Wednesday 15 March 2023

சாரல் துளிகள்



எண்ணுந்தோறும் புதிதாய் முளைத்துப் பெருகும் நட்சத்திரங்களுக்கு, தேர்வடம் பிடிக்கும் மக்களின் முகங்கள். எப்படியும் நிலையம் சேர்ந்துவிடும் நிலா.

அங்கிங்கெனாதபடி வியாபித்து தீரா வினை தீர்த்து அருள்புரியும் சொள்ளமாடனுக்கொரு திருநீற்றுக்கொப்பரை காணிக்கையாய் இன்னும் வரவில்லையாம், கழுத்து வரை குறையுடன் குமுறும் மாடனுக்கு மற்றதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.

'என்னை நினைவிருக்கிறதா?' எனக்கேட்ட, சிதைந்த பெருந்தேர் வடங்களில் ரதவீதிகளின்  வாசனை.

சொற்களுக்கப்பாற்பட்ட வெறுமை, மௌனத்தைக்கொண்டு தன்னைப் போர்த்திக்கொள்கிறது.

அத்தனைக்கும் பிறகும் மீதமிருக்கும் வாழ்வின் கட்டங்களில் இன்னும் எத்தனை ஏணிகளும் பாம்புகளுமோ! வீழவும் மீளவும் எத்தனை தாயங்களோ! பகடைகளும் காய்களும் உருள்கின்றன அதனதன் விதிப்படி.

முகம் வருடி, கூந்தல் கலைக்கும் மந்தமாருதம் வேண்டிய ஜன்னல் பயணத்தில், குப்பையும் புழுதியும் நாற்றமுமாக மூச்சடைக்க வைக்க, இடைவெளியின்றிச் சாத்தப்பட்ட ஜன்னலுக்கு இப்பக்கம் வெறும் பார்வையாளனாகக் கடந்து போக வேண்டியிருப்பதெல்லாம் தற்செயலோ!! முற்செயலோ!!

விதவிதமாயும் புதிது புதிதாயும் ஏமாறுவதில்தான் மனிதனுக்கு எத்தனை உற்சாகம். 'இனிமேல் ஏமாற மாட்டேன்' எனக்கூறிக்கொண்டே அடுத்த ஏமாற்றத்துக்குத் தயாராகிறான் அவன்.

நான்தான் செய்தேன், என்னால்தான் நடந்தது, என்னைத்தான் அணுகினர் என புகழுக்குப்போட்டியிடும் அதே மனிதர்கள்தான் இகழ் நேரிடும்போது கல்லெறி பட்ட காக்கைக்கூட்டமாய்ப் பறந்து அகன்று விடுகின்றனர்.

அத்தனை பேரையும் உறங்க வைத்து விட்டு, சாலை உறங்குகிறது. கலைக்க மனமில்லாத வழிப்போக்கன் சுருண்டு படுத்துக்கொள்கிறான் மரத்தடியில்.

அற்ற குளம் போல் வெறிச்சோடிக்கிடக்கிறது நட்சத்திரங்களற்ற வானம். கால்களால் தடவித்திரியும் ஒற்றைக்கொக்கைப் போல் தனிமையில் திரிகிறது நிலா.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

சாரல் துளிகள் அனைத்தும் நன்று. ரசித்தேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails