Thursday, 23 June 2011

ஷாஹி பாலக் குருமா

எதுக்கும் இருக்கட்டும்ன்னு விதைச்சு வெச்ச அரைக்கீரையும், பொன்னாங்கண்ணியும் இப்ப பெஞ்சுக்கிட்டிருக்கிற மழையில் நல்லா தளதளன்னு வளர்ந்து நிக்குது. சத்துள்ளதா இருக்கணும்ன்னு இரசாயனக்கலப்புள்ள உரங்கள் எதுவும் போடாம, இயற்கை உரத்துலயே வளர்த்தது. வீணாக்காம வாரம் ஒரு முறை சமையல்ல சேர்த்துடுவேன். வழக்கமான அயிட்டங்களைத்தவிர கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும்ன்னு செஞ்சதுதான் இந்த பாலக் குருமா.

தேவையானவை:

 பொடியா நறுக்கின கீரை - 1 கப்
உருளைக்கிழங்கு - 1(நடுத்தர அளவில்)
வெங்காயம் - 1
சின்ன வெங்காயம் - அஞ்சாறு
தக்காளி -1 (பெரிய அளவில்)

மசாலாவுக்கு தேவையானவை:
பட்டை - சின்னத்துண்டு
கிராம்பு -3
ஏலக்காய் - 2
அன்னாசிப்பூ - 1
பெருஞ்சீரகம்(சோம்பு) - அரைத்தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 1
இஞ்சி - 1/2 இஞ்ச் அளவு
பூண்டு - ரெண்டு பற்கள்

தேவையான மசாலாப்பொடிகள்:

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரைத்தேக்கரண்டி அளவு அல்லது காரத்துக்கேற்ப.
மல்லித்தூள் - அரைத்தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப

விழுதுக்கு:
முந்திரிப்பருப்பு - 7 எண்ணிக்கையளவில்+வறுத்து தோலுரிச்ச நிலக்கடலை கால்கப்.

தாளிக்க எண்ணெய் - 1 மேசைக்கரண்டியளவு.

எப்படி செய்யறதுன்னு இப்ப பார்க்கலாம்...

மொதல்ல, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பெருஞ்சீரகம் இதெல்லாத்தையும், சட்னி ஜார்ல போட்டு நல்லா பவுடர் செஞ்சுக்கோங்க. அப்றம் அதுகூடவே பச்சைமிளகா, இஞ்சி, பூண்டையும் சேர்த்து தண்ணீர் விடாம நல்லா அரைச்சுக்கோங்க. இதை ஒரு கிண்ணத்துல தனியா எடுத்து வெச்சுட்டு, முந்திரிப்பருப்பையும் வறுத்த நிலக்கடலையும் அதே ஜார்ல போட்டு ஒரு சுத்து சுத்திட்டு ஒரு தேக்கரண்டி அளவுக்கே தண்ணீர் சேர்த்து விழுதா அரைச்சு வெச்சுக்கோங்க.

தக்காளியை பொடியா நறுக்கிக்கோங்க. வெங்காயத்தை மெல்லிசா ஸ்லைஸ் செஞ்சுக்கலாம். அல்லது உங்க விருப்பப்படியான அளவுல நறுக்கிக்கலாம். உருளைக்கிழங்கையும் கொஞ்சம் சின்னச்சின்ன அளவுல நறுக்கிக்கோங்க. சின்ன வெங்காயத்தை சட்னி ஜார்ல போட்டு, ஜஸ்ட் ஒரு சுத்து.. அவ்ளோதான். வெங்காயத்தை துருவினமாதிரியான எஃபெக்ட் கிடைச்சுடும், அது போதும்.

இப்ப அடுப்பில் ஒரு பாத்திரத்தை சூடாக்கி, ஒரு மேசைக்கரண்டியளவு எண்ணெயை சூடாக்குங்க. அதுல, அரைச்சு வெச்சிருக்கிற மசாலாவைச்சேர்த்து, பச்சைவாசனை போகறவரை லேசா கிளறுங்க. இப்ப வெங்காயத்தையும்,உருளைக்கிழங்கையும்போட்டு, வெங்காயம் பொன்னிறம் வர்றவரைக்கும் வதக்குங்க.. ஆச்சா!!.. அடுத்தாப்ல தக்காளியையும் போட்டு நல்லா வெந்து, மசியறவரைக்கும் கிளறுங்க.

இப்ப இந்த கலவைகூட மசாலாப்பொடிகளை சேர்த்து லேசா கிளறிட்டு, கொரகொரன்னு அரைச்சுவெச்ச சின்னவெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்க. அடுத்தாப்ல கீரையை சேருங்க. கீரை அரைவேக்காடு அளவுக்கு வதங்கினதும், ஒண்ணரைகப் தண்ணீர் சேருங்க. (விருப்பப்பட்டா கூடக்குறைய சேர்த்துக்கலாம்). எல்லாம் சேர்ந்து கொதிச்சு வந்ததும், தணலை மிதமா எரியவிடுங்க. எல்லாம் உருளைக்கிழங்கு வேகறவரைக்கும்தான். வெந்ததும் முந்திரி+நிலக்கடலை விழுதைச்சேர்த்துடலாம். சும்மா... ஒரு கொதி வரட்டும். அதுக்குள்ள கொத்தமல்லி,புதினா,கறிவேப்பிலை இலைகளை பொடியா அரிஞ்சு வெச்சுக்கோங்க.

குருமா லேசா திக்கானதும் இறக்கி பரிமாறும் பாத்திரத்துக்கு மாத்திடுங்க. பொடியா நறுக்கிவெச்ச இலைகளை மேலாக தூவி அலங்கரிக்கலாம். இது வாசனையையும் தூக்கலா காண்பிக்கும் (டூ இன் ஒன்). சாதவகைகள்,புலாவ், பிரியாணி,கிச்சடி, சப்பாத்தி, இட்லி தோசை, ஆப்பம்,இடியாப்பம்... இன்னும் ஏதாவது விட்டுப்போயிருக்கு??!!.. :-))). எல்லார்கூடவும் கூட்டணி சேர்றதுல நம்மாளு கில்லாடி :-)

கீரை உடம்புக்கு எவ்ளோ நல்லதுன்னு சொல்லித்தெரியவேண்டியதில்லை. கீரைகளில் கால்சியம், சோடியம், க்ளோரைன் எனப்படும் உலோகச்சத்து அதிகம் உண்டு. கீரையில் சர்க்கரை கிடையாது ஆகவே ரத்தத்துல சர்க்கரையோட அளவு அதிகமா இருக்கற நோயாளிகளுக்கும் இது உகந்தது. பூண்டும் மிகவும் நல்லது.(கீரையோட ரெண்டுபல் பூண்டும் ஒரு சிட்டிகை பெருங்காயமும் சேர்த்து வேகவெச்சு மசியல் செஞ்சு பாருங்க. அருமையா இருக்கும்.

இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுது. அதுல, அரைக்கீரை, பாலக்கீரை தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை மற்றும் புதினா தழை இதெல்லாம் முக்கியமான வகைகள்.கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டிருக்கு.கீரைகள்ல சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவை நிறைய இருக்கு.

கீரைகள்ல குறிப்பா இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்கள் நிறைய அளவுல இருக்கு. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையை ஏற்படுத்துது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அப்றம் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான உடல்நல அசெளகரியம். கீரைகளை தினமும் உணவில் சேர்த்துகிட்டா, இரத்த சோகை வர்றதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்

இந்தியாவுல ஒவ்வொரு வருடமும் அஞ்சு வயசுக்குட்பட்ட சுமார் 30000 சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைபாட்டினால் கண்பார்வையை இழக்கும் நிலை ஏற்படுதாம்... பாவமில்லையா :-(

கீரைகள்ல இருக்கற கரோடின்களை பாதுகாக்க,  ரொம்ப நேரம் வேகவைக்கறதை தவிர்க்கணும். ரொம்ப நேரம் வேகவைச்சா கரோடின் அழிஞ்சுடும். அப்றம் கீரை சாப்பிட்ட பயன் இருக்காது.கீரைகள்ல பி-காம்ளக்ஸ் வைட்டமின்களும் நிறைய இருக்குது. இதுவும் உடம்புக்கு ரொம்பவே நல்லது. கீரைகள்லஇருக்கிற கரோடின், உடலில் ஜீரணமானதுக்கப்புறம் வைட்டமின் ஏ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுது.

அதான்,..வருஷம் முழுக்க மார்க்கெட்டுல கிடைக்குதே.. வாங்கி விதவிதமா சமைச்சு, ஆரோக்கியத்தை மேம்படுத்துங்க :-))28 comments:

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

சுவையான, சத்தான பதிவு.

ஹுஸைனம்மா said...

குருமா கொஞ்சம் வித்தியாசமா, ஹெவியா இருக்கு. டேஸ்ட் அதிகமாருக்கும் போல.

ஆமா, அதென்ன ஷாஹி? நிறைய குருமாக்கள் பேர்ல இந்த ஷாஹி வருது, ஏன்?

வை.கோபாலகிருஷ்ணன் said...

கீரைகள்
பற்றிய
பசுமையான
பயனுள்ள
பதிவு.

பாராட்டுக்கள்.

எல் கே said...

ஹுசைனம்மா கேட்ட கேள்விதான் எனக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமான பாலக் சப்ஜி! அம்மணிய சீக்கிரம் படிக்க சொல்றேன். அப்பப்ப பாலக்-ல ஒரு சில சப்ஜியே சாப்பிட்டு அலுத்துப் போச்சு. அதுனால வித்தியாசமா இத செய்யச் சொல்லிடறேன்.. பகிர்வுக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

சுவையான சத்தான குறிப்புக்கு நன்றி

ஸாதிகா said...

//ஆமா, அதென்ன ஷாஹி? நிறைய குருமாக்கள் பேர்ல இந்த ஷாஹி வருது, ஏன்?// எனக்கும் இதுதான் டவுட்.

ADHI VENKAT said...

ஷாஹி பாலக் குருமா நல்லாயிருக்குங்க. செய்து பார்க்கிறேன்.

Menaga Sathia said...

சத்தான சுவையான நல்லதொரு குறிப்பு....

எப்படி இருக்கீங்கக்கா?? உங்களை ரொமப் நாளா காணோமே??

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யா சுப்ரமணியம்,

ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

கொஞ்சம் ஹெவிதான். விரும்பினா ரெண்டு பாதாம் பருப்பையும் சேர்த்து விழுது தயார்பண்ணலாம்.. கொழுப்பு கூடுதலாயிடும்ன்னு நாந்தான் சேர்க்கலை :-))

மசாலாப்பொருட்கள், முந்திரி,பாதாம் போன்ற பருப்புவகைகளை அந்தக்காலத்துல, அதாவது ராஜாக்கள் காலத்துல அவங்க மட்டும்தான் சமையல்ல சேர்த்துப்பாங்களாம். அதான் அந்தப்பேரு.'ஷாஹி'காந்தான்னு கேள்விப்பட்டிருப்பீங்களே. அதுக்கு,அரசபரம்பரைன்னு அர்த்தம் :-)))

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com///

வலைச்சரத்தில் தங்களைக் குறிப்பிட்டுள்ளேன். தயவு செய்துபார்த்து தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும். நன்றி.

'பரிவை' சே.குமார் said...

சுவையான பதிவு.

ஸ்ரீராம். said...

ரொம்ப கிராண்டா இருக்கு...சாப்பிட ஆசைதான். ஒரு சந்தேகம். இந்த பாலக் கீரையும் பசலைக் கீரையும் ஒரே குடும்பமா...

நானானி said...

ரொம்ப நல்லாருக்கு.
செஞ்சு பாத்துட்டு சொல்றேன். சொல்றதென்ன? நல்லாத்தானிருக்கும்.

பாச மலர் / Paasa Malar said...

சத்தான சுவையான குறிப்பு...குறிப்பு எழுதியிருக்கும் விதத்திலும் உங்கள் தனி முத்திரை...சிறப்பு

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,

வாசிச்சதுக்கு நன்றிங்க:-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

ராஜாக்கள் உபயோகப்படுத்துற எல்லாமே 'ஷாஹி'தான் :-))

ஹூஸைனம்மாவுக்கும் உங்களுக்கும் சேர்த்தே பதில் சொல்லியிருக்கேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

அப்படி எனக்கும் அலுத்துப்போன ஒரு பொழுதில் உதித்ததுதான் இந்த குருமா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

வாசிச்சதுக்கு நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

அந்தக்காலத்துல இந்தமாதிரி விலைகூடுதலான பொருட்களை ராஜா மட்டும்தான் பயன்படுத்துவார்.. அந்த லிஸ்டில் வரும் பொருட்களை உபயோகப்படுத்தி செய்யப்படுற அயிட்டங்கள் 'ஷாஹி' என்ற அடைமொழியை தாங்கி வரும்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

செஞ்சு பார்த்துட்டு முடிவு என்னாச்சுன்னு சொல்லுங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மேனகா,

போன இடுகையிலேயே லீவுலெட்டர் கொடுத்துட்டேன்ப்பா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு இங்கயும் நன்றி சொல்லிக்கிறேன் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

என்னைப்பொறுத்தவரை கீரைகள் எல்லாமே ஒரே குடும்பம்தான்.. கூட்டுக்குடும்பம்ன்னு வெச்சுக்கோங்களேன்:-)))

வடக்கே பசலையை பாலக்ன்னு சொன்னாலும், பொதுவாவே கீரைகளை பாலக்ன்னுதான் சொல்றதுண்டு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நானானிம்மா,

இப்படி அடிச்சுசொல்ற உங்க நம்பிக்கை எனக்கு பிடிச்சிருக்கு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

பாசத்துடன் சொன்ன கருத்துக்கு நன்றி :-))

LinkWithin

Related Posts with Thumbnails