சிறுவயதில் இரவு மணி எட்டுக்குள்ளாக, ட்யூஷன்,வீட்டுப்பாடம் முடித்துவிட்டு,ஒன்பதுமணி வரை விளையாடினேன் என்ற பெயரில் தெருவில் ஆட்டம் போட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து அப்பாவுக்காக காத்திருப்போம், பன்மை விகுதி,என்னையும், மூன்று சகோதரர்களையும் குறிக்கும். இரவு சாப்பாட்டை எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டால்தான், எங்களுக்கு சோறு தொண்டையில் இறங்கும். சாப்பிடும்போதே, அன்றைக்கு பள்ளிக்கூடத்தில் நடந்ததை எல்லாம் ஒப்பிப்போம். அப்படியே, அன்று இரவு, என்ன கதை சொல்ல வேண்டும் என்பதை கோடிட்டு காட்டிவிடுவோம்.
அப்பா பெரும்பாலும் சொல்வது, பஞ்சதந்திரக்கதைகளை அடிப்படையாக கொண்டவையாக இருக்கும். ஒரு நாளில், ஒரே ஒரு கதையை கேட்டு விட்டு தூங்கி எங்களுக்கு பழக்கமில்லை. குறைந்தது நாலைந்து கதைகளாவது சொல்ல வேண்டும். அப்பாவும், பொறுமையாக சொல்வார்கள்.பெரும்பாலும் அவர் சொல்லும் கதைகளில், நரியும், காகமும் வந்துவிடும். எப்படியெல்லாம் உலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள் என்பதை கதைகளிலேயே உணர்த்தி விடுவார்.கதை எப்போது முடிந்தது என்பது தெரியாமலேயே நாங்கள் ஆளுக்கொரு பக்கமாய் சாய்ந்து தூங்கியிருப்போம். என் கடைசி தம்பிக்கு ,இரண்டரை வயது இருக்கும்வரை எங்கள் கதை நேரம் தடங்கலில்லாமல் நடந்தது.அதன்பிறகு, தனக்கு கதை சொல்ல ஒருவர் வேண்டும் என்பதற்காக கடவுள், அப்பாவை அழைத்துக்கொண்டு விட்டார். அதன் பிறகும், முன்பும் நான் வேறுயாரிடமும் கதை கேட்டதில்லை.. கேட்டதில்லை என்பதைவிட ரசிக்கவில்லை என்பது பொருந்தும்.
வாசிப்பது என்பது, எப்பொழுதும் என்னை, என் உலகத்துக்கு இட்டுச்செல்வதாகவே இருந்திருக்கிறது. இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது, குமுதம், விகடனை எழுத்துக்கூட்டி படிப்பதில் ஆரம்பித்தது, நாளடைவில் கதைப்பைத்தியமாகவே ஆகிவிட்டேன். அம்மா திட்டியதோ,டியூஷன் டீச்சரிடம் வத்தி வைத்து கண்டிக்க செய்வதோ, எதுவும், கதைப்புத்தகத்தை, பாடப்புத்தகத்தில் மறைத்து வைத்து படிக்க ஆரம்பித்த நிமிடத்தில் மறந்துவிடுவேன், இந்த உலகத்தையும் சேர்த்து.
நாளடைவில் பூந்தளிர் படிக்க கிடைத்தது. என் வாசிப்புத்தோழன் என் கடைசி தம்பிதான். கடையில் இருந்து வாங்கி வந்ததும், என் மடியில் அமர்ந்து கொண்டு,... வாசிப்போம். அப்போது அது மாதமிரண்டு முறை வந்து கொண்டிருந்தது, எட்டு ரூபாய் என்று நினைக்கிறேன்.காக்கை காளி,சமந்தகன், வேட்டைக்கார வேம்பு எல்லோரும் எங்கள் தோழர்கள். அதன்பின் champak,அம்புலிமாமா,என்று வளர்ந்து, சுஜாதா கதைகளை தேடிப்பிடித்து வாசிப்பதில் தீவிரமடைந்தது. எனது மாமா ஒருவர், அப்போது லைப்ரரி ஒன்றில் உறுப்பினராகியிருந்தபோது பாக்கெட் நாவல் அப்போதுதான் அறிமுகமான சமயம். ராஜேஷ்குமார் மட்டும்தான் அதில் எழுதிக்கொண்டிருந்தார். த்ரில்லர் கதைகளுக்காக விரும்பி படிப்பேன். வார இதழ்களில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களின் நாவல்கள், ஒவ்வொன்றாக படிக்க கிடைத்தது. ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது, வாசிக்கும் பழக்கம் வந்தது. பாடப்புத்தகங்கள் ஏற்றும் சுமையை, கொஞ்சம் இறக்கி வைக்க முடிந்தது.இப்போதும், சாப்பிடும்போது படிக்க ஏதாவது இருக்க வேண்டும். தவறென்று தெரிந்தும் விட முடியவில்லை.
பள்ளியில் படிக்கும்போது, தமிழாசிரியர் கல்கியை அறிமுகப்படுத்தினார். சாண்டில்யனையாவது, சிலவார இதழ்களில் வாசிக்க கிடைத்தது. கல்கியை வாசிக்க கல்லூரி வரை காத்திருக்க வேண்டி வந்தது. எங்கள் கல்லூரியில், ஒவ்வொருவருக்கும் இரண்டு டோக்கன்கள் கொடுப்பார்கள். அதாவது ஒரே நேரத்தில், இரண்டு புத்தகங்கள் எடுக்க அனுமதி.படித்து விட்டு திருப்பிக்கொடுக்கும்போதுதான் அடுத்த புத்தகம் கிடைக்கும்.கோ-எஜூகேஷன் ஆதலால் வாரத்தில் செவ்வாய், வெள்ளி மட்டும்தான் பெண்கள் லைப்ரரிக்கு செல்ல அனுமதி உண்டு.பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும் எத்தனைமுறை வாசித்திருப்பேன் என்று நினைவில்லை. இப்போதும் அடிக்கடி சென்னை லைப்ரரி. கொம் சென்று வாசிப்பேன். தமிழாசிரியர் மெர்க்குரிப்பூக்களைப்பற்றி சொன்னதிலிருந்து, பாலகுமாரன் அறிமுகமானார்.ஜெயகாந்தனின் எழுத்துக்களை தேடித்தேடி படித்ததுண்டு.சிவசங்கரி எழுதியதில், நண்டு எனக்கு பிடிக்கும், இன்னொரு நாவலான 'குட்டி' திரைப்படமாகக்கூட வந்தது. சுஜாதாவின்,' கரையெல்லாம் செண்பகப்பூ' எங்கள் லைப்ரரியில் ஒரு நாளும் இருந்ததில்லை. எப்போது கேட்டாலும் யாராவது எடுத்துப்போயிருப்பதாகத்தான் பதில் வரும். காத்திருந்தே மூன்று வருட படிப்பும் முடிந்துவிட்டது. கடைசியில்,திரைப்படமாக பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டேன்.
வாசிப்பை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு தோழியர் வட்டம் இருந்ததில்லை.சின்னத்திரையில் வரும் ஹீரோக்களை விமர்சிக்கும் அளவுக்கு நான் டி.வியும் பார்ப்பதில்லை.எனவே, என்வழி எப்போதும் தனிவழியாகவே இருந்து வந்தது.தமிழுக்கும், ஆங்கிலத்துக்கும் துணைப்பாடம் என்று ஒன்று உண்டு. கதைகள்,கட்டுரைகள் என்று சுவாரஸ்யமாக இருக்கும். அதையெல்லாம் ஒன்று விடாமல் சேர்த்து வைத்திருக்கிறேன். என்பையருக்கும் அதெல்லாம் மிகப்பிடித்தமானவை. அதில்.Around the world in 80 days அவருக்கு ரொம்ப பிடிக்கும். அன்னை தெரசாவின் வாழ்க்கைக்குறிப்பை அவருக்கு வாசித்துக்காட்டியிருக்கிறேன்.
என் குழந்தைகளுக்கும், சிறுவயதிலிருந்தே கதைகள் சொல்வேன். "யாம்பெற்ற இன்பம் பெறுக என்மக்களும்". பையர், எனக்கு மேல் கதைப்பைத்தியம்.தூங்கும்போது, குளிப்பாட்டும்போது, ஸ்கூலில் கொண்டு விடச்செல்லும்போது, என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.சாப்பிடும்போது இருவருக்கும் ஒரே தட்டில், பிசைந்து ஊட்டிக்கொண்டே கதை சொல்வேன். கதையின் சுவாரஸ்யமோ, சமையலின் அருமையோ ஏதோ ஒரு காரணம்.. சாப்பிட ஒன்றரை மணி நேரமாவது ஆகும் :-D.
பசங்கள் அவர்கள் ஸ்கூல் லைப்ரரியிலிருந்து, எனக்காக ஏதாவது புத்தகங்கள் கொண்டு வருவார்கள். சில சமயம், அவர்களுக்கு கதை சொல்ல உதவியாகவும், அது இருந்ததுண்டு. ஹாரிபாட்டர் எனக்கும் விருப்பமுண்டு. ஒவ்வொரு பாகத்தையும் கொண்டு வந்த அன்றே ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டு, பையர் படித்து முடிக்கும் வரை நகம் கடித்துக்கொண்டிருப்பேன். அவர் படித்துவிட்டு திருப்பிக்கொடுத்தால்தான் அடுத்த புத்தகம் கிடைக்கும்.அப்போதெல்லாம் லைப்ரரி டீச்சர்.. அவரைபார்த்தாலே,'அந்த பெரிய,பெரிய புக்கெல்லாம் கொண்டு போவானே.. அந்தப்பையன்' என்ற ரீதியில்தான் ஞாபகம் வைத்திருந்தார்.
இப்போதைய குழந்தைகளுக்கு,கதை சொல்ல தாத்தா, பாட்டிகள் இல்லை,.. இருந்தாலும் அவர்களுக்கு நேரமில்லை. சீரியல்களில் அவர்களும் மூழ்கி விட்டார்கள்.குழந்தைகளுக்கு வாசிக்க நல்ல தளங்கள் இருக்கின்றன. இணையம் மட்டுமின்றி,அச்சில் வரும் எழுத்துக்களையும் அவர்கள் வாசிக்க, ஊக்குவிக்க வேண்டும்.புத்தகத்தின் வாசனை கணினித்திரையில் வருவதில்லை.எங்கள் குழந்தைகளின் பள்ளியில் ஒரு நல்ல விஷயம், வருடா வருடம் ஏதாவது ஒரு புத்தகக்கடை, அங்கே புத்தக கண்காட்சி நடத்தும். பசங்கள் விரும்பிய புத்தகங்களை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். டிஸ்கவுண்ட் இருப்பதால் பெற்றோர்களும் சந்தோஷ்மாக வாங்கிக்கொடுப்பார்கள்.
இங்கே, crosswords-ல் அருமையான புத்தகங்கள் கிடைக்கும். The da-vinci code-ன் தாக்கத்தால் அதன் அடுத்த பாகமான, Angels and demons ம் வாசித்தாயிற்று. அடுத்த பாகங்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கின்றன.பெண்ணுக்கு வாசிக்க பொறுமை கிடையாது.ஆனாலும் எனக்காக ஒரு புத்தகம் கொண்டு வந்தாள். ஹிட்லரின் நாஜிப்படைகளின் அட்டகாசத்திலிருந்து தப்பிப்பிழைத்த ஒரு பெண் எழுதிய,The diary of Anne Frank என்ற புகழ்பெற்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகளை 'Holocaust' என்ற தலைப்பில் இன்னொரு சிறுபுத்தகமாக வெளியிட்டிருந்தார்கள்.அவர், தான் கண்ட, கேட்ட கொடுமைகளைப்பற்றி எழுதியிருந்தார். ஒருவீட்டின் மேல்மாடியில், இருவருடம் தங்கியிருந்த குடும்பத்தினரைப்பற்றிய பகிர்வு, கல்மனதையும் கரையச்செய்யும்.
படித்துவிட்டு சத்தியமாக, நிம்மதியாக இருக்க முடியாது.
பெண்ணுக்கு இப்போதுதான் வாசிக்க, கொஞ்சம் ஆர்வம் வந்திருக்கிறது. Jeffry Archer எழுதிய The eleventh commandment ஐ இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். எப்படியும் இரண்டு வருடங்களில் வாசித்து முடித்து விடுவேன் என்றிருக்கிறார்... :D
கதைகள் கேட்ட, வாசித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் தொடர் பதிவுக்கு அழைத்த அம்பிகாவுக்கு நன்றி.
மன்னிக்கவும். அவசரத்தில் நானும், மற்றவர்களை மாட்டிவிட விட்டுப்போய்விட்டது. வாங்க சந்தனமுல்லை, புதுகைத்தென்றல், L.K.


