இதில் பாக் செய்யப்படுது.மற்றும் குழாய்கள், மருத்துவ உபகரணங்களும் இதில் தயார்செய்யப்படுது.

4 - LDPE (Low Density Polyethylene) உறையவைக்கப்பட்ட உணவுகள், ப்ரெட், இதெல்லாம் பொதிஞ்சு வருது. மேலும் கார்ப்பெட்டுகள், ஷாப்பிங் பைகளும் இதில் தயாரிக்கப்படுது.

5 - PP (Poly propylene) சிரப், கெச்சப், மருந்துபாட்டில்கள்,யோகர்ட் டப்பாக்கள் இதில் தயாரிக்கப்படுது.

6 - P (PolyStyrene) சிடி உறைகள், டிஸ்போசபிள் தட்டுகள், கப்புகள், பானங்களுக்கான ஸ்ட்ராக்கள் தயாரிக்கப்படுது.

7 - இதர வகைகள். இதில் கம்ப்யூட்டர் பாகங்கள், குளிர்கண்ணாடிகள், வாட்டர் பாட்டில்கள், ஐபாட், நைலான் போன்றவை அடங்கும்.

இதுல 3,6,7 ஆம் வகைகளை மறுசுழற்சி செஞ்சா சுற்றுப்புற சூழலுக்கு கெடுதல் விளைவிக்கும். மேலும் கெடுதலை தவிர்க்கணும்ன்னா உற்பத்தி குறைக்கப்படணும். இதனால இதுகளை உற்பத்திசெய்ய ஆகும் பெட்ரோல் செலவும் மறைமுகமா குறைக்கப்படுது. ஆனா, தண்ணியில விட்டதை தண்ணியிலேயே பிடிக்கிறமாதிரி, நாக்பூரில் ராய்சோனி எஞ்சினீயரிங் காலேஜ்ல விரிவுரையாளரா இருக்கும் அல்கா உமேஷ் சட்காவ்ங்கர் என்பவர் மார்ச் 3, 2003 அன்று, ஒருகிலோ ப்ளாஸ்டிக் கழிவிலிருந்து 800கிராம் பெட்ரோலை பிரிச்செடுத்து சாதனை செஞ்சுருக்கார்.

எல்லோருக்குமே சவாலா இருக்கறது பாலிதீன் பைகள்தான். மழைத்தண்ணி பூமிக்குள்ள போகாம இது பெரும்பாலும் தடுத்துடறதால நிலத்தடி நீர் குறையற அபாயமும் இருக்கு. வெய்யில்ல காய்ஞ்சு பொடிப்பொடியாகும் இந்தப்பைகள்ல இருக்கற காரீயம் போன்ற நச்சுக்கள் தேங்கற ஓரளவு நிலத்தடி நீர்ல கலந்து உடலுக்கு கெடுதல் விளைவிக்குது. காத்துல பறந்து வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சல் உண்டாக்குது. ஆடுமாடுகளும் அதை இரைன்னு நினைச்சு தின்னுட்டு உணவுப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு உசிரை விடுது.

இந்தப்பைகளை குப்பை சேகரிக்கறவங்க கிட்டேயிருந்து சேகரிச்சு அதை bitumen என்ற வேதிப்பொருளுடன் கலந்து ரோடு போடறதுக்கு பயன்படுத்தலாம்ன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. மதுரை தியாகராஜர் இஞ்சினியரிங் காலேஜ் ப்ரொஃபசரான ஆர். வாசுதேவன்தான் அந்த பெருமைக்குரியவர். நவம்பர் 2002ல் பரிசோதனை முயற்சியா ரோடும் போட்டிருக்காங்க. பைகளையும் அழிச்சாச்சு.. ஆயுசு கெட்டியான ரோடும் போட்டாச்சு.. குப்பைகளை சேகரிச்சு அதுல வரும் காசில் வாழ்ந்துக்கிட்டிருக்கும் எளிய மக்களுக்கு வேலையும் கொடுத்தாச்சுன்னு ஒரே கல்லுல மூணு மாங்கா :-)

சோதனை முயற்சியின் அடுத்த கட்டமா நம்ம பெங்களூர்ல இருக்கற k.k. plastic waste management கம்பெனி 3500 டன் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தி 1200கிலோமீட்டர் தூரத்துக்கான ரோட்டை அமைச்சிருக்காங்க. பிளாஸ்டிக்கை ஒழிக்கும் அதேசமயத்துல ஸ்ட்ராங்கான ரோடும் கிடைச்சிருக்கு.
(உபயம்: கூகிளாத்தா)

இருக்கற ப்ளாஸ்டிக்கை ஒழிக்க வழி கண்டுபிடிச்சாச்சு.. இனிமேலும் குப்பை சேராம இருக்க என்ன செய்யலாம் !!!

1. கடைகளுக்கு போகும்போது தயங்காம துணி, சணல், கான்வாஸ் பைகளை எடுத்துப்போங்க. அவங்க பாலிதீன் பைகளை கொடுத்தா தலையை இடமும் வலமும் ஆட்டுங்க. உடம்புக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஆரோக்கியமான பயிற்சி அது :-))

2.தவிர்க்கமுடியாம பைகள்ல பொருட்கள் வாங்க நேரிட்டா.. அதான் நிறைய கிடைக்குதேன்னு பொசுக்குன்னு தூக்கி வீசிடாதீங்க. நம்ம வீட்லயே அதுக்கு நிறைய உபயோகங்கள் இருக்குது. அடுத்ததடவை கடைக்கு போறப்ப அந்த பையை உபயோகப்படுத்தலாம். வீட்ல அடிக்கடி காணாமப்போற பொருட்கள், சாக்ஸ்போன்ற உள்ளாடைகளை போட்டு வைக்கலாம். முக்கியமா டஸ்ட்பின்னுக்குன்னு தனியா கார்பேஜ் பைகள் வாங்காம, சரியான அளவுல இருக்கற பையை மாட்டி ரப்பர் பேண்ட் போட்டுவிடுங்க. கார்பேஜ் பைகளின் தயாரிப்பும் குறையுமில்லே..

3. உங்க ஏரியாவுல ஏதாவது மறுசுழற்சி திட்டம் அமலுக்கு வந்தா பைகளை நன்கொடையா கொடுத்தீங்கன்னா, கல்வெட்டில் உங்க பேரும் இடம்பெறும்.

4.பாலிதீன் பைகள் நிறைய மிஞ்சிப்போனா, காய்கறி, பூ, மீன் விற்கிறவங்ககிட்ட அவங்களுக்கு தேவைப்படுமான்னு கேட்டு, பட்டா தயங்காம கொடுங்க.அப்புறம் உங்களுக்கு தனி கவனிப்பு கிடைப்பது நிச்சயம்.

5. பார்க், பீச்சுக்கு போனீங்கன்னா, குப்பைகளை மறக்காம குப்பைத்தொட்டியில் போடுங்க. மறந்தும் சாக்கடைகள்ல போட்டுடாதீங்க. அப்புறம் வாசனையால் அந்தப்பக்கமே போகமுடியாது..

6. சிலபேர் கார், பஸ், ட்ரெயின்ல பயணம் செய்யும்போது குப்பைகளை அப்படியே வெளியே வீசுவாங்க. இல்லைன்னா நடைபாதையில் நைசா போட்டுட்டு போயிடுவாங்க. மும்பையில் நகருக்குள் இப்படி குப்பைபோட்டு யாராவது பிடிபட்டா அபராதமும் உண்டு. தெரிஞ்சவங்க வந்தா 'சாக்லெட் தின்னுட்டு கவரை வெளியே வீசாதீங்க'ன்னு முதல் எச்சரிக்கையே அதுதான் :-)

 கடைக்காரங்களும் கொஞ்சம் கவனிக்கணும். டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸை பொறுத்தவரைக்கும் ஒவ்வொண்ணையும் பாக்கெட் போட்டிருக்கறது பத்தாதுன்னு, பில் போடுற இடத்துலயும் பைகளை அள்ளி வழங்குவாங்க. நாலே பைகள் ஆகற இடத்துல ஏழெட்டுப்பைகள். சொன்னாலும் சிலசமயங்கள்ல கேக்கறதில்லை. ட்ரெஸ் எடுக்கப்போனாலும் பேண்ட் ஒரு பையிலும், ஷர்ட் ஒரு பையிலுமா போட்டுக்கொடுக்கறாங்க. இதெல்லாம் ஆவுறதில்லைன்னு சொன்னாலும் 'காம்ப்ளிமெண்ட்தானே.. இருக்கட்டும்'ன்னு ஒரு பதில் கிடைக்குது.
( நானே சுட்டது)
இப்ப, 'டி மார்ட்'டில் புதுச்சா ஒரு திட்டம் கொண்டுவந்திருக்காங்க. அவங்க கொடுக்கற பைகளை திருப்பி அவங்ககிட்டயே கொடுத்துடலாமாம். நுழைவாசல்ல ரெண்டு பெரிய டப்பாக்களை வெச்சு பை சேகரிப்பு நடக்குது. மறுபடியும் உபயோகப்படுத்துவீங்களான்னு கேட்டா, மறுசுழற்சி செய்யறதுக்காம். சரி... நடக்கட்டும்.. நல்ல விஷயங்களெல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கணும் :-))




Tuesday, 22 March 2011

உலகம் முழுக்க தேடுறாங்க..


'சிலபல வருடங்களுக்கு முன்னால்'.... இந்த டைட்டிலை படிக்கிறப்ப புகைமண்டலத்துக்கு நடுவுல கொசுவத்தி சுத்தறமாதிரி கற்பனை செஞ்சுக்கணும். ரைட்டா??... கொசுவத்தி நம்மை கொண்டு சேர்க்கிற இடம் ஒரு வீடு. அந்த வீட்டின் மூன்று மருமகள்களில் ரெண்டாவது மற்றும் கடைசி மருமகள்களுடைய குழந்தைகள் மழலையில் திக்கித்திக்கி.. 'ம்மா.. ப்பா'ன்னு பேச ஆரம்பிச்ச அப்புறமும், மூத்த மருமகளுக்கு குழந்தைச்செல்வம் இன்னும் கிடைக்கலை. அதுவும் கல்யாணமாகி ஐந்துவருடங்களுக்கப்புறமும்..

அவங்களும் வேண்டாத தெய்வமில்லை.. போகாத கோயில்குளமில்லை. புகுந்தவீட்லேயிருந்து எந்த நெருக்கடியும் கொடுக்கலைன்னாலும் அவங்க மனசுல ஒரு பயம் இருந்துட்டேயிருந்தது. அந்த பயத்தை நீக்கி எல்லோர் மனதிலும் அமைதியை நிலவச்செய்தது ஒரு தளிரின் வருகை.. அதுக்கப்புறம்தான் க்ளைமாக்ஸே :-))). பேரு வைப்பதில்தான் ஒரே கச்சாமுச்சான்னு ஆச்சு :-)))).

அந்தக்காலத்துல தாத்தா,பாட்டியின் பேரை வைப்பதுதான் வழக்கம். அதுவும் மூத்த மகன்னா.. கண்டிப்பா அப்பாவழி தாத்தாபாட்டியோட பேரைத்தான் வைக்கணும். அம்மாவின் அப்பாவுக்கும், அப்பாவின் அம்மாவுக்கும் ஒரே பெயர்தான்.. சில பெயர்கள் பொதுப்பெயர்களா இருக்குமே.. அதுமாதிரி. அதனால 'பாட்டியோட பேரை வெச்சாலும், மாமனார் பேரைத்தான் வெச்சிருக்கான்னு சொல்லுவாங்க.. எதுக்கு வம்பு??..'ங்கற குழப்பத்துலயே பேருவைக்காமயே ரெண்டொருமாசம் ஓடிப்போச்சு. அப்புறம், எல்லாப்பிரச்சினையும் நீங்கி அமைதி நிலவட்டும்ன்னு என் பேரை எனக்கு வெச்சாங்க.

எல்லாக்குழந்தைகளுக்கும் உள்ள உலக வழக்கப்படி, எனக்கும்.. எம்பேரு மொதல்ல எல்லாம் எனக்கே பிடிக்காது. ஒவ்வொருத்தர் எவ்ளோ அழகா, ஸ்டெயிலா பேருவெச்சிருக்காங்க.. எனக்குன்னு தேடிப்பிடிச்சீங்களேன்னு புலம்புவேன். அதுவும் நம்ம டி.ராஜேந்தர், எம்பேர்ல ஒரு தேசியகீதத்தை இயற்றியதும் ரொம்ப வெக்ஸாகிடுச்சு :-))).. அதுவரைக்கும் என்னை வம்பிழுக்கிறதா நினைச்சுக்கிட்டு, தேசப்பிதாவை வம்பிழுத்து வெறும்வாயை மென்னுக்கிட்டு இருந்த ஜெலுசில்களுக்கு அவல்,பொரி,சுண்டல்ன்னு எல்லாமே கிடைச்சுப்போச்சு..

பட்டப்பெயரெல்லாம் எதுவும் எனக்கு வெச்சதில்லை.. ஏன்னா, நான் பேருக்கேத்தமாதிரி அமைதியாவே இருப்பேன்( நம்புங்கப்பா :-D). ஆனா, அதுக்கு பதிலா எம்பேரு எனக்கே மறந்துடுறமாதிரி இன்னொரு பேரு வந்து ஒட்டிக்கிச்சு. ஆறாம்வகுப்புல நுழைஞ்சப்ப, என்னோட பேர்ல இன்னும் ரெண்டுபேர் இருந்தாங்க. ஒருத்திய கூப்பிட்டா இன்னொருத்தி எழுந்து நிப்போம். ஒரே காமெடியா இருக்கும். கடைசியில எங்க செண்பகவல்லி டீச்சர் ஒரு வழி கண்டுபிடிச்சாங்க. அவரவர் அம்மா பேரோட முதலெழுத்தையும் இனிஷியலா சேர்த்துக்கச்சொன்னதோட பதிவேட்டிலும் பதிவு செஞ்சுட்டாங்க.

எங்க அம்மாவோட பேரு 'ராமலஷ்மி'.. எல்லோரும் 'லஷ்மி'ன்னுதான் கூப்பிடுவாங்க. அவங்க பேரையும் இனிஷியல்ல சேர்த்ததுலேருந்து எல்லோருக்கும் நான் 'L.S' ஆகிட்டேன். காலேஜ் வரைக்கும் இது தொடர்ந்துச்சு. வீட்ல இன்னிக்கும் எல்லோருக்கும் பாசமா... 'லேய்',  ரங்க்ஸுக்கு மட்டும் 'மக்கா :-)). என் பேரு எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சதுன்னா, என் பையன் பேச ஆரம்பிக்கச்சே மழலையில் என்னை பேருசொல்லி கூப்பிட்ட பொழுதுகள்லதான் :-)). அதுவும் அவன் சீனாக்காரன் மாதிரி மூக்கால பேசறச்சே இன்னும் அழகா இருக்கும் :-))

ப்ளாக் ஆரம்பிச்சப்ப, ஏற்கனவே ரெண்டுபேரு இதேபேர்ல எழுதிக்கிட்டிருந்தாங்க. அதனால, குழப்பம் வேணாம்ன்னு நினைச்சேன். அதுவுமில்லாம புனைப்பெயர்ல எழுதுனா ஒரு கெத்தாயிருக்குமேன்னு ஒரு நினைப்புதான். N.P.Kன்னு ஆரோ கூவுற சத்தம் கேக்குது :-)))))))). திருனேலிக்கு பக்கத்து ஊரான, வாசுதேவ நல்லூர்ல இருக்கற மாரியம்மனோட பேரைத்தான் ரங்க்ஸுக்கு வெச்சிருக்காங்க. மாரின்னா மழைன்னு அர்த்தமாகுது.. இல்லியா?.. அடிச்சிப்பெய்யற மழையை விட, இதமான மெல்லிய சாரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால, ப்ளாகுக்கு பேரு வைக்கிறப்ப ரங்க்ஸை கூட்டணியில் சேர்த்துக்கிட்டேன் (வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கட்சியின் தலைவர் அவர் :-))). ஆனா, பேஸ்புக்கிலும், ஃப்ளிக்கர்லயும் சொந்தபேர்லதான் திருவுலா..

எவ்வளவு அருமையான அழகான பேரை சுமந்துக்கிட்டிருக்கோம்ன்னு உணர ஆரம்பிச்சப்போ, எனக்கே ரொம்ப பெருமையாயிருந்தது... புல்லரிச்சுப்போச்சு. அதுவும் வடநாட்டில் அடிக்கொருதரம் பேச்சில் என்பேரை உச்சரிப்பாங்க. நானில்லாம எந்தவொரு பூஜைகளும்கூட நிறைவுபெறாது, எந்தவொரு பேருக்கும் இல்லாத பெருமை எம்பேருக்கு இருக்குன்னு ஒரு சின்ன தற்பெருமையும் தலைதூக்கும். 'அந்தப்பேராலதான் உனக்கு பெருமை... அத மொதல்ல புரிஞ்சுக்கோ'ன்னு அந்த தற்பெருமையை தலைல குட்டி உக்காரவெச்சுடுவேன்.

உலகம் முழுக்க அமைதியை வேண்டி எத்தனை தேடல்கள்.. பிரார்த்தனைகள், வேண்டுதல்கள். எது இருக்கோ இல்லியோ அமைதி இருந்தாப்போதும்ன்னு எத்தனை பெருமூச்சுகள். இப்படி எல்லோரும் விரும்பற ஒரு பேரை எனக்கு வெச்சதுக்காக கணக்கில்லாத நன்றிகளை என்னை பெற்றவர்களுக்கு சொல்லிக்கிறேன். பெயர்க்காரணத்தை விளக்க கோபி வெச்ச அழைப்பிதழ் இங்கே இருக்கு.. அவருக்கும் நன்றிகள்.

இதை தொடர

வல்லிம்மா,

வை.கோபாலகிருஷ்ணன்.

அன்புடன் ஆனந்தி,

ஜெய்லானி,

நாஞ்சில் பிரதாப்,

லஷ்மிம்மா,

தேனம்மை,

ராமலஷ்மி..

ஆகியோரை அன்புடன் அழைக்கிறேன்..:-))

ஓம்.. ஷாந்தி.. ஓம்..



LinkWithin

Related Posts with Thumbnails