Tuesday, 19 March 2019

பாலக் பனீர்.

சந்தையில் கொஞ்சம் மலிவாகக்கிடைத்ததென்று இரண்டு பாலக் கீரைக்கட்டுகள் வாங்கி வந்தேன். ஆய்ந்து, உப்பு போட்ட தண்ணீரில் நனைத்து சுத்தம் செய்து தண்ணீரை வடிய விட்டு, இப்பொழுதெல்லாம் கிடைக்க ஆரம்பித்திருக்கும் டிஷ்யூ பைகள் ஒன்றில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்தாயிற்று. கடைந்த கீரை போரடித்து விட்டதென்றதால் பாலக் பனீர் செய்யலாமென எண்ணம். குளிர் இன்னும் விலகாத இப்பொழுதில் சப்பாத்தியுடனோ அல்லது ஃபுல்காவுடனோ சாப்பிட உகந்தது.
தேவையானவை
ஒரு கட்டுக் கீரையை கொஞ்சம் அகன்ற ஒரு பாத்திரத்தில் பரத்தி, அதன் மேல்  ஐந்து பூண்டுப்பற்கள், ஒரு அங்குல அளவில் இஞ்சி, மூன்று பச்சை மிளகாய்கள், இரண்டு தக்காளிகள், எல்லாவற்றையும் வைத்து கூடவே ஒரு வெங்காயத்தை நறுக்கித்தூவி, குக்கரில் வைத்து குழைய வேக விட்டு எடுத்துக்கொண்டு நன்கு ஆற விடவும். ஆறிய பின் எஞ்சிய தண்ணீரை வடித்தெடுத்துக்கொண்டு கீரையை மிக்ஸியிலிட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீரைக் கொட்டி விட வேண்டாம், தேவைப்படும்.


ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய்யைச்சூடாக்கி, அரை ஸ்பூன் ஜீரகத்தைப்போட்டுப் பொரிய விடவும். பொதுவாக பஞ்சாபி சமையலுக்கு கடுகும், ஜீரகமும்தான் தாளித்துக்கொட்டுவார்கள். சில அயிட்டங்களில் மட்டுமே கடுகு மைனஸாகும். சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கி வைக்கப்பட்ட வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்தபின் அத்துடன் அரைத்து வைத்த கீரையைச் சேர்த்து, கால் டீஸ்பூன் மஞ்சட்பொடியும், அரை ஸ்பூன் கரம் மஸாலாவும் சேர்க்கவும். எவெரெஸ்ட் கரம் மசாலா சேர்த்தால் நன்றாக இருக்கிறது என்ற டிப்ஸ் இங்கே கவனிக்கத்தக்கது. 

பச்சை வாடை போக அது வேகட்டும். அதற்குள் பனீரை ஆயத்தப்படுத்துவோம்.
ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய்யைச் சூடாக்கி, பனீர் துண்டங்களை அதில் போட்டு லேசாகச் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வறுக்காமலும் போடலாம், பாதகமில்லை. வறுத்த பனீர் துண்டங்களை கொதிக்கும் பாலக் க்ரேவியில் போட்டு சில நொடிகள் வேக விடவும்.

எடுத்து வைத்த கீரைத்தண்ணீரை வேண்டிய அளவுக்கு கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்ளலாம். க்ரேவி கெட்டியாகவும் இருக்கக்கூடாது, குழம்பு போல் ஓடவும் கூடாது, அரைப்பதம் நன்று. ஒரு சொட்டு எண்ணெய்யைக்கூட வீணாக்க விரும்பாத புத்திசாலிகள், இரண்டு அயிட்டங்களையும் பக்கத்துப்பக்கத்து அடுப்புகளில் வைத்துக்கொண்டு, வறுத்த பனீர் துண்டங்களை நேரடியாக பாலக் க்ரேவியில் போட்டு விடுவார்கள். சில நொடிகள் கொதித்ததும் பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றிக்கொண்டு, டைனிங் டேபிளுக்கு கொண்டு செல்லவும். 
விரும்பினால் க்ரேவியின் மேலாக கொஞ்சம் க்ரீம் சேர்த்துக்கொள்ளலாம். இதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி என எதையும் சேர்த்து ருசியைக் கெடுத்து விடாமல், சாதம், சப்பாத்தி, ரோட்டி, மற்றும் ஜீரா ஃப்ரைட் ரைஸ் அல்லது சிம்பிள் புலாவுடன் பரிமாறலாம்.

இது "எங்கள் ப்ளாக்" தளத்திலும் வெளியாகியுள்ளது.

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

எங்கள் பிளாகிலும் ருசித்தேன்.... :)

கோமதி அரசு said...

எங்கள் பளாக் தளத்திலும் வாசித்தேன்.
அங்கு ஒரு படம்.
இங்கு செய்முறை படங்கள் படி படியாக அருமை.
தொடர்ந்து எழுதுங்கள் சாந்தி.

ஸ்ரீராம். said...

இவ்வளவு படங்களை வைத்துக்கொண்டு அங்கு ஒரு படம் மட்டும் கொடுத்து விட்டீர்களே... அங்கும் இந்தப் படங்களைக் கொடுத்து உதவியிருக்கக் கூடாதோ!

ஹா... ஹா... ஹா...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்.

இந்தப்படங்கள் சமீபத்தில் அதாவது உங்களுக்குக் குறிப்பு அனுப்பிய பிறகு எடுக்கப்பட்டவை :))

நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails