Wednesday, 20 May 2026

ஹைக்கூ..


மலர்ந்து புன்னகைக்கின்றன
விதானத்தில் பூத்த மல்லிகையாய்
வானத்து நட்சத்திரங்கள்

***************
பருத்திக் காடெங்கும்
நிலா பூத்தது போல்
வெடித்திருக்கிறது பஞ்சு.

***************
நிலா பூத்திருக்கிறது
காடெங்கும் இதழ் உதிர்தலாய்
வெடித்த பஞ்சு.

***************
அழைப்புக்கு மறுமொழியில்லை
எட்டுக்கட்டையில் வீறிட்டுக் கத்துகிறது
மின்சாரக் குருவி

***************
அஸ்திவாரம் பலமில்லை
அடியோடு சரிந்து விழுகிறது
பலவீனமான மனக்கோட்டை

***************
இடிந்து கிடக்கிறது
நெடுகப் பிரித்த நீள்சுவர்
பாராமுகமாய் சகோதரர்கள்

***************
கேட்டது கிடைக்கவில்லையாம்
நிமிர்ந்துநின்று அடம் பிடிக்கிறது
வௌவாலின் குழந்தை

***************
பிரம்மாண்டமாய் பயமுறுத்துகிறது
ஊர்ந்து செல்லும் முதலை
பல்லியின் நிழல்

***************
தொட்டால் மட்டுமல்ல
பார்த்தாலும் தூக்கியடிக்கும் மின்சாரம்
கட்டண அறிக்கைவழி.

***************
வெய்யில் விகசிக்கிறது
அலைவுறும் நீரில் தவழ்கின்றன
மின்னும் நிலாத்துண்டங்கள்.

***************

Monday, 27 April 2026

மௌனத்தின் நறுமணம் - சிறுகதை (பண்புடன் மின்னிதழில் வெளியானது)


சென்னையின் எழும்பூர் இரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, அவனது காதுகளில் நகரத்தின் ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருந்தது. அது வெறும் புறவுலகின் சத்தமல்ல; கடந்த ஐந்து ஆண்டுகளாக அவனது மூளையை சதா அரித்துக் கொண்டிருந்த இலக்குகளின், மின்னஞ்சல்களின், மற்றும் அர்த்தமற்ற உரையாடல்களின் தொகுப்பு. குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து வண்ணவண்ண எண்களோடும் எழுத்துகளோடும் படங்களோடும் மல்லுக்கட்டிய அவனது மூளை, இப்போது சிக்னலில் தெரியவிருக்கும் ஒரு சொட்டுப் பச்சை நிறத்திற்காக ஏங்கியது. எப்போது ஊருக்குப்போய் நிம்மதியாக இருப்போம் என்றிருந்தது.

சென்னையின் அசுரவேகப் பிடியிலிருந்து தப்பித்து, ஒரு நீண்ட பெருமூச்சோடு இரயிலேறினான். குளிர்சாதனப் பெட்டியின் செயற்கைக் குளிர் காற்று அவனது நுரையீரலைச் சுட்டது. கையில் இருந்த லேப்டாப் பையை ஒருமுறை பார்த்தான். ஐந்து ஆண்டுகள்… ஐந்து ஆண்டுகளில் அவன் புழங்கியது வெறும் எண்களோடும் குறியீடுகளோடும், இழந்தது சொந்த மண்ணின் ஈரத்தையும், அந்த மனிதர்களின் அன்பையும்.

இரயில் தண்டவாளங்களில் தாளம் தட்டியபோது, சுபாஷின் மனம் காலச் சக்கரத்தில் பின்னோக்கி உருண்டது. ஊருக்குப் போகிறோம் என்ற எண்ணமே அவனுக்குள் ஒரு கலவையான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. கடைசியாக அவன் ஊருக்குப்போனது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது ஊர் எப்படியிருக்கும்? மனிதர்கள் எப்படியிருப்பார்கள்? தெரு முனையிலிருந்த அந்தப் பழைய வீட்டை அதன் சொந்தக்காரர்கள் இடித்துப் புதிதாகக் கட்டுகிறார்கள் என அம்மா ஒரு முறை சொல்லியிருந்தாள். எனில், அதன் வாசலிலிருக்கும் செண்பகப்பூ மரத்தையும் வெட்டியிருப்பார்களோ?! என யோசித்தான்.

அதிகாலை நான்கு மணிக்கு இரயில் நிலையத்தில் இறங்கியபோது, மார்கழியின் அதிகாலைப்பனியிலும் அவனது மண்ணுக்கே உரித்தான அந்த இளம் சாரல் காற்றிலும் தேகம் சிலிர்த்தது. ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, அந்த அதிகாலையிலும் ஒரு சில தேநீர்க்கடைகள் இயங்கிக்கொண்டிருந்தன. விபூதி பூசிய பாய்லர், பால் பாத்திரம், கடைக்குத் தனி அழகைக்கொடுத்தன. சாம்பிராணியும் மலர்களும் மணக்க சுவரில் அடித்திருந்த ஷெல்பில் வீற்றிருந்தனர் தெய்வங்கள். அன்றைய தினம் முதன்முதலாய்க் காய்ச்சிய பால் ஒரு தம்ளரில் அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்தது. கூடவே இரண்டு வடைகளும். தூக்கத்தை உதற ஒரு டீ குடிக்கலாமா? என நினைத்தவன், வீட்டிற்குப் போய் அம்மாவின் கையால் குடித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து, நிலையத்தின் வாசலில் நின்ற ஆட்டோவில் ஏறினான். தன் வீட்டின் வாசலில் நின்றபோது, பழைய வேப்பமரத்தின் கசப்பு கலந்த மணம் அவனை அணைத்துக் கொண்டது.

அவனது அம்மா அலமேலு, வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தவள், மகனைக் கண்டதும் கையில் இருந்த கோலமாவைச் சிறதவிட்டு ஓடி வந்தாள்.

“வா மக்களே.. தேகம் ஏன் இப்படிக் கறுத்துப் போயிருக்கு? ஆளே மெலிஞ்சுட்டியே. நேரத்துக்குச் சாப்புடுகியா இல்லியா?” – அம்மாவின் பாசம் எப்போதும் மாறாதது, அது காலத்தைக் கடந்த ஒரு மகா நதி.

மறுநாள் காலை, கோயிலுக்குச் சென்ற சுபாஷ், அந்தக் காட்சியைக் கண்டான்.

பிள்ளையார் கோயிலின் வெளியே அந்த சின்ன பூக்கடையில், பூங்காவனம் அமர்ந்திருந்தாள். பூக்காரம்மாளின் மகள் அவள்.

அவள் கைகள் பூக்களைத் தொடுக்கும் விதம் ஒரு கவிதை போல இருந்தது. ஒவ்வொரு மலரையும் நாரிடம் ஒப்படைக்கும்போதும், அதனிடம் ஏதோ ஒரு ரகசியத்தை பகிர்கிறாளோ, அந்த சுவாரஸ்யத்தில் அவை தன்னைத்தானே தொடுத்துக் கொள்கின்றனவோ எனும்படி இருந்தது. தியானம் போல் பூத்தொடுத்துக்கொண்டிருந்த அவளது முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அவளது கண்கள் ஒரு பேராழியைப் போலத் தெளிந்திருந்தன.

சுபாஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது இயல்பல்லாத விசித்திரமான அமைதி, அவனை ஒருவித அசௌகரியத்திற்கு உள்ளாக்கியது. அவள் ஒரு மொட்டைப் போலத் தன்னைத் தானே சுருக்கிக் கொண்டு, உலகத்திற்கும் தனக்கும் இடையே ஒரு கண்ணுக்குத் தெரியாத திரையைத் தொங்கவிட்டிருந்தது போலத் தோன்றியது.

மதிய உணவின் போது, அலமேலு சூடாகப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது சுபாஷ் மெல்லப் பேச்சைத் தொடங்கினான்.

“அம்மா, கோயிலில் பூங்காவனத்தைப் பார்த்தேன். பூக்காரம்மா மகள்தானே? ஏன் அவ ஒரு மாதிரியா இருக்கா? பூ வாங்க வர்றவங்க கிட்ட கூட ஒண்ணு ரெண்டு வார்த்தைகள்தான் பேசறா. முன்னாடி நல்லாத் துறுதுறுன்னு பேசிட்டுத் திரிவாளே?”

அலமேலு பெருமூச்சு விட்டு ஒரு கணம் அமைதியானாள். “அவ ஒரு மாதிரி ஆயிட்டாடா சுபாஷ். ‘ஏண்டி இப்படி இருக்க?’ன்னு கேட்டா, அவ சிரிப்பா… ஆனா அந்தச் சிரிப்புல சத்தமே இருக்காது. அவளுக்குப் படிப்பு வரும், ஆனா படிக்கப்போக மாட்டேன்னுட்டா. வீட்டு வேலை, தோட்ட வேலைன்னு எல்லாமும் அழகா நறுவிசா செய்ய வரும். அவ கையால ஒரு சொம்பு தண்ணி ஊத்துனாலே அந்த மகிழ்ச்சியில தோட்டமே பூத்துச்சொரிஞ்சுரும். ஆனா அவ எதையும் அவளுக்கா மனசுல தோணுனாத்தான் செய்வா. பட்டணத்துல இருக்கற அவ அக்கா வீட்டுக்குக் கூட்டிட்டுப்போனாலாவது அங்க அவ வயசுல இருக்கற பிள்ளைகளைப்பார்த்து இவளும் கலகலப்பா இருப்பான்னு நினைச்சாங்க. ம்ஹூம்.. போக மாட்டேன்னுட்டா. இந்த ஊர்ல இருக்குற பூக்களோடவே அவளோட காலம் கழிஞ்சுட்டு இருக்கு.”

“ஏன்மா, அவளுக்கு ஏதாவது மனசுக்கஷ்டமா?”

“தெரியலடா. நீ தட்டைப் பார்த்து சாப்பிடு. இன்னுங்கொஞ்சம் பொரியல் வைக்கட்டுமா?“

ஊரே அவளைப் பற்றி ஒரு விசித்திரமான கதையைச் சொல்லிக் கொண்டிருந்தது—”பூக்காத மொட்டு” என்று. அவள் யாரிடமும் பேசுவதில்லை, சிரிப்பதில்லை என அம்மா சொன்னதிலிருந்து, ‘ஏன் இப்படியிருக்கிறாள்?’ என்ற கேள்வி அவன் தலைக்குள் குளவியாய்க் குடைந்து கொண்டிருந்தது.

அன்றைக்கு மாலை வேளையில், காலாற நடந்துகொண்டிருந்த சுபாஷ், கோவிலிலிருந்த நந்தவனத்திற்குச் சென்றான். அங்கே பூங்காவனம் தனியாகப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். செடிகளுக்கு இடையே அவள் மறைந்து மறைந்து தெரிவது, ஒரு தேவதை தன் தோட்டத்தைப் பராமரிப்பது போல இருந்தது. சுபாஷ் மெல்ல அவளை நெருங்கினான்.

“பூங்காவனம்… என்னை ஞாபகம் இருக்கா?”

அவள் நிமிர்ந்து பார்த்தாள், அந்தப் பார்வையில் ஒரு தீட்சண்யம் இருந்தது. புன்னகைத்தாள். “ஞாபகம் இருக்கு சுபாஷ். சென்னைக்குப் போயிட்டு வந்திருக்கீங்க. அஞ்சு வருஷம் உங்க உருவத்துல நிறைய மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தாலும் உங்க குரல் அப்படியே இருக்கு.”

அவளுக்குத் தன்னை ஞாபகமிருப்பது குறித்து அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. பூப்பறித்துக்கொண்டே நகர்ந்த அவளை அவனும் தொடர்ந்தான்.

“ஆனா நீ நிறைய்ய மாறியிருக்கே. ஏன் பூங்காவனம் இப்படி மௌனமா இருக்க? ஊரே உன்னைப் பத்திப் பேசுது. ஏன் யார்கிட்டயும் பேசுறது இல்லை? யாரோடாவது உனக்கு மனத்தாங்கலா?”

பூங்காவனம் தன் கையில் இருந்த ஒரு மல்லிகை மொட்டை வருடியபடி பேசினாள்.

“சுபாஷ்… சென்னை எப்படி இருக்கு?”

“நல்லா இருக்கு… ஆனா, இங்க இருக்கற மாதிரி அமைதியா இருக்காது, நம்ம ஊரை நான் ரொம்பவே நினைச்சுப்பேன்” என்றான் தயக்கத்துடன். “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை. சின்னப்பிள்ளைகளா நாம விளையாடறப்ப எவ்ளோ கலகலப்பா வாய் ஓயாம பேசிட்டே இருப்ப. நீ ஏன் பூங்காவனம் இப்படி மாறிட்ட? ஏன் யார்கிட்டயும் பேசுறது இல்ல? ஊரே உன்னை ‘பூக்காத மொட்டு’ன்னு கிண்டல் பண்றது உனக்கு வருத்தமா இல்லையா?”

பூங்காவனம் அருகில் மரத்தின் கிளையில் இருந்த ஒரு செண்பகப் பூவைப் பறித்துக் கூடையில் போட்டாள். “பூக்குறதுன்னா என்ன சுபாஷ்? இதோ இந்தச் செம்பகப்பூ போல இதழ் விரிச்சுத் தன்னை, தன் மனசை, தன் எண்ணங்களை மத்தவங்களுக்குக் காட்டுறது மட்டும்தான் பூக்குறதா? என் மௌனமும் ஒரு பூதான். அதை நுகரத் தெரிஞ்சவங்களுக்குத்தான் அதோட வாசனை புரியும்.”

அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒரு முதிர்ச்சி இருந்தது. “உங்க நகரத்துல ஒரு நிமிஷமாவது சத்தம் இல்லாம இருக்க முடியுமா? உங்க போன், உங்க கம்ப்யூட்டர், உங்க கார்… எல்லாம் சத்தம் போட்டுட்டே இருக்கு. அந்தச்சத்தம் எனக்குப் பிடிக்கவேயில்லை. இங்க, இந்த இயற்கைக்கு நடுவுல இருக்குற அமைதியிலும், இந்தப்பூக்களின் மௌனத்திலும் எனக்கு என்னவோ இனம் புரியாத நிம்மதி கிடைக்குது”

சுபாஷ் பேச முடியாமல் நின்றான். அவளது வார்த்தைகள் வெறும் பேச்சல்ல;

“இங்க பாருங்க… இந்தச் செடியில இருக்குற ஆயிரம் மொட்டுகளை.. நானும் பூக்காத மொட்டாவே இருக்க விரும்புறேன். ஏன்னா, மொட்டுக்குள்ள தான் அந்தப் பூவோட மொத்த வாசமும் செறிஞ்சு இருக்கு. விரிஞ்சா சில மணித்துளிகள்ல அது காத்துல கரைஞ்சு போயிரும். என் மௌனமும் அப்படித்தான். அமைதியா இருக்கேன், அதனால நிம்மதியா இருக்கேன். ஆனாலும், இந்தப் பூக்களோடு, இந்த மண்ணோட ஈரத்தோடு, இந்தக்காத்தோடு, இந்தத் தேனீக்களோடு நான் நிறைய்யப் பேசிக்கிட்டுதானிருக்கேன்.

“நான் ஏன் பூக்கணும் சுபாஷ்? பூத்தாப் பறிப்பாங்க… இல்லன்னா வாடி காய்ஞ்சு விழும். மொட்டாவே இருக்கும்போது நான் எனக்குள்ளே முழுமையா இருக்கேன்

அவள் தொடர்ந்தாள், “நீங்க எல்லாரும் ஒருத்தரோடொருத்தர் பேசறீங்க, ஒருத்தரையொருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கிட்டதா நினைச்சுக்கறீங்க. உண்மையில் யாரும் யாரையும் புரிஞ்சுக்கறது இல்லை. இங்க, நான் அதிகமா பேசாம இருக்கேன்.. அதனாலயே எல்லோரையும் எல்லாத்தையும் கவனிச்சு ஆழமாப்புரிஞ்சுக்கறேன். நீங்கல்லாம் பேசிப்பேசி பிரச்சினைகள் கூடுதலாகி ஒருத்தருக்கொருத்தர் மனத்தாங்கலோடு கடைசியில் பேசாம இருந்துடறீங்க. நான் ஆரம்பத்துலயே பேச்சைக் குறைச்சுக்கிட்டேன். அது அப்படியே பழகிடுச்சு, நல்லாருக்கு.. அவ்ளோதான்”

சூரியன் மறையத் தொடங்கியது. பூங்காவனம் தன் கூடையைத் தூக்கிக் கொண்டு மௌனமாகப் படியிறங்கினாள். அவளது பாதங்கள் மண்ணில் படாதது போல ஒரு பிரமை. அவள் விட்டுச் சென்ற அந்தப் பூக்களின் வாசனையை விட, அவளது வார்த்தைகளின் மணம் சுபாஷின் மனதிற்குள் ஆழமாக இறங்கியது.

அவளது அறிவு, அவளது முதிர்ச்சி, அவளது தெளிவு… இவை எதையும் அவன் எங்கேயும் யாரிடமும் இதுவரை கண்டதில்லை. அவள் பூக்காத மொட்டு அல்ல; அவள் பூக்கத் தேவையில்லாத அளவுக்குத் தன்னுள் மலர்ந்துவிட்ட ஒரு முழுமை.

அன்று இரவு சுபாஷால் உறங்க முடியவில்லை. ஜன்னல் வழியாக நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான். விடியற்காலையில் பூஜைக்காக தூரத்தில் கோயில் மணியின் சத்தம் மெலிதாகக் கேட்டது. சுபாஷ் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, தூரத்தில் பூங்காவனம் கோயிலுக்குப் பூக்கூடையுடன் செல்வது தெரிந்தது. உடன் நடந்துகொண்டிருந்தவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தபோதும், அவள் இப்போதும் அமைதியாகவே நடந்துகொண்டிருந்தாள். அவளது மௌனம் அந்த ஊர் முழுவதும் ஒரு நறுமணமாகப் பரவிக் கொண்டிருந்தது. அவனுக்கு இப்போது புரிந்தது.. அவள் அதிகம் பேசாத ஒரு பூக்காத மொட்டாகவே இருக்கத் தீர்மானித்திருப்பது, இந்த உலகத்திடமிருந்து தன் மௌனத்தின் நறுமணத்தைத் தற்காத்துக் கொள்ளத்தான்.

மறுநாள் காலை, அவன் மீண்டும் சென்னைக்குக் கிளம்பத் தயாரானான். ஆனால், இம்முறை அவனது கண்களில் ஒரு தெளிவு இருந்தது. அவன் தன் பையில் ஒரு காய்ந்த மகிழம்பூவை எடுத்துப் போட்டுக்கொண்டான். அந்தப் பூவின் நறுமணம் அவனுக்குப் பூங்காவனத்தின் மௌனத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். அவனுக்குள் பூங்காவனம் விதைத்த அந்த மௌனத்தின் விதை ஒரு விருட்சமாக வளரத் தொடங்கியிருந்தது.

வண்டி நகரத் தொடங்கியது..

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, 20 April 2026

நிழல் சுமக்கும் நதி - சிறுகதை (வாசகசாலை மின்னிதழில் வெளியானது)


கார்த்திக்கின் மனதுக்குள் ஒரு பெரும் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. செம்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் அவன் நின்றிருந்தபோது, அந்த இடமே ஒரு மாபெரும் இயந்திரத்தின் இரைச்சல் மிகுந்த உதிரிப்பாகமாகத் தெரிந்தது. கன்னியாகுமரியின் எங்கோ ஒரு கோடியில், வாகனப்புகை அண்டாத ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்த அவனுக்கு இந்த நகரத்தின் பரபரப்பும், தூசியும், வாகனப்புகையும் ஒரு ஒவ்வாமையைத்தந்திருந்தது. அதிகாலையில் கேட்கும் குயிலோசையும், ஊரைச்சுற்றியிருக்கும் தென்னந்தோப்புகளும் அவனது நினைவுகளில் நிழலாடின. அவற்றையே நினைத்து நினைத்து ஏங்கினான், குடும்பச்சூழல் காரணமாக மும்பையில் கொண்டு வந்து தூக்கிப்போட்ட விதியைச் சபித்தான். அவியலும் எரிசேரியுமாகச்சாப்பிட்டுப் பழக்கப்பட்ட நாக்கு, மிசல் பாவ், வடா பாவ், ப்ரட் கட்லெட் என பழக்கப்படாத மசாலாக்களால் சுவையுணரும் சக்தியை இழந்து கிடந்தது. என்றைக்காவது ரொம்பவும் ஆசை ஏற்பட்டால் வாஷியின் ரயில் நிலையத்திலிருந்து கூப்பிடு தொலைவிலிருந்த கேரளா ஹவுஸுக்குப் போய் மதியம் அவியல் பொரியலுடன் சத்யை உண்டு வருவான். 

வாரந்தோறும் ஊருக்குப் போன் பண்ணும்போது, “இன்னிக்கு என்ன சமையல்?” என அம்மாவிடம் கேட்டுக்கொள்வான். “புளிக்கறி வெச்சு அப்பளம் பொரிச்சேன் மக்கா” என்றால் “என்னை விட்டுட்டு சாப்பிட்டீங்க இல்லே? கொதி விழட்டும்” எனப் பரிகசிப்பான். என்றைக்காவது விசேஷ தினங்களில் அவியல் என்றால் அவன் அந்தப்பக்கம் மௌனமாகி விடுவது இந்தப்பக்கம் அம்மாவின் நெஞ்சில் துக்கமாய் கட்டை போல் உறையும். “அவியல்ன்னா புள்ள பேயா திம்பானே” என அன்று முழுவதும் புலம்பி வீட்டிலிருக்கும் மற்றவர்களையும் சாப்பிட விடாமல் ஆக்குவாள். ஊரின் ஏக்கம் மிகுந்து தளும்பிய ஓர் நாளில், “ஊருக்கு வந்துரலாம்ன்னு பாக்கேன்மா” என அவன் சொன்னபோது அவள், “வந்துரு மக்களே.. உள்ளது போல பாத்துக்கிடலாம்” எனச்சொன்னாலும் அதைச்சொல்வதற்கு முன் அவள் ஒரு நிமிடம் மௌனித்தது அவனுக்கு ஆயிரம் அர்த்தங்களைச் சொன்னது. வீட்டு நிலைமையை உத்தேசிக்கும்படி அவள் சொல்வதாகப்பட்டது.

குடும்பத்தின் முதல் பட்டதாரியாகச் சம்பாதிக்கத்தொடங்கும் எல்லாப் பிள்ளைகளுக்கும் இது ஒரு சாபக்கேடு எனப்பட்டது. பிடித்திருக்கிறதோ இல்லையோ.. கிடைத்த வேலையில் சேர வேண்டும், எந்த ஊருக்கானாலும் சரி, எந்த நாடானாலும் சரி.. கேள்வி கேட்காமல் பெட்டியைக்கட்டிக்கொண்டு கிளம்பிப்போக வேண்டும். மாதந்தோறும் வரும் சம்பளத்தை எதிர்பார்த்துக்காத்திருக்கும் அத்தனைக்கனவுகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். கொஞ்சம் வசதியுள்ள அல்லது பிள்ளைகளின் சொல் செல்லுபடியாகும் குடும்பத்தில் பிறந்திருந்தாலாவது ‘எனக்குப் பிடிக்காததை மனசு ஒப்பி செய்ய முடியாது’ என மறுத்துவிடலாம். இங்கே அதற்கும் வழியில்லாமல் இந்த மும்பை மாநகரில் வந்து விழுந்தாயிற்று. வாங்கும் சம்பளத்திற்கு நியாயமாய் கடனேயென்று வேலை பார்த்துக்கொண்டிருந்த போதும், சீக்கிரமே பேப்பர்.. அதாவது ராஜினாமா போட்டு விட வேண்டும் என தினந்தோறும் தோன்றிக்கொண்டிருந்தது.

அவன் ஏறிய ஹார்பர் லைன் லோக்கல் ரயில், ஒரு இரும்புக் கரடியைப் போல உறுமிக்கொண்டு தண்டவாளங்களில் பாய்ந்தது. இன்றைக்குக்கூட்டம் கொஞ்சம் குறைவுதான், பெட்டியினுள்ளே நிற்குமளவுக்கு சற்றுத்தாராளமாகவே இடமிருந்தது. வாசலின் அருகேயே கம்பியில் சாய்ந்து நின்ற கார்த்திக்கின் பார்வை வெளியே விரிந்த மும்பையின் புறநகர் நிலப்பரப்பின் மீது படிந்திருந்தது. அழுக்கு படிந்த குடிசைப் பகுதிகள், வானைத் தொடும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்த சதுப்பு நிலங்கள் என எல்லாமே அவனுக்கு ஒருவித ஒவ்வாமையைத் தந்தன. மும்பை வழக்கப்படி நெஞ்சுப்பக்கமாய்த் திருப்பி மாட்டிக்கொண்ட லேப்டாப் பேக் கனத்தது. இலக்கில்லாமல் வெளியே பார்த்துக்கொண்டிருந்தவன், குறுகுறுவெனத் துளைக்கும் பார்வையை உணர்ந்து பெட்டிக்குள் பார்வையைத்திருப்பினான். சட்டென்று புன்னகைத்து, “நமஸ்தே” என்றான். பதிலுக்கு “நமஸ்தே” என்றார் துக்காராம்.

 ஒரே ரயிலில் தினமும் பார்த்துக்கொள்வதால் பரிச்சயம், எப்போதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக்கொள்வதும், புன்னகையைப் பரிமாறிக்கொள்வதுமுண்டு. சில நாட்களில் லக்கேஜ் கம்பார்ட்மெண்டில் ஏறிவிடுவார். தொளதொளவென்ற வெள்ளை பைஜாமா, வெள்ளைச்சட்டை, தலையில் வெள்ளைவெளேரென்ற குல்லா, நெற்றியில் குங்குமப்பொட்டு இதுதான் துக்காராம். காலடியில் ஏழெட்டு துணிப்பைகள் ஒன்றோடொன்று கோர்த்து இணைக்கப்பட்டுக் கிடந்தன. அவற்றுக்குள் லேசாகத் தெரிந்த விதவிதமான டிபன் பாக்ஸ்களும், பைகளில் வரையப்பட்டிருந்த வண்ணக்குறியீடுகளும் எண்களும் அவர் ஒரு தொழில்முறை டப்பாவாலா என்பதைச்சொல்லாமல் சொல்லின. வீடுகளிலிருந்து அவரவரின் அம்மாவோ, மனைவியோ கொடுத்துவிடும் சூடான சாப்பாட்டை அலுவலகங்களில் குறித்த நேரத்தில் கொண்டு சேர்ப்பவர்கள் அவர்கள்.  

வண்டி வாஷி பாலத்தைக் கடக்கத் தொடங்கியது. கீழே ததும்பிக்கொண்டிருந்த அரபிக்கடலலைகளும், மேலே பறக்கும் கடற்பறவைகளும் ஒரு கணம் கார்த்திக்கின் கவனத்தைத் திருப்பின. அந்த முதியவர் அவனை உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஒரு கருணையும், அதே சமயம் ஒரு பிடிப்பும் இருந்தது. அனுபவசாலியான அவரது பார்வை அவனை அளந்தது. 

"என்ன தம்பி... யோசனை ரொம்ப பலமா இருக்கு?"

அவர் கேட்டது மராத்தியில் என்றாலும், அவரின் கண்களில் இருந்த கனிவு அவனுக்குப் புரிந்தது. ‘ப்ச்’ என்ற ஒலியோடு ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தான். அவர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். அசட்டுச்சிரிப்புடன் அவனுக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் பதில் சொன்னான். "ஒன்னுமில்லை சாச்சா, இந்த ஊரு எனக்குச் செட் ஆகலை.. இங்க இருக்கற வாழ்க்கைமுறை ரொம்பவே பரபரப்பா இருக்கு. நான் எங்க ஊருக்கே போயிடலாம்னு இருக்கேன்"

“ம்… நீ மும்பைக்கு வந்து எத்தனை வருஷங்களாகுது?”

“ஆறு மாசம்..”

“இவ்வளவுதானா?.. ஆறு மாசத்தில் இந்த ஊரைப்பற்றி என்ன புரிஞ்சுக்கிட்டே? இந்த ஊரு இருக்கே.. இதுக்கு நீ என்ன கொடுக்கறியோ அதைப் பத்து மடங்கா உனக்குத் திருப்பிக்கொடுக்கும். மும்பை உன்னைத் தூக்கி எறியாது தம்பி. நீ இந்த ஊரை நேசிச்சா, இந்த ஊர் உன்னைத் தன் குழந்தையா ஏத்துக்கும்” என்றவர் சற்று நேரம் வெளியே ஓடும் காட்சிகளில் லயித்துவிட்டுத்தொடர்ந்தார். “என் அனுபவத்துல சொல்றேன், பிழைப்புத்தேடி வர்றவங்களை, கடுமையா உழைக்கிறவங்களை இந்த மும்பாதேவி என்னிக்கும் கைவிட்டதில்லை. காலூன்றி நிற்க இடம் கிடைச்சாலும் போதும், அதிலும் ஒருத்தன் ஒத்தைக்கால்லயாவது நின்னு வியாபாரம் செஞ்சு சம்பாதிப்பான் பார்த்திருக்கியா?”

நிறையவே பார்த்திருக்கிறான் அவன். ரயிலுக்குள் வரும் சிறு வியாபாரிகளையும் கூட. 

“ஆனாலும், இந்தப் பரபரப்பு.. இந்த வேகம்.. யாரும் யாரோடும் ஒட்டாத தன்மை.. என்னவோ எனக்கு பேசாம ஊருக்கே போய் உறவுகளோட இருந்து கூழோ கஞ்சியோ குடிச்சுட்டுக் கிடக்கலாம் போலிருக்கு” என்றான். 

பெரியவர் மெல்லச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் ஒரு முதிர்ச்சியும், பல ஆண்டுகால அனுபவமும் தெரிந்தது. "மும்பையில வேகம் இருக்கு தம்பி, ஆனா அந்த வேகத்துலதான் இந்த நகரத்தோட உயிர் இருக்கு. யாரோ போல் விலகி நடக்கற இதே மனிதர்கள்தான் மும்பைல ஒவ்வொரு அசம்பாவிதம் நடக்கும்போதும் உறவுகளை விட நெருக்கமா ஒருத்தருக்கொருத்தர் துணையா நிற்பாங்க தெரியுமா?” என்றவர் அமைதியாகி இலக்கில்லாமல் வெளியே பார்த்தார். பின், “இதே மஹாராஷ்ட்ரால சாங்க்லிங்கற ஊர்லதான் பிறந்து வளர்ந்தேன். விவசாயம் பொய்ச்சுப்போய் பிழைக்க வழியில்லாம, நான் மும்பைல வந்து விழுந்தப்ப இந்த நகரம் என்னையும் ஏந்திக்கிட்டு உசிர் கொடுத்தது. ஒட்டுதல் இல்லாத மனிதர்களா இருந்திருந்தா நான் இங்கே பிழைச்சிருக்க முடிஞ்சுருக்குமா? ஆச்சு.. முப்பது வருஷம். எனக்குச்சோறு இந்த ஊர்லதான்னு முடிவாகிருச்சு” எனப் பெருமூச்செறிந்தார்.

விழிகள் விரியக்கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக் குறுக்கிட்டான். “உங்க வாழ்க்கை சுலபத்தில் நல்லா அமைஞ்சுட்டுது, எல்லோருக்கும் அப்படியிருக்குமா?” என்றான்.

பெரியவர் பகபகவெனச்சிரித்தார். “இல்லை தம்பி, இங்க ஒவ்வொரு நொடியும் போராட்டம்தான். நான் ஒரு ரயிலைத்தவற விட்டாலும் அன்னிக்கு சில உசிர்களைப் பட்டினி போட்ட பாவத்துக்கு ஆளாகிருவேன். நல்ல வேளையா அந்த பாண்டுரங்கன் என்னை எப்பவும் காப்பாத்தறான். கொரோனா தாண்டவமாடி, லாக்டவுன் முடிஞ்சப்புறம் எங்க பிழைப்பு பழைய மாதிரி இல்லை தம்பி,. ஒரு நாளைக்கு நாப்பது அம்பது டப்பாக்கள் டெலிவரி கொடுத்த இடத்துல இப்ப பத்துப்பதினஞ்சு டப்பா ஆர்டர் கிடைச்சாலே அதிகம். இப்பத்தான் எல்லோரும் ஆன்லைன்லயே சாப்பாடு ஆர்டர் செஞ்சுக்கறாங்களே.”

ரயில் காற்றில் கலைந்த முடியை ஒதுக்கி விட்டுக்கொண்டான். “அப்புறம் எப்படிச்சமாளிக்கறீங்க?”

“கொஞ்சம் பேர் செக்யூரிட்டி வேலைக்குப்போனோம், சிலர் கிடைச்ச வேலைகளைச்செஞ்சோம். கடனேன்னு செய்யாம கடமையைச்செஞ்சா சலிப்பு வராது” என்ற பெரியவர் கண் சிமிட்டினார். “நாங்க கூரியர் சர்வீஸும் செய்ய ஆரம்பிச்சுட்டோம். எங்க கிட்ட கொடுத்தா எந்த டாகுமெண்டையும் சரியான ஆள் கிட்ட சேர்த்துருவோம். வெள்ளைக்காரனே பாராட்டுன சிஸ்டமாக்கும் எங்களோடது”

“கேக்கறதுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு” என்ற கார்த்திக் தொடர்ந்தான். “ஊரை விட்டு வந்தப்புறம் ஒவ்வொரு நாளும் மனசுக்குள்ள போராடிக்கிட்டே இருக்கேன்”

ரயில் பேலாப்பூரை சமீபித்துக்கொண்டிருந்தது. "தம்பி, கஷ்டம் எல்லா இடத்துலயும் இருக்கும். நீ வெறுக்கற இந்தப் போராட்டம் உன்னை ஒரு மனுஷனா செதுக்கும். சவாலான வாழ்க்கை உன்னைப் பக்குவப்படுத்தும். போராட்டமே இல்லாத வாழ்க்கை, உப்பு இல்லாத சோறு மாதிரி. போராடி ஜெயிக்கிறதுதான் உனக்கு ஒரு அடையாளம் கொடுக்கும்," என்றவர் கனிவுடன் தொடர்ந்தார்.

“ஊருக்குப்போனா மட்டும் சோறு சும்மா வந்துருமா? அங்கியும் உழைப்பேதானே? அந்த உழைப்பை இங்க போடு, நாலு காசு சம்பாதி. கூடப்பிறந்தவங்களுக்கும் உழைக்கக் கத்துக்கொடு. முடிஞ்சா அவங்களுக்கும் நல்ல வழி காட்டி முன்னேத்து. உன்னைப்பார்த்து மத்தவங்களும் கத்துக்கற மாதிரி இரு. வெறுங்கையோட மட்டும் போய் நிக்காதே, அவங்க பார்க்கற பார்வையில் குறுகிடுவே. புத்தியாப்பொழைச்சுக்கோ.. அப்றம் உன் இஷ்டம்”

பெரியவர் பேசப் பேச, கார்த்திக்கின் மனதில் இருந்த பாரம் மெல்லக் குறைந்தது. அவன் இதுவரை மும்பையைப் பார்த்த கோணம் விலகி வேறு கோணம் தெரிந்தது. வாசலருகே நின்றிருந்தவன் எட்டி வெளியே பார்த்தான். ப்ளாட்ஃபாரமும் அதில் அலைமோதி நின்றிருந்த ஜனத்திரளும் தெரிந்தன. இப்போது அந்த வேகம் அவனுக்குப் பயத்தைக் கொடுக்கவில்லை. மாறாக, அந்த வேகம்தான் இந்த நகரத்தின் இதயத்துடிப்பு என்பதை அவன் உணர்ந்தான்.

ரயில் பேலாப்பூர் ஸ்டேஷனை நெருங்கியது. கார்த்திக் தன் போனைப் பார்த்தான். அதில் இருந்த அந்த ராஜினாமா டிராஃப்ட்டை ஒரு நிமிடம் உற்று நோக்கினான். பின், ஒரு தீர்க்கமான முடிவோடு அதை அழித்தான். வண்டி நின்றதும் மனிதக் கூட்டம் ஒரு அருவியைப் போல உள்ளே நுழையத் தொடங்கியது. அந்த நெரிசலுக்குள் துக்காராம் ஒரு மீனைப் போல நீந்தி வெளியேறி மறைந்தார். வெண்முத்துப்போல் அவரது தொப்பி மட்டும் தெரிந்துக்கொண்டிருந்தது. கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு கார்த்திக் பிளாட்பாரத்தில் கால் வைத்தபோது, அவனது கால்களில் ஒரு புதிய உறுதி இருந்தது.

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தபோது, வழக்கமாக எரிச்சலூட்டும் அந்த ஹார்ன் சத்தங்கள் இப்போது ஒரு இசையாகத் தெரிந்தன. பிளாட்பாரத்தில் ஓடும் மனிதர்கள் அவனுக்கு அந்நியர்களாகத் தெரியவில்லை; அவர்களும் அவனைப் போலவே ஏதோ ஒரு லட்சியத்தை நோக்கி ஓடும் சக பயணிகள் என்று புரிந்தது. அந்தப் பிரம்மாண்டமான மனிதக் கடலில் ஒரு துளியாகக் கலப்பதில் ஒரு நிம்மதியைக் கண்டான். மும்பை இப்போது அவனுக்கு அந்நியமாகத் தெரியவில்லை. இதுவும் என் ஊர்தான் என எண்ணிக்கொண்டான்.

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட வாசகசாலை மின்னிதழுக்கு நன்றி.

Monday, 16 March 2026

சாரல் துளிகள்

                      

கொட்டு முழக்கத்துடன் பிறர் எதிர்காலத்தைக் குறி சொல்லும் பூம்பூம் மாட்டுக்காரனை மௌனமாகத் தொடர்கிறது தன் எதிர்காலம் அறியா மாடு.

அத்தனை ஈரத்தையும் அள்ளிப்பருகிய அக்னித்துளிகளைச் சேகரித்த மனது, உருகியுருகி இறுகியது.

பேசிப்பேசியே ஒன்றை நீர்த்துப் போகவும் செய்ய முடியும், அடர்த்தியாக்கவும் முடியும். சலிக்காமல் பேசித்தள்ளுகின்றன வாய்கள், அலுக்காமல் செய்தியைக் கடத்துகின்றன கண்களும் காதுகளும், ஒன்று விடாமல் சேமித்துக்கொள்கிறது மூளை. முடிவெடுக்க வேண்டிய மனமோ திணறிக் களைத்து கடைசியில் ஜடநிலைக்குப்போய் எல்லாவற்றுக்கும் 'ஆமாம்' எனத் தலையாட்ட ஆரம்பிக்கிறது.

காலில் பட்டு நசுங்கவேண்டியிருக்கும், உலர்ந்து சருகாக வேண்டியிருக்கும் என்ற இயற்கை நியதிகளைப் பொருட்படுத்தாமல் தன்பாட்டுக்கு மலர்ந்து உலகைப் பார்க்கின்றன மலர்கள்.

முட்டைப் பருவத்தில் விட்டுச்சென்ற குழந்தைகளைத் தேடித்தேடி ஒவ்வொரு தாவரத்திற்கும் அலமுறையிட்டு அழுது அலைகிறது பட்டாம்பூச்சி.
ததும்பும் நீரைத் தளும்பிச் சிந்திவிட்டு ஓடுகிறது லாரி. பொசுங்கிய பாதங்கள் ஒற்றியொற்றி ஏந்திக்கொள்கின்றன அன்பின் துளிகளை.

அவரவருக்கென்றோர் இடத்தை
அடையப்போராடும் கிளியந்தட்டில்
தனக்குரிய பீடத்தை 
எப்படியோ கண்டறிந்து
அமர்ந்து விடுகின்றன சாமிகள்.

அன்பு எதையும் வற்புறுத்தாது, அன்பின் பெயரால் நடத்தும் ஆக்கிரமிப்போ ஒன்றுமில்லாமல் வழித்துத் துடைத்துவிடும்.

கனிகளின் இனிமையை மட்டும் சிலாகிப்பவன், அதன் பின்னிருக்கும் இயற்கையின் உழைப்பை அறிந்தும் அறியாதவனாகவே காட்டிக்கொள்கிறான்.

காலம் எறிந்து சென்ற
காயங்களை எல்லாம்
கவிதையாக்கிப் பருகிவிடலாம்
கசப்பை இனிப்பாக்கும் வித்தையோடு.

Sunday, 8 March 2026

வலை ஜிமிக்கி - பண்புடன் மின்னிதழில் வெளியானது.


அந்த ஜிமிக்கி அவளுடைய பாட்டி அவளுக்குப் பரிசாகக் கொடுத்தது. நுணுக்கமான தங்க வேலைப்பாடுகள் கொண்ட அந்த டிசைன், சீராகப் பின்னிப்பின்னி பூவும் கொடியுமாக நிறைந்து, விளிம்பில் சின்னஞ்சிறு முத்துகள் தொங்க, சின்ன குடை போல் அவளது காதுகளில் அசைந்து கொண்டிருக்கும். பேசும்போது அவளுடைய தலையாட்டலுக்கேற்ப மெலிதாக அசைந்து கன்னங்களின் ஓரத்தை உரசிச்செல்வது தனி அழகு. வலை ஜிமிக்கி வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டுக்கேட்டதற்காக பிரத்தியேகமாக அவளது பாட்டியே அதை வடிவமைத்து நகைக்கடையில் ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொடுத்திருந்தாள். அம்மாதிரி நுணுக்கத்தை இப்போது வரும் மெஷின் கட் நகைகளில் பார்க்கவே முடியாது.

அந்த ஆண்டு குலதெய்வக்கோவிலின் பொங்கல் திருவிழாவிற்காகத் தன் அப்பாவுடன் சொந்தக் கிராமத்திற்குச் சென்றிருந்தாள் சுவாதி. ஊரே கோலாகலமாக இருந்தது. உறவினர்கள் அனைவரும் பெரியப்பா வீட்டில் கூடியிருந்தார்கள். சுவாதியின் நெருங்கிய உறவினரான பெரியம்மா கஸ்தூரி, சுவாதியை உச்சி முகர்ந்து வரவேற்றார்.

அன்று மாலை திருவிழா முடிந்து அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, கஸ்தூரி சுவாதியின் காதுகளைக் கவனித்தார். வலை ஜிமிக்கியோடு அதன் முத்துகளுக்குப் பொருத்தமாக முத்துகள் கோர்த்த மாட்டலையும் அணிந்திருந்தது வசீகரமான அழகைக் கொடுத்திருந்தது. "சுவாதி, இந்த ஜிமிக்கி எங்கே வாங்கினே? என்னமா ஒரு அழகா இருக்கு! இப்போலாம் இப்படி ஒரு கைவேலைப்பாட்டைப் பார்க்கவே முடியாது," என்று வியந்து சொன்னார்.

சுவாதி பெருமையாகச் சிரித்தாள். "ஆமா பெரியம்மா, இது எங்க பாட்டி எனக்குக் கொடுத்தது."

கஸ்தூரி "சரோஜாக்கும் வலை டிசைன்ல ஒரு ஜோடி ஜிமிக்கி செய்யணும்னு ஆசை. இந்த டிசைன் ரொம்ப அழகாயிருக்கு. ஒரு ரெண்டு நாளைக்குக் கழட்டிக்கொடுத்தீன்னா கடையில் மாடலுக்குக் காமிச்சுட்டுத் திருப்பித்தந்திருவேன்" என்றார். சரோஜா அவரது மகள். சமீபத்தில் திருமணமாகி முதல்முறையாக அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள்.

சுவாதிக்கு இதயம் ஒரு நொடி நின்றது போலிருந்தது. காதுகளிலிருந்து அந்த பாரத்தை இறக்கி வைப்பது, தன் உயிரையே கழற்றிக் கொடுப்பது போல அவளுக்குத் தோன்றியது. அதை அணிந்த நாளிலிருந்து இது வரை கழட்டியிராததால் "பெரியம்மா... இது..." என அவள் இழுத்தாள்.

அப்பா பக்கத்துல இருந்துகொண்டு, "மக்கா, பெரியம்மதானே கேக்கா? குடு... ஒரு ரெண்டு நாள்ல தந்துருவாள்லா? சொந்தக்காரங்ககிட்ட என்ன தயக்கம்?" என்றார். அப்பாவின் சொல்லுக்கு மறுபேச்சு பேசத் தெரியாத சுவாதி, கைகள் நடுங்க அந்த ஜிமிக்கிகளைக் கழற்றிக் கொடுத்தாள். கழற்றிய பின் தன் காதுகள் வெறுமையாக இருப்பதை அவளால் சகிக்க முடியவில்லை.

அடுத்த நாள் காலை, எதிர்பாராத விதமாக அப்பாவிற்கு ஒரு முக்கியமான அவசர அழைப்பு வரவே, குடும்பத்துடன் உடனே ஊருக்குத் திரும்ப வேண்டிய சூழல். சுவாதி பதறிப்போனாள். 

"பெரியம்மா, அந்த ஜிமிக்கி..."

"அதற்குள் என்னம்மா அவசரம்? நகைக்கடைக்குப் போயிட்டு, அடுத்த வாரம் உன் தம்பி ஊருக்கு வரும்போது அவன்கிட்டக் கொடுத்து அனுப்புறேன். இல்லன்னா நானே நேர்ல வந்து தர்றேன்," என்றார் கஸ்தூரி உறுதியாக. சுவாதி கனத்த இதயத்துடன் ஊருக்குத் திரும்பினாள்.

வாரம் ஒன்று கடந்தது. சுவாதி தன் செல்போனை அவ்வப்போது எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள். கஸ்தூரியிடமிருந்து அழைப்பு வரவில்லை. பொறுத்துப் பார்த்துவிட்டு அவளே அழைத்தாள்.

"சுவாதி, இப்போதான் கூப்பிடலாம்னு இருந்தேன்.  இன்னும் ரெண்டு நாள்ல கொண்டு வரேன்" என்றார் கஸ்தூரி. அடுத்த வாரம் அழைத்தபோது, "உங்க ஊருக்குத்தான் பொறப்பட்டுட்டு இருந்தேன், ஒங்க மாமா சொந்தத்துல ஒரு இறப்பு, இப்ப அங்கதான் இருக்கேன். ஊருக்கு வந்ததும் மொத வேலையா ஒங்க வீட்டுக்குத்தான் வருவேன்" என்றார். இப்படி வாரங்கள் மாதங்களாகின. சுவாதிக்கு அழுகையே வந்துவிட்டது. அவளது காதுகளில் ஒரு சாதாரணக் கம்மலைப் போட்டிருந்தாள், ஆனால் அது அவளுக்கு ஏனோ அந்நியமாகவே இருந்தது.

மூன்று மாதங்கள் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாதி மீண்டும் அழைத்தாள். இந்த முறை கஸ்தூரியின் குரலில் ஒருவித நடுக்கம் இருந்தது.

"பெரியம்மா, போதும். என் ஜிமிக்கியைக் கொடுத்துடுங்க. நான் நேர்ல வந்து வாங்கிக்கவா?" என்றாள் கோபமும் அழுகையுமாக.

கஸ்தூரி நீண்ட பெருமூச்சு விட்டார். "சுவாதி... என்னை மன்னிச்சிடுமா. சரோஜாவுக்கு ஜிமிக்கி ஆர்டர் கொடுக்கைல கொஞ்சம் பணத்தட்டுப்பாடு ஆகிட்டுது. கடையில் நின்னுக்கிட்டு இன்னும் நாலு கிராம் எடை கூடுதலாச் செய்யச்சொல்லுங்க, அப்பத்தான் பாரிக்கமா இருக்கும்ன்னு ஒரே நச்சு. எங்க பட்ஜெட்டையும் தாண்டிப்போயிட்டுது. கையிருப்பிலும் காசு இல்ல.  வேற வழியில்லாம உன் ஜிமிக்கியை அடகு வச்சிட்டேன்..."

சுவாதிக்குத் தலை சுற்றியது. "என்ன பெரியம்மா சொல்றீங்க? அது என் பாட்டி எனக்குக் கொடுத்தது. அதை எப்படி நீங்க அடகு வைக்கலாம்?"

"சூழல் அப்படி சுவாதி... இன்னும் ரெண்டு மாசத்துல வயல் அறுவடையானதும் மீட்டுத் தந்துடுறேன்..." என்று அவர் ஏதேதோ சமாதானம் சொன்னார். ஆனால் சுவாதியின் காதுகளில் எதுவும் விழவில்லை. அவள் அடைந்த கோபத்திற்கு எல்லையே இல்லை. பெரியம்மா செய்த நம்பிக்கை துரோகம் அவளைக் குலைத்தது. சுவாதி கோபத்துடன் போனை வைத்தாள். "உறவுன்னா என்னப்பா? ஒருத்தரோட பலவீனத்தை இன்னொருத்தர் லாபமாக்குறதுதானா? ஏன் மனுஷங்க இவ்வளவு சுயநலமா இருக்காங்க?" என்று தன் அப்பாவிடம் பொருமினாள். மாதங்கள் ஓடின. ஆனால் ஜிமிக்கி வந்தபாடில்லை. கண்ணாடியில் முகம் பார்க்கும் போதெல்லாம் அக்காட்சி அவளை வதைத்தது.

ஓராண்டு கழித்து, ஒரு அதிகாலை நேரத்தில் வாசலில் ஆட்டோ நிற்கும் சப்தம் கேட்டது. சுவாதியின் அப்பா கதவைத் திறந்தார். வெளியே கஸ்தூரி நின்றிருந்தார். முகம் வாடிப் போயிருந்தது.

அப்பா எதையும் பேசவில்லை. கஸ்தூரி நேராக சுவாதியின் அறைக்குள் நுழைந்தார். சுவாதி அவரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள். கஸ்தூரி மெதுவாக அவள் அருகில் வந்து அவள் கையைப் பற்றிக்கொண்டார். "சுவாதி..  என்னைய மன்னிச்சிருடி. அந்த ஜிமிக்கிய அடகு வச்ச இடத்துல இருந்து மீட்க முடியல. வட்டி ஏறிப்போச்சு. இப்போ அந்த நகை மூழ்கிப்போச்சு மக்கா..." என்று விம்மினார்.

சுவாதிக்குத் தலையே சுற்றுவது போலிருந்தது, எதிர்பார்த்த அளவுக்கு வயலில் வருமானம் கிடைக்காததால் சரியான நேரத்தில் நகையை மீட்க முடியாமல் மூழ்கிப்போனதையும், எப்பாடு பட்டேனும் அதே போல் நகையைச் செய்து கொண்டு தந்தபின்தான் இனி இந்த வாசல்படி ஏறுவேன் என்றும் பெரியம்மா சொல்லிவிட்டுச் சென்றது கூட கவனத்தில் ஏறாமல் உணர்விழந்து அமர்ந்திருந்தாள். துக்கமும் கோபமும் பொங்கிப்பொங்கி வந்தது. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா!! என உள்ளுக்குள் கசந்தது.

இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. கொஞ்சங்கொஞ்சமாக அந்த நினைவுகளையெல்லாம் மறக்க முயன்று கொண்டிருந்தாள் அவள். என்னதான் எதிர்பாராதவிதமாக நடந்திருந்தாலும் தன்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் எனத்தோன்றியது. அப்பாவிடம் சொல்லி அந்தப் பணத்தைக் கொடுத்து, தானே அந்த நகையை மீட்டிருந்தால் மூழ்கியிருக்காதே! எனவும் யோசித்தாள். பாட்டி ஞாபகமாக வைத்திருந்ததை இப்படிக் கை நழுவ விட்டுவிட்டோமே என தன் மீதே கோபம் கொண்டாள். கோபம் கொஞ்சங்கொஞ்சமாக ஆறிப்போயிருந்தாலும் அதன் வடு இன்னமும் இருந்தது. 

சரோஜாவுக்குக் குழந்தை பிறந்து, அதற்குப் பெயர் சூட்டும் விழாவுக்கு விருப்பமே இல்லாமல்தான் சுவாதி சென்றிருந்தாள். அங்கே போனால் அவர்களையெல்லாம் பார்க்க நேரிடும், நீறு பூத்திருக்கும் நெருப்பு கனன்று கொள்ள ஆரம்பிக்கும் எனப் பயந்தாள். வீட்டினுள் கஸ்தூரி பெரியம்மா ஒரு மூலையில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தார். சரோஜாவின் புகுந்த வீட்டிலும் நிலைமை சரியில்லை எனக் கேள்விப்பட்டிருந்தாள். ஏதோ பணப் பிரச்சனை வர, சரோஜாவின் நகைகளை எல்லாம் அவளது மாமியார் பிடுங்கிக் கொண்டதாகத் தகவல்.

சுவாதியைக்கண்டதும் கஸ்தூரி ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார். கன்னம் தடவி முத்தினார். “நீ வருவேன்னு காத்திருந்தேன் மக்கா” எனச்சொன்னபோது கண்களில் அதே பழைய பாசம் மினுமினுத்ததைக் கண்ட சுவாதிக்கும் உள்ளுக்குள் ஏதோ கரைந்தது. அவளைத் தனியாகக் கூட்டிப்போனவர், பர்ஸ் உள்ளிருந்து ஒரு சிறிய ரோஸ் நிறக் காகிதப்பொட்டலத்தை எடுத்தார். அதனுள்ளிருந்த ஒரு சிறிய பட்டுத் துணியை விரித்தார். உள்ளே அதே வலை டிசைன் ஜிமிக்கி மின்னிற்று.

சுவாதி அதிர்ச்சியுடன் பார்த்தாள். "இதோ உன் சொத்து சுவாதி. இதை மீட்கத்தான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டேன். அடகு வெச்சிருந்தவங்க கிட்ட கெஞ்சிக்கூத்தாடி மறுபடி தவணை கேட்டு எப்படியோ பணத்தைப்புரட்டி உன்னோட நகையையே மீட்டுட்டேன். உன் பாட்டியையே உங்கிட்ட சேர்த்த மாதிரி தோணுது. இப்போதான் என் மனசு நிம்மதியா இருக்கு," என்றார் கண்ணீருடன்.

சுவாதி அதை வாங்கிப் பார்த்தாள். ஒரு காலத்தில் அவளது உயிராக இருந்த அந்த ஜிமிக்கி, இப்போது அவளுக்கு வெறும் பொருளாக மட்டுமே தெரிந்தது.

கஸ்தூரியின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. சுவாதியின் கோபம் ஒரு நொடியில் பனியாகக் கரைந்தது. 

"பெரியம்மா, இதுக்காக நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டீங்க?" என்றாள் சுவாதி அவரை அணைத்துக்கொண்டு.

"மானம் பெருசு சுவாதி. அதைவிட உன் அன்பு பெருசு. இந்த நகை நம்ம மனசுல ஏற்படுத்தின விரிசல் ரொம்பப்பெருசு. அதை எப்படியாவது நிரப்பணும், என் பிள்ளை நீ.. என்னை விட்டு விலகிடக்கூடாதுன்னு நினைச்சேன். நம்ம பொருளை நம்மோட அனுமதி இல்லாம இன்னொருத்தர் அழிச்சா, மனசு என்ன பாடுபடும்ன்னு புரிஞ்சுக்கிட்டேன். என்னை மன்னிச்சிடு," என்றார் கஸ்தூரி.

அவள் மெதுவாகச் சொன்னாள், "நகை திரும்ப வந்துட்டுது. ஆனா என் மனுஷங்க மேல இருந்த அந்த நம்பிக்கை போயிட்டுதே? நகை போனா மீட்டுரலாம், ஆனா போன நம்பிக்கையை எப்படிக் கொண்டு வர்றது? இப்போ, இந்தப் பொன் எனக்குப் பெருசாத் தெரியல பெரிம்மா. நீங்க உங்க தப்ப உணர்ந்தீங்களே, அதுதான் எனக்குப் பெரிய நகை. போயிட்டுப்போகுது. காலம் எல்லாத்தையும் ஆத்தும்ன்னு சொல்வாங்க. ஆத்தட்டும்…” என்றவள், கையிலிருந்த நகையை தொட்டிலில் கிடந்த குழந்தையின் கையில் வைத்து அதன் உள்ளங்கையை மூடி, “இது இந்தச் சித்தியோட பரிசு செல்லம்.. வளர்ந்தப்புறம் போட்டுக்கோ” என்றாள். “சரோஜா கழுத்துல, காதுல எதுவுமில்லாம இருக்கா, இதைப்போட்டுக்கச்சொல்லுங்க பெரிம்மா” என கஸ்தூரியின் காதுகளில் கிசுகிசுத்தாள். கண்கலங்கப்பார்த்துக்கொண்டிருந்த கஸ்தூரி, குழந்தையை எடுத்து சுவாதியின் மடியில் இட்டாள். கொஞ்சத்தொடங்கிய சுவாதியையும் மடியிலிருந்த குழந்தையையும் ஒரு சேர அணைத்தன அவள் கைகள்.

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட "பண்புடன்" மின்னிதழுக்கு நன்றி.

Thursday, 5 February 2026

அத்தினி - சித்ரா சிவன்( புத்தக மதிப்புரை)


நூல்: அத்தினி
ஆசிரியர்: சித்ரா சிவன்
வெளியீடு: பிறகு பிரசுரம் (ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் வெளியீட்டுப் பிரிவு)
முதல் பதிப்பு: டிசம்பர் 2024
பக்கங்கள்: 229
விலை:280

இரண்டு கவிதைத்தொகுப்புகளையும் ஒரு நேர்காணல் தொகுப்பையும் வெளியிட்டுள்ள சித்ரா சிவனின் மூன்றாவது புத்தகமே அத்தினி. இது இவரது முதல் நாவலுமாகும். இந்த நாவல் ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2024 போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது. மேலும், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது, சௌமா இலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளது. சித்ரா சிவன் பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் எழுதிவருகிறார்.

“அத்தினி” என்ற சொல் பெண்யானையையும் குறிக்கும், பெண்ணையும் குறிக்கும். யானைக்கூட்டத்தில் ஆளுமை மிக்க ஆண் யானைகள் இருந்தாலும், வயதிலும் அனுபவத்திலும் மூத்த பெண்யானையே அக்கூட்டத்தைத் தலைமை தாங்கி வழி நடத்திச்செல்லும், இடர்களை முன்கூட்டியே அறிந்து தன் கூட்டத்தைப் பாதுகாத்துக்கொள்ளும். அவ்வாறே, வெளிப்பார்வைக்கு ஆண் குடும்பத்தை நடத்துவது போல் தோன்றினாலும், முக்கியமான முடிவுகளை அக்குடும்பத்திலுள்ள தலைமைப்பெண்ணே எடுக்கிறாள். ஆண் அந்த முடிவைச் செயல்படுத்துகிறான். சில குடும்பங்களில் பெண்ணே வெளிப்படையாகக் குடும்பத்தை நடத்திச்செல்வதைக் காண முடியும். இது நாம் தாய்வழிச் சமூகமாக இருந்ததன் எச்சம். 

இவ்வாறு தலைமைப்பண்புடன் இயங்கும் பெண்களிடம் தைரியமும், தன்னம்பிக்கையும், சுதந்திர மனப்பான்மையும் சற்று அதிகமாகவே இருக்கும். வாழ்க்கைப்பயணத்தில் கூட நமக்கு வேறு துணை யாரும் தேவையில்லை என்ற முடிவுடன் தனித்தியங்குவர். அப்படிப்பட்ட சகோதரிகளான பவித்ரா தேவி, உமையாள் என்ற இரு பெண்களையும் அவர்களின் உலகத்தையும் மையமாகக் கொண்டிருக்கிறது எழுத்தாளர் சித்ரா சிவனின் “அத்தினி” என்ற இந்நாவல். 

ஆஸ்பத்திரி கேண்டீனை கதைக்களனாகக் கொண்டிருக்கும் நாவலில் ருசிக்குக் குறைவில்லை, பாத்திரங்களுக்கும் குறைவில்லை. பவித்ரா எனும் அத்தினியின் கூட்டத்தில்தான் எத்தனையெத்தனை அத்தினிகள். ஆனால், அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் முட்டி மோதாமல், ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் இருப்பதுதான் பெருஞ்சிறப்பு. அவரவரின் வலிகளைப் பகிர்ந்து கொண்டாலும், அதிலேயே அமிழ்ந்து கிடக்காமல் அந்த வலிகளை வெல்லும் யுக்திகளையும் கையாண்டு நகர்ந்து செல்கின்றனர்.

பெண்களின் கதைகளைப் பெண்களே எழுதும்போது, அவர்களை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. சரிதா, பூங்கொடி போன்றவர்களின் கதைகளைப் புரிந்துகொள்ள முடிவதைப்போல. ஆஸ்பத்திரியில் பவித்ரா சந்திக்க நேரிடும் ஒவ்வொரு பெண்ணிடமும்தான் எத்தனை சோகம் கொட்டிக்கிடக்கிறது. பெரும்பாலும் குடும்ப வன்முறைக்கு ஆட்பட்டவர்களாக, ஆணாதிக்கத்தால் நசுக்கப்படுபவர்களாக இருக்கும் அவர்களின் தலை சாயும் ஒரு தோளாக இருக்கிறாள் பவித்ரா. அவள் மூலம், பெண்கள் விரும்பும் ஓர் உலகத்தைப் பல நிகழ்வுகள் மூலம் சுட்டுகிறார் எழுத்தாளர். பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நிறுவப்பட்டிருக்கும் பல சமூகக்கோட்பாடுகளை அநாயாசமாக உடைத்தெறிந்திருக்கிறார். ஏன் கூடாது? என்ற கேள்வி வாசிப்பவர் மனதில் எழும் எனில் அதுவே அவரது எழுத்தின் பலம். ஆற்றொழுக்குப்போன்ற தெளிவான நடையில் பட்டுப்போன்ற மொழியில் ஒழுகிச்செல்கிறது நாவல். ஆங்காங்கே பட்டுக்கத்தரித்தாற்போன்று கருத்துகளைச்சொல்லவும் தவறவில்லை ஆசிரியர்.

அன்னக்கொடியின் பாத்திரப்படைப்பு மிகவும் கவர்ந்தது. அத்தனை ஆளுமையுள்ள, பொருளாதாரச் சுதந்திரமுள்ள ஒரு பெண்ணாக இருந்தபோதும் கணவனின் சொல்லைத்தாங்கவியலாமல் தன்னையே கொளுத்திக்கொள்ளுமளவு அவள், கணவன் என்ற ஆணின் அதிகாரத்தால் பலவீனப்படுகிறாள். அவளது தன்னம்பிக்கை, தைரியம், மற்றும் ஆளுமைத்திறனின் எச்சமே பவித்ராவாக நீள்கிறது. வாழ்வில் சந்திக்க நேரிடும் நிகழ்வுகளால், திருமணத்தை வெறுத்த சகோதரிகள் தனியாகவே வாழ்கிறார்கள். குடும்பச்சொத்துகளையும் காத்துக்கொண்டு தேவைப்படுபவர்களுக்குத் தங்களாலான உதவியைச்செய்துகொண்டு வாழ்ந்த அவர்களின் வாழ்வில் மாறன், இளங்கோ எனும் இரு ஆண்கள் குறுக்கிடுகிறார்கள். நாவலில் பெரும்பாலும் கூறப்பட்ட ஆண்களைப்போலில்லாமல் இவர்கள் நல்லவர்களாகச் சித்திரிக்கப்பட்டது சிறப்பு. எல்லா ஆண்களும் கெட்டவர்களாக இருந்து விடுவதில்லைதானே. அவர்களில் மாறனை உமையாள் திருமணம் செய்துகொண்டு அவளுக்கான தனிக்கூட்டை அமைத்துக்கொண்டுவிடுகிறார். பவித்ராவும் இளங்கோவும் ஒருவர் கனவை ஒருவர் மதித்து அவரவர் பாதையில் செல்கின்றனர். ஆனால் அதுவுமே பவித்ராவை இன்னும் புடம் போடுமேயன்றி பலவீனப்படுத்தாது. கூட்டத்தின் முன்னால் தலை குலுக்கி, மத்தகத்தை நிமிர்த்திகொண்டு நடை போடும் அந்த அத்தினி.

Sunday, 25 January 2026

வயிற்றுக் கணக்கு - சரவணன் சந்திரன் (புத்தக மதிப்புரை)

நூல்: வயிற்றுக்கணக்கு
ஆசிரியர்: சரவணன் சந்திரன்
பதிப்பகம்: உயிர்மை
விலை: 220
முதல் பதிப்பு : 2024

எழுத்தாளன் தான் சொல்ல விரும்புபவற்றை கதை, கவிதை, கட்டுரை, யாப்பு எனப் பல வடிவங்களின் மூலமாகப் பகிர்கிறான். இவற்றில் தான் சந்திக்கும் மனிதர்களை வாசித்து அந்த அனுபவங்களை நம்முடன் கட்டுரை வடிவில் பகிர்ந்திருக்கிறார் எழுத்தாளர் சரவணன் சந்திரன். அச்சு, மின், காட்சி என எல்லா தரப்பட்ட ஊடகங்களிலும் பங்களித்திருக்கும் அனுபவம், இவரது முதிர்ந்த எழுத்துகளிலும் பிரதிபலிக்கிறது. மொத்தம் 27 கட்டுரைகளைக்கொண்டிருக்கும் இத்தொகுப்பினை வாசிக்கும்போது, இவை கதைகளா? அல்லது கட்டுரைகளா? என்ற உளமயக்கம் ஏற்படுகிறது. 

இலக்கிய மாந்தருக்குச் சற்றும் குறையாத வாழ்வியல் அனுபவங்களுடன் நடமாடும் மனிதர்கள், சித்தர்களுடனான அனுபவப்பகிர்வுகள், செய்யும் மீன்தொழில் முறையில் கொண்டிருக்கும் கடல் மற்றும் கடலுணவு பற்றிய ஞானம், விவசாயத்தையும் ஏற்றுச்செய்வதால் வானிலை மாற்றங்கள் பற்றிய கவனிப்பு, விளையாட்டு வீரராகவும் இருப்பதால், உடலை, ஆரோக்கியத்தைக் கவனிப்பது என எல்லாவற்றையும் ஒருக்கியிருக்கும் இவற்றை வாழ்வியல் கதைகள் என்றே சொல்லலாம். தன்னைச்சுற்றி இருப்பவற்றைக் கவனிப்பதும், அவற்றை எழுத்தில் கொண்டுவருவதும் எழுத்தாளனின் இயல்பு, ஆனால், நாமும் களத்தில் இருப்பது போன்றே உயிரோட்டத்துடன் உணரச்செய்கிறது இவரது எழுத்து. 

எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றும் பழக்கம் எப்படி வந்தது எனவும் அச்சுமையை எப்படி இறக்கி வைத்து, தன்னைத்தானே அணைத்து வைக்கப் பழகிக்கொண்டார் எனச்சுட்டுகிறார் ‘அணைத்தல்’ என்ற கட்டுரையில். 

பூத்துக்கிடந்த வயிறு, ஓய்ந்து அணைவது வரையிலானது வயிற்றுக் கணக்கு மட்டுமல்ல.. வாழ்ந்த காலத்தின் கணக்கும் கூட. அதற்குப்பின்தான் மனித மனது நாவால் ருசித்தவற்றையெல்லாம் மனதால் ரசிக்க ஆரம்பிக்கிறது. பிறர் சாப்பிடுவதைப் பார்த்தாலே அதற்கு நிறைந்து விடுகிறது. தொகுப்பின் தலைப்புக்கட்டுரையாய், சோற்றுக்கணக்கின் பாதிப்பில் அமைந்த “வயிற்றுக்கணக்கு” சுவாரஸ்யம்.

நுணுக்கமாகக் கணித்து மதிப்பிடும் மனிதர்களைப்பற்றிய “கண்மதிப்பு” கட்டுரை சிறப்பு. சரியாகக் கணித்து கவனமுடன் செயல்பட்டாலே பல தோல்விகளைத் தவிர்க்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாவல் பிறந்த கதையைக்கூட அவ்வளவு சுவையாகச் சொல்லியிருக்கிறார் “சுபிட்ச முருகன்” கட்டுரையில்.

அவரவர் நியாயங்கள் அவரவருக்கு. அதை அடுத்தவர் மேல் ஏற்றித்துன்புறுத்தி அடுத்தவர் மேல் ஆக்கிரமிப்பு செலுத்தினால் என்னாகும்? “காதலின் பரிசு” கட்டுரையை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். தற்காலத்தில் விவசாயம் ஒரு சூதாட்டமாக மாறிவிட்டது என்கிறார். எப்படி? என்பதை மூங்கில் புல் கட்டுரையில் காணலாம். அத்தனை இயற்கை மற்றும் செயற்கை இடர்பாடுகளைக் கடந்துதான் நடந்துகொண்டிருக்கிறது விவசாயம். 

போதையின் பாதையில் தடுமாறி கெடுவழியில் சென்ற மனிதர்களைப் பற்றிய கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன. ‘இளைதாய் முள்மரம் கொல்க’ என்பது வாக்கு. இக்கால இளைஞர்களில் சிலர் அவ்வாறு மூத்தோர் சொல் கேட்டு கெடுவழக்கங்களைக் கைவிடுவரா? எனச் சந்தேகிப்போர் “பொறுப்பு” கட்டுரையை வாசித்தல் நலம். தங்க ஊசிகள் நடமாடும் நாட்டில் நமது கண்ணை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

“மனிதன்தான் படைப்புச்செயலின் உச்சம்” என்று கூறும் சரவணன் சந்திரனின் படைப்புகளில் மனிதர்களுக்கும் அவர்தம் ஓயாத கதைகளுக்கும் பஞ்சமில்லை. ஒரு மூட்டை தானியத்தை ஒரே நாளில் கொத்தித்தின்ன ஆசைப்படும் வாசகக் குருவிகளுக்கு ஏற்றதுதான் அந்த விளைநிலம்.

Sunday, 14 December 2025

சாரல் துளிகள்


அறியாமலே போய்விட்ட கண்ணீருக்கு எங்ஙனம் ஆறுதலளிப்பது? மலராமலே உதிர்ந்து விட்ட மொட்டுகளின் நறுமணத்தை எங்ஙனம் திறப்பது? முகிலுள்ளிருக்கும் மதியை எங்கிருந்தோ நோக்கியிருக்கும் அல்லியின் தவத்தை யாரே கலைக்கவும் கூடும். பிரிந்திருந்தும் முழுமை கொண்டிருப்பவற்றின் பூரணத்துவத்தைப் புரிந்தவர்தான் யார்.

பறவைகளெல்லாம் தனக்காகத்தான் வந்தன என எண்ணி ஏமாந்தது இறுதியில் தானியங்களை இழந்து தனித்து விடப்பட்ட வயல்.

தனது காலில் இடித்துக்கொள்ளாதவரையில், பாதையிலிருக்கும் இடையூறைப்பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. தான் பாதுகாப்பாய் இருக்கும் வரையிலும் இன்னொருவரின் குடையிலிருக்கும் பொத்தல்களைப்பற்றி அக்கறை கொள்வதுமில்லை. அனைவருக்கும் பொதுவாகப்பொழிந்த வெயிலும் மழையும் எல்லை மீறிய ஓர் தினத்தில் கோர்த்துக்கொண்டன அத்தனை கரங்களும், பாகுபாடுகளை மறந்து.

நடக்கும் வழியெங்கும் பூக்கள் மட்டுமே இருக்க வேண்டும், முட்கள் கூடாதென்பது ஆசை. இலைகள் கூட இருக்கக்கூடாதென்பது பேராசை.

அத்தனை ஊசிகளால் தைத்து ஓர் மரகதக்கம்பளத்தைப் போர்த்துகிறது மழை.

எங்கோ ஒரு வனாந்திரத்தின் அந்தகாரத்தில் யாருக்காகவும் அன்றி, தனக்காக மட்டும் பூத்திருக்கும் மலருக்குக் கம்பீர மணம்.

இரையை இறுக்கும் மலைப்பாம்பைப்போல் இவ்வாழ்வை இறுக்கித் திணறச்செய்கின்றது பித்தேறிய மனது. 

பாலைப்பூக்களென கொஞ்சங்கொஞ்சமாய் உதிர்ந்து படியும் நேசத்தால் இளகுகின்றன அன்பின்மையின் இறுகிய சொற்கள்.

சொல்லின் ஆழமான பொருளைப் புரிந்துகொள்ள முயலாமல், மேலோட்டமாகப் பொருள் கொள்வதென்பது, உள்ளிருக்கும் பருப்பின் ருசியை அறிய முற்படாது காயின் தோலை ருசிப்பதாகும். 

சற்றுத் தாமதமாகவே உதிக்குமாறு நிலவிடம் வேண்டிக்கொண்டது குழந்தை. நிலாச்சோறு ஊட்டும் அம்மை இன்னும் வேலையிலிருந்து வரவில்லையாம்.

Friday, 28 November 2025

படமும் பாடலும் (10 )

சொன்னால் விலகுவாரும் சொக்கிச் சுவைப்பரே
இன்சுவையும் சூடும் இளநுரையும் நன்றாமே
பொன்நிகர் அப்பமுடன் பச்சி பகராதோ
மன்னுபுகழ் காபியின் மன்

உன்னதம் காணவென உள்ளத்தால் உள்ளியது
நன்முத்தும் பொன்னும் நிறைக்காது ஏங்கியது
நின்றாடும் ஆசையால் நெஞ்சமிங்கு தேடியது
இன்னொரு காபி இனிது.
****************************************************************

கள்ளத்தால் வாழும் கடும்பாவி யோர்வாழ்வு
உள்ளத்தில் நோயாய் உருப்பெறும் - உள்ளபடி
இன்னயம் பேசாதோர் இல்தவிர்த்துச் செல்தலுடன்
நன்னயம் நாடாமை நன்று.
*********************************************************************
பொன்னலரி சென்னியோன் பொற்கழல் சூடுதல் மன்னுயிர் ஓதிய மாண்பிங்கு இன்னபிற உன்னதம் ஈதென ஊரார் உவப்பதெலாம் என்னென காண்கிலேன் யான் 
*********************************************************************


இலைபழுத்து வீழும் நிலையெள்ளு வோர்முன் 
அலைபொலியும் தண்பூ தலையால் - மலைவேந்த
சீரற்றோர் தாழார் சிலநாளில் மேலெழுவார்
ஆரக்கால் அஃதே உலகு.

Tuesday, 7 October 2025

படமும் பாடலும் (9)


எண்ணிய தெய்துவது எப்போவென் றேங்கியே
கண்ணில் மிதக்கும் கனவு


போஹாவும் மிக்சர் பழமும் கலந்துண்ண
ஆஹா அமிர்தம் இது.
***************************************************************



அன்னை பிழைத்தால் அவளுக்கு ஏச்சுண்டு
கன்னற் கனிமொழியாள் செய்யும் குறும்புகளோ
முன்னர் கடிதோச்சும் மூதன்னை பின்தணிந்து
அன்பை அளிப்பாள் அணைத்து.
**************************************************************************


குழைந்து கிடக்கும் குளமெலாம் ஊறும்
தழைகள் பொலிந்து துளிர்க்கும் - துழைஇ
குழைக்கும் உழவர்க் கினியதாம் நன்றாய்
மழையை அருந்திய மண்.
***************************************************************************
எட்டிநாம் நிற்பினும் அட்டியின்றிக் கண்பார்ப்பான் 
கிட்டே நெருங்கிடக் கட்டுண்டோ - இட்டமுடன் 
சட்டென சென்னிசூடிச் சிக்கெனப் பற்றுக
விட்டலன் பாதம் விடாது.


Saturday, 23 August 2025

அம்மாவின் சேலை - "பூபாளம்" இதழில் வெளியானது

சிறுகதையை வெளியிட்ட "பூபாளம்" இதழுக்கு நன்றி

பீரோவைத்திறந்து, அடுக்கப்பட்டிருந்த அம்மாவின் சேலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ரகு. ரகம் வாரியாகப் பிரித்து வெகு நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தாள் அம்மா. விசேஷங்களுக்கு உடுத்தும் பட்டுப்புடவைகள், சில்க் காட்டன், ஜரிகை போட்ட ஜிகுஜிகுவென்ற புடவைகள் ஒவ்வொன்றும் பழைய தலையணை உறைகளுக்குள் தனித்தனியாகப் பொதியப்பட்டிருந்தன. அக்கம்பக்கம் கோவில்களுக்குப்போக, ஷாப்பிங் மற்றும் உற்றார் உறவினர் வீடுகளுக்குப் பளிச்செனச்செல்ல என அதற்கேற்ற வகையில் உள்ள புடவைகளை இன்னொரு அடுக்கில் வைத்திருந்தாள். தினப்படி வீட்டில் உடுத்தும் எளிய காட்டன் புடவைகள் நடுத்தட்டில் ஒரு ஓரமாக அடுக்கப்பட்டிருந்தன.

அம்மாவுக்கு எல்லாவற்றிலும் நேர்த்தி வேண்டும், ஏனோதானோவென செயல்படுவது அவளுக்குப் பிடிக்காது. வீட்டில் உடுத்தும் சேலைகளைக்கூட அவ்வப்போது கஞ்சி போட்டு, மொடமொடப்பாக அயர்ன் செய்து உடுத்துவாள். எப்போது அவளைப் பார்த்தாலும் ஏதோ இப்போதுதான் வெளியில் கிளம்பத்தயாராய் இருப்பது போல் பளிச்சென்று இருப்பாள். ரகு லேசாக முன்னகர்ந்து வாத்சல்யத்துடன் சேலைகளைப் பட்டும்படாமலும் வருடியபோது, பொத்தென்று ஒரு சேலை கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அசங்கி, உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்த மேட்சிங் ப்ளவுஸ் லேசாக சேலைக்கு வெளியே வந்து தெரிந்தது. 

குனிந்து எடுத்து முகத்தை சேலையில் புதைத்துக்கொண்டு முகர்ந்து அனுபவித்தான். அந்த மென்மையும் வாசனையும் அவளது மடியில் படுத்துக்கிடந்த தினங்களை ஞாபகப்படுத்தியது. அம்மாவின் மடியில் யார் படுப்பதென்பதில் எப்பொழுதும் அவனுக்கும் சின்னக்காவுக்கும்தான் போட்டி. வெளியூரில் வேலை கிடைத்து, பெட்டியை அடுக்கும்போது முதலாவதாக அம்மாவின் பழம்புடவையொன்றைத்தான் எடுத்து வைத்துக்கொண்டான். வீட்டு ஞாபகம் மேலிட்டு அதிகமாகி ஏக்கமாக மாறி தூக்கம் தொலைத்த இரவுகளில் அதைப் போர்த்திக்கொண்டு உறங்குவான். அம்மாவே அருகிலிருந்து தலையைக்கோதி தூங்க வைப்பதுபோல் உணர்வான்.

கையிலிருந்த புடவையின் மேல் அவன் பார்வை சென்றது. இதே மாதிரியான புடவையால்தான் அன்றைக்கு அம்மாவுக்கும் பாட்டிக்குமிடையே சண்டை வந்தது. இதுதானா அது?! இல்லையில்லை.. இது பிங்க் கலர் அல்லவா!, அம்மாவிற்குக் கோபமேற்படுத்திய அந்தப்புடவை நல்ல வாடாமல்லி கலர். பேத்தியின் பிறந்த நாளுக்கென பாட்டி வாங்கி வைத்திருந்தாள். புடவையைக் கண்டதும் பெரியம்மாவின் கண்கள் விரிந்தன. அவளது வழக்கப்படி முதலில் விலையைப் பார்த்தாள். விலையுயர்ந்த புடவை என்றதும் ஆசையில் பளபளத்தன அவள் கண்கள். “இதை நான் எடுத்துக்கறேனே அம்மா?” என மூத்த மகள் ஆசைப்பட்டுக்கேட்டதும் புடவையை அவளிடம் தூக்கிக்கொடுத்து விட்டு பேத்திக்கு வாடாமல்லி கலரில் ஒரு புடவையை வாங்கிக்கொண்டு சின்ன மகளின் வீட்டுக்கு வந்தார். 

வந்தவர் வாயை வைத்துக்கொண்டு சும்மாயிராமல், நடந்ததைச் சொல்லிவிட அம்மாவுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. ‘எம்புள்ளையோட பொறந்த நாளுக்குன்னு வாங்குனதை நீங்க வழக்கம்போல ஒங்க மூத்தமகளுக்கே தாரை வாத்துட்டு வந்துருக்கீங்களா’ என ஆவேசப்பட்டுச்சீறியவர், அந்த புதுப்புடவையை வாங்கி, பாட்டி பதறப்பதற சரிபாதியாக இரண்டாகக் கிழித்தார். “அடுத்த வீட்டு ராகினி அக்காட்ட கொடுத்து ஒனக்கும் கீதா அக்காக்குமா ரெண்டு பாவாடை தைக்கச்சொல்லு” என சின்னக்காவை அனுப்பினார். நடந்ததைக் கேள்விப்பட்ட பெரியம்மா அதன்பின் அடுத்தவர் புடவைகளுக்கு, முக்கியமாய் தங்கையின் உடமைகளுக்கு ஆசைப்படுவதையே விட்டுவிட்டார்.

அவர்களது குடும்ப வட்டாரத்தில் அவளது உடைரசனை மிகவும் பிரசித்தம். “ஏட்டி சியாமளா.. ஒனக்குன்னு எங்கேருந்துதான் கிடைக்குதோ?!!.. நாங்களுந்தான் நாகருகோயிலு, திருனேலின்னு கட கடயா அலஞ்சு அலசுதோம். இந்தக் கலருதாம் வேணும்ன்னு கட கடயா முங்கி முத்தெடுத்தோம். அப்புடியும் வீட்டுக்கு வந்து பிரிச்சுப்பாத்தா அந்தச்சேல அவ்வளவா நல்லாயில்லாத மாதிரி தோணி, புடிக்காம போயிட்டு. ஒனக்கு எந்தச்சேல கட்டுனாலும் அம்சமா பொருத்தமா இருக்கு” என பாதி வயிற்றெரிச்சலில் குமைவார்கள். “அவளும்.. அவளுக்க சீலையும்.. பெரிய ஆப்பீசர் கணக்கால்லா மினுக்கிட்டு அலயுதா” என்பவர்கள் கூட, “சியாமளா.. நாளைக்கு மகன் கல்யாணத்துக்கு சொந்தக்காரங்க சொக்காரங்க, அப்றம் கல்யாணப்பொண்ணுன்னு எல்லாருக்கும் சேலை எடுக்கணும். நீயும் வாயேன், உன் செலக்ஷந்தான் டாப்பா இருக்கும்” என கூச்சநாச்சமில்லாமல் அழைப்பார்கள்.

இத்தனைக்கும் ஒவ்வொரு பெண்களைப்போல் பத்து கடைகள் ஏறியிறங்கி, எல்லாப்புடவைகளையும் கலைத்துப்போடச்சொல்லி கடை ஊழியர்களின் பொறுமையைச் சோதிக்கும் ரகமில்லை அவள். ரேக்குகளில் அடுக்கப்பட்டிருப்பவைகளை கண்ணாலேயே அலசி ஆராய்ந்து நாலைந்தை எடுத்துப்போடச்சொல்லி ஒன்றை செலக்ட் செய்து ஐந்து நிமிடத்தில் கடையை விட்டு வெளியே வருபவள் அவள். “உங்களுக்கு உங்கப்பா வாங்கித்தர்றது பிடிக்குமா? எங்கப்பா வாங்கித்தர்றது பிடிக்குமா?” என அவன் ஒரு நாள் கேட்டதற்கு, “எனக்கு நான் வாங்கிக்கறதுதான் பிடிக்கும்?” என குறும்புடன் சொன்னாள்.

“பீரோ முழுக்க புடவையா வாங்கி அடுக்கி வெச்சிருக்கியே.. கொடுத்து வெச்சவதான் போ..” என ஓர் உறவுக்காரி சொல்லிவிட்டுப்போன அன்றைக்கு அந்திக்கருக்கலில், உப்பும், மிளகும், கடுகும், வரமிளகாயுமாய் பொட்டலம் கட்டி, புடவைகளுக்கு திருஷ்டி சுற்றிப்போட்டவள் அவள். அம்மாவின் புடவைக்காதலைப் பற்றிப் புரிந்திருந்த மகள்களும் மகன்களும் அவளுக்கு விதவிதமாய் வாங்கிக்கொடுத்தாலும், அவளுக்கு ரகு ஒவ்வொரு முறையும் வெளியூர்களுக்குப்போய் வரும்போது அந்தந்த ஊரின் ஸ்பெஷல் என வாங்கி வரும் புடவைகள் என்றால் தனிப்பிரியம். “பணக்கார மகன் வாங்கிக்கொடுக்கறதுதானே ஒனக்குப்புடிக்கும், நாங்க வாங்கிக்கொடுக்கறதுல்லாம் புடிக்குமா?” என சின்னக்கா ஒரு நாள் குத்தலாகச்சொன்னபோது, “ஏட்டி.. என்ன வார்த்தை சொல்லுகே? தாய்க்கு எல்லாப்புள்ளையளும் ஒண்ணுதான்” என அடக்கிவிட்டாள்.

“கையைத்தூக்க முடியலைப்பா இப்பல்லாம், ப்ளவுஸ் போடறதுக்குள்ள சீவன் போகுது” வயோதிகத்தின் முதல்படியில் நின்றுகொண்டு அலுப்புடன் அம்மா சொன்னபோது, முதன்முதலாக நைட்டி அணிய நேர்ந்த கூச்சமும், இனிமேல் புடவையே கட்டிக்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் அவளிடம் லேசாக எட்டிப்பார்த்தது. நாளாக ஆக நடமாட்டம் குறைந்தபோது பார்த்துப்போகவென வந்திருந்த சின்னக்கா, “இனும உடுத்தமுடியாதுன்னு ஆயாச்சுன்னா, எங்களுக்கு ஆளுக்கு ரெண்டு புடவைங்களைத் தரலாமில்ல? நாங்களாவது கட்டி அனுபவிப்போம்” என்றதற்கு,

“என் கண்ணுள்ள வரைக்கும் எல்லாம் அப்படிக்கப்படியே இருக்கட்டும், நான் போனதுக்கும்பொறவு என்னமும் செஞ்சுக்கோங்க” என்று ஒரேயடியாய் மறுத்துச் சொல்லிவிட்டாள்.

அப்படியெல்லாம் சேலைகளை ஆசையுடன் கட்டிக்காத்த அம்மாவைத்தான் இன்று சிதையில் வைத்து விட்டுத் திரும்பியிருந்தார்கள் அவனும் அண்ணனும். நினைவுகளில் ஆழ்ந்திருந்தவனை, பின்னால் கேட்ட பேச்சுக்குரல் நனவுக்குக்கொண்டுவந்தது.
அக்காக்களும் அண்ணியும்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்..

“என்னதான் சொல்லுங்க.. அம்மாவோட கலெக்ஷன் போல வராது”

“அப்பம்லாம் அம்மா புதுப்புடவை எடுத்தா, மொதல்ல என்னைத்தான் கட்டச்சொல்லுவாங்க. அதென்னவோ அம்மாவுக்கு அப்படி ஒரு செண்டிமெண்ட்” இது பெரியக்கா.

“நீ கல்யாணமாகிப்போனப்புறம் அம்மா என்னைக் கட்டிக்கச்சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க” இது சின்னக்கா.

“எனக்கு அம்மாவோட ஞாபகமா ஒரு சேலை வேணும்”

“எனக்கும்..”

“எனக்கும்..” 

சேலைக்கடை போல் ஆகியிருந்தது வீட்டுக்கூடம்.

“அடடா!!.. அதுக்கென்ன? ஒண்ணென்ன?! யார்யாருக்கு என்னென்ன வேணுமோ எடுத்துக்கிடுங்க” என்றான் பெரியண்ணன்.

அவர்கள் வருவதை உணர்ந்து வழிவிட்டு, அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான் ரகு. அவர்கள் ஆர்வமாக ஒவ்வொரு புடவையாகக் கையிலெடுத்துப்பார்த்து, பிடித்தவற்றை.. முக்கியமாக விலையுயர்ந்தவற்றைத் தன் பக்கத்தில் வைத்துக்கொண்டார்கள். அவரவர் வாங்கிக்கொடுத்தவற்றையும் கவனமாக அவரவரே எடுத்துக்கொண்டனர்.

“இந்த காப்பிப்பொடி கலர் புடவை, மகேசுக்கு நல்லாருக்கும், அவளுக்குத்தான் கொடுக்கப்போறேன்னு அத்தை சொல்லிக்கிட்டே இருந்தாங்க” என்றாள் அண்ணி. மகேசு என்ற மகேஸ்வரி அவள் மகள்.

“அந்தப்புடவை அம்மாவோட சித்தி பையன் அவன் மகளோட கல்யாணத்துக்கு அம்மாவுக்கு வச்சுக்குடுத்ததுதானே? அம்மா சார்பா அந்தக்கல்யாணத்துக்கு நான் ஐயாயிரம் ரூவா மொய் செஞ்சேன் பாத்துக்கோ. பரவால்ல, மாமா நல்ல புடவையாத்தான் எடுத்திருக்கார்” என்ற சின்னக்கா புடவையைத் தன்மேல் போட்டுக்கொண்டு அழகு பார்த்தாள்.

“எம்புள்ள இன்ன நேரம்ன்னு கிடையாது.. பெரியவளாகிருவா. அவளுக்கு ஆச்சியோட சீரா, மொதப்பொடவையா இத கொண்டுட்டுப் போறேன். காப்பிப்பொடி கலர் அவ நெறத்துக்கு நல்லா எடுப்பா இருக்கும்” என்றாள் பெரியக்கா.

புடவைகளின் சரசரப்பினூடே பேச்சும் சலசலத்துக்கொண்டிருந்தது. ஒரே புடவைக்கு அத்தனை பேரும் போட்டி போடும்போது பெண்கள் நடத்தும் நுண்ணரசியலை நினைத்து அவனுக்கு வியப்பாக இருந்தது. ‘இது எனக்கு வேண்டும்’ என்று பட்டவர்த்தனமாகச் சொல்லாமல் அதே சமயம் அத்தனை பேருக்கும் அழுத்தமாகப் புரியும் வண்ணம் எப்படி சொற்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், ஒரு சதுரங்க ஆட்டத்துக்கேயுரிய லாவகத்துடன் எத்தனை அழகாகக் காய் நகர்த்தி பாகம் பிரித்துக்கொள்கிறார்கள் என ஆச்சரியப்பட்டான். தனக்குத் திருமணமாகியிருந்தால் இந்நேரம் தன் மனைவியும் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பாளோ என யோசனையாக இருந்தது. இவர்கள் அம்மாவின் நினைவுகளைப் பகிர்கிறார்களா அல்லது அதைச்சாக்கிட்டு அவளது பொருட்களை மிச்சமில்லாமல் சுருட்டுகிறார்களா எனப்புரியவில்லை.

அண்ணி அவனது மௌனத்தைக்கலைத்தாள். “ஒங்களுக்கு ஒண்ணும் வேண்டாமா கொழுந்தம்பிள்ளே?”

வேண்டாமெனச்சொல்லலாமா என ஒரு நிமிடம் யோசித்தான். அம்மையை வேண்டாமென அப்படி சுலபமாகச் சொல்லிவிட முடியுமா? 

சுற்றிலும் பார்த்தான். கொடிக்கயிற்றில் அம்மாவின் இன்னும் துவைக்காத ஒரு நைட்டி தொங்கிக்கொண்டிருந்தது. அவள் இறப்பதற்கு முந்தைய நாள்தான் உடம்பு துடைப்பதற்காக அட்டெண்டர் அதை அவிழ்த்துப்போட்டிருந்தார். அதை அள்ளிச்சுருட்டி எடுத்துக்கொண்டான். அம்மாவின் கடைசி வாசனை,.. இனியெப்போதுக்குமாக இது போதும். நைட்டிக்கும் முந்தானை உண்டு, அம்மாவை நினைத்து ஏங்கும் பிள்ளைகளை அது அரவணைத்து ஆறுதலளிக்கும். நாப்தலீன் மணக்கும் சேலைகளை மற்றவர்களே வைத்துக்கொள்ளட்டும்.

அவன் நைட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு அணைத்தாற்போல் ஆதுரத்துடன் பிடித்துக்கொண்டு எழுந்தான். அம்மையே குழந்தையாக அவன் தோளில் சாய்ந்திருப்பதுபோல் ஒரு தாய்மையுணர்வை உணர்ந்தபோது அவனுக்குச் சிலிர்த்தது. நைட்டியின் கைப்பாகம் அவனது கையில் உரசியபோது அம்மாவே தன் கையைப்பற்றியிருப்பது போல் உணர்ந்தான். “நடுச்சாமம் ஆகப்போகுது, போய்த்தூங்கு மக்கா” என்ற அம்மாவின் குரல் காதில் கேட்டதுபோல் இருந்தது. நைட்டியைத்தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான். 

வெகு நாட்களுக்குப் பின் அம்மையின் மடியில் தலை வைத்துப்படுத்திருப்பது போல் ஒரு ஆறுதல், கொந்தளித்துக்கொண்டிருந்த அவனது மனதைச் சற்று அமைதியுறச்செய்தது. மரத்துப்போயிருந்த மனது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது. இனிமேல் அம்மையை எப்போதுமே பார்க்க முடியாதே என்ற ஏக்கம் தாக்க, சூடான கண்ணீர் அவன் இமைகளினோரம் வழிந்து நைட்டியை நனைத்தது.  கண்ணீர் வழிய வழிய துக்கம் மெல்ல மெல்ல கரைந்து, தூக்கம் கண்ணைச்சுழற்றியது. மின்விசிறியின் காற்றில் மெல்ல படபடத்துக்கொண்டிருந்த நைட்டி மெதுவாக அவன் கன்னத்தை உரசியது. “அழாதே மக்கா..” என அம்மையே அவனது கண்ணீரைத் துடைத்ததுபோல் உணர்ந்தான். ‘என் அம்மா.. எங்கூடவேதான் இருப்பா” என தனக்குத்தானே ஆறுதலாகச் சொல்லிக்கொண்டான். அம்மாவின் கை தனது தலையைக்கோதுவது போன்ற கற்பனையுடன், இமைகள் கனக்க  ஆழுறக்கத்தில் இன்னும் இன்னுமென அமிழத்தொடங்கினான்.

Thursday, 14 August 2025

மனத்துக்கண் மாசிலன்.. ( பண்புடன் இதழில் வெளியானது)


செக்கச்சிவந்திருந்தது வானம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மேகங்கள் விளிம்புகளில் செம்பஞ்சுக்குழம்பைப்பூசிக்கொண்டு மிதந்து கொண்டிருந்தன. வினோதுக்கு மருதாணியின் சிவப்பு மிகவும் பிடிக்கும். பூசிய மறுநாள் தோன்றும் இளஞ்சிவப்பு, நாளாக ஆக மெருகேறி அடர்வண்ணமாய் மின்னும் ரத்தச்சிவப்பு, கொஞ்சங்கொஞ்சமாய் நிறமிழந்த ஜாங்கிரி வண்ணம் என ஒவ்வொன்றையும் ரசிப்பான். சூரியனும் பளீரென்ற நீலவானில் ஒரு ஜாங்கிரியாக மிதந்து கொண்டிருந்தது. அழகான வளையம் வளையமாக ஜீராவின் மினுமினுப்புடன் பார்த்தாலே தின்னத்தூண்டுவதாக.. அவனால் ஆசையை அடக்க முடியவில்லை. கையை நீட்டி அதை எடுத்தான். கைக்குச்சிக்காமல் அது நழுவிக்கொண்டேயிருந்தது. அவனுக்கு அழுகையும் கோபமுமாக வந்தது. “அம்மா..” என கத்தினான். 

“இங்கேதான்ப்பா இருக்கேன், என்ன வேணும்?” கமலம்மாளின் மென்மையான குரல் பக்கத்தில் கேட்டது.

“இந்த ஜாங்கிரி தட்டோடு ஒட்டிக்கிச்சு. எடுக்க வரலை, எடுத்துக்கொடுங்களேன்” என்றான்.

“எங்கேப்பா?”

“இங்கதான்..” என்றவாறு திரும்பியவன் திகைத்தான். எங்கே போச்சு அதுக்குள்ள!! எனக்குழம்பினான். டேபிளின் துணியை இழுத்து அதனடியில் பார்க்க முற்பட்டான். அம்மா சட்டென்று கையை நீட்டித்தடுத்தாள். “போகட்டும் விடு.. உனக்கு ஜாங்கிரிதானே வேணும். சாயந்திரம் அண்ணனை வாங்கிட்டு வரச்சொல்றேன். இப்ப இந்த இட்லியைச்சாப்பிடு. அம்மா வேண்ணா ஊட்டி விடட்டா?” அவனது பதிலுக்குக் காத்திராமல் கொஞ்சிக்கெஞ்சி ஊட்டி விட்டு, வாய் துடைத்து, அவனது மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வைத்தார். சோபாவில் அமர்ந்திருந்தவன் அப்படியே சரிந்து தூங்க ஆரம்பித்தான்.

‘இன்னிக்கு மனப்பிரமையால கொஞ்சம் அதிகமா கஷ்டப்படறான் போலிருக்கே’ கவலையுடன் அவனையே நோக்கியபடி பக்கத்தில் அமர்ந்தார் கமலம்மாள். சில நாட்களாகவே வினோத் சரியாகத் தூங்கவில்லை. ஆகவே இப்படியெல்லாம் நடக்கும் என்பதை அவர் எதிர்பார்த்தே இருந்தார். எனவே அவனது வழக்கமான மாத்திரைகளோடு தூக்க மாத்திரையையும் சேர்த்து கொடுத்து விட்டிருந்தார். எப்போதுமே தூக்கமின்மையைத் தொடர்ந்து வரும் சில நாட்களை அவன் பெரும் அவஸ்தையுடன் கடக்க வேண்டியிருந்தது. அவனுக்கு மட்டுமே தெரியும் மாயக்காட்சிகளால் பெரும் குழப்பமடைந்தான். அவன் சொல்வதை யாராவது நம்ப மறுத்தாலோ அல்லது காதில் போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாகக் கடந்தாலோ பெருங்கோபம் கொண்டான். “இல்லாததைச்சொல்ல நானென்ன பைத்தியமா?” எனக்கத்தியபடி கையில் கிடைத்ததைப் போட்டுடைப்பது வழக்கமாக ஆகியிருந்தது. 

“இதை ஹாலுஷினேஷன்னு சொல்லுவாங்க”

அவனைப் பரிசோதித்து முடித்து, கைகளைக் கழுவிக்கொண்டு அமர்ந்த டாக்டரின் முன் அவனது மெடிக்கல் ஃபைல் விரிந்து கிடந்தது. ஏகப்பட்ட டெஸ்டுகள், அவற்றின் ரிசல்ட் ரிப்போர்ட்டுகளோடு சமீபத்தில் எடுத்த எம் ஆர் ஐ ரிப்போர்ட்டும் இணைந்திருந்தது. அவற்றையெல்லாம் பார்த்து அலசி விட்டுத்தான் அதைச்சொன்னார். 

“அப்படீன்னா?” என வினோதின் அப்பா கேட்டார்.

“மாயத்தோற்றம். ஒரு விஷயம் இருக்கு.. ஆனா இல்லே. இல்லே.. ஆனா இருக்குங்கற மாதிரியான விஷயம்” என்றார் டாக்டர்.

“கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன் டாக்டர்”

“இப்ப, இந்த ரூம்ல நீங்க, நான், இந்த டேபிள், சேர்ன்னு இருக்கறது எல்லாம் வினோதுக்கு மட்டும் வேற மாதிரி தெரியும். வேற மாதிரி உணர்வார், வேற எங்கியோ இருக்கற மாதிரி புரிஞ்சுக்குவார். அதையே நம்பவும் செய்வார்”

“ஆமா டாக்டர். ரிசப்ஷன்ல வெயிட் பண்ணிட்டிருந்தப்ப கூட ‘அப்பா.. ஃப்ளைட் ஏன் லேட்டாகுதுன்னு கவுண்டர்ல விசாரிங்கன்னு நச்சு பண்ணிட்டிருந்தான்”

“எங்க ஆஸ்பத்திரியோட லைட்டிங் அமைப்பு, யூனிஃபார்ம் உடுத்திய ரிசப்ஷன் பெண்கள், அடுத்த நோயாளிக்கான அழைப்பைச்சொல்லும் ஸ்பீக்கர் இதெல்லாமும் அவருக்கு ஏர்போர்ட்டை நினைவுபடுத்தியிருக்கு. அதான் ஆஸ்பத்திரி அவருக்கு ஏர்போர்ட்டா தெரிஞ்சுருக்கு, அதனால அப்படிக் கேட்டிருக்கார்”

“இது இப்படியேதான் இருக்குமா டாக்டர்? சரியாகாதா? வாழ வேண்டிய வயசுப்புள்ளை இவன்” தழுதழுத்தாள் கமலம்மாள்.

“கவலைப்படாதீங்க, நம்ம உடம்பு அடிப்படையில் கெமிக்கல்களாலதான் கட்டமைக்கப்பட்டிருக்கு. உடம்போட சுரப்பிகள், ஹார்மோன்கள் எல்லாத்துக்குமே அடிப்படை உப்புகள்தான், அதாவது கெமிக்கல்கள்தான். இதோட விளையாட்டுதான் நம்ம உணர்ச்சிகள், நம்ம சிந்தனைகள் எல்லாத்துக்கும் அடிப்படை. இவரோட எண்ணங்களும் மனசும் ஒண்ணையொண்ணு இயக்குது. ஒரு செயின் ரியாக்ஷன் மாதிரின்னு வெச்சுக்கோங்க. மனசைக்கட்டுப்படுத்தத்தெரிஞ்சா எண்ணங்களும் கட்டுப்படும். இந்த பிரமைகளும் குறையும். ஆனா, எண்ணங்களால சுரக்கற கெமிக்கல்களால இவரோட மனசு கட்டுப்பட மறுக்குது. இவரோட ரத்தத்துல சோடியம் அதிகமா இருக்கறதால கொஞ்சம் உக்கிரமா இருக்கார். இவரோட சாப்பாட்டில் உப்பைக்குறைங்க” 

“மத்த ரிப்போர்ட்ஸ் எல்லாம் நல்லாருக்கு, முன்னைக்கு இப்ப முன்னேற்றம் தெரியுது. மருந்துகளோட உங்க ஒத்துழைப்பும் கவனிப்பும் பாசமும் அவருக்கு இப்ப ரொம்பவே தேவை. அவர் மனபிரமையால ஏதாவது பேசறப்ப மறுத்துப்பேசாம அவர் போக்கிலேயே பேச விடுங்க. கொஞ்ச நேரத்துக்கப்றம் தான் என்ன பேசினோம்ங்கறதே அவருக்கு ஞாபகம் இருக்கப்போறதில்லை. அதனால அவர் பேசறதை சீரியஸா எடுத்துக்காதீங்க. மறுக்கறப்பதான் வயலண்ட் ஆவாங்க. மனசறிஞ்சு எந்தத் தீங்கும் செய்யவோ பேசவோ மாட்டார். அதை நீங்க புரிஞ்சுக்கணும். மருந்துகளோட டோஸைக் கொஞ்சம் மாத்தியிருக்கேன். கொஞ்சம் தூங்குவார்.. தூங்க விடுங்க. அடுத்த மாசம் கூட்டிட்டு வாங்க. ஆல் தி பெஸ்ட்”. ப்ரிஸ்க்ரிப்ஷனை டைப் செய்து பட்டனைத்தட்டினார். அருகிலிருந்த ப்ரிண்டர் துப்பிய ப்ரிஸ்கிரிப்ஷனை ஃபைலின் உள்ளே வைத்து மூடி நீட்டினார். 

ஒரு வாரமாக அவர் அறிவுறுத்தியபடியேதான் எல்லோரும் அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறார்கள். அவன் என்ன பேசினாலும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்கள். பக்குவமாகப் பதிலளித்தார்கள். ஆனாலும் சில சமயங்களில் சற்று மிகையாக நடந்து கொள்ளும்போது, கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொன்னதையே திருப்பித்திருப்பிச்சொல்லும்போது தங்கள் பொறுமை உடைந்து விடக்கூடாதே எனப் பயந்தார்கள். அவனது உடல் தன்னைச்சரி செய்து கொள்வதற்கான நேரத்தை நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற மருத்துவரின் அறிவுரையை அம்மாதிரியான சமயங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதல் போல் சொல்லிக்கொண்டார்கள்.
 
கடந்த சில மாதங்களாகத்தான் இப்படியிருக்கிறான். அதற்கு முன் அவனும் மற்ற ஆண்களைப்போல் இயல்பாக இருந்தவன்தான். கல்லூரி முடித்ததுமே வேலையும் கிடைத்துவிட, வழக்கமான அம்மாக்கள் போல் தன் பிள்ளைக்கொரு கல்யாணத்தைப்பண்ணிப் பார்த்து விட வேண்டுமென கமலம்மாள் முனைந்திருந்த நேரம். அன்றைக்கு மட்டும் அந்தச்சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் எல்லாம் கூடி வந்து இன்றைக்கு அவனும் ஒரு குடும்பஸ்தனாகியிருப்பான்.

அன்றைக்கு கமலம்மாள் மும்முரமாகச் சமைத்துக்கொண்டிருந்தாள். பருப்பு டப்பாவைத்தேடியபோதுதான் கை மறதியாக அதை மேல்தட்டில் வைத்தது ஞாபகத்துக்கு வந்தது. எட்டி எடுக்க முனைந்தாள், எட்டவில்லை. நாற்காலியைப்போட்டுக்கொண்டு ஏறி எடுக்கலாம் என அவள் ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வரத் திரும்பும்போதுதான் வினோத் தண்ணீர் குடிக்க அடுக்களைக்குள் நுழைந்தான். இல்லையில்லை… விதி அவனை இழுத்து வந்தது. 

“இதுக்குத்தான் அப்பாவையும் என்னையும் மாதிரி ஒசரமா வளரணும்ங்கறது. நகருங்க.. நான் எடுத்துத்தரேன் என்றவாறு டப்பாவை இழுத்தவன் தலையில் நங்கென்று ஏதோ விழுந்தது. “அம்மா..” எனக்கத்தியவாறு தலையைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான். டப்பா விழுந்து மொத்தமும் சிதறியதையும் பையன் தலையைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்ததையும் கண்டவள் பதறியடித்து மகனிடம் ஓடி வந்தாள். நல்லவேளையாக ரத்தம் எதுவும் வரவில்லை என உறுதிப்படுத்திக்கொண்டாள். அதற்குள் எலுமிச்சை அளவுக்கு உச்சந்தலையில் புடைத்து வீங்கியிருந்தது. “தேய்ச்சு விட்டுராதே.. ஐஸ் ஒத்தடம் கொடுத்தா சரியாப்போயிரும்” என்றபடி அவனை அழைத்து வந்து ஹாலில் உட்கார வைத்து, துணியில் கட்டிய ஐஸ் துண்டங்களால் ஒத்தடம் கொடுத்தாள்.

களேபரம் கொஞ்சம் ஓய்ந்தபின் அடுக்களைக்குச்சென்று அத்தனையையும் சீராக்கியபோதுதான் அவன் தலையில் விழுந்தது என்னவென்று கண்டாள். இஞ்சி, பூண்டு, ஏலக்காய் போன்றவற்றை இடிப்பதற்காக வைத்திருந்த சின்ன கல்பத்தா சரிந்து கிடந்தது. காலையில்தான் மூத்தவனின் குழந்தை அடுக்களையில் வந்து குறும்பு செய்து கொண்டிருந்தபோது, அவன் காலில் போட்டுக்கொண்டு விடக்கூடாதென அவசரத்தில் கைக்குக்கிடைத்த இடத்தில் அதைச் செருகி வைத்திருந்தாள். இப்போது அதுவே தீம்பாக முடிந்ததையெண்ணி தன்னைத்தானே கடிந்துகொண்டாள். “புள்ளைய ஆஸ்பத்திரிக்குப்போயி வீக்கம் வத்தறதுக்கு ஒரு ஊசியைப்போட்டுட்டு வரச்சொல்லணும். சரியாப்போயிரும்” என எண்ணிக்கொண்டாள்.

ஆனால், அவள் எண்ணியது போல அது சரியாகப்போகவில்லை. அப்போதைக்கு வீக்கம் வற்றி அவர்களும் அதை மறந்து விட்டிருந்தார்கள். ஒரு மாதம் போல் கழிந்திருக்கும். அடிக்கடி தலை வலிக்கிறது என வினோத் சொல்ல ஆரம்பித்தான். விண்விண்ணெனத் தெறிக்கும் வலியோடு தலையைப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வழிய அமர்ந்திருப்பான். சாத்தியமான எல்லா நோய்க்கூறுகளுக்கும் டாக்டர் பரிந்துரைத்த டெஸ்டுகளையெல்லாம் எடுத்து எல்லாமே நார்மல் என ரிப்போர்ட் வந்தது. எங்கேயோ வெறித்துப்பார்த்துக்கொண்டு வெகு நேரமாய் அவன் அமர்ந்திருப்பது ஆரம்பித்தது. டிவியிலிருந்து ஆட்கள் இறங்கி வந்து தன்னுடன் பேசிக்கொண்டிருந்ததாக அவன் சொன்ன அன்றுதான் குடும்ப மருத்துவர், “நீங்க ஒரு ந்யூராலஜிஸ்டைப் பார்க்கறது நல்லது” என்றார். 

ஆதியோடந்தமாய் அத்தனையையும் கேட்டுக்கொண்ட ந்யூராலஜிஸ்ட், அவர் பங்குக்கு சில டெஸ்டுகளை எடுத்தார். சில விவரங்களை அவனிடமும் குடும்பத்தினரிடமும் தனித்தனியாகக் கேட்க வேண்டுமென்றார். அவனிடம் பேசியபின், “அம்மாவை வரச்சொல்லுங்க, நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க” என்றார். வெளியே வந்தவன், “அம்மா.. டாக்டர் கேக்கறதுக்கு கவனமா பதில் சொல்லுங்க, இல்லைன்னா எனக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்குன்னு நினைச்சுக்கப்போறார்” என்றான்.

“போடா..” என்றுவிட்டு அம்மா உள்ளே சென்றாள்.

அவளிடமும் பேசி விவரங்களை அறிந்து கொண்டபின், “இதோ பாருங்கம்மா, தலைல கனமான பொருள் விழுந்ததால ஒரு சின்ன ரத்தக்கட்டி ஏற்பட்டிருக்கு. மருந்துகளால அதைக் கரைச்சிரலாம். ஒண்ணும் பயப்படாதீங்க. ஆனா அந்தக்கட்டியால ரத்த ஓட்டம் தடைபட்ட பகுதிகள்ல சின்ன பாதிப்பு இருக்குது. ஆண்டவன் அருளால, நினைவாற்றல் பாதிக்கப்படலை, கை கால் இயக்கம் முடங்கலை. ஆனா கொஞ்சம் சித்தப்பிரமை மாதிரி அப்பப்ப ஒரு அஞ்சு பத்து நிமிஷத்துக்கு ஏற்படும். மாயத்தோற்றங்கள் தென்படும். அதால அவருக்கு எது நிஜம்? எது மாயைங்கற குழப்பம் ரொம்பவே இருக்கும். அந்த சமயங்கள்ல அதெல்லாத்தையும் அவர் நம்பறதோட நீங்களும் நம்பணும்ன்னு எதிர்பார்ப்பார். சில சமயம் அந்தக் கனவுலகிலேயே வாழவும் செய்வார். கொஞ்சம் பொறுமையா கையாண்டுதான் இதை சரி செய்யணும். எப்பவுமே குடும்பத்தாரோட ஒத்துழைப்பு இருந்தாதான் எதையும் சரிவர நடத்த முடியும். அதுவும் நீங்க அவரோட அம்மா. இதில் பெரும்பான்மையான பங்கு உங்களோடதாத்தான் இருக்கும். புரிஞ்சுக்குவீங்கன்னு நம்பறேன். மருந்துகள் எழுதித்தரேன், நாளடைவில் சரியாகிரும்” என்றார் மருத்துவர்.

ஆடிப்போயிருந்தாள் கமலம்மாள். ‘தெய்வமே.. என் குழந்தையை காப்பாற்றிக்கொடு, உன் சந்நதிக்கு வரேன் தாயே’ என கண்ணீருடன் வேண்டிக்கொண்டாள். “எல்லாம் சரியாப்போயிரும்” என எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது போல் தனக்குத்தானேயும் சொல்லிக்கொண்டாள். வினோதின் அண்ணன் தினேஷுக்கு மட்டும் மருத்துவர் சொன்னதை சொல்லி வைத்தாள். ‘மெடிக்கல் லீவ் போடேன்ப்பா.. உடம்பைச் சரியாக்கிட்டு அப்றம் வேலைக்குப் போகலாமில்லே?’ என வினோதைத் தாஜா செய்து லீவ் போட வைத்தாள். பிரமை கூடிவரும் நேரங்களில் பிள்ளை எங்காவது தொலைந்து விடுவானோ அல்லது அவனைப்பற்றி அக்கம் பக்கம் யாராவது வம்பு பேசி அதனால் அவனது பிற்காலத்தில் அமையப்போகும் திருமண வாழ்வுக்குப் பங்கம் வந்துவிடுமோ எனப் பயந்தாள். சிகிச்சையாலும் அவளது அன்பான கவனிப்பாலும் அவனும் கொஞ்சங்கொஞ்சமாகத் தேற ஆரம்பித்திருந்தான்.

மொபைல் கிணுகிணுத்தது… சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தாள். ‘அடக்கடவுளே.. உட்கார்ந்து கொண்டே தூங்கிட்டேன் போலிருக்கு’ கண்களைத்தேய்த்து விட்டுக்கொண்டவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். வினோத் படுத்திருந்த இடம் வெறுமையாக இருந்தது. பாத்ரூம் போயிருப்பான் என எண்ணிக்கொண்டவள் மணியைப்பார்த்தாள், மதியம் இரண்டரை ஆகியிருந்தது. “வினோத்.. சாப்பிட வாப்பா. தட்டு வைக்கிறேன்” குரல் கொடுத்து விட்டு அடுக்களையை நோக்கி நகர்ந்தாள். தெருவில் கலவையான குரல்கள் கூச்சலும் குழப்பமுமாய்க் கியாமுயாவெனக் கேட்டுக்கொண்டிருந்தன. நகர்ந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள். அவள் கண்ட காட்சி விசித்திரமாயிருந்தது.

முழு சீருடை அணிந்த ஒரு போலீஸ் அதிகாரியை, சாதாரண லுங்கியும் பனியனும் அணிந்த, பொதுஜனம் போல் தோன்றிய ஒருவன் கைகளைக் கயிற்றால் கட்டி அழைத்துச்சென்று கொண்டிருந்தான். தெருவில் நடமாடிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் அதை வேடிக்கை பார்த்தார்களேயன்றி யாரும் அதைத்தடுக்க முயலவில்லை. நடப்பதை வேடிக்கை பார்த்தவாறே வீட்டுக்குள் நுழைந்த தினேஷிடம்,  ‘ஒரு போலீஸை இப்படி நடத்துவது அரசாங்கக்குற்றம் அல்லவா?’ என மருகினாள் கமலம்மாள்.

“ஐயோ அம்மா!.. உங்களுக்கு விஷயமே தெரியாதில்லே. அந்த போலீஸ் யூனிஃபார்ம்ல இருக்கறவன் உண்மைல ஒரு ஃப்ராடு. வாடகைக்கு யூனிஃபார்மை வாங்கிப்போட்டுக்கிட்டு அங்கங்க மிரட்டி காசு பிடுங்கிட்டிருந்தான். அவனை கையும் களவுமா பிடிக்க ஒரு நிஜமான போலீஸ் ஆபீசர் ரொம்ப நாளா மஃப்டில சுத்திட்டிருந்தார். இன்னிக்கு, அவர் கிட்டயே கைவரிசையை காமிச்சிருக்கான். அதான் அந்தக்கையைக்கட்டி இழுத்துட்டுப்போறார். தெருமுனைலதான் போலீஸ் ஜீப் நிக்குது. பாத்துட்டுதான் வரேன்” என்றான் தினேஷ்.

“பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்னு சும்மாவா சொல்லியிருக்காங்க! சட்டத்தின் கைகள் நீளமானவை, அதன் பிடியிலேர்ந்து தப்ப முடியுமா. சரி.. அது அதன் கடமையைச்செய்யட்டும், நாம நம்ம கடமையைச்செய்வோம். சாப்பாடு ஆறி அவலாகறதுக்குள்ள மொதல்ல சாப்பிடுவோம்” என்றாள்.

“சட்டத்தோட கைகள் மட்டுமில்லே.. இந்த பொடிப்பயலோட கைகளும் வரவர நீளுது. பாருங்க, எப்படி கிள்ளறான்னு. ஆமா, வெளில என்ன கலாட்டா? ஒரே சத்தமா கேட்டுது?” முகத்தைத்துடைத்த டவலை நாற்காலியின் முதுகில் போட்டு விட்டு அமர்ந்தான் வினோத்.

“அது ஒண்ணுமில்லைப்பா.. சும்மா ஏதோ சத்தம்” வினோதுக்குத்தெரியாமல் அம்மாவுக்கு மட்டும் ‘எதுவும் பேசாதீங்க’ என்பது போல் கண்ணைக்காட்டி ஜாடை செய்தான் தினேஷ். பேசும் வார்த்தைகளில் ஏதாவது ஒன்று கூட வினோதைத் தூண்டுவதாக அமைந்து விடலாம் என்பதால் அவனிடம் சற்றுக் கவனமாகவே பேசுவது வழக்கம்.

மனம் ஒரு விசித்திரமான ஜந்து. அதை ஆற்றுப்படுத்தும் சொற்களையோ செயல்களையோ விட, அதை ஆட்டுவிக்கும் விதமாய் நடப்பவற்றையே அது மனமுவந்து ஏற்றுக்கொள்கிறது. இறுகப்பற்றிக்கொள்கிறது, மிட்டாயைக் கொடுக்க மறுக்கும் குழந்தையாய் நம்முடைய சமாதானச்சொற்களைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அலறி அழுகிறது. அதன் போக்கிலேயே விட்டுத்தான் அதை வசப்படுத்த வேண்டும். கடைசிச்சந்திப்பின்போது மருத்துவர் சொல்லியிருந்தது நினைவில் மோத ‘வினோதின் மனமும் விரைவிலேயே அவன் வசப்படும். என் குழந்தையும் மற்றவர்களைப்போல் நன்றாக வாழ்வான்.. வாழ வேண்டும்’ என அந்தத்தாயுள்ளம் பிரார்த்தித்தபடி பூஜையறை இருக்கும் திசை நோக்கி கை கூப்பியது.

டிஸ்கி: கதையைப் பிரசுரித்த பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails