Thursday, 17 July 2014

குதூகல ஏமாற்றம்..


காயம் பட்டவர்களின் வலியை ஆயுதம் என்றும் அறிந்ததில்லை.

சோம்பல் தனியே வருவதில்லை, முயற்சியின்மை, ஒத்திப்போடுதல், சாக்குச் சொல்தல் போன்ற நண்பர்களையும் கூடவே அழைத்துக்கொண்டு வருகிறது.

பயணிகளுக்கு மட்டுமன்றி, வாகனங்களுக்கும் சேர்த்து கையசைத்து விடை கொடுக்க குழந்தைகளால் மட்டுமே முடியும்.

தொலைந்து போனதைத் தேடித்தேடி கடைசியில், "போய்த்தொலைகிறது " என்று விட்டு விடுவதுதான் பக்குவப்படுவதன் அடுத்த படி.

மதிக்கப்படும் இடங்களில் ஒரு துளிக் கண்ணீரும் ஒரு துளி தண்ணீரும் விலை மதிப்பற்றவை.

ஏமாறுவதும் குதூகலமளிக்கிறது, ஏமாற்றுபவர்கள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில்.

கசந்த காலத்திற்கு நிகழ்காலத்திலும் உயிரூட்டிக்கொண்டிருந்தால் எதிர்காலம் இனிக்காது.

உறவுகளுக்கும் உணர்வுகளுக்குமிடையே அரைபட நேரிடும் போது, நழுவிச் செல்லத்தெரிந்தவர்களே தப்பித்துக்கொள்கிறார்கள். அல்லாதவர்கள் சிக்கிச் சின்னாபின்னமாகிறார்கள்.

குறும்புத்தனத்துடன் முன்னே ஓடி, விசுவாசத்துடன் பின்தொடர்ந்து, பின் களைப்புற்ற நாய்க்குட்டியாய்க் காலடியில் குறுகியது நிழல்.

கட்டறுத்துக்கொண்டு ஓடும் எண்ணங்களை அடக்கியாள்வதும் , அவற்றால் துவைத்து எடுக்கப்படுவதுமாக மனித வாழ்வில் நடக்கிறது தினம் ஒரு ஜல்லிக்கட்டு.

Monday, 14 July 2014

படிப்படியாய்..


நம்பிக்கையின்மையை நப்பாசை முந்திச்செல்ல முயல்கிறது, சில சமயங்களில் வென்றும் விடுகிறது.

அளவு கடந்த பயம் தேவையற்ற கற்பனையைத்தூண்டுகிறது, கற்பனை மேலும் பயத்தை வளர்த்தெடுக்கிறது.

ஓங்கி உயர்ந்து வரும் ஒரு கிளையை அரக்கினாலும், தளராமல் உடம்பெல்லாம் கிளைக்கும் தாவரத்திடமும் கற்றுக்கொள்ள இருக்கிறது ஒரு வாழ்க்கைப்பாடம்.

அறிவுரைகளோ, ஆலோசனையோ நம்பிக்கையையும் தைரியத்தையும் மேலும் வளர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர சிதைப்பதாக இருக்கக்கூடாது.

அவநம்பிக்கை புகுந்திருக்கும் மனதில் மருட்சி இருளாய் நிரம்பி விடுகிறது. ஞான அகலேற்றி அவற்றை விரட்டுவோம்.

கற்றுக்கொடுக்க உலகெங்கும் புல்பூண்டு வடிவில்கூட ஆசிரியர்கள் நிறைந்திருக்கிறார்கள், ஆனால் பரீட்சையை மட்டும் விதி தன்னந்தனியே நடத்துகிறது.

நமக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகளை அப்படியே ஏற்காமல், அந்தந்தக் காலகட்டத்திற்கும் அப்போதைய நிலைக்கும் நன்மை பயப்பவற்றை மட்டும் ஏற்றல் நலம்.

தீ, விவாதம், கடன், விரோதம் போன்றவைகளை மீதம் வைக்காமல் அப்போதைக்கப்போது முடித்துவிட வேண்டும்.

தலையைக் குனிந்து கொண்டு சென்று கொண்டிருந்த மந்தையில், நிமிர்ந்து நடந்த ஆடொன்று புதிய வழிகளைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தது அந்த நொடிகளிலிருந்து.

எதிர்பாரா விதமாக அந்த நொடியில் நிகழ்ந்தவையாக நினைக்கப்பட்டவையெல்லாம் உண்மையில் அதற்கு முந்தைய நொடிகளிலிருந்தே நிகழ்வை ஆரம்பித்தவையாக இருக்கும்.

Tuesday, 15 April 2014

ஜய.. ஜய.. ஜய..

பூக்கள் புதிது
புலர்காலை புதிது
இன்பம் புதிது
இனியவை புதிது
காற்று புதிது
கடப்பவை புதிது
வசந்தம் புதிது
வருடமும் புதிது
ஆனால்
அதே பழைய 'நான்'
தூக்கியெறிவோம்
புதிதாய்ப்பிறப்போம் 'நாம்'
எதிலும் ஜெயம் கண்டிடுவோம்
இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

வால்: வாழ்த்துகளைச் சுமந்து கொண்டு யானைகளிரண்டும் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க அன்ன நடையிட்டு வந்ததால் அனைவருக்கும் ஒரு நாள் தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள் :-)))

Thursday, 10 April 2014

வனம் சுமந்த பழம்..

1.இளைப்பாறுதலை அடுத்த கட்டத்திற்கான திட்டமிடலுக்குப் பயன்படுத்துபவன் முன்னேறுகிறான், சோம்பியிருப்பவனோ புலம்பித்திரிகிறான்.

2.கூரையில் விழுந்த இறகுப்பந்தை, "எனது எந்த நண்பனுடையதாய் இது இருக்கக்கூடும்!" என்று திகைப்புடன் பார்க்கிறது புறா.

3. இறந்தபின்னும் பறக்கிறது ஒரு பறவை, இறகுப்பந்தாய்..

4.மாற்றிக்கொள்வதை விட திருத்திக்கொள்வது நல்லது, அதுவே நீடித்து நிற்கும்.

5.முன் தீர்மானங்களுடன் பேசுபவரிடம் விவாதிப்பதென்பது, ஸ்டாண்ட் போடப்பட்டிருக்கும் சைக்கிளை ஓட்டி சக்தியை வீணாக்குவதற்குச் சமம்.

6.நினைவுகளைச் சுமந்து நிற்பவையல்ல நினைவுச்சின்னங்கள். பார்க்கும் போதும், எண்ணும்போதும் நம் மனதிலிருக்கும் நினைவுகளைக் கிளறி விடுவதைத் தவிர்த்த மற்ற நேரங்களில் அவை சும்மாதான் இருக்கின்றன.

7.விதிமுறைகளைத் தளர்த்திக்கொள்வதில் ஆரம்பிப்பது இறுதியில் விதிமீறலுக்கு வழி கோல்கிறது.

8.நிதானமும் பொறுமையும் சஞ்சலத்துக்குட்படும் தருணங்களில்தான் அதிக மனவுறுதி தேவைப்படுகிறது. ஒரு நிமிட நிதானமின்மை ஒட்டுமொத்த காரியத்தையும் கெடுத்து விடும்.

9.விழுங்கிக் கடக்கும்போது நம்மைப் புடம் போட்டு விடுவதால் பெருங்கசப்பும், பெருந்துயரும் கூட நல்லதே.

10.தலைக்கு மேல் வட்டமிடும் பருந்தை அறியாது வனத்தைக் கர்ப்பம் சுமந்த பழத்தை உண்டு கொண்டிருக்கிறது குருவி. காடு பிழைக்குமோ.. பருந்து பிழைக்குமோ.

Saturday, 5 April 2014

ஜீவ ஒளியும் குமிழ் முத்தமும்..

ஓட்டைப்பாத்திரமும் நிம்மதியற்ற மனமும் ஒருநாளும் நிறையாது,.. அவற்றை நிரந்தரமாய் அப்படியே விட்டு வைக்கும்வரை.

கூத்து நிறைவுற்றபின் ஒப்பனையைக் கலைக்கத்துவங்கினர் ஒவ்வொருவராக, அடுத்த திருவிழாவை எதிர்நோக்கியபடி முடங்கிக்கிடந்தது காவல்தெய்வம் சருகுகளைச் சுமந்தபடி.

வெறுமனே பேச்சளவில் திட்டமிடுபவனை விட திட்டத்தின்படி செயலைச் செய்து முடிப்பவனே பாராட்டத்தக்கவன்.

நடந்த தவறுக்காய் பிறரைக் குற்றம் சாட்டுமுன் ஒரு நிமிடம் நிதானித்து யோசிப்பது நல்லது, ஏனெனில் தவறுக்கான ஆரம்பம் நம்மிலிருந்தும் இருக்கலாம்.

நம் திறமையையும் வளர்ச்சியையும் மதிப்பிட எப்பொழுதும் பிறருடன் ஒப்பிட்டுக்கொண்டிருக்காமல், நமது முந்தைய மற்றும் தற்போதைய நிலைகளையும் அவ்வப்போது ஒப்பிட்டு நோக்குவோம்.

இரை கவ்வி நீராழம் பதுங்கிய மீன் பரிசளித்த குமிழ் முத்தத்தை, கன்னம் மாற்றிக் குதூகலிக்கிறது குழந்தை.

கூடு கட்ட சுள்ளிகளைப்பரிசளித்த மரத்திற்கு குஞ்சுமொழியில் தினம் நன்றி நவில்கிறது பறவை

அத்தனையையும் அழுதோ சிரித்தோ தீர்த்துவிட முடியுமென்றால் எத்தனை நன்றாக இருக்கும்!. முடியாதென்பதால்தான் செயலில் ஈடுபடுகிறோம்.

உண்மையின் உறுதியான குரலுக்கு முன் பொய்யின் ஆரவாரக்கூச்சல் தேய்ந்து முடிவில் ஓய்ந்து விடுகிறது.

இடைஞ்சல்கள் சூறாவளியாய்ச் சுழன்றடித்தாலும், மனதிலிருக்கும் வெல்ல வேண்டுமென்ற ஜீவஒளியை அணையாமல் பார்த்துக்கொண்டால் அதுவே நமக்கு வழிகாட்டி வெளிக்கொணர்ந்து விடும்.

Monday, 10 March 2014

இன்னும் மீதமிருக்கும் பறவை..

வரமாகவும், சாபமாகவும், சிலருக்கு தப்பித்துக்கொள்ளும் யுக்தியாகவும் இருக்கிறது மறதி.

தான் சாப்பிடும்போது காக்கா , குருவி, ஆடு, மாடு, நிலா, கட்டாந்தரை என்று அத்தனை பேரின் பசியையும் ஆற்றிவிடுகிறது குழந்தை.

இலக்கை அடைவதற்கான கெடு நெருங்கும்போது ஏற்படும் பதற்றமான மனநிலையைக் கட்டுக்குள் வைப்போம். இல்லையெனில் தவறுகள் ஏற்படக்காரணமாகி இலக்கிற்கும் நமக்குமான இடைவெளியை அதுவே அதிகப்படுத்திவிடும்.

உறவுகளிலோ பொருட்களிலோ உண்டான விரிசலைச் சரி செய்து விட்டதாய் நினைத்துக் கொண்டாலும், நினைவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது ஓர் ஓரத்தில்.

இன்னும் வானை அளந்து கொண்டிருக்கிறது முன்னெப்போதோ பறவையாக இருந்த ஒரு சிறகு. 

காலை வைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்துக்கொண்டு, மொத்தமாய் மூழ்கடிக்கும் புதைகுழி போன்றது சுயபரிதாபம்.

துளியும் முன்னேற்பாடின்றிச் செயலில் இறங்கி வெற்றி பெறுவதென்பது, நட்சத்திரங்களின் சூட்டில் குளிர் காய்வதற்கு ஒப்பானது. 

சரியான நேரம் வாய்த்தும், செய்து முடிக்காமல் காலம் தாழ்த்த வைக்கும் சோம்பேறித்தனமே வெற்றியின் முதல் எதிரி. 

வேர்களின் உழைப்பிற்கான பரிசை கிளைகளும் பகிர்ந்து கொள்கின்றன. 

தலையிலோ கன்னத்திலோ வைத்துக்கொண்டு இடிந்து உட்காரப்படைக்கப்படவில்லை கைகள். அவற்றுக்கான ஆக்கபூர்வமான வேலைகள் இன்னும் மீதமிருக்கின்றன. 

Sunday, 2 March 2014

நீட்சி..

வென்றவன் முதலில் இலக்கைத் தீர்மானிக்கிறான், அதற்கான திட்டத்தை உருவாக்குகிறான், அதன்பின் அயராது உழைத்து இலக்கை அடைகிறான். பார்வையாளர்களோ 'அதிர்ஷ்டம் 'என்ற ஒற்றைச்சொல்லில் அத்தனையையும் கடந்து செல்கின்றனர்..

கொண்ட நம்பிக்கையை இழத்தலென்பது, கட்டடத்தின் அஸ்திவாரத்திலிருந்து ஒரு கல்லை உருவுவதற்குச் சமம்.

ஒரே செயலைத் திரும்பத்திரும்பச் செய்ய வேண்டியிருக்கிறதே என்று அலுத்துக்கொள்ளத்தேவையில்லை. இலக்கை அடைவதற்கான வெவ்வேறு பாதைகளே அவை.

எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்வதும், எல்லாவற்றையும் ஆச்சரியமாகவோ கடினமாகவோ பார்ப்பதுமான இரு வழிகளில் கடக்கிறது வாழ்வு.

'எல்லாம் முடிந்தது'.. என்று இடிந்து உட்கார்பவர்கள் கண்ணுக்குத்தெரியாத நீட்சியினை உணரத்தவறி விடுகிறார்கள்.

மாற்றம் மனதின் ஆழத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும், வெறும் வாய்வார்த்தைகளில் அல்ல.

திறமை, குறிக்கோள் எனும் இரு கரைகளையும் இணைக்கும் பாலமாக நேர்ச்சிந்தனைகளுடன் கூடிய முயற்சி விளங்குகிறது.

எல்லா வகையிலும் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்வதற்காகப் பிறரைச் சிறுமைப்படுத்துதல் பெருந்தவறு.

பாராட்டுகளையும் புகழையும் எதிர்பார்த்து வானவில் பூப்பதில்லை, கடமையை விரும்பிச் செய்வோம் மற்றதெல்லாம் தானே தேடி வரும்.

புரிந்து கொள்ளலுடன் கூடிய அன்பு, உறவுகளுக்கிடையே நிம்மதியையும் நெருக்கத்தையும் கொண்டு வருகிறது.

வால்: சிஸ்டத்தை மகரும் லேப்டாப்பை மகளும் பிடுங்கிக்கொண்டதால் (பரீட்சை வருதுப்பா..) அடிக்கடி பதிவிடவோ நட்புகளின் இடுகைகளுக்குப் பின்னூட்டமிடவோ இயலவில்லை. மொபைல் உதவியால் பேஸ்புக்கில் மட்டுமே நடமாட்டம். ஆளைக்காணோம் என்று தேடுபவர்கள் மன்னித்து 'அங்கே' கண்டடைவீர்களாக :-))

LinkWithin

Related Posts with Thumbnails