வணக்கம்... ஹாய்... ஹலோ... நல்லாருக்கீங்களா?. சின்ன வெக்கேஷனா இருக்கும்ன்னுதான் நினைச்சேன்.. ஒரு லாங்ஹாலிடேயா ஆகிட்டுது.
அன்னிக்கு திடீர்ன்னு பயங்கரமா, புயல்மாதிரி காத்து வீச ஆரம்பிச்சுது.. தமிழ் நாட்டுல பயங்காட்டிக்கிட்டு இருந்த 'ஜல்' திசைமாறி இங்கே வீச ஆரம்பிச்ச மாதிரியானதொரு காத்து.. 'தடால்'ன்னு ஒரு சத்தத்தோட பால்கனியில இருந்த பூந்தொட்டி கீழேவிழுந்து உடையுது. போயி சுத்தம் பண்ணலாம்ன்னா கண்ணாடிக்கதவை திறக்கமுடியாம அந்தப்பக்கமிருந்து பயங்கரமான வேகத்தோட வீசுது. ஒரு வழியா ரெண்டுமணி நேரத்துக்கப்புறம் ஓய்ஞ்ச பேய்க்காத்து, இண்டர்னெட்டுக்கான ஒயர்களையெல்லாம் பிடுங்கிப்போட்டுட்டு போயிருந்தது.
ஒருவழியா நாலஞ்சு நாளா போன்பண்ணி, அவங்க உசிரை வாங்கினப்புறம் ஆட்கள் வந்து சரி செஞ்சுட்டுப்போனாங்க. இந்த இடைவெளியில கம்ப்யூட்டருக்கு காய்ச்சல் வந்துட்டது. நெட் கனெக்ஷன் இருக்குது.. ஆனா, இல்ல. அதாவது லாகின் செய்ய முடியலை. safe modeல் மட்டும்தான் வலைதிறக்குது. டாக்டர் கிட்ட கொண்டுபோனாத்தான் சரியாகும் போலிருக்கு. ரெகுலரா வலைப்பக்கம் வரமுடியலை. சரி செஞ்சப்புறம் வழக்கமான அட்டெண்டென்ஸ் தொடரும்.
*************************
இந்ததடவை பிட்போட்டியில் முதல்முறையாக என்னுடைய பங்களிப்பு இரண்டாம் இடத்தை வென்றுள்ளது.. வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி..
*************************
இந்த இடுகையை ஞாபகமிருக்கா... சாக்லேட் என்றபெயரில் அல்வா கொடுப்பதைப்பத்தி எழுதியிருந்தேன்.. நாம கொடுத்தாலும் வாங்குறாங்களான்னு பரிசோதிச்சு பார்க்கணும்ன்னு ரொம்ப நாளா வாய்ப்பு தேடிக்கிட்டிருந்தேன். சோதனையா, பர்சிலிருந்து காசை எடுக்கிறப்ப அம்பது காசு நாணயமும் சேர்ந்து வந்துடும்.. பிறகென்ன?? சாக்லெட் கொடுக்க வாய்ப்பே இல்லாம இருந்திச்சு.
போனவாரம், ஷாப்பிங் போனப்ப , பில்லை மானிட்டரில் பார்த்ததுமே சாக்லெட்டை எடுத்து ரெடியா வெச்சுக்கிட்டேன். ரெண்டு ரூபா அம்பது காசு இருக்குமான்னு கேட்டப்ப, ரெண்டு ரூபாய் நாணயத்தையும், அம்பது காசுன்னு சொல்லி சாக்லெட்டையும் கொடுத்தேன். மறுபேச்சு பேசாம வாங்கிப்போட்டுக்கிட்டார் பணியாளர். ஹைய்யா!!, வெற்றி..
*************************
ஒரு நாள் மார்க்கெட்டுக்கு போயிட்டு வீட்டுக்கு வரும்போது, சுமைகள் கூடிப்போனதால் ஆட்டோவில் போயிடலாம்ன்னு தோணிச்சு. அங்கே நின்னுக்கிட்டிருந்த ஆட்டோக்காரர் கிட்ட, வாடகையை விசாரிச்சப்ப முப்பது ரூபாய் ஆகும்ன்னார். ஷாக்காயிட்டேன்.. "இங்கே, பக்கத்துல இருக்கிற இடத்துக்கு முப்பது ரூபாயா??.. அதுவுமில்லாம, வரும்போது இருபது ரூபாய்தானே கொடுத்தேன்"ன்னு கேட்டப்ப,
அமைதியா சொன்னாரு..."கூடை வெச்சிருக்கவங்களுக்கெல்லாம் முப்பது ரூபாய்தாங்க"
"என்னாது!!"
"நெசமாத்தாங்க.. பாக்கெட்டுகளை இங்கியே விட்டுட்டு வர்றதாயிருந்தா இருபது ரூபாய்க்கே சவாரி வரும்"
(அப்ப, லக்கேஜு கிட்ட அட்ரஸை சொல்லிட்டா, தானாவே வீட்டுக்கு நடந்து வந்துடுமா......... டவுட்ட்ட்ட்ட்டு) , -- எனக்குத்தான்.
போய்ய்ய்ய்யான்னுட்டு அடுத்தாப்ல நின்னுட்டிருந்த ஆட்டோவுல இருபது ரூபாய் கொடுத்து வீடு வந்து சேர்ந்தோம். ஆட்டோவுல வரும்போது நினைச்சு நினைச்சு ஒரே சிரி.... நாங்க பேசிக்கிட்டதை, மொழிபுரியாததால மௌனமா கேட்டுக்கிட்டிருந்த அம்மாகிட்ட வீட்டுக்கு வந்ததும் நடந்ததை சொன்னேன். பசங்களும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. என்னோட இருபத்தோரு வருஷ மும்பை வாழ்க்கையில், இதுவரை லக்கேஜுக்கு பணம்கேட்ட ஆட்டோ ட்ரைவரை பார்த்ததேயில்லை. குறையை தீர்த்துவெச்ச இறைவனுக்கு நன்றி :-)












