காலியாயிருக்கும் பள்ளி மைதானத்தின் நிசப்தம் காதை அறைகிறது. தலை தூக்கிப் பார்த்து விட்டு மறுபடியும் துயிலத்தொடங்கும் நாயின் கனவில் உருள்கின்றன பந்துகள்.
குழந்தையின் கிறுக்கல்களாய் மேகச்சிதறல், காற்றே கலைத்து விடாதிரு.
புன்னகையைப் பொதிந்திருக்கும் மனப்பேழையை கண்ணீர்த்துளிகளால் அறைந்து இறுக மூடுகிறது வாழ்வு.
பலவீனமானவர்கள் போல் தோற்றமளிப்பவர்கள் உறுதி மிக்கவர்களாகவும் இருப்பதுண்டு. அப்பலவீனத்திலிருந்தே தங்களுக்கான பலத்தைத் திரட்டிக் கொள்கிறார்கள். மெலிந்த கிளையை இறுகப்பற்றியிருக்கும் தேன்சிட்டைப்போல்.
நோக்கு விலக்கி தம்முள் அமிழ்ந்து ஆழ மௌனித்திருக்கும் நீர்க்காகங்கள் சிறகுயர்த்தி ஆசீர்வதிக்கின்றன, இன்று பிறந்த மீன் குஞ்சுகளை.
அறையின் உள்ளும் புறமும் நோக்கியபடி வலைத்தடுப்பின் ஓர் இழையில் திரும்பித்திரும்பி அமர்ந்து வட்டமடிக்கிறது ஒரு குருவி. சட்டென ஒரு முடிவெடு மனமே..
தாகித்த மரம் அனுப்பிய வேர் விடு தூதிற்கிணங்கி, தன்னையே சமர்ப்பிக்கிறது மறைந்திருக்கும் ஈரம்.
பேசிப்பேசி சொற்கள் தீர்ந்து போன ஒரு கனத்த பொழுதின் தருணங்களில் சண்பக மலர்ப்பொடிகள் வந்தமைந்தபோது மறுபடி பொங்கி வழிந்தன சொற்கள்.
மூச்சை நிறுத்திவிடுமுன் இறுதிக்கணங்களில் நினைவிற்கு வாராதொழியட்டும் வாழ்விலடைந்த லாப நட்டங்கள்.
காற்றில் சரசரக்கின்றன காய்ந்த புற்கள். எச்சரிக்கை கொண்டு பதுங்கும் ஓணானின் நினைவுகளில் நெளிகிறது பசித்த பாம்பு.
No comments:
Post a Comment