Sunday, 14 February 2010

அன்பெனும் மழையில்...happy valentine's day

உனக்கான என்னை
நீயும்
எனக்கான உன்னை
நானும்
கண்டு கொண்டதில்
ஆரம்பித்தோம்
நமக்கான நாம்.

**********************

ஊடலுக்குப்பின்
காதல்
இது பழமொழி
ஊடலுக்குப்பின்
ஊடல்
இது
காதலர் மொழி

**********************

இன்னும்
எத்தனைமுறை வேண்டுமானாலும்
விழுவேன்
தாங்கிக்கொள்ள
உன் கரம் இருந்தால்.

**********************

தினமும் பார்த்துக்கொள்ளவில்லை
பரிசுகள் என்னும்
உரமிடவுமில்லை
ஆனாலும் செழிக்கிறது
நாம் வளர்த்த பயிர்
அன்பெனும் மழையில்.

**********************
உன் கூந்தலில்
ரோஜாவை சூட்டியதால்
மற்ற மலர்களெல்லாம்
நிறமிழந்து போயின.
உன் கூந்தல் வாசத்தின் முன்
ரோஜாவோ
வாசமிழந்து போனது.

**********************

காதலர்களுக்குத்தான்
காதலர் தினம்
நமக்கெதற்கு!!!!
நாம்தான் தினம் தினம்
உயிர் வாழ்கிறோமே!!!
காதலை சுவாசித்து.

Friday, 12 February 2010

சிவராத்திரியில் அம்மன் தரிசனம்

வாக்கு கொடுத்தா, நிறைவேத்தணுமா இல்லையா?...கொடுத்த வாக்கை காப்பாத்தறதுதானே மனுஷத்தனம்.

சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி இருந்தா என்னப்பா செய்றது?

'சந்தர்ப்ப சூழ்நிலையை ஃபேஸ் பண்றவந்தான் மனுஷன்'... திரிசூலம் சிவாஜி டயலாக்க எடுத்து விட்டதும் மனசாட்சி அடங்கிப்போச்சு.

அம்மாவை பாக்க வரேன்னு, நேத்து வாக்கு கொடுத்திட்டு வந்தேனில்லையா..கெளம்பிட்டேன்.

ஏதோ ஒரு தெரு வழியா ஆட்டோ போய்க்கிட்டு இருக்கு.அப்ப கண்ணுல பட்டது அந்தக்கோவில். ஆட்டோவை வெயிட்டிங்கில் போட்டுட்டு,உள்ளே போனோம். நம்ம நேரத்தை பாருங்க. நடை சாத்திட்டு பட்டர் அப்பத்தான் வெளியே வந்துட்டு இருக்கார்.அதேதான்... பெருமாள் கோவில்தான்.'அழகியமன்னார் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி' என்ற திருநாமம்.
சாயந்திரம் ஆறுமணிக்கு நடை திறப்போம், கண்டிப்பா வாங்க..இவரை மாதிரி ஆஜானுபாகுவானவரை நீங்க பாத்திருக்க மாட்டீங்கன்னார். கோவில் புதுப்பொலிவுடன் இருக்கு. ஐநூறு வருடங்களுக்குப்பின் கோவில் கும்பாபிஷேகம் நடந்திருக்காம்.கிருஷ்ணர் மேய்ச்சலுக்கு கூட்டிக்கொண்டு போவார்ன்னு எதிர்பார்த்தோ என்னவோ,பக்கத்திலேயே நிறைய பசுக்கள்.கோசாலையா இருக்குமோன்னு கேட்டால் இல்லையாம். வந்ததுக்கு கோபுர தரிசனமாவது கிடைச்சுதே.



கோபுரத்தின் ஒரு தோற்றம்.

நெல்லையப்பர் கோவிலுக்கு போய் சேர்ந்ததும்,அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு,அம்மாவைப்பாக்கப்போனோம்.வெளிப்பிரகாரத்திலேயே,
பாதியில்இடதுபக்கம் திரும்புனா கோவிலுக்கு போகும் வழி. நாயக்க மன்னர்களின் சிலைகள் வரிசையா நின்னு,நம்மளை வரவேற்குது.கல்மண்டபத்தை கடந்ததும் வருகிறது அம்மனின் கோவில். முன்மண்டபமே மிரட்டுது. ஏகப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள். பாக்க ரெண்டு கண்ணு பத்தாது. சிகரம் வெச்ச மாதிரி ரெண்டு ஆஞ்சநேயர்கள் எதிரெதிரே நின்னுகிட்டு ஒருத்தரை ஒருத்தர் முறைச்சு பாக்கிறாங்க.என்ன கோபமோ!!!(வாலியும் சுக்ரீவனுமோன்னு நினைச்சேன். ஆஞ்சநேயர்தான்னு கோவிலில் பணிபுரியும் ஒருத்தர் சொன்னார்)

ஏனிந்த கோபம் ஐயா!!!
நேரே வந்து நின்னது அம்மன் சன்னிதியில். இங்கேயும் மூணு ரூபா கொடுத்தா.. அம்மனை அர்த்த மண்டபம் வரைக்கும் சென்று பாக்கலாம்.திரை போட்டு வெச்சிருக்காங்க. அலங்காரம் நடக்குது போலிருக்கு. அஞ்சு நிமிஷம் காத்திருந்தோம்.பரவாயில்லை... புழுக்கம் இல்லாமலிருக்க மின்விசிறிகள் இருக்குது.சரேல்னு திரை விலகினதும், பச்சைபார்டர், ஆரஞ்சு பட்டுப்புடவையில் அம்மனின் தரிசனம்.வலது பாதம் சற்றே தூக்கி, இடது பக்கம் ஒசிந்த நிலை. பிரசாதம் கொடுக்கும் போது எதிர்பாராவிதமா, அம்மன் கழுத்தில் இருந்த மாலை ஒன்னைக்கழட்டி பையர் கழுத்தில் போட்டு அர்ச்சகர் ஆசிர்வாதம் பண்ணினார்.அவளே வந்து ஆசிர்வாதம் செஞ்சமாதிரி மெய் சிலிர்த்துப்போய்விட்டது... தட்சணையெல்லாம் கேக்கலை.

உள் பிரகாரத்தில் சின்னச்சின்ன பல்லக்குகளில்,உற்சவர்கள்.சாயந்திரம் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழாவாம். ஏற்பாடுகள் பலமா நடந்திட்டிருக்கு.முன் மண்டபத்தில் ஏராளமான தொட்டில்கள், பிரார்த்தனைக்காக கட்டப்பட்டவை.இந்தியாவின் மக்கள் தொகை பெருகிட்டிருக்குன்னு கவலைப்பட்டுகிட்டு இருக்கும்போது இப்படியும் ஒரு நிலை இருக்கத்தான் செய்யுது, 'இல்லை ஒரு பிள்ளை என்று... ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே' ன்னு தானே கவியரசரும் பாடியிருக்கார்.முன் மண்டபத்தில் போட்டோ எடுக்க அனுமதி இல்லையாம். அம்மான்னாலே கெடுபிடி கொஞ்சம் ஜாஸ்திதான் போலிருக்கு. நான் காந்திமதி அம்மன் கோவிலைச்சொன்னேன்.

வெளியே வரும்போது நமக்கு வலதுபக்கம் ஆயிரங்கால் மண்டபம். பூட்டிவெச்சிருக்காங்க. உள்ளே கம்பிகளினூடே எட்டிப்பாத்தா, திருநெல்வேலி கோவிலின் சரித்திரம் சித்திரங்களாக. ஏழெட்டு வருஷம் முன்பு வந்தபோது, இன்னும் நிறைய கதைகளை உள்ளே போய் பார்த்த ஞாபகம். இப்போ அனுமதி இல்லையோ என்னவோ!!!!

உள்ளே கோவிலின் மாதிரி ஒன்னை செஞ்சு, கண்ணாடிப்பொட்டிக்குள்ள வெச்சிருக்காங்க.

அம்மன் சன்னிதியின் நேர் எதிரே இருக்கும் ஊஞ்சல் மண்டபத்தில் நிறைய யாளிகளின் சிற்பங்கள்.ஊஞ்சல் மண்டபத்தின் இடதுபுறம் அழகான பெரிய தெப்பக்குளம். தூத்துக்குடி மீன்வள ஆராய்ச்சிக்கல்லூரியின் பராமரிப்பில் இருக்குது.தண்ணீர்தான் கொஞ்சம் பரவாயில்லாம லேசா பச்சைப்பிடிச்சுஇருக்கு.

தெப்பக்குளம்.

இன்னொரு கோணத்தில்..
வெளிப்பிரகாரத்தில் அரசமர மேடையின் கீழே வரிசையா நாகர்கள்.ரெண்டு எட்டு எடுத்து வெச்சா கோவிலின் தலவிருட்சமான மூங்கில் புதர்மாதிரி வளந்து நிக்கிது.

தல விருட்சம்.

வெளிப்பிரகாரம் சுத்தி வந்துட்டு அப்படியே வெளியே வரவும் ,தனி வாசல் இருக்கு.திரும்பிப்போய் ஆறுமுகனை தரிசிச்சிட்டு,கோவில்யானை காந்திமதியை காணோமேன்னு தேடுனா, வெளியே போயிருக்காளாம். நிறைவான தரிசனம் கிடைச்ச மன நிறைவோட வீட்டுக்கு போக, ஆட்டோ நிறுத்துன இடத்துக்கு வந்தா, .... 'காந்திமதி'. ஓட்டமும் நடையுமா கோவிலுக்கு போய்க்கிட்டு இருக்கா. கேமிராவை ஆன் செய்றதுக்குள்ள கடந்துட்டான்னா பாருங்களேன்.என்ன அவசரமோ!!

இன்னிக்கு சிவராத்திரி. அம்மாவை தாஜா செஞ்சாலே,போதும்அப்பாவின்
கவனிப்பு நிச்சயம்.

ஒரு நாலு படங்கள் ஆல்பத்தில் கிடக்கு.

Wednesday, 10 February 2010

ஊஞ்சலாடும் வயசு..


அறியாத வயசு.. புரியாத மனசுன்னுதான் எல்லோரோட டீனேஜும் இருக்கும்.பயம்ங்கிறதே இருக்காது. தீக்குள் விரலை வெச்சா சுடும்ன்னு தெரிஞ்சாலும், எவ்வளவு சுடும்ன்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ணி பாக்கத்தோணும்.யாராவது எதையாவது தடுத்தா, அட.. இது நல்லாருக்கே!! செஞ்சு பாத்தா என்னன்னு தோணும்.

எனக்கு தெரிஞ்சதெல்லாம் 'ஒரு கைதியின் டைரி'யும், 'சி.பி.ஐ. டைரிக்குறிப்பு'ம்தான். மேலும், டைரில எழுதி வெச்சா,வெந்தணலில் வெந்து,வெள்ளம் கொண்டு போகும் அபாயம் இருப்பதால் பின்னாடி, பொன்னேடுகளில் பொறிச்சு வைரத்தால பதிச்சிக்கலாம்ன்னு விட்டுட்டேன்.(ஒருத்தரு கூட ஒரு டைரி வாங்கிக்கொடுத்து, எழுதிப்பொழைச்சிக்க...ன்னு சொல்லலை. அம்பிடுதேன்).

முகப்பரு வந்தா கவலைப்படாத டீனேஜர் உண்டா!!!!!.அப்போ கிளியர்சில் வந்த புதுசு..அஞ்சே ரூபாய்தான். வாரத்துக்கொரு டியூப் காலியாகியும், பருக்கள் ஜோக்குகளில் வரும் தலைதீபாவளி மருமகன் மாதிரி அசையாம இருந்தா,பச்சப்புள்ள மனசு என்ன பாடுபடும்.அதுக்கு செஞ்ச வைத்தியம் ஒன்னா ரெண்டா...முகத்துல அப்புன,கடலமாவ மிச்சம் பிடிச்சிருந்தா, நாலு ப்ளேட் பஜ்ஜியாவது செஞ்சு சாப்ட்ருக்கலாம்.

டைரியே கிடைக்கலைன்னு சொன்னேனில்லையா...எம்மேல பரிதாபப்பட்டு சித்தப்பா ஒரு டைரி கொடுத்தார். அவ்வளவுதான்... ரொம்ப நாளைக்கு அதை பொன்னே.. பூவேன்னு வெச்சிருந்தேன். எதுவும் எழுதுறதில்லை. எப்பவாச்சும் தோணினா, நாலு வரி கிறுக்குவேன். அதனால, அதை மறைச்சு வெக்கணும்ன்னு தோணல்லை.ஆனா,கொஞ்ச நாளா அதை யாரோ படிக்கிறாங்கன்னு கண்டுபிடிச்சேன்.வெச்ச இடம் மாறுதே!!!! அப்புறம்தான் அது ஒரு ஆர்வக்கோளாறு பரிவாரதேவதைன்னு கண்டுபிடிச்சேன். அட.. சொந்தக்காரங்க....'இந்த டைரியை படிப்பவர்கள் நரகத்துக்கு செல்வார்கள்'...ன்னு கூட முதல் பக்கத்தில் எழுதி வெச்சேன். பிரயோசனமில்லை.

நமக்கு அப்ப இருந்ததெல்லாம் ஒரே ஒரு கனவுதான்... டைப்ரைட்டிங்,ஷார்ட்ஹேண்ட் படிச்சு கேரளா யூனிவர்சிட்டில வேலைக்கு சேரணும்..மடக்கு குடையும், க்ளிப் போட்ட டிபன் பாக்சும் எடுத்துகிட்டு வேலைக்கு போகணும். சிரிக்காதீங்க.. அப்ப இருந்த புத்திக்கு, ப்ரொஃபஸர் வேலைன்னு ஒன்னு இருக்குங்கிறது கூட தெரியாது.சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்கலைங்கிற மாதிரி, அம்மா சரின்னு சொன்னாலும், பரி'வார' தேவதைங்க அருள் கிடைக்கலை. ஒருவழியா எல்லாம் சரின்னு சொன்னாலும்,.. 'விதி'..சதிபண்ணிடுச்சி..சினிமா ரூபத்துல. அந்த படத்துல முக்கிய கதைக்களமா வருவது ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்... போதாதா!!!! சேப்டர் க்ளோஸ்....
(பையர் பிறந்தப்புறம் முழுசா கத்துகிட்டு,பரீட்சை வரைக்கும் வந்தேன், எக்சாமை தள்ளிப்போட்டுப்போட்டு, நான் ரயிலேறின அடுத்த நாள் பரீட்சை வந்தது.)

குடும்பத்துல மூத்த பொண்ணா பிறந்திட்டதால, வாலை எல்லாம் ஹேண்ட்பேகில் சுருட்டி வெச்சுக்க வேண்டியதா போச்சு. தம்பிங்களுக்கு நாமதானே ரோல் மாடலா இருக்கணும்.அதுவுமில்லாம, எதாவது காதுல விழுந்தா அப்புறம் படிப்பு போச்... நிறுத்திடற அபாயம்... நம்ம கேரளா யூனிவர்சிட்டி லட்சியம் என்னாவது?...மத்தபடி,எந்த விஷயத்திலும் ,கட்டுப்பாடெல்லாம் ஒன்னும் கிடையாது.அம்மா கிட்ட எல்லாம் பேசலாம்.ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போக,கூட்டிட்டு வர எந்த தடையும் கிடையாது.

அப்படியும் ஒரு நாள், லேசா டீனேஜுக்கே உரிய ஆர்வக்கோளாறில் ஒரு வேலை செஞ்சேன். எங்க பக்கத்து வீட்டுல, ஒரு நாள் ஒரே களேபரம். என்னன்னு பாத்தா... ஒரு பாம்புக்குட்டி.ஒரு அடி நீளம்தான் இருக்கும். ஒருவழியா அதைக்கொன்னுட்டாங்க. அதை எடுத்துகிட்டு வந்து,வீட்டுல காலியா இருந்த பட்டுப்புடவை டப்பா ஒன்னில் போட்டுவெச்சேன். எதுக்கா?... பஸ் ஸ்டாப்புல அதை போட்டு வெச்சிட்டு, அதை எடுக்கிறவங்க ரியாக்ஷன் என்னன்னு பாக்கத்தான். மறு நாள் காலேஜுக்கு புறப்படும்போது, அதையும் எடுத்துகிட்டேன். அம்மா பாத்துட்டு... இது என்னன்னு கேட்டாங்க... சொன்னதுதான் தாமதம். ஓடியே வந்து , பார்சலை பிடுங்கி எறிஞ்சிட்டாங்க. ஒரு நல்ல சினிமாப்படத்தை மிஸ் பண்ணிய ஃபீலிங்கோட காலேஜுக்கு போயிட்டேன். வேற வழி. தர்க்கம் பண்ணினா ஆக்ஷன் படமில்ல வீட்டுல ஓடும்.

எனக்கு தோட்டம்ன்னா ரொம்ப பிடிக்கும். வீட்டுல முன்னாடி இருந்த இடத்தை சிமிண்ட் தளம் போட்டுட்டாங்க. கொஞ்சூண்டு இடம் தோட்டத்துக்காக விடச்சொல்லி,நான் சொன்னதை காதுலயே போட்டுக்கலை. ஒரு நாள் அம்மா, ஆச்சியை பாக்க ஊருக்கு போயிருந்தாங்க. சாயங்காலம் வந்துடுவேன்னு சொல்லியிருந்தாங்க. இதுதான் சந்தர்ப்பம்ன்னு,கடப்பாறை இல்லாததால், தேங்கா உடைக்கிற அரிவாளை எடுத்து,கொஞ்சம் கொஞ்சமா சிமிண்டை உடைச்சு, சின்ன இடம் உண்டாக்கி, ரெண்டா உடைச்ச செங்கல்ல பதிச்சு கார்டன் ரெடி பண்ணிட்டேன்.அம்மா வந்து பாத்தா,..எங்கையி,கொப்புளிச்சு போயிருப்பதை பாத்துட்டு ஒன்னும் சொல்லல. அப்றம் அந்த கார்டனுக்கு செடியெல்லாம் வாங்கித்தந்தாங்க. அதுல ஜினியான்னு ஒன்னு பூ அழகா இருக்கும். செடியே தெரியாம பூக்கும். சும்மா பாத்தா நல்லா இருக்காதுன்னு, பைனாகுலர் வெச்சி பாத்துகிட்டு, 'நீயும் பாரு,ஊட்டி மாதிரி இருக்கு'...ன்னு கொடுமை பண்ணிகிட்டிருப்பேன்.

பள்ளிகூடத்துல மாசத்துல கடைசி வெள்ளிக்கிழமை சிவில் ட்ரெஸ் போடலாம். யூனிஃபார்ம் தேவையில்லை. அந்த ஒரு நாளுக்காக ஒரு வாரம் முழுசும் செட்டு சேர்ப்போம். ட்ரெஸ்ஸுக்கு மேட்சா வளையல், பொட்டு, கம்மல்ன்னு தேடித்தேடி வாங்குவோம்.அப்பிடி பாத்துப்பாத்து ட்ரெஸ் பண்ணிட்டு போனா, ஒரு தடியன்.. 'என்னடே.. புது ட்ரெஸ்ஸா... மேட்சாவே இல்லையே'ன்னான்.எனக்கு அழுகை...அழுகையா வந்துட்டுது.அப்போதான், எங்க ஹிஸ்டரி சார் வகுப்புக்குள் நுழைந்தார்.. நான் அசிஸ்டெண்ட் மானிட்டர்ங்கிறதால, திருத்தப்பட்ட பேப்பர்களை கொடுத்து வினியோகிக்கச்சொன்னார். இன்னும் பாடமே நடத்தலை.. அதுக்குள்ள எதுக்கு ஆனந்தக்கண்ணீர்ன்னு நெனச்சிட்டு கேக்கவும்,எப்பிடித்தான் தெகிரியம் வந்துதோ.... அவர்கிட்ட சொல்லிட்டேன். அவுருதான், அந்த தடியனோட க்ளாஸ் டீச்சர். நேராப்போய் அவனை பின்னு... பின்னுன்னு..பின்னீட்டார். அதுலேர்ந்து, என்னை ஒரு சொர்ணாக்கா ரேஞ்சுக்கு பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.ஓடி ஒளிஞ்சுக்குவாங்க.

காலேஜ்ல ஆரம்பத்துல சீனியர்களைக்கண்டா குனியுற தலை, க்ளாஸ் ரூம் வந்துதான் நிமிரும். அவ்வளவு பயம்.என் ஃப்ரெண்ட், 'டீ... கண்ணகி...(கண்ணகியக்கா..கோச்சுக்கப்படாது)நேராத்தான் வாயேன்'ன்னு சொல்லிச்சொல்லி எனக்கு கண்ணகின்னே எங்க வட்டத்துல , பட்டம் கொடுத்திட்டா.. அப்றமா நாங்க, பசங்களுக்கு பட்டப்பெயர் வைக்கிறதுவரை முன்னேறியதும், ட்ரெஸ் சென்சுக்கு மார்க் போட ஆரம்பிச்சதும் வேறு கதை. (எல்லாம் ரகசியமாத்தான். பசங்களுக்கு தெரிஞ்சா கதையே வேற)

அப்போ நதியா உச்சத்தில் இருந்த சமயம். நெறைய பேருக்கு ஃபேஷன் மாடல் அவங்கதான். அவுங்க மாதிரியே ஹேர்ஸ்டைல் செஞ்சுகிட்டு, நாமதான் நதியா.. ங்கிற நெனப்புல திரிவாளுங்க. அவங்களுக்கு என் கவுண்டர் கொடுக்கிற மாதிரி, அடுத்த நாளே இன்னொருத்தி, நதியா கம்மல் போட்டுகிட்டு வந்து, அட்ராக்ஷனை அவ பக்கம் திருப்பிடுவா.

என்னது...ஃபாலோயர்சா.. அதெல்லாம் மொக்கை ஃபிகருங்களுக்கு கெடையாது.சப்புன்னு போச்சா!!!!! என்னங்க பண்றது...

கொஞ்ச நேரம்,ஊஞ்சலாடிட்டு வர ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்த கண்ணகிக்கு ஒரு பெரிய நன்றி.ஆரம்பிச்சு வெச்ச முல்லைக்கும் பாராட்டுக்கள். இதை தொடர நாலு பேரை அழைக்கணும். எண்ணிக்கையா முக்கியம்,..வாங்க புதுகைத்தென்றல்,துளசியக்கா,வல்லிம்மா,L.K, வசந்து,கோமா, நசரேயன்..இன்னும் யாருக்கெல்லாம் கொசுவத்தி சுத்துதோ... எழுதுங்கப்பா.. அடுத்தவங்க டைரிய படிக்கிறதுல, என்னா த்ரில் இருக்கு தெரியுமா!!!!

Saturday, 6 February 2010

நெல்லையப்பா!!!!...இது நெல்லையப்பா.


நெல்லையப்பர் கோவிலின் நுழை வாயில்.
அம்மையப்பனை பாத்துட்டு வரலாமுன்னு, சாயந்திரம் கிளம்பினோம். சாயந்திரம் நாலுமணிக்கு மேல்தான் நடை திறக்குமுன்னு கிடைச்ச தகவலை உறுதிப்படுத்திக்கிட்டேன்.வரவேற்கிறதுக்கும், பாதுகாப்பு கொடுக்கிறதுக்கும்,காலையில் வழி நெடுக நின்ன காவல்துறையை இப்போ காணோம்.ஜனவரி 26-குடியரசு தினத்துக்கு,வ.உ.சி. மைதானத்தில், கொடியேத்த வந்த வி.ஐ.பி.க்காகவாம் அது.

B.S.N.L. முன்னாடி,ஆரம்பிச்சு, ராஜா மருத்துவமனை வரை,மதுரை ரோட்டில் மேம்பாலம் கட்டுறாங்களாம்.போக்குவரத்தையெல்லாம், தலையைச்சுத்தி வர்ற மாதிரி திருப்பி விட்டிருக்காங்க.பாலம் செயல்பட துவங்கியாச்சுன்னா, அந்த ரவுண்டானாவில் நெரிசல் குறையுமாம். நல்லதுதான். இப்போதைக்கு, பாலச்சுவர்களும்,தூண்களும் போஸ்டர் ஒட்டவும், மக்களை அழைக்கவும் பயன்படுது.

கோவிலினுள் நுழைந்ததும், நந்தியும் ,கொடிமரமும். நல்ல பெரிய மாக்காளை. கடல்சிப்பி, சுண்ணாம்பு இவற்றால் ஆனவராம்.நந்திகிட்ட உத்தரவு வாங்கிகிட்டு, நெல்லையப்பா... இதோ வந்துட்டேன்னு, முன்னாடி போய் நின்னேன். 'இந்தப்பக்கம் வாங்கோ'ன்னு கூப்பிட்டு, நமக்கு இடதுபுறம் இருக்கும்புள்ளையாரை தரிசனம் பண்ணி வெச்சார் அர்ச்சகர்.வெச்ச கண்ணு எடுக்க முடியலை. விஸ்வரூபம் எடுத்தமாதிரியான பெரிய சிலாபிம்பம்.ஒன்பது அடி உயரமாம்.

பிரம்மாண்டமான மாக்காளை.
கருவறைக்குள் அழகான எளிமையான அலங்காரத்தில் நெல்லையப்பர். அர்த்த மண்டபத்துக்குள் போய் இன்னும் கிட்டக்க தரிசிக்கலாம், நுழைவுக்கட்டணம் வெறும் மூணே ரூபாய்தான்.வெளியே வந்தா உள்பிரகாரத்தில்,இடது பக்கம் ஒரு சின்ன பள்ளத்துக்குள் இருக்கிற மாதிரி ஆதிலிங்கம்.இவருக்குத்தான் முதலில் பூஜைகள் நடந்தது என்று கேள்வி. தெரிஞ்சவுங்க சொல்லுங்க...விஷ்ணு இங்கே பள்ளி கொண்ட திருக்கோலத்தில், கோவிந்தப்பெருமாள் என்ற திரு நாமத்துடன் காட்சி கொடுக்கிறார்.மச்சானும்,மாப்பிள்ளையும் ஒருத்தருக்கொருத்தர் பேச்சுத்துணைக்கு ஆச்சு.தங்க்ஸ்கள் பக்கத்தில் இல்லையே.ஒருத்தர் தனிக்கோவிலில் இருக்கார்.இன்னொருத்தர் கஜலஷ்மியா வடக்குப்பிரகாரத்தில் இருக்கார்.

இரண்டாம் பிரகாரத்தில், அறுபத்து மூவர்,வரிசையா இருக்கிறாங்க.அவங்களுக்கு இடதுபக்கத்துல 'சுரதேவர்' இருக்கார். யாருக்காவது காய்ச்சல் வந்தா அவருக்கு வேண்டிகிட்டா சரியாப்போயிடும்ன்னு ஒரு நம்பிக்கை.நாகர்கோவிலின் அருகே, தடிமார் கோவில்ன்னு பேச்சு வழக்கில் சொல்லப்படும் தழுவிய மகாதேவர் கோவிலில்,சாமிக்கு சுக்கும், மிளகும் அரைத்துப்பூசும் வழக்கம் உண்டுன்னு கேள்வி. சப்தமாதர்களான பிராமி,மாஹேஸ்வரி, கௌமாரி,வைஷ்ணவி,வாராஹி, இந்த்ராணி,சாமுண்டி எல்லோரும் வரிசையா இருக்காங்க.மறுபடியும், சீதையை கிட்நாப் செய்யக்கூடாதுன்னும், ஏற்கனவே செஞ்சதுக்கு தண்டனையாவும், ராவணனை ஜெயில்ல போட்டு வெச்சிருக்கு. அவருக்கு மேலே இருக்கும் சன்னிதியிலிருந்து, சோமாஸ்கந்தர் கண்காணிச்சிட்டிருக்கிறார். (வார்டர் உத்தியோகம் கொடுத்துட்டாங்களே...)

கந்தரை கும்பிட்டுகிட்டு, லேசா வலதுபக்கம் திரும்பினா... தாமிரசபை!!!.தீபத்தையே நடராஜரா நினைச்சு கும்பிடணும். நடராஜரின் தரிசனமும் உண்டு. சபையின் வடக்குப்பக்கம் சந்தன நடராஜர் இடதுபாதம் தூக்கி ஆடும் தரிசனம் கொடுக்கிறார்.சந்தனக்காப்பினூடே மெல்லிய மீசை தெரியுதாம்..யாத்திரிகர்கள் கூட்டம் ஒன்னு கண்டுபிடிச்சு பரவசப்பட்டுகிட்டாங்க. என்ன இருந்தாலும் மீசைக்காரன்னா அது பார்த்தசாரதி மட்டும்தான்னு ஒருத்தர் கட்சி சேக்க ஆரம்பிச்சார்.ஸ்தலவிருஷமான மூங்கிலில் ஏராளமான தொட்டில் பிரார்த்தனைகள்.சனீஸ்வரனை கண்டுகிட்டு, வலது பக்கம் மண்டபத்தில் இருக்கும் சகஸ்ரலிங்கத்தையும் தரிசிச்சிட்டு முன்புறம் வந்தோம்.

பிரதோஷ காலத்து சிவதரிசனத்தை ஓவியமா வரைஞ்சு வெச்சிருக்காங்க. நந்தியின் கொம்புகளுக்கு நடுவே நின்றாடும் பெருமான்.அழகா இருக்கு..வலதுபக்கம் திரும்பி நடந்தா முன்மண்டபத்துக்கு இடதுபக்கம் குபேரலிங்கம். பெயருக்கு ஏத்தமாதிரி, நகைகளுக்கு நடுவே இருக்கார். ஜொலிக்குதே...ஜொலி..ஜொலிக்குதேன்னு பாடலாம்.முன்மண்டபத்தின் சங்கீத கல்தூண்களை வெளிமாநில பக்தர்கூட்டம் ஒன்றுக்கு, ஒருத்தர் தட்டிக்காண்பித்து , விளக்கிச்சொல்லிக்கிட்டிருக்கார்.

பிரதோஷ கால நடனம்.
இங்கே கோவிலில் ,கைடுன்னு யாரும் இருக்கிறதா தெரியல்லை..(சுசீந்திரம் கோவிலில் உண்டு)வெளியூர் பக்தர்களுக்கு, நம்ம கோவிலைப்பத்தி தெரிய வேணுமில்லையா.. ஏதாவது ஏற்பாடு இருந்தா நல்லா இருக்கும்.கோவிலைப்பத்தி சொல்லுங்கன்னதும்,உற்சாகமாகிட்டார். இது 1300 வருடம் பழமை வாய்ந்ததாம். மொத்தம் 14 ஏக்கர் பரப்பளவு கொண்டதாம் .கோவில் உருவான கதை வழக்கம் போலவே... ராமக்கோனார் அரசருக்கு பால் கொண்டு போறார்... கால்தடுக்கி பால்சிந்துது... தினமும் இது நடப்பதால் நம்பிக்கை இல்லாத அரசர்,நேரில் பார்வையிட வர்றார்.காலை இடறும் மூங்கிலை வெட்டுறார்.... ரத்தம் பீறிட்டு வருது... தோண்டிப்பாத்தா, ஒரு சிவலிங்கம் தலையில் வெட்டுப்பட்ட நிலையில் இருக்குது.கோவில் கட்டி கும்பிடுறாங்க. இத்யாதி.. இத்யாதி..

அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில், இந்த கதைகளை வரைஞ்சு வெச்சிருக்காங்க. பாக்க தவறிடாதீங்கன்னார். என் கவனம் முன்மண்டபத்துக்கு வலதுபக்கம் இருக்கிற ஒரு சிற்பத்துக்கு போச்சு..யானை மேலே உக்காந்து ஸ்ரீ சேரமான் திருக்கயிலாயத்துக்கு போகும் காட்சி.பட்டத்தரசியும் பக்கத்துல இருக்காங்க. முன்மண்டபத்தின் விதானத்துல இருக்கும் பூவேலைப்பாடு பிரம்மாதம். நாலாபுறமும் தாங்கும் யானைகள் கொள்ளை அழகு. அவற்றின் மேல் இருக்கும் நகைகளில் கூட நுணுக்கமான வேலைப்பாடுகள்.

சேரமான் திருக்கைலாயம் போகும் காட்சி.
சாமி கும்பிட்டுவிட்டு வந்த கூட்டம் ஒன்னு,போட்டோ எடுத்துட்டிருந்த என்னை காமெடிபீஸ் போல் பார்த்து விட்டு சென்றது. 'யாரும்மா இது'ன்னு கேட்ட சின்னப்பொண்ணு ஒன்னுக்கு, 'யாரோ...டி.வி. ரிப்போர்ட்டர் போலிருக்கு'ன்னு அவுங்கம்மா சொன்னதை வெச்சு, இன்னும் வீட்ல என்னை, வாரிக்கிட்டிருக்காங்க.

வெளிப்பிரகாரத்தில் இருந்துதான் காந்திமதி அம்மனை பார்க்கப்போகும் வழி பிரிகிறது. இரண்டு கோவில்களும் தனித்தனியே இருந்தாலும் இந்த கல்மண்டபம்தான் ரெண்டையும் இணைக்குது.பிரகாரத்திலேயே கோசாலை ஒன்னு இருக்குது. ஒரேஒரு பசுவும் கன்னும் இருக்குது.அங்கங்கே சுற்றுப்புற சூழலின் தூய்மையை வலியுறுத்தி,போர்டுகள். த்மிழ்நாடு மாசு கட்டுப்பாட்டுத்துறை மக்காத பிளாஸ்டிக்குகளை கோவிலில் தவிர்க்கச்சொல்லி கேட்டுக்கிறாங்க. நல்ல ஐடியா..மக்கள் ஒன்னு கூடும் இடத்தில் பிரச்சாரம் செஞ்சா, அட்லீஸ்ட் இளைய தலைமுறையாவது யோசிக்க ஆரம்பிக்குமே.!!!

துவாரபாலகர்கள் நல்ல கம்பீரம். சிற்பக்கலையோட சிறப்பு, உச்சத்தில இருந்த கால கட்டத்தில செஞ்சிருப்பாங்களோ என்னவோ!!! உயிரோட ஒரு ஆள் நிக்கிற மாதிரியே இருக்கு. கால் நகமெல்லாம் வழவழன்னு ... நல்லாப்பாத்தா பச்சை நரம்பு கூட தெரியும்போலிருக்கு.

அம்மாவை பாத்துட்டு வந்துடலாம்ன்னு திரும்பினா காத்து வாக்கில ஒரு செய்தி... அங்கங்க ஆட்கள் பரபரப்பா இருக்காங்க.. தங்கத்தேர் ஊர்வலம் வரபோகுதாம்... இப்பத்தான் புதுசா செஞ்சதுன்னு கேள்வி... அடிச்சது லக்கிப்ரைஸ்ன்னு இடம் பாத்து உக்காந்துகிட்டோம்.அரைமணி... கால்மணின்னு சொல்லி நேரம் ஆகிட்டிருக்கு. திரை போட்டு வெச்சு, அலங்காரம் நடக்குது. உற்சவர் வந்தாச்சு.லேசா திரை விலகுனபோது ஒரு சூரியஒளிக்கீற்று வந்து விலகுன மாதிரி, தங்கத்தேர் தகதகன்னு கண்ணைப்பறிக்குது.இரண்டுமாசம் முன்னாடிதான் வெள்ளோட்டம் நடந்திருக்கு.

தேரோட்டத்தை, போட்டோ எடுக்க கொடுத்து வைக்கலை. ஏழுமணின்னு சொல்லி எட்டேகால் ஆகியும் அலங்காரமே ஆரம்பித்த பாடில்லை.அதற்கு மேல் காத்திருக்க முடியாம கிளம்பிட்டோம். குடுப்பினை இருந்தா இன்னொருவாட்டி சந்தர்ப்பம் கிடைக்காமலா போயிடும்!!! எல்லோருக்காகவும் வேண்டிகிட்டேன்.தங்கத்தேருக்காக, கூகிளாண்டவரிடம் பிரார்த்தனை செஞ்சதில், பெரிய மனசு பண்ணி ஒரு படம் கொடுத்தார்.

இன்னிக்கு நடை சாத்துற நேரம் ஆகிட்டுது. அம்மாவை இன்னொரு நாள் வந்து பாக்கிறதா சொல்லிட்டு,வீடு வந்தோம்.

தங்கத்தேர் ஓடுது.

போகும் வழி வெகு தூரமில்லை.

ஸ்ட்ராபெர்ரி,வெனிலா,சாக்லெட்.. எந்த ஃப்ளேவர் வேணும்ன்னாலும் எடுத்துக்கலாம்.உறங்கப்போகும் நேரத்தில் ஐஸ்க்ரீம் தேவையான்னு நினைச்சாலும்,கை தானா நீண்டு,ஸ்டராபெர்ரியை எடுத்துகிட்டது.மத்தியானம் வெனிலாவும், சாக்லெட்டும் வந்தது.மத்தியானம் சரி.. டின்னருக்காவது, சூடா ஏதாவது குடிக்கணும்ங்கிறவங்களுக்காக,மெனுவை ச்சாய்ஸில் விட்டா நல்லாருக்கும்.

இதென்னா.. திடீர்ன்னு காதுக்குள்ள கச்சேரி நடக்குதா!!!! அடிச்சுப்பிடிச்சு எழுந்தா மொபைல் அலாரம் பாடிக்கிட்டிருக்கு!!!. வழக்கமான 'டைட்டானிக்' கை மாத்திட்டதை மறந்துட்டேன்.கொஞ்ச நேரத்தில், 'யாத்ரிகள் கவனத்துக்கு'ன்னு ஆரம்பிச்சு,திருவனந்தபுரம் வரப்போவதை,ஒரு அக்கா சொன்னாங்க.ஒவ்வொரு ஸ்டேஷன் வருவதற்கும்,ஐந்து நிமிஷங்கள்முன்பு அந்தந்த ஸ்டேஷங்கள் பெயரை அறிவிக்கிறாங்க.இது ஒரு நல்ல ஏற்பாடு.

சரியா ஐந்துமணி, நாப்பது நிமிஷத்துக்கு எங்க ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள்,மூக்கை நுழைத்தது.ரயிலைவிட்டு இறங்கி, காத்திருக்கும் நேரத்தில்,'கடுப்பம் கூடுதலாயிட்டு ஒரு ச்சாய'.பையருக்கு, நான் மலையாளத்தை பிச்சு ஒதறி,காயப்போடுவதைப்பாத்து சிரிப்பு தாங்கலை.

திருநெல்வேலிக்கு இங்கிருந்து இன்னும் மூன்றரை மணி நேரப்பயணம்.மாமா கூட வந்ததால் கலகலப்பா இருந்தது. நாலு வருஷத்துக்கு அப்புறம் பாக்கிறோம். அவுங்ககிட்ட குவைத் செய்திகளும், எங்ககிட்ட மும்பை செய்திகளும் இருந்ததால் ஒரு ந்யூஸ் சேனலே ஓடிக்கிட்டிருந்தது.திருவனந்தபுரம் எல்லை தாண்டியதும் பேச்சு மூச்சில்லை. கண்ணுக்கு விருந்து கொட்டிக்கிடக்கிறப்ப ,காது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டுமே.

உலகத்துல உள்ள எல்லா அழகுக்கும்,பிறந்தகம் இதுதான் என்பதுமாதிரி இருக்கு. தென்னந்தோப்புகளும், வயல்வெளிகளும், நீர்நிலைகளும்,கேரளத்துக்கே உரிய அந்த அதிகாலை நேர குளிர் காற்றும் மனசெல்லாம் நிறைஞ்சு போச்சு.வயல்வெளிகளில் பயிர்பச்சைகளுக்கு மேல்,சாம்பிராணி புகை மாதிரி பனி நிக்குது.வழியில் ஐயப்பன் கோவிலில்,வெடிவழிபாடை ஆச்சரியமா பார்த்த மாமாவுக்கு விளக்கி சொன்னேன்.

நாகர்கோவில் அருகே சுங்கான் கடைஎன்னும் இடத்தில் 'ஹோட்டல் கௌரிசங்கர்' புதுசா இருக்கு.அருமையான மெனு. மும்பையில் சில ஹோட்டல்களில் இருப்பதை போலவே, சின்னகடை ஒன்னும் அட்டாச்டா இருக்கு.சாக்லெட் ,பிஸ்கட்,மக்ரோன்,...'பானங்கள்'கூட இருக்குப்பா.. வெளியே இடதுபக்கமா ஜூஸ் செண்டரும் இருக்கு.காலை உணவை முடிச்சிகிட்டு, பயணத்தை தொடர்ந்தோம்.


வேளிமலையின் ஒரு தோற்றம்.
நாகர்கோவிலில் புகுந்து புறப்பட்டு, தோவாளையில் மல்லிப்பூ வாங்கிகிட்டு,ஆரல்வாய்மொழியை கடந்தோம்.முப்பந்தல் முன்னாடி இருக்கிற அந்த ரோட்டில் ரெண்டு பக்கமும்,அடர்த்தியா மரம் வளர்ந்து,பகல்லேயே இருட்டா,ஒருமாதிரி அழகா இருக்கும்.இப்போ ஏதோ பேருக்கு இருக்கு. பக்கத்துல இருந்த பொட்டல்காடெல்லாம்,காத்தாடி ஆலை வந்தபிறகு ஏதோ கொஞ்சம் மரம்,மட்டையோட இருக்கு. இப்போதான் ஆட்களுக்கான குடியிருப்பும் வர ஆரம்பிச்சிடுச்சே. ஆட்கள் வரவர, கொஞ்சமாவது முன்னேறத்தானே வேணும்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு குடியிருப்பையும் பார்த்தேன்.

இங்கிருந்து ஆரம்பிச்சு,வள்ளியூர் தாண்டியும் காத்தாடி பறக்குதாமே. முப்பந்தல் தாண்டும்போது, லேசா வலதுபக்கம் பாத்தா.. காத்தாடிக்கடலே இருக்கு.அன்னிக்கு நல்ல காத்து போலிருக்கு. சும்மா..விர்..விர்.ன்னு சுத்துது.

ஆத்தாடி..காத்தாடி!!!
நல்லாத்தான் இருக்கு 'தங்க நாற்கரச்சாலை' இந்தப்பக்கம் ரெண்டுலேன், அந்தப்பக்கம் ரெண்டுலேன், நடுவில் டிவைடர்..அந்தப்பகுதிகளின் அடையாளமே மாறிட்டது போலிருக்கு.எப்படியோ ..விபத்து நடப்பது குறைஞ்சா சரின்னு சொல்லி வாய் மூடலை..ரோட்டோரத்தில் ஆக்ஸிடெண்ட் ஆகிக்கிடந்த வேன் கண்ணுல பட்டுத்தொலைச்சது.முந்தின நாள் ராத்திரியிலிருந்து அங்கே கிடக்குதாம்.பாவம்... ஒருத்தருக்கும் ஒன்னும் ஆகாம இருக்கணும்.


நாற்கரச்சாலை.
வழியில் மூன்றடைப்பு வந்ததும்,பறவைகள் ஏதாவது தென்படுதான்னு பாத்தா, அங்க தண்ணியே ,ரொம்ப கொஞ்சமாத்தான் இருக்கு.பறவைகள் ஒன்னையும் காணல்லை. ஊருக்குள்ள போயிருக்கோ என்னவோ!!!.

வீட்டுக்கு போய் சேர்ந்து,ரிலாக்ஸாகி,டைம் பாத்தா... அச்சச்சோ!!!! அந்த இடத்துக்கு சாயங்காலம்தான் போக முடியும் போலிருக்கு.






Thursday, 4 February 2010

ராஜ்தானியில் முதல் நாள்.

பயணங்கள் வாழ்வின் சுவாரஸ்யத்தை கொஞ்சம் கூட்டத்தான் செய்யுது.. அதுவும் சொந்தங்களை பாக்கப்போறோம்னா இன்னும் கூடுதல்.சீக்கிரம் போகணும்னு நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜ்தானியில் டிக்கெட் புக் செஞ்சாச்சு.. ஃப்ளைட் போர்.. வேணாமுன்னு முதல்லேயே முடிவு செஞ்சாச்சு. மேலும் கொங்கண் ரெயில் பாதை எப்படி இருக்குமுன்னும் பாக்கணுமே...புறப்படுமிடம், சேருமிடம் ரெண்டையும் சேத்து மொத்தம் பதினேழே ஸ்டாப்பிங்குகள்தான்.இது வாரத்தில் மூணு நாட்கள் தில்லியிலிருந்து புறப்படுகிறது.

காலை அஞ்சு மணி அஞ்சு நிமிஷத்துக்கு ரயில் பன்வெல் வந்து சேருமாம். நாங்க எங்க வழக்கப்படி முக்கால் மணி நேரம் முன்னாடியே ஸ்டேஷன் போயாச்சு.வெயிட் பண்ணும்போது தூக்கமா வருது.. பின்னே!.. முதல் நாள் தூங்கல்லை.. 'குச்..குச்.. ஹோத்தா..ஹை.' படம் பாத்தா எப்பிடி தூங்கிறது.ரெண்டு நாள் நீங்க இல்லாம இருக்கப்போறேனே.. அதுக்கு காம்பன்சேஷனா இப்போ எங்கூட படம் பாருங்க'ன்னு பொண்ணு கூப்பிட்டா மறுக்க மனசு வருமா..அதுவும் 'கஜோல்,ஷாருக்' ஜோடி.

ஒரு வழியா பத்து நிமிஷம் லேட்டா ட்ரெயின் வந்தது. பெட்டிகள் வந்து நிற்கும்போது அதுக்கு நேரா ப்ளாட்பார்மில் இருக்கும் டிஸ்ப்ளேயில் எந்த பெட்டி எங்கே நிக்குதுன்னு டிஜிட்டல் நம்பரில் காண்பிக்கும். பார்த்தவரையில் நிறைய ஸ்டேஷங்களில் அது வேலை செய்வதே இல்லை. புதுசா வர்றவங்க பெட்டி எங்க இருக்குன்னு தெரியாம லக்கேஜோட ஓடறது நடக்குது. இன்ஃபர்மேஷனில் முதலிலேயே விசாரிச்சிகிட்டா இந்த டென்ஷனை தவிர்க்கலாம்.

எடுத்ததுமே, சும்மா நாலுகால் பாய்ச்சலில் ஓடுது வண்டி. பத்து நிமிஷத்தில் டீ..வந்தது. விமானத்தில் இருப்பதைப்போல் சர்வீஸ் இருக்குமுன்னு ரங்க்ஸ் சொன்னது சரிதான். ஒரு ட்ரேயில் ரெண்டு மில்க்பவுடர் சாஷேக்கள்,ரெண்டு சர்க்கரைப்பொட்டலங்கள்,ரெண்டு டீ பவுடர் பாக்கெட்டுகள்,கடிச்சிக்க பிஸ்கெட், ஒரு மின்ட்,ஒரு ஃப்ளாஸ்கில் கொதிக்கும் வென்னீர். இவ்வளவும் வந்தது. டீ நாமதான் போட்டுக்கணும்.ஆறிப்போச்சுன்னா சூடாக்க அடுப்பும் தருவாங்களான்னு கேட்டுப்பாக்கணும்.

சாப்பாட்டை பொறுத்தவரை ராஜ்தானியில் கவலை இல்லை. புக் செய்யும் போதே வெஜ்ஜா.. நான்வெஜ்ஜா.. என்று குறித்து கொடுத்து விடலாம். வேளாவேளைக்கு, வந்து விடும்.சாப்பாட்டின் இடையில் ஸ்னாக்ஸ், சூப்,கூல்டிரிங்க்ஸ் எல்லாம் உண்டு. தண்ணீர் பாட்டில் அவுங்களே கொடுத்திடுவாங்க.சாப்பாட்டுக்கும் சேர்த்துதான் டிக்கெட் விலை.
இந்த ரயில் முழுக்கவும் குளிரூட்டப்பட்டது. காலையில் ந்யூஸ் பேப்பர் சப்ளையும் உண்டு.சர்வீசும் நல்லாவே இருக்கு. ஆரிஃப் சுறுசுறுப்பா, பயணிகள் தூங்கிகிட்டிருந்தாகூட எழுப்பி சாப்பாடு கொடுத்திட்டு போறார்.



ராஜ்தானியின் மெனு

திருவனந்தபுரம் வரை சென்று அங்கிருந்து பேக்கேஜ் டூரில் சுற்றிப்பார்க்க வந்திருந்த ஜோடி எங்க எதிர் சீட்டில் இருந்தாங்க. வி.ஆர். எஸ். வாங்கி ரெண்டு வருஷமாச்சாம். எங்க வேலையாயிருந்தீங்கன்னு கேட்டேன். இந்திய கிரிக்கெட் அணியில் அம்ப்பயரா இருந்தாராம். பேரு..'சந்திரசேகர் மோஹித்தே'. இண்டர் நேஷனல் லெவல் இல்லையாம். இந்தியாவுக்குள் மட்டும்தானாம். Mrs.மோஹித்தே இல்லத்தரசி. கோவா வரை வந்திருக்காங்களாம். தெற்கே வந்ததில்லையாம். அவுங்களுக்காகத்தான் இந்த சுற்றுலாவே. மோஹித்தே தெற்கைப்பற்றி விசாரிக்க ஆரம்பிச்சதும், உற்சாகமா தெரிஞ்ச வரை விம் போட்டு விளக்க ஆரம்பிச்சேன்.

மேடம்,' புடவை எங்கே நல்லதா கிடைக்கும்,ஸ்பைசஸ் எங்கே மலிவா கிடைக்கும்'ன்னு கேட்டு, அவுங்க ஒரு நல்ல இல்லத்தரசிங்கிறதை நிரூபிச்சாங்க.காஞ்சிபுரம் போங்கன்னு அய்யாவோட பர்சு இளைக்க வழி சொன்னேன்.ஐயா உடனே ,நாங்க ஐந்து நாள்தான் ப்ளான் பண்ணியிருக்கோம்ன்னு பர்சை காப்பாத்திக்கிட்டார்.

வழி நெடுக பச்சைப்பசேல்ன்னு இருக்குன்னுதான் சொல்ல ஆசை.. ஆனா,மஹாராஷ்ட்ரா முடியும் வரை காஞ்சு போயில்ல இருக்கு. நிறைய டன்னல்கள் வருமாம், எத்தனைன்னு எண்ணணும்னு வெயிட்டிங்க். ஆனா,தூக்கம் வந்ததால் எட்டுக்கு மேல் எண்ணலை.


சாப்பாட்டுக்கு முன் சூப்

கோவாவைத் தொட்டுக்கொண்டு போகும்ன்னு நெனைச்சா, பார்டரில் இருக்கும்' மட்காவ்' வை தொட்டுக்கொண்டு போகிறது.சாயந்திரம் அஞ்சு மணிக்கெல்லாம் 'மங்களூர்' வந்து விட்டது.ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கொஞ்ச நேரம்தான் நிக்குது.மங்களூரிலிருந்துதான் ரகளை ஆரம்பிக்குது.. தென்னை மரங்களும் சோலைகளும், கேரளா வருமுன்னே அந்த சூழ்நிலைக்கு மனசு போயிடுது.

கேரளாவில் கடற்கரையை ஒட்டியே பெரும்பாலும் ரயில் போவதால் ,சூரிய அஸ்தமனத்தை பாக்க முடிஞ்சது. காயல்களை பாக்க முடிஞ்சது.எதிர் சீட் அம்ப்பயருக்கு இதெல்லாம் பாக்க முடிஞ்சதில் கொள்ளை மகிழ்ச்சி.'குமரகம்','பூவாறு' போன்ற இடங்களை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.லிஸ்டில் சேத்துக்கப்போறேன்னார்.

தம்பியின் மாமனார், காலை நாலு மணிக்கு வருகிறார். ஃப்ளைட் கொஞ்சம் லேட் ஆனதால் நாலேகாலுக்கு லேண்டிங்க். என்னுடைய ட்ரெயின் அஞ்சேமுக்காலுக்கு திருவனந்தபுரம் போய்ச்சேரும். ஆகவே எல்லோரும் சேந்தே போகலாமுன்னு, தம்பியை கூப்பிட்டு சொல்லியாச்சு.மறக்காம அலாரம் வெச்சாச்சு..

ஊருக்கு போயிட்டு வந்தாச்சு..

எதுக்கும் இருக்கட்டுமுன்னு டிக்கெட் பதிவு செஞ்சு வெச்சிருந்தாலும், போவது கடைசி நிமிடம் வரை உறுதி ஆகாமல் இருந்தது.பொண்ணுக்கு பரீட்சை சமயம், ரங்க்ஸுக்கு, ஆபிஸில் அவசர வேலை என்று நெருக்கடி. ஊருக்கு போகாமலும் இருக்க முடியாது.வரப்போகும் இரண்டு மழலைப்பூக்களுக்கான வரவேற்பு விழா. அப்புறம், முடிவு செஞ்சபடி, நானும், பையரும் ராஜ்தானியில் போவதென்றும்,ரங்க்ஸும்,பெண்ணும், விமானத்தில் வருவதென்றும் முடிவானது.

25-ம் தேதி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸில் ஆரம்பித்து, 2-ம் தேதி நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் முடிந்த ஒன்பது நாள் பயணம் ரொம்ப சுவாரசியமாய் இருந்தது. ஆணிகள் இருந்தாலும், அவ்வப்போது தப்பிக்க முடிஞ்சது.

ராஜ்தானியின் உபசாரங்களை சொல்லி பெண்ணை வெறுப்பேத்திக்கிட்டிருக்கேன். உங்களோடும் பகிர்ந்து கொள்வேன்.

LinkWithin

Related Posts with Thumbnails