Saturday, 6 February 2010

போகும் வழி வெகு தூரமில்லை.

ஸ்ட்ராபெர்ரி,வெனிலா,சாக்லெட்.. எந்த ஃப்ளேவர் வேணும்ன்னாலும் எடுத்துக்கலாம்.உறங்கப்போகும் நேரத்தில் ஐஸ்க்ரீம் தேவையான்னு நினைச்சாலும்,கை தானா நீண்டு,ஸ்டராபெர்ரியை எடுத்துகிட்டது.மத்தியானம் வெனிலாவும், சாக்லெட்டும் வந்தது.மத்தியானம் சரி.. டின்னருக்காவது, சூடா ஏதாவது குடிக்கணும்ங்கிறவங்களுக்காக,மெனுவை ச்சாய்ஸில் விட்டா நல்லாருக்கும்.

இதென்னா.. திடீர்ன்னு காதுக்குள்ள கச்சேரி நடக்குதா!!!! அடிச்சுப்பிடிச்சு எழுந்தா மொபைல் அலாரம் பாடிக்கிட்டிருக்கு!!!. வழக்கமான 'டைட்டானிக்' கை மாத்திட்டதை மறந்துட்டேன்.கொஞ்ச நேரத்தில், 'யாத்ரிகள் கவனத்துக்கு'ன்னு ஆரம்பிச்சு,திருவனந்தபுரம் வரப்போவதை,ஒரு அக்கா சொன்னாங்க.ஒவ்வொரு ஸ்டேஷன் வருவதற்கும்,ஐந்து நிமிஷங்கள்முன்பு அந்தந்த ஸ்டேஷங்கள் பெயரை அறிவிக்கிறாங்க.இது ஒரு நல்ல ஏற்பாடு.

சரியா ஐந்துமணி, நாப்பது நிமிஷத்துக்கு எங்க ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள்,மூக்கை நுழைத்தது.ரயிலைவிட்டு இறங்கி, காத்திருக்கும் நேரத்தில்,'கடுப்பம் கூடுதலாயிட்டு ஒரு ச்சாய'.பையருக்கு, நான் மலையாளத்தை பிச்சு ஒதறி,காயப்போடுவதைப்பாத்து சிரிப்பு தாங்கலை.

திருநெல்வேலிக்கு இங்கிருந்து இன்னும் மூன்றரை மணி நேரப்பயணம்.மாமா கூட வந்ததால் கலகலப்பா இருந்தது. நாலு வருஷத்துக்கு அப்புறம் பாக்கிறோம். அவுங்ககிட்ட குவைத் செய்திகளும், எங்ககிட்ட மும்பை செய்திகளும் இருந்ததால் ஒரு ந்யூஸ் சேனலே ஓடிக்கிட்டிருந்தது.திருவனந்தபுரம் எல்லை தாண்டியதும் பேச்சு மூச்சில்லை. கண்ணுக்கு விருந்து கொட்டிக்கிடக்கிறப்ப ,காது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டுமே.

உலகத்துல உள்ள எல்லா அழகுக்கும்,பிறந்தகம் இதுதான் என்பதுமாதிரி இருக்கு. தென்னந்தோப்புகளும், வயல்வெளிகளும், நீர்நிலைகளும்,கேரளத்துக்கே உரிய அந்த அதிகாலை நேர குளிர் காற்றும் மனசெல்லாம் நிறைஞ்சு போச்சு.வயல்வெளிகளில் பயிர்பச்சைகளுக்கு மேல்,சாம்பிராணி புகை மாதிரி பனி நிக்குது.வழியில் ஐயப்பன் கோவிலில்,வெடிவழிபாடை ஆச்சரியமா பார்த்த மாமாவுக்கு விளக்கி சொன்னேன்.

நாகர்கோவில் அருகே சுங்கான் கடைஎன்னும் இடத்தில் 'ஹோட்டல் கௌரிசங்கர்' புதுசா இருக்கு.அருமையான மெனு. மும்பையில் சில ஹோட்டல்களில் இருப்பதை போலவே, சின்னகடை ஒன்னும் அட்டாச்டா இருக்கு.சாக்லெட் ,பிஸ்கட்,மக்ரோன்,...'பானங்கள்'கூட இருக்குப்பா.. வெளியே இடதுபக்கமா ஜூஸ் செண்டரும் இருக்கு.காலை உணவை முடிச்சிகிட்டு, பயணத்தை தொடர்ந்தோம்.


வேளிமலையின் ஒரு தோற்றம்.
நாகர்கோவிலில் புகுந்து புறப்பட்டு, தோவாளையில் மல்லிப்பூ வாங்கிகிட்டு,ஆரல்வாய்மொழியை கடந்தோம்.முப்பந்தல் முன்னாடி இருக்கிற அந்த ரோட்டில் ரெண்டு பக்கமும்,அடர்த்தியா மரம் வளர்ந்து,பகல்லேயே இருட்டா,ஒருமாதிரி அழகா இருக்கும்.இப்போ ஏதோ பேருக்கு இருக்கு. பக்கத்துல இருந்த பொட்டல்காடெல்லாம்,காத்தாடி ஆலை வந்தபிறகு ஏதோ கொஞ்சம் மரம்,மட்டையோட இருக்கு. இப்போதான் ஆட்களுக்கான குடியிருப்பும் வர ஆரம்பிச்சிடுச்சே. ஆட்கள் வரவர, கொஞ்சமாவது முன்னேறத்தானே வேணும்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு குடியிருப்பையும் பார்த்தேன்.

இங்கிருந்து ஆரம்பிச்சு,வள்ளியூர் தாண்டியும் காத்தாடி பறக்குதாமே. முப்பந்தல் தாண்டும்போது, லேசா வலதுபக்கம் பாத்தா.. காத்தாடிக்கடலே இருக்கு.அன்னிக்கு நல்ல காத்து போலிருக்கு. சும்மா..விர்..விர்.ன்னு சுத்துது.

ஆத்தாடி..காத்தாடி!!!
நல்லாத்தான் இருக்கு 'தங்க நாற்கரச்சாலை' இந்தப்பக்கம் ரெண்டுலேன், அந்தப்பக்கம் ரெண்டுலேன், நடுவில் டிவைடர்..அந்தப்பகுதிகளின் அடையாளமே மாறிட்டது போலிருக்கு.எப்படியோ ..விபத்து நடப்பது குறைஞ்சா சரின்னு சொல்லி வாய் மூடலை..ரோட்டோரத்தில் ஆக்ஸிடெண்ட் ஆகிக்கிடந்த வேன் கண்ணுல பட்டுத்தொலைச்சது.முந்தின நாள் ராத்திரியிலிருந்து அங்கே கிடக்குதாம்.பாவம்... ஒருத்தருக்கும் ஒன்னும் ஆகாம இருக்கணும்.


நாற்கரச்சாலை.
வழியில் மூன்றடைப்பு வந்ததும்,பறவைகள் ஏதாவது தென்படுதான்னு பாத்தா, அங்க தண்ணியே ,ரொம்ப கொஞ்சமாத்தான் இருக்கு.பறவைகள் ஒன்னையும் காணல்லை. ஊருக்குள்ள போயிருக்கோ என்னவோ!!!.

வீட்டுக்கு போய் சேர்ந்து,ரிலாக்ஸாகி,டைம் பாத்தா... அச்சச்சோ!!!! அந்த இடத்துக்கு சாயங்காலம்தான் போக முடியும் போலிருக்கு.






Thursday, 4 February 2010

ராஜ்தானியில் முதல் நாள்.

பயணங்கள் வாழ்வின் சுவாரஸ்யத்தை கொஞ்சம் கூட்டத்தான் செய்யுது.. அதுவும் சொந்தங்களை பாக்கப்போறோம்னா இன்னும் கூடுதல்.சீக்கிரம் போகணும்னு நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜ்தானியில் டிக்கெட் புக் செஞ்சாச்சு.. ஃப்ளைட் போர்.. வேணாமுன்னு முதல்லேயே முடிவு செஞ்சாச்சு. மேலும் கொங்கண் ரெயில் பாதை எப்படி இருக்குமுன்னும் பாக்கணுமே...புறப்படுமிடம், சேருமிடம் ரெண்டையும் சேத்து மொத்தம் பதினேழே ஸ்டாப்பிங்குகள்தான்.இது வாரத்தில் மூணு நாட்கள் தில்லியிலிருந்து புறப்படுகிறது.

காலை அஞ்சு மணி அஞ்சு நிமிஷத்துக்கு ரயில் பன்வெல் வந்து சேருமாம். நாங்க எங்க வழக்கப்படி முக்கால் மணி நேரம் முன்னாடியே ஸ்டேஷன் போயாச்சு.வெயிட் பண்ணும்போது தூக்கமா வருது.. பின்னே!.. முதல் நாள் தூங்கல்லை.. 'குச்..குச்.. ஹோத்தா..ஹை.' படம் பாத்தா எப்பிடி தூங்கிறது.ரெண்டு நாள் நீங்க இல்லாம இருக்கப்போறேனே.. அதுக்கு காம்பன்சேஷனா இப்போ எங்கூட படம் பாருங்க'ன்னு பொண்ணு கூப்பிட்டா மறுக்க மனசு வருமா..அதுவும் 'கஜோல்,ஷாருக்' ஜோடி.

ஒரு வழியா பத்து நிமிஷம் லேட்டா ட்ரெயின் வந்தது. பெட்டிகள் வந்து நிற்கும்போது அதுக்கு நேரா ப்ளாட்பார்மில் இருக்கும் டிஸ்ப்ளேயில் எந்த பெட்டி எங்கே நிக்குதுன்னு டிஜிட்டல் நம்பரில் காண்பிக்கும். பார்த்தவரையில் நிறைய ஸ்டேஷங்களில் அது வேலை செய்வதே இல்லை. புதுசா வர்றவங்க பெட்டி எங்க இருக்குன்னு தெரியாம லக்கேஜோட ஓடறது நடக்குது. இன்ஃபர்மேஷனில் முதலிலேயே விசாரிச்சிகிட்டா இந்த டென்ஷனை தவிர்க்கலாம்.

எடுத்ததுமே, சும்மா நாலுகால் பாய்ச்சலில் ஓடுது வண்டி. பத்து நிமிஷத்தில் டீ..வந்தது. விமானத்தில் இருப்பதைப்போல் சர்வீஸ் இருக்குமுன்னு ரங்க்ஸ் சொன்னது சரிதான். ஒரு ட்ரேயில் ரெண்டு மில்க்பவுடர் சாஷேக்கள்,ரெண்டு சர்க்கரைப்பொட்டலங்கள்,ரெண்டு டீ பவுடர் பாக்கெட்டுகள்,கடிச்சிக்க பிஸ்கெட், ஒரு மின்ட்,ஒரு ஃப்ளாஸ்கில் கொதிக்கும் வென்னீர். இவ்வளவும் வந்தது. டீ நாமதான் போட்டுக்கணும்.ஆறிப்போச்சுன்னா சூடாக்க அடுப்பும் தருவாங்களான்னு கேட்டுப்பாக்கணும்.

சாப்பாட்டை பொறுத்தவரை ராஜ்தானியில் கவலை இல்லை. புக் செய்யும் போதே வெஜ்ஜா.. நான்வெஜ்ஜா.. என்று குறித்து கொடுத்து விடலாம். வேளாவேளைக்கு, வந்து விடும்.சாப்பாட்டின் இடையில் ஸ்னாக்ஸ், சூப்,கூல்டிரிங்க்ஸ் எல்லாம் உண்டு. தண்ணீர் பாட்டில் அவுங்களே கொடுத்திடுவாங்க.சாப்பாட்டுக்கும் சேர்த்துதான் டிக்கெட் விலை.
இந்த ரயில் முழுக்கவும் குளிரூட்டப்பட்டது. காலையில் ந்யூஸ் பேப்பர் சப்ளையும் உண்டு.சர்வீசும் நல்லாவே இருக்கு. ஆரிஃப் சுறுசுறுப்பா, பயணிகள் தூங்கிகிட்டிருந்தாகூட எழுப்பி சாப்பாடு கொடுத்திட்டு போறார்.



ராஜ்தானியின் மெனு

திருவனந்தபுரம் வரை சென்று அங்கிருந்து பேக்கேஜ் டூரில் சுற்றிப்பார்க்க வந்திருந்த ஜோடி எங்க எதிர் சீட்டில் இருந்தாங்க. வி.ஆர். எஸ். வாங்கி ரெண்டு வருஷமாச்சாம். எங்க வேலையாயிருந்தீங்கன்னு கேட்டேன். இந்திய கிரிக்கெட் அணியில் அம்ப்பயரா இருந்தாராம். பேரு..'சந்திரசேகர் மோஹித்தே'. இண்டர் நேஷனல் லெவல் இல்லையாம். இந்தியாவுக்குள் மட்டும்தானாம். Mrs.மோஹித்தே இல்லத்தரசி. கோவா வரை வந்திருக்காங்களாம். தெற்கே வந்ததில்லையாம். அவுங்களுக்காகத்தான் இந்த சுற்றுலாவே. மோஹித்தே தெற்கைப்பற்றி விசாரிக்க ஆரம்பிச்சதும், உற்சாகமா தெரிஞ்ச வரை விம் போட்டு விளக்க ஆரம்பிச்சேன்.

மேடம்,' புடவை எங்கே நல்லதா கிடைக்கும்,ஸ்பைசஸ் எங்கே மலிவா கிடைக்கும்'ன்னு கேட்டு, அவுங்க ஒரு நல்ல இல்லத்தரசிங்கிறதை நிரூபிச்சாங்க.காஞ்சிபுரம் போங்கன்னு அய்யாவோட பர்சு இளைக்க வழி சொன்னேன்.ஐயா உடனே ,நாங்க ஐந்து நாள்தான் ப்ளான் பண்ணியிருக்கோம்ன்னு பர்சை காப்பாத்திக்கிட்டார்.

வழி நெடுக பச்சைப்பசேல்ன்னு இருக்குன்னுதான் சொல்ல ஆசை.. ஆனா,மஹாராஷ்ட்ரா முடியும் வரை காஞ்சு போயில்ல இருக்கு. நிறைய டன்னல்கள் வருமாம், எத்தனைன்னு எண்ணணும்னு வெயிட்டிங்க். ஆனா,தூக்கம் வந்ததால் எட்டுக்கு மேல் எண்ணலை.


சாப்பாட்டுக்கு முன் சூப்

கோவாவைத் தொட்டுக்கொண்டு போகும்ன்னு நெனைச்சா, பார்டரில் இருக்கும்' மட்காவ்' வை தொட்டுக்கொண்டு போகிறது.சாயந்திரம் அஞ்சு மணிக்கெல்லாம் 'மங்களூர்' வந்து விட்டது.ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கொஞ்ச நேரம்தான் நிக்குது.மங்களூரிலிருந்துதான் ரகளை ஆரம்பிக்குது.. தென்னை மரங்களும் சோலைகளும், கேரளா வருமுன்னே அந்த சூழ்நிலைக்கு மனசு போயிடுது.

கேரளாவில் கடற்கரையை ஒட்டியே பெரும்பாலும் ரயில் போவதால் ,சூரிய அஸ்தமனத்தை பாக்க முடிஞ்சது. காயல்களை பாக்க முடிஞ்சது.எதிர் சீட் அம்ப்பயருக்கு இதெல்லாம் பாக்க முடிஞ்சதில் கொள்ளை மகிழ்ச்சி.'குமரகம்','பூவாறு' போன்ற இடங்களை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.லிஸ்டில் சேத்துக்கப்போறேன்னார்.

தம்பியின் மாமனார், காலை நாலு மணிக்கு வருகிறார். ஃப்ளைட் கொஞ்சம் லேட் ஆனதால் நாலேகாலுக்கு லேண்டிங்க். என்னுடைய ட்ரெயின் அஞ்சேமுக்காலுக்கு திருவனந்தபுரம் போய்ச்சேரும். ஆகவே எல்லோரும் சேந்தே போகலாமுன்னு, தம்பியை கூப்பிட்டு சொல்லியாச்சு.மறக்காம அலாரம் வெச்சாச்சு..

ஊருக்கு போயிட்டு வந்தாச்சு..

எதுக்கும் இருக்கட்டுமுன்னு டிக்கெட் பதிவு செஞ்சு வெச்சிருந்தாலும், போவது கடைசி நிமிடம் வரை உறுதி ஆகாமல் இருந்தது.பொண்ணுக்கு பரீட்சை சமயம், ரங்க்ஸுக்கு, ஆபிஸில் அவசர வேலை என்று நெருக்கடி. ஊருக்கு போகாமலும் இருக்க முடியாது.வரப்போகும் இரண்டு மழலைப்பூக்களுக்கான வரவேற்பு விழா. அப்புறம், முடிவு செஞ்சபடி, நானும், பையரும் ராஜ்தானியில் போவதென்றும்,ரங்க்ஸும்,பெண்ணும், விமானத்தில் வருவதென்றும் முடிவானது.

25-ம் தேதி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸில் ஆரம்பித்து, 2-ம் தேதி நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் முடிந்த ஒன்பது நாள் பயணம் ரொம்ப சுவாரசியமாய் இருந்தது. ஆணிகள் இருந்தாலும், அவ்வப்போது தப்பிக்க முடிஞ்சது.

ராஜ்தானியின் உபசாரங்களை சொல்லி பெண்ணை வெறுப்பேத்திக்கிட்டிருக்கேன். உங்களோடும் பகிர்ந்து கொள்வேன்.

Saturday, 23 January 2010

உள்ளிருப்பு போராட்டம்.

தலைப்பிரசவத்துக்காக, இந்தியா வந்திருக்கும் தம்பிமனைவியிடம், போனில் பேசிக்கொண்டிருந்தேன்.ஏழு மாதங்கள் ஆனபின் தான் வருவேன் என்றவள், ஐந்து மாதங்களிலேயே இந்தியா வந்து விட்டாள். 'பனிக்குடத்தில் நீர் கம்மியாக இருக்கிறது, ஆகவே ஏழு,எட்டு மாதங்கள் ஆன நிலையில் விமானப்பயணம் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை' என்று அவளது டாக்டர் சொல்லி விட்டாராம்.எனவே தம்பி, அவசர அவசரமாக குறைந்த நாள் விடுப்பில் கொண்டுவந்து விட்டுவிட்டு, திரும்பிச்சென்று விட்டான்.

பனிக்குட நீர் கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு பாதுகாப்பை கொடுக்கிறது. கர்ப்பிணியின் வயிற்றில் தெரியாத்தனமாக அடிபட்டுவிட்டால்கூட அது குழந்தையை அதிகம் பாதிக்காது. சிசுவின் வளர்ச்சிக்கு, இந்த நீர் மிகவும் முக்கியமானது.சிசு இந்த நீரைக்குடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அதனுடைய நுரையீரல்கள் வளர்ச்சி பெறுகிறதாம். இப்படி குடிக்கப்படும் நீர், சிசுவால் 'சூசூ'வாக வெளியேற்றப்படுகிறது.இதனால் சிசுவை சூழ்ந்திருக்கும் நீரின் அளவு, மெயிண்டெயின் செய்யப்படுகிறது.

சாதாரணமாக 36-37 வாரங்கள் ஆன நிலையில் 800மிலி-1000மிலி வரை இருக்கும். அதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.ஆனால், ரொம்ப சீக்கிரமாகவே குறைய ஆரம்பித்து விட்டால், சிசுவின் அசைவு பாதிக்கப்படுகிறது.ஆகவே கை,கால்கள் வளைந்து பிறத்தல், கிட்னி சரியாக வளர்ச்சி பெறாத நிலையில் பிறத்தல் என்ற சில நிலைகளை சந்திக்க நேரிடும்.நார்மல் டெலிவரி என்பதே கொஞ்சம் கஷ்டமாகி, சிசேரியனுக்கும் இட்டுச்செல்லும்.

இந்த நீர் குறைபாட்டை வழக்கமான செக்கப்புக்கு செல்லும்போதே, டாக்டர்கள் கண்டுபிடித்து,தேவையான மருந்துகளை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இது எதனால் ஏற்படுகிறது, என்பதையும், இன்னும் விளக்கமாக கண்டுபிடிக்க முடியவில்லை.சாதாரணமாக, கர்ப்பிணியின் உடம்பில் ஏற்படும் dehydration, ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆகவே, இந்த சமயத்தில் நிறைய நீர் அருந்துவதையும், ஓய்வு எடுத்துக்கொள்வதையும் சிபாரிசு செய்வார்கள்.இப்படி ஒரு சூழ்நிலையில்தான் அவள் இந்தியா வந்திருந்தாள்.

வழக்கமான விசாரணைகளுக்குப்பின், பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம்.எனக்கு ஏதோ நெருடியது.. ஏனெனில் அவள், மிகவும் கலகலப்பானவள்.தைரியசாலி..ஒரு நிமிடம் கூட சோம்பியிருக்க மாட்டாள். இன்றைக்கு ஏனோ.. சுரத்தில்லாமல் பேசிக்கொண்டிருந்தாள். சரி.. கர்ப்பகால அசதி, தலைப்பிரசவம் என்பதால பயம்,fluid குறைவாக இருப்பதால், ஏதும் பிரச்சினை வருமோ என்ற குழப்பம்... இப்படி ஏதாவது காரணம் இருக்கலாம், என்று நினைத்துக்கொண்டு, "என்னம்மா.. டாக்டரிடம் போனாயா?.. என்ன சொன்னார்?" என்று கேட்டேன்."மைனி..எனக்கு, இந்த ஆஸ்பத்திரி அவ்வளவு திருப்திகரமாக இல்லை, சுகாதாரமாகவே இல்லை.. நான் வேறு ஆஸ்பத்திரி போகப்போகிறேன்" என்றாள். எனக்கு ஒரு நிமிடம் குழப்பமாக இருந்தது. மருத்துவம் சார்ந்த துறையில் பணிபுரியும், எனது இன்னொரு அண்ணிக்கு அங்கே நல்ல பழக்கம் உண்டு, அவர்களின் சிபாரிசால்தான் அந்த ஆஸ்பத்திரி தேர்ந்தெடுக்கப்பட்டது.பின் என்ன குழப்பம்.. இங்கே சிபாரிசு இருந்தா.. சிசேரியன் செய்யாம நார்மல் டெலிவரிக்கு காத்திருப்பாங்களாம். அண்ணியால் சிபாரிசு செய்யப்பட்ட ஒருபெண்ணுக்கு ஆபரேஷன் தியேட்டர்வரை சென்று, பின் நார்மல் டெலிவரி ஆனது. இன்னொரு சொந்தக்காரப்பெண், இந்த விபரம் தெரியாமல் விட்டுவிட்டதால் சமீபத்தில், சிசேரியன் ஆனது.

இப்பல்லாம் இந்த சிசேரியன் கலாச்சாரம் பெருகி வருகிறதோ.. என்று ஒரு தோணல்.. நார்மல் என்பதே அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஆகிவிட்டது. எந்த ஆஸ்பத்திரியிலும், அவசரப்பட்டு செய்வதில்லை.. என்று நினைத்தாலும்,வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் நார்மலுக்கு காத்திருக்கலாமே என்று ஒரு ஆதங்கம்.

அவள் குறிப்பிட்ட வேறொரு ஆஸ்பத்திரி, நான் ஏற்கனவே அவளிடம் சொன்னதுதான், இங்கே,இந்த நீர் குறைபாட்டுடன் வரும் கர்ப்பிணிகளை,முழு கவனத்துடன் பார்த்துக்கொள்கிறார்கள். வேறுவழியில்லை என்றால் தவிர சிசேரியன் செய்வதில்லை.அங்கேதான் போகப்போகிறேன் என்றிருக்கிறாள். 'எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமே பகவானே' என்றிருக்கிறது.

Wednesday, 20 January 2010

ஏம்ப்பா.... இப்படி??????.

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள்ளாம் ஆரம்பிக்கப்போவுது.இவ்வளவு நாள் சரியா படிக்காதவங்க கூட,இப்போ ராத்திரி, பகலா விழுந்து, விழுந்து படிக்க ஆரம்பிச்சிருப்பாங்க..அம்மாக்களெல்லாம் ஹார்லிக்ஸும், மசாலா டீயும் போட்டுக்கொடுத்துட்டு, ஏதோ அவுங்க பரீட்சை எழுதப்போவது போல, டென்ஷனோட கூடவே முழிச்சிருப்பாங்க!!!. பாத்துப்பாத்து சமைச்சு கொடுப்பாங்க...

"கீரை சாப்புடு.... பழம் சாப்புடு.... பாவம்.. ராப்பகலா முழிச்சு புள்ளைக்கு உஷ்ணம் ஏறிப்போச்சு..படிச்சு,படிச்சு, புள்ளைக்கு தொண்டை கட்டிப்போச்சுன்னு சொல்லி சுக்கு காப்பி போட்டு கொண்டு வந்து, பக்குவமா ஆத்தி, புள்ளை இருக்கிற இடத்துக்கே, கையில கொண்டாந்து கொடுப்பாங்க..

புள்ளைங்களை பச்சத்தண்ணியில, குளிக்கக்கூட விட மாட்டாங்க.. ஜலதோஷம் பிடிச்சுக்குமாம்...லேசா ஒரு தும்மல் போட்டாக்கூட 'புள்ளையை சரியா கவனிக்கிறதை விட வேற என்ன வேலைன்னு'அம்மாவுக்கு திட்டு விழும்...பொதுப்பரீட்சை வருதுன்னு புள்ளையை பொத்தி பொத்தி, பாத்துக்குவாங்க..

பரிச்சை ஆரம்பமானதுலேர்ந்து,புள்ள படிக்கிது,அதோட கவனம் செதறக்கூடாதுன்னு சொல்லி,இவங்க கவனமா பாத்துப்பாங்க.பரிச்சைக்கு வேண்டிய எல்லாம் சரியா கொண்டு போவுதான்னு ஒன்னுக்கு ரெண்டு தரம் சரிபாத்து வைக்கிற பெற்றோர்கள் நிறையா பேர் இருக்காங்க.

அவுங்க மனசுலேயும் லேசா கலக்கம் இருக்கத்தான் செய்யும்.அவுங்க கலக்கம் பரிச்சையை நெனைச்சு இல்ல.. ரிசல்ட்டை நெனைச்சுதான்..ஊர்ல உள்ள, இல்லாத பொல்லாத நெனைப்பெல்லாம் அப்பத்தான் ஓடிவரும்."யப்பா!... கொலசாமி.... எம்புள்ளைக்கி நல்ல படிப்பையும், புத்தியையும் கொடுப்பா"ன்னு,ஆயிரத்தெட்டு வேண்டுதல் வெப்பாங்க.ரிசல்ட் வர்ற அன்னிக்கு புள்ளையை விட, டென்ஷன் படற பெத்தவங்க எக்கச்சக்கம். எல்லாம்...... இந்த பாழாப்போன அறிவு, அன்னைக்குன்னு சில புள்ளைங்களுக்கு மழுங்கிப்போயிருதே....அதை நெனைச்சுத்தான். அங்கன,.. அந்தப்பையன் அப்படி பண்ணிக்கிட்டான், இங்கன, இந்தப்பொண்ணு இப்படி பண்ணிக்கிட்டா அப்டிங்கிற ரிசல்ட்டும் சேர்ந்தே இல்ல வருது..

ஏஞ்சாமி....படிப்ஸ் பார்ட்டிங்களை விடுங்க...அவுங்க பாஸாகிடுவாங்க... கொஞ்சம் முயற்சி செஞ்சா தேறுறவங்க, கடைசி நேரத்துல, விழுந்து விழுந்து படிச்சிட்டு ஓடுறவங்க இவுங்கள்ளாம் கொஞ்சம் யோசிக்கலாமில்ல...பெத்தவங்க கண்ணீருக்கு யாருப்பா பதில் சொல்றது.. இப்பல்லாம், அனேகமா புள்ளைங்க இஷ்டப்படற படிப்பைத்தானே படிக்கிறாங்க....அப்படி இல்லையா... மொதல்லே அப்பா.. அம்மா.... கிட்டே உட்கார்ந்து பேசுங்க... புரிய வையுங்க..."ஃப்யூச்சர்ல என்னவா ஆகப்போறோம்கிறதை எட்டு, அல்லது ஒன்பதாம் வகுப்பு வரும்போதே முடிவு செஞ்சுக்கோங்க,அதுக்கேத்த மாதிரி உழைங்க" அப்டின்னு நான் இல்லை,.. ஒரு அறிஞர் சொல்லியிருக்கார்.

அவரவருக்கான அரிசியை ஆண்டவன் அளந்து வெச்சிருப்பான், அதனால தயவு செஞ்சு மனச அலைபாய விடாதீங்க.

அப்பா... அம்மாக்களும் கொஞ்சம் யோசிக்கணும். பரிச்சை கிட்டே வந்த பிறகு, பசங்களை ஓட ஓட விரட்டுவதை விட,மொதல்லேயே அவங்க கிட்ட உக்காந்து பேசுங்க... ஏதாவது பிரச்சினை இருந்தா, அவங்களுக்கு அதை தீர்க்க உதவி செய்யுங்க.. இதில் முக்கியம், தீர்க்கிறேன் பேர்வழின்னு நீங்களே பிரச்சினையா மாறிடாதீங்க...

அவங்களுக்கு, தேவையானத வாங்கி கொடுப்பது மட்டுமில்லை... வீட்டுல படிக்கிறதுக்கான அமைதியான சூழ்நிலையையும் உண்டாக்கி கொடுங்க.உங்களோட நிறைவேறாத ஆசைகளை உதாரணமா கலெக்டர், இஞ்சினியர், டாக்டர்ன்னு இருந்தா அவுங்க மேல திணிக்காதீங்க. ரிசல்ட் பற்றிய பயம் அவங்களுக்கு வராம பாத்துக்கோங்க..படிக்கிறப்ப லேசான கண்காணிப்பு தேவை...பாடங்களை கரெக்டா முடிக்க முடியலையா... டைம்டேபிள் போட்டு படிக்கச்சொல்லுங்க...

ஓரொருத்தருக்கு, ஓரொரு மாதிரி படிக்கிற பழக்கம் இருக்கும். "நான் விடியக்காலையில எந்திரிச்சு படிச்சேன். நீயும் அப்டித்தான் படிக்கணும்"ன்னு எல்லாம் வற்புறுத்தாதீங்க. அவங்களுக்கு, தன்னம்பிக்கை வர்றமாதிரி பேசுங்க..என்ன மார்க் வாங்கினாலும், அப்பா...அம்மா... நம்மள வெறுக்க மாட்டாங்கன்னு நம்பிக்கை வெச்சாலே , அந்தப்புள்ளை, தவறா முடிவெடுக்காது.


Tuesday, 19 January 2010

நெசமாவா....

காரண காரியங்கள்
எதுவும்,
தேவைப்படவில்லை!..

அழவைப்பதென்று
முடிவானபின்,
காரணங்கள் தேடுவது
கஷ்டமாகவும் இல்லை!!.

கண்ணீர் மல்கி,வெதும்பி,
குரல் குழற
கேட்டான் அவன்;
"நெசமாத்தான் சொல்றியா"

பட்டுப்பூச்சி சிறகடிப்பை
கண்களில் காட்டி
சொன்னாள் அவள்,

"நெசமாத்தான்!!
எங்கப்பா,
ரெண்டு பொம்மை
வாங்கியாந்தாரே!!!"

ஆற்றாமையுடன்
எறிந்த கல்பட்டு,
சுக்குநூறாய் உடைந்தது,
குட்டையில் மிதந்த
அழுக்கு நிலா!!..


Friday, 15 January 2010

சுட்டசூரியன்..

சூரியனை 'சுட்டது' யாரு..!!!!!



இன்று பிடித்த கிரகணம்.






கேமிராவுக்கும் கண்ணாடி போட்டுதான் எடுக்கப்பட்டது.

சந்திரரோ... சூரியரோ... யார்தான் இது..!!!!



கிளியக்கா..!!!! கிரகணத்தை வெறுங்கண்ணால் பாக்காதே..

என்னவோ.... வளையல் கிரகணமாமே... தங்கம் விக்கிற விலையில் வளையலை இப்படித்தான் பாத்துக்கணுமோ.!!!!!!.



LinkWithin

Related Posts with Thumbnails