Tuesday 27 March 2018

திருவட்டாறு ஆலயம்.

கன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன் என்று பெயர்தானே ஒழிய, அம்மாவட்டத்திலிருக்கும் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்குச்சென்று தரிசிக்க, எனக்கு இத்தனை வருடங்கள் பிடித்திருக்கின்றன. “திருவட்டாறு” என்ற பெயர்ப்பலகையைச் சுமந்திருக்கும் பேருந்தில் எத்தனையெத்தனை நாள் கல்லூரிக்குப் பயணித்திருப்பேன். ஒரு நாள் கூட திருவட்டாறுக்குச் செல்லவேண்டுமென்று தோன்றியதேயில்லை. அவன் தாள் வணங்கவும் அவனருள் இருந்தால்தான் சாத்தியப்படும் என்பது எத்தனை சத்தியமான உண்மை.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு பழமையான வைணவக் கோயிலாகும். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதால், இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76-வதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.

சமீப வருடங்களில் ஒரு முறை ஊருக்குச் சென்றிருந்தபோது, மகளும் நானுமாக திருவட்டாறு சென்று வரலாமென்று திட்டமிட்டோம். காலையுணவை முடித்துக்கொண்டு ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி விடவேண்டுமென்று திட்டம். ஆனால், அன்றைய தினம் ஏழரையாக அமையப்போகிறதென்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஊரெல்லாம் சுற்றிப் பார்த்துக்கொண்டே செல்ல வேண்டும், அதற்கு பேருந்துப்பயணம்தான் சரி என்று மகள் அடம் பிடித்ததால் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து திருவட்டாறுக்கு பஸ் பிடித்தோம். இயற்கையழகை ரசிக்க வசதியாக ஜன்னலோரம் இடம் பிடித்துக்கொண்டோம். பார்வதிபுரம் தாண்டியதும் பயிர் வாசனையைச் சுமந்து வந்த எதிர்காற்று முகத்தில் ஜில்லென்று மோதி சொக்க வைத்தது. இதை.. இதை.. இந்த நாஞ்சில் காற்றுக்கு அலந்துதான் இந்த பஸ் பிரயாணமே. மும்பையில் செட்டிலானபின் நாஞ்சில் காற்றும் ஆனியாடிச்சாரலும் எட்டாக்கனியாகி விட்டன. ஆகையால், மும்பையில் லேசாக ஜிலீரென்று காற்று தவழ்ந்தாலும் போதும்.. அப்படியே நாஞ்சில் நாட்டு நினைவுகளைக் கிளறிக் கொண்டு வந்து கொட்டி விட்டுப்போகும்.

கோவிலின் முன் வாயில்
தக்கலை வரையில் ஒரு பிரச்சினையில்லாமல் திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் சீராகப் போன பேருந்து, அங்கிருந்து மூலச்சல் போன்ற உட்கிராமங்கள் வழியாக சுற்றிச்சுற்றிச் செல்ல ஆரம்பித்தது. ‘ஆஹா.. நடை அடைக்குமுன் கோவிலுக்குச் சென்று விட முடியாது போலிருக்கிறதே. சரி.. பார்ப்போம். அவன் விட்ட வழி’ என்று பாரத்தைப்போட்டு விட்டு கம்மென்றிருந்தோம். ஒரு வழியாக திருவட்டாறு பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தபோது பன்னிரண்டரை மணி. ஒரு ஆட்டோ பிடிக்கலாமென்றால், ‘கோயில், இன்னா பக்கத்துலதானே இருக்கு, நடந்து போற தூரந்தான்’ எனச்சொல்லியே ஒரு ஆட்டோவும் வரவில்லை. அப்புறம், ‘தாங்கி தடுக்கு இட்டபின்’ ஒரு ஆட்டோக்காரர் கொண்டு விட சம்மதித்தார். ஏறி, கோவிலுக்கு வந்தபின்தான் பேருந்து நிலையத்துக்கு மிகவும் அண்மையில் இருப்பது புரிந்தது. பேருந்து நிலையத்திலேயே கைகாட்டியும் வைத்திருக்கிறார்கள். அது காட்டும் திசையில் நடந்தால் கோவில் வந்து விடும். பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் இடது பக்கமாகத் திரும்பி கொஞ்சம் நடந்து வலது பக்கம் சந்தில் நுழைந்து நேராகப் போனால், சர்ப்பக்காவு இருக்கும் அரசமூடு. அதன் வலது பக்கம் சில அடி தூரத்திலேயே கதகளி மண்டபமும் கோவிலும். சர்ப்பக்காவில் நின்று, “ஆதிகேசவா” என்று விளித்தால் “ இன்னா வாரேன்” என்று வந்து விடுவான். சர்ப்பக்காவின் பின்புறம்தான் கோவிலின் வடக்கு வாசல் இருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். வேகவேகமாக ஓடி வந்து நின்றால்.. ஐயகோ!! பூஜை முடிந்து நடை அடைத்து விட்டதாம். 

‘அன்னதானம் நடக்கிறது, சாப்பிட்டுப்போங்கள்’ என்றார் ஒரு போத்தி. கூப்பிட்டுக் கொடுக்கிறானே என்று ஆசையுடன் நகர்ந்த என்னை, ‘எல்லாம் நாகர்கோவிலில் சாப்பிட்டுக்கொள்ளலாம்’ என்று மகள் வெளியே இழுத்துக்கொண்டு போனாள். முழங்கால் மூட்டில் சர்ஜரி நடந்திருந்த புதிது ஆகையால் அவளுக்கு சப்பணமிட்டு உட்கார அனுமதி கிடையாது. அதனால் நானும் உட்காரக்கூடாதாம். இத்தனை தூரம் ஓடி வந்தும் அவனைப்பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் மேலோங்க, ‘அடுத்த முறை கண்டிப்பாக வருவேன்’ என்று அவன் படியில் நின்று சபதமிட்டு விட்டு நாகர்கோவில் திரும்பினோம்.
சர்ப்பக்காவு
சொன்னது போலவே மறு வருடம் நாங்கள் நால்வரும் ஊருக்குச் சென்றபோதும் திருவட்டாறுக்குக் கிளம்பினோம். இம்முறை பேருந்தைத் தவிர்த்து விட்டு வாடகைக்கார் அமர்த்திக்கொண்டு வெகு சீக்கிரமே கிளம்பி சென்றடைந்தோம். அப்பாடா!!.. நடை இன்னும் அடைக்கவில்லை. கதகளி மண்டபத்தில் நுழைந்து, சிறு குன்றின் மேலிருக்கும் கோவிலுக்குப் படிகளேறிச்செல்ல வேண்டும். இக்கோவில் கேரள பாணியில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் நுழையும் ஆடவர் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் பொருட்டு தங்கள் சட்டைகளைக் கழற்றியே நுழைய வேண்டும். கோவிலுக்குள் நுழைந்ததும் அதன் நான்கு பிரகாரங்களும், பிரகாரத்தின் ஒவ்வொரு தூணிலுமிருக்கும் தீபலஷ்மிகளும் பிரமிக்க வைக்கிறார்கள். இந்த 224 தீபலஷ்மிகளின் தலையலங்காரமும் ஆடையணிகளும் ஒருவரைப்போல் மற்றவருக்கு இல்லாமல் வித்தியாசப்பட்டு இருக்கின்றன. ஆனால் சமீபத்தில் மணல் வீச்சு முறையில் சுத்தப்படுத்தப்பட்ட பிறகு நுணுக்கமான வேலைப்பாடுகள் எல்லாம் மறைந்து சற்றே மொழுமொழுவெனக் காட்சியளிப்பது வருத்தம் தர வைக்கிறது. வருடத்தில் ஓர் நாள் இந்த தீபலஷ்மிகளின் கையிலிருக்கும் விளக்குகள் ஏற்றப்பட்டு பிரகாரமே ஜெகஜோதியாய் ஜொலிக்குமாம். தீபலஷ்மிகளைத் தவிர ஒவ்வொரு தூணிலும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. 

தெற்கு பிரகாரத்தை ஒட்டினாற்போலதான் அன்னதானக்கூடம் மற்ற அறைகள் எல்லாமும் அமைந்திருக்கின்றன. தெற்கு பிரகாரத்துக்கும் சன்னிதிக்கும் நடுவிலிருக்கும் முற்றத்தில் சாஸ்தா சன்னிதி அமைந்துள்ளது. தரிசித்து சந்தனம் பெற்றுக்கொண்ட பின், மூலவரான ஆதிகேசவனைத் தரிசிக்கச் சென்றோம். ஹைய்யோ!!!.. இருளைக்குழைத்து செய்தாற்போல் கரிய திருமேனி. 22 அடியில் கருவறை நிறைத்து அறிதுயிலில் கிடந்தவனை கண் நிறையத் தரிசனம் செய்ய முயன்றோம்.. முடியுமா?.. முடியவில்லையே. பருகப்பருக இன்னும் இன்னுமென்றல்லவா தாகம் பெருகுகிறது. மேற்குமுகம் பார்த்த திருக்கோலத்தில் அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமாள் 16008 சாளக் கிராமம் உள்ளடங்கிய கடுசர்க்கரைப் படிமத்தால் ஆனவர். இவர் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபனுக்கும் முந்தைய காலத்தவர். திருவிதாங்கூர் மன்னர் குலத்தின் குலதெய்வமாவார். 
 
 நாகதேவதை
கருவறையில் மூன்று நிலைவாயில்கள் உள்ளன. திருமுகம், திருக்கரம், திருப்பாதம் எனும் 3 பகுதிகளை ஒவ்வொரு வாயிலிலும் காணலாம். திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழ்ந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ஐம்படையினையும் காணலாம். தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் மது,கைடபர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம், திருக்கரம், திருப்பாதம் இவ‌ற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும். மூலவர் கடுசர்க்கரை யோகத்தால் ஆனவர் ஆதலால், இவருக்கு அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை. துளசி மற்றும் மலர்மாலை மட்டும் சூடி எளிய அலங்காரத்தில் காட்சி தருகிறான். திருமகளே கால் பிடித்து விடும் சேவை சாதிப்பவனுக்கு பொன்னும் மணியும் ஒரு பொருட்டா என்ன? கோவிலின் தென் கிழக்குப் பகுதியிலில் அமைந்துள்ள பாலாலயத்திலிருக்கும் உற்சவ மூர்த்திக்கே எல்லா வித அபிஷேகங்களும் செய்யப்படுகின்றன. அப்போதுதான் உச்சி பூஜை முடிந்திருந்ததால், மாலைகள் மணக்க காட்சியளித்தார் உற்சவர். உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் பால் பாயசம் பிரசாதம் கிடைக்கும், எங்களுக்குக் கிடைத்தது.

கேசி என்ற அரக்கனை வதம் செய்ததால் ஆதிகேசவன் எனப்பெயர் பெற்ற இத்திருத்தல வரலாறு சற்று சுவாரஸ்யமானது. ஒரு சமயம் பிரம்மா யாகம் செய்து கொண்டிருந்தபோது, மந்திரங்களை சரியாக உச்சரிக்காததால், யாகத்தினின்றும் கேசன், கேசி என்ற இரு அரக்கர்கள் தோன்றினர். அரக்கர் குல வழக்கப்படி பூலோகத்திலுள்ள அனைவருக்கும் அவர்கள் தொந்தரவு கொடுக்கவே அனைவரும் விஷ்ணுவைச் சரணடைந்தனர். கேசனைப் பாதாள லோகத்திற்கு அழுத்தித் தள்ளிய விஷ்ணு, அவன் மறுபடி எழுந்து வந்துவிடா வண்ணம், அவன் மேல் தனது பாம்பணையை விரித்துப் பள்ளி கொண்டார். கேசியை தனது தலையணையாக்கிக் கொண்டார். கேசனையும் கேசியையும் அழித்ததால் கேசவன் எனப்பெயரும் கொண்டார். அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் ஆதிகேசவன் விழித்து எழுந்தால் கேசனும் கேசியும் மறுபடியும் வந்து உலகோரைத் துன்புறுத்துவார்கள் என்பது நம்பிக்கை. ஆனால் அப்படி விடுவானா என்ன?

கேசன் கேசி இருவரும் அழிந்த சேதி கேட்டதும் கேசியின் மனைவி, பழி வாங்கும் எண்ணம் கொண்டாள். கங்கையையும் தாமிரபரணியையும் விடாமல் பூஜித்தாள். அவளது பூஜைக்கு மனமிரங்கிய இரு நதிகளும் கோதையாறு, பஃறுளியாறு என்ற பெயர்களோடு பெருக்கெடுத்து ஓடி வந்து ஆதிகேசவனை பாம்பணையிலிருந்து எழுப்ப முயன்றன. ஆனால், பூதேவி, அந்த இடத்தை குன்று போல் சற்றே உயரும்படிச் செய்ததால், இரு நதிகளும் குன்றைச்சுற்றிக்கொண்டு ஓடி மறுபடியும் மூவாற்று முகம் என்ற இடத்தில் ஒன்று சேர்கின்றன. இந்த ஊாின் நடுவில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி கேசவப் பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு ஓடுவதால் இந்த ஊா் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது.

கோவிலின் மேற்கு வாயில்
கருவறைக்கு முன் 18 அடி சதுரமும் 3 அடி உயரமும் உள்ள ஒற்றைக் கல்லினால் எழுப்பப்பட்ட மண்டபம் உள்ளது. கி.பி. 1604 ஆம் ஆண்டு வாக்கில் இம்மண்டபம் அமைய வீர ரவிவர்மன் என்ற குலசேகரப் பெருமாள் பொருளுதவி செய்தான். பெருமாள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் வேளையில் ஒற்றைக் கல் மண்டபத்தைத் தொடக் கூடாது என்பது தொன்மரபு. இக்கோவிலின் ரதி,மன்மதன், அர்ஜூனன், கர்ணன், வேணுகோபாலன் போன்ற சிற்பங்கள் அதி அற்புதமானவை. கருவறையை ஒட்டியுள்ள மண்டபத்தின் உட்சுவர்களில் மூலிகைச்சாயத்தால் தீட்டப்பட்ட ஓவியங்கள் மட்டும் காலப்போக்கில் சற்று மங்கிக்காணப்படுகின்றன. கும்பாபிஷேகத்திற்கு முன்பான திருப்பணிகளின்போது அவை சரி செய்யப்படுமென்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும், தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், நம்மாழ்வாரால் பாடப்பெற்றதுமான இந்தக் கோவிலின் திருப்பணிகள் கடந்த 2004ஆம்  ஆண்டு தொடங்கி சமீபத்தில்தான் முற்றுப் பெற்று திருவிழாவுக்கான கொடியேற்றமும் கடந்த 23-ம் தேதி நடந்தாகி விட்டது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் இரவு 9 மணிக்கு சுவாமி பவனி வருதல், இரவு 10 மணிக்கு கதகளி ஆகியன நடைபெறும். எட்டாம் திருவிழா நாளான மார்ச் 30. ம்தேதி மிகவும் த்ரில்லிங்கான துரியோதனவதம் கதகளி நடைபெறும். மார்ச் 31.ம் தேதி இரவு 9 மணிக்கு சுவாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளலும், ஏப்ரல் முதல் தேதி மாலை 4.30 மணிக்கு சுவாமி மூவாற்றுமுகம் ஆற்றில் ஆறாட்டுக்கு எழுந்தருளலும் நடைபெறுகிறது. (தகவலுக்கு நன்றி திருவட்டாறு சிந்துகுமார் அண்ணா)

ஜெயமோகனின் "மத்தகம்" நாவலை வாசித்ததிலிருந்து, அதில் கோவில் மற்றும் ஆதிகேசவனைப்பற்றிய விவரணைகளை வாசித்ததிலிருந்து ஆரம்பித்த கொதி, கோவிலுக்குச் சென்று அக்கரியவனைக் கண்டு வந்தபின் சற்றே அடங்கிற்று எனினும் முன்னைவிட மேலும் கிளர்ந்தெழுகிறது. மத்தகம் வாசித்த ஞாபகத்தில், இங்கே ஆனைக்கொட்டாரம் எங்கேயிருக்கிறது என்று போத்தியிடம் ஆவலுடன் கேட்டேன். "ஆனையெல்லாம் இப்ப ஒண்ணும் கிடையாது. என்னமும் விசேஷம்ன்னா வேற இடங்கள்லேர்ந்துதான் வரும்" என்று ஏமாற்றமளிக்கும் பதில்தான் கிட்டியது. அப்படியானால் இங்கே யானை இருந்ததேயில்லையா? இருந்திருக்கிறது.. ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பு. வேறு இடங்களிலிருந்து வரும் யானைகளை வடக்கு வாசல் வழியாகத்தான் கோவிலுக்குக் கொண்டு வருவார்களாம். ஓஹோ!!.. அதுதான் அந்த வாயில் மட்டும் நன்கு அகலமாகவும் உயரமாகவும், தரைமட்டத்திலும் இருக்கிறதா!! இதுவே இதன் சிறப்பம்சம்.

வடக்கு வாசலைத்தவிர கிழக்கு, மேற்கு, தெற்கு என எல்லாத்திசைகளிலும் இருக்கும் வாயில்கள் நன்கு உயரத்தில் அமைந்துள்ளன. பல படிகளேறித்தான் கோவிலுக்குள் நுழைய முடியும். இதில் மேற்கு வாயில் பக்கம் ஒரு சில வீடுகளே இருப்பதால் அவ்வழியாக கோவிலுக்குள் நுழைபவர் வெகு சிலர் மட்டுந்தான். பொதுவாக எந்தக்கோவிலுக்குப்போனாலும் எல்லா வீதிகளையும் சுற்றிப்பார்ப்பேன். கோவிலையும் வலம் வந்தாற்போல் ஆயிற்று, இல்லையா? ஆனால் திருவட்டாறில் தெற்கு வாயிலை மட்டும் காண முடியவில்லை. வெய்யில் ஏறுமுன் மாத்தூர் செல்ல வேண்டுமென்று பிள்ளைகள் அவசரப்படுத்தியதால் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. எல்லாம் நன்மைக்கே. இதைச்ச்சாக்கிட்டு, அடுத்த முறை திருவட்டாறு சென்று விட வேண்டியதுதான். இப்போது விழா நடப்பதால் நீங்களும் சென்று வாருங்கள்.

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் தயவால், எங்களுக்கும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் தரிசனம். மிக்க நன்றி.

Anuprem said...

மிக அருமை..


இன்று தான் தங்கள் தளம் கண்டேன்...இனி தொடர்கிறேன்...

NAGERCOIL said...

நன்றி.சில வருடங்களாக நினைத்து நாங்கள் பொங்கல் அன்று சென்று வந்தோம்.

LinkWithin

Related Posts with Thumbnails