பாகல் (Momordica charantia) என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் கசப்புச்சுவையுள்ள காயைத் தரும், பாகற்கொடியைக் குறிக்கிறது. குக்குர்பிட்டேசியே (Cucurbitaceae) என்னும் செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இரட்டை விதையிலைத்தாவரமான இது ஐந்து மீட்டர் அதாவது, பதினாறடி வரைக்கும் நீளமாக வளரக்கூடியது. தண்டில் எதிரெதிராக அமைந்திருக்கும் இலைகள் பிளவு பட்டு மூன்று முதல் ஐந்து துண்டுகளாகப் பிரிந்து உள்ளங்கையும் விரல்களும் போல் தோற்றமளிக்கும். இலையளவு 4–12 செ. மீ. (1.6–4.7 அங்குலம்) வரை இருக்கும்.
முளைத்து சுமார் ஓரடி வளர்ந்ததும் இலைகளின் இடுக்குகளிலிருந்து மெல்லிய இழைகள் வளர்ந்து நீண்டு சுருள ஆரம்பிக்கும். இந்த இழைகள்தான் கொழுகொம்பைச் சுற்றிப்பற்றிக்கொண்டு தாவரம் படர்ந்து செல்ல உதவியாக இருக்கின்றன. இலைக்காம்புகள் தண்டுடன் இணையுமிடத்தில் சிறுசிறு மொட்டுகள் போன்று துளிர்த்து அவையும் கொடியாகப் படர ஆரம்பிப்பதால் மிக விரைவிலேயே பந்தல் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டு காய்க்க ஆரம்பிக்கும்.
இத்தாவரத்தில் ஆண், பெண் பூக்கள் தனித்தனியாக இருக்கின்றன. பெண் பூ மொட்டாக இருக்கும்போதிருந்தே சிறிய பிஞ்சுடன்தான் அரும்ப ஆரம்பிக்கும். பூத்தபின் பிஞ்சு முதிர்ந்து பாகற்காயாகும். வண்ணத்துப்பூச்சிகள், வண்டுகள் ஆகியவற்றைக் கவர்ந்திழுக்கும்படி பிரகாசமான வண்ணத்தைக் கொண்டிருக்கும் இப்பூக்களின் அமைப்பை ஒப்பு நோக்க இவற்றில் பெரும்பாலும் தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறவே வாய்ப்புள்ளது எனவும் தோன்றுகிறது.
பெண் பூக்கள்
பிஞ்சு முற்றிக் காயான பின்
முற்றிக்காயான பின் ஒரு கட்டத்தில் பழுக்க ஆரம்பிக்கும். மேல்தோலில் கொஞ்சம் கொஞ்சமாக ஆரஞ்சு நிறம் படர்ந்து முழுக்காயும் ஆரஞ்சு நிறமாகி இறுதியில் பட்டைகளாக வெடித்துப்பிளக்கும். உள்ளே விதைகளைச்சூழ்ந்திருக்கும் வெண்பகுதி முழுவதும் சிவந்திருக்கும். விதைகளும் நன்கு முற்றி கடினமானவையாக ஆகியிருக்கும். நல்ல காய்ப்பு உள்ள கொடியில் விளைந்து பழுத்துத் தயாரான விதைகளைக் காய விட்டுப் பாதுகாத்து வைத்தால் அடுத்த முறை விதைப்பதற்கு ஆகும்.
ஆண் பூக்கள்
ஒவ்வொரு கணுவிலும் பூக்கள் தோன்றி, அவற்றில் பெரும்பாலானவை பிஞ்சுகளைக்கொண்ட பெண் பூக்களாக இருக்க நேரினும் அவையெல்லாம் காய்ப்பருவத்தை எட்டிவிடுவதில்லை. ஒரு சில பிஞ்சுகள் வெம்பிப்பழுத்து உதிர்ந்து விடுகின்றன. சத்துக்குறைபாடு, வெப்பநிலை, தண்ணீர் சரியாகக் கிடைக்காதது என இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். வியாபார நோக்கோடு பயிரிடப்படும்போது இதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். வீடுகளில் தொட்டியிலோ அல்லது நிலத்திலோ வளர்க்கப்படும் செடிகளில் பூக்கள் உதிரும் பிரச்சினைக்கு மிக எளிய தீர்வு ஒன்று இருக்கிறது.
தேங்காய்ப்பால், மோர் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொண்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சுமார் ஒரு வாரம் வரைக்கும் புளிக்க விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கால் கப் அளவு எடுத்துக்கொண்டு அத்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து செடியின் மேல் தெளித்தும், வேரில் ஊற்றியும் வந்தால் பூ உதிரும் பிரச்சினை தீர்ந்து நன்கு காய்க்க ஆரம்பிக்கும்.
வெம்பிப்பழுத்தவை(pre matured)
பாகற்காயில் பல வகைகள் உள்ளன. அடர்ந்த பச்சை, வெளிர் பச்சை, மிக மிக வெளிறிய பச்சை, இரண்டு செ.மீ அளவே உள்ள குட்டிக்காய்கள், நீளமானவை, உருண்டையானவை எனப் பல வகை. இதில் குட்டியான காய் வகையை "மிதி பாகல்" என அழைப்பார்கள். நீளமான காய் வகையை "கொம்புப்பாகல்" என அழைப்பார்கள். இது போக, "மெழுகுப்பாகல்" என்றொரு வகையுண்டு. அதில் கொஞ்சங்கூட கசப்பே இருக்காது.
பொதுவாக எல்லா வகைப் பாகற்காய்களிலும் சொரசொரப்பான முள் போன்ற மேல் தோல் இருக்கும். இவை இந்தியன் வகையைச்சேர்ந்தவை. மிக மிக வெளிறிய பச்சை நிறத்திலிருக்கும் பாகற்காயின் மேல் தோல் வழுவழுப்பாக இருக்கும். முனைகளும் மழுங்கி இருக்கும். இது சீன வகையைச் சேர்ந்தது.
பாகற்காயில் “பீட்டா-கரோட்டின்”மற்றும் “வைட்டமின்-ஏ” உள்ளதால், கண் சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள “வைட்டமின்-சி” மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.
பலரும் சுலபத்தில் சாப்பிட விரும்பாமல் தட்டிக்கழிக்கும் ஒரு காயாகப் பாகற்காய் இருக்கிறது. ஆனால் இதில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ குணங்கள் எக்கச்சக்கம். பாகற்காய்,.. முக்கியமாக மெழுகுப்பாகல் நீரழிவு நோய்க்கும், கண் பார்வைக்குறைபாட்டுக்கும் நல்லதொரு மருந்தாகும். இதையும் துவரன் செய்து சாப்பிடலாம். பாகற்காய், இலை போன்றவற்றின் சாறு, சூப் போன்றவை உடலுக்கு மிகவும் நல்லது. டைப்-2 வகை நீரழிவு நோயாளிகள் வாரத்தில் இரு முறை பாகற்காயை சாப்பாட்டில் சேர்த்துக்கொண்டால் ரத்தத்திலிருக்கும் அதிகப்படியான சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் வருகிறது.
பாகற்காய்கள்
பாகற்காயில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாஷியம், மெக்னீஷியம், விட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் வயிற்றுப்பூச்சித் தொந்தரவு உள்ளவர்களுக்கும் பாகற்காய் ஜூஸ் அருமருந்து. கசந்து வழியும் ஜூஸ், சூப் போன்றவற்றை அருந்த விரும்பாதவர்கள், பொரியல், துவரன், வறுவல், வத்தக்குழம்பு, பாகற்காய் பிட்ளை என ஏதாவதொரு வகையிலாவது சாப்பிட்டு வர வேண்டும். வெல்லம் போட்டுப் பச்சடி செய்து வைத்தால் பாகற்காய் வேண்டாம் என்று ஓடுபவர்கள் கூட கொஞ்சமாவது சாப்பிடுவார்கள். பாகற்காய் வெல்லப்பச்சடி செய்முறைக்கு எங்கே போவது என்றுதானே நினைக்கிறீர்கள். இதோ இங்கே இருக்கிறது.
2 comments:
நான் பிட்லை பிரியன் அதனால் பாவக்காய் குறித்த அனைத்து விவரங்களையும் அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்..
பாவற்காய் எனக்கும் மகளுக்கும் பிடித்தது. எல்லா விதங்களிலும் சுவைப்பதுண்டு. குறிப்புகள் சிறப்பு.
Post a Comment