கையிலிருக்கும் தின்பண்டத்திலிருந்து ஆகச்சிறு பகுதியை பாசத்துடன் கிள்ளித்தரும் குழந்தையின் முன் கையேந்தி நிற்கும் போது ஒரு துளி இறைதரிசனம் கிட்டி விடுகிறது.
கொசு மருந்தையோ மின்மட்டையையோ எடுத்து வரும்வரைக்கும், பறந்து தப்பிக்காமல்.. அந்தக்கொசு அங்கேயேதான் இருக்கும் என நினைப்பது முதிர்ந்த தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.
பாழாய்ப் பொழிந்து கொண்டிருக்கிறது பால் வெய்யில். நனையும் கதிரவனின் தலை துவட்டத்தான் ஒரு மேகத்துண்டையும் காணோம்.
பதாகைகளில் புன்னகைக்கும் வாழும் மகாத்மாக்களின் கூப்பிய கரங்களுக்குள் ஔிந்திருக்கிறது கோட்சேயின் துப்பாக்கி.
அங்கேயே வசிக்கும் மீன்கொத்திகளுக்கல்ல.. எப்போதாவது வந்து வாரிக்கொண்டு போகும் மனிதனைத்தான் அஞ்சுகின்றன அம்மீன்கள்.
வெயிலருந்தும் தும்பிகள் பறக்கும் இவ்விளங்காலையின் முதுகில், வேனல் ஒரு ரயிலைப்போல ஊர்ந்து செல்கிறது.
எருதின் நோயைப் புரிந்து கொள்ள மனதில்லாத காக்கைகள் பறக்கும் அந்நிலத்தில்தான், பூத்தாக வேண்டும் என் சிறு நந்தவனம்.
சிப்பந்திகளுக்கு உணவு இடைவேளை. சில மணித்துளிகளுக்கேனும் ஆயுள் நீடிக்கிறது கறிக்கடைக் கோழிகளுக்கு.
கோடை மலர்ந்திருக்கும் குல்மொஹர் மரங்களின் நிழலில் துயிலும் இலையுதிர் காலத்தின் துகள்களைக் கொத்திக் கொண்டிருக்கிறது ஒரு புல்புல்.
ஆசை தீர ஆடி முடித்தபின், அறைக்குள் போய் அடைந்து கொண்டது அழகு மயில். அறை என்றா சொன்னேன்? அது கண்களுக்குப் புலப்படாத தளைகள் கொண்ட சிறையாகக் கூட இருக்கலாம்.
1 comment:
நல்ல சிந்தனைகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
Post a Comment