Tuesday, 15 April 2014

ஜய.. ஜய.. ஜய..

பூக்கள் புதிது
புலர்காலை புதிது
இன்பம் புதிது
இனியவை புதிது
காற்று புதிது
கடப்பவை புதிது
வசந்தம் புதிது
வருடமும் புதிது
ஆனால்
அதே பழைய 'நான்'
தூக்கியெறிவோம்
புதிதாய்ப்பிறப்போம் 'நாம்'
எதிலும் ஜெயம் கண்டிடுவோம்
இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

வால்: வாழ்த்துகளைச் சுமந்து கொண்டு யானைகளிரண்டும் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க அன்ன நடையிட்டு வந்ததால் அனைவருக்கும் ஒரு நாள் தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள் :-)))

Thursday, 10 April 2014

வனம் சுமந்த பழம்..

1.இளைப்பாறுதலை அடுத்த கட்டத்திற்கான திட்டமிடலுக்குப் பயன்படுத்துபவன் முன்னேறுகிறான், சோம்பியிருப்பவனோ புலம்பித்திரிகிறான்.

2.கூரையில் விழுந்த இறகுப்பந்தை, "எனது எந்த நண்பனுடையதாய் இது இருக்கக்கூடும்!" என்று திகைப்புடன் பார்க்கிறது புறா.

3. இறந்தபின்னும் பறக்கிறது ஒரு பறவை, இறகுப்பந்தாய்..

4.மாற்றிக்கொள்வதை விட திருத்திக்கொள்வது நல்லது, அதுவே நீடித்து நிற்கும்.

5.முன் தீர்மானங்களுடன் பேசுபவரிடம் விவாதிப்பதென்பது, ஸ்டாண்ட் போடப்பட்டிருக்கும் சைக்கிளை ஓட்டி சக்தியை வீணாக்குவதற்குச் சமம்.

6.நினைவுகளைச் சுமந்து நிற்பவையல்ல நினைவுச்சின்னங்கள். பார்க்கும் போதும், எண்ணும்போதும் நம் மனதிலிருக்கும் நினைவுகளைக் கிளறி விடுவதைத் தவிர்த்த மற்ற நேரங்களில் அவை சும்மாதான் இருக்கின்றன.

7.விதிமுறைகளைத் தளர்த்திக்கொள்வதில் ஆரம்பிப்பது இறுதியில் விதிமீறலுக்கு வழி கோல்கிறது.

8.நிதானமும் பொறுமையும் சஞ்சலத்துக்குட்படும் தருணங்களில்தான் அதிக மனவுறுதி தேவைப்படுகிறது. ஒரு நிமிட நிதானமின்மை ஒட்டுமொத்த காரியத்தையும் கெடுத்து விடும்.

9.விழுங்கிக் கடக்கும்போது நம்மைப் புடம் போட்டு விடுவதால் பெருங்கசப்பும், பெருந்துயரும் கூட நல்லதே.

10.தலைக்கு மேல் வட்டமிடும் பருந்தை அறியாது வனத்தைக் கர்ப்பம் சுமந்த பழத்தை உண்டு கொண்டிருக்கிறது குருவி. காடு பிழைக்குமோ.. பருந்து பிழைக்குமோ.

Saturday, 5 April 2014

ஜீவ ஒளியும் குமிழ் முத்தமும்..

ஓட்டைப்பாத்திரமும் நிம்மதியற்ற மனமும் ஒருநாளும் நிறையாது,.. அவற்றை நிரந்தரமாய் அப்படியே விட்டு வைக்கும்வரை.

கூத்து நிறைவுற்றபின் ஒப்பனையைக் கலைக்கத்துவங்கினர் ஒவ்வொருவராக, அடுத்த திருவிழாவை எதிர்நோக்கியபடி முடங்கிக்கிடந்தது காவல்தெய்வம் சருகுகளைச் சுமந்தபடி.

வெறுமனே பேச்சளவில் திட்டமிடுபவனை விட திட்டத்தின்படி செயலைச் செய்து முடிப்பவனே பாராட்டத்தக்கவன்.

நடந்த தவறுக்காய் பிறரைக் குற்றம் சாட்டுமுன் ஒரு நிமிடம் நிதானித்து யோசிப்பது நல்லது, ஏனெனில் தவறுக்கான ஆரம்பம் நம்மிலிருந்தும் இருக்கலாம்.

நம் திறமையையும் வளர்ச்சியையும் மதிப்பிட எப்பொழுதும் பிறருடன் ஒப்பிட்டுக்கொண்டிருக்காமல், நமது முந்தைய மற்றும் தற்போதைய நிலைகளையும் அவ்வப்போது ஒப்பிட்டு நோக்குவோம்.

இரை கவ்வி நீராழம் பதுங்கிய மீன் பரிசளித்த குமிழ் முத்தத்தை, கன்னம் மாற்றிக் குதூகலிக்கிறது குழந்தை.

கூடு கட்ட சுள்ளிகளைப்பரிசளித்த மரத்திற்கு குஞ்சுமொழியில் தினம் நன்றி நவில்கிறது பறவை

அத்தனையையும் அழுதோ சிரித்தோ தீர்த்துவிட முடியுமென்றால் எத்தனை நன்றாக இருக்கும்!. முடியாதென்பதால்தான் செயலில் ஈடுபடுகிறோம்.

உண்மையின் உறுதியான குரலுக்கு முன் பொய்யின் ஆரவாரக்கூச்சல் தேய்ந்து முடிவில் ஓய்ந்து விடுகிறது.

இடைஞ்சல்கள் சூறாவளியாய்ச் சுழன்றடித்தாலும், மனதிலிருக்கும் வெல்ல வேண்டுமென்ற ஜீவஒளியை அணையாமல் பார்த்துக்கொண்டால் அதுவே நமக்கு வழிகாட்டி வெளிக்கொணர்ந்து விடும்.

Monday, 10 March 2014

இன்னும் மீதமிருக்கும் பறவை..

வரமாகவும், சாபமாகவும், சிலருக்கு தப்பித்துக்கொள்ளும் யுக்தியாகவும் இருக்கிறது மறதி.

தான் சாப்பிடும்போது காக்கா , குருவி, ஆடு, மாடு, நிலா, கட்டாந்தரை என்று அத்தனை பேரின் பசியையும் ஆற்றிவிடுகிறது குழந்தை.

இலக்கை அடைவதற்கான கெடு நெருங்கும்போது ஏற்படும் பதற்றமான மனநிலையைக் கட்டுக்குள் வைப்போம். இல்லையெனில் தவறுகள் ஏற்படக்காரணமாகி இலக்கிற்கும் நமக்குமான இடைவெளியை அதுவே அதிகப்படுத்திவிடும்.

உறவுகளிலோ பொருட்களிலோ உண்டான விரிசலைச் சரி செய்து விட்டதாய் நினைத்துக் கொண்டாலும், நினைவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது ஓர் ஓரத்தில்.

இன்னும் வானை அளந்து கொண்டிருக்கிறது முன்னெப்போதோ பறவையாக இருந்த ஒரு சிறகு. 

காலை வைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்துக்கொண்டு, மொத்தமாய் மூழ்கடிக்கும் புதைகுழி போன்றது சுயபரிதாபம்.

துளியும் முன்னேற்பாடின்றிச் செயலில் இறங்கி வெற்றி பெறுவதென்பது, நட்சத்திரங்களின் சூட்டில் குளிர் காய்வதற்கு ஒப்பானது. 

சரியான நேரம் வாய்த்தும், செய்து முடிக்காமல் காலம் தாழ்த்த வைக்கும் சோம்பேறித்தனமே வெற்றியின் முதல் எதிரி. 

வேர்களின் உழைப்பிற்கான பரிசை கிளைகளும் பகிர்ந்து கொள்கின்றன. 

தலையிலோ கன்னத்திலோ வைத்துக்கொண்டு இடிந்து உட்காரப்படைக்கப்படவில்லை கைகள். அவற்றுக்கான ஆக்கபூர்வமான வேலைகள் இன்னும் மீதமிருக்கின்றன. 

Sunday, 2 March 2014

நீட்சி..

வென்றவன் முதலில் இலக்கைத் தீர்மானிக்கிறான், அதற்கான திட்டத்தை உருவாக்குகிறான், அதன்பின் அயராது உழைத்து இலக்கை அடைகிறான். பார்வையாளர்களோ 'அதிர்ஷ்டம் 'என்ற ஒற்றைச்சொல்லில் அத்தனையையும் கடந்து செல்கின்றனர்..

கொண்ட நம்பிக்கையை இழத்தலென்பது, கட்டடத்தின் அஸ்திவாரத்திலிருந்து ஒரு கல்லை உருவுவதற்குச் சமம்.

ஒரே செயலைத் திரும்பத்திரும்பச் செய்ய வேண்டியிருக்கிறதே என்று அலுத்துக்கொள்ளத்தேவையில்லை. இலக்கை அடைவதற்கான வெவ்வேறு பாதைகளே அவை.

எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்வதும், எல்லாவற்றையும் ஆச்சரியமாகவோ கடினமாகவோ பார்ப்பதுமான இரு வழிகளில் கடக்கிறது வாழ்வு.

'எல்லாம் முடிந்தது'.. என்று இடிந்து உட்கார்பவர்கள் கண்ணுக்குத்தெரியாத நீட்சியினை உணரத்தவறி விடுகிறார்கள்.

மாற்றம் மனதின் ஆழத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும், வெறும் வாய்வார்த்தைகளில் அல்ல.

திறமை, குறிக்கோள் எனும் இரு கரைகளையும் இணைக்கும் பாலமாக நேர்ச்சிந்தனைகளுடன் கூடிய முயற்சி விளங்குகிறது.

எல்லா வகையிலும் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்வதற்காகப் பிறரைச் சிறுமைப்படுத்துதல் பெருந்தவறு.

பாராட்டுகளையும் புகழையும் எதிர்பார்த்து வானவில் பூப்பதில்லை, கடமையை விரும்பிச் செய்வோம் மற்றதெல்லாம் தானே தேடி வரும்.

புரிந்து கொள்ளலுடன் கூடிய அன்பு, உறவுகளுக்கிடையே நிம்மதியையும் நெருக்கத்தையும் கொண்டு வருகிறது.

வால்: சிஸ்டத்தை மகரும் லேப்டாப்பை மகளும் பிடுங்கிக்கொண்டதால் (பரீட்சை வருதுப்பா..) அடிக்கடி பதிவிடவோ நட்புகளின் இடுகைகளுக்குப் பின்னூட்டமிடவோ இயலவில்லை. மொபைல் உதவியால் பேஸ்புக்கில் மட்டுமே நடமாட்டம். ஆளைக்காணோம் என்று தேடுபவர்கள் மன்னித்து 'அங்கே' கண்டடைவீர்களாக :-))

Tuesday, 18 February 2014

"சாந்தி மாரியப்பனின் சிறகு விரிந்தது" - மதிப்புரைக்கு நன்றி தேனக்கா :-))

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பிற்கு 'தேனக்கா' என்று நான் அன்புடன் அழைக்கும் நம் தேனம்மை லக்ஷ்மணன்  அளித்த மதிப்புரை.

குழந்தைகளைக் கொஞ்சியபின்னும் நம்மேல் ஒரு குழந்தை வாசம் அடித்துக் கொண்டேயிருக்கும். அது நம் வீட்டுக் குழந்தையாயினும் சரி. பக்கத்து வீட்டுக் குழந்தையாயினும் சரி. ஒரு குட்டிப் பயலின் குட்டிப் பெண்ணின் குழந்தமை வாசம் பட்டு நம் முந்தானையும் கழுத்தும் தோள்பட்டையும் திரும்பும்போதும் அசையும்போது காற்றில் ஒரு குழந்தைமை வாசத்தைப் பரவ விட்டுக் கொண்டே இருக்கும். அதே உணர்வுதான் ஏற்பட்டது சாந்தி மாரியப்பனின் சிறது விரிந்ததைப் படித்ததும்.

மழலைத் தூதுவர்களை ரசிப்பதா. தென்றல் தீட்டும் வானவில்லில் வண்ணங்களை பட்டாம்பூச்சி இறகுகளில் தொட்டுப் பார்ப்பதா, தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் பறவையைப் பிடிப்பதா, குழந்தைகள் பறவைகளாகி இங்குமங்கும் நம் எண்ணம் கொறிப்பதும், பறவைகள் குழந்தைகளைப் போன்று தத்தித் தத்திச் சிறகடிப்பதும் நிகழ்கிறது கவிதைத் தொகுதி வாசிக்கும்போது.
”அந்த இரவில்’  மிகவும் நெகிழ வைத்த கவிதை. 

உடல் புரளும் சிறு சலனத்திற்கும்
குடல் புரண்டுப் பதறியெழுமெனக்குப்
பரிசாய்த் தருகிறார்
வாஞ்சையுடன் ஒரு தலை கோதலை
என் தகப்பன்.

’’பரஸ்பரம் கடவுளும் குடிகாரனும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்து விடமாட்டார்களா என எண்ணத் தூண்டிய வித்யாசமான கவிதைப் பார்வை. 

வென்றுவிட்டதாய்ப் 
பேரிகை கொட்டும் தருணங்களில்தான்
ஆரம்பிக்கவே செய்கின்றன
பெருவாரியான  யுத்தங்கள்.

ஒவ்வொரு பெண்ணும் தாய் வீட்டுக்குப் போகும்போது நினைக்கக்கூடியதுதான் ”வீடென்பது.”

அன்னியோன்யமாய் இருந்து வந்து
அடுத்த தலைமுறையின் முடிசூட்டலுக்குப் பின்
உரித்தெரியப்பட்ட பாம்புச் சட்டையாய்
வீசப்பட்ட பின்னர்
அன்னியப்பட்டும் நிற்கிறது
வீடென்பது சிலருக்கு. 

இந்தத் தொகுப்பிலேயே என்னை மிகவும் கவர்ந்த கவிதை ’எவரேனும்’

தலைசாய்த்து உண்ணும்
காகத்தின் பார்வை
மின்னலாய்ச் சொடுக்கிப் போகிறது
முன் தினம் மின் கம்பத்தில்
கருகி வீழ்ந்த காகத்தின் நினைவையும்
கருகாத கேள்வியொன்றையும்
பிண்டமிடவும் பித்ருவாய் வரவும்
அவற்றின் உலகிலும் 
யாரேனும் இருக்கக் கூடுமோ..

குடும்பம், குழந்தைகள் இவற்றைச் சுற்றிவரும் சந்திரனாயும் சூரியனாயும் இருக்கிறார்கள் பெண்கள். அவர்களுக்குக் கிடைத்த சொற்ப வெளியில் தன்னையும் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் வார்த்தைகள் அவர்களின் வாழ்க்கையை வெற்றியைப் பிரகடனப் படுத்துகின்றன. 

வார்த்தைகள் வசப்பட்டு நிற்கின்றன சாந்தி மாரியப்பனின் கவிதைகளில். சில சமயம் நம்மைக் கையகப்படுத்த மாட்டாரா என்ற ஏக்கத்தோடு சில காத்தும் கிடக்கின்றன. பொருத்தமான வார்த்தைகளில் பொருந்த வசீகரமாகச் சொல்லிச் செல்லும்போது அடுத்து நமக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என மிச்சமும் பின் தொடர்கின்றன. மொத்ததில் மிகவும் பாந்தமான சொற்களில் மென்மையான ஒரு கவிதைத் தொகுதியைப் படித்த சந்தோஷம் ஏற்பட்டது. 

கவிதை வாசிப்பது என்பதும் தானே உணரவேண்டிய ஒரு அனுபவம். உணர்ந்து பாருங்கள்.

 கிடைக்குமிடம்.:-
அகநாழிகை பதிப்பகம். சென்னை.

விலை ரூ.  80. 

இணையத்தில் வாங்க. 


வாசித்தமைக்கும் அருமையான வார்த்தைகளுக்கும் நன்றி தேனக்கா..

Saturday, 15 February 2014

கடப்போம்.. நடப்போம்..

வெறுமனே கடந்து சென்றதாய் நினைத்துக்கொள்ளும் அந்த நாளின் ஏதோவொரு நொடித்துளியில் ஒளிந்திருக்கக்கூடும் மிக இனிய நினைவொன்று.

பொறுப்புகளையும் முயற்சியையும் தட்டிக்கழிப்பவர்களை வெற்றி தேவதையும் தட்டிக்கழித்து விடுகிறாள்.

கரைந்து விட்ட சூரியனுக்காக வருத்தப்படுபவர்களை ஆறுதல் படுத்தவென்று உருக்கொண்டெழுகிறது நிலா.

ஒருமுறை கூட விழாமலிருப்பதிலல்ல, விழும் ஒவ்வொரு முறையும் மேலும் உறுதியாக எழுவதில்தான் இருக்கிறது பெருஞ்சிறப்பு.

பூவின் வாசனைக்கு எளிதில் மயங்கிவிடும் மெல்லிய மனமே முட்களாலும் எளிதில் காயப்பட்டு விடுகிறது, ஆகவே உறுதியை வளர்த்துக்கொள்வோம்.

எல்லாவற்றையும் கடந்து நடப்போம் மென்மேலும் உறுதியாக அடியெடுத்து வைத்தபடி.

தகுந்த காலம், வாய்ப்பு வசதிகள் போன்ற அனைத்தையும் விட முக்கியமானது, எப்படியாவது செய்து முடிக்க வேண்டுமென்ற தன்னார்வமே.

பின்விளைவுகளையும் தீர அலசி ஆராய்ந்தபின் ஆரம்பிக்கும் செயல்கள் பெரும்பாலும் தோற்றுப்போவதில்லை.

சலனமுற்ற மனதில் தீர்வுகளும் நிலைபெறாமல் தளும்பிக்கொண்டேதான் இருக்கும்.

மகிழ்ச்சியையும் அமைதியையும் பெற வேண்டுமாயின், முதலில் அதை மற்றவர்க்குக் கொடுக்கப் பழக வேண்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails