Friday, 16 March 2012

காது கொடுத்துக் கேளுங்க...

மனுஷங்களுக்கிடையேயான உறவு சீர் படுறதும், கெடுறதும் இந்த ஒரு செயல்லதான் அடங்கியிருக்குன்னே சொல்லலாம். “அப்பவே சொன்னேன்.. கேட்டாத்தானே”ன்னோ, “நான் சொல்றதை எப்பவுமே காதுல போட்டுக்கறதேயில்லை"ன்னோ,.. மத்தவங்க எப்பவுமே குறைபட்டுக்கற அளவுக்கு நடந்துக்கறது நிச்சயமா நம்மைப் பத்தின ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தாது. 

ஒரே ஒரு வாயை படைச்ச ஆண்டவன் ஏன் ரெண்டு காதுகளைப் படைச்சான் தெரியுமா?.. மத்தவங்களோட வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேக்கறதுக்காகத்தான். ஒருத்தர் வந்து நம்ம கிட்ட தன்னோட மனக் கஷ்டத்தைச் சொல்றாருன்னு வெச்சுப்போம். அதுக்கான தீர்வை நாம கொடுக்காட்டியும் கூட அதைக்கேக்கறதே அவருக்கு ரொம்ப ஆறுதலைக் கொடுக்கும். “இன்னொருத்தர் சொல்றதை முழுசும் காது கொடுத்துக் கேட்டாலே உலகத்துல பாதிப் பிரச்சினைகள் தீர்ந்துடும்”ன்னு மேனேஜ்மெண்டின் குருவான ‘பீட்டர் ட்ரக்கர்(Peter Drucker)’ என்பவர் சொல்லியிருக்கார். நிஜம்தானே.. 

கேக்கறதுங்கறது நிஜமாவே கேக்கறதா இருக்கணும். மத்தவங்க என்ன சொல்றாங்கங்கறதை உன்னிப்பா முழு கவனத்தோட கேக்கப் பழகணும். அப்பத்தான் மத்தவங்க சொல்ல வர்றதை முழுசாப் புரிஞ்சுக்க முடியும். நம்ம உடல்மொழியும் அதை உறுதிப் படுத்தறதா இருக்கணும். உம் கொட்டறது சின்னதா தலையாட்டிக் கேக்கறது, ‘அப்றம் என்னாச்சு’ன்னு அவங்களை மேலும் சொல்லத் தூண்டறதுன்னு நாம்தான் நம்பிக்கை கொடுக்கணும்.

அப்டியில்லாம அவங்க சொல்றப்ப இடையிடையே குறுக்குக் கேள்விகள் கேட்டு அவங்களைக் குழப்பி, அவங்க சொல்ல வந்த விஷயத்தையே திசை திருப்பி, “ஏந்தான் இவங்க கிட்ட சொல்ல வந்தோமோ”ன்னு எரிச்சல் பட வைக்கிற நல்ல ஆத்மாக்களும் நிறையவே இருக்காங்க. அப்படியில்லாம அவங்க சொல்லி முடிச்சப்புறம் கேள்வி கேட்டுத் தெளிவு படுத்திக்கறது நல்லது.

சில பேர் இருக்காங்க.. மத்தவங்க சொல்றதை முழுசும் காதுல வாங்கிக்காம அரைகுறையாக் கேட்டு, இவங்களா ஒரு முடிவு செஞ்சுக்கிட்டு அறிவுரை சொல்றேன் பேர்வழின்னு படுத்தியெடுப்பாங்க.  அவங்க சொல்றதை மத்தவங்க கேக்கணும், ஆனா மத்தவங்க இவங்க கிட்டே ஏதாவது சொல்ல வர்றப்ப நழுவிடுவாங்க. எதிராளிதான்.. பாவம். நொந்து நூடுல்ஸாகிடுவார்.

“ஏதோ அவங்க சொல்றாங்க.. நாம கேட்டு வைப்போமே”ன்னு கடமையேன்னு நின்னோம்னா அது சொல்ற விஷயத்தையும் சொல்ற நபரையும் அலட்சியப் படுத்தற மாதிரி ஆகிடும். இல்லையா?.. அது நிச்சயமா அவங்களுக்கிடையேயான உறவையும் பாழ்படுத்திடும். அது நண்பர்களாகவோ, உறவுகளாகவோ, பெற்றோர் மற்றும் குழந்தைகளாகவோ, இல்லைன்னா கணவன் மனைவியாகவோ யாரா வேண்ணாலும் இருக்கலாம்.

மத்தவங்களையாவது சமாளிச்சுடலாம். ஆனா, கணவன் மனைவிக்கிடையில இது பூதாகரமான பிரச்சினையை உண்டு செய்யும். அதுலயும் சில குடும்பங்கள்ல மத்தவங்க என்ன சொன்னாலும் காது கொடுத்துக் கேப்பாங்க.. ஆனா, தன்னோட துணை ஏதாவது சொல்ல வர்றப்ப மட்டும் ரொம்ப முக்கியமான வேலை இருக்கற மாதிரி அந்த இடத்தை விட்டு நகர்ந்துடுவாங்க. இல்லைன்னா, கேக்கற மாதிரி பாவ்லா செஞ்சுக்கிட்டே டிவியிலயோ இல்லை செய்தித்தாளுலயோ மூழ்கிடுவாங்க. “நான் இப்ப என்ன சொன்னேன்”னு மட்டும் துணை இவங்களை க்ராஸ்செக் செஞ்சா அவ்ளோதான். “ஹி..ஹி.. நான் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன்”ன்னு ரொம்ப மரியாதையா திருதிருன்னு முழிச்சுட்டே வழிவாங்க. ஆரம்பத்துல பொறுத்துப் போற துணை கடைசியில என்னிக்காவது கோடையிடி மாதிரி குமுறித் தீர்த்துடுவாங்க. சாது மிரண்டா வீடும் கொள்ளாதுங்க..

சரி.. ஒருத்தர் உங்க கிட்ட தன்னோட மனசுல உள்ளதைச் சொல்ல வரார்ன்னு வெச்சுப்போம். அவரைப் பத்தி நாம ஏற்கனவே நம்ம மனசுல “இவங்க இப்டித்தான்”னு ஒரு பிம்பம் வரைஞ்சு வெச்சுருப்போமே.. அதைக் கொஞ்ச நேரம் ஒரு போர்வையைப் போட்டு மூடி வெச்சுடறது நல்லது. அவங்க கொட்டற சொற்களுக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டிருக்கற நிஜத்தையும், உண்மையான மன உணர்வுகளையும் கொஞ்சம் புரிஞ்சுக்கறது அவசியம். ஒரு வேளை அவங்களுக்குத் தன்னோட உணர்வுகளை சரியான வார்த்தைகள்ல விளக்கிச் சொல்லத் தெரியாம இருக்கலாம். அதுக்காக அதை அலட்சியப் படுத்திட முடியாதே. உதாரணமா மாமியார்ன்னா அவங்க மருமகளைக் கண்டிப்பாக் குத்தம் சொல்றவங்களாத்தான் இருப்பாங்கன்னு ஒரு பிம்பம் இருக்கு. அப்படியில்லாம மருமகளால கொடுமைப் படுத்தப்படற மாமியாராகவும் கூட இருக்க வாய்ப்பிருக்கே.

ரொம்ப நாளுக்கு முன்னாடி நடந்த நிஜக்கதை இது.. நிறையப்பேர் கேள்விப் பட்டிருப்பீங்க. பள்ளிக் கூடத்துக்குப் புறப்பட்டுக்கிட்டிருந்த பையனுக்கு சாக்ஸ் போடறப்ப பையன் கால் வலிக்குதுன்னு அழுதிருக்கான். குழந்தை ஸ்கூலுக்குப் போறதுக்கு அடம் பிடிச்சு அழறது சகஜம்தானேன்னு அதை அசட்டையா விட்டுட்டாங்க. வற்புறுத்தி ஸ்கூலுக்கும் அனுப்பி வெச்சுட்டாங்க. பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி ரொம்ப நேரத்துக்கப்புறம், பெத்தவங்களுக்கு சாக்ஸுல ஒளிஞ்சுருந்த தேள் ஒண்ணு பையனைக் கொட்டிடுச்சுன்னு ஸ்கூல்லேர்ந்து தகவல் வருது. அலறியடிச்சுட்டு ஓடினாங்க, “ஐயோ.. காலைல கால் வலிக்குதுன்னு குழந்தை சொல்லுச்சு.. நான் கேக்காம விட்டுட்டேனே”ன்னு அழுது தீர்த்துட்டாங்க. காலம் கடந்த ஞானம்!!

இதுல இன்னொண்ணையும் சொல்லணும்.. நம்ம குடும்பங்கள்ல ஒரு பொண்ணு புகுந்த வீட்டுல என்ன கஷ்டப்பட்டாலும் சரி.. எத்தனை கொடுமைகளை அனுபவிச்சாலும் சரி, ”மாமியார் மெச்சிய மருமகள் உண்டா?.. அதெல்லாம் அப்படித்தான் இருக்கும். நீதான் அனுசரிச்சுப் போகணும்”ன்னு அந்தப் பொண்ணு உண்மையிலேயே தான் படற கஷ்டத்தைச் சொல்லும் போதெல்லாம் பூசி மெழுகி அனுப்பிடுவாங்க. அதைக் காது கொடுத்துக் கேக்கறதோ, இல்லை பிரச்சினைக்கு தன்னோட அனுபவத்துலேர்ந்து ஒரு நல்ல முடிவு சொல்றதோ நிறையப் பேர் செய்யறதேயில்லை.

எனக்குத் தெரிஞ்சு இப்படியொரு பொண்ணு வாழ்க்கையில இப்டித்தான் நடந்தது. அந்தப் பொண்ணு அழும் போதெல்லாம் அதுக்கு புடவையோ இல்லை பணமோ கொடுத்து சமாதானப் படுத்தி புகுந்த வீட்டுக்கு அனுப்பிச்சுடுவாங்க. கடைசியில வெறுத்துப் போன அந்தப் பொண்ணு தன்னோட உயிரையே மாய்ச்சுக்கிச்சு. “எம் பொண்ணு அப்பவே சொன்னாளே.. கேக்காம போயிட்டேனே”ன்னு அந்த அப்பா அவ்ளோ கதறினார். என்ன பிரயோசனம்??.. இதை முன்னாடியே செஞ்சுருக்கலாம் இல்லியா?. தன்னோட மகள் வாழ்க்கையில் தான் தலையிட்டுக் கெடுத்துடக் கூடாதுன்னு நினைச்ச தகப்பன் தன்னோட பெண்ணின் வார்த்தைகள்ல எத்தனை உண்மையிருக்குன்னு கொஞ்சம் உணர முயற்சி செஞ்சுருந்திருந்தா இது தவிர்க்கப் பட்டிருக்குமே.

குழந்தைங்க சொல்ல வர்றதை,.. முக்கியமா டீனேஜ் குழந்தைங்க சொல்ல வர்றதை நிச்சயமா கேக்கணும். இது அவங்களுக்குள்ளயும் இந்த நல்ல பழக்கத்தை கண்டிப்பா வளர்க்கும். நல்ல பேச்சாளனா இருக்கறதைவிட நல்ல கேட்பவரா இருப்பதுங்கறது ஒரு கலை. தன்னோட மன உணர்வுகளை பகிர்ந்துக்க குடும்பத்துல உள்ளவங்க தயாரா இல்லாதப்ப, அந்தக் குழந்தை ரொம்பவே ஏங்கிப் போயிடுது. தன்னோட மனசை உண்மையாவே காது கொடுத்துக் கேக்கறவங்க, அல்லது அப்டி கேக்கற மாதிரி நடிக்கிறவங்க பக்கம் அது நிச்சயமா திரும்பிடுது. பெத்தவங்க மேல ஒரு வெறுப்பு உண்டாகவும் மத்தவங்களோட கைப்பொம்மையா அந்தக் குழந்தை திசை மாறித் தீய வழிகள்ல போறதுக்கும் இது ஒரு காரணமா அமைஞ்சுடுது. நம்ம வீட்டுல கொழுகொம்பை சரியாக் கட்டலைன்னா, நம்ம வீட்டுக்கொடி பக்கத்து வீட்ல படர்றது இயற்கைதானே..

சில வீடுகள்ல குழந்தைங்கதானேன்னு அவங்க பேச்சை சரியா கேக்கறதேயில்லை. பள்ளிக்கூடத்துல நடந்தது, ஸ்கூல் பஸ்ஸுல நடந்தது, ஃப்ரெண்டோட நடந்த சண்டைன்னு அது எதையாவது பேச வரும்போதெல்லாம் “டோண்ட் டிஸ்டர்ப் மீ.. போய் விளையாடு, இல்லைன்னா டிவி பாரு”ன்னு திருப்பி அனுப்பிட்டு, அதுங்க சொல்ல வர்றதைக் கேக்கறதேயில்லை. இந்த “டோண்ட் டிஸ்டர்ப் மீ”யையே கேட்டு வளர்ற குழந்தைங்க வளர்ந்து பெரிசானதும் அதையே பெத்தவங்களுக்கு திருப்பிச் சொல்லுவாங்க. வயசானப்புறம் “பிள்ளைங்க நம்ம கிட்ட ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்குது.. நேரமில்லைன்னுட்டு ஓடிடுது”ன்னு குறைபடற பெத்தவங்க அதிகம். ஆனா, இதுக்கு வித்திட்டதும் நாமதான்ங்கறதை ஏனோ மறந்துடறோம்.


Tuesday, 13 March 2012

அறுவடை செஞ்ச அமோக பல்புகள்..


ஆனாலும் இது கொஞ்சம் பேராசைதான். இந்த ஊருக்கு வந்தப்புறம், தமிழ் நாட்டுல கிடைக்கறதெல்லாம் இங்கே கிடைக்கலியே.. முக்கியமா நமக்குத் தேவையான இந்தப் பொருளெல்லாம் கிடைக்கலையேன்னு அங்கலாய்க்கறதுல அர்த்தமே இல்லை. (மும்பையே என்றாலும் அது தமிழ் நாட்டைப் போலாகுமா!!.ன்னுதான் இப்பவும் பாடிக்கிட்டுத் திரியறது தனிக்கதை) அதுவும் சுமார் இருபது வருஷத்துக்கு முந்தைய நிலைமை. இப்போ மாதிரியா?.. இப்பல்லாம் வேணுங்கறதை நம்மாட்கள் கடையில் போயி சட்ன்னு வாங்கியாறலாம். அத்தியாவசப் பொருட்கள் தவிர தேவைப்படும் விசேஷப் பொருட்களும் சட்ன்னு கிடைச்சிருது.

புது ஊருக்கு ஏத்தமாதிரி வாழ்க்கையை நகர்த்தப் பழகிட்டாலும் இந்த ஊருக்கு வந்தப்புறம் முதல் பொங்கல் பண்டிகை வந்தப்ப மனசுக்கு ஏக்கமா இருந்தது. வீடு கழுவல், சுத்தப் படுத்தல்ன்னு அவலை நினைச்சு உரலை இடிச்சு பண்டிகையை வரவேற்க ஆயத்தமானாலும், கரும்பும் மஞ்சக்குலையும் வாழைப்பழமும், பனங்கிழங்குமா மணக்கும் நம்மூர்ப் பொங்கல் பண்டிகைக்கு ஈடாகலை!! அது செம்பூர், மாட்டுங்கா பகுதிகளைத் தவிர புற நகர்ப் பகுதிகளுக்கு தமிழகப் பொருட்கள் விற்பனைக்கு வராத போறாதகாலம் என்பதை நினைவில் கொள்க. ஜூஸ் கடையிலிருந்து ஒரு அடி நீளத்துல ரெண்டு வெள்ளைக் கரும்புத் துண்டுகளை வாங்கி வந்து சாஸ்திரத்துக்கு வெச்சாலும் பொங்கப் பானையைச் சுத்திக் கட்டுறதுக்கு மஞ்சள் குலைக்கு எங்கே போறது?ன்னு உக்காந்து அரிசியில் கல் பொறுக்கிக்கிட்டே யோசிச்சேன்.

ஊர்லேர்ந்து வரச்சே மங்களகரமா பேக்கிங்கை ஆரம்பிக்கணும்ன்னு சொல்லி, அரிசிப்பானைக்குள் அரிசியுடன் ஏழெட்டு குண்டு மஞ்சள்களையும் சேர்த்து வெச்சுருந்தாங்க. ஆஹா!!.. ஆப்டுச்சு ஐடியா. இங்கேயெல்லாம் பூக்கடைகளில் பூச்சரத்தை தேக்கிலையில் பொதிஞ்சு நல்ல ஏழெட்டு இழைகளாலான நூல்கயித்தால கடையில் கட்டிக் கொடுப்பாங்க. எதுக்காச்சும் உபயோகப்படுமேன்னு அந்த நூல்கயித்தைச் சேகரிச்சு வீட்ல எப்பவும் வெச்சிருப்பேன். அதுல கொஞ்சத்தை எடுத்தேன். மஞ்சப்பொடியை நல்லா தண்ணீர்ல குழைச்சு கயித்துல தடவிக் காய விட்டேன். காய்ஞ்சதும், அஞ்சாறு குண்டு மஞ்சள்களை அதுல கட்டி விட்டேன். நம்ம மஞ்சக்குலை ரெடி. அதை பானையின் கழுத்துல சுத்திக்கட்டி தலைப்பொங்கலை அமரிக்கையாக் கொண்டாடியாச்சு.

அங்கிருந்து நவி மும்பைப் பகுதிக்கு வீடு மாத்திக்கிட்டு போனப்ப ஆஹா!!.. ஒரு மினியிலும் மினி தமிழ் நாடே இங்க இருக்குதேன்னு கண்டுக்கிட்டேன். மஞ்சக்குலையும் கரும்புமா அங்கயிருந்தவரைக்கும் வாசனையோட பொங்கல் அமர்க்களப்பட்டது. நமக்கோ அடிக்கடி மாத்தலாகும் வேலைச்சூழ்நிலை. எல்லா இடத்துலயும் மஞ்சக்குலை கிடைக்குமுன்னு எதிர்பார்க்கவும் முடியாது. அதனால விவசாயி ஆகறதுன்னு முடிவு செஞ்சு ஒரு துண்டு மஞ்சளைத் தொட்டியில் நட்டு வெச்சேன்.

வந்தா சாமிக்கு,.. வரலைன்னாலும் சாமிக்குன்னு மனசைச் சமாதானப் படுத்திக்கிட்டாலும் தண்ணீர் ஊத்திக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கிட்டதுக்கு நல்லாவே விளைச்சல் கொடுத்துச்சு. அப்புறமென்ன?.. வருஷா வருஷம் பொங்கலுக்கு மஞ்சக்குலை நம்ம தோட்டத்தோட உபயத்துல தங்கு தடையில்லாமக் கிடைச்சிட்டிருந்தது. எப்பவுமே பொங்கல் முடிஞ்சதும் அறுவடை செஞ்ச கிழங்குகள்ல ஒரு துண்டை மறுபடி நட்டு வைக்கிறதுக்குன்னு எடுத்து வெச்சிட்டு, மிச்சத்தை சமையலுக்கும், காஸ்மெடிக் உபயோகத்துக்கும்ன்னு உபயோகப் படுத்துவேன்.

பசுமை மாறாம இருக்கற மஞ்சக்கிழங்கைத் தோல் சீவிட்டுச் சின்னச்சின்னத் துணுக்குகளா நறுக்கி நிழலில் நல்லாக் காயவெச்சு எடுத்துக்கிட்டு மிக்ஸியில் பொடிச்சுக்கலாம். கெமிக்கல் நிறமிகள் எதுவும் சேர்க்காத சுத்தமான மஞ்சப்பொடி சமையலுக்குத் தயார். இதே மாதிரி கடைகளில் கிடைக்கும் காய்ஞ்ச விரலி மஞ்சளை வாங்கிட்டு வந்து நல்லாக் கழுவி ஒரு இரவு முழுக்க தண்ணீரில் ஊற விட்டுட்டு, அப்புறம் இன்னொருக்கா ரெண்டு மூணு முறை தண்ணீரில் அலசிட்டு துணுக்குகளா நறுக்கிக் காயவெச்சும் வீட்லயே மஞ்சப்பொடி தயாரிச்சுக்கலாம்.

இது ஒரு சிறந்த கிருமி நாசினியா இருக்கறதுனால மருந்துகள்லயும் சருமத்துக்கான அழகு சாதனப் பொருட்கள்லயும் அதிகமா உபயோகப்படுத்தப் படுது. நம்மூரைப் பொறுத்தமட்டில் உணவே மருந்து. மருந்தே உணவுன்னு நோய்களை சாப்பாட்டாலயே விரட்டியடிச்சு ஆரோக்கியமா வாழறோம். அதனால சமையல்லயும் இது அதிக அளவுல சேர்க்கப்படுது. மஹாராஷ்ட்ரா,கோவா, கொங்கண், இந்தோனேஷியா போன்ற பகுதிகள்ல மஞ்சள் இலைகளையும் சமையலுக்கு பயன்படுத்தறாங்க.

கடலைமாவுடன், வெங்காயம், இஞ்சி, உப்பு, எண்ணெய், ரெட் சில்லி பவுடர், காயப்பொடி, மற்றும் எக்கச்சக்கமான கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துப் பிசைஞ்சு, சேப்பங்கிழங்கு இலைகளில் தடவிச்சுருட்டி, ஆவியில் வேக வைக்கணும். நல்லா வெந்ததும் ஸ்லைஸ் செஞ்சு அப்படியேவோ இல்லைன்னா தவாவில் ரெண்டு சொட்டு எண்ணெய்யில் வாட்டியோ சாப்பிடப்படும் ‘ஆலு வடி’ என்ற வஸ்து இங்கே ரொம்பவும் பிரசித்தம். இதில் சே.இலைகளுக்குப் பதிலா ம.இலைகளையும் பயன்படுத்திச் செய்வாங்க. மஞ்சள் வாசனையோட ரொம்பவே அருமையா, டேஸ்டியா, சத்தா இருக்கும். முக்கியமா மஹாராஷ்ட்ராவில் மஞ்சள் அதிகம் விளையும் சாங்க்லி பகுதியில் இது ரொம்பவே பிரபலமான உணவு.
சேப்பங்கிழங்கின் இலையில் செஞ்ச ஆலுவடி..
தாய்லாந்து, பெர்ஷியன் நாட்டுச் சமையல்ல இதுக்கு முக்கிய இடம் உண்டாம். மஞ்சப்பொடி சேர்க்காத இந்தியச் சமையல் உண்டோ!!.. அதுவும் அசைவம்ன்னா அதோட உடம்பு முழுக்க மஞ்சப்பொடி தடவி மஸாஜ் செஞ்சுட்டு அப்றம் சமைச்சு எடுக்கறதுதானே வழக்கம். இப்படிச் செய்யறதால அசைவத்துல இருக்கற கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிக்கப்படுது. உலகத்துல பெருகி வரும் சுற்றுப்புற மாசு காரணமா நம்ம உடம்புக்குள்ள எவ்வளவு அசுத்தக் காத்து, வாகனங்கள் வெளியேத்தும் விஷ வாயுக்கள், நடமாடும் புகைபோக்கி எந்திரங்கள் வெளியேத்தும் சிகரெட் புகை எல்லாம் சேருது, அதனால நம்ம உடம்பு எவ்வளவு பாதிக்கப்படுதுன்னு சொல்லத் தேவையில்லை. ஆனா, நம்ம உணவில் தினசரி மஞ்சளைச் சேர்த்துக்கிட்டோம்ன்னா நம்ம ரத்தத்தைச் சுத்திகரிச்சு, அசுத்த வாயுக்கள் ஏற்படுத்தற பாதிப்புகள்லேருந்து நம்மைக் காப்பாத்துது.

வெளித்தாக்குதல்லேர்ந்து மட்டுமல்ல, உடம்புக்குள்ளே நடக்கும் அல்ஸீமர்ஸ், ஆர்த்ரைடிஸ் மாதிரியான தாக்குதல்கள்லேர்ந்தும் இது நம்மை பாதுகாக்குதான்னு கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடந்துட்டிருக்குது. கான்சர் செல்களை இது அழிக்குதுன்னும் இதுவரையிலான ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சு, அதை நிரூபிக்க மேற்கொண்டு ஆராய்ச்சிகளும் நடந்துட்டு வருது. மஞ்சளிலிருக்கும் Tetrahydrocurcuminoids(THC)-ஐ பிரிச்செடுக்க தாய்லாந்து அரசு அந்தூரு ஆராய்ச்சியாளர்களுக்குப் பொருளுதவி செய்யுது. இந்த THC தோலின் நிறத்தைக் கூட்டுதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கான மருந்துகள், காஸ்மெடிக்குகளில் இதை உபயோகப்படுத்தப் போறாங்களாம். வெள்ளைத்தோல் மோகம் யாரைத்தான் விட்டு வெச்சிருக்குது.

மங்களகரம்ன்னதும் நம்ம மனக்கண்ணுல மொதல்ல மஞ்சள்தான் வந்து நிக்குது. அதனாலத்தான் மாதாந்திர மளிகை லிஸ்ட்டாகட்டும், சுப நிகழ்ச்சிகளுக்காக தயாரிக்கிற பலசரக்கு லிஸ்ட்டாகட்டும், மஞ்சளைத்தான் லிஸ்டுல மொதல்ல எழுதுவாங்க. சுபச்செலவோட ஆரம்பிக்கணுமாம்.. அதேமாதிரி நாலு மூலைகளிலும் மஞ்சள் தடவி வர்ற அழைப்பிதழைப் பார்த்ததுமே, இது சுப நிகழ்ச்சிக்கானதுன்னும் நமக்குப் புரிஞ்சிருது இல்லையா..

நம்ம முன்னோர்கள் ரொம்பவே கில்லாடிகள்தான். இல்லைன்னா வெளி நாட்டுக்காரங்க ஆராய்ச்சி செஞ்சு இப்போ கண்டு பிடிச்சதையெல்லாம்,  எப்பவோ அந்தக் காலத்துலயே கண்டுபிடிச்சுச் சுவடிகள்ல எழுதி வெச்சுருக்க முடியுமா?. ஆயுர்வேதத்துலயும், நம்ம பாட்டிகளின் கைவைத்தியத்துலயும் இதுக்குத் தனியிடம் இருக்குதே. சளி, காய்ச்சல், இருமல், தீப்புண்,சரும வியாதிகள்ன்னு எந்த வியாதிக்கும் கஷாயத்தோட சேர்த்து உள்ளுக்குக் கொடுத்தும், வெளிப்பூச்சாகத் தடவியுமே குணப்படுத்திடுவாங்க. இருமல் வந்தாத்தான்னு இல்லை, பொதுவாகவே ராத்திரியில் ஒரு சிட்டிகை மஞ்சப்பொடி சேர்த்த பாலைக் குடிக்கிறதை வழக்கமா வெச்சுக்கிறது ரொம்பவே நல்லது.

வியாதிகளுக்கு மட்டுமல்ல பாம்பு, முதலை மாதிரியான விலங்குகளுக்கும் கூட மஞ்சள்ன்னா அலர்ஜி. வீட்ல மஞ்சள்செடி இருந்துச்சுன்னா அந்தப் பக்கமே பாம்பு எட்டிப் பார்க்காதுன்னு சொல்லிக்கிறாங்க. அதேமாதிரி உடம்பு முழுக்க மஞ்சளை அரைச்சுத் தடவிக்கிட்டு முதலைகள் இருக்கற குளத்துல இறங்கினா முதலைகள் நம்மை விட்டு ஓடிருமாம். ஆனாலும் இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு இல்லே.. விஷப்பரீட்சைக்குத் துணிஞ்சு யாரும் குளத்தில் ஐமீன் களத்துல இறங்கிடாதீங்க. அப்றம் மஞ்சள் தடவின கோழி நமக்கு விருந்தாகற மாதிரி, (மஞ்சள் தடவிக்கிட்ட) நாம முதலைக்கு விருந்தாகிருவோம். சாப்பிடறதுக்குத் தயாராத்தான் நம்மை அனுப்பியிருக்காங்கன்னு முதலை தப்புக் கணக்குப் போட்டுச் சாப்பிட்டுட்டு, “நல்லாத்தான் இருக்கு. காரம்தான் கொஞ்சம் கம்மி”ன்னு நொட்டை சொல்லிட்டுப் போயிரும் :-))

வருஷா வருஷம் செய்யும் வழக்கப்படி புதுத்தொட்டியில் மஞ்சக்கிழங்கை நட்டு வெச்ச கொஞ்ச நாளுக்கப்புறம் பார்த்தா பழைய தொட்டியிலும் கன்னுகள் முளைச்சு வந்துக்கிட்டிருந்தது. கொஞ்சமா வேர் மிச்சமிருந்தாக்கூடப்போதும். அதுலேர்ந்தும் புதுச்செடிகள் முளைச்சு வந்துருது போலன்னு நினைச்சுட்டு, அந்த கன்னுகளை வீணாக்க வேணாமேன்னு பிடுங்கி, புதுச்செடியோடவே நட்டு வெச்சு வளர்த்தேன். நல்லா தளதளன்னு தொட்டி நிறைய வளர்நது நின்னதுகளை சமீபத்திய பொங்கலுக்காக அறுவடை செஞ்சாச்சு. கொஞ்சம் அவசரப்பட்டதில் ஓரளவு பெரிய இலைகளோட இருந்த ஒரு செடி கிழங்கை தொட்டியிலேயே விட்டுட்டு, இலைப்பகுதி மட்டும் கையோட வந்துருச்சு. அப்றம் நிதானமா இன்னொரு செடியை எடுத்து பொங்கப்பானையில் கட்டி பண்டிகை கொண்டாடி முடிச்சது தனிக்கதை.

நல்ல மகசூல் இருக்கும்ன்னு நினைச்சுக்கிட்டு அகழ்வாராய்ச்சி செஞ்சதில் சுமார் ஐம்பது கிராம் அளவுக்கு மஞ்சள் தேறிச்சு. அவ்வ்வ்வ்வ்வ்வ்... ஏனோதானோன்னு கவனிக்கிறப்பல்லாம் நல்ல மகசூல் கொடுத்துட்டு, இப்ப பார்த்துப் பார்த்து கவனிக்கிறப்ப பல்பு கொடுத்துருச்சு.. சின்னச்சின்னதா சுமார் ஐம்பது கிராம் அளவுலான குண்டு பல்புகள். பல்புகளை உபயோகிக்கிறதைத் தவிர்க்கணும்ன்னு நடக்கற பிரச்சாரத்தை இது இப்படி தப்பாப் புரிஞ்சுக்கிச்சோ என்னவோ :-) சரி,.. உலகத்துல இருக்கற அத்தனை ஜீவன்கள் கிட்டயும் பாரபட்சமில்லாம பல்பு வாங்கியே தீரணும்ன்னு நாம கங்கணம் கட்டிக்கிட்டு காத்திருக்கறப்ப இது மட்டும் ஏமாத்திருமா என்ன?? :-)) 

ஊசிக்குறிப்பு: படங்கள்ல இருக்கறது எங்கூட்டுச் செடிகள்ன்னு சொல்லாமலேயே புரிஞ்சுக்கிட்டிருப்பீங்களே :-))


Thursday, 8 March 2012

குடத்திலிட்ட தீபம் - சாவித்திரிபாய் ஃபுலே


                                                            
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கேபெண்
இளைப்பில்லை காண்”என்று பெண் விடுதலைக்கும்மி பாடிய பாரதியின் வாக்கிற்கேற்பப் பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். ஆணுக்குப்பெண் சமமாக, ஏன்! ஒரு படி மேலாகவே இன்று முன்னேறியுள்ளனர். விண்வெளிக்குச் சென்று சாதனை புரிந்த கல்பனா சாவ்லா முதல் இந்தியாவின் உயர்பதவியை அலங்கரிக்கும் பிரதீபா பாட்டில் வரை நம் கண்முன் எத்தனையோ சாதனைப்பெண்கள் உலா வருகின்றனர்.

பெண்கள் கல்வி கற்பதே பாவம் என்று கற்பிக்கப் பட்டிருந்த நம் நாட்டில் அந்தத் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு இன்று கல்வியில் ஆண்களைவிட அதிகத் தேர்ச்சி விகிதமும் காட்டுகின்றனர். இந்த முன்னேற்றங்களெல்லாம் ஓரிரவில் நடந்து விடவில்லை. பெண்களுக்காக எத்தனையோ தியாக உள்ளங்கள் மெழுகுவர்த்தியாகத் தன்னையே உருக்கிக்கொண்டு நமக்காகப் பாடுபட்டதால்தான் நாம் இன்று இணையம் வரை கோலோச்ச முடிகிறது. இப்படிப்பட்ட தியாக விளக்குகளில் எத்தனையோ பேர் வெளியுலகத்திற்கு அதிகம் அறியப்படாமலேயே குடத்திலிட்ட தீபங்களாய் இருந்து மறைந்தும் போயினர். அத்தகையவரில் மராட்டிய மண்ணில் பிறந்த சாவித்திரிபாய் ஃபுலேயும் ஒருவர்.

இவர் மராட்டிய மாநிலத்தில் சதாரா மாவட்டத்தின் நைகாய் கிராமத்தில் லக்ஷ்மி பாய்க்கும், கண்டோஜி நாவ்ஸே பாட்டிலுக்கும் மகளாக 1831-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் மூன்றாம் தேதியன்று பிறந்தார். கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தாலும், வாசிக்கத் தெரியாவிட்டாலும் தனக்குச் சிறுவயதில் கிறிஸ்தவ அமைப்பொன்று கொடுத்த புத்தகத்தை அவர் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதும் உடன் எடுத்துச் சென்றதே புத்தகங்களின் மேலும், கல்வியின் மேலும் கொண்டிருந்த அவரது தணியாத ஆர்வத்தைக் காட்டுகிறது. அக்காலத்தில் நிலவிய குழந்தைத் திருமண முறைப்படி ஒன்பது வயதுச் சிறுமியான அவர், பதின்மூன்று வயது ஜோதிராவ் ஃபுலேயைக் கைப்பிடித்து பூனா வந்த போது இந்தத் திருமணம் தன்னுடைய வாழ்வையே மாற்றிவிடப்போகிறது என்று அறிந்திருக்கவில்லை.

தாயை இழந்திருந்த ஜோதிராவ் அச்சமயம் தன்னுடைய உறவினரான சகுணா பாயால் வளர்க்கப்பட்டு வந்தார். ஆங்கிலேயர் ஒருவரின் மகனைப் பார்த்துக்கொள்ளும் தாதிப் பொறுப்பில் அச்சமயம் இருந்த சகுணா பாய் நன்கு ஆங்கிலம் பேசுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார். அதனால் ஈர்க்கப்பட்ட ஜோதிராவுக்கும் கல்வியில் இயற்கையாகவே ஆர்வம் ஏற்பட்டது. பூவோடு சேர்ந்த நார் மணப்பது இயல்பு. ஆனால் இயற்கையாகவே மணமிக்க பூக்கள் ஒன்று சேர்ந்தால் அது கதம்பமாகி இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் பெருமையைப் பெறுகிறது. அவ்வாறே இக்குடும்பத்தில் வந்து இணைந்த சாவித்திரி பாயும் தன் பங்குக்குக் கல்வி மணம் பரப்பியதில் ஆச்சரியமில்லை.

தான் கற்ற கல்வியைப் பிறருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று எண்ணி பூனாவின் நாராயண் பேட் என்ற பகுதியில் 1847-ல் மே ஒன்றாம் தேதியன்று ஜோதி ராவ் ஃபுலே ஒரு பள்ளியை ஆரம்பித்தார். ஒரு சில காரணங்களால் இப்பள்ளியை மூட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவே கல்விப்பணி தற்காலிகமாகத் தடைபட்டது. அச்சமயம் பூனாவில் பெண் குழந்தைகளுக்கெனத் தனிப்பள்ளி அமைக்கவேண்டுமென்று விரும்பிய ஜோதிராவ் அதன் முதற்கட்டமாகத் தன்னுடைய மனைவிக்குக் கல்விப்பயிற்சியளித்தார். கல்வியில் ஆர்வம் கொண்டிருந்த சாவித்திரிபாயும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ச்சியடைந்தார்.

பெண்கள் தாம் வேறு பிற வழிகளில் பெறமுடியாத முன்னேற்றத்தைக் கல்வியால் பெற முடியும் என்பது பாரதியாரின் அழுத்தமான நம்பிக்கை. பெண்களின் முன்னேற்றத்திற்கு மூன்று வழிகளைக் கூறுகின்றார்.

“அதற்கு மூன்றுவிதமான உபாயங்கள் இருக்கின்றன,
முதலாவது உபாயம் கல்வி; இரண்டாவது உபாயம் கல்வி;
மூன்றாவது உபாயம் கல்வியே! அதாவது கல்வியைத் தவிர
வேறு எல்லா விதமான உபாயமும் சிறிதேனும் பயன்படாது
என்பது கருத்து”

என்ற பாரதியின் வாக்கை மெய்ப்பிப்பது போல், அடிமைப் பட்டுக்கிடந்த பெண் சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால் அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதே ஒரே வழி என்று எண்ணி 1848-ம் வருடம் ஜனவரி ஒன்றாம் தேதி பெண்குழந்தைகளுக்கென ஒரு பள்ளியை ஆரம்பித்துத் தங்களுடைய கல்விப்பணியைத் தொடர்ந்தனர். ஒன்பது மாணவிகளைக்கொண்ட இப்பள்ளியில் அனைத்து மாணவியரும் சாதி வேறுபாடின்றி சேர்க்கப்பட்டிருந்தனர். பூனாவில் அச்சமயம் நிலவிய சாதித்துவேஷச் சூழ்நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் இவர் மிகுந்த எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.

ஒரு தாழ்த்தப்பட்ட பெண் தங்களுக்கு நிகராகக் கல்வி கற்றதுமல்லாமல் கற்பிக்கும் பணியையும் மேற்கொண்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. தினமும் பாடசாலைக்கு சாவித்திரி பாய் நடந்து போகும்போது அவரைச் சொல்லாலும் செயலாலும் அவமானப்படுத்தினர். அவர் மீது கற்கள், சாணம், குப்பைகள் போன்றவையும் வீசப்பட்டன. இதனால் ஒரு கட்டத்தில் மனம் தளர்ந்த சாவித்திரிபாய் தான் இனிமேல் கல்விச்சாலைக்கு செல்லப் போவதில்லை என்று கூறி விட்டார். மனைவியைத் தேற்றிய ஜோதி ராவ் அவரிடம் இரண்டு புடவைகளைக் கொடுத்து, “இதில், சுமாரான புடவையைக் கட்டிக்கொண்டு பாடசாலைக்குப் போ. எதிர்ப்பாளர்கள் வீசும் அக அழுக்கையும் புற அழுக்கையும் அது சந்திக்கட்டும். பள்ளிக்குப் போனபின் நல்ல புடவையைக் கட்டிக்கொள்” என்று கூறினார்.

அதன் படியே நடந்த சாவித்திரி ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அந்த எதிர்ப்பாளர்களில் ஒருவனைக் கன்னத்தில் அறைந்தார். புழுவேயானாலும் ஒரு கட்டத்தில் பாம்பாய்ச் சீறி தன்னெதிர்ப்பைக் காட்டத்தானே செய்கிறது. அதன் பின் அவரைத் தொந்தரவு செய்தவர்கள் அவரது வழிக்கே வருவதில்லை. சாதிக்க வேண்டுமென்று உழைப்பவர்களின் பாதையில் மலர்கள் மட்டுமல்ல முட்களும் நிறைந்திருக்கும். சாவித்திரி பாயைப் போல் ஒரு சிலர் மட்டுமே அந்த முட்களையும் மலரச்செய்து தன்னுடைய பாதையில் மணம் வீசச் செய்கின்றனர். அவ்வருடமே பூனாவில் ஐந்து மகளிர் பள்ளிகள் துவங்கப்பட்டன. இதுவே இவர்களது இடைவிடாத உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமும் பலனுமாகும். இவர்களது கல்விப்பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசு இவர்களைக் கௌரவித்து சாவித்திரி பாயைச் சிறந்த ஆசிரியையாகவும் தேர்ந்தெடுத்தனர்.

இதை மட்டும் கண்ணுற நேர்ந்திருந்தால்,

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

என்று பாரதி அப்போதே ஆனந்தக் கூத்தாடியிருப்பார்.

அந்தக் காலத்தில் பத்துப்பன்னிரண்டு வயது நிரம்பியதுமே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்வித்து விடுவார்கள். பூனாவிலும் குழந்தைத்திருமணம் எனும் இக்கொடுமை நடந்து வந்தது. பால்ய விவாகத்தின் பலனாகப் பால்ய விதவைகளின் எண்ணிக்கையும் பெருமளவில் இருந்தது. தனக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட அறியாத சிறுமிகளான அவர்களின் நிலை மிகக்கொடியதாக இருந்தது. சதி என்றழைக்கப்பட்ட உடன் கட்டை ஏறுவதும், இல்லையெனில் தலை மழிக்கப்பட்டு வெள்ளையுடுத்தி மூலையில் முடங்குவதுமே அவர்களது தலையெழுத்தாக இருந்து வந்தது. பால்ய விதவைகள் குடும்பத்திலுள்ள சில ஆண்களால் வஞ்சிக்கப்பட்டுக் கர்ப்பமுறும் கொடுமையும் நடந்து வந்தது. அப்படிக் கர்ப்பமுறும் பெண்கள் ஒன்று தற்கொலை செய்து கொள்வார்கள் அல்லது செய்து கொள்ளத் தூண்டப்படுவார்கள், இல்லையெனில் பிறக்கும் குழந்தையைக் கொன்று விடுவார்கள்.

ஒரு சமயம் இப்படித் தற்கொலை முயற்சியில் இறங்கிய காசிபாய் என்னும் பால்யவிதவையைக் காப்பாற்றிய இத்தம்பதி, அவருக்குப் பிறக்கும் குழந்தையைச் சமூகத்தில் மற்றவர்களைப்போல் தலை நிமிர்ந்து வாழச்செய்வதாக உறுதியளித்தனர். அவருக்குக் குழந்தை பிறக்கும் வரை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டனர். குழந்தை பிறந்த பின் அதைத் தத்தெடுத்துத் தங்கள் குழந்தையாகவே வளர்த்தனர். யஷ்வந்த ராவ் என்று பெயரிடப்பட்ட அந்தக்குழந்தை பிற்காலத்தில் மிகவும் புகழ் பெற்ற டாக்டரானது. இப்படி ஒவ்வொருவராகத் தம்மால் கண்டுபிடித்துக் காப்பாற்ற இயலாதே என்று எண்ணிய தம்பதியினர் ஆங்காங்கே இதற்கெனப் பிரசவ விடுதிகளை அமைத்தனர். “சிசுக்கொலைத் தடுப்பு மையங்கள்” (பால்ஹத்யா ப்ரதிபந்தக் க்ருஹ) என்று பெயரிடப்பட்ட இந்த விடுதிகளில் ஆதரவற்ற பால்ய விதவைகள் தஞ்சமடைந்தனர்.

இனிமேல் பால்யவிதவைகளுக்கு தலை மழிக்க மாட்டோம் என்று அத்தொழிலைச் செய்து வந்தவர்களைக் கொண்டே அறிவிக்கச் செய்தார் சாவித்திரி. விதவை மறுமணத்தையும் ஆதரித்து அவ்வாறு செய்து கொள்ள விருப்பப் பட்டவர்களுக்கு மறுமணமும் செய்வித்தார். இவையெல்லாம் அவர் மீது உயர்சாதியினர் கொண்டிருந்த வன்மத்தை இன்னும் தூண்டியது. அடித்தட்டு மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் கூட கல்வி புகட்டினாலொழிய ஒரு சமுதாயத்தை முழுவதுமாக முன்னேற்றி விட முடியாது என்பதை உணர்ந்திருந்த தம்பதியினர், அவர்களுக்கென 1855-ல் இரவுப்பள்ளியையும் தொடங்கினர்.
படங்கள் கொடுத்துதவிய கூகிளாண்டவருக்கு நன்றி
பெண்கல்வி மற்றும் விதவைகளுக்காக மட்டுமல்லாது, ‘சத்ய சோதக் சமாஜ்’ என்ற அமைப்பை ஏற்படுத்திச் சமூகத்திற்கும் தன்னாலியன்ற சேவை செய்து வந்தார். தாழ்த்தப்பட்டவர்கள் என்று அறிந்தால் தவித்த வாய்க்குத் தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள். அந்தளவுக்கு அக்காலத்தில் தீண்டாமை என்னும் கொடுமை தலை விரித்தாடியது. எனவே தங்கள் வீட்டுக் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொள்ளுமாறு கூறி அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார். பூனாவில் சாவித்திரி பாய் எனும் கல்வித்தெய்வம் வாழ்ந்த அந்த வீடு நினைவிடமாக்கப்பட்டு தினமும் மக்கள் தரிசித்துச் செல்லும் கோயிலாக உள்ளது. ஒரு சமயம் பூனா சென்றிருந்த போது, அங்கே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அழகான சிறிய வீடுதான். சாணம் பூசி மெழுகப்பட்ட மண் தரையுடன் கூடிய அந்த வீடும், அதிலிருக்கும் கிணறும் மிகவும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தனக்கு எல்லா வகையிலும் துணையிருந்த கணவர் ஜோதிராவ் ஃபுலே 1890-ம் ஆண்டு இயற்கையெய்தி தன்னை விட்டுப் பிரிந்த நிலையில் தன் கணவரின் சிதைக்குத் தானே கொள்ளி வைத்து அவர் காட்டிய மன உறுதி அசாத்தியமானதும் கூட. கணவர் இறந்த பின், மூலையில் முடங்கி விடாமல் அவர் விட்டுச் சென்ற சமுதாயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அத்தகையதொரு சமூகப் பணியின் போதே தன் இன்னுயிரையும் நீத்தார். பூனாவில் அச்சமயம் பரவியிருந்த ப்ளேக் நோயால் பாதிக்கப் பட்டிருந்தவர்களுக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபட்டிருந்த சாவித்திரிபாயையும் நோய் தாக்கியதன் காரணமாக 1897-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.

மாணவி, ஆசிரியை, சமூக சேவகி, ஆதரவற்றவர்களுக்கு அன்னை என்று மட்டுமல்லாது கவிதாயினி என்றொரு முகமும் இவருக்குண்டு. இன்றைய நவீன மராட்டியக் கவிதைகளுக்கு அடி கோலிய சாவித்திரி பாயின் கவிதைகள் “காவ்ய ஃபுலே”, “பவன் கஷி சுபோத் ரத்னாகர்” என்ற பெயர்களில் நூல்களாகத் தொகுக்கப்பட்டன. சாவித்திரி பாயின் நினைவு தினத்தன்று அவரது உருவப்படம் தாங்கிய அஞ்சல் தலைகளை வெளியிட்டு இந்திய அரசாங்கம் அவரைக் கௌரவப் படுத்தியுள்ளது. சிறந்த சமூக சேவை செய்பவர்களுக்குச் சாவித்திரி பாய் நினைவு விருதை அளிப்பதன் மூலம் அவர் பிறந்த மராட்டிய மாநிலமும் அவரைக் கௌரவப் படுத்தியுள்ளது.

வரலாற்றின் பக்கங்களில் சிலர் மட்டுமே இடம் பெறுகிறார்கள். சிலர் செய்த நற்செயல்களும், தியாகங்களும் வெளியில் தெரியாமலேயே குடத்திலிட்ட விளக்காக மறைந்தும் மறைக்கப்பட்டும் விடுகிறது. ஒரு தீபத்திலிருந்து கோடிக்கணக்கான தீபங்களை ஏற்றினாலும் தீபத்தின் ஒளி குன்றுவதில்லை, மாறாக அது ஒன்று பலவாகப் பல்கிப் பெருகுவதன் மூலம் மேலும் பிரகாசமாகவே ஒளிர்கிறது. அவ்வாறே இத்தகைய தீபங்களும் வரலாற்றில் இடம் பெறவில்லையெனினும் தானிருக்கும் இடத்தை மட்டுமாவது ஒளிரச் செய்கின்றன.

அனைத்து சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.


டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.


Friday, 2 March 2012

மகளிர் வாரக் கொண்டாட்டம் - வல்லமை மின்னிதழில்..

வர்ற மார்ச் 8-ம் தேதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுதுன்னு எல்லோருக்கும் தெரியும்.வெறுமே ஒரு நாள் மட்டும் கொண்டாடுனாப் போதுமா,.. போதாதுன்னுதான் கொண்டாட்டத்தை ஒரு வாரத்துக்கு நீட்டிச்சிருக்கோம். இன்னியிலிருந்து மார்ச் 8-ம் தேதி வரைக்கும் மகளிர் வாரம் வல்லமை மின்னிதழில் கொண்டாடப்படுது.

இந்த ஒரு வாரமும் பெண் படைப்பாளிகளின் படைப்புகள் மட்டுமே வல்லமையில் வெளியாகும். கதை, கவிதை, கட்டுரை, சின்னச்சின்ன துணுக்குச் செய்திகள், பயணக் கட்டுரைகள், சமையல் குறிப்புகள்ன்னு எதை வேணும்னாலும் எழுதலாம்.

பெண்களின் நிலையை, அவங்க தினமும் சந்திக்க நேரிடும் பிரச்சினைகளை மையமாக் கொண்டதாகவோ இல்லைன்னா நீங்க சந்திச்ச ஒரு அற்புதமான பெண்மணியைப் பற்றியதாவோ கூட எழுதலாம். நம் குரலை ஒலிக்க வைக்க ஒரு அருமையான வாய்ப்பு , தவற விடாமக் கலந்துக்கோங்க சகோதரிகளே..

சகோதரர்கள் மன்னிச்சுக்கோங்க :-))

படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்க. மகளிர் வாரத்தைக் கொண்டாடுங்க. 

Tuesday, 28 February 2012

கட்டாந்தரையும் காரணிகளும்..


ஒரு மனிதனின் செல்வச் செழிப்பைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பவை அவனது தேவைகளும் விருப்பங்களும் மட்டுமே.

பொறுமை, நம்பிக்கை, பொறுப்புணர்வு இவைகளை வளர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்களா?…. ஒரு செடியை வளர்க்க ஆரம்பியுங்கள். பொறுப்பில்லாமல் ஒரு நாள் தண்ணீர் ஊற்ற மறந்தால் கூட, வாடி வதங்கி இது பிழைக்குமா இல்லையா என்று நம் பொறுமையையும், எப்படியும் பிழைத்து விடும் என்ற நமது நம்பிக்கையையும் ரொம்பவே சோதித்து விடும்.

நாம் எப்போதும் வளமான எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காண்பவர்களாக இருக்கிறோம்,.. அதற்கான விதைகள் நிகழ்காலத்தில் மட்டுமே ஊன்றப்படுகிறது என்பதை மறந்து விட்டு.

வளர்ந்தபின் இந்த உலகத்தையே மாற்றி குறைகளில்லாத ஒரு புது உலகைப் படைப்பேன் என்பதே ஒவ்வொரு இளம் மொட்டின் கனவாக இருக்கிறது. வளர்ந்தபின்தான் புரிகிறது, உலகத்தில் நாமும் அடக்கமென்பது. சோப்பானது தன்னையும் சுத்தமாக வைத்துக் கொண்டு நம்மையும் சுத்தப்படுத்துவதைப் போல், முதலில் நாம் குறையில்லாத மனிதராய் மாறி உலகைக் குறைகளற்றதாக்குவோம்.

அறைகளில் அடைத்து வைத்துக் கற்பிக்கப்படுவது மட்டுமல்ல, நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்து விஷயங்களையும், பொறுமையையும் தன்னம்பிக்கையையும் இழந்து விடாமல் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கற்றுக்கொள்வதும் கல்வியே.

அளவுக்கு மீறிப் பராமரித்தாலும் கெடும், பராமரிப்பின்றி விட்டாலும் கெடும் மனித உறவுகளும் தாவரங்களும் ஒன்றே. ‘பீலிபெய் சாகாடும்’  என்று வள்ளுவரும் ‘அளவுக்கு மிஞ்சினால்’ என்று தமிழ்ப்பாட்டியும் எச்சரித்தது இதைத்தானோ..

அன்றைய தினத்தை மிகவும் மன நிறைவுடனும் திருப்தியுடனும் கழித்தவனுக்குத் தூக்கம் வர மெத்தையின் சொகுசும், மாத்திரையின் துணையும் தேவையில்லை.

நம்மீது உண்மையான அன்பு கொண்டவர் மனதில் நமக்கென்று விசாலமான நிலையான இடத்தை விடவும் விலையுயர்ந்த சொத்தை, வாழ்நாளில் நம்மால் சம்பாதித்து விட முடிவதில்லை.

உள்ளுணர்வென்பதும் கடவுளின் கொடைதான். கணவன் தன்னிடம் ஏதோ மறைக்கிறான் என்பதை மனைவியும், மனைவி அதைக் கண்டுபிடித்து விட்டாள் என்றறிந்து எதிராளி தன்னைக் கேள்வி கேட்குமுன் கணவனும் உள்ளுணர்வால் எச்சரிக்கப்பட்டுச் சுதாரித்துக் கொள்கிறார்கள்.

கட்டாந்தரையைப் பார்த்துப் பூந்தோட்டம் அழகாயில்லை என்பவனும், வாழ்க்கையில் சுவாரஸ்யமே இல்லை என்று அலுத்துக் கொள்பவனும், அதை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதைக் கடைசிவரை புரிந்து கொள்வதேயில்லை.

டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.


Friday, 24 February 2012

அதிர்ச்சி வைத்தியம் பலனளிக்குமா?..

கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கணும். விதை விதைச்சதும் முளைச்சு, விளைஞ்சு அறுவடையாகிரும்ன்னு அவசரப்பட முடியுமோ?.. குறைஞ்ச பட்சம் வேரூன்றித் தழைக்க ஆரம்பிச்சாலாவது எப்படியும் பிழைச்சுரும்ன்னு நம்பிக்கையோட இருக்க முடியும். அது வரைக்கும் பொறுமை.. பொறுமை.. அண்ட் பொறுமை தேவை. பொறுமை எருமையை விடப்பெரியதுன்னு சும்மாவா சொல்லி வெச்சிருக்காங்க பெரியவங்க.

எப்பவும் போல அன்னிக்கும், பொறுமையா ஒரு சிகரெட் புகைக்கலாம்ன்னு பொட்டிக் கடைக்கு வந்து ஒரு சிகரெட் வாங்கிக்கிட்டு, கடையிலிருந்த லைட்டரோட பட்டனை அமுக்கினா, அது..ராம் நாம் சத்ய ஹை"அப்டீன்னு சவுண்டு விடவும் பதறியடிச்சுப் பின் வாங்கிய மக்களுக்கு, ஒரு இயக்கம் கொடுக்கற அதிர்ச்சி வைத்தியம் அதுன்னு மொதல்ல புரியலை..
காமிராவில் பிடிச்சாந்தது..
வடக்கே இந்துக்களின் இறுதி ஊர்வலத்தும்போது, கூடவே நடக்கறவங்க "ராம் நாம் சத்ய ஹை" அப்படீன்னு மெதுவான குரல்ல உச்சாடனம் செஞ்சுட்டே போவாங்க. போற உசுரு கடவுள் நாமத்தைக் கேட்டுக்கிட்டே போகட்டுமேங்கற நினைப்புத்தான். அதைத்தவிர வீண் அரட்டையோ அல்லது வேறு எந்த நிகழ்வுகளோ இருக்காது. அந்த உச்சாடனத்தைக் கேக்கறப்ப கொஞ்சம் நம்ம உசுரையே அசைச்சுப் பார்த்துடற மாதிரி இருக்கும். பொதுவாவே இறுதிச்சடங்கு நிகழ்வுல கலந்துக்கறவங்களுக்கு ஒரு விதமான பற்றற்ற மனநிலை இருக்கும். பூமியில உசிரோட இருக்கறவரைக்கும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய மனுஷன் கடைசியில் என்னத்தைக் கொண்டு போறான். நாமளும் அப்படித்தானே போகப்போறோம்,.. அதனால இருக்கறவரைக்கும் மத்தவங்களுக்குப் பிரயோசனமா இருக்கணும், அன்பா இருக்கணும்ன்னு ஒரு வைராக்கியமே வரும். இதைத்தானே மயான வைராக்கியம்ன்னு சொல்றோம். அந்த இடத்தை விட்டு வெளியில வந்தப்புறம், "பழைய குருடி கதவைத்திறடி"ன்னு பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பறது தனிக்கதை :-) இங்கெல்லாம் இறுதி யாத்திரை போகுதுன்னா, கிட்டக்கப் போயி இறந்தவங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுட்டு அவங்கவங்க வழியில போவாங்க.

மனுசன் உலகத்துக்கு வந்தது ஒரே வழியில் ஆனா, உலகத்தை விட்டுப் போறது வெவ்வேறு வழிகளில்ன்னு சொல்லுவாங்க. அங்கே இறுதியாத்திரை செஞ்சுட்டிருக்கறவரும் அப்படித்தான் ஏதாவதொரு வழியில், ஏன் கான்சராலக் கூட உலகத்தை விட்டுப் பிரிய நேர்ந்துருக்கலாம்.

ஆனாலும் நம்ம அரசாங்கத்துக்கு மக்கள் மேல அபார நம்பிக்கைதான். முதியோர் கல்வி, அறிவொளி இயக்கம், இது போக வழக்கமான கல்வி நிலையங்கள்ன்னு எக்கச்சக்கமா ஏற்படுத்திக் கல்வியை ஊட்டறோமே.. அது வீணாப் போகுமா?. எப்படியும் மைக்ராஸ்கோப் வெச்சுப் படிச்சாவது தெரிஞ்சுக்குவாங்க என்ற அசாத்திய நம்பிக்கை அவங்களுக்கு இருக்கு. அதனாலதான் கடுகை விடச் சின்னதா "Cigarette is Injurious to Health"ன்னு சிகரெட் பொட்டியில் எழுதி வெச்சிருக்காங்க. ஒரு வேளை இங்க்லீஷ் படிக்கத் தெரியலைன்னா என்னா செய்யறதுன்னுதான் "புகை பகை".. "புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு"ன்னு தமிழ்லயும் எழுதி வெச்சிருக்காங்க.

ஆனாலும் மக்கள் இந்த வெண்சுருட்டை(தமிழ்ல இந்தப் பேருதானே?.. தெரிஞ்சவங்க சொல்லுங்க) விடறதா இல்லை. பொது இடங்கள்ல புகை பிடிச்சா அபராதம்ன்னும் ஒரு சட்டம் வந்துச்சு. ஆனாலும் ஓரளவுக்கு குறைக்க முடிஞ்சுதே தவிர முழுசும் இதை தடுக்க முடியலை. சிகரெட்டால புற்று நோய் வர வாய்ப்பிருக்குன்னு சொன்னாக்கூட மக்கள் சட்டை செய்யறதா இல்லை. இதுக்கு மேல ஒரு அரசாங்கம் மக்களை எப்படித்தான் எச்சரிக்கை செஞ்சு பாதுகாக்க முடியுமாம்.. யக்கா நீ சொல்லேன்!! அண்ணாத்தை நீங்க சொல்லுங்களேன் :-)

நடமாடும் புகை போக்கிகள் அதான் சிகரெட் பிடிக்கிறவர்கள் தங்களோட வீட்ல தனியிடத்துலயோ, இல்லைன்னா, மறைவா எங்கியாவதோ பிடிச்சா மத்தவங்களுக்குப் பிரச்சினையில்லை. அட்லீஸ்ட் வாங்குன கையோட கடை மறைவுல நின்னு கதையை முடிச்சுட்டுக் கிளம்புனாக்கூட தொந்தரவில்லை. ஆனா, இரு சக்கரத்துலயோ நாலு சக்கரத்துலயோ போற போக்குலயும், நடந்து போகறச்சயும் புகையை மத்தவங்களுக்கும் சப்ளை செய்யறவங்களை என்னன்னு சொல்றது. சிலருக்கு அந்த வாசனை விருப்பமானதா இருக்கலாம். ஆனா, ரோட்டுல குழந்தைகளும் நடமாடுது, அவங்களுக்கு இந்தப் புகை அலர்ஜியாக் கூட இருக்கலாம்ங்கறதையும் இவங்க யோசிக்கிறது நல்லது.

புகை பிடிக்கிறவங்களை விட அதைச் சுவாசிக்கிறவங்களுக்குப் பாதிப்பு கூடுதல்ன்னு கண்டு பிடிச்சிருக்காங்க. சமீபத்தில் பையருக்கு உடம்பு சரியில்லாம மருந்து வாங்கப் போயிருந்தப்ப, கடையில் ஒரு குடும்பம் நின்னுட்டிருந்தது.கடைப்பையரும் அவங்க குடும்பமும் நண்பர்கள் அதனால மனசு விட்டுப் பேசிக்கிட்டிருந்தாங்க. கசமுசன்னு கடைப்பையன் கிட்ட பேசிக்கிட்டு இருந்ததைக் கவனிச்சதும் காதை அந்தப் பக்கம் அனுப்புனேன். ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகியிருக்கும் அவங்களோட மூத்த பையருக்கு கான்சராம். கல்யாணம் நிச்சயமாகி ஒரு மாசமே ஆகியிருந்த நிலையில் ரொம்ப சீரியஸான கட்டத்துல அட்மிட் ஆகியிருக்கார். ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லாத அவருக்கு, செயின் ஸ்மோக்கரான அவங்கப்பா மூலமா கான்சர் பரவியிருக்குது. பாதிக்கப்பட்ட பையருக்கு வயசு இருபத்தஞ்சைக் கூட தாண்டலைங்கறதுதான் கொடுமை.

சிகரெட்டை முடிச்சுட்டுக் கனிஞ்சுட்டிருக்கற துண்டை, அப்படியே வீசிட்டுப் போறவங்களையும் சொல்லணும். நம்ம நாட்ல கிராமங்கள்லயும், நகரங்கள்லயும் செருப்பில்லாம வெறுங்காலோட நடக்குற நிலைமையில் இன்னும் கூட ஆட்கள் இருக்கத்தான் செய்யறாங்க. இங்கேயும் எத்தனையோ ஏழைக்குழந்தைகள் வெறுங்காலோட சிக்னல்கள்ல அங்கியும் இங்கியும் ஓடறதைப் பார்த்திருக்கேன். ஏதாவதொரு ஆட்டோ, அல்லது காரிலிருந்து விழும் கனல்துண்டு அதுங்க பாதத்தைப் பதம் பார்க்கவும் வாய்ப்பிருக்கே.

திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு நம்மூரு வாத்தியார் பாடி வெச்சது இங்கேயிருக்கும் Cancer Patients Aid Association- (சுருக்கமா)CPAA-க்கு எப்படித்தான் தெரிஞ்சதோ.. திருடங்களைத் திருத்தணும்ன்னா அதிர்ச்சி வைத்தியம்தான் சரிப்படும்ன்னு துணிஞ்சு இறங்கிட்டாங்க. மொதல்ல குறிப்பிட்ட சிகரெட் லைட்டர்தான் அந்த அதிர்ச்சி வைத்தியம். இது மின்சாரத்துல இயங்கறதால ஷாக் ட்ரீட்மெண்டுன்னும் இங்க்லீஷ்ல சொல்லிக்கலாம்.

மும்பையில் பான் கடைகள் ரொம்பவே பிரபலம். பான் வகைகளும், குட்கா போன்ற வஸ்துகளோட சிகரெட்டும் இருக்கும். இதான் சரியான களம்ன்னு களமிறங்கிய CPAA மும்பையில் மட்டும் மொத்தம் 25 இடங்கள்ல இந்த லைட்டர்களை கடைக்காரங்களோட அனுமதியோட வெச்சிருக்கு. நிறையப்பேர் இதை வெச்சுக்க எதிர்ப்பு தெரிவிக்கறாங்கதான். சரிதானே?.. தன்னோட காலைத் தானே கோடரியால வெட்டிக்க யாருக்குத்தான் விருப்பமிருக்கும்?. இதை வெச்சுக்க அனுமதிச்சா எங்க பொழைப்பு என்னாகறதுன்னு கேக்கறாங்க. உங்க பொழைப்புக்காக மத்தவங்க வாழ்க்கையில் விளையாடறது ஞாயமான்னு கேக்குற CPAA  இந்தத்திட்டத்தை கட்டாயமாக்க வேணப்பட்ட சட்ட பூர்வமான முயற்சிகளையும் எடுத்துட்டு வருதுன்னு இதோட இயக்குனர் தெரிவிச்சுருக்கார். கான்சருக்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் கிட்ட பரப்பும் முறைகளில் இந்தத் திட்டமும் ஒன்னு..

யூடியூப்ல ச்சும்மா வலை மேய்ஞ்சுட்டிருந்தப்ப கிடைச்ச புதையல் இது. மேற்கொண்டு தகவல் தேடுனப்ப இவங்களுக்குன்னு தளமும் இருக்கறதைக் கண்டு பிடிச்சேன். சேவைகள், கான்சருக்கான சிகிச்சை முறைகள்ன்னு ஒரு தகவல் சுரங்கமே இருக்குது அங்கே. லைட்டரோட ஸ்விட்சை அமுக்கினதும் எப்படி ஷாக் அடிச்சு, ஓரோருத்தரும் ஜெர்க்காகுறாங்கங்கறதை நீங்களே வீடியோவில பாருங்க ..

ஒரு சிலர் மட்டும் இந்த உச்சாடனத்தை தனக்கான எச்சரிக்கை ஒலிக்கிறதா எடுத்துக்கிட்டு , "இந்த சிகரெட் பழக்கம் இனிமேலும் அவசியமா"ன்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க. மத்தபடி மெஷினைக் கண்டு பின் வாங்குனாலும் சிகரெட்டை விடமுடியாத சிலர் வத்திப் பொட்டி கேக்க ஆரம்பிச்சுருக்காங்களாம். இன்னும் சில துணிஞ்ச மனசுள்ளவங்க அந்த லைட்டரைத் தைரியமா உபயோகப் படுத்தறாங்களாம். வழக்கமா அரசாங்கம், ஜோரா ஆரம்பிச்சு ஆரம்ப ஜோர்ல கொண்டாடப்பட்டு, கடைசியில காயலாங்கடைக்குப் போற நல்ல திட்டங்கள் மாதிரி இல்லாம, பொது நல சேவை மனப்பான்மையோட தனியார் ஆரம்பிச்சுருக்கும் இதுவாவது நீடிச்சு நின்னு நல்ல பலனைத்தரணும்..

இப்போ தீர்ப்பு மக்கள் கையில்....


Wednesday, 22 February 2012

அசலும் நகலும் - ஜோதிர்லிங்கங்கள் - 2


இரண்டாம் பாகம் தொடர்கிறது...

இராமநாதர்- இராமேஸ்வரம்- தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் என்ற தீவில் இருக்கும் இந்தக் கோயிலுக்குப் பாம்பன் பாலம் வழியாகச் செல்லலாம். மொத்தம் 36 தீர்த்தங்கள் கொண்ட, திராவிடக் கட்டடக் கலை முறையில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயிலின் பிரகாரங்கள் உலகப் புகழ் பெற்றவை.
தலவரலாறு: இராவணனை அழித்தபின் அயோத்தி திரும்பிக் கொண்டிருந்தபோது பிரம்மஹத்தி பாவத்தைப் போக்கிக் கொள்வதற்காகச் சிவபூஜை செய்ய நினைச்சார் ராமர். சிவலிங்கம் கொண்டு வரச் சென்ற அனுமன் திரும்பி வரத் தாமதமாகவே சீதா பிராட்டி தன் கையாலயே மணலைப் பிசைந்து லிங்கம் உருவாக்கினார். ராமர் அந்த லிங்கத்துக்குப் பூஜை செஞ்சதால் இங்கேயுள்ள சிவன் ராமலிங்கர் என்று நாமகரணம் சூட்டப்பட்டார். பிற்பாடு அனுமர் கொண்டு வந்த லிங்கமும் இங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு காசிலிங்கம், அனுமன்லிங்கம் என்ற பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. இங்கே கடலாடிப் பாவங்களைப் போக்கிக் கொள்ள உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள். இந்தியாவைப் பொறுத்த மட்டில் காசி-ராமேஸ்வரம் இரண்டுமே முக்கியமானவை. காசியிலிருந்து ஆரம்பிக்கும் தலயாத்திரை ராமேஸ்வரம் வந்து ராமலிங்கத்தைத் தரிசித்துக் கங்கை நீரால் அபிஷேகம் செய்தால்தான் முழுமை பெறும். இங்கேயிருந்து ஆரம்பிக்கும் யாத்திரைக்கும் அப்படியே.

கேதார்நாத்-கேதார்-உத்தராகாண்ட்
ருத்ர இமயமலைப் பகுதியில், மந்தாகினி நதி தீரத்திலிருக்கும் கேதார் மலையுச்சியில் இந்தக் கோயில் இருக்கிறது. இங்கிருக்கும் பருவ நிலை காரணமாக ஏப்ரலிலிருந்து நவம்பர் வரை மட்டுமே இந்தக் கோயில் திறந்திருக்கும். மற்ற மாதங்களில் இந்தக் கோயிலின் பூசாரிகள் உகிமந்த் என்ற இடத்துக்குப் போய் அங்கிருந்து பூஜையைத் தொடருவார்கள். இந்தக் கோயிலுக்கு கௌரிகுண்ட் என்ற இடத்திலிருந்து மலையேறித்தான் போக வேண்டும். கேதார் நாத் யாத்திரை போகும் புனித யாத்திரீகர்கள் கங்கோத்ரியிலிரிந்து கங்கை நீரையும் யமுனோத்ரியிலிருந்து யமுனை தீர்த்தத்தையும் கொணர்ந்து கேதார நாதருக்கு அபிஷேகம் செய்வார்கள்.
தலவரலாறு: நர-நாராயணர்களின் தவத்தை மெச்சி அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி ஜோதிர்லிங்கமா இங்கே கோயில் கொண்டார். இந்தக் கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டதா சொல்லப்படுகிறது, அர்ஜூனன் தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்றது, திரௌபதி கேட்ட கல்யாண சௌகந்திகம் என்ற பூவைக் கொண்டு வரக் கிளம்பிப்போன பீமன் முதன் முதலா அனுமனைச் சந்தித்தது, ஈசனின் இடப்பக்கம் கேட்டு பார்வதி தவம் செய்து அர்த்தநாரீஸ்வரர் ஆனது என்று இங்கே நடந்ததாகச் சொல்லப்படும் புராண விஷயங்கள் ஏராளம்.

காசிநாதர்- காசி- உத்தரப்பிரதேசம்
இந்துக்களோட வழிபாட்டுத் தலங்களில் காசி ரொம்ப ரொம்ப முக்கியமான இடம். இங்கே இறப்பவர்களில் காதுகளில் அந்த சிவனே தாரக மந்திரத்தை உச்சரித்து நேரடியாகச் சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கிறதாக ஐதீகம்.
தலவரலாறு: தன்னுடைய முன்னோர்களுக்கு முக்தியளிக்கும் பொருட்டுத், தவம் செய்த பகீரதனுக்காக ஆகாயகங்கையைத் தன் முடிமேல் தாங்கிப் பூலோகத்துக்குக் கொண்டுவந்த இறைவன் இங்கே கோயில் கொண்டிருக்கிறார். அசலான கோயில் 1490-ல் முதன்முறையாகக் கட்டப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், தொடர்ந்த படையெடுப்புகள் மற்றும் கொள்ளையடிப்புகள் காரணமாகப் பலமுறை அழிக்கப்பட்டது. இந்தோரைச் சேர்ந்த ராணி அகல்யா பாய் ஹோல்க்கரின் கனவில் வந்து சிவன், தன்னுடைய கோயிலைச் செப்பனிடுமாறு கட்டளையிடவே 1777-ல் உண்மையான விசுவநாதர் ஆலயத்திலிருந்து சற்றுத் தொலைவில் தற்போதிருக்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

த்ரம்பகேஷ்வர்-த்ரிம்பாக்-மஹாராஷ்ட்ரா
மஹாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரிலிருந்து 28 கி.மீ தொலைவில் த்ரிம்பாக் என்ற நகரில் இக்கோயில் அமைந்திருக்கிறது. கோதாவரி ஆறு இங்கிருந்துதான் பாயத்தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இறைவன் மும்மூர்த்திகளின் முகங்களுடன் அமைந்திருப்பது சிறப்பு. பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இக்கோயில் முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டிருப்பது சிற்பக்கலையின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.
தலவரலாறு: ஒரு சமயம் கௌதம முனிவர் தன் மனைவி அகல்யாவுடன் இங்கே வசித்து வந்தார். வருணபகவானின் அருளால் அவருக்குக் கிடைத்த அட்சய பாத்திரத்தைக் கண்டு பொறாமையுற்ற மற்றவர்கள் தவ வலிமையால் ஒரு பசுவை உருவாக்கி அது கௌதம முனிவரின் தோட்டத்தில் மேயும்படிச் செய்தனர். கௌதம முனி ஒரு தர்ப்பைப்புல்லால் அதை விரட்டவே, அது அங்கேயே இறந்தது. பசுஹத்தி செய்த பாவத்தைப் போக்க கௌதம முனிவர் சிவபெருமானிடம் ஆகாய கங்கையை வேண்டவே கங்கை ஆசிரமத்துக்கு வந்து தன்னுடைய நீரால் பாவத்தைப் போக்கினாள். கங்கை மற்றும் முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமானும் மற்ற கடவுளரும் அங்கேயே தங்குவதாக அருள் பாலித்தனர். பன்னிரண்டு வருடங்கள்க்கு ஒரு முறை இங்கே நடைபெறும் கும்பமேளா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரம்மாவும் விஷ்ணுவும் இறைவனின் அடிமுடி தேடியபோது அடிமுடியில்லா பிழம்பாய் ஐயன் நின்றதும் இங்கேதான் என்றும் ஒரு கதை உலவுகிறது.

நாகேஸ்வர்-த்வாரகா-குஜராத்
குஜராத் மாநிலத்தின் சௌராஷ்ட்ரா பகுதியில் அமைந்திருக்கும் இக்கோயிலின் இறைவனான நாகேஸ்வரரை வழிபட்டால் விஷப்பூச்சிகளின் விஷங்கள் அண்டாது என்று நம்பப்படுகிறது. கோமதி த்வாரகாவிலிருந்து வைத் த்வாரகா செல்லும் பாதையில் இக்கோயில் உள்ளது.
தலவரலாறு: தாருகாசுரன் என்பவன் சிவ பக்தையான சுப்ரியாவைச் சிறையெடுத்துப் பாம்புகளின் நகரமான தாருகாவனத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தினான். பாசுபதாஸ்திரத்தால் அவனை அழித்துத் தன் பக்தையைக் காத்த இறைவன் தாருகாசுரனின் வேண்டுகோளுக்கிணங்கி இங்கேயே கோயில் கொண்டார். தன்னுடைய பெயரால் இத்தலம் வழங்கப்பட வேண்டும் என்ற தாருகாசுரனின் விருப்பத்துக்கிணங்க இத்தலம் நாக்நாத் என்று வழங்கப்படுகிறது.

க்ரிஷ்னேஷ்வர்-ஔரங்காபாத்-மஹாராஷ்ட்ரா
மஹாராஷ்ட்ராவின் அஜந்தா-எல்லோராக் குகைகளுக்கு அருகே இருக்கும் ஔரங்காபாதின் சமீபத்திலிருக்கும் தௌலதாபாதிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் வேருல் என்ற சிற்றூரிலுள்ளது இக்கோயில். இந்தக்கோயிலுக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயும், இந்தோர் ராணியான அகல்யா பாய் ஹோல்க்கரும் திருப்பணிகள் செய்துள்ளனர்.
தலவரலாறு: தனக்குக் குழந்தையில்லாதால் தன் தங்கை குஷ்மாவைத் தன் கணவன் சுதார்முக்கு திருமணம் செய்து வைத்தாள் சுதேஹா. மூத்த சகோதரியின் அறிவுரைப்படி தினமும்101 சிவலிங்கங்களைப் பூஜை செய்து அருகிலிருந்த நதியில் விட்டு வந்தாள் குஷ்மா. சிவனின் திருவுள்ளத்தால் அவளுக்கு ஒரு மகனும் பிறந்தான். முதலில் அன்புடனிருந்த சுதேஹா நாளடைவில் பொறாமையுற்று தன் தங்கையின் மகனைக் கொன்று நதியில் வீசிவிட்டாள். இரத்தத்துளிகளைக் கண்டு சந்தேகமுற்ற குஷ்மாவின் மருமகள் அது தன் கணவனுடையதுதான் என்று தெளிந்து தன் மாமியாரான குஷ்மாவிடம் முறையிடவே,  அவள் முதலில் வருத்தமுற்றாலும் பின் இறைவன் கொடுத்ததை அவனே எடுத்துக்கொண்டான் என்று தெளிந்தாள்.

எப்போதும் போல் பூஜை செய்த 101 சிவலிங்கங்களை நதியில் கரைப்பதற்காக எடுத்துச் சென்றபோது தன்னுடைய மகன் உயிர்பெற்று நதியிலிருந்து எழுந்து வருவதைக் கண்டாள். அவளுக்கு ஜோதிர்லிங்கமாகக் காட்சியளித்த இறைவன் அவளுடைய வேண்டுகோளுக்கிணங்கி சுதேஹாவை மன்னித்து அங்கேயே கோயில் கொண்டார். குஷ்மாவிற்கு அருளியதால் குஷ்மேஷ்வர் என்றும் நாமம் கொண்டார்.

டிஸ்கி: தனித்தனியாப் படிக்கறதை விட மொத்த ஜோதிர்லிங்கங்களையும் பத்தி ஒரே இடத்துல படிக்க முடிஞ்சா நல்லாருக்குமேன்னு நினைக்கிற நட்புகள்.. வல்லமையின் சுட்டியைச் சொடுக்குங்க.

LinkWithin

Related Posts with Thumbnails