என் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' என்னை இங்கே கொண்டாந்து நிறுத்திட்டுது. ரொம்ப ஆசைப்பட்டு தேடி வாங்கிய புத்தகமாக்கும். படிச்சிட்டு இருக்கையில,.. எச்சில் ஊறவைக்கும் ஒரு செய்யுள்;
'அவியல் பொரியல் துவையல் தீயல்
பச்சடி தொவரன் கிச்சடி சட்டினி
சாம்பார் கூட்டுத் தயிர்ப்புளி சேரி
சேனை ஏத்தன் சேர்த்தெரி சேரி
பருப்பு பப்படம் பாயசம் பிரதமன்
பழமிவை யோடு படைப்புப் போட '
இத்தனை கறிவகைகளும், ஓணம்,விஷூ, பொங்கல், புத்தரிசி பொங்குதல், பின்னே ஒரு நல்ல நாள், பெரிய நாள்கள்ல செய்றது உண்டு. இதுல,..நாடு முழுக்க தேடுனாலும் சரி.. நாஞ்சில் நாட்டு அவியலுக்கும், எரிசேரிக்கும் உள்ள ருசி வேற எங்கியும் கிடைக்காது. பின்னே, இப்ப ஓணம் வேற வருதா, கடைகள்ல அதுக்குண்டான கறிகாய்களும் கிடைக்குது. செஞ்சு பார்த்து ருசியுங்க.
1.கால் கிலோ சேனையை செதுக்கி வெச்சுக்கணும். கவனிக்க: நறுக்கச்சொல்லல. ஒரு ஓரமா ஆரம்பிச்சு,சேனையை உருட்டி, உருட்டி... அப்படியே சின்னச்சின்ன துண்டுகளா செதுக்கிக்கிட்டு வரணும். துண்டுகள் சின்ன பிரமிட் மாதிரி (முக்கோண சைஸ்ல) தானாவே வரும். இதை ஒரு பாத்திரத்துல தண்ணியில போட்டு வைக்கணும். இதே போல ஒரு ஏத்தங்காயையும் செதுக்கி தனியா, தண்ணியில போட்டு வைக்கணும்.
2. அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் நல்லமுளகு ரெண்டையும் உடைச்சு வைக்கணும்.
3. ரெண்டு கப் தேங்காப்பூவை எடுத்துக்கணும். அதுல ஒரு கப் தேங்காப்பூவை முக்கால் டீஸ்பூன் மிளகாய்ப்பொடியோட சேர்த்து, பட்டுப்போல அரைச்சு வைக்கணும். மிச்சமிருப்பதை, மிக்ஸியில லேசா, சதைச்சாப்ல சுத்தி எடுக்கணும். இது எதுக்குண்ணாக்க ,.. தேங்காப்பூ, எரிசேரியில கொத்துக்கொத்தா இருந்தா, பல்லுல மாட்டும் மக்ளே :-))).
இப்பம், சேனையை அடுப்புல வெச்சு, தண்ணி ரெண்டு கொதி வரும்வரை சூடாக்கணும். பின்னே, அந்த தண்ணிய இறுத்து எடுத்துட்டு, சேனையை பின்னேயும் ரெண்டு கப் நல்ல தண்ணியில வேகவிடணும். (இது எதுக்குண்ணாக்க,.. சேனையை அப்படியே சமைச்சா, சாப்பிடும்போது, தொண்டையில் கிச் கிச் வரும்).இப்போ இதுகூட, வாழைக்காயை கழுவிப்போடணும்.
இப்பம், மஞ்சப்பொடி, உடைச்ச முளகுப்பொடி.. இது ரெண்டையும் காய்க்கலவையில போட்டு கொதிக்கவிடணும். மறக்காம காய்க்குண்டான உப்பையும் போடணும். அரை வேக்காடு ஆனபின்னே, அரைச்ச தேங்காய்க்கலவையை போடணும். தானமா, தண்ணியையும் சேர்த்துக்கணும். ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணையை அதுல விட்டு நல்லா வேகவிடணும்.
இப்பம், ஒரு சின்ன சீனிச்சட்டியில(வாணலி)ரெண்டு ஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பின்னே, சதைச்சு எடுத்துவெச்ச தேங்காய் எல்லாத்தையும் போட்டு, தேங்காய் நல்லா சிவந்து வர்றவரை கிண்டணும். கருகிறக்கூடாது. இதை கொதிச்சுக்கிட்டு இருக்கிற எரிசேரிக்கலவையில ஊத்தி, கிளறிவிடணும். பின்னேயும் கொஞ்ச நேரம் கொதிக்கட்டும். எரிசேரி லேசா குழைஞ்சாப்ல இருக்கணும். உப்பு உறைப்பு சரியா இருக்கான்னு சரி பார்த்துக்கோங்க. இப்பம் கடைசியா அரைடீஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டு , ஒரு இணுக்கு கறியப்பிலையையும் உருவிப்போட்டு மூடிவிடணும். அவ்வளவுதான்.. எரிசேரியை இறக்கிடலாம்.
***************
இப்பம்.. அவியல் செய்யலாம்:
தேவையானவை:
சீனியவரைக்காய் - 100 கிராம்.
சேனை - கால்கிலோ.
முருங்கைக்காய் - 1
பேயன் அல்லது சிங்கன் வாழைக்காய் - 1 ( நாட்டு வாழைக்காய்ன்னும் சொல்லுவாங்க )
கத்தரிக்காய் - 2.
புடலங்காய் - சுமார் நாலு இஞ்சு நீளத்துக்கு.
வழுதலங்காய் ( நீளமாக இருக்கும் பச்சைக்கத்தரிக்காய் - 1
வெள்ளரிக்காய் - சின்னத்துண்டு.
தடியங்காய் - சின்னத்துண்டு ( வெள்ளைப்பூசணியைத்தான் சொன்னேன் :-))))
கோவைக்காய் - 5 எண்ணம்.
மாங்காய் - பாதி.
மசாலாவுக்கு:
தேங்காய் - 1 மூடி.
பச்சைமிளகாய் - 3
சீரகம் - அரை டீஸ்பூன்.
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை.
எப்படி செய்யணும்????
சீனியவரைக்காய், சேனை ரெண்டையும் ஒண்ணரை அங்குல நீளத்துண்டுகளா அரிஞ்சு, தனித்தனி கிண்ணங்கள்ல போட்டு வைக்கணும்.
முருங்கைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், வழுதலங்காய், சிங்கங்காய், (நெல்லை மண்ணில் இதை படத்திக்காய்ன்னு சொல்லுவாங்க) முதலான எல்லாக்காய்களையும் ஒன்னரை இஞ்சு நீளத்துக்கு மெல்லிசா நறுக்கிவைக்கணும்.
மசாலாவை, ஒன்னுரெண்டா சதைச்சு வைக்கணும்.
மொதல்ல, ஒரு வாணலியில ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டு அதுல, சீனியவரைக்காயைப்போட்டு லேசா நிறம் மாறும்வரை வதக்கணும். அப்புறம் ஒரு கப் தண்ணீர் விட்டு, அதனுடன் சுத்தம் செஞ்ச சேனையை போடவும். லேசா கொதிவந்ததும் இறக்கி, தண்ணீரை வடிச்சுட்டு, நல்ல தண்ணியில ரெண்டு தடவை அலசி, தண்ணீரை இறுத்துக்கணும்.
இன்னொரு பாத்திரத்தில் எல்லாக்காய்களையும், சுத்தம் செஞ்சு போட்டு, அரை டீஸ்பூன் உப்பிட்டு வேகவைக்கணும்.இதோட சேனை, சீனியவரையையும் சேருங்க. காய்களிலிருக்கும் தண்ணீரே போதுமானது. தேவைப்பட்டா ரெண்டு ஸ்பூன் தண்ணீரை மருந்து மாதிரி விடணும். அதுக்கு மேல விட்டா குழம்பாயிடும். அவியல் செஞ்சு முடிக்கிறவரை, அடுப்பு மிதமாவே எரியட்டும்.
மாங்காய் கல்லுப்போல இருந்தா, எல்லாக்காய்கறிகளோடவே போட்டுடலாம். கொஞ்சம் பிஞ்சா இருந்தா, மசாலா போடும்போது சேர்க்கலாம். மாங்காய் போடுறதா இல்லைன்னா, ரெண்டு ஸ்பூன் தயிரைச்சேருங்க. ஏன்னா காயில் லேசா புளிப்பு வரணும்.
முக்கால் வேக்காடு வந்ததும், அரைச்சு வெச்சிருக்கிற மசாலாவை காய்களோட சேர்த்து, இன்னொரு அரைஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணெய், உருவிய கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து லேசா கிளறி, மூடி போட்டு வைச்சிடுங்க. அவியல்ல இருக்கிற காய் நல்லா வெந்தப்புறம், இறக்கி ஆறினபிற்பாடு ரெண்டு ஸ்பூன் தயிரைவிட்டு லேசா கலந்துடுங்க. சூடா இருக்கும்போது தயிரை சேர்த்தா, நீர்த்துப்போயிடும்.. அவியல் நல்லாருக்காது . கவனமா இருங்க.அவ்வளவுதான்... அவியல் மணம், சாப்பிடணும்ன்னு கொதியை உண்டாக்கும் :-))))))



.jpg)






