வீட்டை ஒட்டினாற்போல் அமைக்கப்பட்டிருந்தது புறவாசலுக்குச்செல்லும் பாதை. அதில் சுவரோரமாக இரண்டடி அகலத்துக்கு முழங்கால் உயரத்துக்குக் குவித்துப்போடப்பட்டிருந்த மண், ஓரளவு இறுகி மென்பாறை போல் ஆகியிருந்தது. அதனருகில் குத்த வைத்து அமர்ந்திருந்த சித்தப்பா தன் கையிலிருந்த அரிவாளால் மண்ணை மெதுவாகக் கொத்திக்கொத்தி இளக்கி விட்டுக்கொண்டிருந்தார். அருகில் நின்றிருந்த நாங்களெல்லாம் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உள்ளிருந்து பனங்கொட்டையும் அதன் மேல் முளை விட்டிருந்த பனங்கிழங்குமாக ஒவ்வொன்றாக மெதுவாக வெளிப்பட்டன.
சேதப்பட்டு விடாமல் ஒவ்வொன்றாகப் பிடுங்கிப்போட்டு பனங்கிழங்கு தனியாகத் தறித்து எடுக்கப்பட்டது. பத்துப்பதினைந்து கிழங்குகள் சேர்ந்ததும் அவற்றைக் கட்டி சித்தியிடம் கொடுத்து, "எல்லாப் பிள்ளேளுக்கும் அவிச்சுக்குடு" என்றவர். "ஏ பிள்ளேளா.. பொறவாசலுக்கு வாங்க, தவுணு வெட்டித்தாரேன்" என்றபடி இன்னொரு தடிமனான அரிவாளும், வெட்டுப்பலகையுமாக பின் வாசலில் இருந்த கொடுக்காப்புளி மரத்தடிக்கு நடந்தார். கைக்குக் கிடைத்த பனங்கொட்டைகளை அள்ளிக்கொண்டு நாங்களும் தொடர்ந்தோம்.
அப்பாவின் அம்மாவுக்குப் பச்சை விரல்,.. அதாவது க்ரீன் ஃபிங்கர் இருந்திருக்க வேண்டும். பட்டுப்போன கம்பை நட்டு வைத்தாலும் துளிர்த்து விடுமென ஊரில் சொல்வார்கள். புறவாசலில் அவர் நட்டு வைத்திருந்த மருதாணி, வாழை இன்ன பிறவுக்கிடையே இரண்டு கொடுக்காப்புளி மரங்களும் வானுயர வளர்ந்திருந்தன. சீசனில் காய்த்துக்கொட்டும் அளவுக்குக் கணக்கே கிடையாது. அதன் நிழலில் வாட்டமாக உட்கார்ந்து கொண்டு வெட்டுப்பலகையில் ஒரு பனங்கொட்டையை வைத்து ஒரே போடு. பனங்கொட்டை இரண்டாகப் பிளந்து விழுந்தது. தேங்காய் மூடியைப்போல் ஆனால், நீள்வட்டமாகக் காட்சியளித்த அதனுள்ளே, வெனிலா ஐஸ்க்ரீம் கலரில் ஒரு வஸ்து இருந்தது. அரிவாளின் கூர்முனையால் அதை நெம்பியெடுத்து எங்களிடம் கொடுத்து, "சாப்பிடு" என்றார்.
தொடும்போது கொஞ்சம் திடமாகத்தோன்றினாலும், வாயில் வைத்ததும் பஞ்சாகக்கரைந்து லேசான பதநீர் மணத்துடன் இனித்தது. "இது என்ன சித்தப்பா?" என்று ஆர்வத்துடன் கேட்டோம். "இதா?.. இத தவுணுன்னு சொல்லுவோம். நுங்குக்கு உள்ள தண்ணி இருக்கும்லா? அதுதான் வெளைஞ்சு தவுணா ஆவும். சாப்புடுங்க. மேலுக்கு நல்லது." என்றார்.
"அப்பம் நுங்கு என்னவாட்டு ஆவும்?"
"வெட்டிப்போட்ருக்கம்லா? அந்த பனங்கொட்டைய எடு. சொல்லுதேன்"
எடுத்துக்கொடுத்தேன்.
"இன்னா,... வெளில இருக்க ஓட்டை ஒட்டுனாப்ல வெள்ளையா கல்லு மாரி இருக்குல்லா. அதான் நுங்கு. பனங்கெழங்கு வெளைஞ்சுட்டுன்னா அப்றம் இப்படித்தான் ஆவும்."
"ஏஞ்சித்தப்பா... தேங்காயத் திருவற மாரி இத திருவி கொழம்புக்கு அரைக்க முடியாதா?"
"அது ஒண்ணுக்கும் ஆவாது. வெளஞ்சுட்டுன்னா அப்படித்தான் வம்பாப்போயிரும்."
"கெழங்கு வெளஞ்சுட்டுன்னு எப்படிக் கண்டுபிடிப்பீங்க?"
"அதுக்கு ஒரு காலக்கணக்கு இருக்கு. அப்பிய(ஐப்பசி) மாசம் பனங்கொட்டைய வெதச்சா மார்கழி, தைக்கு வெளஞ்சு மண்ணுக்கு மேல குருத்து தெரிய ஆரம்மிச்சிரும். அந்தாக்ல வேணுங்கப்பட்ட சமயம்லாம் வெட்டிக்கிட வேண்டியதுதான். அர வெளச்சல்ல வெட்டுனா தவுணு வந்துருக்காது. நொளுநொளுன்னு கெடக்கும். அத கஞ்சின்னு சொல்லுவோம். திங்கதுக்கு வாக்கா இருக்காது. பொறுமையா காத்துருந்தா, கெழங்கும் தவுணும் திங்கலாம். டவுன்லேயே இருக்கப்பட்ட பிள்ளேளு. ஒண்ணுமே தெரியாம வளருதுவோ" என்றபடி எழுந்து போனார் சித்தப்பா.
பனங்கிழங்குகளை லேசாக தலையும் வாலும் நறுக்கி, மேல் தோலைக் கழட்டி வீசி விட்டு, உயரமான ஒரு பானையில் நட்டக்குத்தற நிறுத்தி, அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, தேவையான உப்புடன் கொஞ்சம் மஞ்சளையும் அரைத்துப்போட்டு அடுப்பிலேற்றி வைத்தார் சித்தி. வீட்டுக்கு அடங்காத வாலுப்பசங்களைப்போல் பானைக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்தன கிழங்குகள். இதை தட்டு போட்டு மூட முடியாது, ஆகவே, இன்னொரு சிறிய பாத்திரத்தால் மூட வேண்டும். மிதமான நெருப்பில் நன்கு வெந்ததும் இறக்கி, தண்ணீர் வடிய விட்டு, பரத்திப்போட்டு கொஞ்சம் ஆறியதும் சுளவில் கொட்டி வைத்து விட்டார்கள். அன்று இரவு யாருக்கும் சாப்பாடே தேவையிருக்கவில்லை. கிழங்காகத் தின்று தீர்த்தோம்.
நாகர்கோவிலில் வடசேரி சந்தையிலும் பனங்கிழங்கு கிடைக்கும், ஆனாலும் வாங்க அவசியமிருக்கவில்லை. அம்மாச்சி வீட்டிலிருந்தோ அப்பாச்சி வீட்டிலிருந்தோ கிழங்குகள் கட்டுக்கட்டாக வந்துவிடும். பொங்கல் சமயம்தான் என்றில்லை, நினைத்த போதெல்லாம் பஸ் ஏறி வந்துவிடும். தின்று திகட்டி அலுத்துப்போனபின், கிழங்கைக் கண்டாலே ஓடி விடுவோம். 'இதுகளுக்கு இனிமே எங்க தொண்டைல எறங்கப்போகுது' என்றபடி அம்மா அத்தனைக் கிழங்குகளையும் துண்டு துண்டாக நறுக்கி வெயிலில் காயப்போடுவாள். சுக்காகக் காய்ந்தபின் அவற்றை உரலிலிட்டு ஒன்றும் பாதியுமாக இடித்து அதன் பின் காய்ந்த மிளகாய் வற்றல், பூண்டு, உப்பு போட்டு இடித்துப் பொடியாக்கி வைப்பாள். இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். மஹாராஷ்ட்ராவின் லஸுன் சட்னியும் இதுவும் தூரத்து உறவு. ஒரு கட்டத்தில் அதுவும் அலுத்துப்போனது.
மும்பைக்கு வந்தபின், பனங்கிழங்கு காணாப்பண்டமாக ஆனபின் அதன் அருமை தெரிந்தது. பொங்கல் சமயம் வாஷியிலிருக்கும் 'வள்ளி ஸ்டோர்ஸில்" டப்பாவில் கிடப்பவற்றில் நல்லதாக நாலைந்தை வாங்கி வந்து அவித்துச் சாப்பிட்டு மனதைத் தேற்றிக் கொள்வது வருடா வருடம் நடக்கும் சடங்கு. சில வருடங்களுக்கு முன் ஒரு செப்டம்பர் மாதத்தில் ஊருக்குப் போயிருந்த போது, என் இரண்டாவது தம்பி சுமார் ஐம்பது கிழங்குகளை, 'அக்காவுக்கும் பிள்ளைகளுக்கும் அவித்துக்கொடு' என்று கொண்டு வந்து போட்டதை ஜென்மத்துக்கும் மறக்க முடியாது.
ஈழத்தில் பனங்கிழங்கை பச்சையாகவே வெயிலில் காய விட்டு இடித்து மாவாக்கி, 'ஒடியல்' கூழ் தயாரிப்பார்கள் எனக்கேள்வி. தமிழகத்திலும் வெந்த பனங்கிழங்கைக் காய விட்டு அரைத்து மாவாக்கி பதார்த்தங்கள் தயாரிப்பார்களாம். கேள்விதானே தவிர கண்டதுமில்லை, சாப்பிட்டதுமில்லை. திருச்செந்தூர் கோவிலின் வெளியே, நறுக்கிய கிளிமூக்கு மாங்காய், இலந்தைப்பழம் போன்றவை மட்டுமல்ல, அவித்த பனங்கிழங்கும் அதிக அளவில் விற்கப்படுவதுண்டு.
நன்கு பருத்த கிழங்கு வெந்தபின் அதை இரண்டாகப் பிளந்து, நடுவிலிருக்கும் பனங்குருத்தை எடுத்து வீசி விட்டு, கிழங்கைத் துண்டு துண்டுகளாக உடைத்து, சாப்பிடும் அனுபவமே தனி. கிழங்கின் நடுவிலிருக்கும் பனங்குருத்து நுனி வெந்து பதமாக இருக்கும். அதையும் விட்டு வைக்காமல் சாப்பிடுவோம். பல்லுக்குப் பதமாக நன்றாகவே இருக்கும். தண்ணீரிலிட்டு வேக வைத்து மட்டுமன்றி, நெருப்பிலிட்டுச் சுட்டும் சாப்பிடலாம். தைப்பொங்கலின்போது, அடுப்பில் எரியும் சுள்ளிகளூடே மேல் தோல் உரிக்காத ஒன்றிரண்டு கிழங்குகளைச் சொருகி விட்டால் போதும். தோல் கருகி, கிழங்கு கருகாமல் நன்கு பதமாக வெந்து விடும்.
ஒரு முனை கூராகவும் மறு முனை ஒன்று அல்லது ஒன்றரை அங்குல விட்டம் கொண்டதாகவும் கூம்பு வடிவத்தில் இருக்கும் பனங்கிழங்கை நாரை எனும் பறவையின் அலகிற்கு ஒப்பிட்டு,
//பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன: பவளக் கூர்வாய் செங்கால் நாராய்//
என, சத்திமுற்றப்புலவர் நாரை விடு தூதில் பாடியுள்ளது ஒப்பு நோக்க வியப்பூட்டக்கூடியது. நமக்குக் கிழங்கைக்கண்டால் தின்பதைத்தவிர வேறு சிந்தனையில் மனம் செல்லாது, புலவருக்கோ நாரையின் அலகொடு ஒப்பிட்டு அழகானதொரு உவமை தோன்றி, நாரையைத் தன் மனைவிக்குத் தூது செல்ல வேண்டி, அழகானதொரு பாடலையும் நமக்களித்திருக்கிறார். என்ன இருந்தாலும், மேன் மக்கள் மேன் மக்களே..
1 comment:
படித்துக் கொண்டு வரும்போதே சாப்பிடத் தோன்றுகிறது. சில சமயங்கள் தமிழகப் பயணங்களில் வேக வைத்த பனங்கிழங்கு ருசித்ததுண்டு.
Post a Comment