Thursday, 7 March 2019

ஸ்பானிஷ் பிங்க் ரைஸ்..

ஆதள கீர்த்தனாரம்பத்திலே... அதாகப்பட்டது, நாங்கள் 1993லிருந்து அலிபாகில்  வசித்து வந்த காலத்தே எனக்கு ஸ்வெட்டர் பின்ன கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆவலுண்டாயிற்று. அந்நோக்கில் விசாரித்து எனது நெருங்கிய சினேகிதியிடமே கற்றுக்கொள்ள ஆரம்பித்து ஒரு சில உருப்படிகளையும் பின்னி முடித்திருந்தேன். அக்காலத்தே "Women's era" என்ற பெண்கள் பத்திரிகை 1994ம் வருடம் நிட்டிங் சிறப்பிதழ் வெளியிடுவதாகக் கேள்விப்பட்டு அதை வாங்கி வரும் பொருட்டு சென்றக்கால் அவ்விதழ் இருப்பு தீர்ந்ததென அறிந்து யாதும் செய்யக்கூடாமல், 'சிறப்பிதழ்' என்ற சொல்லொன்றை மட்டுமே நினைவில் நிறுத்தியிருந்த என் கணவர், அதற்கடுத்தாற்போல் வெளிவந்திருந்த சமையல் சிறப்பிதழை வாங்கி வந்து கொடுத்தார்.

கொடுத்த சிறப்பிதழைக் கடுப்புடன் நோக்கினாலும், அடுப்பு எரிய.. ஐ மீன், சமைக்க.. ஐ மீன், விதவிதமான அயிட்டங்களைக் கற்றுக்கொண்டு சமைக்க ஏதுவாக இருக்குமென்று கருதி, தினமும் பொழுது போகாத நேரங்களில் அப்பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டலானேன். வாசித்த வரைக்கும் வயிற்றுக்கு கெடுதல் விளைவிக்காத பதார்த்தக்குறிப்புகளே அப்புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதை அறிந்து, சுப தினமொன்றில் சமைத்ததே "ஸ்பானிஷ் பிங்க் ரைஸ்". வாய்க்கு ருசியாகவும் வயிற்றுக்கு இதமாகவும் அமைந்த இப்பண்டம் எங்கள் வீட்டு மெனுவில் 25 வருடங்களாக இடம் பெற்றிருக்கிறது. செய்வதற்கும் மிகவும் சுலபமானது.
இரண்டரை கப் அரிசியை கல், நெல் பார்த்து சுத்தம் செய்து, கழுவி, பின் அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அது ஊறும் நேரத்தில் மளமளவென பூர்வாங்க வேலைகளைச் செய்து விடலாம். 

ஒரு பெரிய வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கிக்கொண்டு, அதே போல் ஒரு பெரிய குடைமிளகாயையும் நீளமாக நறுக்கிக்கொள்ளவும். குடைமிளகாயை சதுரத்துண்டுகளாகவும் போட்டுக்கொள்ளலாம், அது கோபித்துக்கொள்ளாது. மூன்று பூண்டுப்பற்களை சின்னச்சின்னதாக துண்டு போட்டுக்கொள்ளவும். இரண்டு கப் அளவுக்கு ஜூஸ் வருமாறு தக்காளிகளை அரைத்து எடுத்துக்கொள்ளவும். வடிகட்ட வேண்டாம், அப்படியே இருக்கட்டும். ஒரு டீஸ்பூன் மிளகை கொரகொரப்பாக தட்டி வைத்துக்கொள்ளுங்கள். ஆறு கிராம்புகளை முழுதாக எடுத்துக்கொள்ளுங்கள். 

இப்பொழுது அடுப்பில் சற்றே கனமான பாத்திரத்தையோ அல்லது குக்கரையோ வைத்து, அதில் அரை கப் எண்ணெய்யை விட்டுச் சூடாக்கி, அதில் பூண்டுத்துண்டுகளையும் கிராம்பையுமிட்டு நன்கு சிவக்க வறுக்கவும். கிராம்பு வெடித்து முகத்தில் படலாம், கவனம். எண்ணெய்யில் போடுமுன் கிராம்பின் காம்புப்பகுதியை மட்டும் இடுக்கியால் சற்றே நசுக்கிப்போட்டால் வெடிக்காது என்ற டிப்ஸ் இங்கே கவனிக்கத்தக்கது. அதன் பின் வெங்காயம் மற்றும் குடை மிளகாய்த்துண்டுகளையுமிட்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கருகி விடக்கூடாது. பொன்னிறத்துக்கு முந்தைய பருவத்தில் பிங்க் கலரில் சிவந்து வரும்போது, அத்துடன் இரண்டரை கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும், ஊற வைத்திருந்த அரிசியை இத்துடன் சேர்த்து நான்கு நிமிடங்களுக்குச் சமைக்கவும். பின், எடுத்து வைத்திருந்த தக்காளிச்சாற்றையும் இத்துடன் சேர்த்து, கனமான மூடியால் மூடி, மிகக்குறைந்த தீயில் வேக விடவும். குக்கரில் வெயிட் போட வேண்டாம். நிபுணர்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பக்குவம் தெரிந்த நளன்களும், நளிகளும் அரிசி வேக எத்தனை விசில் வேண்டுமென்று ஊகித்து அதன் படி செய்ய அனுமதியுண்டு. சாதம் குழைந்து விடக்கூடாது, அவ்வளவே. அரிசி வெந்து பொலபொலவென ஆனதும் இறக்கி ஐந்து நிமிடம் அப்படியே விடவும். அதன் பின், ராய்த்தா, மாங்காய் இனிப்பு ஊறுகாய், தம் ஆலு போன்ற பக்க வாத்தியங்களுடன் சாப்பாட்டுக்கச்சேரியை ஆரம்பித்து விடலாம்.
அரிசிக்குப் பதிலாக கோதுமை ரவையைப் பயன்படுத்தியும் செய்யலாம். ரவையை வெறும் வாணலியில் லேசாக மணம் வரும் வரை வறுத்துக்கொண்டால் சாதம் உதிரியாகவும் சுவையாகவும் அமையும்.

விருந்துகளுக்கு மிகவும் ஏற்றது. பிள்ளைகளுக்கு மதிய டப்பாவுக்குக் கொடுத்து விடலாம். காரம் போதாதெனத் தோன்றினால் அரைத்தேக்கரண்டி மிளகை அதிகப்படுத்திக்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் மிளகாய்த்தூளை சேர்க்கக்கூடாது. இதன் பிரத்தியேகமான ருசி கெட்டு விடுகிறது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails